Monday, August 21, 2017

உதங்கரின் குரு தட்சிணை

அயோத தௌம்யரிடம் ஆசிகள் பெற்று குருகுலக் கல்வி பயின்று முடித்த பைதர் (வேதா என்றும் அழைக்கப்படுகிறார்) கிரஹஸ்தாஸ்ரமம் என்னும் உன்னதமான இல்லற வாழ்வில் இணைந்தார்.

அவரிடம் மூன்று சிஷ்யர்கள் பிரதானமாகக் குருகுல வித்யா பயின்றார்கள். தனது ஆசானான தௌம்யரிடம் பல்வேறு விதமான சிஷ்ருஷைகளையும் கடினமான வேலைகளையும் செய்து களைப்புற்ற பைதர் தன்னுடைய சிஷ்யர்களின் மீது அனாவசியக் காரியச்சுமை எதுவும் ஏற்றவில்லை. அவர்களை அன்புடன் நடத்தி வித்தைகளை அப்யசிப்பதில் தீவிரம் காட்டினார்.

க்ஷத்ரிய அரசர்களான ஜனமேஜயனும் பௌஷ்யனும் தங்களது உபாத்தியாயராக பைதரை நியமித்துக்கொண்டார்கள்.

இந்த சமயத்தில் பைதர் யாகம் ஒன்று வளர்ப்பதற்காக ஆஸ்ரமத்திலிருந்து சில நாட்கள் வெளியூர்களுக்குப் பிரயாணிக்க வேண்டியிருந்தது. அவர் தன் பிரதான சிஷ்யராகிய உதங்கரை அழைத்து

"உதங்கா.. நான் வரும் வரை ஆஸ்ரமத்தை நன்கு கவனித்துக்கொள். வேண்டியவற்றை செய். எல்லோரையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்" என்று பர்ணசாலையை ஒப்படைத்துவிட்டு புறப்பட்டார்.

ஆசிரமத்தில் குருபத்னியும் அங்கு வேலை பார்க்கும் வேறு சில பெண்களும் இருந்தார்கள். ஒரு நாள் அந்த சேடிப் பெண்களில் சிலர் உதங்கரிடத்தில் "குருபத்னி ருதுஸ்நானங் கழித்து மிகுந்த தாபத்தோடு இருக்கிறாள். உங்கள் குரு எல்லா கார்யங்களையும் செய்யச் சொல்லியிருக்கிறார். இது கர்ப்பம் தரிக்கும் காலம். குருவின் ஸ்தானத்தில் இருந்து நீ எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்பது உன் குருவின் கட்டளை. ஆகையால் குருபத்னியின் தாபத்தையும் இப்போது தீர்ப்பாயாக" என்று உள்ளே அழைத்தார்கள்.

"எல்லோரையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளத்தான் குரு சொன்னாரே தவிற அதர்மமான காரியங்களைச் செய் என்று எனக்குக் கட்டளையிடவில்லை. ஆகையால் உங்கள் சொற்படி தவறான நடவடிக்கையில் ஈடுபடமாட்டேன்" என்று தீர்மானமாக மறுத்தார். ஆஸ்ரம வாசலில் பத்மாசனத்தில் அமர்ந்து தபஸில் ஈடுபட்டார்.

எவருக்கும் கட்டுப்படாத காலம் எனும் பெரும் சக்கரம் வேகமாக உருண்டோடியது. ஒருநாள் பைதர் ஆஸ்ரமம் திரும்பினார். ஆஸ்ரமவாசிகளிடம் நடந்தவைகளைக் கேள்விப்பட்டார். உதங்கரை அழைத்து "உதங்கா! நீ தூய்மையானவன் என்று நிரூபித்துவிட்டாய். எனக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. நீ தர்மவான். குருபக்தியின் உறைவிடம் நீ. உனக்கு எல்லா வித்தைகளும் சுலபத்தில் கைகூடும். நீ சென்று பெரும் புகழை அடைவாய்" என்று ஆஸ்ரமத்திலிருந்து செல்ல உத்தரவு கொடுத்தார்.

"ஐயனே! தயை கூர்ந்து குரு தட்சிணை என்ன வேண்டும் என்று கட்டளையிடுங்கள். நான் வழங்க கடமைப்பட்டுள்ளேன்" என்று தலைவணங்கிக் கேட்டார் உதங்கர்.

"உதங்கா.. எனக்கு எதுவும் வேண்டாம். இன்னும் சில காலம் இங்கேயே இரு. பார்க்கலாம்.." என்றார் பைதர். ஆஸ்ரமத்தில் குருவிற்கான சிஷ்ருஷைகளைச் செய்துகொண்டு இருந்தார் உதங்கர்.

பைரதரின் வாக்கின்படி உதங்கர் மேலும் சில காலம் காத்திருந்தார். இரவும் பகலுமாக நாட்கள் மின்னலாய் ஓடின. பைதர் எதுவும் கேட்பதாகவில்லை. உதங்கர் மீண்டும் பைதரை சென்று வணங்கினார். ”குருதேவா! தங்களுக்கு தட்சிணை...” என்று தயக்கத்துடன் நினைவுபடுத்தினார்.

"உதங்கா.. உள்ளே சென்று குருபத்னியிடம் என்ன வேண்டும் என்று கேட்டு அதன்படி செய்வாயாக" என்றார்.

ஆஸ்ரமத்தினுள் சென்று குருபத்னியிடம் பைதர் சொன்னபடி "நான் குருதட்சிணை கொடுக்க விரும்புகிறேன். குரு உங்களிடம் கேட்டுவரச் சொன்னார். தங்களுக்கு என்ன வேண்டும்?"

"உதங்கரே! பௌஷ்ய ராஜாவின் பத்னியிடம் அற்புதமான குண்டலங்கள் இருக்கிறது. எனக்காக அவைகளை யாசித்து வா. இன்னும் நான்கு நாட்களில் ஒரு விசேஷம் வருகிறது. அந்தக் குண்டலங்களை அணிந்து கொண்டு நான் பிராமணர்களுக்கு அன்னம் பரிமாற ஆசைப்படுகிறேன். இதைச் செய்தால் உனக்கு நன்மை பிறக்கும்." என்று சொன்னாள்.

உதங்கர் புறப்பட்டார். காட்டு வழிப் பயணத்தில் ஒரு மிகப்பெரிய இடபத்தின் மேலே ஒருவன் ஏறுவதற்கு முயன்றுகொண்டிருந்தான். அப்போது உதங்கர் அந்தப் பக்கமாக வந்தபோது

"ஓ! உதங்கா.. இந்த இடபத்தின் கோமயத்தைக் குடி" என்று கட்டளையிட்டான்.

தன்னைப் பெயர் சொல்லி அழைக்கும் அவன் யாரென்று ஆச்சரியமாகப் பார்த்தார். அவன் மீண்டும்..

"உதங்கா! என்ன யோசிக்கிறாய்? தயங்காதே.. உன்னுடைய உபாத்தியாயரும் ஒரு முறை இது போல பருகியிருக்கிறார்" என்றான்.

பின்னர் உதங்கர் அந்தக் கோமயத்தைக் குடித்தார். முடித்தவுடன் அவசராவசரமாக ஆசமனம் செய்யாமல் கிளம்பிச் சென்றார். நெடுந்தொலைவு பயணித்தார்.

பௌஷ்யனின் ராஜ்ஜியத்தை அடைந்தார். அரசவையில் கம்பீரமாக வீற்றிருந்தவனை வாயாரப் புகழ்ந்து பல்வேறு ஜயவிஜயங்களை வாழ்த்தாகச் சொல்லி ஆசீர்வதித்தார்.

“நான் உன்னிடம் ஒன்று யாசிப்பதற்கு வந்திருக்கிறேன்”

“ஆஹா. ஆஹா. என்னுடைய பாக்கியமல்லவா! தங்களுக்கு என்ன வேண்டும் பகவானே! ஆணையிடுங்கள்..” என்று கேட்டான் பௌஷ்யன்.

“உன்னுடைய பட்டமகிஷியின் குண்டலங்கள் வேண்டும். இது எனது குருபத்னியின் ஆசை. அது என் குருவிற்கான குருதக்ஷிணையும் கூட”

“தாராளமாக வாங்கிக்கொள்ளலாம்.. நீங்களே அந்தப்புரத்திற்கு செல்லலாம்”

“பௌஷ்ய ராஜனே! ராஜபத்னிகள் இருக்கும் அந்தப்புரத்திற்கு நான் செல்வது தவறாகும். நீயே அதை வாங்கி என்னிடம் கொடு” என்றார் உதங்கர்.

“இல்லையில்லை... தாங்கள் ரிஷிபுங்கவர். புனிதமானவர். தவசிரேஷ்டர். நீங்களே சென்று பெற்றுக்கொள்ளலாம்” என்று அவரை அந்தப்புரத்திற்கு அனுப்பிவைத்தான் பௌஷ்யன்.

பல மாடங்களும் பளிங்குக்கல் தரையுமாக இருந்த பிரம்மாண்டமான அந்தப்புரத்தினுள் நுழைந்தார் உதங்கர். கலைநயமிக்க வேலைப்பாடுகள் அமைந்திருந்த பலவிதமான அறைகள். வாசனாதி திரவியங்களின் புகை ஒழுகும் அலங்காரமான ஜன்னல்கள். பொன்னிறத்தில் சலசலக்கும் திரைச்சேலைகள். ஜல்ஜல்லென்று கொலுசு ஒலிக்க சேடிப்பெண்கள் அங்குமிங்கும் திரிந்தார்கள். ஒரு அறை விடாமல் தேடினாலும் அங்கே ராணி இல்லை. பௌஷ்யன் ஏமாற்றிவிட்டதாக சினம் கொண்டார்.

ரௌத்ராகாரமாக மீண்டும் அரசவைக்கு வந்தார்.

“ஏ! பௌஷ்யனே! நீ என்னை ஏமாற்றிவிட்டாய்..”

“என்ன சொல்கிறீர்கள்? சற்று விளக்கமாக சொல்லவேண்டும்” என்று பணிந்து கேட்டான் பௌஷ்யன்.

“உன் ராஜபத்னி அங்கே இல்லை. இருப்பதாகச் சொல்லி என்னை அனுப்பிவைத்தாயே” என்றார் கோபத்துடன்.

“ஐயனே! அவள் கற்புக்கரசி. ஆசாரம் குறைவான ஆண்கள் கண்ணுக்குத் தெரியமாட்டாள்” என்றான்.

“ஆமாம். வரும் வழியில் நானொரு ஆகாரம் செய்தேன். பிறகு ஆசமனம் செய்யாமல் வந்துவிட்டேன்” என்று சொல்லிவிட்டு கிழக்கு முகமாக உட்கார்ந்து ஆசமனம் செய்தார்.

நுரையில்லாமலும் காய்ச்சப்படாமலும் இருக்கும் தண்ணீர் கேட்டு வாங்கிக்கொண்டார். தீர்த்தம் உள்ளே போவது மார்புவரைக்கும்தான் உணரும் படி நீர் உட்கொள்ளவேண்டும். சர்புர்ரென்று சப்தமெழுப்பாமல் மூன்று முறை ஆசமனம் செய்தார். இரண்டு முறை கண், காது மற்றும் மூக்கை ஜலத்தால் துடைத்துகொண்டார். பின்னர் அந்தப்புரத்தினுள் நுழைந்தார்.அந்தப்புரத்தின் கொல்லைப்புறத்தில் நீர்விழ்ச்சியொன்றின் அருகில் ராஜபத்னியைக் கண்டார். குருதக்ஷிணை பற்றியும் சொன்னார்.

[மேற்கண்ட பாராவில் ஆசமனம் கிரமமாக செய்வது பற்றிய குறிப்பு மஹாபாரதத்தில் வருகிறது. இது போன்ற சம்பவங்களால்தான் ஐந்தாவது வேதமாக பாரதம் மதிக்கப்படுகிறது]

“இந்தாருங்கள்..” என்று தனது குண்டலங்களை உடனே கழற்றிக் கொடுத்தாள் அரசி.



”அடியேன் உங்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என்று உதங்கர் கிளம்பும் தருவாயில் அரசி பேசினாள்.

“உதங்கரே! இந்த குண்டலங்களை ஜாக்கிரதையாக எடுத்துச்செல்லுங்கள். இவற்றை ஏற்கனவே நாகராஜாவாகிய தக்ஷகன் கேட்டான். நான் தரவில்லை. அவன் கவர்ந்து செல்லும் வாய்ப்பு அதிகம்” என்று எச்சரித்தாள்.

“நீ கவலைப்படாதே. தக்ஷகனால் என்னை ஜெயிக்கமுடியாது” என்ற உதங்கர் அந்தக் குண்டலங்களை மடியில் கட்டிக்கொண்டு ராஜாவின் தர்பாருக்கு வந்தார்.

“உன் ராஜபத்னியின் செய்கையால் யாம் குதூகலமடைந்தோம். என் ஆசிகள். சென்று வருகிறேன்” என்று கிளம்பினார்.

“உதங்கரே! நீர் அவசியம் இந்த என் ராஜ க்ருஹத்தில் அன்னபானம் அருந்திவிட்டுதான் கிளம்பவேண்டும்” என்று கட்டாயப்படுத்தினான்.

அவனது தொடர்ந்த வற்புறுத்தலால் சரி என்று ஒப்புக்கொண்டார் உதங்கர். ஆனால் அவருக்கு அளித்த உணவில்...

இதிகாசம் தொடரும்...

#உதங்கர் பகுதி ஒன்று

No comments:

Post a Comment