Tuesday, September 26, 2017

நதிகளின் கணவன்

கத்ருவும் வினதையும் சமுத்திரத்தைத் தாண்டி பயணிக்கும் போது வரும் வர்ணனை மஹாபாரதத்தின் கதை ஆழத்தைக் காட்டியது. மேலும் கருட ஜனனத்தின் போது அவர் பயங்கரமான ரூபத்தோடும் அக்னி ஜ்வாலைகளோடும் பறக்கக் கண்டு பயந்த தேவாதிதேவர்கள் பெரியதிருவடியாக கருடாழ்வாரைத் துதித்தனர். கருடன் கத்ருவையும் அவளது பிள்ளைகளான ஆயிரம் நாகர்களையும் தனது தாய் வினதையும் தூக்கிக்கொண்டு ஒரு தீவிற்குச் செல்லும் போது சூரியணின் கிரணங்கள் தாக்கி நாகர்கள் மயங்கிச் சாய்ந்தார்கள்.அப்போது கத்ரு இந்திரனைத் துதித்தாள். இம்மூன்றையும் கொசுறாக இங்கே தருகிறேன்.
சமுத்திர வர்ணனை
--------------------------------
சமுத்திரம் நதிகளுக்கு கணவன். பர்த்தா. ஜலத்தின் ஆதாரம். ஆழமும் கலங்கிக் கலங்கி பேரிரைச்சலுடனும் இருக்கும். பயங்கரமான, விகார, குரூர சுபாவமுள்ள ஜல ஜந்துக்களும் திமிங்கிலம் ஆமை, மீன்கள் மற்றும் முதலை முதலானவைகளுடன் நிறைய பல ரூப ஜந்துக்கள் நிறைந்த இடம். எப்பவும் வற்றாதது. சுலபத்தில் அணுகமுடியாதது. எல்லா வகையான இரத்தினங்களும் உண்டாகுமிடம். வருணனுக்கு இருப்பிடம். ஸர்ப்பங்களுக்கு வாசஸ்தலம், மிகவும் ரமணீயமான இடம்.
அளவிட முடியாத, சிந்திக்க முடியாத இடம். தேவர்களுடைய அமிர்தபானத்துக்கு முக்கியமான இடம். ஆழமான சுழல்கள் தோன்றுமிடம். காற்றினால் ஜலம் ஊஞ்சல் போல ஆடும். வடவாக்கினியின் இருப்பிடம். அலைகள் நாற்புறமும் கைகளைப் போன்று அசைந்து கூத்தாடும். சந்திரனுடைய உதயாஸ்தமன காலங்களில் அலைகள் மாறும். பாஞ்சஜன்யம் என்ற சங்கின் உற்பத்தியிடம், உயர்ந்த வஸ்துகள் இருப்பிடம். பாதாளத்தின் இருப்பிடம்.
நாராயணன் வராக அவதாரமெடுத்து பூமியைத் தூக்கும் போது கலக்கப்பட்ட ஜலமுள்ள இடம். அத்திரி மகரிஷி நூறு வருஷ காலங்கள் தவமியற்றிய இடம். தேஜஸ் பொங்கும் பத்மநாபர் லோக ஸ்ருஷ்டிக்கு முன்னர் செய்த யோக நித்திரைக்கு சயனம். இந்திரனுடைய வஜ்ராயுதத்துக்கு பயந்த மைநாக பர்வதத்திற்கு அபயமளித்த இடம். வடவையின் முகத்தில் ஜொலிக்கும் அக்னிக்கு ஜலமாகிய ஹவிஸைக் கொடுக்குமிடம். ஆயிரக்கணக்கான மஹா நதிகள் பொறாமையுடன் ஓடிவந்து சங்கமமாகும் இடம். பாபங்களைப் போக்குமிடம்.
**
கருட ஸ்துதி
--------------------
நீ ரிஷி; நீ பக்ஷிராஜன்; நீ ப்ரபு, நீ மஹாமகிமையுள்ளவன்; நீ சத்ரு சம்ஹாரன்; நீ பிரஜைகளைக் காப்பவன், நீ சூரியன்; நீ இந்திரன்; நீ ஹயக்ரீவனெனும் விஷ்ணுவின் அவதாரம்; நீ சிவன்; நீ பிரம்மா; நீ உலகத்துக்கெல்லாம் ஈஸ்வரன்; நீயே பிராம்மணன்; நீ அக்னி; நீ வாயு; நீயே தாதாவும் (ஞானசக்தி) விதாதாவும் (மாயாசக்தி) இருக்கும் தேவன்; நீதான் விஷ்ணு, நீ அமிர்தம்; நீ பேரொளி, நீ மஹான்; நீ எல்லோர்க்கும் ப்ரியமான வஸ்து; நீ பலமென்னும் அலைநிறைந்த கடல்; எல்லாம் நிறைந்தவன்; இங்கு வருபவைகளும் சென்றவைகளும் உன்னிடமிருந்தே உண்டாயின; இந்த ஜங்கமஸ்தாவரங்களை சூரியனைப் போன்ற உனது கிரணங்களால் பிரகாசிக்கச் செய்கிறாய்; சூரியனுடைய ஒளியையே மறைந்துவிடுகிறாய்; அக்னியைப் போன்ற பிரகாசமுள்ளவன் நீ; சூரியன் கோபத்தில் எப்படி பிரஜைகளை எரிப்பானோ அப்படி எரிக்கிறாய்; மேகத்தில் இல்லாமல் பிரகாசிக்கின்ற மின்னலைப் போன்றவன் நீ; வரப்பிரசாதி; நீ யாராலும் ஜெயிக்கமுடியாத பராக்கிரமசாலி;
நீ தயாபரனான மஹாத்மா கசியபரிஷியின் புத்திரன். கோபிக்காதே. தேஜஸை அடக்கிக்கொள். எங்களைக் காப்பாற்று. இடிமுழக்கமிடும் உன்னுடைய சப்தம் எட்டுத் திக்கையும் எங்களையும் நடுநடுங்கச் செய்கிறது. கோபித்த யமன் போல இருக்கும் உன் தேஜஸைக் கண்டு எங்கள் மனம் தடுமாறி அலைகிறது.
பகவானே! எங்களுக்குச் சுகம் அருளி அனுகூலமாக இருக்கவேணும்.
**
இந்திரனுக்கு நமஸ்காரம்
-----------------------------------------
தேவாதிதேவர்களுக்கு ஈசனே; பலாஸுரை சம்ஹாரம் செய்தவனே; நமுசி மர்த்தனனே; ஆயிரம் கண்களையுடையவனே; இந்திராணியின் பர்த்தாவே உனக்கு நமஸ்காரம். நீதான் அளவற்ற ஜலத்தை வர்ஷிக்கிற சக்தி படைத்தவன்; நீதான் மேகம்; நீயே வாயு; நீ அக்னி; நீ மின்னல்; ஆகாசத்தில் மேகக் கூட்டங்களைப் பரவச் செய்பவன்; அதனால் மஹாமேகம் என்ற பெயர் படைத்தவன்; ஒப்பில்லாத வஜ்ராயுதம் நீயே; நீதான் லோகங்களுக்கு சிருஷ்டிகர்த்தாவாகவும் சம்ஹார கர்த்தாவாகவும் இருக்கிறாய்; முகூர்த்தமும் நீயே; திதியும் நீயே; லவம் எனப்படும் க்ஷணத்திற்கும் சிறிய காலமும் நீயே; சுக்லபக்ஷமும் நீயே; கிருஷ்ண பக்ஷமும் நீயே; நீ ராஜா; நீ தேவஸ்ரேஷ்டன்; நீயே விஷ்ணு; நீ ஈஸ்வரன்; சூரியன் உலவும் இருளற்ற ஆகாசம் நீயே; நீ சர்வபிராணிகளிடத்தும் தேஜஸ் எனப்படும் சக்தியாக இருக்கிறாய்; மஹா சமுத்திரங்களும் நீயே; துதிக்கப்படும் யக்ஞங்களில் ஸோமரஸத்தையும் ஹவிஸுகளையும் நீ பானம் பண்ணுகிறாய்;நீ உயர்ந்த கீர்த்தியுள்ளவனாக எப்போதும் பூஜிக்கப்படுகிறாய்.
**
அடுத்த பகுதியில்... தன் தாய் வினதையை அடிமையிலிருந்து மீட்பதற்கு கத்ருவின் பிள்ளைகள் அமிர்தம் கேட்டக.. அதற்காக கருடன் பறந்தது......
இதிகாசம் தொடரும்...

கருட ஜனனம்

கத்ரு உச்சைஸ்ரவத்தின் நிறமென்ன என்று யோசித்துக்கொண்டே தனது வீட்டை அடைந்தாள். வினதை தனது ஜ்யேஷ்ட புத்திரனான அருணன் கொடுத்த சாபத்தை எண்ணிக்கொண்டே துக்கத்துடன் தனது வீட்டிற்குள் சென்றாள்.
கத்ரு வீட்டினுள் நுழைந்த உடனேயே தனது ஆயிரம் நாக புத்திரர்களை தன்னருகே அழைத்தாள். அனைத்தும் அவளைச் சூழ்ந்துகொண்டன.
“என்னுடைய செல்வங்களே! வினதையுடன் உச்சைஸ்ரவத்தின் வால் கறுப்பாகத்தான் இருக்கும் என்று பந்தயம் வைத்திருக்கிறேன். ஆனால் அது தூய வெள்ளை என்று தெரிகிறது. நீங்கள் அனைவரும் உச்சைஸ்ரவத்தின் வாலின் மயிர்களாக மாறி அதன் நிறத்தை கறுப்பாகச் செய்யுங்கள்.. இந்தப் பந்தயத்தில் நான் வெற்றி பெற வேண்டும்.. ” என்று கட்டளையிட்டாள்.
நாகர்கள் எவரும் அதற்கு ஒத்துக்கொள்வது போல தெரியவில்லை. ஒவ்வொருவரும் தலையைத் தலையை ஆட்டி வெறுமனே இருந்தார்கள். கத்ரு கடுகடுவென்றிருந்தாள். புத்திரர்களிடமிருந்து சம்மதமான பதில் ஏதும் வராததால் சிறிது நேரத்தில் பொறுமை இழந்து..
“பாண்டவ வம்சத்து ராஜன், ராஜரிஷி அந்தஸ்தில் இருக்கும் ஜனமேஜயன் ஸர்ப்ப யாகம் செய்வான். அதில் எழும் அக்னி உங்களையெல்லாம் தகித்து சாம்பலாக்குவான்.. நீங்கள் பொசுக்கப்படுவீர்கள்..” என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கக் கடும் சாபம் இட்டாள். நாகபுத்திரர்கள் நடுநடுங்கிப்போனார்கள்.
சத்யலோகத்தில் பிரம்மதேவருக்கு இந்த சாபம் காதில் விழுந்தது. தேவர்கள் கூடி நின்ற பொழுது அவர் பேசலானார்.
“இந்த ஸர்ப்பங்கள் மிகவும் கொடியவை. ஜனங்களின் நன்மைக்காக கத்ரு தனது புத்திரர்களுக்கே இந்த சாபத்தைக் கொடுத்துள்ளாள். அனைவரும் லோக க்ஷேமமும் முக்கியம் என்பதால் நீங்கள் இதற்காக வருந்த வேண்டாம்..” என்று தேவர்களை அனுப்பினார். பின்னர் நாகர்களின் தந்தையான கசியபரைக் கூப்பிட்டார்.
“வீரியமுள்ள விஷமிருக்கும் கொடிய நாகபுத்திரர்களை நீ பெற்றாய். அவற்றை அதன் மாதா சபித்திருக்கிறாள். ஆகையால் நீ கோபம் கொள்ளக்கூடாது. ஸர்ப்ப யாகத்தில் ஸர்ப்பங்கள் அழியப்போவது விதிவசம்.”
என்று சமாதானப்படுத்திய பிரம்மதேவர் அந்தக் கசியபருக்கு விஷநிவர்த்தி செய்யும் வித்தையைக் கற்பித்தார்.
கத்ருவின் வீட்டில் பேரமைதி. சபிக்கப்பட்ட நாகங்கள் தமக்குள் சீறிக்கொண்டன. கார்கோடகன் தைரியமாக எழுந்து வந்தான். கத்ருவை நமஸ்கரித்தான்.
“தாயே! நான் உச்சைஸ்ரவத்தின் வால்மயிராகி கறுப்பாக்குகிறேன். நீ கவலைப்படாதே” என்று மாதாவைத் தேற்றினான். கத்ரு “சரி” என்று அகமகிழ்ந்தாள்.
அடுத்தநாள் காலையில் வினதையும் கத்ருவும் உச்சைஸ்ரவத்தைக் காண கடல் மலைகளைத் தாண்டிப் புறப்பட்டார்கள்.
[சமுத்திரத்தைப் பற்றிய ஒரு பெரிய வர்ணனை இங்கே வருகிறது. கொசுறாக பின்னால் சேர்க்கிறேன்]
இதற்கிடையில், கத்ருவின் புத்திரர்களாகிய நாகங்கள்...
“அன்னையின் வார்த்தையை நாம் மீற வேண்டாம். கார்கோடன் சொன்னது போல நாம் அனைவரும் அந்த உச்சைஸ்ரவஸின் வால் மயிர்களாகி கறுப்பாக்குவோம்...அவளை சந்தோஷப்படுத்தி சாப விமோசனம் பெற முயற்சி செய்வோம்..” என்று புறப்பட்டன.
கத்ருவும் வினதையும் பளீர் வெண்மையில் நின்றுகொண்டிருந்த உச்சைஸ்ரவத்தை நெருங்கினர். ஏற்கனவே நாகங்கள் அதன் வாலை கறுப்பாக்கியிருந்ததால் கத்ரு சொன்னது உண்மையாயிற்று. இந்தப் பந்தயத்தில் தோற்ற வினதை கத்ருவுக்கு அடிமையானாள்.
அருணனின் சாபம் நிறைவேறியது. ஐநூறு வருடகாலங்கள் கத்ருவுக்கு அடிமையாக வினதை படாதபாடுபட்டாள்.
பல வருஷங்களாக இன்னொரு அறையில் இருந்த வினதையின் மீதமிருந்த ஒரு முட்டை விரிசல் விட ஆரம்பித்தது.
சிறிது நேரத்தில் பெரும் சப்தத்துடன் அது வெடித்து அதிலிருந்து பிரளயகால அக்னிக்கு ஒப்பான பிரம்மாண்ட சரீரத்துடன் அடியடியாக விருத்தியடைந்துகொண்டே பக்ஷிராஜாவாகிய கருடன் ஜனித்தார். பிறந்தவுடன் கருடன் எழுப்பிய மிகப்பயங்கரமான சப்தம் தேவலோகத்தை இடித்தது. இந்திராதி தேவர்கள் மிரண்டு போனார்கள். விர்ர்ர்ரென்று விர்ர்ரென்று அவர் விண்ணில் இங்குமங்கும் சிறகடித்துப் பறந்தார். அதிலெழுந்த புயல் வேகக் காற்றில் அகில உலகமும் பறந்துவிடுமோ என்று அனைவரும் அஞ்சினர். கருடனின் அந்தத் தோற்றம் அதிபயங்கரமாக இருந்தது. அக்னி போல அவரது மேனி ஜ்வாலையுடன் தகதகத்து அவர் மேலே... மேலே... மேலே....மேலே... சென்றுகொண்டிருந்தார்.
தேவர்கள் அனைவரும் ஓடிச்சென்று அக்னியைச் சரணடைந்தார்கள்.
“அக்னியே... உன்னுடைய இந்த ரூபத்தைச் சுருக்கிக்கொள்.. வெப்பம் எங்களை தகிக்கிறதே...” என்றார்கள்.
“இல்லை... அது என்னுடைய சொரூபமில்லை. இவன் கருடன். என்னைப் போன்ற தேஜஸ்வி. இவனது அன்னை வினதைக்கு ஆனந்தம் தரப்போகிறவன். கஸ்யபரின் புத்திரன். நாகர்களுக்கு நாசத்தை விளைவிப்பான். மஹா பலசாலி. அசுரர்களுக்கும் ராக்ஷசர்களுக்கும் சத்ரு இவன். நீங்கள் பயப்படாமல் என்னுடன் அவனிடத்தில் வாருங்கள்...” என்று அக்னி அனைத்து தேவர்களையும் கூட்டிக்கொண்டு போனான். அவர்களின் பின்னால் ரிஷிக்கூட்டமும் சென்றது.
விண்ணில் விஸ்வரூபமெடுத்து நின்ற கருடனை ரிஷிகளும் தேவர்களும் துதித்தார்கள்.
[கருடனைப் பற்றிய துதி இங்கே வருகிறது. மேலே சொன்ன சமுத்திர வர்ணனையையும் கருட ஸ்துதியையும் சேர்த்து ஒரு கொசுறாக அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்]
அனைவரும் துதித்ததும் கருடன் தனது தேகத்தை சிறிதாக்கிக்கொண்டார். தேஜஸை குறைத்துக்கொண்டார்.
சூர்யனுக்கு சாரதியாக இருந்த தனது சகோதரன் அருணனையும் தன் முதுகில் ஏற்றிக்கொண்டு சமுத்திரத்தின் அக்கரையில் இருக்கும் தனது தாய் வினதையைக் காணச் சென்றார் கருடன்.
சூரியன் உலகத்தை தகிக்க தக்க சமயத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான். அருணனை கருடன் ஏற்றிச் சென்றதும் “தேவ காரியத்திற்காக நானும் சந்திரனும் ராகு பாயசம் குடித்ததை கண்டுபிடித்துச் சொன்னோம். ஆனால் இந்த ராகு என்னையும் சந்திரனையும் பிடிக்கிறான். இதை தேவர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். உதவி செய்தவர்களை மறந்துவிட்டார்கள். நாளைக் காலையில் இந்த மொத்த உலகத்தையும் எரித்து சாம்பலாக்கி விடுவேன்” என்று சொல்லிவிட்டு அஸ்தமனமானான்.
இம்முறை எல்லோரும் பிரம்மாவிடம் ஓடினார்கள்.
“சூரியன் மிகுந்த கோபத்தில் இருக்கிறான். தஹிப்பதற்காக அஸ்தமனமாகியிருக்கிறான். நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் ப்ரபோ” என்று கைகூப்பினார்கள்.
“சூரியனின் தேஜஸைக் குறைத்து எல்லோரும் பயன் பெறும்படியாக செய்வதற்குதான் கஸ்யபரின் புதல்வன் அருணன் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான். அப்போது சகலருக்கும் நன்மையும் சந்தோஷமும் உண்டாகும். ஆகையால் நீங்கள் கவலையை விடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.
சூரியன் உதிக்க ஆரம்பித்தான். அருணன் ஓடிப்போய் அவன் முன்னால் சென்று நின்றுகொண்டு சூரியனால் உலகைத் தகிக்கமுடியாதது போல நின்றான். சூரியன் கோபத்தின் உச்சத்தில் இருந்தான். அருணனை தீர்த்துவிடலாம் என்று என்னும் வேளையில் அருணன் சமர்த்தாக அவனுக்கு சாரதியானான்.
கருடன் சமுத்திரத்தின் எதிர்திசைக்கு சென்றார். கத்ருவிடம் அடிமைப்பட்டுக்கிடக்கும் தனது தாய் வினதையைக் கண்டு உள்ளம் உருகினார். கருடனின் முன்னிலையில் கத்ரு “பிரியமான வினதையே... இந்த சமுத்திரத்தின் நடுவிலிருக்கும் பிரதேசத்தில் நாகர்களுக்கான இடமிருக்கிறது. அது ராமணியகம் என்ற தீவு. நீ அங்கு என்னைச் சுமந்து செல்வாயாக!” என்று அடிமை வினதையைக் கேட்டாள்.
வினதை கத்ருவை தூக்கிக்கொண்டாள். தாயின் அவஸ்தை தெரிந்து கருடன் கத்ருவின் புத்திரர்களான நாகர்களைத் தூக்கிக்கொண்டு தனது தாயையும் தூக்கிக்கொண்டு அந்தத் தீவிற்கு பறக்க ஆரம்பித்தார். விண்ணில் வெகுதூரம் மேலே எழும்பிச் சென்றதில் சூரியனின் கிரணங்கள் தகித்தது. அதில் நாகர்கள் மூர்ச்சையடைந்தார்கள். அவர்களின் தாயாகிய கத்ரு உடனே இந்திரனைத் துதித்தாள்.
[இந்திர துதி, கருடன் துதி மற்றும் சமுத்திரத்தின் வர்ணனை ஆகிய மூன்றும் தனி பாகமாக இதையடுத்து எழுதுகிறேன். ஆச்சரியமூட்டும் வர்ணனைகள் நிரம்பிய பகுதி அது]
கத்ருவின் துதியினால் இந்திரன் சந்தோஷமடைந்தான். பெரும்மழை பொழிந்தான். அதிகப்படியான ஜலம் உண்டானது. அது பாதாளம் வரை சென்றது. நாகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். மூர்ச்சை தெளிந்து கருடனுடன் ராமணீயகத் தீவை அடைந்தார்கள்.
அந்த தீவினிற்குள் இருந்த வனத்திற்கு வந்தபிறகு நாகர்கள் விளையாடினார்கள். அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. கருடன் ஒரு நெடிதுயர்ந்த விருக்ஷத்தின் மீதமர்ந்து பார்த்துகொண்டிருந்தார். அப்போது நாகர்களில் ஒன்று கருடன் இருக்கும் மரத்தின் அருகில் வந்து பேசியது.
“ஓ கருடனே! எங்களை இன்னும் அழகாக இருக்கும் தீவிற்கு அழைத்துச் செல்... அப்படி எங்களை அழைத்துச் செல்வதின் மூலம் நீயும் புதுப்புது பிரதேசங்களைப் பார்க்கிறாய் அல்லவா?” என்று பழித்தும் கிண்டலாகவும் சிரித்தது.
கருடனின் பக்கத்தில் வினதை அமர்ந்திருந்தாள்.
“தாயே.. நான் ஏன் இவர்கள் சொல்படி கேட்கிறேன். நீ ஏன் இவர்களுக்கு அடிமையானாய்?” என்று கேட்டார்.
:”உச்சைஸ்ரவத்தின் வால் கறுப்பில்லை என்று பந்தயம் கட்டி தோற்றேன். இவர்களுக்கு அடிமையானேன்” என்றாள் வினதை.
கருடனுக்கு மிகவும் வருத்தம் உண்டானது. பயங்கர சப்தமாக அந்த நாகர்களைப் பார்த்து “உங்களுக்கு என்ன வேண்டும்? எது கிடைத்தால் எங்களை இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்வீர்கள்?” என்று கேட்டார்.
“உனது பராக்கிரமத்தால் அமிர்தம் கொண்டு வா. உங்களை விடுதலை செய்கிறோம்” என்று நாகர்கள் அகங்காரம் கொண்டு சீறின.
கருடர் ஒரு முறை தனது தாய் வினதையைப் பார்த்தார். அவள் ஆசீர்வாதம் செய்வது போல பார்த்தாள். கருடன் பறப்பதற்கு தயாராக தனது இறக்கைகளை சடசடத்தார்.
இதிகாசம் தொடரும்....

Monday, September 18, 2017

மோகினி வழங்கிய அமரத்துவபான அமிர்தம்

மந்திரமலை அச்சாக நிற்க பாற்கடலை தேவாஸுரர்கள் கடைய ஆரம்பித்துவிட்டனர். அஸுரர்கள் வாஸுகியின் முகம் இருந்த பக்கம் பிடித்திருந்தார்கள். அவ்வப்போது ஏற்பட்ட கைச் சோர்வினால் தொபீர் தொபீரென்று கீழே போட்டுப் போட்டு தூக்கிப் பிடித்து கடைந்துகொண்டிருந்தனர். நாகராஜா வாஸுகி புஸ்புஸ்ஸென்று பெருமூச்சு விட்டான். ஒவ்வொருமுறையும் அது பெருமூச்சு விடும்போது புகையோடு கூடிய அக்னி பொறி பறக்கக் கிளம்பியது.

அனைத்தையும் தாங்கிக்கொண்டு விடாமல் கடைந்தனர். அப்போது வாஸுகி கொடிய ஹாலாஹலமென்ற விஷத்தைக் கக்கியது. அப்படியே போட்டுவிட்டு தேவர்களும் அசுரர்களும் சிதறி ஓடினார்கள். பிரம்மாவிடம் போய் 

“அமிர்தம் கடையும் போது பிரளயகால அக்னிக்கு ஒப்பான விஷம் உண்டானது. உலகே பற்றி எரியும்போல இருக்கிறது. நீங்கள்தான் காக்க வேண்டும்” என்று அடிபணிந்தார்கள்.

பிரம்மா ருத்ரமூர்த்தியான சிவபெருமானை தியானம் செய்தார். அடுத்த கணம் சூலபாணியாக எதிரில் வந்து நின்றார் தேவாதிதேவனான ஸ்ரீசிவன். அமிர்தமதனம் பற்றி பிரம்மா அவருக்கு எடுத்துச் சொன்னார். பாற்கடல் மீது கருநீலமாகப் பரவி அந்தப் பிரதேசத்தையே தகித்துக்கொண்டிருந்த ஹாலாஹலமென்ற விஷத்தை பானஞ் செய்தார் பரமேஸ்வரன். 

கழுத்தோடு நின்ற அந்த விஷத்தினால் நீலகண்டரானார். அந்த வெப்பம் குறைந்து தேவர்களும் அசுரர்களும் சந்தோஷமடைந்து மீண்டும் கடைய ஆரம்பித்தார்கள். இப்போதும் அசுரர்கள் வாஸுகியின் முகத்தைப் பொதேர் பொதேர் என்று கீழே போட்டார்கள். வாஸுகியின் முகத்திலிருந்து அக்னி ஜ்வாலைகள் தெரித்தது. பக்கத்தில் எதிரில் நிற்பவர்கள் முகத்தை மறைக்கும் புகைமூட்டம் எழுந்தது. 

அந்த புகைமூட்டத்தால் பிரளயகாலம் போல இருட்டிவிட்டது. தொடுவானத்திலிருந்து புறப்பட்டு நடுவானம் வரை பெரும் பெரும் மின்னல்கள் கிளை விட்டுப் பிரிந்து படாரென்று வெட்டியது. இடியின் சத்தம் உலகமே இடிந்து தரைமட்டமாவது போல காதைப் பிளந்தது. அண்டபகிரண்டங்கள் கிடுகிடுப்பது போன்று இருந்தது. சமுத்திர ஜலத்தின் அடியில் இருந்த பல்வேறு பிராணிகள் இறந்தன. கடையும் போது மலை சுழன்றதால் அம்மலையில் இருந்த மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசின. தீப்பற்றிக் கொண்டது. அப்போது அதில் வசித்திருந்த யானைகளும் சிம்மங்களும் தீயில் வெந்து கருகி இறந்தன.

தேவர்கள் வால் பகுதியின் முன்னணியில் நின்றிருந்த தேவேந்திரனிடம் முறையிட்டார்கள். அவன் அங்கே தகிக்கின்ற அக்கினியை பெருமழை பொழிந்து அடக்கினான். அந்த மழையானது மலையில் இருந்த எண்ணற்ற மூலிகைகளையும் அதன் ரஸங்களையும் இழுத்து அடித்துக்கொண்டு வந்து சமுத்திரத்தில் சேர்ந்தது. அப்படி வந்து சேர்ந்த அந்த ஔஷதிகளின் ரசத்தினால் சமுத்திரஜலம் பாலாயிற்று. பாலிலிருந்து வெண்ணை வந்தது. ஆனால் அமிர்தம் உண்டாகவில்லை.

தேவாசுரர்கள் சோர்ந்துபோயினர். பலகாலமாக கடைந்தாலும் அமிர்தம் ஏற்படவில்லை. பிரம்மா மறுபடியும் நாராயணனை வேண்டினார். ஜகத்துக்கே ஆதாரமானவன் எல்லோருக்கும் சக்தியளித்தான். மீண்டும் கடைந்தார்கள்.

பாற்கடலிலிருந்து மீண்டும் விஷம் வந்தது. சிவன் லோகரக்ஷணத்திற்காக அதை விழுங்கினார். கறுத்த உருவத்துடன் காசு மாலையும் பெரும் ஹாரங்களையும் இன்னும் விதவிதமான நகைகளுடன் ஜ்யேஷ்டாதேவி (லக்ஷ்மிக்கு மூத்தவள்) உண்டானாள்.

நூறாயிரம் கிரணங்களுடன் பிரகாசித்துக்கொண்டு நிர்மலரூபமாகச் சந்திரன் உண்டானான்.

பாலைக் கடைந்த வெண்ணையிலிருந்து தூய வெள்ளை வஸ்திரம் உடுத்தி லக்ஷ்மியும் ஸுராதேவியும் (கள்) வெள்ளைக்குதிரை (உச்சைஸ்ரவம்) போன்றவையும் உண்டாயிற்று.

நாராயணனின் மார்பில் உறைவதற்காக கௌஸ்துபம் என்ற ரத்தினம் கண்ணைப் பறிக்கும் ஜொலிஜொலிப்போடு சூரியனைப் போன்ற கிரணங்களை உகுத்துக்கொண்டு உண்டாயிற்று.

பின்னர் வேண்டிய எல்லா வரங்களையும் அருளும் பாரிஜாத மரமும் காமதேனுவும் உண்டானது.

நான்கு தந்தங்களுடன் பிரம்மாண்ட சரீரத்துடன் வெள்ளை நிறத்தில் ஐராவதம் என்ற யானை உண்டானது.

காமதேனு, கல்பகவிருக்ஷம், கௌஸ்துபம், அப்ஸரஸ்கள் ஆகியோர் சூரியனின் மார்க்கமாக தேவலோகம் சென்றடைந்தது. 

இன்னும் அமிர்தம் உண்டாகவில்லை. தேவர்களும் அசுரர்களும் முயற்சியைக் கைவிடாது இடையறாது கடைந்தார்கள். பாற்கடலின் உர்...உர்...உர்ரென்ற ஓசை ஒரு கர்ஜனை போல அஷ்டதிக்குகளிலும் எதிரொலித்தது. 

சட்டென்று கண்ணைக் கூசும் பிரம்மாண்ட ஒளி தோன்றியது. அதன் மத்தியிலிருந்து கையில் அமிர்தமிருக்கும் பளீரென்ற வெள்ளிக் குடத்துடன் மஹா தேஜஸ்வியாக தன்வந்திரி வந்தார். அதுவரை பொறுமையாக கடைந்துகொண்டிருந்த அசுரர்கள் வாஸுகியைக் கீழே போட்டுவிட்டு “எங்களுக்குத்தான் அமிர்தம்...” என்று ஓடி வந்தார்கள். தேவர்களும் ஓடினார்கள். பேரிரைச்சல் ஏற்பட்டது. தள்ளுமுள்ளு.

சட்டென்று ஒரு சுகந்தம் காற்றில் பரவியது. வெள்ளை ஆடையில் பேரெழிலோடு ஒரு தேவமங்கை தோன்றினாள். அவளது மேனி அழகிலும் மோகனப் புன்னகையிலும் அனைவரும் சொக்கிப்போயினர். அசுரர்களுக்கு அமிர்தத்தைக் கொடுக்காமல் முதலில் தேவர்களிடம் ஆரம்பித்தாள். அவளது கவர்ச்சியில் மயங்கிய அசுரர்களுக்கு என்ன நடக்கிறதென்று தெரியாமல் கொஞ்ச நேரம் இருந்தார்கள். அந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொண்ட மோகின்யவதாரம் எடுத்திருந்த விஷ்ணு தேவர்களை அமர வைத்து அமிர்தம் விநியோகம் செய்துகொண்டிருந்தார்.

ராகு என்ற அசுரன் தேவர்களின் உருக்கொண்டு அவர்கள் வரிசையில் வந்து அமர்ந்து அமிர்தம் வாங்கிப் பருகிவிட்டான். அமிர்தம் அவன் தொண்டைக்குள் இறங்கும் தருவாயில் சூரியனும் சந்திரனும் அவனை மற்ற தேவர்களிடம்அடையாளம் காட்டினார்கள். திருமால் தனது சக்ராயுதத்தை ஏவி அவனது சிரசைக் கொய்தார். பெருந்த அலறலுடன் அது விழுந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அந்தத் தலை சூரியனையும் சந்திரனையும் விழுங்கி வருகிறது.  (கிரகண காலங்களில்...)
 
அசுரர்கள் இப்போது தேவர்களுடன் பேய்ச் சண்டையிட ஆரம்பித்தார்கள். ”வெட்டு... தள்ளு.. முட்டு” என்று  எங்கும் இரைச்சல் கேட்டது. அமிர்தபானம் அருந்திய தேவர்கள் முனைப்புடன் போராடினார்கள். அமிர்தம் கிடைக்காத அசுரர்கள் தங்கள் முழு பலத்துடன் போர் புரிந்தார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மோகினியாக இருந்த நாராயணன் அந்த அவதாரத்திலிருந்து விடுபட்டு சங்கு சக்ர கதாபாணியாக நரனுடன் சேர்ந்து நரநாராயணர்களாக வந்தார்கள்.

நரனுடைய தனுசு பேசியது. அதைக் கண்டதும் நாராயணன் தனது சக்ராயுதத்தை ஏவினார். அக்னியைக் கக்கிக் கொண்டு அது அசுரக்கூட்டத்தினுள் நுழைந்தது. சுற்றிய பக்கமெல்லாம் இருந்த தலைகளை அறுத்துக் கீழே தள்ளியது. தரையில் விழுந்த ஒவ்வொரு தலையும் குன்றுகளின் முனை போல் கிடந்தது.  அடுத்ததாக நரன் தனது அஸ்திரங்களினால் மலைகளைப் பிளந்து அதனால் ஆகாசத்துக்குச் செல்லும் வழியை மூடிவிட்டார். விண்ணிற்கு ஏகி அட்டூழியம் செய்யும் அசுரர்கள் மேலே செல்ல இயலவில்லை. 

நாராயணனும் நரனும் சேர்ந்து இன்னும் தீவிரமாக அசுரக் கூட்டத்தை துவம்சம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆகாய மார்க்கம் அடைபட்டுப் போனதால் அசுரர்கள் கீழே இருக்கும் கடலுக்கு அடியில் போய் ஒளிந்துகொண்டார்கள்.

தேவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மந்தர மலையை கௌரவித்தார்கள். அதனுடைய முந்தைய இடத்தில் கொண்டு போய் சேர்த்தார்கள். எல்லா தேவர்களும் அமிர்தத்தை பருகினார்கள். மிகுந்த சந்தோஷமடைந்தார்கள். பின்னர் அந்தப் பாத்திரத்தோடு அமிர்தத்தை தேவேந்திரன் நரனிடம் கொடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ளச் சொன்னான்.

**

உச்சைஸ்ரவம் உண்டான அமிர்தமதனம் நிறைவுற்றது.

**

கத்ருவும் வினதையும் தூரத்தில் உச்சைஸ்ரவத்தைப் பார்த்தார்கள். கத்ரு வினதையிடம்

“அந்த உச்சைஸ்ரவத்தின் வர்ணம் தெரியுமா?”

“வெள்ளை” என்றாள் வினதை.

”இல்லையில்லை.. கறுப்பு...”

”சத்தியமாக அது வெள்ளைதான்..” என்று உறுதியாகச் சொன்னாள் வினதை.

பின்னர் கத்ரு அதன் வால் மட்டுமாவது கறுப்பில்தான் இருக்கும் என்றாள்.

உச்சைஸ்ரவம் அப்போது அங்கிருந்து சென்றுவிட்டது.

கத்ருவும் வினதையும் ஒரு பந்தயம் வைத்துக்கொண்டார்கள்.

“இந்தப் போட்டியில் யார் தோற்கிறார்களோ அவர்கள் இன்னொருவருக்கு ஐநூறு வருடங்கள் அடிமையாக இருக்க வேண்டும்...”

வினதைக்கு அருணன் தனக்கிட்ட சாபம் நியாபகம் வந்தது.

இதிகாசம் தொடரும்....

Wednesday, September 13, 2017

ஆயிரம் நாகர்களும் அமிர்தமதனமும்

ஐநூறு வருஷங்கள் காலம் ஓடியது. முட்டைகளை அடைகாப்பதற்கு சீரான உஷ்ணம் காக்கும் பாத்திரங்களில் கத்ருவின் முட்டைகளும் வினதையின் முட்டைகளையும் தனித்தனியே ஜாக்கிரதையாக ஒரு அறையில் பாதுகாக்கப்பட்டு வந்தன. ஐநூறாவது வருஷத்தின் இறுதியில் கத்ருவின் ஆயிரம் முட்டைகளிலிருந்து ஒரே ரூபமுள்ள ஆயிரம் நாகர்கள் நெளிநெளியாக வெளியே வந்தனர். கறுகறுவென்று பளபளப்பாய் அந்தப் பிரதேசம் முழுக்க தரையெங்கும் ஸர்ப்பங்கள். இதைக் கண்ட கத்ருவுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. ஆனால், வினதையின் முட்டையிலிருந்து ஜனனம் ஏற்படவில்லை.

வினதை மிகவும் வருத்தமுற்றாள். ஐநூறு வருடங்கள் கடந்தும் தனக்கு புத்திரபாக்கியம் இல்லாததால் தனது துரதிர்ஷடத்தை எண்ணி மிகவும் கலக்கமடைந்தாள். கத்ருவின் புத்திரர்களை விட தனக்கு பராக்கிரமும் பலமும் மிக்கவர்கள் வேண்டும் என்ற வரத்தை மறந்தாள். இன்னும் கொஞ்ச வருஷங்கள் காத்திருக்காமல் தனது இரண்டு முட்டைகள் இருக்கும் பாத்திரத்தில் கையை விட்டு ஒரு முட்டையை அழுத்தி உடைத்தாள்.

சடசடவென்று உடைந்த முட்டையிலிருந்து இடுப்பு வரையில் உருவமும் அதன் கீழே அரூபமாகவும் ஒரு புத்திரனைக் கண்டாள். திடுக்கிட்டாள். வேதனையில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்திருந்தவளைப் பார்த்து அவன் மிகவும் கோபம் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“அம்மா! உனக்கும் பொறாமையும் அதிக ஆசையும் இருக்கிறது. என்னை குறையுடன் பிறக்கவைத்துவிட்டாய். அதனால் நீ யார் மீது பொறாமை கொண்டாயோ அவளிடம் ஐநூறு வருட காலம் அடிமையாக இருப்பாய்” என்று சாபமிட்டான்.

வினதை விசனப்பட்டாள். அவனை சமாதானப்படுத்த முயற்சிக்க எண்ணினாள்.

“நீ அவசரப்பட்டு இரண்டாவதாக இருக்கும் முட்டையையும் உடைத்துவிடாதே! ஐநூறு வருடங்கள் அமைதியாகக் காத்திரு. அந்த மகனால் உனக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக் கிடக்கும்”

வினதை அழுதாள். அவள் அழுதுகொண்டிருக்கும் போதே ஜிவ்வென்று விண்ணில் பறந்தான் அவன். அது காலை வேளை. சூரியன் அப்போதுதான் உதித்துக்கொண்டிருந்தான். செந்நிறமாக சூரியனுக்கு முன்னால் விண்ணில் தெரிந்தான். சூரியன் இவ்வளவு தேஜஸ்வியாக இருப்பனை தனக்கு சாரதியாக அமர்த்திக்கொண்டான். அவன்தான் அருணன்.

**

அருணன் விண்ணிற்கு சென்றதும் கத்ருவுடன் ஒரு நாள் வினதை வந்துகொண்டிருந்தாள். அப்போது தூரத்தில் உச்சைஸ்ரவம் என்னும் அஸ்வராஜா நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அது தேவலோகத்துக் குதிரை. முகத்தில் இருவருக்கும் மலர்ச்சி.

[இந்த இடத்தில் உச்சைஸ்ரவம் உண்டான அமிர்தமதனம் என்னும் பாற்கடலைக் கடையும் நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. இதன் பின்னர் மீண்டும் கத்ருவும் வினதையும் அந்த உச்சைஸ்ரவத்தை வைத்து ஒரு பந்தயம் வைத்துக்கொள்கிறார்கள். அதை அப்புறம் பார்ப்போம்... இப்போது அமிர்தமதனம்...]

மேரு பர்வதம். தேவர்களும் கந்தர்வர்களும் சிலாகிக்குமிடம். பாபிகளால் நெருங்கமுடியாது. அமாவாசை இரவிலும் ஜ்யோதிர்லதை என்கிற மூலிகைக் கொடியினால் ஆங்காங்கே வைரம் போல ஜொலிக்குமிடம். ஸ்வர்க்கத்தை மறைக்கும் உசரம். நதிகளும் நெடிதுயர்ந்த விருக்ஷங்களும் நிறைந்த இடம். பலவிதமான ரத்தினங்கள் நிறைந்த அதன் சிகரத்தில் அன்று அனைத்து தேவர்களும் அமர்ந்திருந்தார்கள்.

“அசுரர்களுக்கு சஞ்சீவித்தன்மை அதிகரித்து வீழ்த்தினாலும் வெட்ட வெட்டக் கிளம்பிவிடுகிறார்கள். அமிர்தம் போன்ற ஒரு வஸ்து இப்போதைய நமது அவசியத் தேவை”

தேவேந்திரனின் இந்த திட்டத்திற்கு உபாயம் தேடுவதற்கு தேவர்களும் கந்தர்வர்களும் குழுமியிருந்தார்கள். பிரம்மாவும் நாராயணனும் கூட அப்போது அங்கே எழுந்தருளினார்கள்.

தேவர்களின் கூட்டத்திற்கு சிறிது தூரம் தள்ளி பிரம்மாவும் நாராயணனும் கலந்தாலோசித்துக்கொண்டிருந்தார்கள். இறுதியில் நாராயணன் “தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலை கடையும் போது அமிர்தம் உண்டாகும்” என்றார்.

“ஐயனே! எப்படிக் கடைவது? என்ன செய்யவேண்டும்?” என்று தேவேந்திரன் வினவினான்.

“எல்லா மூலிகைகளையும் ரத்தினங்களையும் போட்டு சமுத்திரத்தைக் கடைய வேண்டும்”

“சர்வ மூலிகைகளைக்கும் நாங்கள் எங்கே செல்வோம் ப்ரபோ! தாங்களே அதற்கும் ஒரு உபாயம் சொல்லவேண்டும்” என்று தொழுதான் தேவேந்திரன். பின்னாலேயே “ஆமாம்...” என்று தேவர்கள் அனைவரும் ஒருசேர விண்ணப்பித்தார்கள்.

“மந்திர மலையில் அனைத்து ஔஷதிகளும் இருக்கிறது. அதைக்கொண்டு கடையுங்கள்” என்றார்.

பதினோராயிரம் யோஜனை தூரம் பூமிக்கு மேலேயும் அதே பதினோராயிரம் யோஜனை தூரம் கீழேயும் உள்ள பர்வதம் அது. தேவக்கூட்டத்தினால் அதை அசைக்கக் கூட முடியவில்லை. மீண்டும் அனைவரும் வைகுண்டம் சென்று நாராயணனிடம் வேண்டினார்கள். அவர் ஆதிசேஷனை அவர்களுக்கு பர்வதம் தூக்குவதற்காக அனுப்பிவைத்தார்.

ஆதிசேஷன் அந்த மந்திரமலையென்னும் பர்வதத்தை அப்படியே தூக்கிக்கொண்டு திருப்பாற்கடலுக்கு வந்தான். அசுரர்களுக்கு செய்தி அனுப்பினார்கள். பெரிய சைனியமாகத் திரண்டு வந்து பாற்கடலின் ஓரத்தில் வந்து கடைவதற்குத் தயாராக அமர்ந்திருந்தார்கள். தேவர்கள் திருப்பாற்கடலெனும் சமுத்திரத்தை “அமிர்தத்துக்காக உன்னைக் கடையப்போகிறோம்” என்றார்கள். “எனக்கும் ஒரு பாகம் கிடைப்பதென்றால் நான் சம்மதிக்கிறேன்” என்றான் சமுத்திரராஜன். ”சரி” என்று ஒப்புக்கொண்டார்கள்.

கடைவதற்கு பெரிய கயிறு தேவைப்பட்டது. அப்போது வாசுகி என்னும் நாகம் கயிறாக இருந்து அமிர்தமதனத்துக்கு ஒத்துழைக்கிறேன் என்று முன்வந்தது.

மந்திரமலையை மத்தாக்கி வாசுகியை கயிறாக்கி தேவாசுரர்கள் கடைய ஆரம்பித்தார்கள். மலையால் ஊன்றி நிற்கமுடியாமல் இருபுறமும் ஆடியது. கடைய முடியவில்லை. திருமாலை வேண்டினார்கள்.

ஒரு பெரிய ஆமையாக கூர்மாவதாரம் எடுத்துக்கொண்டு பாற்கடலின் அடியில் வந்து தோதாகப் படுத்துக்கொண்டார். இந்திரன் வஜ்ராயுதத்தால் ஆமையின் முதுகில் அழுத்தி அதன் மேல் மந்திரமலையை ஏற்றினார்கள். வாஸுகியின் தலைப் பக்கத்தை அசுரர்களும் வாலை தேவர்களும் பிடித்துக்கொண்டார்கள். இப்போது தேவர்களும் அசுரர்களும் சீராக பாற்கடலை கடைய ஆரம்பித்தார்கள்....

இதிகாசம் தொடரும்....

பின் குறிப்பு: ஒரு யோஜனை என்பது 23 மைல்கள் என்று ஒரு இடத்தில் படிக்க நேர்ந்தது. சரியா என்று உறுதியாகத் தெரியவில்லை.

Monday, September 11, 2017

ஜரத்காருவுக்கும் ஜரத்காருவுக்கும் நடந்த திருமணம்

அந்த முடிவு காணா பள்ளத்தில் வௌவால்கள் போல தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த பிதிர்கள் ஜரத்காருவைப் பார்த்து...

“பூலோகத்தில் சந்ததியில்லாதவர்களுக்கு ஸ்வர்க்கத்தில் இடமில்லை....” என்று ஒருமித்து தர்மம் சொன்னார்கள். 

ஜரத்காருவுக்கு இதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. மௌனமாக இருந்தார்.

“எங்களுக்கு ஜரத்காரு என்பவன் சந்ததியாக இருக்கிறான். ஆனால் அவனுக்கு சந்ததியில்லை. விவாஹம் செய்துகொள்ளாமல் தீராத தவமியற்றுகிறான். அது சரி. நீ யார் பிராம்மணனே?”

“நான்தான் ஜரத்காரு. பிதிர்களே நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்...” என்று கேள்விக்குத் தலை வணங்கி கை கூப்பினார். 

“தர்மவானே!  நீ இப்போது விவாஹம் செய்துகொண்டு சந்ததி விருத்தி செய்ய வேண்டும். அதுதான் நீ தவத்தினால் சம்பாதிக்கும் புண்ணியத்தை விட பலமடங்கு மேலானதாகும்”

“பிதிர்களே! நான் ஒருபோதும் ஜீவனத்துக்காக பொருளையும் மனைவியையும் தேடமாட்டேன். ஆனால் உங்களுடைய நன்மைக்காக விவாஹம் செய்துகொள்கிறேன். அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன....” என்று பேசி முடிக்காமல் இழுத்தார்.

பள்ளத்தில் தொங்கிக்கொண்டிருந்த பிதிர்கள் எல்லோரும் ஜரத்காருவை தலைகீழாக திரும்பிப் பார்த்தார்கள். ஆயிரம் கண்கள் அவரைக் குத்தி நின்றன.

“நான் திருமணம் செய்துகொள்ளப்போகும் கன்னிக்கு எனது பெயரே இருக்க வேண்டும். இது முதல் நிபந்தனை. இரண்டாவதாக அந்தக் கன்னிகையின் பந்துக்கள் அவர்களாகவே முன்வந்து எனக்கு பெண் தரவேண்டும். மூன்றாவதாக நான் அவளை பிக்ஷையாக ஏற்றுக்கொள்வேன். பின்னர் பாணிக்கிரஹனம் செய்துகொள்வேன்”

தங்களை கரையேற்றுவதற்கு ஜரத்காரு தயாராகிவிட்டார் என்று பிதிர்கள் மகிழ்ந்தார்கள். அவர் மேலும் தொடர்ந்தார்...

“இது நடக்க நான் தொடர்ந்து முயற்சி செய்வேன். ஆனால் இந்த மார்க்கத்திலிருந்து வேறு மார்க்கம் செல்ல மாட்டேன். இந்த சந்ததி உங்களைக் கரையேற்றும். கவலை வேண்டாம்.” என்று சொல்லிவிட்டு காட்டைப் பார்க்க நடந்து போனார்.

வெகுநாட்கள் பூலோகமெங்கும் சுற்றினார். அவருக்கு கன்னிகை கிட்டவில்லை. திரும்பவும் ஒரு அடர்ந்த வனத்தினுள் நடந்து சென்றுகொண்டிருந்தார். பிதிர்கள் தலைகீழாக தொங்கிக்கொண்டு அவரிடம் யாசித்தது நினைவுக்கு வந்தது. இதுவரை தேடியும் யாரும் கிடைக்கவில்லையே என்று மனம் உடைந்தார். நடுக்காட்டில் நின்று கொண்டு...

“எனக்கொரு கன்னியை பிக்ஷையிடுங்கள்”

“எனக்கொரு கன்னியை பிக்ஷையிடுங்கள்”

“எனக்கொரு கன்னியை பிக்ஷையிடுங்கள்”

என்று மூன்று முறை மெதுவாகக் கேட்டார்.

ஒரு பிரம்மாண்ட விருக்ஷத்தின் மறைவிலிருந்து ஒரு பெரிய ஸர்ப்பம் நெளிநெளியென வெளியே எட்டிப் பார்த்தது. ஜரத்காரு ரிஷியின் முன்னால் வந்து நர ரூபம் எடுத்து நின்று கை கூப்பியது.

“ரிஷியே! நான் வாஸுகி. நாகர் தலைவன். நீங்கள் கன்னி யாசகம் கேட்டது என் காதில் விழுந்தது. என்னுடைய சகோதரியை உங்களுக்கு மணம் முடித்துத் தருகிறேன். சரியென்று சொல்லி ஏற்றுக்கொள்ள வேண்டும்.” 

ஜரத்காரு ரிஷி ஒரு கணம் யோசித்தார். இவனுக்கு நமது நிபந்தனைகள் தெரியுமா என்று மனதுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டு

“ஓ வாஸுகியே! இவளின் பெயர் என்ன? உண்மையைச் சொல்.” என்று வாய்விட்டுக் கேட்டார்.

“இவளது பெயரும் ஜரத்காருதான். உமக்கு பிக்ஷையிட்டு நீர் விவாஹம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக இவளை பத்திரமாக பாதுகாத்து வளர்த்துவருகிறேன். நீர் இவளை ஏற்றுக்கொள்ளும்” என்றான் வாஸுகி.

ஜரத்காரு ரிஷி அவளை பிக்ஷையாக வாங்கிக்கொண்டு பாணிக்கிரஹணம் செய்துகொண்டார்.

[ஜரத்காருக்களுக்குப் பிறந்த ஆஸ்தீகர்தான் பின்னால் ஜனமேஜயன் செய்த ஸர்ப்ப யாகத்தின் போது தமது சகோதரர்களுக்கு சாப விமோசனம் செய்வித்தார். சந்ததியை விருத்தி செய்து பிதிர்களைக் கரையேற்றினார்.]

**

இந்த வாஸுகி தனது ஸர்ப்ப உடன்பிறப்புகளைக் காப்பதற்கு தனது சகோதரியான ஜரத்காருவை ஜரத்காரு ரிஷிக்கு விவாஹம் செய்ய முற்பட்ட கதைக்கு அடிநாதமாக ஒரு ஆதி கதை ஒன்று இருக்கிறது. அந்தக் கதையின் இறுதியில் மேற்கண்ட ஜரத்காருகளின் திருமணம் நடைபெறும். இதோ அந்தக் கிளைக் கதை...

**
தக்ஷ பிரஜாபதிக்கு சௌந்தர்யம் ததும்பும் இரண்டு பெண்கள். ஒருத்தி கத்ரு. இன்னொருத்தி வினதை. இவ்விருவரையும் கசியப முனிவருக்கு விவாஹம் செய்துகொடுத்தார் தக்ஷன். காலம் ஓடியது. முனிவரது வாழ்க்கையில் ஹோமாதியக்ஞங்களுக்கு மட்டும்தான் நேரமிருந்தது. மனைவிகளைப் பார்த்து பழகுவதற்கு அவகாசமில்லை. நிஷ்டை கலைந்த ஒருநாள் கசியபர் அவரது இரண்டு மனைவிகளையும் பர்ணசாலையின் வாசலுக்கு அழைத்து வந்து..

“கத்ரு... வினதை.. உங்கள் இருவருக்கும் நான் வரம் அருளலாம் என்றிருக்கிறேன்.. ம்.. கேளுங்கள்..” என்றார்.

இருவர் முகமும் வரம் என்றதும் தாமரையாய் மலர்ந்தது. முதலில் கத்ரு கேட்டாள்...

“ஸ்வாமி.. எனக்கு ஒரே ரூபமுள்ள ஆயிரம் நாகர்கள் பிள்ளைகளாக வேண்டும்”

“அப்படியே ஆகட்டும்”

அடுத்தது வினதை முன் வந்து கரம் கூப்பி...

“பிரபோ! எனக்கு கத்ருவின் பிள்ளைகளை விட அதிக பலத்தோடு இரண்டே இரண்டு புத்திரர்கள் வேண்டும். அவர்கள் உருவத்திலும் பராக்கிரமத்திலும் சிறந்தவர்களாக இருக்கவேண்டும்”

“ம்.. நடக்கும்” என்று இருவருக்கும் வரம் அருளினார் கசியபர்.

இருவரும் பூரண சந்தோஷமடைந்தனர். வரம் கிடைத்து பல நாட்களுக்குப் பிறகு கத்ரு ஆயிரம் முட்டைகளைப் பெற்றாள். வினதை இரண்டு முட்டைகளைப் பெற்றாள். இருவருடைய வேலைக்காரிகளும் சந்துஷ்டியுடன் அம்முட்டைகளைக்  அதற்கு வேண்டிய உஷ்ணம் காக்கும் பாத்திரங்களில் ஐநூறு வருஷகாலம் பத்திரமாக பாதுகாத்தனர்.

ஐநூறாவது வருஷத்தில்....

இதிகாசம் தொடரும்..

Saturday, September 9, 2017

பிராம்மண தர்மம் சொன்ன டுண்டுபத்தின் கதை

"ரிஷிசிரேஷ்டரே! உமக்கு நான் தீங்கெதுவும் செய்யவில்லை. இருந்தாலும் ஏன் என்னைக் கொல்லத் துடிக்கிறீர்?” என்று அந்த டுண்டுபம் கேட்டது.

”என்னுடைய பிரியமான மனைவியை ஒரு ஸர்ப்பம் தீண்டி விட்டது. அன்று முதல் எந்த ஸர்ப்பத்தைக் கண்டாலும் கொல்லவேண்டும் என்று பிரதிக்ஞை செய்திருக்கிறேன். நீ என்னை பேசி மயக்காதே!” என்று மீண்டும் கையிலிருந்த கழியை அடிப்பதற்காக ஓங்கினார்.

“தர்மோத்தமரே! தீண்டும் பாம்புகள் வேறு என்னைப் போன்று தண்ணீரில் வசிக்கும் பாம்புகள் வேறு ஜாதி. நீர்ப்பாம்புகள் யாரையும் தீண்டாது. ஆனால் ஸர்ப்பங்கள் உயிரைப் போக்கும் வல்லமை கொண்டது. அதனால் தர்மம் தெரிந்த நீர் என்னைக் கொல்லக் கூடாது. அது அதர்மம்” என்று நிமிர்ந்து விவாதம் செய்தது.

ருருவிற்கு ஆச்சரியம். நமக்கு இணையாக தர்ம அதர்ம வாக்குவாதம் செய்யும் இது நிச்சயம் ஒரு பாம்பாக இருக்க முடியாது என்று எண்ணினார்.

“பாம்பே! நீ யார்? இதற்கு முன்னால் நீ என்னவாக இருந்தாய்?” என்று கேட்டார்.

“இந்தப் பிறவிக்கு முன்னால் நான் ஸகஸ்ரபாத் என்ற ரிஷி. ஒரு பிராம்மணனின் சாபத்தால் நான் ஸர்ப்பமாக பிறவி எடுத்தேன்”

“யாரந்த பிராமணன்? அவன் ஏன் உனக்கு சாபம் இட்டான்?” என்று ருரு வினவினார்.

ஒரு மரநிழலில் ஒதுங்கிய அந்த டுண்டுபம் என்ற பாம்பு தன்னுடைய சரிதத்தைச் சொல்ல ஆரம்பித்தது.

“ககமர் என்ற ஒரு பிராம்மணர் என்னுடைய முற்பிறவியின் நண்பர். அவரும் நானும் பால்ய ஸ்நேகிதர்கள். ஒருநாள் இருவரும் விளையாடிக்கொண்டிருக்கையில் புல்லினால் ஸர்ப்பம் மாதிரி ஒன்றைச் செய்தேன். அவர் அக்னிஹோத்திரத்தைப் பற்றி நினைத்துக்கொண்டு நின்றிருந்தார். நான் புல்லினால் செய்த ஸர்ப்பத்தால் அவரை பயமுறுத்தினேன்.”

திடுக்கிட்டுப் போய் “என்னை பயமுறுத்துவதற்காக செய்த ஸர்ப்பம் போல நீயும் ஆகக் கடவது” என்று கோபம் கொண்டு என்னைச் சபித்துவிட்டார். நான் நடுங்கிவிட்டேன். அவரைக் கைக்கூப்பித் தொழுது என்னை மன்னிக்கப் பிரார்த்திதேன். ஆனால் அவரது சாபத்தை அவரால் திரும்பப் பெற முடியாது என்று சொன்னார். பிறகு பிரமதிக்கு ருருவெனும் ஒரு புத்திரன் பிறப்பான். நீ எப்போது அவனைக் காண்கிறாயோ அப்போதே உனக்கு சாப விமோசனம். நீ உன்னுடைய ஸ்வயரூபம் பெறுவாய் என்று சொன்னார்.

ருரு அசையாமல் அவர் சொன்னக் கதையைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அந்த நீர்ப்பாம்பு கொஞ்சம் கொஞ்சமாக கால் முட்டி தொடை இடுப்பு மார்பு என்று உருமாறி ஒரு தேஜஸ்வி அங்கே தோன்றினான்.

"தவத்தில் சிறந்தவரே! உமக்குத் தெரியாததல்ல! இருந்தாலும் நான் இப்போது பிராம்மண தர்மம் சொல்வேன். கேளும்."

“எந்தப் பிராணியையும் ஹிம்சித்தல் கூடாது. அதனால் பிராம்மணன் பிராணி வதை செய்யக்கூடாது. இவ்வுலகத்தில் பிராம்மணன் சாந்தன் என்பது பிரசித்தியாக இருக்கிறது. வேதாதந்தங்கள் கற்றவர்கள் ஜீவராசிகளுக்கு அபயம் அளிப்பவர்கள். பிராமணனுடைய முக்கியமான தர்மங்கள் எவையெவை என்று தெரியுமா?”

இந்தக் கேள்விக்குப் பிறகு கொஞ்சம் இடைவெளி கொடுத்தான் ஸஹஸ்ரபாத் என்ற அந்த ரிஹி. ருரு வாயைத் திறக்கவேயில்லை. பொறுமையுடன் கையைக் கட்டிக்கொண்டு அமைதிகாத்தார். அவன் தொடர்ந்தான்...

“கொல்லாமை, பொய்யாமை, பொறுமை, வேதங்களை மறவாமை இந்த நான்கும் பிராம்மணரின் முக்கியமான தர்மங்கள். தண்டிப்பது, கடுமை காட்டுவது போன்றவைகள் க்ஷத்ரிய தர்மம். ஆகவே உயிர்வதை செய்யாதீர்! ஜனமேஜெயருடைய ஸர்ப்ப யாகத்தில் ஆஸ்தீகர் என்ற வேதவித்து புகுந்து பயமடைந்த ஸர்ப்பங்களைக் காப்பாற்றிய கதையைச் சொல்கிறேன் கேளும்” என்றார் அந்த ஸஹஸ்ரபாத்தான டுண்டுபம்.

“பிராம்மண ஸ்ரேஷ்டரே! ஜனமேஜயர் தனது ஸர்ப்ப யாகத்தில் எதற்காக பாம்புகளைக் கொன்றார்? அந்த ஆஸ்தீகரால் ஏன் பாம்புகள் விடுவிக்கப்பட்டன?”

தொணியில் ஆச்சரியம் மேலிடக் கேட்டார் ருரு.

ஆனால் பாம்பிலிருந்து உருமாறிய அந்த பிராம்மணன் ”உடனே செல்லவேண்டிய வேலை இருக்கிறது” என்று அங்கிருந்து உடனே நழுவினான்.

ருரு தனது தந்தை பிரமதியிடம் ஆர்வம் பொங்கக் கேட்டார். அவரும் ஆஸ்தீகரின் முழுக்கதையைச் சொல்லத் தொடங்கினார்.

(இதோடு பௌலோம பர்வம் முடிந்தது)

ஆஸ்தீகரின் பிதாவின் பெயர் ஜரத்காரு. அவர் பிரம்மாவைப் போல பெருமை வாய்ந்தவர். அவர் பிரம்மாசாரியாகவே வெகுகாலம் இருந்தார். உணவை விட்டார். காற்றைப் புசித்தார். கிராமத்துக்கு ஒரு இராத்திரி தங்குவார். மறுநாள் வேறு ஊரில் இருப்பார். தர்மம் தெரிந்தவர். தவ வலிமை மிக்கவர். ஒரு சமயம் இருள் கவிந்த நேரத்தில் ஆளரவமற்ற இடத்தில் பெரும் பள்ளங்களுக்குப் பக்கத்தில் ஒதுங்கினார். அப்போது அந்தப் பள்ளத்தில் குறுக்கே கண்ணுக்குத் தெரியாத ஒரு கயிறு கட்டியது போல காலை அதில் தொங்கவிட்டுக்கொண்டு தலைகீழ் வரிசையாக சில பிதிர்க்களைப் பார்த்தார்.

“நீங்கள் யார்?” என்று சப்தமாகக் கேட்டார்.

“கிராமத்துக்கு ஒரு ராத்திரியாக தங்கும் யாயாவரர் என்ற பட்டப்பெயர் கொண்ட உக்கிரமான தவம் செய்யும் ரிஷிகள். எங்களுக்கு சந்ததி குறைந்து போனது என்பதால் பூமிக்குக் கீழே போய்க்கொண்டிருக்கிறோம். ”

ஜரத்காரு எதுவும் பேசாமல் அவர்களைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.

பிதிர்க்கள் மேலும் பேசத்தொடங்கினார்கள்.....

இதிகாசம் தொடரும்


Thursday, September 7, 2017

காதலிக்கு பாதி ஆயுளை அளித்த காதலன்

விஸ்வாவஸு ஒரு கந்தர்வன். அரம்பையர்களில் ஒருத்தியான தேவலோக அழகி மேனகையின் மீது காதலுற்றான். காட்டில் இருந்த ஸ்தூலகேசர் என்ற மகரிஷியின் ஆஸ்ரமத்தின் அருகில் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டார்கள். காதல் பரிசாக விஸ்வாவஸூ மேனகைக்கு ஒரு வாரிசைக் கொடுத்தான். அவள் வாரிசை வயிற்றில் சுமந்த போது விஸ்வாவஸூ திடீரென்று காணாமல் போனான்.
மேனகை மனம் ஒடிந்தாள். தினமும் ஸ்தூலகேசரின் ஆஸ்ரமம் அருகில் வந்து நிற்பாள். விஸ்வாவஸு வரவில்லை என்று தெரிந்ததும் முகம் வாடி திரும்பிச் செல்வாள். ஒரு நாள் ஸ்தூலகேசரின் ஆஸ்ரமத்தின் அருகில் செல்லும் நதியின் கரையில் தன் கர்ப்பத்தை ஈன்றாள். அடுத்த கணமே அந்த சிசுவை அங்கேயே ஒரு மரத்தடியில் கிடத்திவிட்டு அழுதுகொண்டே பிரிந்து சென்றாள்.
ஸ்தூலகேசர் தபோவலிமை மிக்கவர். எல்லாப் பிராணிகளிடத்தும் அன்பு செலுத்தும் ஜீவகாருண்யர். நதிக்கு ஸ்நானம் செய்யப் போனவர் அக்கரையில் அனாதையாகக் கிடக்கும் அந்த பெண் குழந்தையை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார். அழகில் மிக்காரும் ஒப்பாரும் இல்லாதவளாக இருந்தாள். ஜாதகம் கணித்து பிரமத்வரை என்று பெயர் சூட்டி தனது ஆஸ்ரமத்திலேயே வளர்த்துவந்தார்.
பிரமதா என்றால் பெண்கள், வரா என்றால் சிறந்தவள். ஆகையால் பெண்களில் சிறந்தவள்.
தர்மம் அனுஷ்டிப்பத்தில் சிறந்தவரான ருரு ஸ்தூலகேசரின் ஆஸ்ரமம் பக்கத்திலிருந்த நதிக்கரைக்கு ஸ்நானம் செய்ய வரும்போது அங்கே வந்துகொண்டிருந்த பிரமத்வரையைக் கண்டு அப்போதே காமவசப்பட்டார். கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். உடனே தனது தந்தையார் பிரமதியிடம் விருப்பத்தைத் தெரிவித்தார்.
பிரமதி ஸ்தூலகேசரின் ஆஸ்ரமம் ஏறி ருருவிற்காக பெண் கேட்டார். ஸ்தூலகேசர் மிகுந்த விருப்பத்துடன் ஒப்புக்கொண்டார். “எதிர்வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம்” என்று ஸ்தூலகேசரும் பிரமதியும் நிச்சயம் செய்துகொண்டார்கள்.
கல்யாணக் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. ருருவின் ஆசையும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வானத்தை முட்டியது. பிரமத்வரை தினமும் தனது தோழிகளுடன் நதிக்கரையிலும் ஆஸ்ரமத்தின் அருகிலிருக்கும் நந்தவனத்திலும் விளையாடி மகிழ்வாள். அப்படி ஒரு நாள் சகிகளோடு ஓடிப்பிடித்து குதூகலமாக இருக்கும்போது வழியில் கிடந்த ஒரு பெரிய ஸர்ப்பத்தை தெரியாமல் மிதித்துவிட்டாள். காலனால் ஏவப்பட்டு காத்திருந்த ஸர்ப்பம் அவளைத் தீண்டியது.
அடுத்த கணம் “ஹா...” என்று கதறி கீழே விழுந்தாள் “ஐயோ!!” என்று அலறிக்கொண்டே அவளோடு விளையாடிக்கொண்டிருந்த தோழிகள் அனைவரும் ஸ்தூலகேசரின் ஆஸ்ரமம் நோக்கி ஓடினார்கள்.
யாகம் ஒன்று வளர்ப்பதற்காக மற்ற ரிஷிகளும் முனிசிரேஷ்டர்களுடனும் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த ஸ்தூலகேசர் பிரமத்வரையின் தோழிகள் ஓடிவருவதைப் பார்த்தார்.
“என்னாயிற்று? ஏன் எல்லோரும் ஓடி வருகிறீர்கள்? பிரமத்வரை எங்கே?” என்று பதறினார்.
“ஐயனே! சீக்கிரம் அங்கே ஓடி வாருங்கள். பிரமத்வரையை ஒரு பெரும் ஸர்ப்பம் தீண்டியது. அவள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள்”
அந்த ரிஷிக்கூட்டத்தில் ருருவும் இருந்தார். எல்லோருக்கும் முன்னே அவர் ஓடினார். பாம்பு கடித்ததில் துடித்துக்கொண்டிருந்த பிரமத்வரையைக் கண்டு ருருவின் உள்ளம் துடித்தது. ஆவி பிரியும் நேரத்தில் பிரமத்வரையைக் காண சகிக்காமல் ருரு அங்கிருந்து வெளியேறி வனத்திற்குள் சென்றுவிட்டார். நடுக்காட்டில் தனியே ஒரு கற்பாறையில் அமர்ந்து கதறினார்.
“குருமார்கள் என்னுடைய சிஷ்ருஷையினால் திருப்தியடைந்திருப்பார்களேயானால் இவள் இப்போது எழுந்திருக்கட்டும். பிறந்தது முதல் நான் மனதை ஜெயித்து தீவிரமான தவம் செய்தவனானால் இந்த பிரத்வரை இப்போதே எழுந்திருக்கட்டும். எங்கும் நிறைந்த சர்வ வ்யாபியும், லோக நாயகரும் அஸுரக் குலத்தை அழிக்கத் தோன்றியவராகவுமான ஸ்ரீ கிருஷ்ண பகவானிடத்தில் என்னுடைய பக்தி ஸ்திரமானதாக இருந்தால் இவள் இப்போதே ஜீவித்து எழவேண்டும்”
காட்டைத் துளைத்து நாற்புறமும் எதிரொலித்தது அவரது பெருங்குரல்.
விண்ணிலிருந்து இதைக் கண்ட தேவர்கள் மனம் உடைந்தனர். அவர்கள் தேவதூதன் ஒருவனை ருருவிடம் பேச பூவுலகிற்கு அனுப்பினார்கள்.
”ருருவே! உமது இந்தக் கலக்கத்திற்கு ஒரு விமோசனம் இருக்கிறது. தேவர்கள் என்னிடம் அதை சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்”
தன்னெதிரே திவ்யசொரூபனாகத் திடீரென்று தோன்றி உபாயம் சொல்லும் தேவதூதனைக் கண்டு சந்தோஷம் அடைந்த ருரு
“அதென்ன உபாயம். பிரமத்வரையை அடைய நான் என்ன செய்யவேண்டும்?” என்று தவித்தார்.
“பிருகுவம்சத்தின் சிரேஷ்ட புத்திரரான ருருவே! உமது ஆயுளில் ஒரு பாதியை நீர் கொடுத்தால் பிரமத்வரை உயிர்பெற்று எழுவாள்”
ருருவின் காதுகளில் அமிர்தம் பாய்ந்தது போல இருந்தது. உடனே “இதோ.. இங்கு கிடக்கும் எனது ப்ராண நாயகியான பிரமத்வரைக்கு என்னுடைய ஆயுளில் பாதி தந்தேன். அவள் எழுந்துவரட்டும்” என்று சபதம் கூறினார்.
கந்தர்வராஜனும் பிரமத்வரையின் தந்தையுமான விஸ்வாவஸுவும் அந்த தேவதூதனும் பாசக்கயிற்றுடன் காத்திருந்த யமதர்மராஜாவிடம் சென்று “தர்மராஜனே! ரிஷி ருருவானவர் தனது ஆயுளில் பாதியை தத்தம் செய்துவிட்டார். பிரமத்வரையை உயிர்பிழைக்க வைய்யும்” என்று வேண்டினார்கள்.
தர்மராஜன் பிரமத்வரையை ஜீவிக்க வைத்தான். அவள் மூர்ச்சையிலிருந்து எழுந்ததுபோல கண் விழித்தாள். சுற்றி நின்ற ஸ்தூலகேசரும் ருருவும் மற்றும் அனைத்து ரிஷிகளும் அவளது ஸ்நேகிதகளும் புன்னகை பூத்தனர்.
பின்னர் முன்னமே குறிப்பிட்ட தேதியில் ருருவுக்கும் பிரமத்வரைக்கும் திருமணம் நடந்தது. அவர்களது வாழ்வு குதூகலகமாகச் சென்றுகொண்டிருந்தது. இந்த சம்பவத்திற்கு பின்னர் ருரு “எந்த ஸர்ப்பத்தைக் கண்டாலும் நான் அதைக் கொல்வேன்” என்று சங்கல்பம் எடுத்துக்கொண்டார். அவரது வழியில் எங்கு ஸர்ப்பத்தைக் கண்டாலும் பக்கதில் கிடக்கும் கல்லையோ கழியையோக் கொண்டு அதை தீர்த்துவிட்டுதான் நகர்வார்.
ஒரு சமயம் யக்ஞாதிகர்மங்களுக்காக நெடுங்காடு தாண்டி பயணப்பட்டுக்கொண்டிருந்தார். அங்கு டுண்டுபம் (விஷமில்லாத தண்ணீர் பாம்புகளுக்கு பெயர்) என்கிற முதிய பாம்பு படுத்திருந்தது. பக்கத்தில் கிடந்த ஒரு மரக்கிளையை எடுத்து அதை அடித்துக்கொல்ல கையை ஓங்கினார்.
அப்போது அந்த பாம்பு பேசியது.....
இதிகாசம் தொடரும்....