Thursday, August 17, 2017

முன்னறிவிப்பு

பிறந்த மண் ஈன்ற மாதாவுக்கு நிகர். என்னைப் போன்று காவிரிக்கரையில் ஜனித்தவர்களுக்கு கும்பகோணத்தார்களின் உழைப்பில் உருவான மஹாபாரதம் மிகவும் விசேஷமானது.மற்ற நதிக்கரை நாகரீகத்தவர்க்கும் விசேஷமானதாக இருக்கலாம். சர்ச்சையைத் தவிர்ப்போம். கும்பகோணம் தி.ஈ.ஸ்ரீநிவாஸாசாரியாரால் மொழிபெயர்க்கப்பட்டு கும்பகோணம் ம.வி.இராமானுஜாசாரியரால் தொகுக்கப்பட்டு கும்பகோணம் சிவராமகிருஷ்ணய்யரால் அச்சிட்டு உரிமை பதிவுசெய்யப்பட்ட “ஸ்ரீ: மகரிஷி ஸ்ரீவியாஸரின் ஸ்ரீமஹாபாராத பர்வங்கள்” படிப்பதற்கு கையில் எடுத்திருக்கிறேன். நூறு வருடங்களுக்கு முன்னர், 1908ம் வருடம் முதல் பதிப்பு கண்டிருக்கிறது. இது 2014ல் அச்சிட்ட நான்காம் பதிப்பு.

எஸ்.எல்.பைரப்பாவின் மஹாபாரதப் புனைவான பருவம் படித்துமுடித்தேன். கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள். பீஷ்மர் வயோதிகத்தினால் சோர்ந்து போய் சரதல்பத்தில் படுத்ததுபோலவும் துரோணர் தள்ளாமையில் துவண்டு போனதாகவும் சுகர் வியாசரின் முன்னேயே உபவாசம் இருந்து உயிர்த் தியாகம் செய்துகொண்டதாகவும் பலராமன் பல்வலியும் வீங்கிய தாடையுமாக சுற்றி வந்ததாகவும் கிருஷ்ணன் மாயம் செய்யாத சாதரணனாகவும் கீழ்க்குலத்தோரின் பெருமையைப் பறைசாற்றிய கர்ணனும் விதுரனும் என்று ஒரு அரசகுலத்தின் யதார்த்த சண்டையைச் சித்தரித்து எழுதிய நாவலாக இருந்தது பருவம். வேதவியாஸரின் பாரதத்தைப் படித்துவிட்டு முற்போக்கு நாவலாக எழுதியிருந்தார்.

வாசித்து முடித்ததும் மனதில் ஏற்பட்ட ஒரு அதிருப்தியைப் போக்கிக்கொள்ள மூலத்தை கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உந்தப்பட்டேன். இன்று ச்ராவண பௌர்ணமி. வாசிக்க ஆரம்பித்தேன்.

ஆதிபர்வம் புத்தகத்தின் விஷயஸூசிகை (பொருளடக்கம்) இருபத்தைந்து பக்கங்களுக்கு நீள்கிறது. ரோமஹர்ஷணரின் புதல்வர் உக்கிரஸ்ரவஸ் என்கிற ஸுத பௌராணிகர் நைமிசாரண்யத்திற்கு எழுந்தருளி அங்கே ஸ்த்ரம் யாகம் ( பன்னிரெண்டு வருஷங்கள் செய்யும் யாகம்) செய்யும் ரிஷிபுங்கவர்களிடன் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் என்று தொடங்குகிறது. தேவர்களால் அஸுரசேனை நிமிஷத்திற்குள் கொல்லப்பட்ட இடமாகையால் அது நைமிசாரண்யம் என்று வராகபுராணத்தில் இருக்கிறதாம். சூரியப்பிரகாசமான ஒரு சக்கரத்தை பிரம்மதேவர் சிருஷ்டிக்கிறார். அதை ஏவிவிட்டு அதன் நுனியாகி நேமி எந்த இடத்தில் தெரிக்கிறதோ அந்த இடம் தபஸுக்கு யோக்கியமான இடம் என்கிறார். இந்த வனத்தில் அந்த சக்கரம் தெரித்து விழுந்ததால் இது நைமிசாரண்யம் என்று பெயர்பெற்றது என்று வாயுபுராணத்தில் வருகிறதாம்.

இவ்வளவு விஷய புஷ்டியான பொக்கிஷத்தை, என்னளவில் நான் உள்வாங்கிக் கொண்டதை எளிமையாக எழுதிச் செல்லலாமா என்று யோசித்தேன். கம்பன் சொன்னது போல பாற்கடலை பூனை நக்கிக்குடித்துவிட எண்ணும் யத்தனம் தான். தாடியுடன் வியாஸ பகவானும் ஒடித்த கொம்புடன் விநாயகப்பெருமானும் கண நேரம் ஜோடியாக கண்ணுக்குள் வந்து சென்றனர். பயமாகவும் இருக்கிறது எழுதவும் கை அரிக்கிறது. வெண்முரசும் வியாஸர் விருந்தும் இன்னும் பல பெரிய கைகளின் வித்யாபலத்தில் உருவான காவியத்தை பொடியன் எழுத முடியுமா? இன்னும் முழு வைராக்கியம் பிறக்கவில்லை. பார்க்கலாம்! பகவத் சங்கல்பம் இருந்தால் எழுதுவேன்.

No comments:

Post a Comment