Thursday, August 17, 2017

மஹாபாரதம்: பூர்வ பீடிகை

ஜனமேஜயரின் ஸர்ப்ப யாகத்தில் வைசம்பாயணர் மஹாபாரதம் சொல்வதுதான் பல பர்வங்களாக தொடர்ந்து விரிகிறது. அதற்கு முன்னர் அனுக்கிரமணிகா பர்வம் மற்றும் பர்வஸங்கிரக பர்வம் என்ற இரு குறு பர்வங்கள். இதில் மொத்த மஹாபாரதத்தின் சுருக்கத்தை ஸூதப் பௌராணிகர் நைமிசாரண்ய ரிஷிகளுக்குச் சொல்லிவிடுகிறார். அதாவது மஹாபாரதத்தின் டீஸர் வெளியிடப்படுகிறது. பின்னர் பௌஷ்ய பர்வத்திலிருந்துதான் பிரதான கதை தொடங்குகிறது. ஆதி பர்வம், சபா பர்வம், வன பர்வம், விராட பர்வம், உத்யோக பர்வம், பீஷ்ம பர்வம், துரோண பர்வம், கர்ண பர்வம், சல்ய பர்வம், சௌப்திக பர்வம், ஸ்த்ரீ பர்வம், சாந்தி பர்வம், அனுசாஸன பர்வம், ஆஸ்வமேதிக பர்வம், ஆச்ரமவாஸிக பர்வம், மௌஸல பர்வம், மஹா ப்ரஸ்தானிக பர்வம், ஸ்வர்க்காரோஹண பர்வம் என்ற பதினெட்டு பர்வங்களும் அதற்கு உள்ளே நூறு குறு பர்வங்களும் தொகுப்பாக இருக்கிறது.

மரியாதைக்குரிய திரு. சோ அவர்களின் மஹாபாரதம் பேசுகிறது நான் படித்த முதல் வியாஸ பாரதம். இந்த இதிகாச புராணங்களில் அவரது பங்களிப்பு அளப்பரியது. ஹிந்து சமூகத்திற்கு அவர் ஆற்றிய பணி சிரம் தாழ்த்தி வணங்கத்தக்கது. வியாஸ பாரதத்தின் மூலம் கெடாமல் ரஸத்தைப் பிழிந்து இரண்டு புத்தகங்களில் பக்கம் பக்கமாக நிறைத்து அளித்திருந்தார். பத்து நாட்களில் ஒரே மூச்சாக படித்தேன். இன்னும் அவரது சொந்தக் கருத்துக்களை அடைப்புக்குறிகளுக்குள் கொடுத்து பாரதத்திற்கு வாதாடியது நினைவில் நிற்கிறது.

கொஞ்சம் ஆர்வக் கோளாறு காரணமாக நான் இன்னும் நீட்டி முழக்கி எழுதலாம் என்று எடுத்திருக்கிறேன். சோ போன்ற பெரியோர்களும் ராஜாஜியும் வியாஸ பாரதத்தில் கிஞ்சித்தும் மசாலா கலக்காமல் அப்படியே தந்திருந்தார்கள். மூலம் கெடாமல் மொழிநடையை மட்டும் மாற்றி கொஞ்சம் எளிமையாக எழுதலாம் என்று எடுத்திருக்கிறேன். சொந்த சரக்கையோ அல்லது இப்படி நடந்திருக்கலாம் என்ற கற்பனையையோ புகுத்தாமல் எழுதவேண்டும் என்று முனைகிறேன்.

இப்படி எழுதுவதில் ஒரு சுயநலமும் இருக்கிறது. பொதுவெளியில் பாரதம் எழுதும்போது சம்பவங்களின் காரணங்களையும் காரணிகளையும் லவலேசமாவது அலசி ஆராய வேண்டியிருக்கும். ஐந்தாறு மஹாபாரதங்கள் படித்தாலும் குறையாத தாபம் இப்போது கும்பகோணம் பதிப்பு மூலம் நிறையும் என்ற ஆசையில் படித்து எழுதுகிறேன். பொதுவாகவே காவியங்கள் படிக்கும் போது நான் குறிப்புகள் எடுப்பது வழக்கம். குறிப்புகளாக இல்லாமல் தட்டச்சிவிடலாம் என்ற எண்ணத்தில்..........

ஸ்ரீ குருப்யோ நம:
வியாஸாய விஷ்ணு ரூபாய வியாஸ ரூபாய விஷ்ணுவே
நமோவை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம:

விஷ்ணு ரூபமாக இருக்கும் வியாஸரையும் வியாஸர் ரூபத்தில் இருக்கும் விஷ்ணுவையும் வசிஷ்டர் குலம் உதித்த வேதப் பொக்கிஷமாக உள்ள வியாஸ பகவானை வணங்குகிறோம்.


இதிகாசம் தொடரும்...

No comments:

Post a Comment