Saturday, December 16, 2017

மீனுக்குப் பிறந்தவள்

[வைசம்பாயனரை இனிமேல் இழுக்கவேண்டாம். இங்கிருந்து இந்தக் காவியம் அப்படியே வேகம் பிடிக்கிறது.இந்தக் கதையை யார் யாருக்குச் சொன்னார்கள் என்ற கவலைகள் இல்லாமல் அப்படியே வாருங்கள்]

உபரிசரவஸ் பூரு வம்சத்து மஹாராஜன். வஸு என்று அன்போடு அழைக்கப்படுபவன். வேட்டையில் தீராத நாட்டமுடையவன். காட்டுக்குள் புகுந்தால் புலி சிங்கமெல்லாம் ஓடி ஒளிந்துகொள்ளும். அசாத்திய தீரமும் குறி தப்பாமல் அம்பெய்தும் திறனும் படைத்த வீரன். தேவலோகத்து இந்திரனின் நண்பன். இந்திரன் சொன்னதினால் சேதி தேசத்தை வென்று திறம்பட ஆண்டுகொண்டிருந்தான். 

திடீரென்று ஒரு சமயம் ஆயுதங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு அரண்மனையை விட்டு வெளியேறினான். நகரத்துக்கு வெளியே பர்ணசாலை அமைத்துக்கொண்டான். பட்டுப் பீதாம்பரங்களை களைந்துவிட்டு மரவுரி உடுத்தி கடும் தவம் மேற்கொண்டான். இரவு பகல் பருவஙக்ள் பல கடந்தது. ராஜரிஷியாக இன்னும் தவம் கலையாமல் அமர்ந்திருக்கிறான்.
 
இதைக்கண்ட தேவர்கள் இந்திரனிடம் போய்ச் சொல்லி அவன் அனைவரோடும் பூலோகம் வந்திறங்கினான். உபரிசரவஸின் உக்கிர தவம் வென்றால் அவன் தான் இந்திரபதவியை அடைவான். தவம் புரிந்துகொண்டிருந்த வஸுவிடம் அனுகூலமாக பேசினான் இந்திரன்.

“நான் தேவர்களை ரக்ஷிக்கிறேன். நீ மனிதர்களை ரக்ஷி. ஸ்வர்க்கத்திலிருக்கும் எனக்கு பூமியிலிருக்கும் நீ ஸ்நேகிதனானாய். இந்த தேசத்தில் அனைத்து வளங்களும் உள்ளது. எல்லாம் கிடைக்கிறது. எல்லா வர்ணத்தவரும் சண்டையிடாமல் வேலை செய்கிறார்கள். விளையாட்டுக்குக்கூட எவரும் பொய் சொல்வதில்லை.”

இந்திரன் பேசியதைக் கேட்டதும் உபரிசரவஸ் சிந்தனையில் மூழ்கினான். தவம் கெட்டது. தேவர்களும் இந்திரனும் அவன் முன்னால் முகாமிட்டிருந்தனர். நீண்ட யோசனையில் இருந்தவனை தேவேந்திரன் மீண்டும் கலைத்தான்.

“வஸு! தேவர்கள் மட்டும் உபயோகிப்பதும் தேவலோகத்திலும் ஆகாயத்திலும் மட்டும் உலவும் ஸ்படிகம் போன்ற விமானம் இருக்கிறது. அதை நான் உனக்குத் தருகிறேன். தேவர்களைத் தவிர்த்து அதில் பறப்பது நீயாகத்தான் இருப்பாய். மனித உருக்கொண்ட நீ தேவர்களைப் போல ஆகாயத்தில் சஞ்சரிப்பாய்.”

உபரிசரவஸ் சிரித்தான். தேவேந்திரன் தன்னை மயக்கப்பார்க்கிறான் என்று புரிந்தது. தோளில் தொங்கிய உத்தரீயத்தை ஒரு முறை தூக்கிப்போட்டுக்கொண்டு இந்திரன் மீண்டும் தொடர்ந்தான்.

“வாடாத தாமரைப் புஷ்பங்கள் கோர்த்த வைஜயந்தி மாலையை உனக்குத் தருகிறேன். யுத்தங்களில் தோல்வியே நேராது. மேலும் யுத்தபூமியில் ஆயுதங்களால் காயம் ஏற்படாமல் காக்கும்”

உபரிசரவஸ் தவத்தை விட்டுக்கொடுப்பதற்கு இணங்கினான். இந்திரன் ஒருமுறை உபரிசரவஸை ஆரத்தழுவினான். அவனிடம் “நான் வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டு அரண்மனைக்கு கிளம்பியவனை “வஸு” என்று பிரியமுடன் அழைத்தான் இந்திரன். வஸுவின் தாடி காற்றில் கலைந்து அலைய திரும்பினான்.

இந்திரன் வஸுவின் உயரத்திற்கு ஒரு மூங்கில்கோலை கையில் கொடுத்தான். 

“வஸு! என் பிரியத்தினால் இதைக் கொடுக்கிறேன். எப்போதும் பிரியமானவர்களுக்கு மட்டுமே இதைக் கொடுப்பேன்” என்றான். இந்திரனும் உபரிசரவஸும் மீண்டும் கட்டிக்கொண்டார்கள். விடைபெற்றுப் பிரிந்தார்கள்.

அந்த ஸ்படிகமயமான விமானத்தில் ஏறி உபரிசரவஸ் இந்திரக் கோலும் கையுமாக சேதி தேசம் வந்தடைந்தான். வீதிகளிலும் வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்திருந்த ஜனங்களும் வானவூர்தியில் மன்னன் மிதந்து வருவதைப் பார்த்து அதிசயத்து சந்தோஷமடைந்தனர். அந்த விமானத்திலிருந்த இறங்கிய ராஜாவின் கழுத்தில் வைஜயந்தி மாலை ஆடியது. 

இந்திரன் கொடுத்த கோலுக்கு விழா எடுத்தான் உபரிசரவஸ். அந்தக் கோலுக்கு புஷ்பமாலைகள் சூட்டி பட்டு வஸ்திரங்கள் சுற்றி ஆட்டமும் பாட்டுமாக பெரிய உற்சவம் கொண்டாடி அதை ஆறு கஜம் உயரமிருக்கும் பள்ளத்தில் ஸ்தாபித்து இந்திரனை அதில் ஆவாஹனம் செய்து பூஜித்தான். ஆவாஹனம் செய்யும் போது மிருதங்கங்களும் பேரிகையும் முழங்கின. மக்கள் மகிழ்ந்திருந்தார்கள்.  

காலை மாலை மதியம் எந்த நேரமும் அண்ணாந்து பார்த்தால் உபரிசரவஸ் விமானத்தில் பறந்துகொண்டிருப்பான். தேவர்களும் கந்தவர்களும் ஆகாசத்தில் பார்த்து “வாழ்ந்தால் உபரிசரவஸ் போல கியாதியுடன் வாழவேண்டும்” என்று பொறாமையுடன் ஆச்சரியப்படுவார்கள். உபரிசரன் என்றால் மேலே சஞ்சரிப்பவன் என்ற பொருள். அந்த அர்த்தத்தில்தான் உபரிசரவஸ் என்று அவன் அழைக்கப்பட்டான். 

அவனது சேதி தேசத்தினுள்ளே சுக்திமதி என்றொரு நதி பாய்ந்து வளப்படுத்திக்கொண்டிருந்தது. அந்த நதியின் கழிமுகப் பகுதியில் கோலாஹலன் என்ற பர்வதம் மூன்று புறமும் சூழ்ந்து அணைத்துக்கொண்டது போல நின்றது. அந்த மலை திடீரென்று ஒருநாள் புருஷரூபமாகக் காமங் கொண்டு அந்த நதியை தடுத்துவிட்டது. ஒருநாள் விமானத்தில் பறந்துகொண்டிருந்த உபரிசரஸ் அதைப் பார்த்துவிட்டு கீழே இறங்கினான். பெருங் கோபத்துடன் அந்த கோலாஹல மலையை உதைத்தான். உடன் பெரிய துவாரம் ஏற்ப்பட்டு சுக்திமதி நதி மீண்டும் சுதந்திரமாகப் பாயத் தொடங்கியது. 

புருஷரூபமாக அந்த கோலாஹலப் பர்வதம் சுக்திமதி நதியை அணைத்துக்கொண்ட காரணத்தினால் அதற்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. தடையிலிருந்து விடுபட்ட சுக்திமதி நதி வஸுவிடம் சென்று “இந்தப் பெண் உனக்கு அரசியாகவும் ஆண் உனக்கு சேனாதிபதியாகவும் இருக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டாள்.

அவனும் மறுக்காமல் அந்த ஆடவனை அவனது சேனாதிபதியாக்கிக்கொண்டான். கிரிகை என்ற அந்தப் பெண்ணை தனக்கு பத்தினியாக்கிக்கொண்டான்.

ஒருநாள் ருதுஸ்நானம் கழிந்து அந்தப்புரத்தில் அமர்ந்திருந்த கிரிகையிடம் தனக்கு புத்திரசந்தானம் வேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்தான் வஸு. அவளும் அவனுடைய நெருக்கத்தில் விரகதாபம் அடைந்தாள். முகமோடு முகம் உரசும் அந்த நேரத்தில் வஸுவின் பிதிர்க்கள் எதிரே பூத்துக்குலுங்கும் செடிகளுக்கு அருகே தோன்றினார்கள். அன்புடன் வஸுவைப் பார்த்து  “நீ வேட்டைக்குப் போ” என்று சொன்னார்கள்.

காமம் மேலிட்ட அந்த உபரிசரவஸ் கிரிகையை விட்டுப் பிரிய முடியாமல் அவளை தாபத்துடன் பார்த்து ஏங்கிக்கொண்டே குதிரையிலேறி வேட்டைக்குச் சென்றான். சைத்ரரதம் என்ற குபேரனுடைய தோட்டம் போல மகிழ மரம், கொன்றை மரம், பாரிதி மரம், தென்னை மரம், சந்தன மரங்கள், மருத மரங்கள் புன்னை மரங்கள் என்று அனைத்துவிதமான மரங்களடர்ந்த வனத்தில் ஒரு மிருகத்தையும் விடாமல் தீவிரமாக வேட்டையாடினான். 

கிளைகளின் நுனிகள் முழுக்க புஷ்பங்கள் பூத்துக்குலுங்கி தளிர் இலைகள் விரித்து கவர்ச்சியாக நிற்கும் ஒரு அசோகமரத்தைக் கண்டான். வேட்டையாடிய களைப்புத் தீர அதன் அடியில் சிறிது நேரம் ஓய்வெடுக்க ஒதுங்கினான். மரத்தின் மீது முதுகைச் சாய்த்து அமர்ந்து மேலே அந்த பூத்துக்குலுங்கும் கிளைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையிலே அவனுக்கு கிரிகையின் ஞாபகம் வந்தது. அவளது யௌவன ரூபமும் தளிருடலும் அவனுக்குள் மோகத்தைக் கிளற.... தானாக அவனது வீரியம் வெளிப்பட்டது. 

“ஆஹா! என்னுடைய இந்த வீரியம் வீணாகக்கூடாது... அவளுக்கும் இதுதான் காலம். இதை எப்படியாவது அவளிடம் சேர்ப்பித்துவிட வேண்டும்” என்று அசோக இலையில் ஏந்தினான். தனது மோதிரத்தை அதில் அழுத்தி முத்திரையைப் பதித்தான். கர்ப்பதான மந்திரத்தைச் சொல்லி  சிவந்து விழுந்த அசோக மலர்களாலும் தளிர்களாலும் அதைக் கட்டினான். எப்படி தனது பாரியாளான கிரிகையிடம் சேர்ப்பிப்பது என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது வேகமாகப் பறந்து செல்லும் பருந்து ஒன்றை மரக்கிளையின் மேல் அமர்ந்திருக்கக் கண்டான். 

“பிரியமானவனே! இதைக் கொண்டு போய் என் பாரியாளிடம் சேர்ப்பிப்பாயாக!” என்று வேண்டிக்கொண்டான்.

பருந்து வேகமாகப் பறந்து சென்றது. அப்போது அதன் வாயில் இருந்ததைப் பார்த்த இன்னொரு பருந்து அதை மாமிசம் என்று நினைத்து அதனுடன் சண்டையிட்டது. இரு பருந்துகளும் சண்டையிட்டதில் அந்த வீரியமானது கீழே ஓடும் யமுனா நதியில் தொப்பென்று விழுந்தது. 

பிரம்ம சாபத்தால் மீன் ஜென்மமெடுத்து யமுனையில் நீந்திக்கொண்டிருந்த அத்திரிகை என்ற அப்ஸரஸ் உடனே ஓடி வந்து அந்த வீரியத்தை கவ்வி உண்டாள். பத்து மாதங்கள் கடந்தது. 

செம்படவர்களின் வலையில் அத்திரிகை அகப்பட்டாள். தூக்க முடியாத கனத்தில் மீன் பிடிபட்டதில் மகிழ்ந்து செம்படவர்கள் நாலைந்து பேராகக் கரைக்கு தூக்கிப்போனார்கள். பெருங்கத்தி கொண்டு அந்த மீனை வெட்டும் போது அதில் இரண்டு மனுஷ்யர்கள் இருக்கக்கண்டார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு ராஜாவிடம் ஓடினார்கள்.

உபரிசரவஸின் சபை கூடியிருந்தது. செம்படவர்கள் அந்த ஆணையும் பெண்ணையும் அழைத்துக்கொண்டு போய் ராஜாவின் முன்னால் நிறுத்தி “அரசே! இவர்கள் இருவரும் இன்று ஒரு பெரிய மீனின் வயிற்றில் உண்டாகியிருந்தார்கள்.” என்று கைகட்டிக் கூறினார்கள்.

அந்த ஆண் சத்யமும் தர்மமும் தவறாத மத்ஸ்யன் என்ற ராஜாவானான். 

அங்கே யமுனைக் கரையில் அறுபட்ட அந்த மீன் அப்ஸ்ரஸாக உருமாறி நின்றது. திரியக்கு ஜாதியில் இரண்டு மனுஷ்யர்களைப் பெற்ற பின் சாப விமோசனம் பெறுவாய்” என்று பிரம்மா ஏற்கனவே சொன்னதற்கு இணங்க அவள் மீன் வடிவத்தை விட்டு தேவரூபம் அடைந்து தேவலோகம் சென்றாள்.

இங்கே உபரிசரவஸின் சபையில் நின்றிருந்த மீனின் பெண் மிகுந்த நாற்றம் உள்ளவளாக இருந்தாள். அவளை மூக்கைப் பிடித்துகொண்டே மன்னன் ஒரு செம்படவனிடம் “இவள் உணக்குப் பெண்ணாக இருக்கட்டும்” என்று கொடுத்து வளர்க்கச் சொன்னான். அழகும் மந்தஹாசப் புன்னகையும் சந்திரனை ஒத்த முகமும் உள்ள சத்தியவதி என்ற அவள் சிலகாலம் வரை மத்ஸயகந்தி என்ற பெயரோடு இருந்தாள். 

எப்போதும் யமுனா நதிக்கரையில் தனது வளர்ப்புத் தந்தை செம்படவனுக்காக படகு செலுத்தும் ஓடக்காரியாக உட்கார்ந்திருப்பாள். அன்றும் அது போல காலையிலிருந்து காத்திருந்தவளுக்கு தூரத்தில் ஒரு முனிவர் ஒருவர் வருவது தெரிந்தது. சவாரி கிடைத்தது என்று நினைத்து சந்தோஷப்பட்டாள்.

தீர்த்த யாத்திரைக்காக பராசரர் அங்கே வந்தார். யமுனா நதிக்கரை ஓரத்தில் ஒயிலோடு அமர்ந்திருக்கும் மத்ஸயகந்தியின் ஸ்வரூபத்தில் மயங்கி.....

[பெரும்பாலும் பூருவம்சக் கதையை எல்லோரும் யயாதியில் ஆரம்பிப்பார்கள். நான் சத்யவதியில் தொடங்கினேன். அவளே இக்கதையின் ஆணிவேர். கரு சுமக்கும் பெண்ணே எந்தக் கதைக்கும் மூலக்கரு.]

#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#உபரிசரவஸ்
#மத்ஸயகந்தி
#சத்யவதி
#அம்சாவதரணபர்வம்
#பகுதி_26

No comments:

Post a Comment