நைமிசாரண்ய ரிஷிக்கூட்டம் ஸத்ரயாகத்தில் லயித்திருக்கிறது. ரோமஹர்ஷணரின் புத்திரர் உக்ரஸ்ரவஸ் வைசம்பாயணரின் ஜெயாவை உபன்யாசம் செய்துகொண்டிருக்கிறார். சௌனகர் அக்னிஹோத்ரசாலையில் இருந்து அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்தார்.
“ஜனமேஜயருடைய ஸர்ப்ப யாகத்திற்கான ஒரு காரணத்தைச் சொன்னேன். உதங்கர் அவரைத் தூண்டியது போல மற்றொரு காரணமும் இருக்கிறது. அதைக் கேட்க உங்களுக்கு அவகாசமும் ஆவலும் இருக்கிறதா?”
”இன்னும் நிறைய நாட்கள் இந்த யாகம் செய்யவேண்டும். ஆகையால் நேரம் நிறைய இருக்கிறது. நீங்கள் எல்லாக் கதைகளையும் விஸ்தாரமாகச் சொல்ல வேண்டும்” என்று ரிஷிகள் வேண்டினார்கள்.
“புராணங்களில் நடந்த சிறந்த கதைகளையும் அறிவிற் சிறந்தவர்களைப் பற்றிய பல கிளைக்கதைகளையும் உம்முடைய தந்தையார் ரோமஹர்ஷணர் மயிற்கூச்சமேற்படும்படி சொல்லக் கேட்டிருக்கிறோம். அதில் ப்ருகு வம்சத்தைப் பற்றி முதலில் சொல்ல வேண்டும்” என்றார் ரிஷிகளில் முதலில் அமர்ந்திருந்த சௌனகர்.
------
வருணன் ஒரு யாகம் வளர்த்தான். அந்தக் குண்டத்து அக்னியிலிருந்து பிரம்மாவினால் உதித்தவர் ப்ருகு மகரிஷி. ப்ருகுவின் புத்திரர் ச்யவனர். தர்மவானான பிரமதி ச்யவனரின் புதல்வர். பிரமதிக்கு கிருதாசியென்னும் அப்ஸரஸுக்கும் ருரு பிறந்தார். ருருவுக்கும் பிரமத்வரைக்கும் சுனகர் உண்டானார்.
புலோமை ப்ருகுவின் புகழ்பெற்ற மனைவி. அந்த தர்மபத்னி கர்ப்பம் தரித்தாள். கரு வளர்ந்து முழு கர்ப்பஸ்த்ரீயாக புலோமை தள்ளாமையுடன் நடமாடிக்கொண்டிருந்தாள். ஆஸ்ரம வாசலில் பூ தொடுத்துக்கொண்டு பதுமை போல பல மணி நேரம் அமர்ந்திருப்பாள் புலோமை. ப்ருகுவிற்கு அனைத்து சிஷ்ருஷைகளையும் தளர்ந்திருந்தாலும் செய்துகொண்டிருந்தாள்.
இருபுறமும் அடி பெருத்த நெடுமரங்களடர்ந்த காடு அது. ஆஸ்ரமத்தின் அருகில் பசுமாடு கன்றுக்குட்டியோடு கட்டியிருந்தது. அதனருகில் இருந்த மரத்தின் பின்னாலிலிருந்து ஒரு உருவம் புலோமையை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. அவளது சொக்க வைக்கும் அழகை அனுதினமும் அணுவணுவாக ரசித்துக்கொண்டிருந்தது. புலோமை ஆற்றுக்குச் சென்று நீர் சேர்த்து வரும் போதும் வஸ்திரங்களைத் தோய்த்து ஆஸ்ரமத்தின் கொல்லைக் கொடியில் காயப் போடும் போதும் அந்த உருவம் மரங்களின் பின்னால் நின்று விழுங்கிவிடுவது போல பார்க்கும். புலோமைக்கும் யாரோ பார்ப்பது போன்ற குறுகுறுப்பு இருந்தது.
ஒரு நாள் காலை ப்ருகு மகரிஷி பக்கத்து நதியில் நீராடி நித்ய கர்மானுஷ்டங்கள் செய்யச் சென்றார். சில நாட்களாக மறைந்து பார்த்து நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது புலோமா எனும் ராக்ஷசன். அவன் புலோமையைப் பார்த்து காமம் கொண்டிருந்தான். ப்ருகு சென்ற பிறகு ஆஸ்ரமத்தில் தனியாக இருந்த புலோமையிடம் சென்றான்.
“இந்த அதிதிக்கு ஏதும் கிடைக்குமா?” என்று ஆஸ்ரம வாசலில் வந்து யாசிப்பது போல நின்றான்.
“வரவேண்டும்.. வரவேண்டும்..” என்று க்ரஹத்திற்குள் வரவேற்று ஆசனம் கொடுத்து அமரவைத்தாள் புலோமை.
“சற்று ஓய்வெடுங்கள். உங்களுக்கு என்னால் முடிந்த உணவு தருகிறேன்” என்று சடுதியில் உள்ளே சென்றாள்.
இந்த புலோமா என்ற ராக்ஷசன் ஏற்கனவே புலோமையை மனைவியாக வரித்த தருணம் ஒன்று இருக்கிறது. அப்போது இந்த புலோமைக்கு பால்யம். வ்ரீட் வ்ரீட் என்று ஒருநாள் அழுதுகொண்டிருந்தாள். அப்போது அவளது தந்தையார் “யே.. அழாதே.. ரொம்ப அழுதியோ.. ராக்ஷசண்ட்டே புடுச்சிக்கொடுத்துடுவேன்.. ஏ ராக்ஷசா.. சீக்கிர் வந்து இவளைப் பிடிச்சுக்கோடா” என்று அவளை மிரட்டினார். அந்த ராக்ஷசன் பக்கத்தில் மறைந்து இருந்து இதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். புலோமையின் தகப்பனார் இதைச் சொன்னவுடன் அவளை பிடித்துக்கொள்வது போல கற்பனையில் தன் பாரியாளாக வரித்துவிட்டான்.
இந்த நிகழ்ச்சியை அசை போட்டபடி அமர்ந்திருந்தான் புலோமா. ஒரு மண் தட்டில் காட்டிலிருந்து பறித்த பழங்களையும் காய்கறிகளையும் நறுக்கிப் போட்டுக் கொண்டு வந்து வைத்தாள் புலோமை. அந்த ராக்ஷசனுடைய கண்கள் புலோமையை கண்டபடி மேய்ந்தது. அவளை உடனே அடையவேண்டும் என்று அவனுக்குத் தாபமாக இருந்தது. ஆனால் ப்ருகு மகரிஷியின் பத்னி என்பதால் தயக்கமடைந்தான்.
அவன் எதிரே அமர்ந்திருந்த புலோமை அவனுடைய நடத்தையில் சந்தேகம் கொண்டாள்.
“நீங்கள் இதை அருந்திக்கொண்டிருங்கள். இதோ வந்துவிடுகிறேன்” என்று கொல்லைப்புறம் சென்றாள். நித்ய அக்னிஹோத்ரியான ப்ருகுவின் ஆஸ்ரமத்தில் எப்போதும் அக்னி எரிந்துகொண்டிருக்கும். புலோமா அங்கு கனன்று கொண்டிருந்த அக்னியிடம் பேச ஆரம்பித்தான்.
“அக்னியே! இவளை நானே முதலில் பார்யாளாக வரித்தேன். இவளது தந்தை ப்ருகுவிற்கு இவளை மணமுடித்துவிட்டான். என்னுடைய உயிராக நான் மதிக்கும் இவளை நான் கொண்டு செல்லப்போகிறேன். சிறுவயதில் என்னைத் தான் பிடித்துக்கொள்ளச் சொன்னார் புலோமையின் தகப்பனார். ஆகையால் தேவர்களின் முகமாக இருக்கும் நீ சத்தியம் சொல்ல வேண்டும். அவளை என்னுடைய பத்னியென்றே நீயும் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று வற்புறுத்தினான்.
பொய் சொன்னால் நரகமும் சத்யம் சொன்னால் பிருகு சாபமிடுவார் என்றும் பயந்தான் அக்னி. நடுங்கும் குரலுடன் பேச ஆரம்பித்தான்.
“புலோமா! நீ சாஸ்திரப்படி இவளை மணக்கவில்லை. அவரது தந்தையார் புலோமையை மிரட்டுவதற்காக சொன்னபோது உன் மனதில் மட்டுமே வரித்திருந்தாய். அதுவும் சத்தியம்தான். ஆனால் ப்ருகு சம்பிரதாயமாக என்னை சாட்சியாக வைத்து வலம் வந்து அவளை மணந்துகொண்டார். ஆகையால் அசுரனே அவள் உன்னுடைய மனைவி அல்ல. பொய் என்றுமே நிலைத்து நின்றதில்லை”
அக்னியின் இந்த அறிவுரையை புலோமா ஏற்க தயாராக இல்லை. ஏற்கனவே காமத்தீ சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்ததால் அவளை அப்போதே கவர்ந்து சென்றுவிட வேண்டும் என்று துரிதகதியில் இருந்தான். மனோவேகம் வாயுவேகம் செல்லும் ஒரு பிரம்மாண்ட பன்றியின் ரூபத்தை எடுத்துக்கொண்டான். வந்திருக்கும் அதிதி என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு உள்ளே நுழைந்த புலோமையை வராக அவதார மூர்த்தி பூமியை மூக்கினால் தூக்கிக்கொண்டது போல முன்னால் ஏற்றிக்கொண்டு பறந்தான்.
அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது. கர்ப்பத்திலிருந்த சிசு அதன் தாயாரின் கர்ப்பத்திலிருந்து நழுவி கீழே விழுந்தது. சூரியனைப் போன்ற பிரகாசமாய் இருந்தது. ஆனால் அந்த முகத்தில் ரௌத்ரகளை. கோபத்தில் இருந்த அந்த சிசுவைக் கண்ட புலோமா பஸ்பமாகிக் கீழே சரிந்தான். கர்ப்பத்திலிருந்து நழுவியதால் ச்யவனர் (ச்யவனம் =நழுவுதல்) என்று பெயர் பெற்றார்.
குழந்தையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு கதறினாள் புலோமை. தனது மருமகள் துக்கப்படுவதைக் கண்டார் பிரம்மா. கீழிறங்கி வந்து அவளைத் தேற்றினார். அவள் கண்ணீர் பெருகியதில் ஒரு நதி உண்டாயிற்று. ச்யவனாஸ்ரமத்துக்கு அருகில் ஓடிய அந்த நதிக்கு வதூஸரை என்று பிரம்மதேவன் பெயரிட்டார்.
ப்ருகு ஆஸ்ரமத்துக்கு வந்துவிட்டார். அசந்தர்ப்பமாக இருக்கிறது என்பதை ஊகித்துக்கொண்டார். புலோமை மடியில் குழந்தையுடன் கண்ணீரும் கம்பலையுமாக அமர்ந்திருந்தாள்.
“நீ யாரென்று அந்த ராக்ஷசனுக்கு எப்படித் தெரியும்? யார் அவனுக்குச் சொன்னது? யார் சொனானோ அவனைச் சபித்துவிடுகிரேன்” என்று இடி இடிக்கும் குரலில் கேட்டார் ப்ருகு.
அருகில் அக்னி காற்றில் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தான்.
“இந்த அக்னிதான்..அவன் பன்றி உருக்கொண்டு என்னைத் தூக்கிக்கொண்டு செல்லும் போது உமது புத்திரனாகிய ச்யவனரால் தப்பித்தேன். நம் மகன் ச்யவனர் பிறந்தவுடனேயே கோபத்தில் தகித்தான். அதைத் தாங்கமுடியாத அந்த ராக்ஷசன் சாம்பலாகி கீழே விழுந்தான். ” என்று சொல்லிவிட்டு வாயை மூடி துக்கம் மேலிட குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள் புலோமை.
இதைக் கேட்டதும் ப்ருகுவின் கோபம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருந்தது.
“நீ எல்லாவற்றையும் எரிக்கக் கடவாய்! “ என்று அக்னிக்கு சாபமிட்டார் ப்ருகு.
அடங்குவதா.. ஆடுவதா....என்று அக்னி திருதிருவென விழித்தான்.....
இதிகாசம் தொடரும்...
#மகாபாரதம்
#ஆதிபர்வம்
#பௌலோம_பர்வம்
#பகுதி_8
No comments:
Post a Comment