ப்ருகுவின் சாபத்தினால் வெறுப்புற்ற தேவ அக்னி கோபாக்னியானான். அடித்த காற்றில் எலும்புகள் முறிவது போல சடசடத்தான். காடு தகித்தது. ஸ்வர்க்கத்தில் தேவர்கள் அவசரமாகக் கூடிவிட்டார்கள். பிதிர்லோகம் கவலையுற்றது. ஏதோ ஆபத்தான காரியம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தெரிந்தது.
“முனிவரே! சாட்சியாக நிற்கும் ஒருவன் தான் கண்டதை தெரிந்திருந்தும் தவறாகச் சொன்னால் என்னவாகும் என்று தெரியுமா?” என்று கர்ஜித்தான்.
ப்ருகு சலனமில்லாமல் நின்றார்.
“அப்படிச் சொன்னால் தனது குலத்தின் பின்னால் வரும் ஏழு சந்ததிகளை நிர்கதியாக்கி மார்க்கமில்லாமல் கெடுத்தவனாவான். அதுமட்டுமல்லாமல் முன்னால் சென்ற ஏழு சந்ததி பித்ருக்களையும் கூட கெடுத்தவனாகிவிடுவான். உண்மை தெரிந்தவன் பேசாமலிருந்தாலும் பாபம்தான். தெரியும்தானே! ”
ப்ருகுவிற்கு அவரது சாபத்தின் விஸ்தீரணம் புரிவதுபோல இருந்தது. அக்னி ஜிகுஜிகுவென்று தொடர்ந்தான்... ஜ்வாலையாக நாக்குகள் நீண்டன.
“என்னாலும் உம்மை இப்போதே சபிக்க முடியும். ஆனால் என்னை ஹோமங்களில் வளர்க்கும் பிராம்மணர்களை பூஜிக்கவேண்டும் என்பதால் சமாதானமடைகிறேன். உமக்குத் தெரிந்தாலும் என்னைப் பற்றி சிலவற்றை சொல்கிறேன் கேளும். அக்னிஹோத்திரங்களிலும் மற்றும் பல விதமான யாகங்களிலிருந்தும் தேவர்களுக்கும் பிதிர்களுக்கும் ஹவிஸைக் கொண்டு செல்கிறேன். அதுதான் வேதத்தின் விதி. என்னால் அவர்கள் பரம திருப்தியடைகிறார்கள்.
தேவ மற்றும் பிதிர்க் கூட்டங்களும் நெய், பால் மற்றும் ஸோமரஸம் போன்ற ஜலங்களினால் சந்தோஷமடைகிறார்கள். அவைகளை யாகங்கள் ஹோமங்கள் மூலமாக அவர்களிடம் கடத்துபவன் நான். தர்ஸ (அமாவாசை) பௌர்ணமாஸ யாகங்கள் பிதிர்களூக்கும் தேவர்களுக்கும் சேர்த்தே செய்யப்படுகிறது. தேவர்களும் பிதிர்க்களும் ஒருவரே! புண்ணிய காலங்கள் ஒன்றாகவும் வேறாகவும் யாகங்களிலும் ஹோமங்களிலும் இருக்கிறார்கள். தேவர்களுக்கும் பிதிர்களுக்கும் நான் தான் வாயென்று சொல்கிறார்கள். அமாவாசையில் பிதிர்களுக்கும் பௌர்ணமாஸியில் தேவர்களுக்கும் என்னிடத்தில்தான் ஹோமஞ் செய்கிறார்கள்.
அந்த ஹோமஞ் செய்த ஹவிஸை அவர்கள் புசிப்பதற்கு நான் வாயாகிறேன். இப்படி இவர்களுக்கு வாயாக இருக்கும் நான் எப்படி எல்லாவற்றையும் சாப்பிடுவேன்?”
அக்னியின் இந்த வாதத்தால் ப்ருகுவிற்கு தர்மசங்கடமானது. ஆனால் கொடுத்த சாபத்தை திரும்பப் பெற இயலாதவராக கை பிசைந்து நின்றார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அக்னி ஒளிந்துகொண்டான். அன்றிலிருந்து ஓங்காரம், வஷட்காரம், ஸ்வதா மற்றும் ஸ்வாஹா ஒலிக்கவில்லை. பிராம்மணர்கள் வேதம் ஓதுவதற்கும், யாகம் செய்வதற்கும், ஸ்ரார்த்தம் செய்வதற்கும், ஹோமம் செய்வதற்கும் அகப்படவில்லை. முக்கியமான சடங்குகள் எதுவும் நடைபெறவில்லை. சம்பிரதாயங்கள் வழக்கொழிந்து போகும் இழிநிலை ஏற்பட்டது. சர்வலோகமும் ஸ்தம்பித்துப் போகும் என்று ரிஷிகள் அச்சப்பட்டார்கள்.
ரிஷிகள் தேவர்களை அணுகினார்கள். உடனே இதை பிரம்மதேவரிடம் எடுத்துச் சொல்லி அக்னியை கண்டுபிடித்து மீண்டும் கர்மங்களை செய்வேண்டும் என்று ஸ்திரமாகச் சொன்னார்கள். ரிஷிகளும் தேவர்களுமாக சத்தியலோகத்தை அடைந்து பிரம்மதேவரிடம் ப்ருகு அக்னிக்கொடுத்த சாபத்தைச் சொல்லி ஸ்ரார்த்தாதிகர்மங்களும் அக்னிஹோத்திரங்களும் ஹோமங்களும் நின்று போனதை முறையிட்டார்கள்.
“ரிஷிகளே! தேவர்களே!! நீங்கள் கவலையை விடுங்கள். அக்னியை அழைத்து நான் சமாதானம் பேசுகிறேன். நல்லது நடக்கும்” என்று உறுதி கூறினார்.
அக்னியை மனதில் நினைத்தார். அடுத்த கணம் எதிரில் வந்து தலைகுனிந்து நின்றான்.
“அக்னியே! சர்வலோகத்திற்கும் நீயே ஆதியும் அந்தமுமாக இருக்கிறாய். சாமக்கிரியைகளை நடத்தும் பொருட்டு திரிலோகங்களையும் தாங்குகிறாய். அனைத்து பிராணிகளுக்கும் நீதான் ஆதார ஸ்ருதி. நீதான் உலகத்தை பரிசுத்தம் செய்கிறாய். ஸூர்யபகவானின் கிரணங்கள் படும் பொருட்கள் எல்லாம் எப்படி சுத்தமாகிறதோ அதேபோல உன் ஜ்வாலைகள் தகிக்கும் பொருட்கள் சுத்தமாகின்றன. நீ ஸ்வயம் பிரகாசமாக இருக்கிறாய். ப்ருகு ரிஷியின் அந்த சாபத்தை சத்தியமாக்கிவிடு” என்றார்.
அக்னி தலை நிமிர்ந்தான். விஷயம் புரியாதது போல பிரம்மதேவரை நோக்கினான். சுற்றி நின்ற ரிஷிக் கூட்டமும் தேவர் கூட்டமும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டது. பிரம்மதேவர் சிரித்துக்கொண்டே தொடர்ந்தார்...
“உன் வாயில் ஹோமஞ் செய்யப்பட்ட தேவர்களின் பாகத்தையும் உன் பாகத்தையும் அதோடு சேர்த்து வாங்கிக்கொள்” என்று அக்னியை தட்டிக்கொடுத்தார்.
அக்னி பரமசந்தோஷமடைந்தான்.
“அப்படியே செய்கிறேன் ப்ரபோ!” என்று பிரம்மதேவரை வணங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
பின்னர் எல்லா உலகங்களிலும் சடங்குகள் சம்பிரதாயங்களும் தங்கு தடையின்றி நடந்தது. ஸ்வர்க்கத்தில் தேவாதி தேவர்களும் பூலோகத்தில் ரிஷிகளும் சாமான்யர்களும் சந்தோஷமடைந்தனர். அக்னியும் துயரம் நீங்கி நிம்மதியானான்.
*
சௌனகாதி முனிவர்கள் அக்னியின் சிறப்பை மேலும் அறிந்துகொண்டார்கள். “ப்ருகுவின் புத்திரர் ச்வயனர் ஸுகன்னியிடத்தில் பிரமதி என்னும் மஹாத்மாவைப் பெற்றாள். அந்தப் பிரமதி கிருதாசியிடம் ருருவை ஈன்றாள். அந்த ருருவின் பெருமை மிகுந்த கதையை கேட்பதற்கு நீங்கள் தயாரா?” என்று ஸூத பௌராணிகர் கேட்டார்.
ருருவின் கதை கேட்க ரிஷிகள் ஆர்வமுடன் நிமிர்ந்தார்கள்.....
இதிகாசம் தொடரும்...