அயோத தௌம்யர் என்னும் குரு அநேக பரீட்சைகள் வைத்து தனது சிஷ்யர்களின் குருபக்தியைச் சோதிக்கிறார். குரு சிஷ்ய உறவும் குருகுல வித்யா பற்றியும் அறிந்துகொள்ள தோதாக இருக்கும் இக்கதைகளில் சென்ற முறை உத்தாலக ஆருணி கழனி மடையை தண்ணீர் செல்லாமல் கட்டி குருதீக்ஷை பெற்றது கண்டோம். இனி இன்னொரு சிஷ்யரான உபமன்யுவின் கதை வருகிறது.
*
குருகுலத்தில் உபமன்யுவுக்கு பசுக்களை மேய்த்து வரும்படி கட்டளை. காலை நேரத்தில் மாடு மேய்ப்பதற்கு காட்டுக்குள் சென்றால் அந்தி சூரியன் அடிவானத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் போது ஆஸ்ரமம் திரும்புவார். தினமும் இப்படி அலைந்து திரிந்து வந்துகொண்டிருந்த உபமன்யுவைப் பார்த்து ஒரு நாள் “உபமன்யு! நீ செழிப்பாக இருக்காறாயே! என்ன சாப்பிடுகிறாய்?” என்று கேட்டார் தௌம்யர்.
“குருவே! நான் பிக்ஷை எடுத்து உண்கிறேன்”
“இனிமேல் நீ எடுக்கும் பிக்ஷையை எனக்குக் காட்டாமல் உண்ண வேண்டாம்” என்று அறிவுறுத்தினார்.
“சரி ஸ்வாமி” என்று வணங்கிவிட்டுச் சென்ற உபமன்யு பிக்ஷையை வாங்கிக் கொண்டு வந்து உபாத்தியாயரிடத்தில் சமர்ப்பித்து நமஸ்கரித்தான். அதை அப்படியே வாங்கிக்கொண்டார் அயோத தௌம்யர். வெறுங்கையோடு திரும்பினான் உபமன்யு.
இப்படி சில காலம் சென்றது. உபமன்யு இன்னுமும் திடகாத்திரமாகவும் புஷ்டியாகவும் இருந்தான். மீண்டும் குரு அழைத்து அவனது உடல் வலிமையோடு இருப்பதைப் பற்றிக் கேட்டார்.
“உபமன்யு! நீ வாங்கும் பிக்ஷையை எனக்குக் கொடுத்துவிடுகிறாய். எப்படி இன்னமும் திராணியோடு இருக்கிறாய்?”
“பகவானே! உங்களுக்குக் கொடுத்த பிறகு இரண்டாம் பிக்ஷை எடுக்கிறேன். அதைக் கொண்டு ஜீவிக்கிறேன்” என்று மரியாதையாக சொன்னான்.
“இரண்டாம் பிக்ஷை எடுப்பது தவறு. அடுத்தவரது பிக்ஷையை நீ அபகரிப்பது போன்றது. இது போன்று இனி செய்யாதே!” என்று கூறி அவனை அனுப்பினார்.
இன்னும் சில காலம் சென்றது. காலையில் சென்றால் மாலையில் வீடு திரும்பி பசுக்களை கொட்டிலில் அடைத்து ஆஸ்ரமத்தின் ஒரு மூலையில் படுத்துக்கொள்வான். ஒரு நாள் இரவு தௌம்யர் “உபமன்யு! நீ குரு சொல் தவறாதவன் என்று தெரியும். இரண்டாம் பிக்ஷையும் எடுப்பதில்லை. பின் எப்படி இன்னமும் இவ்வளவு புஷ்டியாக இருக்கிறாய்?” என்று கேட்டார். மற்ற சிஷ்யர்கள் உபமன்யுவின் பதிலைக் கேட்க ஆர்வமாக இருந்தனர்.
“ஐயனே! நான் பசுவின் பாலைக் குடித்து உயிர் வாழ்கிறேன். அதனால் தெம்புடன் இருக்கிறேன்” என்றான் உபமன்யு அடக்கமாக.
“ஊஹும். உன்னை பசுவை மேய்க்கத்தானே சொன்னேன். அதன் பாலை நீ என்னிடம் கேட்காமல் குடித்தது தவறு. இனிமேல் இதுபோல் செய்யாதே!” என்று கண்டித்தார்.
தினமும் பசுக்களை மேய்த்து வந்தான் உபமன்யு. நாளுக்கு நாள் அவனது தேஜஸ் மிளிர்ந்தது. கொஞ்சம் கூட தளர்வில்லாமல் மிகுந்த அக்கறையோடும் பலத்தோடும் குருவின் பசுக்கூட்டத்தை மேய்த்து பரமாமரித்துக்கொண்டிருந்தான். குருவிற்கு ஆச்சரியம். உபமன்யுவை எப்படியெல்லாம் பரீக்ஷித்துப் பார்த்தாலும் அவன் திடகாத்திரமாகவும் குருகட்டளையை மீறாதவானகாவும் பசுக்களை பாதுகாத்து வருவதிலும் மிகவும் சிரத்தையாக இருப்பதில் பெருமகிழ்ச்சி கொண்டார். இருந்தாலும் இன்னமும் உபமன்யு தேகபலத்துடன் இருப்பதால்
“உபமன்யு! இப்போதும் நீ எப்படி ஜீவனம் செய்கிறாய். இவ்வளவு தேகபலத்துடன் எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார்.
“பசுக்களின் காம்புகளில் பாலை முட்டிக் குடித்த பின்னர் கன்றுக்குட்டிகளின் வாயில் ஒட்டியிருக்கும் நுரைகளை குடித்து ஜீவிக்கிறேன்” என்றான்.
“இதுவும் தவறுதான். கன்றுகளின் ஆகாரத்தின் ஒரு பகுதியை நீ அபகரிக்கிறாய். இனிமேல் இதுபோல் செய்யாதே” என்றார்.
குரு சொன்னது போல எதுவும் சாப்பிடாமல் அலைந்து திரிந்து காட்டில் மாடு மேய்த்துக்கொண்டிருக்கும் போது பசி உயிரை வாங்கியது. கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. அப்போது அங்கு கிடைத்த எருக்கம் இலைகளைப் பறித்துத் தின்றான் உபமன்யு. அதனால் அவனுக்கு கண் பார்வை பறிபோனது. கால் போன திக்கில் நடந்து போது ஒரு பாழுங் கிணற்றில் விழுந்துவிட்டான்.
சாயந்திர நேரத்திற்கு பின்னரும் உபமன்யு வராத காரணத்தினால் தௌம்யரும் எஞ்சியிருந்த சிஷ்யர்களும் தேடிக்கொண்டு காட்டிற்கு வந்தனர். குரு சத்தமாக “உபமன்யு.. உபமன்யு…” என்று குரல் கொடுத்தார்.
“நான் இங்கிருக்கிறேன் குருவே” என்று எங்கிருந்தோ உபமன்யுவின் குரல் கேட்டது.
“நீ எங்கிருக்கிறாய் குழந்தாய்” என்று கேட்டார்.
“பாழுங் கிணற்றில் விழுந்துவிட்டேன்”
“எப்படி பாழுங்கிணற்றில் விழுந்தாய்?”
“மிகுந்த பசியினால் எருக்கம் இலைகளைத் தின்றுவிட்டேன். அதனால் கண் பார்வை பறிபோய் கால் போன திக்கில் நடந்து இந்த பாழுங் கிணற்றில் விழுந்துவிட்டேன்” என்று கூறினான்.
“உபமன்யு! நீ அஸ்வினி தேவர்களை ஸ்தோத்திரம் செய். அவர்கள் தேவ வைத்தியர்கள். உனக்கு கண் பார்வை கொடுப்பார்கள்” என்று குரு உபதேசம் செய்தார்.
பாழுங் கிணற்றுக்குள்ளிருந்து உபமன்யு “அழகானவர்களும், விரைந்து வானத்தில் செல்பவர்களும், சூரியனுக்கு முன்னால் செல்பவர்களும் விசேஷ ஜயமுள்ளவர்களுமான உங்களை வாக்கினால் துதிக்கிறேன்” என்று ஒரு முகூர்த்தம் அஸ்வினீ தேவர்களை நமஸ்கரித்தான்.
அப்போது அங்கே அஸ்வினீ தேவர்கள் தோன்றினார்கள்.
“உன் பிரார்த்தனையால் மகிழ்ந்தோம். இதோ இந்த பக்ஷணங்களை உனக்காக கொண்டு வந்தோம். சாப்பிடு” என்று நீட்டினார்கள்.
கண்பார்வை இழந்த உபமன்யு “இல்லை. என் குருவிற்கு தெரியாமால் நான் புசிக்கேன்” என்று மறுத்தான்.
“முன்பொருதரம் உன் உபாத்யாயர் இதுபோல துதித்தார். அவருக்கும் இது போல பக்ஷணம் கொடுத்தோம். அவர் தனது குருவிற்கு தெரியாமல்தான் சாப்பிட்டார். நீயும் சாப்பிடு” என்று வற்புறுத்தினார்கள்.
“இல்லை. வேண்டாம். என் குருவிற்கு தெரியாமல் நான் சாப்பிட மாட்டேன்: என்று தடுத்தார்.
“உன்னுடைய இந்த குருபக்தியை மெச்சினோம். உன் உபாத்தியாயருக்கு எஃகு போன்ற தந்தங்கள். உனக்கு பொன்னாக மாறட்டும். கண் பார்வை கிடைக்கப்பெறுவாய். சகல வித்தைகளையும் அடைவாய்” என்று அஸ்வினீ தேவர்கள் வரமளித்தார்கள்.
உபமன்யு கண் பார்வை பெற்று தௌம்யரின் திருவடிகளில் விழுந்து அபிவாதனம் செய்து நமஸ்கரித்தான் .
“அஸ்வினீ தேவர்கள் அருளியபடி உனக்கு வித்தைகள் கைகூடும். எல்லா வேதங்களும் தர்மசாஸ்திரங்களும் உன்னிடம் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்” என்று ஆசி கூறி அனுப்பிவைத்தார்.
*
பைதர் என்கிற சிஷ்யரும் வெகுகாலம் குருகுலத்தில் உழைத்தார். குருவிற்கு சிஷ்ருஷைகள் பல செய்தார். இப்படி பலகாலம் செய்த பிறகு குருவிற்கு மனம் திருப்தியடைந்து சந்தோஷம் உண்டாயிற்று. குரு ஆசீர்வாத பலனாக ஸர்வக்ஞனானான்.
[பின்னாளில் இந்த பைதரின் சிஷ்யனான உதங்கரிஷிதான் ஜனமேஜயனை ஸர்ப்பயாகம் செய்யத் தூண்டப்போகிறார்]
No comments:
Post a Comment