Saturday, December 16, 2017

அமிர்த ஸூபர்ணர்

இந்திரன் அலட்சியம் செய்ததால் கோபமுற்ற வாலகில்யர்கள் உடனே “இந்த இந்திரனைப் போல நூறு மடங்கு பலம் வாய்ந்த ஒரு இந்திரன் தேவர்களுக்கு காவலாக இருக்கவேண்டும். அவன் விரும்பும் சக்தி அவனுக்குக் கிடைக்கும்.. எங்கு வேண்டுமானாலும் அவன் நினைத்தபடி சஞ்சரிப்பான்...இந்த இந்திரன் அவனைக் கண்டு பயந்து நடுங்க வேண்டும்...” என்று புதிய இந்திரனைப் படைக்க யாகம் வளர்க்கத்  தயாராகினர். 

மிகவும் குட்டையான சரீரம் படைத்தவர்களாக இருந்தாலும் பர்வதமளவிற்கு தபோ வலிமையில் சிறந்தவர்களான வாலகில்யர்களின் இந்த பிரதிக்ஞை இந்திரனை சஞ்சலமடைய வைத்தது. பயந்தான். உடனே நேரே கஸ்பரிடம் சென்று தஞ்சமடைந்தான். 

”இந்திரா... ஏன் அச்சப்படுகிறாய்? நீ என்ன குற்றம் செய்தாய்?” என்று கஸ்யபர் வினவினார்.

“முனி சிரேஷ்டரே.. மலையளவு சமித்துக்களை உமக்காக நான் சுமந்து வந்துகொண்டிருந்தேன். அப்போது மாட்டின் குளம்படியின் தண்ணீர் தேங்கியிருந்தது. அதில் கட்டைவிரல் நடுரேகையளவு குறுகிய தேகமுடைய சிலர் தவித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கையில் பலாசக்கழிகளை சுமந்திருந்தார்கள். எனக்கு சிரிப்பாக வந்தது. அவர்களை ஏளனம் செய்து அலட்சியம் செய்துவிட்டேன். உடனே ஏதோ யாகம் செய்ய ஆரம்பித்தார்கள். நான் உங்களிடம் ஓடி வந்தேன்” என்றான் மூச்சு வாங்க...

கஸ்யபர் வாலகில்யர்களிடம் சென்றார்.

“ரிஷிகளே! இப்போது எதன் பொருட்டு இந்த ஹோமத்தை ஆரம்பித்தீர்கள்? இதனால் என்ன பலன்?” என்று கேட்டார்.

“இவனிடமிருக்கும் ஐஸ்வர்ய கர்வத்தினால் எங்களை ஏளனம் செய்தான். ஆகையால் இன்னொரு இந்திரனைப் படைக்கும் பொருட்டு நாங்கள் இந்தக் கிரியையை ஆரம்பித்திருக்கிறோம்” என்றார்கள்.

“பிரம்மாவின் கட்டளையின்படி இவன் மூலோகத்திற்கும் இந்திரனாக ஆள்கிறான். உங்களது செயலினால் பிரம்மாவை அவமதிப்பது போலாகும். ஆகையால் இந்திரனைப் போலவே... ஏன்... அவனைக் காட்டிலும் பலம் வாயந்தவனாகவும்.. அசாத்திய தைர்யம் உள்ளவனாகவும்.. ஒருவனை பக்ஷிகளுக்கு இந்திரனாக உருவாக்குங்கள். சாதுக்களே இந்த விஷயத்தில் உங்களின் அனுக்ரஹம் தேவை..” என்று கஸ்யபர் கேட்டுக்கொண்டார்.

“நீரே ஸ்ருஷ்டி கர்த்தா.. உமக்கு ஒரு சந்தானம் வேண்டுமென்றும் புதிய இந்திரனுக்காகவும்தான் நாங்கள் இந்த கிரியை தொடங்கினோம். இதை பூர்த்தி செய்து அந்த பலனை உங்களுக்குக் கொடுத்துவிடுகிறோம்.. உமக்குப் பிரியப்பட்டதை செய்துகொள்ளுங்கள்” என்று ஹோமத்தை தொடர்ந்தார்கள்.

பலன் வழங்கப்பட்டது கஸ்யபரின் பத்தினியும் தக்ஷனின் புத்ரியுமான வினதை அங்கே வந்தாள். கஸ்யபர் அங்கு நடந்தவைகளைச் சொல்லி “வினதை! உனக்கு இரண்டு புத்திரர்கள் பிறப்பார்கள். ஒருவன் பக்ஷிகளுக்கு இந்திரனாக மிகவும் பலசாலியாக இருப்பான். நீ ஜாக்கிரதையாக உன் கர்ப்பத்தைப் பார்த்துக்கொள்..” என்று கூறினார்.

இந்திரன் மனதொடிந்து பக்கத்தில் நின்றிருந்தான்.

“இந்திரா! கவலை வேண்டாம். வினதைக்குப் பிறப்பவர்கள் உனக்கு சஹோதரர்கள் போல இருப்பார்கள். இருவரையும் ஸ்நேகம் செய்துகொள். உன் துயரங்கள் விலகும். நீதான் இந்திரனாக இருப்பாய். இனிமேல் நீ யாரையும் அவமதிக்காதே! சொற்களால் ஏளனம் செய்யாதே!!”

[ஏற்கனவே நாம் முந்தைய அத்யாயங்களில் பார்த்தது போல வினதை அவசரமாக ஒரு முட்டையை உடைத்து அங்கங்குறைவாக அருணனைப் பெற்றாள். பின்னர் ஐநூறு வருடங்கள் காத்திருந்து கருடனைப் பெற்றாள். அருணன் ஸுர்யனுக்கு சாரதியானான். இப்போது கருடன் பக்ஷிகளுக்கு இந்திரனான் என்ற கதையைப் படிக்கிறோம். 

தேவர்களுடன் யுத்தம் புரிவதற்காக கருடன் ஸ்வர்க்கத்தில் வட்டமடித்துக்கொண்டிருந்தபோது நாம் இந்த கிளைக்கதைக்குள் நுழைந்தோம்.. மீண்டும் கருடர் தேவர்களுடன் யுத்தம் செய்தது தொடர்கிறது.]

**

கருடரைப் பார்த்து தேவர்கள் மிரண்டனர். ஆயுதங்களை அவர்களுக்குள்ளேயே போட்டுக்கொண்டார்கள். மிகச்சிறந்த வீரனான பௌமனன் என்ற தேவன் கருடருடன் வீரதீரமாகச் சண்டையிட்டான். கடைசியில் தன்னுடைய மூக்கினால் அவனைக் குத்திக் கிழித்தார். சிறகுகளால் மண்ணை வாரி ஸ்வர்க்கம் முழுவதும் தெறித்தார். அதில் ஸ்வர்க்கலோகமே இருளில் மூழ்கியது. இந்திரன் திகைத்தான். வாயுவை அழைத்து “மாருதனே! இந்த மண்மாரியை சீக்கிரம் விலக்கு.. இது உன் வேலை..” என்று கட்டளையிட்டான்.

இருள் விலகியது. மிகப்பிரம்மாண்டமாக கருடர் வட்டமிடுவது தெரிந்தது. இம்முறை தேவர்கள் கருடரை அடித்தார்கள். அடிபட்ட கருடர் தேவர்களின் காது செவிடாகும்படி கர்ஜ்ஜித்தார். சுழன்று சுழன்று தேவர்களின் பக்கம் சென்று தனது மாரினாலும் சிறகுகளினாலும் தாக்கினார். வைனதேயரின் இந்தத் தாக்குதலால் தேவர்கள் சிதறி ஓடினார்கள். அதில் ஸாத்தியர்களும் கந்தர்வர்களும் கிழக்கிலும், வஸுக்களும் ருத்ரர்களும் தெற்கிலும், ஆதித்யர்கள் மேற்கிலும், அஸ்வினீதேவர்கள் வடக்கிலும் கருடரை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி தெறித்து ஓடினார்கள். 

பிரளயகால சிவன் போல கருடர் சத்ருக்களை சம்ஹாரம் செய்வதற்காக தனது நகங்களினாலும் மூக்கின் நுனிகளாலும் தேவர்களைப் பிளந்தார். அங்கே ரத்தம் ஆறாக ஓடியது. எல்லோரையும் தாண்டி பறந்தார். அங்கே நாற்புறமும் அக்னி பெரும் ஜுவாலைகளுடன் எரிந்துகொண்டிருந்தான். அவனைத் தாண்டி அவன் தீக்கைகளுக்கு நடுவில் அமிர்தம் இருந்தது. 

கருடன் அங்கிருந்து விலகினார். தேவர்கள் கருடர் பயந்து ஓடிவிட்டதாக எண்ணினார்கள். சிறிது நேரத்தில் கருடரின் இறகுகள் படபடக்கும் பெரும் ஓசை கேட்டது. அங்கே கருடர் முன்பிருந்ததை விடவும் பிரம்மாண்ட உருவம் எடுத்து எண்ணாயிரம் வாய்களோடு பறந்து வந்துகொண்டிருந்தார். அந்த வாய்களிலெல்லாம் அநேக நதிகளைக் குடித்து தண்ணீரைத் தேக்கியிருந்தார். அக்னியில் அதைப் பீய்ச்சியடித்தார். அக்னி அணைந்தது. 

அமிர்த பாத்திரத்திற்கு நாற்புறமும் ஒரு பெரிய இரும்புச் சக்கரம் சுழன்றுகொண்டிருந்தது. அந்தச் சக்கரத்திற்கு முனைகள் கூர்மையான கத்தி போன்றிருந்தது. அதனருகில் போனால் அது இரண்டாகப் பிளந்துவிடும் அபாயம் நிறைந்ததாக இருந்தது. கருடர் கண நேரத்தில் தனது உருவை மிகவும் சிறியதாக்கிக்கொண்டார். அந்த இரும்புச் சக்கரத்தோடே சுற்றிவந்தார். சரியான இடைவெளி வந்த சமயத்தில் அந்த ஆரக்கால்களின் சந்தில் உள்ளே புகுந்துவிட்டார்.

அதைத் தாண்டிய பிறகு அந்தச் சக்கரங்களின் கீழே மிக பயங்கரமான கண்களிலேயே விஷம் தங்கியிருக்கும் பலமான இரண்டு சர்ப்பங்களைக் கண்டார். அவை பார்த்தாலே நீறாக்கிவிடும் சக்திவாய்ந்தவை. அவைகளின் சிவந்த கண்கள் இமைகொட்டாமலிருந்தன. சிறிது நேரம் யோசித்தார். பின்னர் அங்கிருந்த மணலை அதன் கண்களில் தூவி அவைகளை கௌவிப்பிடித்து கீழே ஓங்கி அடித்து உடல் சிதறும்படி செய்தார். அமிர்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரும்பு எந்திரத்தை நொறுக்கிப்பொடிப் பொடியாகச் செய்துவிட்டு அங்கிருந்து பறந்தார்.

வைனதேயர் ஆகாயத்தில் பறக்கும் போது விஷ்ணுவைச் சந்தித்தார். அமிர்தத்தைப் பருகாமல் அதை பத்திரமாக தனது தாய் வினதையின் அடிமைத்தனம் நீக்கும் பொருட்டு எடுத்துப் போகும் கருடரைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டார் விஷ்ணு. 

“உமக்கு நான் இரண்டு வரங்கள் தருகிறேன். கேள்” 

“நான் உமக்கு மேலே இருக்க வேண்டும்” என்ற முதல் வரத்தில் விஷ்ணு ஆச்சரியப்பட்டார்.

“மேலும் எனக்கு அமிர்தம் பருகாமலேயே நரை மூப்பு மரணம் ஏற்படாமல் இருக்க வேண்டும்” என்று இரண்டாவது வரமும் கேட்டார் கருடன்.

“அப்படியே ஆகட்டும்” என்று அருளினார் விஷ்ணு.

”உமக்கும் நான் வரங்கள் தருகிறேன். கேளும்” என்று கேட்டார் கருடர்.

அண்டசராசரங்களையும் ஆளும் விஷ்ணு சிரித்துக்கொண்டே “நீர் எனக்கு வாஹனமாக வேண்டும்” என்றார். கருடர் அடிபணிந்து நின்றார்.

“எனக்கு மேலே நீர் இருக்கவேண்டும் என்று விரும்பியதால் எனது கொடியில் நீ நிரந்தரமாக இருப்பாய்...” என்று வரமருளினார் விஷ்ணு. 
  
நமஸ்காரம் செய்துவிட்டு அமிர்த பாத்திரத்தோடு வாயுவைவிட வேகமாக பறந்தார். கடுங்கோபத்துடன் இந்திரன் எதிரே வந்தான். கருடரை அடிக்கும் பொருட்டு தனது வஜ்ராயுதத்தை அவர் மீது ஏவினான். பக்ஷிஸ்ரேஷ்டர் அந்த வஜ்ராயுதத்தினால் அடிவாங்கிச் சிரித்தார். 

“இந்திரனே! இந்த வஜ்ராயுதம் யாருடைய மேனியின் எலும்பிலிருந்து பிறந்ததோ அவர்க்கும் உனக்கும் இந்த ஆயுதத்துக்கும் மரியாதை செய்து என்னுடைய ஒரு சிற்கை உதிர்க்கிறேன்” 

அவர் உதிர்த்த மிகச் சிறந்த அழகான அந்த சிறகையும் அதன் அற்புத ரூபத்தையும் கண்ட தேவர்கள் “இவர் ஸூபர்ணர்”* என்று போற்றி அழைத்தார்கள். இந்தப் பெரிய ஆச்சரியத்தைக் கண்ட இந்திரன் அவரை வணங்கி 
“பக்ஷிராஜரே!  உம்முடைய முழு வலிமையைப் பார்க்க விரும்புகிறேன். உம்முடன் அழியாத ஸ்நேகம் செய்துகொள்ள வேண்டுகிறேன்” என்றான்.

கருடர் தனது வலிமையைச் சொல்ல ஆரம்பித்தார்....

வியாஸபாரதம் தொடரும்....

*ஸூபர்ணர் = அழகான சிறகுள்ளவர்.

#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#ஆஸ்தீகபர்வம்
#பகுதி_19

No comments:

Post a Comment