Saturday, December 16, 2017

யயாதி தேவயானி விவாஹம்

தேவயானிக்கு ராஜ உபசாரம் நடைபெற்றது. கைப் பிடிக்க, கால் பிடிக்க, ஒட்டியாணம் போட்டு அலங்கரிக்க, சாமரம் வீச, சாம்பிராணி போட்டு தலைமுடி கோத என்று ஆயிரம் கன்னிகைகள் அல்லும்பகலும் அயராது சேவகம் புரிந்தார்கள். அவர்களுக்கு குலபதி போல சர்மிஷ்டை தாசியாய் மேற்பார்வையில் இருந்தாள். இரவும் பகலும் இன்பமே சூழ்ந்து கிடந்தாள் தேவயானி.
ஒரு நாள் மீண்டும் சைத்ரரதம் என்னும் அந்த வனத்துக்குப் போவதற்கு பிரியப்பட்டாள் தேவயானி. சேடிப்பெண்களுடனும் சர்மிஷ்டையுடனும் சேர்ந்து கொண்டு அதே தாமரை மலர்ப் பூத்த தடாகம் இருக்குமிடம் வந்தடைந்தார்கள். வஸந்த காலம். காட்டில் தென்படும் செடிகொடிகள் அனைத்தும் சிகப்பும் நீலமும் வெள்ளையும் மஞ்சளுமாய்ப் பூத்து குலுங்கின. எங்கெங்கு காணினும் பச்சைப் பசேல். காலுக்கு புல்லின் மெத்தை. மனசு கொள்ளை போனது. ரம்மியமான இடத்தில் அமர்ந்துகொண்டு பாட்டும் ஆட்டமுமாக பொழுது போய்க்கொண்டிருந்தது.
வனம் அறிந்த சேடி ஒருத்தி மது இருக்கும் புஷ்பத்தைக் கொணர்ந்து அதை பருகச் சொன்னாள். இன்னொருத்தி கையில் கொண்டு வந்திருந்த பக்ஷண மூட்டையை அவிழ்த்து எல்லோரையும் சாப்பிடச்சொன்னாள். அவர்களுக்கு முன்னால் பல வகையான பழங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. வேண்டியவர்கள் கை நிறைய அள்ளிச் சுவைத்தார்கள். நகைச்சுவைப் பேச்சுகளும் கிண்டலுமாய் வனம் சிரித்துக்கொண்டிருந்தது.
குதிரையின் குளம்பொலி கேட்டது. மகளிர் குழாம் அமைதியானது. குதிரை மீது அமர்ந்திருந்தவனை தேவயானிக்குத் தெரியும். கூர்ந்து பார்த்தாள். ஆம். அவனேதான். அவனும் தூரத்திலிருந்து தேவயானியைப் பார்த்தான். உயர்ந்த ஆசனத்தில் ரத்னமும் வைரமும் முத்துமாக பல வகையான அணிகலன்களை மாட்டியிருந்தாள். வஸ்திரங்கள் பள பளவென்றிருந்தன. அவளுக்கு சற்று கீழான ஆசனத்தில் சர்மிஷ்டை அமர்ந்திருந்தாள். அவன் அவர்கள் இருவரையும் மற்றும் சுற்றி வேலை செய்துகொண்டிருந்த சேடிப்பெண்களையும் பார்த்துக்கொண்டே தேவயானியின் சமீபம் வந்தான்.
தேவயானி காந்தமானக் கண்களால் அவனை விழுங்கி விடுவது போலப் பார்த்தாள். அவன் ஏற்கனவே அறிமுகம் ஆனவன் தான். வந்தவன் தேவயானியிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.
“அழகியே! நீங்கள் இரண்டு சௌந்தர்யம் ததும்புபவர்கள் இரண்டாயிரம் கன்னிகள் சூழ இங்கே குதூகலமாக இருக்கிறீர்களே? நீங்கள் யார்?” அவனுக்குத் தெரிந்தும் மறந்தது போலக் கேட்டான்.
“சுக்ரர் எனும் அஸுரகுருவின் புத்ரி நான். தேவயானி. இவள் அஸுரராஜா வ்ருஷபர்வாவின் குமாரத்தி. சர்மிஷ்டை. எனக்குத் தோழியான தாதியிவள்.” என்று சொல்லிவிட்டு ஒரு அலட்சியப் பார்வையை சர்மிஷ்டை மேலே வீசினாள்.
“ஆஹா! அஸுரராஜாவின் பெண்ணா இவள்? இது போன்ற உத்தம ஸ்த்ரீயை ஏழுலகிலும் நான் கண்டதில்லை. கந்தர்வ ஸ்த்ரீகளும் அப்சரஸ்களும் இவள் அழகின் முன் தோற்று விடுவார்கள். தாமரை மலர் போன்ற கண்ணினையுடவளாக இருக்கும் இவள் உனக்கு எப்படி அடிமையாக முடியும்?” என்று சர்மிஷ்டையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே பக்கத்தில் அமர்ந்திருந்த தேவயானியைக் கேட்டான்.
தேவயானிக்கு பற்றிக்கொண்டு வந்தது. அவன் சர்மிஷ்டையை அழகி என்று சொன்னது பிடிக்கவில்லை. அவனது இந்த பேச்சை அறுக்கும் பொருட்டு வாக்கை திசை மாற்றினாள்.
“அதிருக்கட்டும். நீர் யார்? உம்முடைய ரூபம் ராஜாவை ஒத்து இருக்கிறது. பேச்சில் பிராமணத்தனம் இருக்கிறது? ரிஷிபோலவும் இருக்கிறது. எங்கிருந்து வருகிறீர்?”
“நான் ராஜா. யயாதி என்று அவனியெங்கும் பிரஸித்தியுள்ளவன்”
கலகலவென்று காடே குலுங்கும்படி சிரித்தாள் தேவயானி. யயாதி புரியாமல் மலங்க மலங்கப் பார்த்தான். யயாதியும் தேவயானியும் ஒருவரையொருவர் முன்பே அறிந்திருந்தாலும் தோழிகள் முன்னே ரசமாக வார்த்தை விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் யயாதிக்கு சர்மிஷ்டையின் மேல் ஒரு கண்.
“எதற்காக இந்த வனத்தினுள் திரிந்துகொண்டிருக்கிறீர்கள்? மானைப் பிடிக்க வந்தீர்களா? அல்லது நாங்கள் ஜலக்கிரீடை செய்துகொண்டிருக்கும் இந்த தடாகத்தில் மலர் பறிக்க வந்தீரா?” என்று ஏற்றமும் இறக்குமாக யயாதியை சொற்களுக்குள் பல அர்த்தமாக இழுத்துப் பேசினாள் தேவயானி.
“பெண்ணே! என் அஸ்திரத்தினால் அடிபட்ட மானைத் தேடிதான் வந்தேன். சரி.. நீ எனக்கு விடை கொடு. ஸ்த்ரீகள் இருக்குமிடத்தில் இவ்வளவு நேரம் பேசியதே.....” என்று பாதியில் பேச்சை நிறுத்திக்கொண்டுப் பெருமூச்சுடன் குதிரையைக் கழுத்தில் ஆதரவாகத் தட்டித் திருப்பினான்.
“சிரேஷ்டரே! நில்லும்!” என்று குரலை உயர்த்திய தேவயானி ”உம்முடைய நினைவாகவே பல வருஷங்களாகக் காத்திருக்கிறேன். எனக்கு பர்த்தாவாக ஆகுங்கள். இந்த இரண்டாயிரம் கன்னிகைகளோடும் தாஸியான சர்மிஷ்டையோடும் உம்மோடு வருகிறேன். உங்களுக்கு சுகம் உண்டாகும்” என்று வெட்கத்தை விட்டு வெளிப்படையாகக் கேட்டாள். தேவயானியின் இந்தக் குணம் அவளது அழகையிம் மீறி யயாதிக்கு அச்சத்தைக் கொடுத்தது. சர்மிஷ்டையை மஹிஷியாக்கிக்கொள்ள மனசுக்குள் விரும்பினான்.
“சுக்ரபுத்ரியே! உனக்கும் எனக்கும் பொருத்தம் ஆகாது. நீ பிராமணப் பெண். நான் க்ஷத்ரியன். விவாஹ சம்பந்தம் செய்யலாகாது” என்று மறுத்தான். தேவயானி உருட்டும் பார்வையோடு அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். சுற்றிலும் மலர் சூடியப் பெண்கள் கூட்டம்.
“அயலானுடைய பார்யை, ஸகோதரி, மேலான ஜாதியில் பிறந்தவள், ஒரே கோத்ரம் உள்ளவள், மருமகள் மற்றும் வியாதி உள்ளவள் ஆகியோர் சேரக்கூடாதவர்கள்” என்று வாகாக திருமண தர்மம் பேசினான்.
தேவயானி அலட்சியப் புன்னகையோடு “க்ஷத்ரிய ஜாதியும் பிராமண ஜாதியும் எப்போதும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தேதான் இருக்கிறது. வேற்றுமை இல்லை. நீ ரிஷி போலவும் இருக்கிறீர். ராஜா போலவும் மிடுக்காக செயல்படுகிறீர். புரிகிறதா?’ என்றாள்.
“பிராமண வர்ணம் மேலானது. நான் உன்னைத் தீண்டலாகாது” என்று முடிவாகச் சொல்லி நகரப்போனான்.
“நகுஷ புத்திரரே! நான் பாணிக்கிரஹணம் ஆகாதவள். எந்த புருஷனும் என்னைத் தீண்டியதில்லை. அந்த சமயத்தில் என் வலது கையைப் பிடித்தீர்கள். உங்களை நான் அப்போதே வரித்துவிட்டேன். உம்முடைய கரம் பிடித்த என்னை வேறு புருஷன் தொடலாமா?” என்று சாதுர்யமாகப் பேசி அவனை நிறுத்தினாள்.
“பெண்ணே! புரியாமல் பேசுகிறாய். பிராமண தர்மம் வேறு. உன் பிதா கன்னிகா தானம் செய்து கொடுத்தால் உன்னை நான் விவாஹம் செய்து கொள்கிறேன்” என்று பெண் ஆசை அதிகமுள்ள யயாதி ஒத்துக்கொண்டான். சர்மிஷ்டையும் கூட வருவாள் என்ற நம்பிக்கையில் அவளையும் திரும்பி ஒரு தடவை பார்த்துக்கொண்டான்.
“சற்று நேரம் இங்கேயே இரும்” என்று அவனை நிறுத்திவிட்டு கைதட்டி ஒரு தாதியைக் கூப்பிட்டாள்.
“சிக்கிரம் போய் என் பிதாவிடம் நான் நகுஷ புத்திரரை ஸ்வயம்வரமாக வரித்துவிட்டேன் என்று சொல்லி உடனே இங்கே வரச்சொல்” என்று கட்டளையிட்டாள்.
சுக்ரர் செல்ல மகளிடமிருந்து இப்படி செய்தி வந்ததும் வனத்துக்கு ஓடினார். பெண்கள் கூட்டமாக இருக்கும் அந்த மரங்களடர்ந்த பகுதிக்கு வந்தார்.
“பிதாவே! முன்பு எனக்கு வந்த ஆபத்துக்காலத்தில் இவர்தான் என் கையைப் பிடித்து தூக்கிவிட்டார். இவரையல்லாமல் நான் வேறு ஒருவரை வரிக்கமாட்டேன். எனக்கு இவரையே விவாஹம் செய்து வைய்யுங்கள்” என்று அவரின் காலைத் தொட்டுக் கேட்டாள்.
யயாதியைப் பார்த்தார் சுக்ரர். அவரும் வந்து சுக்ரரிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டார்.
“நான் க்ஷத்ரியன். உங்கள் பெண்ணை ஏற்பது முறையல்ல என்பது தெரியும்” என்று தயக்கமாகப் பேசினான். சுக்ரர் சிரித்தார்.
“பிராமணப் பெண்ணை தானாக ஒருவன் கவர்ந்து கொண்டால் வருணபேதம் ஏற்பட்டு குற்றமாகிவிடும். ஆனால் என்னால் கொடுக்கப்படும் இவளை நீ மஹிஷியாக அங்கீகரிக்கக்கடவாய்” என்றார்.
தயங்கிய யயாதியைப் பார்த்து அவனுக்கு தைரியம் சொல்லும் விதமாக மேலும் பேசினார் சுக்ராசாரியார்.
“வருணக் கலப்பினால் ஏற்படும் பாபம் உன்னைத் தொடராமலிருக்க நான் ஆசீர்வாதம் வழங்குகிறேன். தேவயானியுடன் சந்தோஷமாக இரு. இவளுடன் வரும் சர்மிஷ்டையும் கௌரவிக்கத்தக்கவள். ஆனால் எந்த சமயத்திலும் சர்மிஷ்டையை சயன அறைக்குள் சந்திக்காதே! கலக்காதே! இப்படியிருந்தால் நீ நினைத்ததெல்லாம் அடைவாய்” என்று நல்வார்த்தைகள் சொன்னார். அங்கேயே தேவயானியும் யயாதியும் சுக்ரரை பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்தார்கள்.
சாஸ்திரப் பிரகாரம் தடபுடலாகத் திருமணம் நடந்தது. வ்ருஷபர்வாவின் சேனை முழுக்க விவாஹ வேலையில் ஈடுபட்டது. சுக்ரர் தாராளமக தனம் கொடுத்தார்.இரண்டாயிரம் கன்னிகைகள் சர்மிஷ்டை தேவயானி என்று பெரும் பெண்கள் கூட்டத்தோடு தன் நகர்ம் சென்றான் யயாதி.
**
அந்தப்புரத்தில் தேவயானியும் அவள் காட்டிய அசோகவனிகை என்னும் தோட்டம் அருகில் ஒரு ராஜகிருஹம் கட்டி அதில் சர்மிஷ்டையையும் குடியமர்த்தினான். ஆயிரம் வேலைக்காரிகள் சர்மிஷ்டைக்கு இருந்தார்கள். வஸ்திரங்களும் அன்னபானங்களும் கொடுத்து அவளைக் கௌரவித்தான். எப்போதும் அவளின் மேல் ஒரு கண்ணாக இருந்தன் யயாதி. அசோகவனிகையைக் கடக்கும் போதெல்லாம் சுக்ரர் சொன்னது நியாபகம் வந்து நெட்டித் தள்ள அந்தப்புரத்தைப் பார்க்க நடையைக் கட்டுவான்.
சந்தோஷமாக காலங்கள் உருண்டது.
தேவயானி கருவுற்றாள். ஒரு குமாரனை ஈன்றாள். சர்மிஷ்டைக்கு துக்கம் தாளவில்லை. இப்படி தாஸியாகிவிட்டோமே! நமக்கும் விவாஹம் நடந்திருந்தால் ஒரு பிள்ளை பெற்றிருப்போமே என்று சித்தம் கலங்கினாள். அசோக மரத்தின் கிளையைப் பிடித்துக்கொண்டு தோட்டத்தில் நின்றுகொண்டிருந்தாள். யாரிடமும் தனது சோகத்தைச் சொல்லி அழ வழியில்லாததால் அண்ணாந்து பார்த்து அந்த அசோக மரத்திடம் பேச ஆரம்பித்தாள்.
“என்னுடைய யௌவனம் வீணாகிவிட்டது. தேவயானி ஒரு பிள்ளை பெற்று விட்டாள். நானும் இந்த ராஜாவையே பர்த்தாவாக வரிக்கிறேன். எனக்கு புத்திர லாபத்தை இந்த ராஜாதான் அருள வேண்டும். இப்போது நான் ஏகாந்தமாகப் பார்க்கக் கிடைபாரா? நேரில் வந்தால் அவரிடம் நான் சந்தானம் கேட்டு யாசிப்பேன்”
அப்போது யயாதி அந்தப் பக்கமாக வந்தார். சர்மிஷ்டை உடனே மந்தகாசப் புன்னகை ஒன்றை சிந்தினாள். அவரெதிரே வந்து நின்று கை கூப்பினாள். யயாதி புன்முறுவல் பூத்தார்.
“நகுஷ புத்திரரே! உம் வீட்டில் நான் வெகு பத்திரமாகவும் கௌரவமாகவும் இருக்கிறேன். ராஜாவே! நீர் எனக்கு ஒரு புத்திரனைத் தருவீர்” என்று வெளிப்படையாக பட்டென்று கேட்டுவிட்டாள்.
யயாதி அமைதியாய் இருந்தார். தோட்டத்தில் காற்று வீசி சர்மிஷ்டையின் ஆடையைக் கலைத்தது. மௌனம் கலைந்து யயாதி...
“உயர்ந்த ரூபமுள்ளவளான உன்னைப் பார்த்தவுடன் எனக்குப் பிடித்தது. அப்போது முதல் உன் நினைவாகத்தான் இருக்கிறேன். ஆனால் தேவயானியைக் கல்யாணம் செய்த பிறகு சுக்ராசாரியார் வ்ருஷபர்வாவின் பெண்ணை நீ சயனத்திற்குக் கூப்பிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.
"அரசே! ஐந்து பொய்கள் பாபமில்லாதவை என்று சொல்லியிருக்கிறார்கள்” என்று ஒரு தூண்டில் போட்டாள் சர்மிஷ்டை.
“பொய்யா?”
“ஆமாம். பரிஹாஸத்துக்காகவும், ஸ்த்ரீகளிடத்தும், விவாஹ காலத்திலும், உயிருக்கு ஆபத்து வரும் காலத்திலும், எல்லாச் சொத்தும் அபகரிக்கப்படும் காலத்திலும் சொல்லும் பொய்யினால் நமக்கு தீங்கில்லை. பாபமில்லை”
சர்மிஷ்டையின் இந்தப் பேச்சு யயாதிக்கு குழப்பத்தை உண்டு பண்ணியது.
“சர்மிஷ்டை! அரசன்தான் பிரஜைகளுக்கு உதாரணம். அவன் பொய் சொல்ல ஆரம்பித்தால் தேசம் கெட்டுவிடும். நான் ராஜாங்க கார்யங்களில் கூட பொய் சொல்வதில்லை”
சர்மிஷ்டை அடுத்த யுக்திக்குத் தாவினாள்.
“ராஜனே! தேவயானியுடன் சேர்த்து நானும் பூஜிக்கத்தக்கவள் என்று சொல்லித்தானே என்னையும் கூட அனுப்பினார்கள்? நானும் போஷிக்கத்தக்கவள்தானே?”
யயாதி இதற்கும் மசியவில்லை. வேறெங்கோ பார்த்துக்கொண்டு நின்றான். அதுவரை அடித்துக்கொண்டிருந்த காற்று கூட நின்றுவிட்டது. சர்மிஷ்டை இன்னும் என்ன சொல்வது என்று யோசித்தாள்.
“எவனெவனுக்கு என்னென்ன விருப்பமோ அவற்றை நான் கொடுக்கிறேன் என்று மூன்று முறை நகரத்தில் பறையடித்தீர். பொன் மணி முத்து வஸ்திரம் ஆபரணம் பசு பூமி என்று எல்லாவற்றையும் நீர் யாசிப்பவர்களுக்குக் கொடுக்கிறீர்கள். நான் உம்மிடம் ஒரு புத்திரனை யாசிக்கிறேன். இது நீர் தரவில்லையென்றால் ஜனங்களுக்கு பறையடித்துச் சொன்னதை செய்யாமல் நழுவுகிறீர்கள் என்று பொருள்”
“ஆமாம். யாசிப்பவர்க்கு இல்லையென்று கொடுப்பதை விரதமாக வைத்திருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும்? கஜானாவைத் திறந்து விடட்டுமா? இல்லை ராஜ்யத்தைக் கொடுக்கட்டுமா?” என்று கேட்டான் யயாதி.
“புத்ரனைக் காட்டிலும் இந்த உலகத்தில் சிறந்தது ஒன்றுமில்லை. ராஜாவே! புத்ரனைப் பெறுவதற்கும் பர்த்தாவைப் போஷிப்பதற்கும்தான் பிரம்மதேவர் ஸ்த்ரீகளைப் படைத்திருக்கிறார். கன்னிகைகள் புத்ரன் இல்லாமல் புருஷன் இல்லாமலும் இருப்பார்களேயானால் அவர்களது ஜென்மம் வீண். நான் தேவயானிக்கு வேலைக்காரியாக இருக்கிறேன். தேவயானி உம்மிடம் வசப்பட்டுக் கிடக்கிறாள். ஆகையால் அவளையும் என்னையும் நீர்தான் அடையவேண்டும்”
இதில் யயாதி தனது சத்யத்திலிருந்து நழுவிவிட்டான்.
“சரி” என்று அவளைக் காதலுடன் பார்த்தான். காமம் தொற்றிக்கொண்டது. தோள் மீது கை போட்டுக்கொண்டு க்ருஹத்தினுள் சென்றுவிட்டான். நாட்கள் வேகமாக நகர்ந்தன. சர்மிஷ்டையும் கர்ப்பம் தரித்தாள். ஒரு புத்திரனைப் பெற்றாள்.
சர்மிஷ்டையை தேவர்களின் அமிர்தம் மாதிரியும் பயிர்களுக்கு மேகம் போலவும் நினைத்துக்கொண்டான். தேவயானி பயங்கர ரூபமுள்ள ஸர்ப்பமாகிவிட்டாள் என்று வெறுத்துப்போயிருந்தான் யயாதி.
சர்மிஷ்டை புத்திரனை பெற்றது தேவயானியின் காதுகளுக்கு எட்டியது. அவளைப் பார்ப்பதற்கு அசோகத் தோட்டத்திற்கு வந்தாள் தேவயானி. அங்கே....

No comments:

Post a Comment