பசியினால் எருக்கம் இலைகளை தின்று கண் பார்வை பறிபோன உபமன்யுவை அவனது குருநாதர் தௌம்யர் தேவ மருத்துவர்களான அஸ்வினீ தேவர்களை துதிக்கச் சொல்கிறார். உபமன்யுவின் அஸ்வீனி தேவர்கள் துதியில் அற்புதமான சில உவமானங்கள் வருகிறது. உபமன்யுவுக்கு இத்துதிக்குப் பின்னர் அஸ்வினீ தேவர்களால் கண்னொளி கிடைத்தது. பிணி போக்குவதில் இந்த துதி மகத்துவம் வாய்ந்தததாக இருக்கலாம். ஜபித்தால் தெரியும். இனி...
துதி:
பலவர்ண கிரணங்களாகயிருப்பவர்களே,
தேவலோகவாசிகளே,
தபோபலத்தால் சிறந்தவர்களே,
சூரியனுக்கு முன்னால் செல்பவர்களே (ரஸ்மியாக இருப்பவர்கள், அதாவது சூரியனின் கிரணங்களாக இருப்பவர்கள் அஸ்வினீ தேவர்கள்.)
ஓளிக்கு முன்னால் பிறந்தவர்களே (சூரியனுக்கு முன்னால் செல்வதால்),
எல்லா உலகங்களுக்கும் மேலே செல்பவர்களே,
பொற்பறவைகளைப் போன்ற தேஜஸ்விகளே,
ஆபத்தில் காப்பவர்களே,
காப்பதில் பொய்யாதவர்களே,
அழகில் ஒப்பில்லாதவர்களே,
நாசியழகு மிக்கவர்களே,
விசேஷ ஜயமுள்ளவர்களே,
சூரியனுடைய உபகாரத்தால் அவனுக்கு முன் சென்று வெளுப்பும் கறுப்புமான பகல் இரவை நெய்யும் தறிக்காரர்களே,
கருடனைப் போல பலமுள்ள ஒரு செந்நாயின் பிடியிலிருந்த விச்சுளி பறவையைக் காத்து ரட்சித்தவர்களே (ரிக்வேதக் கதை)
தங்களுக்குப் பின்னால் சிவப்பான சூரியக் கிரணங்களை உதிக்கச் செய்பவர்கள்.
[இப்போது இந்தத் துதியின் இடையே பின்வரும் குறிப்பு வருகிறது]
முன்னூற்று இருபது கறவைப் பசுக்கள் ( நாட்கள்) ஒரு கன்றை (வருடம்) ஈன்று அதற்கு ஓளியாக பால் கொடுத்து வளர்க்கின்றன. அப் பசுக்களுக்கு பல தேசங்களே கொட்டில்களாகவும் சூரியனே கறப்பவனாகவும் இருக்கிறான். இந்த கறவைப் பசுக்களிடம் ( நாட்கள்) அஸ்வினீ தேவர்கள் தர்மத்தைக் கறக்கின்றனர்.
[அதாவது அனுதினமும் தர்மம் தழைக்க அஸ்வினீ தேவர்கள் பங்களிக்கிறார்கள்]
முன்னூற்று அறுபது பகல்களும் முன்னூற்று அறுபது இரவுகளும் எழுநூற்றிருபது ஆரக்கால்களாக (spokes) ஒரு அச்சின் நடுவில் சேர்ந்திருக்கிறது. அந்த சக்கரத்திற்கு ஓய்வில்லை. சுழற்சிக்குக் குறைவில்லை. அழிவில்லை. இச்சுழற்சி மாயை அஸ்வினீ தேவர்களின் சரீரம் போல இருக்கிறது.
மற்றொரு சக்கரம் பன்னிரெண்டு மாதங்களையும் ஆரக்கால்களாகவும் அவைகளைக் கோர்க்கிற துவார வாயிலாக ஆறு பருவங்களையும் கொண்டு சுழல்கிறது. இச்சக்கரமே ஜீவராசிகளுக்கு உணவாதாரமாக திகழ்ந்து தேவர்களும் யக்ஞயத்திற்காக அந்த சக்கரத்தில் ஒன்றாயிருக்கிறார்கள்.
அமிர்தமயமான சந்திரனை வட்டமாக ஆக்கும் அஸ்வினீ தேவர்களே, உங்களை தஞ்சமடையும் தாஸர்களைக் காப்பவர்களே, மழை கொடுக்க மலை விட்டு வந்து பூமியில் சஞ்சரிப்பவர்க்ளே ( மேருவுக்கு கீழ்ப்பாகத்தில் சூரியன் தக்ஷிணாயனத்தில் வரும் போது மாரிக்காலம் துவங்கி மழை பெய்கிறது என்று அர்த்தம்)
நீங்கள் ஸூர்யரஸ்மியாக (சூரியக்கிரணங்கள்) இருந்து பத்து திக்குகளையும் படைக்கிறீர்கள், அந்த திக்குகள் தங்களின் சிரசுக்கு மேலே சூரியரதத்தின் சஞ்சாரத்தை சமமாக அடைகின்றன. அந்த சூரியரதத்தைதான் தேவர்களும் ரிஷிகளும் தொடர்கிறார்கள். அதனால் மனிதர்களும் பூமியில் வாழ்கிறார்கள். அஸ்வினீ தேவர்களாகிய நீங்கள் உங்களுடைய பலவர்ணங்களை விரிக்கிறீர்கள். அதுவே சர்வ உலகத்தின் வெளிச்சமாக வியாபிக்கிறது. அதை அனுசரித்துதான் தேவர்களும் சஞ்சரிக்கிறார்கள். இதற்கு காரணமான அசத்தியமில்லாத ஸத்தியமான அஸ்வினீ தேவர்களாகிய உங்களையும் நீங்கள் அனிந்திருக்கும் தாமரை மாலைகளையும் நான் பூஜை செய்கிறேன்.
சூரியனுக்கு முன்னால் கிரணங்களாக வருபவர்கள் அஸ்வினீ தேவர்கள் என்பதாலும், மோட்சம் மற்றும் புண்ணிய லோகத்தை அருளும் யாகம் போன்ற தேவ பித்ரு காரியங்களுக்கு ஸூரியனே மார்க்கம் என்பதால் அஸ்வினீ தேவர்களாகிய நீங்கள் பல பலன்களை அருளுகிறீர்கள்.
ஆகாசத்திலே ஒரு சிறுவனும் சிறுமியும் முகத்தாலே கர்ப்பம் தரித்தனர். ஓர் உயிருமில்லாதவள் இதை நுனிக்காலால் பிரசவித்தாள். பிறந்த சிசு உடனே தாயைச் சாப்பிடுகிறது.
[இதில் சூர்யரஸ்மி தனது நுனியினால் பூமியின் நீரை உட்கொண்டு மேகம் கர்ப்பமடைகிறது. சிறுவன் சிறுமியென்பது சில மேகங்களைக் குறிக்கிறது. ஆகாயம் உயிரில்லாதது. அதற்கு கீழிருக்கும் மண்டலத்திலிருந்து மழை வருவதால் காலால் பிரசவிக்கிறது. அந்த மழை நீர் பூமியை மூழ்கடித்துவிடுவதால் அது பிறந்த இடமான பூமித்தாயை சாப்பிடுகிறது. அஸ்வினீ தேவர்கள் ஸுர்யரஸ்மியாக இருப்பதால் மழைக்கு காரணமாகிறார்கள்]
இதற்கு காரணமான அஸ்வினீ தேவர்களாகிய நீங்கள் சகலரும் ஜீவித்திருக்கும்படி ஸூர்யகிரணங்களை எங்கும் வியாபிக்கச் செய்கிறீர்கள்.
உங்களுடைய எல்லா குண நலன்களையும் வாழ்த்தி துதி செய்யும் பலம் எனக்கில்லை. இந்த ஆழமான கிணற்றில் விழுந்த என்னை ரக்ஷிக்கத் திறமையுள்ள உங்களை சரணாகதியடைந்து துதிக்கிறேன். காக்கவேண்டும்.
[இது போன்ற அரிய சம்பவங்களை பிரதான கதைக்குள் சொருகாமல் தனியே பாரதக் கொசுறு என்ற ஹாஷ் டேக்கில் எழுதுகிறேன். இதே டேக்கில் vyasabharatham.blogspot.in னிலும் படிக்கக் கிடைக்கும்.]
No comments:
Post a Comment