உதங்கருக்கு கோபமான கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவனை எரித்து விடுவது போல பார்த்தார்.
இலையில் இட்ட அன்னம் சூடேயில்லாமல் ஆறிப்போயிருந்தது. சாதத்தில் கை வைத்ததும் பெரிய மயிர் ஒன்று இலையிலிருந்து வாய்க்கு இழுத்துக்கொண்டே வந்தது. பௌஷ்ய ராஜா இதைப் பார்த்துக்கொண்டு வெறுமனே அமர்ந்திருந்தான்.
“ஏ பௌஷ்யனே! எனக்கு சுத்தமில்லாத அன்னத்தை அளித்துவிட்டாய். ஆகையால் உனக்கு கண்ணிரண்டும் அவிந்து போகட்டும். நீ குருடனாகக் கடவது” என்று சாபமிட்டார்.
பௌஷ்யனும் பதிலுக்கு எரிமலையாக வெடித்தான்.
“உதங்கரே! சிரத்தையுடன் சுத்தமான அன்னத்தை உமக்குப் பரிமாறினால் அதைப் பார்க்காமலேயே என்னை சபித்துவிட்டீர். ஆகையால் நீர் சந்ததியேயில்லாமல் போவீர்.” என்று பதில் சாபமிட்டான்.
“நீ தவறிழைத்துவிட்டாய் பௌஷ்யா! இந்த அன்னத்தை உன் இரண்டு கண்களால் உற்றுப் பார்” என்று எழுந்துவிட்டார்.
பௌஷ்யனுக்கு பகீர் என்றது. உதங்கர் குற்றம் சொன்னது போல ஆறி அவலாய்ப் போயிருந்த சாதத்தில் நீண்ட மயிர் ஒன்றும் கிடந்தது.
“உதங்கரே! என்னை மன்னியுங்கள். இது கூந்தல் அவிழ்ந்த ஸ்த்ரீயினால் சமைக்கப்பட்டது. ஆனால் இதை யாரும் உமக்கு வேண்டுமென்றே செய்யவில்லை. தெரியாமல் செய்த குற்றம். ஆகவே மன்னித்தருள வேண்டும்” என்று கெஞ்சினான்.
“ஊஹும். கொடுத்த சாபத்தை திரும்பப் பெற முடியாது. நீ கட்டாயம் சில காலம் கண் பார்வை இழந்து மீண்டும் ஒளி பெறுவாய். நீ கொடுத்த சாபம் என்னைப் பிடிக்காமல் இருக்கவேண்டும்” என்றார் உதங்கர்.
“உதங்கரே! பிராம்மணனுக்கு ஹ்ருதயம் வெண்ணை போல இருக்கவேண்டும். வாக்கு கத்தி போல இருக்கவேண்டும். ஆனால் க்ஷத்ரியனுக்கு ஹ்ருதயம் கூரான கத்தியாக இருக்கிறது. வாக்கில் வெண்ணை தடவியிருக்கிறது. கூரான கத்தி போல இருக்கும் ஹ்ருதயத்தால் சபித்ததனால் சாபத்தை திரும்பப் பெறக்கூடாது. நீர் போகலாம்” என்று முறைத்தான். கோபத்தில் முகம் சிவந்திருந்தான். க்ரீடத்தைக் கழற்றி பக்கத்தில் வைத்து ஜடையை முடிந்து கொண்டான்.
உதங்கர் சிரித்தார்.
“பௌஷ்யா! நீயே அன்னத்தைப் பார்த்து அது அசுத்தமாக இருப்பதை ஏற்றுக்கொண்டாய். ஆகையால் நீ அளித்த சாபம் என்னை ஒன்றும் செய்யாது. நான் போகிறேன்” என்று கிளம்பினார்.
இடுப்பு வஸ்திரத்தில் குண்டலங்களை முடிந்திருந்தார் உதங்கர். அவர் செல்லும் வழியெங்கும் ஆங்காங்கே ஒரு சன்னியாசி வஸ்திரமில்லாமல் நக்னமாக வருவது போலிருந்தது. வழியில் அற்பசங்கைக்காக ஓரிடத்தில் ஒதுங்கினார். அதற்கு எதிரில் பெரிய ஏரி ஒன்று இருந்தது.
தன்னை சுத்தி பண்ணிக் கொள்வதற்காக ஏரியில் இறங்கும் முன் இடுப்பில் சுருட்டி வைத்திருந்த குண்டலங்களைக் கரையில் வைத்துவிட்டு தண்ணீரில் இறங்கினார். அவர் தண்ணீருக்குள் இறங்கும் சமயம் பார்த்து நக்னமாக சன்னியாசி வேடத்தில் திரிந்துகொண்டிருந்த ஆசாமி வந்து குண்டலங்களை எடுத்துக்கொண்டு ஓடினார். அதைப் பார்த்துவிட்ட உதங்கர் துரத்திக்கொண்டு பின்னால் ஓடினார்.
குண்டலங்களைக் கவர்ந்து கொண்டு ஓடுவது தக்ஷகனாக இருக்குமோ என்று எண்ணினார். இருந்தாலும் மனித உருவில் ஓடுவதால் வேறு யாராக இருக்கும் என்ற சிந்தனையில் பிடிக்க ஓடும் போது திடீரென்று அந்த சன்னியாசி பாம்பு உருவம் எடுத்து பக்கத்தில் இருந்த ஒரு வளைக்குள் நுழைந்துவிட்டார். இப்போது பௌஷ்யனின் ராஜபத்னி சொன்னது ஞாபகம் வந்தது. சன்னியாசி உருவில் குண்டலங்களைக் கவர்ந்து சென்றது தக்ஷகன் தான் என்று நிச்சயமாயிற்று.
பக்கத்தில் கிடந்த ஒரு பெரிய கழியை எடுத்து அந்த வளைக்குள் பலம் கொண்ட மட்டும் குத்தினார். பாதி வளைக்குள் சென்ற கம்பிற்கு அந்தப் பாம்பு அகப்படவில்லை. அப்போது இந்திரன் உதங்கரின் உதவிக்கு வந்தான். தனது வஜ்ஜிராயுதத்தை அவரது கழியில் இறக்கினான். உதங்கருக்கு இந்த விஷயம் தெரியாது. அடுத்தமுறை அவரது சக்தியனைத்தையும் பிரயோகித்து வளைக்குள் குத்தினார். அப்போது அந்த வளை பொத்துக்கொண்டு உதங்கரை தக்ஷகனின் நாகலோகத்துக்கு சென்றார். அங்கு நாகர்களை பல ஸ்லோகங்களால் துதித்தார். தக்ஷகனை குண்டலங்களுக்காக பிரார்த்தனை செய்தார். பலனில்லை.
வருத்தமுற்று அமர்ந்திருந்த போது இரண்டு ஸ்த்ரீகளைக் கண்டார். அவர்களிருவரும் ஒரு வஸ்திரத்தை நெய்துகொண்டிருந்தார்கள். அந்த வஸ்திரத்தின் நூல்கள் கறுப்பும் வெளுப்புமாக இருந்தது. அதை நெய்கின்ற சக்கரம் ஆறுகுமாரர்களால் சுற்றப்படுவது. அந்த சக்கிரத்திற்கு பன்னிரெண்டு ஆரக்கால்கள் இருந்தது. ஒரு திவ்ய புருஷனும் அவனுடைய குதிரையையும் கண்டார். அவர்களை நோக்கி ஸ்தோத்திரம் சொல்ல ஆரம்பித்தார் உதங்கர்.
அந்தக் குதிரை மீதிருந்த புருஷன் உதங்கரின் ஸ்லோகத்தில் இன்பமுற்று
“இந்த ஸ்தோத்திரத்தினால் நான் மகிழ்ச்சியடைந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்” என்று சிரித்தான்.
“இந்த நாகர்களை அழித்துவிடவேண்டும். அல்லது இவர்கள் என் வசத்தில் இருக்க வேண்டும்” என்று கேட்டார் உதங்கர்.
அந்த புருஷன் குதிரையிலிருந்து குதித்து இறங்கினான்.
“நீ இந்தக் குதிரையின் அபானத்தில் ஊது. நினைத்தது நடக்கும்” என்றான்.
உதங்கர் அந்தக் குதிரையின் அபானத்தில் ஊதினார். அதன் ஒவ்வொரு ரோமக்கால்களிலிருந்தும் அக்னி ஜுவாலைகள் புகையோடு எரிந்தது. அந்த அக்னியின் வெப்பம் தாங்க முடியாமல் நாகர்கள் தவித்தார்கள். அவர்களது தலைவனான தக்ஷகன் தனது வீட்டிலிருந்து ஓடி வந்தான்.
“உதங்கரே! உங்களது குண்டலங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கொடுத்துவிட்டு ஓடினான்.
கையில் குண்டலங்களை வாங்கிக்கொண்ட உதங்கர் குருபத்னியிடம் இதை சேர்ப்பிக்கும் நேரம் தவறப்போகிறது என்பதை உணர்ந்தார்.
“இன்னும் ஒரு முகூர்த்தத்தில் இதை நான் என் குருபத்னியிடம் சேர்ப்பிக்காவிட்டால் என்னுடைய வித்தை பலிக்காமல் போய்விடும். குருதக்ஷிணை கொடுக்காத பாபியாகிவிடுவேன்” என்று புலம்பினார்.
“நீர் இந்தக் குதிரையில் ஏறும். இது உம்மை உடனே கொண்டு போய் குருவிடம் சேர்த்துவிடும்” என்றான் அந்த திவ்ய புருஷன்.
உதங்கர் குதிரையில் ஏறி உட்கார்ந்தவுடன் உடனேயே அவரது ஆஸ்ரமத்தில் சென்று இறங்கினார். வாசலிலேயே குருபத்னி அமர்ந்திருந்தார். அவரது காலடியில் இரண்டு குண்டலங்களையும் சமர்ப்பித்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டார்.
“உதங்கா! இன்னும் சிறிது தாமதமாக வந்திருந்தாலும் உன்னை நான் சபித்திருப்பேன். நீ சகலவித்தைகளிலும் சிறந்து விளங்குவாய். நான் உன்னை மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கிறேன்” என்றார்.
பின்னர் உதங்கர் தனது உபாத்யாயராகிய பைதரைச் சந்தித்து நாகலோகத்தில் தான் கண்டவைகளை விளக்கினார்.
“குருவே! பாதாளலோகத்தில் இரண்டு ஸ்த்ரீகள் தறிகளில் வஸ்திரம் நெய்துகொண்டிருந்தார்கள். அந்த வஸ்திரத்தில் கறுப்பும் வெளுப்புமான நூல்கள் இருந்தன. மேலும் பன்னிரண்டு ஆரக்கால்களுள்ள ஒரு சக்கரத்தை ஆறு குமாரர்கள் சுற்றிக்கொண்டிருந்தார்கள் அவர்கள் யார்? அந்தச் சக்கரம் என்ன? தேவர்கள் போன்ற ஒருவனைப் பார்த்தேன். அவன் யார்? ஒரு பெரிய குதிரையையும் பார்த்தேன். அது யாது? மேலும் போகும் வழியில் ஒரு பெரிய ரிஷபத்தையும் அதன் மேல் ஏறும் ஒருவனையும் பார்த்தேன். அந்த ரிஷபம் யாது? அந்த புருஷன் யார்? அவன் அந்த ரிஷபத்தின் கோமயத்தைக் குடிக்கச்சொன்னான். நீங்களும் அதைக் குடித்தீர்கள் என்று சொன்னதால் நானும் குடித்தேன். அவன் யார்?” என்று வரிசையாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.
அந்த இரண்டு ஸ்தீரீகளும் தாதாவும் விதாதா என்ற தேவதைகள். தாதா என்றால் உண்டாக்குவது. விதாதா என்றால் பல மாறுதல்களைக் கொடுப்பது. கறுப்பும் வெளுப்புமான நூல்கள் இரவும் பகலும் ஆகும். ஆறு ருதுக்கள்தான் ஆறுகுமாரர்கள். பன்னிரெண்டு ஆரங்கள் பன்னிரெண்டு மாதங்கள். சக்கரமே வருஷம். அந்த புருஷன் பர்ஜன்யனாகிய மேகதேவதை. அந்தக் குதிரைதான் அக்னி. நீ வழியில் சென்ற போது பார்த்த விருஷம் தேவலோகத்து யானை ஐராவதம். அதில் சவாரி செய்தவன் இந்திரன். அவன் உனக்குக் கொடுத்த கோமயம் அமிர்தம். அதைக் குடித்ததால்தான் நீ நாகலோகத்தில் உயிரோடு இருந்தாய். இந்திரன் எனது நண்பன். அதனால் உனக்கு உதவி செய்தான்” என்றார்.
உதங்கருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உடனே பைதர் “உனக்கு அனுமதி கொடுக்கிறேன். நீ பலவிதமான மேன்மைகளை அடையப்போகிறாய். மனமார்ந்த ஆசிகள்” என்றார்.
உதங்கரிஷிக்கு கோபம் கனலாய் கனன்று கொண்டிருந்தது. ஆஸ்ரமத்திலிருந்து நேராக ஹஸ்தினாபுரத்துக்கு வந்தார். ஜனமேஜயனின் அரண்மனைக்குச் சென்றார்.
“மன்னனுக்கு மங்களம் உண்டாகட்டும்” என்று வாழ்த்தினார். பின்னர்
“அரசனே! உன் பிதாவாகிய பரீக்ஷித்தைக் கொன்ற தக்ஷகன் என்ற பாம்பை நாம் ஸர்ப்பயாகம் செய்து கொல்லவேண்டும். தவறே செய்யாத உன் தந்தையைக் கொன்றான் இந்த தக்ஷகன். அவரைக் காப்பாற்றுவதற்காக வந்த காஸ்யபரையும் தடுத்தான். ஆகையால் நாமொரு ஸர்ப்பயாகம் செய்ய வேண்டும்.” என்று தூபம் போட்டார் உதங்கரிஷி.
தனது தந்தை பரீக்ஷித்து தக்ஷகனால் கடித்துக் கொல்லப்பட்டதைக் கேட்ட போது கோபம் தலைக்கேறியது. மன்னன் கண்களில் பழிவாங்கும் உணர்ச்சி ஏறி கொலைவெறி தெரிந்தது.
#ஆதிபர்வம்
#பௌஷ்யபர்வம் (முடிந்தது)
#மஹாபாரதம்
#பகுதி 7
test
ReplyDelete