Wednesday, September 13, 2017

ஆயிரம் நாகர்களும் அமிர்தமதனமும்

ஐநூறு வருஷங்கள் காலம் ஓடியது. முட்டைகளை அடைகாப்பதற்கு சீரான உஷ்ணம் காக்கும் பாத்திரங்களில் கத்ருவின் முட்டைகளும் வினதையின் முட்டைகளையும் தனித்தனியே ஜாக்கிரதையாக ஒரு அறையில் பாதுகாக்கப்பட்டு வந்தன. ஐநூறாவது வருஷத்தின் இறுதியில் கத்ருவின் ஆயிரம் முட்டைகளிலிருந்து ஒரே ரூபமுள்ள ஆயிரம் நாகர்கள் நெளிநெளியாக வெளியே வந்தனர். கறுகறுவென்று பளபளப்பாய் அந்தப் பிரதேசம் முழுக்க தரையெங்கும் ஸர்ப்பங்கள். இதைக் கண்ட கத்ருவுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. ஆனால், வினதையின் முட்டையிலிருந்து ஜனனம் ஏற்படவில்லை.

வினதை மிகவும் வருத்தமுற்றாள். ஐநூறு வருடங்கள் கடந்தும் தனக்கு புத்திரபாக்கியம் இல்லாததால் தனது துரதிர்ஷடத்தை எண்ணி மிகவும் கலக்கமடைந்தாள். கத்ருவின் புத்திரர்களை விட தனக்கு பராக்கிரமும் பலமும் மிக்கவர்கள் வேண்டும் என்ற வரத்தை மறந்தாள். இன்னும் கொஞ்ச வருஷங்கள் காத்திருக்காமல் தனது இரண்டு முட்டைகள் இருக்கும் பாத்திரத்தில் கையை விட்டு ஒரு முட்டையை அழுத்தி உடைத்தாள்.

சடசடவென்று உடைந்த முட்டையிலிருந்து இடுப்பு வரையில் உருவமும் அதன் கீழே அரூபமாகவும் ஒரு புத்திரனைக் கண்டாள். திடுக்கிட்டாள். வேதனையில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்திருந்தவளைப் பார்த்து அவன் மிகவும் கோபம் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“அம்மா! உனக்கும் பொறாமையும் அதிக ஆசையும் இருக்கிறது. என்னை குறையுடன் பிறக்கவைத்துவிட்டாய். அதனால் நீ யார் மீது பொறாமை கொண்டாயோ அவளிடம் ஐநூறு வருட காலம் அடிமையாக இருப்பாய்” என்று சாபமிட்டான்.

வினதை விசனப்பட்டாள். அவனை சமாதானப்படுத்த முயற்சிக்க எண்ணினாள்.

“நீ அவசரப்பட்டு இரண்டாவதாக இருக்கும் முட்டையையும் உடைத்துவிடாதே! ஐநூறு வருடங்கள் அமைதியாகக் காத்திரு. அந்த மகனால் உனக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக் கிடக்கும்”

வினதை அழுதாள். அவள் அழுதுகொண்டிருக்கும் போதே ஜிவ்வென்று விண்ணில் பறந்தான் அவன். அது காலை வேளை. சூரியன் அப்போதுதான் உதித்துக்கொண்டிருந்தான். செந்நிறமாக சூரியனுக்கு முன்னால் விண்ணில் தெரிந்தான். சூரியன் இவ்வளவு தேஜஸ்வியாக இருப்பனை தனக்கு சாரதியாக அமர்த்திக்கொண்டான். அவன்தான் அருணன்.

**

அருணன் விண்ணிற்கு சென்றதும் கத்ருவுடன் ஒரு நாள் வினதை வந்துகொண்டிருந்தாள். அப்போது தூரத்தில் உச்சைஸ்ரவம் என்னும் அஸ்வராஜா நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அது தேவலோகத்துக் குதிரை. முகத்தில் இருவருக்கும் மலர்ச்சி.

[இந்த இடத்தில் உச்சைஸ்ரவம் உண்டான அமிர்தமதனம் என்னும் பாற்கடலைக் கடையும் நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. இதன் பின்னர் மீண்டும் கத்ருவும் வினதையும் அந்த உச்சைஸ்ரவத்தை வைத்து ஒரு பந்தயம் வைத்துக்கொள்கிறார்கள். அதை அப்புறம் பார்ப்போம்... இப்போது அமிர்தமதனம்...]

மேரு பர்வதம். தேவர்களும் கந்தர்வர்களும் சிலாகிக்குமிடம். பாபிகளால் நெருங்கமுடியாது. அமாவாசை இரவிலும் ஜ்யோதிர்லதை என்கிற மூலிகைக் கொடியினால் ஆங்காங்கே வைரம் போல ஜொலிக்குமிடம். ஸ்வர்க்கத்தை மறைக்கும் உசரம். நதிகளும் நெடிதுயர்ந்த விருக்ஷங்களும் நிறைந்த இடம். பலவிதமான ரத்தினங்கள் நிறைந்த அதன் சிகரத்தில் அன்று அனைத்து தேவர்களும் அமர்ந்திருந்தார்கள்.

“அசுரர்களுக்கு சஞ்சீவித்தன்மை அதிகரித்து வீழ்த்தினாலும் வெட்ட வெட்டக் கிளம்பிவிடுகிறார்கள். அமிர்தம் போன்ற ஒரு வஸ்து இப்போதைய நமது அவசியத் தேவை”

தேவேந்திரனின் இந்த திட்டத்திற்கு உபாயம் தேடுவதற்கு தேவர்களும் கந்தர்வர்களும் குழுமியிருந்தார்கள். பிரம்மாவும் நாராயணனும் கூட அப்போது அங்கே எழுந்தருளினார்கள்.

தேவர்களின் கூட்டத்திற்கு சிறிது தூரம் தள்ளி பிரம்மாவும் நாராயணனும் கலந்தாலோசித்துக்கொண்டிருந்தார்கள். இறுதியில் நாராயணன் “தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலை கடையும் போது அமிர்தம் உண்டாகும்” என்றார்.

“ஐயனே! எப்படிக் கடைவது? என்ன செய்யவேண்டும்?” என்று தேவேந்திரன் வினவினான்.

“எல்லா மூலிகைகளையும் ரத்தினங்களையும் போட்டு சமுத்திரத்தைக் கடைய வேண்டும்”

“சர்வ மூலிகைகளைக்கும் நாங்கள் எங்கே செல்வோம் ப்ரபோ! தாங்களே அதற்கும் ஒரு உபாயம் சொல்லவேண்டும்” என்று தொழுதான் தேவேந்திரன். பின்னாலேயே “ஆமாம்...” என்று தேவர்கள் அனைவரும் ஒருசேர விண்ணப்பித்தார்கள்.

“மந்திர மலையில் அனைத்து ஔஷதிகளும் இருக்கிறது. அதைக்கொண்டு கடையுங்கள்” என்றார்.

பதினோராயிரம் யோஜனை தூரம் பூமிக்கு மேலேயும் அதே பதினோராயிரம் யோஜனை தூரம் கீழேயும் உள்ள பர்வதம் அது. தேவக்கூட்டத்தினால் அதை அசைக்கக் கூட முடியவில்லை. மீண்டும் அனைவரும் வைகுண்டம் சென்று நாராயணனிடம் வேண்டினார்கள். அவர் ஆதிசேஷனை அவர்களுக்கு பர்வதம் தூக்குவதற்காக அனுப்பிவைத்தார்.

ஆதிசேஷன் அந்த மந்திரமலையென்னும் பர்வதத்தை அப்படியே தூக்கிக்கொண்டு திருப்பாற்கடலுக்கு வந்தான். அசுரர்களுக்கு செய்தி அனுப்பினார்கள். பெரிய சைனியமாகத் திரண்டு வந்து பாற்கடலின் ஓரத்தில் வந்து கடைவதற்குத் தயாராக அமர்ந்திருந்தார்கள். தேவர்கள் திருப்பாற்கடலெனும் சமுத்திரத்தை “அமிர்தத்துக்காக உன்னைக் கடையப்போகிறோம்” என்றார்கள். “எனக்கும் ஒரு பாகம் கிடைப்பதென்றால் நான் சம்மதிக்கிறேன்” என்றான் சமுத்திரராஜன். ”சரி” என்று ஒப்புக்கொண்டார்கள்.

கடைவதற்கு பெரிய கயிறு தேவைப்பட்டது. அப்போது வாசுகி என்னும் நாகம் கயிறாக இருந்து அமிர்தமதனத்துக்கு ஒத்துழைக்கிறேன் என்று முன்வந்தது.

மந்திரமலையை மத்தாக்கி வாசுகியை கயிறாக்கி தேவாசுரர்கள் கடைய ஆரம்பித்தார்கள். மலையால் ஊன்றி நிற்கமுடியாமல் இருபுறமும் ஆடியது. கடைய முடியவில்லை. திருமாலை வேண்டினார்கள்.

ஒரு பெரிய ஆமையாக கூர்மாவதாரம் எடுத்துக்கொண்டு பாற்கடலின் அடியில் வந்து தோதாகப் படுத்துக்கொண்டார். இந்திரன் வஜ்ராயுதத்தால் ஆமையின் முதுகில் அழுத்தி அதன் மேல் மந்திரமலையை ஏற்றினார்கள். வாஸுகியின் தலைப் பக்கத்தை அசுரர்களும் வாலை தேவர்களும் பிடித்துக்கொண்டார்கள். இப்போது தேவர்களும் அசுரர்களும் சீராக பாற்கடலை கடைய ஆரம்பித்தார்கள்....

இதிகாசம் தொடரும்....

பின் குறிப்பு: ஒரு யோஜனை என்பது 23 மைல்கள் என்று ஒரு இடத்தில் படிக்க நேர்ந்தது. சரியா என்று உறுதியாகத் தெரியவில்லை.

No comments:

Post a Comment