நைமிசாரண்யவாசிகளான முனிபுங்கவர்களுக்கு ஸுதப் பௌராணிகர் மஹாபாரதம் சொல்ல ஆரம்பிக்கிறார். ஜடாமுடியும் காவி வஸ்திரமும் அணிந்திருந்த முனிவர்கள் கோஷ்டி கர்ம ஸ்ரத்தையாக ஒரு வேள்வியைப் போல பாரதம் கேட்க தயாரானார்கள். நெடும் மரத்தின் அடியில் அவர்களுக்கிடையே உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த ஸூதர்…
”முனிசிரேஷ்டர்களே! இந்த காவியத்தை த்வைபாயண ரிஷி இயற்றுவதற்கு முன்னர் ஆசி வழங்க காக்ஷி கொடுத்த பிரம்மதேவர் சொன்னதை இங்கே உங்களுக்குச் சொல்லி பூர்ணமாக பாரதம் சொல்லப்போகிறேன்” என்று கண்களை மூடி ஆரம்பித்தார் ஸூதர்.
“க்ருஷ்ண த்வைபாயணரே! நீவிர் அறம் பொருள் இன்பம் வீடு என்கிற பேறுகளைச் சுருக்கமாகவும் விரிவாகவும் சொல்லி சூரியனைப் போல சுடர்விடும் ஒளிவீசும் பாரதத்தினால் இம்மானுட ஜென்மம் எடுத்தவர்களின் அஞ்ஞான இருளைப் போக்கிவிட்டீர்” என்றார். வியாஸர் கைகூப்பி தலை குனிந்து நின்று அருளைப் பெற்றார்.
இந்த வாக்கியத்தில் கேட்டுக்கொண்டிருந்த ரிஷிகள் மனம் கசிந்தார்கள். “ஸூதரே! பிரம்மதேவன் இவ்வாறாக க்ருஷ்ண த்வைபாயணரைப் பாராட்டினார் என்பதைக் கேட்கும்போதே எங்களுக்குள் ஒரு பெருமிதமும் இந்தப் பாரதத்தை அதிசீக்கிரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் ஊறுகிறது. தங்குதடையில்லாத வெள்ளம் போல நீவிர் பொழியவேண்டும், அந்த கதாரஸத்தில் நாங்கள் எங்களை மறந்து உருகவேண்டும்” என்று பிரார்த்தித்தனர்.
பிரம்மா பாரதத்தை ஒரு மரத்திற்கு ஒப்பாகக் கூறி அதன் பர்வங்களை அதோடு அழகாகச் சேர்த்தார்.
“பாரதமென்பது கிளைகள் விரிந்த ஓர் நெடிதுயர்ந்த மரம். அதற்கு அனுக்கிரமணிகா பர்வம் விதை. பௌலோமம் ஆஸ்தீகமென்கிற பர்வங்கள் வேர்கள். ஸம்பவ பர்வம் பருத்த அடிமரம். பக்ஷிகள் தங்குவது ஸபா பர்வத்திலே. வன பர்வம் மரத்தின் சிறுகிளை. விராட பர்வமும் உத்யோக பர்வமும் சாரம். பீஷ்ம பர்வம் பெருங்கிளை, துரோண பர்வம் இலைகள். கர்ண பர்வம் வெண்மையான புஷ்பம். சல்லிய பர்வம் வாசம் வீசும் மணம், ஸ்திரீ பர்வமும் ஐஷீக பர்வமும் நுனி, சாந்தி பர்வம் பெரும் பழம். அஸ்வமேத பர்வம் அமிர்தம் போன்ற பழரசம். ஆஸ்ரமவாஸ பர்வம் பறவைகள் தங்குமிடம். மௌஸல பர்வம் பறவைகள் எழுப்பும் ஒலி, சிஷ்டர்கள் இம்மரத்தின் பறவைகள்”
அந்த நைமிசாரண்ய காடு முழுவதும் பாரதம் போல காட்சியளித்தது. ஒவ்வொரு மரத்தின் கிளை, பூ, காய், கனிகளில் பர்வங்கள் முளைத்துத் தொங்குவது போல முனிவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
த்வைபாயண மஹரிஷியான வியாஸர் இந்த பாரதத்தை முதலில் தனது புத்திரர் சுகப்பிரம்மத்திற்கு கற்பித்தார். அது மொத்தம் அறுபது லக்ஷம் க்ரந்தங்கள். அதில் முப்பது லக்ஷம் கிரந்தங்கள் தேவலோகத்திலேயே நின்றது. அதை தேவர்களுக்கு நாரதர் உபன்யாசம் செய்தார்.. பதினைந்து லக்ஷம் க்ரந்தங்கள் பிதிர்லோகத்தில் தங்கியது. அஸிதரும் அவரது தந்தையான தேவலர் மஹரிஷியும் உபன்யாசம் செய்தார்கள். பதினான்கு லக்ஷம் க்ரந்தங்கள் இராக்ஷஸர்கள் மற்றும் யக்ஷர்களிடத்திலும் கிடைத்தது. இவர்களுக்கு சுகர் மஹரிஷி அருளினார். எஞ்சிய ஒரு லக்ஷம் க்ரந்தங்கள் மட்டும் மானுடர்களுக்கு பூஜிக்க பூலோகத்தில் கிடைத்தது. இதை ஜனமேஜயனுக்கு வியாஸரின் சிஷ்யரான வைசம்பாயண ரிஷி கற்றுக்கொடுத்தார்.
திருதிராஷ்டிரனை வேராகக் கொண்ட கௌரவ வம்சத்தில் துரியோதனன் கோப உருக்கொண்ட மகா விருக்ஷம். அவனைத் தந்தைப் பாசத்தால் தூக்கிப் பிடித்ததால் திருதிராஷ்டிரன் வேரானான். ஸ்நேகிதம் பாராட்டி அவனுடைய எல்லா துஷ்டத்தனத்துக்கும் துணை போனதால் கர்ணன் அடிமரமானான்.துர்போதனைகளைக் கொடுத்து அவனை பிரம்மாண்டமாக விரியச் செய்த கிளையானான் சகுனி. துச்சாதனன் புஷ்பமும் கனியுமானான்.
தர்மதேவதையின் அம்சமான யுதிஷ்டிரர் பாண்டவர்களுக்கு தர்ம மரமானார். அவர்களை எப்போதும் காத்து ரக்ஷித்த கிருஷ்ணரும் வேதமும் பிராம்மணர்களும் வேரானார்கள். தனது வீரதீர பராக்கிரமத்தால் தாங்கிப் பிடித்த அர்ஜூனன் அடிமரம். அகன்று விரிந்த மார்பினாலும் தனது பராக்கிரமத்தாலும் பீமஸேனன் கிளையானான். மாத்ரி புத்திரர்கள் நகுல சகாதேவர்கள் பூவும் கனியுமானார்கள்.
இதிகாசம் தொடரும்………..
No comments:
Post a Comment