Saturday, December 16, 2017

தர்மசாஸ்திரங்கள் சொல்லும் விவாஹங்கள்

சகுந்தலை துஷ்யந்தனுக்குத் தனது கதையைச் சொல்ல துவங்குகிறாள்.

ஒரு சமயம் விசுவாமித்திரர் கடும் தவம் இயற்றினார். தேவேந்திரன் பயந்தான்.

“ஆஹா! இந்த ரிஷி என்னை இந்திரபதவியிலிருந்து இறக்கி விடுவார் போலிருக்கிறதே” என்று புலம்பித் தவித்தான். பக்கத்தில் நடனமங்கையான எழில் கொஞ்சும் மேனகை நின்றிருந்தாள். இந்திரன் அவள் பக்கம் திரும்பினான்.

“மேனகையே! விஸ்வாமித்ரர் உக்கிரமான தவத்தில் இருக்கிறார். எனது ராஜ்யத்திற்கு பங்கம் வந்துவிடும் போலிருக்கிறது. ஆகையால் நீ சென்று...”

”நான் சென்று...” மேனகை பதறினாள்.

“உனது ரூபத்தை மோஹிக்காதவர் எவர்? இன்சொல்லை ரசிக்காதவர் உண்டோ? ஒரு புன்னகை சிந்தி அவரை மயங்கச் செய். அவரது தவத்துக்கு இடையூறு விளைவித்துவிடு... அது போதும்” என்று கேட்டுக்கொண்டான்.

மேனகை தயங்கினாள். அங்கிருந்து நகராமல் தரையைப் பார்த்து தலையைக் குனிந்த வண்ணம் நின்றிருந்தாள். இந்திரன் பதறினான்.

“ஏன் தயங்குகிறாய் மேனகை? சீக்கிரம் செல். இங்கே எனது அரியாசனம் ஆடுகிறது”

“அவர் கடுந்தவமும் மிகுந்த கோபமும் உடையவர். அவரது சக்திக்கு நீங்களே பயப்படுகிறீர்கள். நானெப்படி அச்சப்படாமல் போவது?” என்று இழுத்தாள் மேனகை.

“என்னால் முடியாதது உன் அழகினால் முடியும். உடனே செல்” இந்திரன் மேனகையை அவசரப்படுத்தினான்.

“க்ஷத்திரிய ஜாதியில் பிறந்து தன் வன்மையால் பிராமணரானவர். ஒரு சமயம் தனது ஸ்நானத்திற்கு கொஞ்சமாகத் தேங்கிய ஜலத்தை பிரவாகமான நதியாக்கினார். அந்த கௌசிகி நதி ஜனங்களால் கடக்கமுடியாதபடி பிரம்மாண்டமாக ஓடுகிறது. குருவாகிய வசிஷ்டரால் சபிக்கப்பட்ட திரிசங்குவிற்கு அபயம் கொடுத்தவர். ராஜரிஷி கௌசிகர் பிரம்மரிஷி வசிஷ்டர் சாபத்தை நிவர்த்தி செய்துவிட்டார் என்று தேவர்கள் அவரது யக்ஞத்தின் யாகக்கருவிகளை அழித்தனர். உடனே அவர் வேறு யாகக்கருவிகளைப் படைத்து திரிசங்குவை அப்போதே சொர்க்கத்துக்கு அனுப்பினார்.”

மேனகை சொல்லச் சொல்ல தேவேந்திரனுக்கே கிலி பிடித்துக்கொண்டது. கொஞ்சம் ஆடித்தான் போனான். மேனகை தொடர்ந்தாள்..

“அவர் காலால் பூமியை நடுங்கச் செய்வார். மகிமையினால் உலகங்களை எரித்துவிடுவார். நாற்திசைகளையும் சக்ராயுதம் போல வேகமாக சுழற்றிவிடுவார். தேவேந்திரரே! அக்னியை முகமாகவும் சூரிய சந்திரர்களை கண்களாகவும் யமனை நாக்காகவும் கொண்டு ஜ்வலிக்கும் அந்த ஜிதேந்திரியரை எங்களைப் போன்ற பெண்கள் எப்படி அணுக முடியும்?”

தேவேந்திரன் பெருமூச்சு விட்டான். உன்னால் முடியாதா என்பது போல ஏக்கப் பார்வை ஒன்றை மேனகை மீது வீசினான்.

“நீங்கள் கட்டளையிட்டதும் நானெப்படி இதைச் செய்யாமலிருப்பேன். இதற்கு ஒரு உபாயம் சொல்வேன். நீங்கள் அதற்கு உதவி செய்ய வேண்டும்”

“என்ன உதவி வேண்டும்?” ஏதோ வழி பிறந்த நம்பிக்கையில் திடீர் சந்தோஷமடைந்தான் இந்திரன்.

“நான் அவரெதிரே சென்று விளையாடுவேன். வாயு அங்கு புகுந்து எனது வஸ்திரத்தை விலக்க வேண்டும். அந்த காரியத்தில் மன்மதன் உதவியாக அங்கே என்னுடன் இருக்க வேண்டும். அவரை மயக்கும் அந்த நேரத்தில் காட்டிலிருக்கும் மரங்களிலிருந்து வாசனையான காற்று வீச வேண்டும்”

திட்டம் தயாரானது. மேனகை விஸ்வாமித்ரரின் ஆஸ்ரமம் சென்றாள். அது நதியின் நடுவில் உள்திட்டில் இருந்தது.

ஆஸ்ரம வாசலில் விஸ்வாமித்ரர் தவமியற்றிக்கொண்டிருந்தார். மேனகை சென்று அவரை வணங்கினாள். பின்னர் அவரெதிரே மேனியை வளைத்து விளையாட ஆரம்பித்தாள். சில மரங்களுக்குப் பின்னே மறைந்திருந்த வாயு உஸ்ஸ்ஸென்று கிளம்பி வந்து அவளது ஆடையை இழுத்து விலக்கினான்.

வாயுவின் ஆதிக்கத்தில் அந்த பிரதேசம் இருந்தது. மூடியிருந்தக் கண்களை விஸ்வாமித்ரர் திறந்த போது எதிரே ஆடை விலக்கப்பட்ட மேனகை தாபத்தால் நெளிந்துகொண்டிருந்தாள். ராஜரிஷிக்கு காமம் கட்டுக்கடங்காமல் கொப்பளித்தது. தவத்திலிருந்து எழுந்துவிட்டார். நேரே மேனகையிடம் சென்று அவளது தோளில் கைவைத்தார். அவள் எண்ணி வந்தது ஈடேறியது. கண்களால் சம்மதம் பேசிக்கொண்டார்கள். ஆஸ்ரமத்திற்குள் ஒதுங்கிவிட்டார்கள்.

பல நீண்ட நாட்களை ஒரு தினம் போல இஷ்டப்படி ரமித்திருந்தார்கள். எப்போதும் தவத்தில் இருப்பவர் காமக்குரோதங்களுக்கு ஆட்பட்டு ஆயிரம் வருஷகாலங்கள் கடந்து போவதை அறியாமல் இருந்தார். வெகுகாலமாக சம்பாதித்து வைத்திருந்த தபோபலத்தை அழித்துவிட்டார். பெண் மயக்கத்தில் அடிபட்டார். அவர்கள் சந்தோஷித்துக்கொண்டு இருந்த வேளையில் ஒரு நாள் அவர் மாலினி நதிக்கரையிலிருந்து அந்த நதியின் நடுத்திட்டிலிருக்கும் தனது ஆஸ்ரமத்திற்கு கால்களை ஜலத்தில் பதித்து சப்தித்து நடந்து போனார்.

”ஆஹா! இவரது தவ வலிமை முற்றிலும் வீணாகிவிட்டது. இல்லாவிட்டால் இவர் அந்த ஆஸ்ரமத்திற்கு கால்களை கீழே வைக்காமல் ஆகாச மார்க்கமாகத்தானே செல்வார்” என்று மேனகை ஊர்ஜிதம் செய்துகொண்டாள். அடுத்த வந்த ருதுஸ்நானம் கழிந்த பின்னே விஸ்வாமித்ரரிடம் சந்தானம் வேண்டினாள்.

இமயமலைச் சாரலில் இருக்கும் அந்த மாலினி நதிக்கரையில் விஸ்வாமித்திரருடன் கூடி சகுந்தலையைப் பெற்றெடுத்தாள் மேனகை. தான் வந்த காரியம் முடிந்துவிட்டதால் எல்லா ஆபரணங்களும் அணிந்துக் கொண்டு தெய்வப்பெண் போல அழகாக சயனத்தில் படுத்திருந்தவளிடம் “உன்னை நான் தேவலோகத்துக்குக் கொண்டு செல்ல முடியாது. நீ உக்கிரமான ரிஷியின் வீரியமாக இருக்கிறாய்.” என்று மாலினி நதிக்கரையில் சகுந்தலையை விட்டுவிட்டு தேவலோகம் பறந்து சென்றாள்.

சிங்கம் புலி நிறைந்திருக்கும் காடு. அந்தக் குழந்தை புல்லே மெத்தையாகப் படுத்துக்கொண்டு கள்ளம்கபடமில்லாமல் சிரிக்கிறது. மாமிசபட்சிணிகள் எதுவும் குழந்தையைக் கடித்துத் தின்றுவிடப்போகிறதே என்று பக்ஷிகள் கூட்டம் சூழ்ந்துகொண்டு அவளைக் காத்தது.

இவ்வளவு நேரம் சகுந்தலையின் கதையைக் கேட்டு துஷ்யந்தன் அசையாமல் சிலைபோல நின்றிருந்தான். சகுந்தலை தொடர்ந்தாள்...

“அந்த ஜனமில்லாத காட்டில் என் பிதா என்னை புல்தரையில் கண்டாராம். அப்போது பக்ஷிகளெல்லாம் கூடி விஸ்வாமித்ரரின் பெண்ணைக் காப்பாற்றுங்கள் என்று அவரிடம் பேசினதாம்.”

“அவருக்கு பறவைகளின் பாஷை தெரியுமா?” வெகுநேரம் கழித்து வாய் திறந்து கேட்டான் துஷ்யந்தன்.

“ஆம். அவருக்கு பக்ஷிகளின் பாஷை தெரியும். ஏன் எல்லா பிராணிகளின் பாஷைகளும் அவர் அறிவார்” என்றாள் தலை நிமிர்த்திப் பெருமையாக.

”அவர் எப்படி தந்தையாவார்? அடைக்கலம் கொடுத்தவர் தானே?” என்று குடைந்தான் துஷ்யந்தன்.

“அந்த ரிஷியிடம் என் பிதா சொன்னவைகளை திரும்பவும் நான் உங்களுக்குச் சொல்கிறேன். ’சரீரம் உண்டு பண்ணுகிறவன். உயிரைக் கொடுப்பவன். அன்னமிடுபவன். இவர்கள் மூவரும் முறையாக தந்தையென்று தர்மசாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. ஆகையால் இவளை நான் தந்தை ஸ்தானத்தில் இருந்து காக்கிறேன்.’ என்றாராம். மேலும் பறவைகளினால் (சகுந்த) கிரஹகிக்கப்பட்டவளாகையால் (லா) சகுந்தலை எனப் பெயரிட்டார்.

சொல்லி முடித்தவுடன் அவளது அழகிய உதடுகள் துடித்தது. கோவைக்கனியாய் சிவந்திருந்த அதரங்களைப் பார்த்து மோகத்தில் மூழ்கினான் துஷ்யந்தன்.

“ஆஹா! என் எண்ணம் சரிதான். நீ கண்ணுவரின் புத்திரியல்ல. பிராம்மண ஸ்த்ரீ அல்ல. க்ஷத்திரியப் பெண் தான். என்னுடைய கஜானாவில் இருக்கும் அனைத்து பொன்காசுகள், இரத்தினங்கள், முத்துகள் எல்லாவற்றையும் உன் காலடியில் கொட்டுகிறேன். என்னுடைய ராஜ்ஜியமெல்லாம் உனதாகட்டும். நாமிருவரும் காந்தர்வ விவாஹம் செய்துகொள்ளலாம். வா. விவாஹங்களுள் காந்தர்வ விவாஹம் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. விரைந்து வா!!”

கையிரண்டையும் விரித்துக்கொண்டு அவளை ஆகர்ஷணம் செய்துக்கொள்ளத் துடித்து முன்னேறினான் துஷ்யந்தன்.

சட்டென்று விலகிய சகுந்தலை “எனது பிதா பழம் கொண்டு வரச் சென்றிருக்கிறார். சற்றுப் பொறுத்தால் அவரே உமக்கு என்னைத் தருவார். அவர்தான் எனக்கு அதிகாரி. மன்னனே! பெண் எப்போதும் ஆண்களில் காவலில் இருக்கிறாள். இளமையில் பிதா காப்பாற்றுகிறார். பருவகாலத்தில் கணவனின் காவலில் இருக்கிறாள். முதிர்ந்து தள்ளாடும் காலத்தில் புத்திரன் காக்கிறான். எக்காலத்திலும் ஸ்த்ரீ சுதந்திரமாக இருக்க முடியாது.” என்று ஸ்த்ரீ தர்மம் பேசினாள் சகுந்தலை.

துஷ்யந்தன் சமாதானம் அடையவில்லை.

“கண்ணுவர் மிகவும் சாந்தஸ்வரூபி. ஆகையால் பாதகமில்லை வா” என்று வற்புறுத்தினான்.

“பிராமணர்களுக்கு கோபமே ஆயுதம். அக்னி ஜ்வாலைகளினால் தகிக்கிறது. சூரியன் கிரணங்களால் தகிக்கிறான். ராஜா தண்டனையினால் தகிக்கிறான். பிராமணன் கோபத்தினால் தகிக்கிறான். கோபம் மூட்டப்பட்ட பிராமணன் கோபத்தினால் இந்திரன் அஸுரர்களைக் கொன்றது போல கொல்கிறான்” திடமாகப் பேசினாள் சகுந்தலை.

“பிரியமானவே! அந்தக் கண்ணுவ மஹரியை நான் அறிவேன். அவர் கோபிஷ்டர் அல்ல. நீயே உன்னை எனக்கு தானம் செய்வதற்கு தகுதியாக இருக்கிறாய். மொத்தம் எட்டு விவாஹங்கள்தான் இருக்கிறதென்று தர்ம சாஸ்திரங்கள் சொல்கின்றன. அவை தெரியுமா உனக்கு?”

அவளுக்கு வார்த்தைகளால் தூண்டில் போட்டான் துஷ்யந்தன். அவள் மசிவது போல தெரிந்தவுடன் விவாஹ தர்மங்களைப் பற்றி வார்த்தை ஜாலத்தில் இறங்கினான்.

“பிராம்மம், தைவம், ஆர்ஷம், பிராஜாபத்யம், ஆஸுரம் , காந்தர்வம், ராக்ஷஸம், பைசாசம் ஆகிய எட்டு விவாகங்கள்தான் தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்வாயம்புவமனு தர்மமான விவாகங்களைப் பற்றிச் சொல்ல்யிருக்கிறார். அவை எவை என்பதை அறி. முதல் நான்கு விவாகங்கள் பிராமணனுக்கு சிலாக்கியம். க்ஷத்ரியனுக்கு முதலில் இருந்து ஆறு விவாகங்கள் தர்மமுள்ளவை. ராஜாக்களுக்கு ராக்ஷஸ விவாகமும் சொல்லப்பட்டிருக்கிறது. காந்தர்வமும் ராக்ஷஸமும் க்ஷத்ரியனுக்கு தர்மமானவை. இவற்றைப் பற்றி நீ சந்தேகிக்காதே! நீ எனக்கு பாரியையாக காந்தர்வ விவாஹம் புரிந்துகொள்ளலாம் வா” என்று கொக்கிப் போட்டு இழுத்தான் துஷ்யந்தன்.

[கன்னிகாதானம் வாங்கிக்கொள்வது பிராம்ம விவாஹம். யாகம் செய்து அதன் முடிவில் ரித்விக்குகளுக்கு தக்ஷிணையாக கன்னிகாதனம் செய்துகொடுப்பது தைவம். இருவரும் சேர்ந்து தர்மம் செய்யட்டும் என்று மனஸினால் தானம் செய்து விட்டுவிடுவது பிராஜாபத்யம். வரனிடம் இரண்டு கோக்களை வாங்கிக்கொண்டு கன்னிகாதானம் செய்துவிடுவது ஆஸுரம். கன்னிகையும் வரனும் மனமொப்பிக் கல்யாணம் செய்து கொள்வது காந்தர்வம். தூக்கத்திலும் குடிமயக்கத்திலும் கன்னிகையை தூக்கிக்கொண்டு போவது பைசாச விவாஹம். தற்போதைய சினிமாக்களில் வில்லன்கள் செய்வது. சண்டைப் போட்டு பலாத்காரமாகக் கன்னிகையைக் கொண்டு போவது ராக்ஷஸ விவாஹம்]

“பௌரவசிரேஷ்டரே! என்னை நானே தானமாகக் கொடுத்துக்கொள்ளலாம் என்று தர்மசாஸ்திரத்தில் இருந்தால் என் ஒரு நிபந்தனையை நீர் ஏற்க வேண்டும்” என்று கண்டிப்புடன் சொன்னாள் சகுந்தலை.

தனது தலையைக் கேட்டாலே அறுத்துத் தந்துவிடும் ஸ்திதியில் இருந்த துஷ்யந்தன் ”எதுவானாலும் தருகிறேன்” என்று அவள் காலடியில் மண்டியிட்டான்.

#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#விஸ்வாமித்ரர்
#மேனகை
#துஷ்யந்தன்
#சகுந்தலை
#ஸம்பவபர்வம்
#பகுதி_36

No comments:

Post a Comment