Monday, September 18, 2017

மோகினி வழங்கிய அமரத்துவபான அமிர்தம்

மந்திரமலை அச்சாக நிற்க பாற்கடலை தேவாஸுரர்கள் கடைய ஆரம்பித்துவிட்டனர். அஸுரர்கள் வாஸுகியின் முகம் இருந்த பக்கம் பிடித்திருந்தார்கள். அவ்வப்போது ஏற்பட்ட கைச் சோர்வினால் தொபீர் தொபீரென்று கீழே போட்டுப் போட்டு தூக்கிப் பிடித்து கடைந்துகொண்டிருந்தனர். நாகராஜா வாஸுகி புஸ்புஸ்ஸென்று பெருமூச்சு விட்டான். ஒவ்வொருமுறையும் அது பெருமூச்சு விடும்போது புகையோடு கூடிய அக்னி பொறி பறக்கக் கிளம்பியது.

அனைத்தையும் தாங்கிக்கொண்டு விடாமல் கடைந்தனர். அப்போது வாஸுகி கொடிய ஹாலாஹலமென்ற விஷத்தைக் கக்கியது. அப்படியே போட்டுவிட்டு தேவர்களும் அசுரர்களும் சிதறி ஓடினார்கள். பிரம்மாவிடம் போய் 

“அமிர்தம் கடையும் போது பிரளயகால அக்னிக்கு ஒப்பான விஷம் உண்டானது. உலகே பற்றி எரியும்போல இருக்கிறது. நீங்கள்தான் காக்க வேண்டும்” என்று அடிபணிந்தார்கள்.

பிரம்மா ருத்ரமூர்த்தியான சிவபெருமானை தியானம் செய்தார். அடுத்த கணம் சூலபாணியாக எதிரில் வந்து நின்றார் தேவாதிதேவனான ஸ்ரீசிவன். அமிர்தமதனம் பற்றி பிரம்மா அவருக்கு எடுத்துச் சொன்னார். பாற்கடல் மீது கருநீலமாகப் பரவி அந்தப் பிரதேசத்தையே தகித்துக்கொண்டிருந்த ஹாலாஹலமென்ற விஷத்தை பானஞ் செய்தார் பரமேஸ்வரன். 

கழுத்தோடு நின்ற அந்த விஷத்தினால் நீலகண்டரானார். அந்த வெப்பம் குறைந்து தேவர்களும் அசுரர்களும் சந்தோஷமடைந்து மீண்டும் கடைய ஆரம்பித்தார்கள். இப்போதும் அசுரர்கள் வாஸுகியின் முகத்தைப் பொதேர் பொதேர் என்று கீழே போட்டார்கள். வாஸுகியின் முகத்திலிருந்து அக்னி ஜ்வாலைகள் தெரித்தது. பக்கத்தில் எதிரில் நிற்பவர்கள் முகத்தை மறைக்கும் புகைமூட்டம் எழுந்தது. 

அந்த புகைமூட்டத்தால் பிரளயகாலம் போல இருட்டிவிட்டது. தொடுவானத்திலிருந்து புறப்பட்டு நடுவானம் வரை பெரும் பெரும் மின்னல்கள் கிளை விட்டுப் பிரிந்து படாரென்று வெட்டியது. இடியின் சத்தம் உலகமே இடிந்து தரைமட்டமாவது போல காதைப் பிளந்தது. அண்டபகிரண்டங்கள் கிடுகிடுப்பது போன்று இருந்தது. சமுத்திர ஜலத்தின் அடியில் இருந்த பல்வேறு பிராணிகள் இறந்தன. கடையும் போது மலை சுழன்றதால் அம்மலையில் இருந்த மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசின. தீப்பற்றிக் கொண்டது. அப்போது அதில் வசித்திருந்த யானைகளும் சிம்மங்களும் தீயில் வெந்து கருகி இறந்தன.

தேவர்கள் வால் பகுதியின் முன்னணியில் நின்றிருந்த தேவேந்திரனிடம் முறையிட்டார்கள். அவன் அங்கே தகிக்கின்ற அக்கினியை பெருமழை பொழிந்து அடக்கினான். அந்த மழையானது மலையில் இருந்த எண்ணற்ற மூலிகைகளையும் அதன் ரஸங்களையும் இழுத்து அடித்துக்கொண்டு வந்து சமுத்திரத்தில் சேர்ந்தது. அப்படி வந்து சேர்ந்த அந்த ஔஷதிகளின் ரசத்தினால் சமுத்திரஜலம் பாலாயிற்று. பாலிலிருந்து வெண்ணை வந்தது. ஆனால் அமிர்தம் உண்டாகவில்லை.

தேவாசுரர்கள் சோர்ந்துபோயினர். பலகாலமாக கடைந்தாலும் அமிர்தம் ஏற்படவில்லை. பிரம்மா மறுபடியும் நாராயணனை வேண்டினார். ஜகத்துக்கே ஆதாரமானவன் எல்லோருக்கும் சக்தியளித்தான். மீண்டும் கடைந்தார்கள்.

பாற்கடலிலிருந்து மீண்டும் விஷம் வந்தது. சிவன் லோகரக்ஷணத்திற்காக அதை விழுங்கினார். கறுத்த உருவத்துடன் காசு மாலையும் பெரும் ஹாரங்களையும் இன்னும் விதவிதமான நகைகளுடன் ஜ்யேஷ்டாதேவி (லக்ஷ்மிக்கு மூத்தவள்) உண்டானாள்.

நூறாயிரம் கிரணங்களுடன் பிரகாசித்துக்கொண்டு நிர்மலரூபமாகச் சந்திரன் உண்டானான்.

பாலைக் கடைந்த வெண்ணையிலிருந்து தூய வெள்ளை வஸ்திரம் உடுத்தி லக்ஷ்மியும் ஸுராதேவியும் (கள்) வெள்ளைக்குதிரை (உச்சைஸ்ரவம்) போன்றவையும் உண்டாயிற்று.

நாராயணனின் மார்பில் உறைவதற்காக கௌஸ்துபம் என்ற ரத்தினம் கண்ணைப் பறிக்கும் ஜொலிஜொலிப்போடு சூரியனைப் போன்ற கிரணங்களை உகுத்துக்கொண்டு உண்டாயிற்று.

பின்னர் வேண்டிய எல்லா வரங்களையும் அருளும் பாரிஜாத மரமும் காமதேனுவும் உண்டானது.

நான்கு தந்தங்களுடன் பிரம்மாண்ட சரீரத்துடன் வெள்ளை நிறத்தில் ஐராவதம் என்ற யானை உண்டானது.

காமதேனு, கல்பகவிருக்ஷம், கௌஸ்துபம், அப்ஸரஸ்கள் ஆகியோர் சூரியனின் மார்க்கமாக தேவலோகம் சென்றடைந்தது. 

இன்னும் அமிர்தம் உண்டாகவில்லை. தேவர்களும் அசுரர்களும் முயற்சியைக் கைவிடாது இடையறாது கடைந்தார்கள். பாற்கடலின் உர்...உர்...உர்ரென்ற ஓசை ஒரு கர்ஜனை போல அஷ்டதிக்குகளிலும் எதிரொலித்தது. 

சட்டென்று கண்ணைக் கூசும் பிரம்மாண்ட ஒளி தோன்றியது. அதன் மத்தியிலிருந்து கையில் அமிர்தமிருக்கும் பளீரென்ற வெள்ளிக் குடத்துடன் மஹா தேஜஸ்வியாக தன்வந்திரி வந்தார். அதுவரை பொறுமையாக கடைந்துகொண்டிருந்த அசுரர்கள் வாஸுகியைக் கீழே போட்டுவிட்டு “எங்களுக்குத்தான் அமிர்தம்...” என்று ஓடி வந்தார்கள். தேவர்களும் ஓடினார்கள். பேரிரைச்சல் ஏற்பட்டது. தள்ளுமுள்ளு.

சட்டென்று ஒரு சுகந்தம் காற்றில் பரவியது. வெள்ளை ஆடையில் பேரெழிலோடு ஒரு தேவமங்கை தோன்றினாள். அவளது மேனி அழகிலும் மோகனப் புன்னகையிலும் அனைவரும் சொக்கிப்போயினர். அசுரர்களுக்கு அமிர்தத்தைக் கொடுக்காமல் முதலில் தேவர்களிடம் ஆரம்பித்தாள். அவளது கவர்ச்சியில் மயங்கிய அசுரர்களுக்கு என்ன நடக்கிறதென்று தெரியாமல் கொஞ்ச நேரம் இருந்தார்கள். அந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொண்ட மோகின்யவதாரம் எடுத்திருந்த விஷ்ணு தேவர்களை அமர வைத்து அமிர்தம் விநியோகம் செய்துகொண்டிருந்தார்.

ராகு என்ற அசுரன் தேவர்களின் உருக்கொண்டு அவர்கள் வரிசையில் வந்து அமர்ந்து அமிர்தம் வாங்கிப் பருகிவிட்டான். அமிர்தம் அவன் தொண்டைக்குள் இறங்கும் தருவாயில் சூரியனும் சந்திரனும் அவனை மற்ற தேவர்களிடம்அடையாளம் காட்டினார்கள். திருமால் தனது சக்ராயுதத்தை ஏவி அவனது சிரசைக் கொய்தார். பெருந்த அலறலுடன் அது விழுந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அந்தத் தலை சூரியனையும் சந்திரனையும் விழுங்கி வருகிறது.  (கிரகண காலங்களில்...)
 
அசுரர்கள் இப்போது தேவர்களுடன் பேய்ச் சண்டையிட ஆரம்பித்தார்கள். ”வெட்டு... தள்ளு.. முட்டு” என்று  எங்கும் இரைச்சல் கேட்டது. அமிர்தபானம் அருந்திய தேவர்கள் முனைப்புடன் போராடினார்கள். அமிர்தம் கிடைக்காத அசுரர்கள் தங்கள் முழு பலத்துடன் போர் புரிந்தார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மோகினியாக இருந்த நாராயணன் அந்த அவதாரத்திலிருந்து விடுபட்டு சங்கு சக்ர கதாபாணியாக நரனுடன் சேர்ந்து நரநாராயணர்களாக வந்தார்கள்.

நரனுடைய தனுசு பேசியது. அதைக் கண்டதும் நாராயணன் தனது சக்ராயுதத்தை ஏவினார். அக்னியைக் கக்கிக் கொண்டு அது அசுரக்கூட்டத்தினுள் நுழைந்தது. சுற்றிய பக்கமெல்லாம் இருந்த தலைகளை அறுத்துக் கீழே தள்ளியது. தரையில் விழுந்த ஒவ்வொரு தலையும் குன்றுகளின் முனை போல் கிடந்தது.  அடுத்ததாக நரன் தனது அஸ்திரங்களினால் மலைகளைப் பிளந்து அதனால் ஆகாசத்துக்குச் செல்லும் வழியை மூடிவிட்டார். விண்ணிற்கு ஏகி அட்டூழியம் செய்யும் அசுரர்கள் மேலே செல்ல இயலவில்லை. 

நாராயணனும் நரனும் சேர்ந்து இன்னும் தீவிரமாக அசுரக் கூட்டத்தை துவம்சம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆகாய மார்க்கம் அடைபட்டுப் போனதால் அசுரர்கள் கீழே இருக்கும் கடலுக்கு அடியில் போய் ஒளிந்துகொண்டார்கள்.

தேவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மந்தர மலையை கௌரவித்தார்கள். அதனுடைய முந்தைய இடத்தில் கொண்டு போய் சேர்த்தார்கள். எல்லா தேவர்களும் அமிர்தத்தை பருகினார்கள். மிகுந்த சந்தோஷமடைந்தார்கள். பின்னர் அந்தப் பாத்திரத்தோடு அமிர்தத்தை தேவேந்திரன் நரனிடம் கொடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ளச் சொன்னான்.

**

உச்சைஸ்ரவம் உண்டான அமிர்தமதனம் நிறைவுற்றது.

**

கத்ருவும் வினதையும் தூரத்தில் உச்சைஸ்ரவத்தைப் பார்த்தார்கள். கத்ரு வினதையிடம்

“அந்த உச்சைஸ்ரவத்தின் வர்ணம் தெரியுமா?”

“வெள்ளை” என்றாள் வினதை.

”இல்லையில்லை.. கறுப்பு...”

”சத்தியமாக அது வெள்ளைதான்..” என்று உறுதியாகச் சொன்னாள் வினதை.

பின்னர் கத்ரு அதன் வால் மட்டுமாவது கறுப்பில்தான் இருக்கும் என்றாள்.

உச்சைஸ்ரவம் அப்போது அங்கிருந்து சென்றுவிட்டது.

கத்ருவும் வினதையும் ஒரு பந்தயம் வைத்துக்கொண்டார்கள்.

“இந்தப் போட்டியில் யார் தோற்கிறார்களோ அவர்கள் இன்னொருவருக்கு ஐநூறு வருடங்கள் அடிமையாக இருக்க வேண்டும்...”

வினதைக்கு அருணன் தனக்கிட்ட சாபம் நியாபகம் வந்தது.

இதிகாசம் தொடரும்....

No comments:

Post a Comment