Saturday, December 16, 2017

ஜனமேஜயனின் சர்ப்பயாகம்

பரீக்ஷித் மஹாராஜா தக்ஷகன் கடித்து இறந்தபின்னர் ஹஸ்தினாபுரத்து மக்களும் அவரின் புரோஹிதரும் மற்றும் நாட்டின் பரிசுத்தமான பிராமணர்களும் சேர்ந்து குழந்தையாக இருந்த ஜனமேஜயருக்கு பட்டாபிஷேகம் செய்தனர். 

குழந்தையாயிருந்தபோதே ஜனமேஜயன் கூர்மதியுடன் விளங்கினான். தன்னுடைய வம்சத்து நாயகர்களுள் ஒருவரான தர்மராஜா போல ராஜ்யபரிபாலனம் செய்தார். அவருடைய பராக்கிரமங்களைக் கண்டு அதிசயத்துக் காசி தேசத்து ராஜாவாகிய ஸ்வர்ணவர்மா தன் பெண் வபுஷ்டமையைக் கன்னிகாதானமாகக் கொடுத்தான். அவர்களுடைய காலம் ரம்மியமாகச் சென்றுகொண்டிருந்தது.

[இப்போது ஸரமையின் சாபம் என்ற தலைப்பில் இருக்கும் பகுதி 3ல் ஜனமேஜயன் ஸத்ரயாகம் செய்துகொண்டிருப்பதை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்]

உதங்கரிஷி அவர் பௌஷ்ய ராஜாவிடமிருந்து குருதட்சணைக்காக பெற்றுக்கொண்டு வந்த குண்டலங்களைக் கவர்ந்து சென்ற தக்ஷகனைக் கொல்வதற்காகச் சர்ப்பயாகம் செய்யத் தூண்டுகிறார். அப்போது ஜனமேஜயனின் தந்தையைத் தீண்டிக் கொன்றதும் தக்ஷகன் என்று சொல்லி சர்ப்பயாகம் செய்வதை நிச்சய்ம் செய்யத் துடிக்கிறார். தனது தந்தை ஸ்வர்க்கம் போனதைப் பற்றி மீண்டும் மந்திரிகளிடம் கேட்டபோது அவர்களும் தக்ஷகன் தீண்டி இறந்ததாகத் தெரிவித்தனர். அந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த பரீக்ஷித் இடையில்

“தக்ஷகனுக்கும் காசியபருக்கும் நடந்த உரையாடல் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று வினவினான்.

“அரசரே! தக்ஷகனுக்கும் காசியபருக்கும் உரையாடல் நடந்தபோது உலர்ந்த கிளைகளை விறகுக்காக ஒடிப்பதற்கு ஒரு மனிதன் அந்த மரத்தின் உச்சியில் ஏறியிருந்தான். இவர்களுக்குள் உரையாடல் நடந்து தக்ஷகன் மரத்தை எரித்து சாம்பலானபோது அவனுமே அந்தத் தீயில் சாம்பலாகிவிட்டான். காஸ்யபர் மரத்தை உயிர்ப்பித்ததில் அவனும் பிழைத்தெழுந்தான். அவன் கூறியதுதான் அவர்களுக்கிடையே நடந்தவைகளை நாங்கள் அறிந்துகொண்டோம்” என்றார்கள்.

“தக்ஷகன் செய்தது எப்பேர்ப்பட்ட அநியாயம்? காசியபர் விஷ முறிவு செய்ய வந்திருந்தால் என் பிதா உயிர் பிரிந்திருக்காதே! அந்த துராத்துமாவான தக்ஷகன் காசியபருக்கு திரவியங்கள் கொடுத்து அனுப்பியிருக்காவிட்டால் உங்களுக்குப் பிரியமான ராஜாவையும் எனது பிதாவையும் நாம் இழந்திருக்கமாட்டோம். ஆகையால் உதங்கரிஷிக்கும் உங்களுக்கும் பிரியமான காரியத்தைச் செய்து பழி தீர்த்துக்கொள்ளப்போகிறேன்” என்று சர்ப்பயாகம் செய்யப்போவதை தெரிவித்தான்.

ரித்விக்குகளையும் புரோஹிதர்களையும் அழைத்தார். சபையில் மந்திரிகளும் வேதம் அறிந்த அந்தணர்களும் சூழ்ந்திருந்தார்கள். மன்னன் பேசத்தொடங்கினான்.

“எனது பிதாவை ஹிம்சித்துக் கொன்ற துராத்துமாவான தக்ஷகனை அவனது பந்துக்களுடன் எரிகிற அக்னியில் போடும் கிரியைகள் உங்களுக்குத் தெரியுமா? விஷாக்கினியால் என் தந்தையை எரித்தவனை ஸார்ப்பஸத்திரமெனும் யாகம் செய்து எரிக்க விரும்புகிறேன்” 

“பௌராணிகர்கள் அந்த ஸ்த்ரயாகம் செய்வதற்கு உம்மைத் தவிர வேறு ஸ்ரேஷ்டர் இல்லை என்கிறார்கள். அதை நாம் நிச்சயம் செய்வோம்” என்று உறுதி கூறியவுடன் ஜனமேஜயன் அந்த யாகம் அப்போதே நடந்து முடிந்து ஸர்ப்பங்கள் அக்னியில் விழுத்து செத்தொழிவதுப் போல சந்தோஷமடைந்தான்.

யக்ஞசாலை கட்டும் பணி துவங்கியது. அரண்மனை அருகில் பெரிய நிலமொன்றை சாஸ்திரப் பிரகாரம் அளந்தனர். அதன் நடுவில் பிரம்மாண்டமான  ஹோமகுண்டமென்று நிர்மாணிக்கப்பட்டது. யாகத்துக்குத் தேவையான லக்ஷோபலக்ஷம் சமித்துகளையும் குடம்குடமான நெய் போன்ற திரவியங்களையும் அடுக்குவதற்கும் நூற்றுக்கணக்காக ரித்விக்குகள் புரோஹிதர்கள் பிராமணர்கள் அமர்ந்து யாகம் செய்யும் பொருட்டும் மதில் எழுப்பி அரண்மனை அருகில் சாஸ்திரபிரகாரம் அழகாகக் கட்டினார்கள். 

அந்த யாகசாலையை நிர்மாணிக்க வந்த ஸ்தபதி ஒருவன் ராஜாங்க விஷயங்களைக் கவனித்து வந்த மந்திரி ஒருவனிடத்தில் யாகசாலை கட்டும் பணிகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். 

“நிஜமாகச் சொல்கிறாயா?”

“ஆமாம். இங்கு இந்த யாகசாலையை அளக்கும் போது நூல் பிடித்த தலைவனும் புராணங்கள் பல தெரிந்தவனும் ஸூதஜாதியில் பிறந்த சில்பி ஒருவன் ஒரு பிராமணன் காரணமாக இந்த யக்ஞம் பாதில் நின்றுவிடும் என்றான்”

இதைக் கேட்டுக்கொண்டே அந்தப் பக்கமாக யாகசாலையின் நிறைவுப்பணிகளை பார்வையிட வந்த ஜனமேஜய ராஜா அங்கு காவலுக்கு நிற்கும் துவாரபாலகனைக் கூப்பிட்டார்.

“என் அனுமதியில்லாமல் இந்த யாகசாலைக்குள் யாரும் பிரவேசிக்கக்கூடாது. ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்” என்று கட்டளையிட்டார்.

*

சர்ப்ப யாகம் நடக்கும் நாள். அரணமனையும் அதனையொட்டி இருந்த யாகம் நடக்கும் இடமும் பரபரப்பாக இருந்தது. குழுக் குழுவாக பிராமணர்களும் ரித்விக்குகளும் வேதவித்துகளும் வந்த வண்ணம் இருந்தனர். அனைவருக்கும் அன்னபானங்கள் வழங்கப்பட்டன. எல்லோரும் திருப்திப்படுத்தப்பட்டனர். 

யாகம் செய்பவர்கள் சாஸ்திரப்படி ஹோமகுண்டத்தைச் சுற்றி அமர்ந்தனர். கட்டுக்கட்டுகளாக சமித்துகள் ஒரு ஓரத்தில் அடுக்கப்பட்டன. குடம் குடமாக நெய்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டன. ஸமித்துகளை எடுத்துக்கொடுப்பதற்கும் ஹோமத் தீயில் கொழுந்துவிட்டு எரிவதற்கு நெய்யை விடுவதற்கும் புரோஹிதர்கள் மற்றும் வேதமறிந்த்வர்களின் சிஷ்யர்கள் உதவியாளர்களாக  வந்து சூழ்ந்துகொண்டார்கள். ஜனமேஜயன் கர்த்தாவாக இருந்தான். 

வேதம் தெரிந்த கியாதி பெற்ற சண்டபார்க்கவர் ஹோதாவாக அமர்ந்தார். அவர் பக்கத்தில் ஜைமினி ரிஷி உத்காதாவாகவும் சார்ங்கரவர் பிரம்மாவாகவும் பிங்களர் அத்வர்யுவாகவும் உட்கார்ந்தார்கள். புத்திரனோடும் சிஷ்யர்களோடும் வியாசர் பிரதானமாக வந்திருந்தார். உத்தாலகர், பிரமதகர், ஸ்வேதகேது, பிங்களர், அஸிதர்,நாரதர், பர்வதர், ஆத்ரேயர், ஜடரர், ஸ்ருதஸ்ரவஸ், மௌத்கல்யர் மற்றும் வேதங்களில் கரைகண்ட பலர் அந்த யாக சபையை அலங்கரித்தனர். 

சங்கல்பத்துடன் சர்ப்பயாகம் துவங்கியது.

வேத மந்திரங்கள் சொல்லச் சொல்ல நாகங்கள் ஒவ்வொன்றாக வந்து யாகத்தீயில் விழ ஆரம்பித்தன. அக்னி ஜ்வாலைகள் நிதானமாக எரிய ஆரம்பித்தது. அநேக பிராமணர்களின் வேத கோஷத்தில் தொடர்ந்து மந்திரங்கள் முழங்கி ஸர்ப்பங்களை அதன் வம்சப் பிரகாரம் அழைத்தார்கள். 

துடித்துக்கொண்டு தீனஸ்வரத்தில் கூப்பிட்டுக்கொண்டு குடும்பமாக சில ஸர்ப்பங்கள் விழுந்தன. சிலவை கோரமாக படமெடுத்து ஆடிக்கொண்டே வந்து சாய்ந்தன. இன்னும் சில சர்ப்பங்கள் ஒன்றையொன்று வாலோடு தலை சுற்றிக்கொண்டு சீறிக்கொண்டே வந்து விழுந்தன. வெளுப்பு நிறத்திலும் கறுப்பில் பளபளவென்றும் நீல வண்ணத்தில் சில பாம்புகளும் சுருட்டிக்கொண்டே வந்து விழுந்தன. அக்னி கொழுந்து விட்டு எரியத்துவங்கினான். 

அந்த யாகத்தீயில் விழுந்த நாகங்களின் ஊன் ஜலமும் கொழுப்பும் ஒரு சிறு வாய்க்கால் போல அடித்துக்கொண்டு ஹோமகுண்டத்திலிருந்து ஓடியது. கிழ ஸர்ப்பங்களும் குட்டிக்குட்டியானவைகளும் பெரும் இரைச்சலுடன் வந்து அக்னியில் விழுந்தன. பசுவின் காதைப் போல அடிசிறுத்தும் நடுவில் பருத்தும் நுனி சிறுத்தவைகளும் விழுந்தன. நேரம் செல்லச் செல்ல ஒரு யோஜனை நீளமுள்ள நாகங்கள் இடைவிடாமல் வேகமாக அக்னியை அடைந்தன.

யாகசாலையிலிருந்து எழுந்த புகைமண்டலமான அந்தப் பகுதி முழுவதையும் இருளாக்கின. இன்னும் தக்ஷகன் வரவில்லை. ஆகையால் இன்னும் உக்கிரமாக மந்திரங்களைச் சொல்லி நாகவம்சத்தையே நாசமாக்கும்படி ஜனமேஜயன் அங்கிருந்த வேதமறிந்த பிராமணர்களைக் கேட்டுக்கொண்டான்.

லக்ஷக் கணக்கில், கோடி கோடியாய் பாம்புகள் அனைத்தும் வந்து ஹோமகுண்டத்தில் குதித்தன. ஹோமத்தீயில் வெந்த நாகங்களில் சில ஈட்டி போலவும், குதிரைகள் போல சிலவையும் யானையின் துதிக்கைகள் போலும் ஸ்வாதீனம் தப்பி விழுந்தன. நாகங்கள் பெருமளவில் விழுந்துவிட்டதானல் பொறுத்துக்கொள்ள முடியாதபடி நாற்றம் அடித்தது.  அந்த இடத்தின் வானவீதியில் ஸர்ப்ப மழைபோல தென்பட்டது. 

இதனிடையில் தக்ஷகன் தன்னைக் காத்துக்கொள்ளும் பொருட்டு தேவராஜனாகிய இந்திரனிடம் சரணடைந்தான். நடந்தவைகளை ஒன்றுவிடாமல் சொல்லி அவனிடம் அடைக்கலம் புகுந்தான். 

“தக்ஷகா! கவலை வேண்டாம். பிரம்மதேவரிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன். பயப்படாமல் இரு” என்று தைரியமூட்டி அவன் உத்தரீயத்தில் மறைத்து வைத்துக்கொண்டான். தக்ஷகன் சுகமாக இருந்தான்.

தன் கண் முன்னால் தனது வம்சம் அழிவதைப் பார்த்த வாஸுகிக்கு மனது கிடந்து அடித்துக்கொண்டது. தனது சகோதரி ஜரத்காருவின் வீட்டிற்கு ஓடினான் வாஸுகி.

“சகோதரியே!  ஜரத்காருவே!  எதற்காக உன்னை ஜரத்காரு ரிஷிக்கு மணம் செய்வித்து ஆஸ்தீகனைப் பெற்றாயோ அதற்கான தருணம் வந்துவிட்டது. இதோ ஜனமேஜயன் சர்ப்பயாகம் செய்து நமது வம்சத்தை அழித்துக்கொண்டிருக்கிறான். நானும் இன்னும் சற்று நேரத்தில் அந்த அக்னியில் உயிரை விடவேண்டியிருக்கும். பிரம்மா உங்களுக்குப் பிறக்கும் மகனால் தர்ம சிந்தனையுள்ள நாகங்களுக்கு சாபவிமோசனம் உண்டு என்று சொல்லியிருக்கிறார். உன் புத்திரனிடம் என்னையும் நம் வம்சத்தினரையும் விடுவிக்கச் சொல்வாய்” என்று வேண்டிக்கொண்டான்.

வீட்டிற்குள் ஜபம் செய்துகொண்டிருந்த ஆஸ்தீகரை அழைத்து வினதையுடனான போட்டியில் முதலில் ஒத்தாசை செய்யாத தனது நாக வம்சத்தை அவைகளின் மாதாவான கத்ருவே சபித்ததையும் அதற்கு விமோசனம் தரத்தான் ஆஸ்தீகன் பிறந்ததையும் எடுத்துச்சொல்லி ஜனமேஜய ராஜாவின் சர்ப்பயாகத்தை நிறுத்துவதற்கு அனுப்பினாள்.

“மாமா! நீ கவலைப்படாதே. உன்னை அந்த சர்ப்பயாகத் தீக்கு இரையாக்க விடமாட்டேன். இனிமேலும் நம் வம்சம் அழியாது” என்று வாஸுகிக்குச் சத்யம் செய்துவிட்டு ஆஸ்தீகர் புறப்பட்டார்.

சர்ப்பயாகம் நடைபெறும் இடத்தை அடைந்தார். நாகங்கள் இன்னமும் தொரந்து மாரிபோல விழுந்துக்கொண்டிருப்பதைக் கண்டு வருத்தமுற்றார். யாகசாலையின் வாசலில் நின்ற துவாரபாலகன் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த யக்ஞத்தைக் குறித்து ஒரு ஸ்தோத்திரம் சொன்னார். உள்ளே விட்டான். அங்கு பிரதானமாக அமர்ந்திருந்த ஜனமேஜயனைப் புகழ்ந்து ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பித்தார். பாலகனாக இருந்தாலும் அனைவரின் கவனமும் அங்கே திரும்பி யாகத்தில் நாகங்கள் விழுவது வெகுவாகக் குறைந்துபோனது. 

[ஜனமேஜயரைப் பற்றி ஆஸ்தீகர் புகழுரை படித்ததை கொசுறாக பின்னர் வெளியிடுகிறேன். அற்புதமான முகஸ்துதி. :-) ]

“இந்தப் பாலகன் வயதில் இளையவனாக இருந்தாலும் வித்வானாக இருக்கிறான். இவனுக்கு வேண்டியதைக் கொடுத்தால் நமக்கும் தக்ஷகன் விரைவில் வந்து விழுவான்.” 

ஹோமகுண்டத்தைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களுக்கு ஒவ்வொரு சர்ப்பத்தையும் அடையாளம் காணும் திறன் இருந்தது. சர்ப்பயாகம் தொடர்ந்துகொண்டிருந்தது. இடைவிடாமல் நாகங்கள் அக்னியில் விழுந்துகொண்டிருந்தன. அவற்றின் கொழுப்புகள் பெரும் ஆறாக ஓட ஆரம்பித்தது.

“தக்ஷகன் வரவில்லையா?” என்று ஜனமேஜயன் யாகம் செய்பவர்களை நோக்கிக் கேட்டார்.

“இல்லை”

“உங்களுடைய பூர்ண சக்தியைப் பயன்படுத்துங்கள். அவன் என் விரோதி. அவனை அழையுங்கள். அவன் சாக வேண்டும். அதில்தான் எனக்கு திருப்தி..” என்று கோபம் தெறிக்கக் கூச்சலிட்டார்.

“ராஜனே! அவன் இந்திரனிடம் தஞ்மடைந்து அவனுடைய கிரஹத்தில் இருக்கிறான் என்று இதோ இங்கேயிருக்கும் லோஹிதாக்ஷர் எனும் ஸூதர் சொல்கிறார்” என்று அவரைக் கை காட்டினார்கள்.

ஜனமேஜயன் லோஹிதாக்ஷரிடம் கண்ணால் என்னவென்று விசாரித்தான்.

“ராஜன்னு! என் வசம் நீ இருப்பதினால் அக்னி உன்னை ஒன்றும் செய்யமாட்டான் என்று அபயம் அளித்திருக்கிறான்” என்றார்.

அரசருக்கு சினம் பொங்கியது.

“தக்ஷகனோடு இந்திரனும் இந்த அக்னியில் விழக்கடவது என்று அக்னிக்கு நெய்யூற்றுங்கள்” என்று ஹோதாவிற்கு கட்டளையிட்டார்.

அப்படியே மந்திரங்கள் சொல்லப்பட்டன. தனக்கும் சேர்த்து நாசம் ஏற்ப்பட்டுவிட்டதே என்று தன்னுடைய விமானத்தில் தக்ஷகனோடு ஹோமத் தீ நோக்கி இழுக்கப்பட்டான். விண்ணில் தேவேந்திரனின் ரதம் தெரிந்ததும் யாகசாலையில் சலசலப்பு ஏற்ப்பட்டது. இந்திரனின் உத்தரீயத்தில் ஒளிந்திருந்த தக்ஷகனுக்கு ஹோமத்தீயின் வெப்பம் பரவியது. 

இந்திரன் அந்த ஹோமத்தின் உக்கிரத்தைப் பார்த்தான். கரும்மேகங்கள் போல ஹோமத்தீ அந்த பிராந்தியம் முழுவதும் வியாபித்திருந்தது. இறந்து சாம்பலாகப் போன சர்ப்பங்களின் மேனிகள் பொசுக்கப்பட்டு அவைகளின்கொழுப்புகள் சகிக்கமுடியாத நாற்றத்துடன் ஆறாக ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருந்தது. பயத்தில் உறைந்துபோனான் இந்திரன்.

உத்தரீயத்தில் மறைத்து வைத்திருந்த தக்ஷகனை உதறிவிட்டு விமானம் ஏறி தப்பித்து ஓடினான். தக்ஷகன் விழுந்துகொண்டிருக்கிறான். ஆஸ்தீகர் ஹோமகுண்டத்தின் அருகே ஜனமேஜயன் பக்கத்தில் நிற்கிறார். அக்னியின் பெரும் நாக்குகளுக்குப் பக்கத்தில் நெருங்கிவிட்டான் தக்ஷகன். இன்னும் சிறிது நேரத்தில் இரையாகப்போகிறான் என்கிற தருணத்தில் ஜனமேஜயர் தக்ஷகனின் சாவு நிச்சயம் என்பதால் ஆஸ்தீகரைப் பார்த்து “உம்முடைய விருப்பமென்ன? என்ன வரம் வேண்டுமானாலும் கேளுங்கள்” என்று கேட்டார்.

ஆஸ்தீகர் உடனே “இந்த யாகத்தை இந்தக் கணமே நிறுத்தவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். தக்ஷகன் தலைகீழாக அக்னிக்கு மேல் அந்தரத்தில் நின்றான். ஜனமேஜயர் செய்வதறியாது திகைத்தார். “வேறு வரம் கேளுங்களேன்” என்று பலமுறை மன்றாடினார். ஆஸ்தீகர் அதற்கு ஒப்பவில்லை.  “பொன்னும் பொருளும் நிறைய தருகிறேன்” என்று ஜனமேஜயர் வற்புத்தியும் கேட்காமல் விடாக்கொண்டனாக நின்றார் ஆஸ்தீகர்.

“தந்தேன். இந்த யாகத்தை இப்போதே நிறுத்துகிறேன்” என்றார் ஜனமேஜயர். 

சர்ப்பயாகம் தடைப்பட்டு அத்தோடு நிறைவடைந்தது. வியர்வையொழுக சுற்றிலும் அமர்ந்திருந்த பிராமணர்கள் ஆச்சரியமாக ஆஸ்தீகரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தக்ஷகன் தப்பித்து அங்கிருந்து விரைந்து ஓடினான்.  வெற்றி பெற்றதின் மகிழ்ச்சி ஆஸ்தீகரின் கண்களில் தெரிந்தது.

#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#சர்ப்பயாகம்
#ஆஸ்தீகபர்வம்
#பகுதி_24

No comments:

Post a Comment