Thursday, August 17, 2017

மஹாபாரதப் பெருமை

”'நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம் தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜெயம் உதீரயேத்”

நாராயணனையும், நரன் என்கிற ஆதிசேஷனையும் நரோத்தமனாகிய வாயுவையும் லக்ஷ்மி சரஸ்வதி மற்றும் இந்த ஆதி க்ரந்தத்தின் கர்த்தாவாகிய வியாஸரையும் நமஸ்கரித்து *ஜயத்தைத் தருவதான இந்த பாரதத்தை எழுதுவதற்கு முற்படுகிறேன்.

**

நைமிசாரண்யம். நேமிச்சக்கரத்தின் முனை தெரித்துவிழுந்து தபஸுக்கு யோக்கியதை என்று தேவர்களால் தேர்வு செய்யப்பட்டக் காடு. அங்கேயிருந்த பிரம்மாண்டமான ஹோம குண்டத்தைச் சுற்றி அக்னி ஜூவாலைகளினால் முகம் சிவந்து காணப்படும் பிரம்ம ரிஷிகள் ஜொலிக்கும் தேஜஸோடு அமர்ந்திருக்கிறார்கள். அதோ நடுநாயமாக அமர்ந்திருக்கும் சௌனகாதி முனிவர்தான் அவர்களுக்கு குலபதி. அவரின் கீழ் பதினாயிரம் ரிஷிகள் உலகம் உய்யும் பொருட்டு பலவிதமான யக்ஞயாக கர்மாக்களை ஸ்ரத்தையுடன் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அன்னபானங்களை வழங்கி ரிஷி குலம் தழைக்க உதவுகிறார் சௌனகாதி.
பன்னிரண்டு வருஷம் ஹோமத் தீ தொடர்ந்து எரியவேண்டிய ஸத்ரயாகத்தின் நடுவே அவர்களை நோக்கி ஒரு தவஸ்ரேஷ்டர் கம்பீரமாக நடந்து வருகிறார். சௌனகாதிகள் அமர்ந்திருக்கும் மிகப்பெரிய அரசமரத்தடியின் கீழ் வந்து நின்று அனைவரையும் வணங்குகிறார்.

“முனிஸ்ரேஷ்டர்களே! உங்கள் எல்லோரையும் ஒன்றாக தரிசிப்பதற்கு நான் பெரும் பாக்கியம் செய்திருக்கிறேன். கிருஷ்ண த்வைபாயணர் என்றழைக்கப்படும் வியாஸ பகவானால் சொல்லப்பட்ட பல கதைகளை கற்றுக்கொண்டுள்ளேன். பல தீர்த்தயாத்திரைகள் செய்தேன். ஸமந்தபஞ்சகமென்னும் மடுக்கரைக்குச் சென்றிருந்தேன். அந்தக் கதைகள்  தர்மமும் அர்த்தமும் பொதிந்தவை. உங்களுக்கு நான் அதைச் சொல்கிறேன்.”

“ஆஹா.. நாங்களும் இதைக் கேட்பதற்கு புண்ணியம் செய்துள்ளோம். ஆமாம். நீங்கள் யார் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ளலாமா?” என்று சௌனகாதிகளில் ஒருவர் கேட்டார்.

“நான் உக்கிரஸ்ரவஸ். ரோமஹர்ஷணரின் புத்திரன்.”

“புராணப் பிரஸங்கம் செய்யும்போது கேட்பவர்களை மயிர்சிலிர்க்க வைக்கும்ரோமஹர்ஷணரின் புதல்வரா நீங்கள்!! வரவேண்டும். வரவேண்டும். ஸூதபுத்திரரே” என்று அவருக்கு மரியாதை அளித்து உயர்ந்த ஆசனம் அளித்தார்கள். பின்னர் அவரைச் சூழ்ந்து அமர்ந்துகொண்டார்கள். அவர் கதை சொல்ல ஆரம்பித்தார்.

“பரீக்ஷித்து மஹாராஜாவின் புத்திரர் ஜனமேஜன். தந்தையைத் தீண்டிய தட்சகனின் குலம் அழிய வேண்டி ஸர்ப்பயாகம் ஒன்று நடத்தினார். அந்த யாகத்தில் ஜனமேஜயனுக்கு வைசம்பாயனரால் மஹாபாரதம் அருளப்பட்டது. இந்த புராண கதையை இமயமலைப் பர்வதத்தில் வியாஸர் என்றழைக்கப்படும் க்ருஷ்ணத்துவைபாயணர் சொல்லச் சொல்ல ஸ்ரீவிநாயகப் பெருமான் தனது ஒரு கொம்பை ஒடித்து எழுதினார்.”

விநாயகர் கொம்பை ஒடித்து எழுதினார் என்று கேட்டவுடன் முனிவர்கள் மேனி சிலிர்த்தார்கள்.

“கொம்பை ஒடித்து விநாயகரே எழுதினார் என்ற மிகவும் ஸ்ரேயஸான கிரந்தமாகத்தான் இருக்கும்.மேலே சொல்லுங்கள்...”

“விநாயகர் வியாஸருக்கு ஒரு போட்டி வைத்தார். தான் எழுதும் வேகத்திற்கு கதை சொல்லாவிட்டால் பாதியில் எழுந்துவிடுவேன் என்று விரட்டினார். வியாஸபகவானும் ஸ்லோகங்களுக்கு நடுவில் முடிச்சு வைத்து ஸ்லோகங்கள் பண்ணினார் . கணபதி யோசித்து அர்த்தம் கண்டுகொள்வதற்குள் இன்னும் ஆயிரம் ஸ்லோகங்களை மனதிற்குள் வரிசையாகக் கொண்டு வந்து நிறுத்தி கடகடவென்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்.”

“இந்தப் பெருமை வாய்ந்த காவியத்திற்கு மேலும் சில புகழ்மாலைகள் உண்டு என்று அறிந்தோம். தேவரீர் அதைப்பற்றியும் சிறிது கூறவேண்டும்”
“தேவர்கள் அனைவரும் சேர்ந்து நான்கு வேதங்களையும் ஒரு தட்டில் வைத்து மஹாபாரத கிரந்தத்தை இன்னொரு தட்டிலும் வைத்து தராசால் நிறுத்துப்பார்த்தார்கள். அவர்கள் அப்பொது ஒரு அதிசயத்தைக் கண்டார்கள். நான்கு வேதங்களை சுமந்திருந்த தட்டு மேலே செல்ல எதிர்முனையில் வைப்பட்டிருந்த மகாபாரதத் தட்டு கீழே இறங்கியது. வேதங்களில் உபநிஷத்துக்களும் அடக்கம். வேதங்களுக்கும் மேலானதாக இது இருப்பதால் மகாபாரதமென்று பெயர் பெற்றது”

”ஸூதபுத்திரரே! ஸமந்தபஞ்சகம் என்ற இடத்தைப் பற்றியும் சொல்வீராக”

“திரேதா யுகம் மற்றும் துவாபர யுகத்தின் மத்தியில் சஸ்திரதாரியான பரஸுராமர் கோபத்தினால் தூண்டப்பட்டார். க்ஷத்திரிய இனமே இல்லாமல் செய்துவிடவேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டு எண்ணற்ற க்ஷத்ரிய ராஜாக்களைக் கொன்று குவித்தார். அந்தச் சண்டையில் ஏற்பட்ட ரத்தங்களைக் கொண்டு ஐந்து மடுக்களை நிர்மாணித்தார். ரத்தமே ஜலமாக நிரம்பியிருந்த அந்த மடுக்களிலிருந்து ரத்தத்தை எடுத்து பிதிர்களுக்குத் தர்ப்பணம் செய்தார். இந்த மடுக்களுக்கு சமீபத்திலிருக்கும் தேசம் சமந்தபஞ்சகம். இதனருகில்தான் துபாரயுகமும் கலியுகமும் சந்திக்கும் வேளையில் மிகப்பெரிய போர் நிகழ்ந்து  ரத்த ஆறு ஓடியது..”

காற்று புகுந்து சலசலத்துக்கொண்டிருக்கும் அந்த நைமிசாரண்யக் காட்டில் ஸூதபௌராணிகர் கதையை நகர்த்த தொடங்கியிருந்தார். முனிவர்கள் ஆடாமல் அசையாமல் மெய்மறந்து மோட்சம் தரும் ஐந்தாவது வேதமாகிய அந்த மஹாபாரதக் கதையைக் கேட்கத் துவங்கியிருந்தார்கள். நாமும் தொடருவோம்.....

*தேவதத் பட்நாயக்கின் மஹாபாரதக் கதைப் புத்தகத்தின் பெயர் ஜயா

No comments:

Post a Comment