Saturday, December 16, 2017

நாகங்களின் மந்திராலோசனை

”கத்ருவின் சாபத்தினால் பீடிக்கப்பட்ட நாகர்கள் விமோசனம் அடைந்தார்களா? அதிலிருந்து தப்பிக்க ஏதேனும் முயற்சி செய்தார்களா?” என்று கேட்டார் சௌனகர்.

“அந்த நாகக் கூட்டத்தினுள் முதலில் பிறந்த சேஷபகவான் அந்த சாபத்திற்குப் பிறகு கத்ருவை விட்டு விலகினார். தனது சகோதரர்கள் பொறாமைக் குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று வருத்தப்பட்டு காற்றைப் புசித்துக் கடும் தவத்தில் ஈடுபடலானார்."

”அவர் அந்த சாபத்திலிருந்து விடுபட்டாரா?”

காற்றைப் புசித்து கந்தமாதன பர்வதம், பதரிகாஸ்ரமம், கோகர்ணக்ஷேத்திரம், புஷ்கரக்ஷேத்திரம், இமயமலைச் சரிவுகள் என்று இன்னும் பற்பல புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு தனிமையில் சென்று தவம் இயற்றினார். மாமிசம், தோல், நரம்பு என்று எல்லாம் அவர்க்கு உலர்ந்துவிட்டது. ஜடாமுடியும் மரவுரியும் தரித்து இப்படி காடுமலைகளில் திரியும் அவரின் முன் பிரம்மா தோன்றினார்.

“சேஷனே! உன்னுடைய விருப்பமென்ன? ஏன் கடோரமான தவம் செய்கிறாய்?” என்று கேட்டார்.

“என்னுடைய சகோதரர்கள் மிகவும் பொறாமைக் குணம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். என்னுடைய பிராதாவான கருடன் மீதும் அவனது தாய் வினதை மீதும் வெறுப்பைக் கக்குகிறார்கள். எனது தந்தை கஸ்யபரின் வரத்தினால் கருடன் மிகவும் பலமுள்ளவனாக இருக்கிறான். அவனை எப்போதும் துவேஷிக்கிறார்கள். அதனால் தவமிருந்து மீண்டும் ஜென்மம் எடுத்தாலும் அவர்களுடன் சம்பந்தம் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த தேகத்தை விடப்போகிறேன்” என்றான்.

“சேஷனே! உன்னுடைய இந்திரியஜயத்தினாலும் மனோஜயத்தினாலும் எனக்கு பரம திருப்தியாகயிருக்கிறது. மலைகளும் வனங்களும் சமுத்திரங்களும் நிரம்பிய இந்த பூமி ஆடிக்கொண்டிருக்கிறது. ஆகையால் நீ இப்பூமி அசையாமலிருக்கும்படி சிறப்பாகத் தாங்கிக் கொண்டிரு...” என்று வரமளித்தார்.

“நான் எப்படி கீழே செல்வது?”

“இந்தப் பூமி தானாகவே உனக்கு மார்க்கம் உண்டு பண்ண்க்கொடுக்கும்”

சரசரவென்று கீழே சென்று தனது கரங்களினால் பூமாதேவியை நாற்புறமும் பிடித்துக்கொண்டு சிரசில் ஏந்திக்கொண்டார்.

அங்கே நாகர்களுக்கு சேஷன் பூமி தாங்கச் சென்றது தெரிந்து வாஸுகியைப் பட்டாபிஷேகம் செய்து தங்கள் மன்னனாக நியமித்துக்கொண்டார்கள்.

சர்ப்பராஜன் வாஸுகி அவசரமாக அனைவரையும் ஆலோசனைக்காகக் கூட்டினான். முன்னிலை வகித்து அவன் பேச ஆரம்பித்தான்.

“எந்த சாபத்திற்கும் விமோசனமுண்டு. ஆனால் தாயின் சாபத்திற்கு விமோசனமே கிடையாது. பிரம்மதேவர் முன்னால் நாம் சபிக்கப்பட்டோம். அது நிச்சயம் நடந்தேறும் போலிருக்கிறது. இந்தக் கெட்டகாலத்திலிருந்து நாம் தப்பிக்க வேண்டும். நம்மில் புத்திசாலிகள் நிறையபேர் இருக்கிறோம். எல்லோரும் ஆலோசித்து ஜனமேஜயன் நடத்தப்போகும் சர்ப்பயாகத்திலிருந்து தப்பிக்கும் உபாயம் ஒன்றை அடையவேண்டும்”

கூடியிருந்த நாகங்கள் தமக்குள் சலசலவென்று பேசிக்கொண்டன. சட்டென்று நெட்டையாக இருந்த நாகமொன்று எழுந்திருந்து “நாம் அனைவரும் பிராமண சிரேஷ்டர்களாக உருவமெடுத்து யக்ஞம் நடத்தாமலிருக்க அவனிடமே பிக்ஷை கேட்போம்” என்றது.

மூலையில் அமர்ந்திருந்த இன்னொரு நாகம் எழுந்தது.

”நம்மில் சில புத்திசாலிகள் அனனுக்கு அமைச்சர்களாக ஆவோம். அவன் சர்ப்பயாகம் நடத்த நாள் குறிக்கும் போது அதை நடத்தவேண்டாம் என்று பாவங்களைச் சொல்லி புத்திசொல்வோம். அப்படி அந்த யக்ஞம் நடவாமல் செய்துவிடலாம்.”

சிடுசிடுவென்று கோபம் வந்த சர்ப்பம் ஒன்று எழுந்திருந்து “அந்த ராஜகாரியத்தை நடத்தி வைக்க வரும் புரோஹிதனை நம்மில் ஒரு சர்ப்பம் சென்று கடிக்கட்டும். அவன் இறந்துவிட்டால் யக்ஞம் செய்துவைப்பவன் இறந்துவிட்டதனால் நடக்காது. மீறி ரித்விக்குகள் யார் வந்தாலும் கடிப்போம்.”

சாதுவாக தர்மசிந்தனையோடு அமர்ந்திருந்த நாகம் அமைதியாக அதன் இடத்தில் இருந்து “இப்படி பிரம்மஹத்தி செய்வது நல்லதல்ல. தர்மசிந்தனையோடு நமக்கு வந்த பாபத்தைப் போக்கிகொள்ள பரிஹாரம் யோசிக்கவேண்டும். இது நமக்கு நல்லதல்ல...” என்றது.

ஒரு குழுவாக அமர்ந்திருந்த சில நாகர்கள் “நாம் மின்னலிருக்கும் மேகங்களாக மாறி யாகத்தில் எழும் அக்னியை அணைத்துவிடுவோம். யக்ஞம் நின்றுவிடும்” என்று கூறின.

“யக்ஞ பாத்திரங்களை கவர்ந்து கொண்டு வந்துவிட்டால் விக்கினம் ஏற்பட்டுவிட்டது என்று ஜனமேஜயனை யாகத்தை நிறுத்திவிடுவான்” என்று ஒரு நாகம் சிரித்தது.

“அங்கே யக்ஞத்திற்காக தயார் செய்யப்பட்ட போஜனங்களை தீண்டி கெடுத்துவிடுவோம். யாகத்திற்கு விக்னம் வந்து நிறுத்திவிடுவார்கள்” என்று மெலிதாய் இருந்த ஒரு நாகம் பேசிற்று.

“அந்த ராஜா யக்ஞத்திற்கு முன்னால் ஜலக்கிரீடை செய்யும்போது நம்முடைய பாதாளலோகத்திற்கு கொண்டு வந்து கட்டிவிடுவோம். யாகம் நின்றுவிடும்” என்று சொன்ன ஒரு நாகத்தில் கண்கள் ஜொலித்தன.

“இவ்வளவெல்லாம் யோசிக்கத் தேவையேயில்லை. அந்த ராஜாவை கடித்துக் கொன்றுவிட்டால் இந்த அநியாயத்தின் வேரை வெட்டியதுபோலாகும். யாகமும் நின்றுவிடும்” என்று சீறியது ஒரு நாகம்.

வாஸுகிக்கு இவர்களின் யோசனைகள் பிடிக்கவில்லை. மேலும் அவையாவும் தர்மத்துக்குப் புறம்பாக இருப்பதாக உணர்ந்தான். அப்போது ஏலாபத்ரன் என்ற நாகம் கம்பீரமாக எழுந்து நின்று பேச ஆரம்பித்தது

“நாகர்களே! அந்த சர்ப்பயாகம் நடக்காமல் இருக்காது. சாபம் கொடுத்தவுடன் நான் நமது தாயாரின் மடியில் ஏறிக்கொண்டிருந்தேன். அப்போது தேவர்கள் “சர்ப்பங்கள் கொடியவை.. அவை மிகக் கொடியவை” என்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். பிரம்மதேவரும் “இந்த உலகத்தில் அல்பஸ்வபாவங்களும் பாவம் செய்யும் விஷமுள்ள கொடிய சர்ப்பங்கள் நிறைய இருக்கின்றன. இவை குறைந்தால்தான் பிரஜைகளுக்கு நன்மை உண்டாகும். யாயாவர் குலத்தில் ஜரக்காரு எனும் மஹரிஷி தோன்றுவார். அவருக்கும் வாஸுகியின் தங்கையான ஜரத்காருவுக்கும் திருமணம் நடக்கும். அவர்களுக்கு ஆஸ்தீகர் எனும் தபோதனர் பிறப்பார். அவரால் தர்மசிந்தனையுள்ள நாகங்களுக்கு சாபநிவர்த்தி கிடைக்கும்” என்றார்.

இந்த நிகழ்ச்சிகளை ஏலாபத்ரன் விவரித்த பிறகு நாகங்கள் தங்களுக்குள் மனமகிழ்ந்து “சரி..சரி” என்று கொண்டாடின.

[ஜரத்காருவுக்கும் ஜரத்காருவுக்கும் திருமணம் நடந்து ஆஸ்தீகர் பிறந்ததை நாம் சில அத்யாயங்களுக்கு முன்னரே பார்த்தோம்]

**

சௌனகர் “ஸூதபுத்திரரே! சர்ப்பயாகம் தொடங்கிய விபரத்தை எங்களுக்குத் தெரிவியுங்களேன்” என்று வேண்ட அவர் குருவம்சத்தில் பிறந்த பரீக்ஷித்து மஹாராஜவின் கதையைச் சொல்லத் தொடங்கினார்.

#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#ஆஸ்தீகபர்வம்
#பகுதி_21

No comments:

Post a Comment