Thursday, August 17, 2017

ஸரமையின் சாபம்

குருக்ஷேத்திரம். பரீக்ஷித்தின் புத்திரன் ஜனமேஜயன் ஸத்ர யாகம் செய்துகொண்டிருக்கிறார். அவரைச் சுற்றிலும் ஸ்ருதஸேனன், உக்ரஸேனன் மற்றும் பீமஸேனன் என்ற அவருடைய சகோதரர்களும் அமர்ந்து யாகம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
வேத மந்திரங்கள் ஒலிக்க அக்னி திகுதிகுவென்று கொழுந்துவிட்டு எரிகிறது. அப்போது ஸாரமேயன் தரையை முகர்ந்துகொண்டே அங்கு வந்தது. யக்ஞாதிஹோமங்கள் நடைபெறும் இடங்களில் நாய்க்கு அனுமதில்லை. அதைக் கல்லால் அடித்து ஜனமேஜயனின் சகோதரர்கள் விரட்டினார்கள். அது பெரும் ஊளையிட்டுக்கொண்டு அருகாமையில் இருந்த காட்டுக்குள் ஓடியது.
அங்கு அதன் தாய் ஸரமை உட்கார்ந்திருந்தது. பிள்ளை அடிபட்டு வலியால் ஊளையிடுவதைக் கண்டு வருத்தமுற்று
“நீ ஏன் அழுகிறாய்? யார் உன்னை அடித்தார்கள்?”
“ஜனமேஜயனின் சகோதரர்கள் என்னைக் கல்லால் அடித்து விரட்டினார்கள்.”
“நீ எதுவும் தவறு செய்திருப்பாய். அவர்கள் உன்னை அடித்திருப்பார்கள்.”
“இல்லை. நான் எதுவும் தவறு செய்யவில்லை.” என்று தலையை இருபுறமும் ஆட்டியது.
”அங்கு என்ன நடந்தது?”
“அவர்கள் ஹோமம் செய்துகொண்டிருந்தார்கள். அந்த வழியாக சென்றுகொண்டிருந்த என்னை வேண்டுமென்றே அடித்தார்கள்” என்று அழுதது.
“நீ அங்கு ஹோமத்திற்கு வைத்திருந்த ஹவிஸுகளை நாவினால் தீண்ட முற்பட்டாயா?”
“இல்லை. ஹவிஸுகளை நான் பார்க்கவே இல்லை” என்று மறுமொழி கூறியது.
ஸரமைக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஸாரமேயனை அழைத்துக்கொண்டு ஜனமேஜயனும் அவனது சகோதரர்களும் ஸத்ரயாகம் செய்துகொண்டிருந்த இடத்திற்கு விரைந்தது.
ஸரமை தேவலோகத்து நாய். ஜனமேஜயனிடம் “பிழை செய்யாத என் பிள்ளையை ஏன் அடித்தீர்கள்?” என்று உரக்கக் கேட்டது. ஜனமேஜயனும் அவரது சகோதரர்களும் பேச வார்த்தையின்றி மௌனமாக அமர்ந்திருந்தார்கள். ஹோமகுண்டம் புகைந்துகொண்டிருந்தது. ஸாரமேயன் அழுதான்.
“தவறு செய்யாத என் பிள்ளையை அடித்ததால் நீங்கள் அறியாமலேயே உங்களுக்கு ஒரு தீங்கு வரப்போகிறது. அனுபவியுங்கள்.” என்று சாபம் இட்டுவிட்டு அங்கிருந்து சென்றது.
ஜனமேஜயனுக்கு துக்கம் பொங்கியது. காட்டில் வேட்டையாடுவதற்கு சென்றார். அங்கு ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். அவர் ஸ்ருதஸ்ரவஸ் என்ற முனிவரின் புத்திரர் ஸோமஸ்ரவஸ். ஸ்ருதஸ்ரவஸிடம் அவரது புதல்வரை தனக்கு புரோஹிதராக அனுப்பிவைக்கும்படி ஜனமேஜயர் விஞ்ஞாபித்தார். ஸரமையின் சாபத்தால் அவருக்கு துன்பம் ஏற்படும் என்று பயந்திருந்தார். அதற்கு ஸ்ருதஸ்ரவஸ்
“ஜனமேஜயரே! என்னுடைய ரேதஸைக் குடித்த பெண்நாகத்துக்குப் பிறந்தவன் இவன். வேதத்யயணம் செய்து சிறந்த தபஸ் செய்தவன். இவனிடம் பிராம்மணன் எவனாவது வந்து உபகாரம் கேட்டால் இல்லையென்று சொல்லமாட்டான். உடனே செய்துவிடுவான். இதற்கு இஷ்டமிருந்தால் இவனை அழைத்துக்கொண்டு போ…” என்று அனுப்பிவைத்தார்.
ஜனமேஜயர் ஸோமஸ்ரவஸுடன் ஹஸ்தினாபுரம் வந்தடைந்தார். சகோதரர்களிடம் அவரை புரோஹிதராக வரித்தது பற்றி சொல்லி அவர் சொல்வதைச் செய்யவேண்டும் என்று அறிமுகம் செய்துவைத்தார். பின்னர் தக்ஷசிலாநகரத்துக்கு படையெடுத்துச் சென்று அதைக் கைப்பற்றினார்.
[உதங்கரிஷி என்பவர் ஜனமேஜயனை ஸர்ப்பயாகம் செய்யத் தூண்டுவது என்பது இந்த பௌஷ்ய பர்வத்தின் முக்கியச் செய்தி. ஆனால் ஸர்ப்பயாகம் வருவதற்குள் நிறைய கிளைக்கதைகள் அங்காங்கே முளைக்கிறது. எல்லாக் கதைகளையும் பார்த்துக்கொண்டே அதன்படியே செல்வோம்.]
**
குருசிஷ்ய பரம்பரை – உத்தாலக ஆருணி
============================== =======
தௌம்யர் திடகாத்திரமானவர். அவருக்கு எஃகு போன்ற பற்கள். ஆகையால் அயோதரென்றும் பெயர். அவருக்கு உபமன்யு, ஆருணி, பைதன் என்று மூன்று பிரதான சிஷ்யர்கள். குருகுல வாசத்தில் குருவிற்கு சிஷ்ருஷை செய்துகொண்டு அவர் பாடம் சொல்லிக்கொடுக்கும் போது வேதம் பயில்வார்கள்.
ஒருநாள், ஆருணியை அழைத்து “தண்ணீர் பாய்ந்து செல்லும் கழனியின் மடையைக் கட்டிவிட்டு வா” என்று கட்டளையிட்டார். ஆருணி கழனியிருக்கும் இடத்துக்கு ஓடினான். சுற்றும் முற்றும் பார்த்தான். அதன் மடையை அடைப்பதற்கு எதுவும் கிடைக்கவில்லை. தீவிர யோசனைக்குப் பின்னர் அந்த மடையின் குறுக்கே படுத்துக்கொண்டான். தண்ணீர் பாயாமல் நின்றது. ஆஸ்ரமத்தில் சட்டென்று ஆருணியைப் பற்றி நினைத்த அயோத தௌம்யர் “உபமன்யு.. பைதா… ஆருணியை எங்கே காணவில்லை” என்று கேட்டார்.
அவர்கள் இருவரும் “ஸ்வாமி! நீங்கள் தான் கழனியின் மடையைக் கட்டுவதற்கு அவனை அனுப்பினீர்கள்” என்றார்கள்.
“ஓ! நாமெல்லாம் அங்கே சென்று பார்ப்போம்” என்று சிஷ்யர்களை அழைத்துக்கொண்டு தௌம்யரும் அங்கே விரைந்தார்.
சுற்றிலும் பச்சை. கழனியின் ஜலம் அடைபட்டு நீர் பாயாமல் இருந்தது. ஆனால் ஆருணியைக் காணவில்லை. “ஆருணி…. குழந்தாய் ஆருணி…” என்று சத்தமிட்டு தௌம்யர் சுற்றிலும்தேடினார்.  சிறிது நேரத்தில் கழனியிலிருந்து சலசலவென்று நீர் பாய ஆரம்பித்தது.
“பகவானே! இதோ இருக்கிறேன்…” என்று மேனியெங்கும் சொட்டச் சொட்ட நனைந்து ஆருணி வெடவெடக்க ஓடிவந்தான்.
“குழந்தாய்! ஏன் நனைந்திருக்கிறாய்? எங்கிருந்தாய்?” என்று ஆதூரத்துடன் வினவினார்.
“குருவே! கழனியைக் கட்டுவதற்கு எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆகையால் குரு சொல்லுக்கு கட்டுப்பட்டு நீரைக் கட்டுவதற்காக மடையின் குறுக்கே படுத்துக்கொண்டேன். இப்போது தாங்கள் அழைத்ததால் மடையைப் பிளந்துகொண்டு ஓடிவந்தேன்” என்றான் ஆருணி.
சிஷ்யனின் குருபக்தியில் அயோத தௌம்யருக்கு எல்லையில்லாத சந்தோஷம் ஏற்பட்டது.
“கழனியின் மடையை உடைத்துக்கொண்டு எழுந்து வந்ததால் நீ உத்தாலகன்* என்று புகழடைவாய். இன்றிலிருந்து உனது பெயர் உத்தாலக ஆருணி. என் சொல்லை நிறைவேற்றியதால் பரம ஸ்ரேயஸை அடைவாய். உனக்கு எல்லா வேதங்களும் தர்ம சாஸ்திரங்களும் பிரகாசிக்கும்” என்று ஆசீர்வதித்து அவனது பாஞ்சால தேசத்துக்கு அனுப்பிவைத்தார்.
*உத்தாலகன் – பிளக்கிறவன்
இதிகாசம் தொடரும்…

No comments:

Post a Comment