Saturday, December 16, 2017

யயாதி மோக்ஷம்

பூலோக இன்பங்களையும் காமசுகத்தையும் தாராளமாக அனுபவித்த யயாதி பலவிதமான தர்மங்களைப் பற்றிப் பேசுவதைக் கேட்கக் கேட்க அஷ்டகனுக்கு தர்மசாஸ்திரங்கள் அனைத்தையும் அப்போதே கேட்டுவிடவேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது. ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் மேலும் பல கேள்விகள் கேட்டான். 

“ராஜன்னு! மனிதனுக்கு ஸ்ரேயஸாகக் கருதப்படும் ஸ்வர்க்கத்தின் வாசல் எது?”

அஷ்டகனின் அற்புதமான கேள்வி என்று யயாதியின் கண்களில் தெரிந்தது. சிரிப்புடன் தொடர்ந்தான்...

“ஸ்வர்க்கத்துக்கு மொத்தம் ஏழு வாசல்” என்றான் யயாதி.

அஷ்டகன் “அனைத்தையும் சொல்லி அருளவேண்டும் ப்ரபோ” என்றான் வினயத்துடன்.

“தவம், தானம், இந்திரியங்களை அடக்குதல், மனசை ஜெயித்தல், நாணம், அகமும் புறமும் ஒத்திருத்தல் (மனசும் செயலும் நன்மை கருதுதல்), அனைத்து ஜீவராசிகளிடமும் தயை.. இந்த ஏழும் ஸ்வர்க்கத்தின் அகண்ட வாசல்கள்.”

அஷ்டகன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்க அங்கே தர்மமழை பொழிந்துகொண்டிருந்தது.

“அகங்காரம் அழிவுக்கு அஸ்திவாரம். தான் கற்ற கல்வியால் தன்னை பண்டிதன் என்று நினைத்துக்கொண்டு அதனால் பிற்ர் புகழை அழிக்க நினைப்பவனுக்கு நற்கதி கிடையாது. பரப்பிரம்மம் கூட அவனை காக்காது. அக்னிஹோத்ரம், இந்திரியம் அடக்குதல், யாகம் செய்தல், வேதமோதுதல் ஆகியவை பாப பயத்தை போக்குகின்றன. ஆனால் அவைகளை பிறரிடம் பெருமைப்பட்டுக்கொள்வதற்காக செய்தால் பயத்தைக் கொடுக்கிறது”

வேதமோதுதலும் யாகம் செய்தலும்பயத்தைக் கொடுக்கிறது என்று பேசிய யயாதியின் தர்மம் அஷ்டகனுக்கு சுருக்கென்று இருந்தது. யக்ஞாதிகர்மங்களும் வேதமோதுதலும் எக்காலத்திலும் நன்மைபயப்பவை என்று தானே அறிந்திருந்தோம்?

”ஐயா! வேதமோதுதலும் யாகம் செய்வதும் தவம் செய்வதும் பாபம் போக்கத்தானே.. இது எப்படி பயத்தைத் தரும்?’ என்று கேட்டான்.

“இதற்காக யாகம் செய்கிறேன் இதற்காக தவம் செய்வேன் இன்னதற்காக வேதமோதுவேன் போன்ற செயல்களைவிட மனதை வசப்படுத்தி அதன் ஆதார பிரம்மத்தை அடைய முயற்சிப்பதின் மூலமாக சகல சௌக்கியங்களையும் அடைகிறான்”

யயாதி தர்ம சுரங்கம் என்று அறிந்துகொண்டான் அஷ்டகன். அள்ள அள்ளக் குறையாத வளம் அவனிடமிருந்தது. மனித வாழ்வின் ஆஸ்ரம தர்மங்கள் பற்றிக் கேட்டான்.

“பிரம்மாச்சாரி, க்ருஹஸ்தன், வானபிரஸ்தன் மற்றும் சன்னியாசி ஆகியோர்களின் சரியான மார்க்கமென்ன? தர்மங்கள் எவை?”

“முதலாவதாக பிரம்மச்சரியம் பற்றி சொல்கிறேன். குருவிற்கான பணிவிடைகளை ஏவாமல் செய்யவேண்டும். குருவிற்கு முன்னால் சயனித்து அவர் எழுவதற்கு முன்னால் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். குரு அழைத்தவுடனே வேதம் சொல்ல வேண்டும், இந்திரியங்களை அடக்க வேண்டும். ஊக்கம் வேண்டும். திருப்தியடைதல் முக்கியம். ஓதுவதை ஒருநாளும் விடக்கூடாது.”

சிறு இடைவெளி கொடுத்து மீண்டும் ஆரம்பித்தான் யயாதி.

“க்ருஹஸ்தர்கள் தனக்குக் கிடைக்கும் சம்பாத்யத்தில் தானமும் யாகமும் செய்ய வேண்டும். விருந்தினர்களுக்கு அன்னமிட வேண்டும். தனக்கு கொடுக்காதவைகளை தாமாகவே எடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும். இவையாவும் க்ருஹஸ்தனைப் பற்றிய ரஹஸ்யங்கள்”

சாதுக்கள் சுற்றிலும் இருந்தார்கள். தலை திருப்பி அனைவரையும் பார்த்த பின்னர்...

“வனத்தில் வசிக்க வேண்டும், பாபகாரியங்களை விட்டொழிக்க வேண்டும், தன் சக்தியினால் ஜீவிக்க வேண்டும், பிறர்க்கு உதவ வேண்டும், ஆகாரத்தையும் வ்யவாகாரங்களையும் அடக்க வேண்டும். இப்படி இருக்கும் வானபிரஸ்தன் மேலான லோகங்களை அடைவான்”
“குணங்கள் நிரம்பியவனாக இருப்பான் சன்னியாசி. அவனுக்கென்று தொழில் கிடையாது. எப்போதும் இந்திரியம் அடக்க வேண்டும். வீட்டில் படுக்க மாட்ட்டான். தனக்கென்று எதுவும் இல்லாதவனாக இருப்பான். தனியாக தேசங்களில் சஞ்சரிப்பான். இவையே சன்னியாசியின் லக்ஷணங்கள்”

அஷ்டகன் யயாதியை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டேயிருந்தான்.

“இவர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு உண்ண வேண்டும் என்பது தர்மமாகச் சொல்லப்படுகிறது. தெரியுமா?”

”எவ்வளவு?”

“சன்னியாசி எட்டு கவளங்கள்தான் ஒரு நாளுக்கு உண்ண வேண்டும். வானபிரஸ்தனுக்கு பதினாறு கவளங்கள் விதிக்கப்பட்டிருக்கிறது. க்ருஹஸ்தனுக்கு முப்பத்தியிரண்டு கவளங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. பிரம்மச்சாரிக்கு இந்தக் கணக்கு இல்லை”

அஷ்டகனுக்கு இப்போதுதான் அவன் கீழே விழுந்துகொண்டிருக்கிறான் தன்னால் அந்தரத்தில் நின்று இத்தர்மங்களை எடுத்துரைக்கிறான் என்று உரைத்தது. 

“ராஜாவே! நீ எங்கிருந்து வருகிறாய்? யாரால் அனுப்பப்பட்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.

“நான் புண்ணியம் கெட்டு மேலுலகத்திலிருந்து கீழே அனுப்பப்பட்டிருக்கிறேன். உங்களுக்கு பதில் சொல்லிவிட்டு பூமியில் விழப்போகிறேன். லோகபாலகர்கள் என்னை துரிதப்படுத்துகிறார்கள். சாதுக்கள் மத்தியில் விழுவதை நான் கேட்டுக்கொண்டேன். அதன்படி உங்கள் நடுவில் விழப்போகிறேன். இந்த வரத்தை இந்திரன் எனக்கு அருளினான்” 

“வேந்தனே! ஆகாயத்திலாவடு ஸ்வர்க்கத்திலாவது எனக்கு இடமுண்டா?” என்று கேட்டான் அஷ்டகன்.

“இந்தப் பூமியில் கோக்களும் அசுவங்களும் காடுகள் மலைகளிலுமுள்ள மிருகங்கள் இருக்கும்வரை உனக்கு அந்த லோகங்கள் உண்டு” என்றான் யயாதி.

“ராஜஸ்ரேஷ்டனே! அந்த மேலுலங்களையெல்லாம் உனக்கு தானம் செய்கிறேன். நீ விழாதே! மேலே போ”

அஷ்டகனின் இந்தச் செயலில் மிகவும் நன்றியுடைவனானான் யயாதி.  அவன் பக்கத்தில் பிரதர்த்தனன் என்பவன் அமர்ந்திருந்தான். அவனும் தனக்கு மேலோகத்தில் இடமிருக்கிறதா என்று விசாரித்தான்.

“துயரமற்ற அநேக லோகங்கள் உனக்காக காத்திருக்கிறது” என்றான் யயாதி.

“அவையெல்லாம் உனக்கு நான் தானம் செய்கிறேன். நீ கீழேயிறங்காதே! மேலே செல்”

பக்கத்தில் அமர்ந்திருந்த வஸுமான் என்பவனிம் முன்னால் அஷ்டகன் கேட்டதைப் போலவே “எனக்கு புண்ணிய லோகங்கள் இருக்கிறதா?” என்று கேட்டான். 

“சூரியன் தன் ஒளியினால் பிரகாசஞ்செய்கின்ற ஆகாயமும் பூஜியும் திசைகளும் எவ்வளவு உள்ளனவோ அவ்வளவு லோகங்கள் உனக்கும் இருக்கின்றன” என்றான் யயாதி.

”அந்த என்னுடைய லோகங்களெல்லாம் உனக்கே இருக்கட்டும்”

அடுத்து சிபியென்பவன் யயாதிக்கு வணக்கம் சொல்லி “நான் உசீநரன் புத்திரன். அவர்களுக்கு உள்ளது போன்ற லோகங்கள் எனக்கும் உண்டா?” என்று கேட்டான்.

“ராஜாவே! நீ மனத்தினாலும் வாக்கினாலும் சாதுக்களை இகழ்ந்ததில்லை. அதனால் எண்ணற்ற லோகங்கள் உனக்குக் காத்திருக்கிறது. 

அனைவரும் யயாதி என்னச் சொல்லப்போகிறான் என்று ஆவலாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

“ராஜாக்களே! உங்களுக்கு எப்படி நிறைய புண்ணியலோகங்கள் இருக்கிறதோ அதே போல எனக்கும் இருந்தன. பிறக் கொடுக்கும் லோகங்களில் எனக்கு சுகமிராது. ஆகையால் நீங்கள் கொடுப்பதை நான் அங்கீகரிக்கமாட்டேன்”

அஷ்டகன் எழுந்து நின்று “ராஜாவே! நாங்கள் கொடுப்பதை நீ ஏற்கவில்லை என்றால் நாங்களெல்லாம் ’தத்தாபஹாரதோஷம்’ ஏற்பட்டு நரகம் செல்வோம்.”

அப்போது வானவீதியில் அந்து பொன் நிறமான ரதங்கள் மிதந்து வந்தன. அக்னி ஜ்வாலை போல தகதகவென்று மின்னியது. 

“இது யாருடது?” என்று கேட்டான் அஷ்டகன்.

“சந்தியம் தவறாத உத்தமர்களே! இவைகளெல்லாம் உங்களுக்கு வாகனமாகப்போகிறது. நீங்கள் மேலுலகம் செல்வதற்கு அழைத்துப்போக வந்திருக்கிறது” என்றான் யயாதி.

இந்த தர்ம சம்வாதம் நடக்கும் போது அஷ்டகன் முதலியோர் அஸ்வமேதயாகம் செய்துகொண்டிருந்தார்கள். அந்த ஹோமப்புகை எழுந்து மேலே செல்லும் வழியில் யயாதி அந்தரத்திலிருந்து தர்மம் சொல்லிக்கொண்டிருந்தான். குதிரையின் அவயங்களை வெட்டி ஹோதா, அத்வரியு, உத்காதா, பிரம்மா (நான்முகன் இல்லை) போன்ற பதினாறு ரித்விக்குகள் சாஸ்திரப்படி அக்னியில் ஹோமஞ் செய்தார்கள். அந்தப் புகை வாஸனையை முகர்ந்தவர்கள் பாபங்கள் நீங்கி பரிசுத்தமாயினர். 

இந்த சமயத்தில் இடையில் மான் தோலும் மேலே போர்த்தியிருப்பதும் மான் தோலுமாக ஒரு பெண் வந்தாள். அவளைப் பார்த்தால் மிருகங்களுடன் சஞ்சரிப்பவள் போல இருந்தாள். தபஸ்வி என்று முகத்தில் தெரிந்தது. அவளைச் சுற்றிலும் புள்ளிமான் கூட்டம். நடுவில் தபோவலிமையுடன் வந்தவள் பெயர் மாதவி. தன் புத்திரர்கள் பதினாறு ரித்விக்குகளுடன் அமர்ந்து அசுவமேத யாகம் செய்வதில் பெருமகிழ்ச்சி கொண்டான். அப்போது அந்தரத்தில் ஒருவர் இருப்பதைக் கண்டாள்.

சட்டென்று அவளது விழிகள் விரிந்தது. முகத்தில் புன்னகை தவழ்ந்தது. யயாதியைப் பார்த்து வந்தனம் செய்து அங்கேயே நமஸ்கரித்தாள். அஷ்டகன் துள்ளியெழுந்து கேட்டான் “மாதாவே! இவர் யார்? நீ ஏன் நமஸ்கரிக்கிறாய்?” என்று கேட்டான்.

“புத்திரர்களே! இவர் நகுஷபுத்திரன் யயாதி. என்னுடைய பிதா. உங்களுக்கு மாதாமஹர். என் சகோதரனாகிய பூருவை பட்டாபிஷேகம் செய்வித்து சுவர்க்கம் சென்றார்? இவர் என்ன காரணத்தினால் இங்கே வந்தார்?” என்று கேட்டாள்.

”சுவர்க்கத்திலிருந்து தவறி விழுகிறார்” என்றான் வஸுமான்.

“பிதாவே! இவர்கள் அனைவரும் உம் தௌஹித்ரர்கள். தவத்தால் ஜெயிக்கப்பட்ட எங்களது லோகங்களை எடுத்துக்கொள்ளுங்கள். தர்மத்தினால் சம்பாதிக்கப்பட தனம். ஆகையால் நாங்கள் செய்த தானங்களையும் தவங்களையும் கொண்டு ஸ்வர்க்கம் செல்லும்” என்று வேண்டினாள் மாதவி.

யயாதி உள்ளம் குளிர்ந்தான். 

“உனது தவத்தின் பலன் எனக்கு நன்மையாக இருக்குமேயானால் உன்னாலும் பெண்ணினாலும் தௌஹித்திர மஹாத்மாக்களினாலும் கரையேற்றப்பட்டவனாகிறேன்.”

இப்படிச் சொன்ன யயாதி சிராத்தத்தின் புண்ணிய பலனையும் செய்யும் முறைகள் பற்றியும் சில வரையறைகள் வகுத்தான்.

”இதுமுதல் பிதிர்கர்மத்தில் பெண் சந்ததி புண்ணிய பலனைத் தருவதாகும். தௌஹித்ரன், குதபகாலம், எள்ளு இம்மூன்றும் சிராத்தத்தில் புண்ணியமானவை. சுத்தமாயிருத்தல், கோபம் விடுதல், அவஸரமில்லாமை இம்மூன்றும் சிராத்தத்தில் சிலாக்கியம். பகலின் எட்டாவது முகூர்த்தத்தில் சூரியன் உஷ்ணம் குறைந்திருக்கும் குதப காலத்தில் சிராத்தம் செய்வதற்கு உசிதம். அதில் பிதிர்களுக்கு  கொடுப்பது அழியாததாகும். எள்ளு பிசாசத்தினிடமிருந்து காப்பாற்றுகிறது. தர்ப்பம் ராக்ஷஸர்களிடமிருந்து காக்கிறது”

அஷ்டகன் சிபி வஸுமான் பிரதர்த்தன் ஆகிய அனைவரும் திருப்தியோடு யயாதியை பார்த்த வண்ணம் இருந்தார்கள். மாதவி பிதாவுக்கு வந்தனம் சொன்னபடியே நின்றிருந்தாள்.

“யக்ஞசமாப்தி செய்துவிட்டு சீக்கிரம் புறப்படுங்கள்” என்றான் யயாதி.

“நீங்கள் உங்கள் ரதமேறி மேலே செல்லுங்கள். எங்கள் சமயம் வரும்போது நாங்கள் மேலே வருகிறோம்” என்றான் அஷ்டகன்.

“நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து ஸ்வர்க்கத்தை ஜெயித்திருக்கிறோம். இதோ தேவலோகத்தின் மார்க்கம் தெரிகிறது” என்று வானத்தைக் காட்டினான். 

எல்லோரும் ரதமேறி புறப்படத்தயாரானார்கள். அதில் சிபியென்பவன் ரதம் முதலில் புறப்பட்டுச் சென்றது. அஷ்டகனுக்கு ஆச்சரியம். யயாதியிடத்தில் “நாந்தான் முதலில் செல்வேன் என்று நினைத்தேன். இந்தச் சிபி எப்படி முன் சென்றான்?”என்று கேட்டான்.

“இந்தச் சிபி எவ்வளவு தனம் சம்பாதித்தானோ அவ்வளவையும் யாசகர்களுக்கு தானம் செய்தான். அதனால் இவன் உங்களில் சிறந்தவன்” 

அஷ்டகன் மிகவும் நெகிழ்ச்சியுடன் “ராஜாவே! நீ செய்த இந்த தர்ம காரியத்தை இவ்வுலகில் உன்னைவிட வேறு க்ஷத்திரியர்களிலும் பிராமணனிலும் செய்பவன் இல்லை” என்றான்.

யயாதியும் தன் ரதமேறினான். அனைவரும் மேலே செல்ல ஆரம்பித்தனர். பக்கத்து ரதத்தில் நின்றுகொண்டிருந்த அஷ்டகனிடம் கடைசியாய் சில வார்த்தைகள் சொன்னான் யயாதி.

“நான் யயாதி! நகுஷனுடைய புத்திரன். பூருவின் பிதா. இந்தப் பூமியில் சக்ரவர்த்தியாக இருந்தேன். நான் உங்களுக்கு மாதாமஹன். நான் குதிரைகளும் பசுக்களும் பொன்னும் உயர்ந்த தனங்களும் நிறைந்த இந்த பூமி முழுவதையும் பிராமணர்களுக்கு தானம் செய்தேன். ஆயிரம் கோடி பசுக்களை தானம் செய்தேன். என்னுடைய சத்தியத்தினால் ஆகாயமும் பூமியும் வியாபித்திருக்கிறது. என் சொல் பொயாகப் போனதேயில்லை. எவனொருவன் ஸ்வர்க்கத்தை ஜெயித்தவர்களாகிய நம் எல்லோரைப் பற்றியும் நடந்தபடி பிராமண ஸ்ரேஷ்டர்களுக்கு தெரிவிப்பானோ அவன் நமது மோட்சத்தை அடைவான்”

தௌஹித்ரர்களால் கரையேற்றப்பட்ட யயாதி விண்ணில் பறந்து ஸ்வர்க்கத்தை அடைந்தான்.


No comments:

Post a Comment