Saturday, December 16, 2017

காசியபரின் மந்திரசக்தியும் தக்ஷகனின் கபடவேடமும்

ஒற்றைத் தூண் மாளிகையில் தஞ்சம் புகுந்திருந்த பரீக்ஷித்து ஸ்ருங்கி கெடு விதித்திருந்த ஏழாம் நாளில் கொஞ்சம் கலவரமாக இருந்தார்.

மன்னனின் சாபம் பற்றி நகரமெங்கும் பறையடித்து இந்த ஆபத்திலிருந்து காப்பவருக்கு ஏராளமான பொன்னும் பொருட்களும் பரிசு என்று அறிவித்தார்கள். காசியபர் எனும் விஷநிவர்த்தி மந்திரம் தெரிந்த ரிஷி ஒருவர் நிதி நெருக்கடியிலிலிருந்ததால் பரீக்ஷித்தின் பயம் போக்கி பரிசில் பெற அரண்மனையை நோக்கி நடந்துகொண்டிருந்தார். வலது கையில் கமண்டலம் ஆடியது. பார்வை தீர்க்கமாக இருந்தது.

ஸ்ருங்கி சாபத்தின் பிரகாரம் தான் தீண்ட வேண்டிய வேளை வந்துவிட்டதால் தக்ஷகன் அந்த ஒற்றைத் தூண் மாளிகையின் சமீபமாக ஒரு ஆலமரத்தினடியில் கிழ பிராமணர் ரூபம் எடுத்து உள்ளே பிரவேசிக்க சமயம் பார்த்து நின்றுகொண்டிருந்தான். காசியபர் விறுவிறுவென்று மன்னன் இருக்கும் அந்த மாளிகையை நோக்கிச் செல்வதைக் கண்டுகொண்டு அவர் எதிரே சென்று வழியை மறித்துக்கொண்டு அலட்சியமாக நின்றான்.

“இவ்வளவு வேகமாக எங்கே செல்கிறீர்கள்? என்ன காரியமாக இவ்வளவு துடிப்புடன் செயல்படுகிறீர்கள்?” சிரித்துக்கொண்டே கேட்டான் தக்ஷகன்.

“ஓ பிராமணரே! பரீக்ஷித்து மஹாராஜாவை இன்று சர்ப்பராஜனான தக்ஷகன் தீண்டப்போகிறான். அவன் தீண்டினாலும் பரீக்ஷித்து ராஜாவுக்கு மரணம் நேராதபடி எனக்கு மந்திரங்கள் தெரியும். அதைக் கொண்டு அவரை பிழைக்கவைத்து பரிசு பெற சென்றுகொண்டிருக்கிறேன். வழியை விடு.” என்று தக்ஷகனின் கைகளை நகர்த்திவிட்டு அடுத்த அடி எடுத்துவைத்தார் காசியபர்.

சட்டென்று தனது கிழ பிராமண ரூபம் களைத்து “காசியபரே! நான் தான் தக்ஷகன். என்னுடைய விஷத்தின் வீர்யம் உமக்குத் தெரியாது. அங்கே சென்று மன்னனைக் காக்க முடியாவிட்டல் உன்னை கொன்றுவிடுவார்கள். நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள்” என்று எச்சரிக்கை விடுத்தான்.

காசியபர் புன்னகைத்தார்.

“தக்ஷகா! எத்தகைய விஷத்தையும் முறிக்கும் ஆற்றலும் மீண்டும் அவற்றை உயிர்ப்பிக்கும் தன்மையும் கொண்ட மந்திரங்கள் என் கைவசம் இருக்கிறது. எனக்கும் ஜெயமே ஏற்படும். நீ அதுபற்றிக் கவலைப்பட வேண்டாம். எனது வழியை மறிக்காமல் நகர்ந்துகொள்” என்று முன்னேறினார் காசியபர்.

“காசியபா! இப்போது என்னுடைய விஷத்தை இந்த ஓங்கி உயர்ந்த ஆலமரத்தில் செலுத்துகிறேன். உன்னால் முடிந்தால் இந்த ஆலமரத்தை உயிர்ப்பித்துக் காட்டு. உன் மந்திரசக்தியை நான் நம்புவேன்” என்று சத்தமாக சொல்லிவிட்டு பாம்பு உரு எடுத்துக்கொண்ட தக்ஷகன் ஆலமரத்தின் அடிபாகத்தில் ஓங்கிக் கொத்தினான்.

அந்த விஷத்தின் வீர்யம் பரபரவென்று அந்த மரத்தில் ஏறி மொத்த மரத்தையும் கொளுத்தி பஸ்பமாக்கியது. சிறிது நேரத்தில் அந்தப் பெரிய மரம் சாம்பல் குவியலாக காசியபரின் கண் முன்னே கிடந்தது.

காசியபர் அதைக் கண்டு அசரவில்லை. தக்ஷகனை கூர்ந்து நோக்கினார். பின்னர் அந்த சாம்பல் குவியலை நோக்கி நடந்தார். தன்னுடைய கமண்டலத்திலிருந்து சிறிது தண்ணிரைக் கையில் ஏந்தினார். சில மந்திரங்களை ஜெபித்து அந்த நீரை சாம்பல் குவியில் மேல் தெளித்தார். அப்போது அங்கே ஒரு அதிசயம் நடந்தது.

அந்த சாம்பல் குவியல் உடனே வேர்விட்டு மரமாகி துளிர்த்துப் பல கிளைகளாகப் பிரிந்து அவற்றில் இலைகள் ஒவ்வொன்றாக சடசடவென்று முளைத்து முன்னைப் போலவே எழுந்து நின்றது.

தக்ஷகனுக்கு ஆச்சரியம்.

வாய் பேசமுடியாமல் நின்றான்.

“காசியபரே! எதற்காக ராஜாவைக் காப்பாற்ற விரைகிறீர்கள்? அவனுக்கு சர்ப்பம் தீண்டி இறந்துவிடுவான் என்கிற சாபம் இருக்கிறது”

ஞானம் நிரம்பிய அவர் பாண்டவ வம்சத்து ராஜனாகிய பரீக்ஷித்துக்கு ஆயுள் குறைவு என்று தெரிந்துகொண்டார்.

“தக்ஷகா! நான் தனம் பெறுவதற்காக அங்கு செல்கிறேன்.” என்று கூறி நிறுத்திக்கொண்டார்.

“காசியபரே! உங்களுக்கு வேண்டிய அளவு தனம் நான் தருகிறேன். நீர் வந்தவழியே திரும்பிச் செல்லும்” என்று கூறி அவர் கேட்டதையும் விட அதிகமாக பொன்னும் பொருளும் கொடுத்து திருப்பி அனுப்பிவிட்டான். நேரம் கடந்துகொண்டிருந்தது.

காசியபரால் உயிர்ப்பிக்கப்பட்ட அந்த ஆலமரத்தை ஒருமுறை அண்ணாந்து பார்த்துவிட்டு பெருமூச்செரிய ஹஸ்தினாபுரம் நோக்கி விரைந்தான்.

தக்ஷகனைத் தொடர்ந்து அவனது நாகக் குடும்பத்து வீரர்கள் பின் தொடர்ந்தார்கள்.

ஒற்றைத் தூண் மாளிகை கண்ணில் படும்படி புதர் மறைவில் நின்றுகொண்டார்கள். தக்ஷகன் திட்டம் தீட்டினான்.

“நாகஸ்ரேஷ்டர்களே! நான் பரீக்ஷித்தை தீண்டும் நேரம் நெருங்கிவிட்டது. பலத்த காவல் போட்டிருக்கிறார்கள். நான் இப்படியே சென்றால் அவனைக் கடிக்கமுடியாது. ஆகையால் நீங்கள் அனைவரும் ரிஷி வேஷம் பூண்டு பழங்கள், தர்ப்பை மற்றும் ஜலம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு இந்த மாளிகையினுள் நுழையுங்கள். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கட்டளையிட்டான்.

பத்துப் பதினைந்து நாகங்கள் ரிஷிவேடத்தில் மாளிகையினுள் பிரவேசித்தார்கள். பரீக்ஷித் மந்திரிகளுடன் அந்தப் பல அடுக்கு மாளிகையின் மேல் தளத்தில் அமர்ந்திருந்தான். அங்கு வந்த ரிஷிகளிடமிருந்து எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டு அவர்களை அனுப்பினான். சூரியன் மேற்கே மறைவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தான். பரீக்ஷித்துக்கு மகிழ்ச்சி.

“அமைச்சர்களே! இதோ சூரியன் அஸ்தமிக்கப்போகிறான். சாபம் பொய்க்கப்போகிறது. இனிமேல் எந்த விஷமும் என்னை ஒன்றும் செய்யமுடியாது” என்று இடியிடியெனச் சிரித்தான்.

மந்திரிகள் ஒன்றும் சொல்லாமல் மன்னனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“சற்றுமுன் இங்கே வந்த ரிஷிஸ்ரேஷ்டர்கள் பழங்கள் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள். நாமெல்லாம் இந்த மாம்பழங்களை சாப்பிடுவோம்” என்று அந்த பெரிய தாம்பாளத்தில் அடுக்கியிருந்த பழங்களை மந்திரிகள் ஆளுக்கொன்றாகக் கொடுத்துவிட்டு தாமும் உண்பதற்கு ஒரு பழத்தை எடுத்துக்கொண்டார்.

மன்னன் கையில் எடுத்திருந்த பழத்தில்தான் தக்ஷகன் ஒரு புழு வடிவில் ஒளிந்திருந்தான். சாப்பிடுவதற்கு வாயில் வைத்துக் கடிப்பதற்கு முன்னர் கறுத்தக் கண்களுடன் சிவந்த நிறமுள்ள ஒரு புழு நெளிவதைப் பார்த்தான்.

“அந்திசாய இன்னும் சில கணங்களே உள்ளன. சாபம் பொய்த்துப்போக வேண்டாம். பாவம். ஆகையால் இதோ இந்தப் புழுவே தக்ஷகன் என்று என்னைக் கடிக்கட்டும்” என்று அந்தப் புழுவை கையால் நோண்டி தன் கழுத்தினில் விட்டுக்கொண்டான்.

அப்போது யாருமே எதிர்பாராத வகையில் சரேலென்று அந்தப் புழு பெரும் ரூபமெடுத்து ஜொலிக்கும் கண்களையும் மழமழவென்று ஒளிரும் பெரும் தேகத்துடனும் தக்ஷகனானது. பரீக்ஷித்துவின் கழுத்தையும் மேனி முழுவதையும் சுற்றி வளைத்து இறுக்கியது. மந்திரிகள் இதைப் பார்த்தவுடன் அலறியடித்துக்கொண்டு அந்த மாளிகையை விட்டு ஓடினர். பின்னர் படாரென்று காதைப் பிளக்கும் சப்தத்துடன் அவனை தலையில் ஒரு போடாக தக்ஷகன் கொத்தியது.

விஷத்தின் வீரியம் தாங்காமல் அந்த மாளிகையை தீப்பற்றிக்கொண்டது. ஊரே பார்க்கும்படி திகுதிகுவென்று எரிய ஆரம்பித்தது. அந்த மாளிகையிலிருந்து எல்லோரும் தப்பித்தபிறகு தக்ஷகனின் விஷத்தினால் கொழுந்துவிட்டு எரிந்து சாம்பலாகப் போன அந்த மாளிகை மடமடவென அடியோடு இடிந்து விழுந்ததை ஹஸ்தினாபுரத்து மக்கள் திகிலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அடுத்து....

#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#ஆஸ்தீகபர்வம்
#பகுதி_23

No comments:

Post a Comment