Saturday, December 16, 2017

பெண்களுக்குத் தேவதை கணவன்

"நீர் சொல்வது தர்ம மார்க்கமாக இருந்தால் என்னை நானே ஸ்வதந்திரமாக கொடுத்துக்கொள்ளலாம் என்றிருந்தால்... நீர் ஒரு சத்தியம் செய்து தர வேண்டும்”

இன்பத்தின் வாயில் வரைச் சென்றவனுக்கு படாரென்று அதன் கதவு அறைந்து சாத்தியது போலிருந்தது துஷ்யந்தனுக்கு.

தீர்க்கமான பார்வையோடு சகுந்தலை “எனக்குப் பிறக்கிற புத்திரன் உமக்குப் பின் ராஜ்ஜியம் ஆள வேண்டும். இது நடக்குமென்றால் உம்மை விவாஹம் செய்துகொள்கிறேன்” என்றாள்.

துஷ்யந்தன் சிரித்தான்.

“இன்னும் என்ன என்ன விரும்புகிறாயோ அவ்வளவையும் கேள்” காதலும் காமமும் மேலிடக் கேட்டான்.

“ராஜ ஸ்ரேஷ்டரே! உலகத்தவர்கள் பழிக்காதவாறு சாஸ்திரபிரகாரம் என்னை விவாஹம் செய்யுங்கள். விவாஹம் எப்படி யோக்கியமாக இருக்குமோ அதன்படி சந்ததியும் யோக்கியமாக இருக்கும். ஹோமம் பண்ணுவதற்கு நெய், அன்னம், பொரிகள், மணல், பிராமணர்கள் மற்றும் பிற கருவிகளும் இருக்கிறது. ஆகையால் சாஸ்த்ரீய விவாஹம் புரியுங்கள்” என்றாள் சகுந்தலை.

“அப்படியே ஆகட்டும்! உன்னை என் நகரத்திற்கு அழைத்துப் போவேன். உனக்கு சம்மதமா?” என்று அவளைத் தோளில் இடித்துக் கேட்டான். சகுந்தலை நாணமெனும் போர்வையை இழுத்து தலையோடு கால் போர்த்திக்கொண்டாள்.

புரோஹிதர்களில் சிலர் அந்த ஆஸ்ரமத்தின் வாயில் வழியே சென்றுகொண்டிருந்தார்கள். துஷ்யந்தன் பரபரப்பாகச் சென்று அவர்களை அழைத்துவந்தான். 

“ராஜகுமாரி சகுந்தலை சொல்வதைக் கேளுங்கள். சிறந்த கீர்த்தியுடன் திகழப்போகும் எனது புத்திரன் சம்ஸ்காரமில்லாமல் ஆகக்கூடாது. சாஸ்திர விதிகளின்படி இந்த விவாஹத்தை நடத்துங்கள்” என்று புரோகிதர்களிடம் வேண்டிக்கொண்டான்.

விவாஹம் அப்போதே நடந்தேறியது. சகுந்தலையின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. துஷ்யந்தன் பல ராஜ்ஜியங்களை வென்ற திருப்தி அடைந்தான். பழம் கொண்டு வரச் சென்ற பிதா கண்ணுவர் இன்னமும் ஆஸ்ரமம் திரும்பவில்லை. துஷ்யந்தனும் சகுந்தலையும் கூடி இன்பம் துய்த்தார்கள். சந்தோஷத்தின் பிடியில் இருந்த துஷ்யந்தன் அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அவளிடம் தான் ராஜ்ஜியம் திரும்பவேண்டும் என்று கூறினான்.

அல்ப ஆயுசுடன் முடிந்த தனது சந்தோஷத்தை எண்ணிய சகுந்தலையின் கண்களில் நீர்க் கட்டியது. தொட்டால் கரைந்துவிடும் நிலையில் இருந்தவளை துஷ்யந்தன் தேற்றினான்.

“கலங்காதே சகுந்தலை. மூன்று வேதங்களும் அறிந்த பெரியோர்களும் ஆயிரமாயிரம் ராஜாங்க சேவகர்களும் எண்ணற்ற பல்லக்குகளோடும் என் பந்துக்கள் வருவார்கள். துந்துபி வாத்திய முழக்கத்தோடு அவர்கள் என்னுடன் இவ்வனத்திற்குள் வந்து உன்னை முறையாக நகரத்திற்கு அழைத்து வருவார்கள். இது சத்தியம் பெண்ணே!” என்று கையோடு கை சேர்த்துக்கொண்டு தன் கன்னத்தில் வைத்துக்கொண்டான். சகுந்தலைக்கு ஆறுதலாக இருந்தது.

ஆனால், கண்களில் இருந்து தாரை தாரையாய் நீர் வழிந்துகொண்டிருந்தது. துஷ்யந்தன் அவளைத் தழுவிக்கொண்டான். அவனை நமஸ்கரித்து எழுந்தவளை மீண்டும் அணைத்துக்கொண்டான். அவள் அழுகை மட்டும் நிற்கவே இல்லை.

“சகுந்தலை! நான் தர்மம் தவறமாட்டேன். சத்தியமாக உன்னை நகரத்திற்கு அழைத்துச்செல்வேன். சென்று வருகிறேன்”

அவளை விட்டுப் பிரிந்தான். குதிரை ஏறி கண்ணிமைகும் நேரத்தில் அவள் பார்வையிலிருந்து மறைந்தான். பயணத்தின் போது துஷ்யந்தனுக்கு கண்ணுவர் என்ன சொல்வாரோ? என்ற அச்சம் இருந்தது. அவரைப் பார்த்துவிட்டு வந்திருக்க வேண்டுமோ? என்ற கேள்வி அவனைக் குடைந்து கொண்டிருக்க நகரம் வந்து சேர்ந்தான்.

சிறிது நேரத்தில் கண்ணுவர் ஆஸ்ரமம் வந்தடைந்தார். ஓடிச்சென்று அவர் கையிலிருந்த பழங்களை வாங்கிக்கொண்டாள். பின்னர் அவரை ஆசனத்தில் அமர்த்தி பாதங்களை அலம்பினாள். கண்ணுவர் கனி கொண்டு வரப் போவதற்கு முன்பிருந்த சகுந்தலை இல்லை அவள். அவளிடம் இனம் புரியாத ஒரு நாணம் வந்து ஒட்டிக்கொண்டது. அவரது எதிரில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. அவரது கண்ணில் படாமல் ஆஸ்ரமத்தின் மூலையில் சென்று ஒளிந்துகொண்டாள். கண்ணுவர் அவளது இந்த நடத்தையைக் கண்டுகொண்டார்.

”சகுந்தலை! என்னம்மா ஆயிற்று? வெட்கபடுகிறாயே? ஏன் என்னைக் கண்டு ஒளிகிறாய்? என்ன செய்தாய்?” என்று சமாதானமாக விஜாரித்தார்.

வாயைத் திறக்காமல் காய் பழங்களைக் கொண்டு வந்து அவருக்கு பரிமாறினாள். அவர் புசித்த பிறகு அவரது பாதங்களை அலம்பி பிடித்து விட்டுக்கொண்டிருந்தவள் பேச ஆரம்பித்தாள்.

“பிதாவே! இலிலன் புத்திரன் துஷ்யந்தன் இங்கே வந்தார். அதிர்ஷ்டவசமாக அந்த ராஜாவை நான் எனக்குப் பதியாக வரித்துவிட்டேன். ஜெகம் முழுவதையும் ஜெயித்து மிக்க புகழுள்ளவர். அவருக்கு அனுக்ரஹம் செய்யுங்கள். இதற்கு மேல் நடந்ததை உம்முடைய திவ்ய ஞானத்தினால் நீரே அறிவீர்” 

கண்கள் நிலம் பார்க்க அவர் காலடியில் அமர்ந்திருந்தாள். கண்ணுவர் கண்களை மூடி நிஷ்டையில் ஆழ்ந்தார். சில கணங்களுக்குப் பிறகு கண் திறந்தார். புன்னகையுடன் சகுந்தலையின் தலையை வருடினார்.

“ஞானக்கண்ணினால் அனைத்தையும் அறிந்துகொண்டேன். ராஜ வம்சத்தில் பிறந்த நீ உனது தர்மப்படிதான் திருமணம் செய்துகொண்டிருக்கிறாய். விருப்பமூள்ள பெண்ணுக்கும் விருப்பமுள்ள ஆணுக்கும் நடக்கும் திருமணம் சிலாக்கியம்தான். கடல் சூழும் உலகங்களை ஆளும் புத்திரன் உனக்குப் பிறக்கப் போகிறான்.”

இம்முறை சகுந்தலை ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள். கண்ணுவரின் காலடியில் நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெற்றாள். 

“என்னை ஆசீர்வதியுங்கள்”

“தர்மவானான துஷ்யந்தனின் மனைவியான நீ பதிவ்ரதைகளின் நடையை அனுசரிப்பாய்”

**

நாட்கள் நகர்ந்தன. துஷ்யந்தனின் நினைவாகவே இருந்தாள் சகுந்தலை. சாப்பிடப் பிடிக்கவில்லை. ஸ்நானத்திற்கு நதியிலிறங்க மறுத்தாள். சதுரங்க சேனையோடு தனது பர்த்தா அனுப்பும் பிராமணர்கள் வருவார்களா என்று கண்ணிரண்டும் பூத்துப் போகுமளவிற்கு எதையோ பறிகொடுத்தது போல தனியாக அமர்ந்திருப்பாள். சோகம் அவளை வாட்டியது. ஆனால் வயிற்றில் துஷ்யந்தனால் உருவாவன கர்ப்பம் வளர்ந்தது. 

நாட்கள் கடந்தன...

பக்ஷங்கள் நகர்ந்தன...

மாதங்கள் ஓடியது....

வசந்தகாலம் மாரிக்காலம் வேனற்காலம் என்று ருதுக்கள் கடந்தன...

உத்தராயனம் தக்ஷிணாயனம் என்று அயனங்கள் மாறி மாறி வந்து போனது...

வருஷங்கள் கடந்தது...

இப்படியாக மூன்று வருஷங்கள் நிரம்பின. 

கண்ணுவர் மனம் வருந்தினார். ரித்விக்குளின் பத்னிகளும் அநேக ரிஷிகளின் பத்னிகளும் நியாயம் சொல்ல ஆரம்பித்தனர். மரத்தடியில் சகுந்தலையைச் சுற்றி அமர்ந்தார்கள்.

"அன்புள்ள சகுந்தலா! உலக நடைமுறைகளைக் கேள் குழந்தாய்! தேவர்களுக்குத் தேவதை விஷ்ணு; பிராமணர்களுக்குத் தேவதை அக்னியும் வேதமும்; பெண்களுக்குத் தேவதை கணவன்; ஜனங்களுக்குத் தேவதை பிராமணன். பிதாவின் சொல்லை கௌரவிக்க வேண்டும் ஆகையால் பிரஸவ காலத்தில் பிரஸவித்து விடுவாய் என்று சொல்லியிருக்கிறார். பிதா வாக்கை நீ மெய்பிக்க வேணும். அப்போதுதான் உனக்குப் புண்ணியம் உண்டாகும்”

ஸ்த்ரீகள் கூட்டம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தது. சகுந்தலை மனதுக்குள் நன்று நன்று நன்று என்று நினைத்தாள்.

அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு சரிந்தவளை ரிஷி பத்னிகள் சூழ்ந்துகொண்டார்கள். சிறிது நேரத்தில் அழகும் கம்பீரமும் கொண்ட துஷ்யந்தனின் புத்திரனைப் பெற்றெடுத்தாள். மூன்று வருஷங்கள் கர்ப்ப வாசம் இருந்த பிள்ளைக்கு ஆகாயத்திலிருந்து பூமாரி பொழிந்தது. தேவதுந்துபிகள் முழங்கின. அப்ஸரஸுகள் இறங்கி வந்து நடனம் ஆடினார்கள். அந்த வனமே விழாக்கோலம் பூண்டது. விண்ணிலிருந்து இந்திரன் இறங்கிவந்தான்.

”சகுந்தலையே! உன் புத்திரன் இப்பூவுலக சக்ரவர்த்தியாகப் போகிறான். நூறு அசுவமேதயாகம் செய்வான். ராஜஸூயம் போன்ற யாகங்கள் ஆயிரமாயிரம் செய்வான்.”

அனைவரும் சகுந்தலையை பூஜித்தனர். கண்ணுவ மஹரிஷி பிராமணர்களையும் ரிஷிகளையும் அழைத்து அந்தக் குழந்தைக்கு ஜாதகர்மம் செய்தார். க்ஷத்ரிய முறைப்படி அனைத்து ஸம்ஸ்காரங்களையும் செய்தார்கள். நாலு முழ உயரத்தில் மிகுந்த பலமுள்ளவனாக அதிசீக்கிரம் வளர்ந்தான். 

அங்கே நகரத்தில் துஷ்யந்தனுக்கு சகுந்தலை நியாபகம் இருந்தும் கண்ணுவ மஹரிஷினிடத்துள்ள பயத்தினால் அவளை நகரத்திற்கு அழைக்கவில்லை. நெடுங்காலம் போன பிறகு அவன் சகுந்தலையை மறந்துபோனான்.

அந்தச் சிறுவன் ஆஸ்ரமத்திற்கு அருகிலிருக்கும் கொடிய மிருகங்களான புலி சிம்மம் போன்றவை உபத்திரவம் செய்யும் போது காலால் உதைத்து பந்தாடினான். காட்டெருதுகளை மரங்களில் கட்டினான். எருமைகளின் மீது கால் வைத்து மரமேறி அதன் கிளைகளில் விளையாடிக்கொண்டே ஓடினான். அஸுரனொருவன் அமர்க்களம் செய்தபோது அவனை இறுகக் கட்டித் தழுவி மூச்சடைக்க வைத்தான். கைகளின் இறுக்கம் தாங்காமல் அவன் கதறினான். பின்னர் வாய் மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறி இறந்துபோனான்.

”இவன் எல்லாவற்றையு அடக்குவதினால் ஸர்வதமனன் என்று அழைக்கப்படுவான்” என்று கண்ணுவருடன் வசிக்கும் அனைத்து ரிஷிகளும் சேர்ந்து போற்றினார்கள். அவன் பராக்கிரமசாலியாக இருந்தான். ஆஸ்ரமத்தினர் அனைவரையும் பெரும் இடர்களிலிருந்து பாதுகாத்தான். 

ஆனால் தன்னை இன்னும் மன்னன் அழைக்காததால் தேகம் வெளிறிப்போய் கிடந்தாள் சகுந்தலை. விட்டேத்தியாக எங்கேயோ பார்த்துக்கொண்டு யாரிடமும் பேசாமல் வெகுநேரம் பாறைமேல் அமர்ந்திருப்பாள். பின்னர் ஆஸ்ரமம் திரும்புவாள். முன்னால் மயிர்கள் விழ அழுக்கான ஆடையில் அவளைப் பார்ப்பதற்கே கண்ணுவரின் மனம் அழுதது. அப்போது அந்த குமாரனுக்கு பன்னிரெண்டு வயதானது. அஸ்திர வித்தைகளிலும் வேதத்திலும் கரைகண்டவனாகத் திகழ்ந்தான்.

கண்ணுவர் சகுந்தலையை பக்கத்தில் அழைத்தார்.

“பெண்ணே! பதிவிரதையான பெண்கள் மனத்தாலும் வாக்காலும் செய்கையினாலும் தனது பதிக்கு சிஷ்ருஷை செய்யவது சிறப்பு. உன் புத்திரனை அழைத்துக்கொண்டு நகரம் செல். யுவராஜாவாக இருக்கின்ற இவனைக் கண்டு சந்தோஷமடைவாய். உனக்கு ஒன்று தெரியுமா?” என்று சகுந்தலையின் கவனம் பெற பேசுவதை நிறுத்தினார் கண்ணுவர்.

சகுந்தலை நிமிர்ந்து பார்த்தாள்.

“தேவதைகளிடத்தும் பெரியோர்களிடத்தும் அரசர்களிடத்தும் கணவனிடத்தும் நாமாகவே செல்வது மிகவும் நன்மை பயக்கும் விஷயம்.”

அந்தச் சிறுவன் சகுந்தலையைத் தாண்டி ஒரு மரத்தினடியில் இந்த சம்பாஷனைகளைக் கேட்டுக்கோண்டு நின்றிருந்தான். கண்ணுவர் அவனை இங்கே வா என்று சைகையால் அழைத்தார். ஓடி வந்தான். அவனை ஆலிங்கனம் செய்துகொண்டார். தலையை வருடி உச்சி மோந்தார்.

“துஷ்யந்தன் என்கிற சந்திரவம்சத்து ராஜாவின் பட்டமஹஷி உன் தாயார். நீ சென்று அந்த ராஜனை வணங்கு. அரசர்க்கரசன் அவன். அவனுக்கு உட்பட்டிரு. பட்டான்வழியாக வந்த ராஜ்ஜியத்தை நீயே அடைவாய்! வாழ்க!!” என்று கையை உயர்த்தி ஆசீர்வாதம் செய்தார். அவரை நமஸ்கரித்து எழுந்தவன்...

“நான் உங்களுக்கே பணிவிடை செய்துகொண்டு இங்கேயே இருக்கிறேன். இனிமேல் கொடிய விலங்குகளுக்குத் தொந்தரவு செய்ய மாட்டேன். உங்கள் சொல்படி வேதாத்தியயனம் செய்வேன். கணவனிடம் ப்ரேமையுள்ள என் அம்மா மட்டும் அவரிடம் செல்லட்டும். நான் உங்களைப் பிரியேன்!! “ என்று அவரின் காலைக் கட்டிக்கொண்டான். 

இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த சகுந்தலை உடைந்துபோய் குலுங்கிக் குலுங்கி அழுதாள். 

“பூருவம்சப் புத்திரனே!  நீ நித்தியம் மிருகங்களை வதைத்தாய். இதனால் எல்லாம் தெரிந்த ரிஷிக்கு கோபத்தை மூட்டினாய். அதனால் நம்மை வனம் பிரிய சொல்கிறார். நான் துஷ்யந்த ராஜாவிடம் செல்ல மாட்டேன். உன்னிடமும் இல்லை. ஆத்ம ஞானியான மஹரிஷியின் காலடியிலேயே கிடப்பேன்” என்று கண்ணுவரின் காலைக் கட்டிக்கொண்டு கண்னீர் விட்டாள். சுற்றிலும் இதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ரிஷிக்குடும்பங்களும் மிகவும் சோகமாக அமைதி காத்தார்கள். 

“அம்மா சகுந்தலை! நான் உனக்கு நன்மையே செய்கிறேன். விவாதம் செய்யாமல் நீ ராஜாவுக்கு  பணிவிடை செய்!” என்று சொல்லிவிட்டு அவளுடைய புத்திரனை அழைத்துப் பேச ஆரம்பித்தார். 

“கண்ணா!  இவள் மனம் முழுக்க கணவனை நிரப்பி வைத்து அன்பு செலுத்திக்கொண்டிருக்கிறாள். வாக்கினால் போக மாட்டேன் என்கிறாள். இவளை அழைத்துக்கொண்டு செல். ரிஷிகளும் உங்கள் கூட வருவார்கள்” என்றார் கண்ணுவர்.

சிஷ்யர்கள் குருவின் கட்டளைக்காக அவரைப் பார்த்தபடியே நின்றிருந்தார்கள்.

“நீங்கள் இந்தக் குமாரனையும் இவளையும் கொண்டு போய் பர்த்தாவிடம் விடுங்கள். பெண்கள் தம்மைச் சேர்ந்த உறவினர்களிடம் நெடுங்காலம் வசிப்பது தகாது. அது அப்பெண்ணின் புகழையும் ஒழுக்கத்தையும் தர்மத்தையும் கெடுக்கும். அதில் எனக்கு இஷ்டமில்லை. சீக்கிரம் இவளை அவள் கணவனிடத்தில் கொண்டு போய் சேருங்கள்” என்றார்.

அந்த புத்திரனை அருகில் அழைத்தார்.  சகுந்தலை அவனை அழைத்துக்கொண்டு பிதாவுக்கு நமஸ்காரம் செய்து பின்னர் எழுந்து பிரதக்ஷிணம் செய்தாள். கண்ணீர் சொரிந்தபடி கைகூப்பி நின்றாள். அந்தச் சிறுவன்...

“அம்மா நீ ஏன் தயங்கித் தயங்கி தாமதம் செய்கிறாய். வா.. ராஜாவின் வீட்டுக்குப் போவோம்” என்று அவளின் விரலைப் பிடித்து இழுத்தான். 

முனி சிரேஷ்டரான கண்ணுவர் கண்ணில் கூட நீர் எட்டிப் பார்த்தது. சகுந்தலையின் கூட போகத் தயாராக இருந்த முனிவர்கள், ரிஷிகள், பிராமணர்கள் அவர்களின் பத்னிகள் என்று அனைவரிடமும் 

“இவள் வனத்தில் பிறந்து வளர்ந்தவள். ஒன்றுமறியாதவள். இவளை அழைத்துக்கொண்டு பிரதிஷ்டானம் என்னும் கங்கை யமுனை சங்கமத்தில் இருக்கும் நகரத்திற்குச் செல்லுங்கள். இங்கிருந்து இரண்டு யோஜனை (1 யோஜனை = 8 மைல்) தூரத்தில் இருக்கும் அங்கே சென்று அந்த கங்கை யமுனை சங்கமத்தில் ஸ்நானம் செய்து அக்னிஹோத்ரம் செய்துவிட்டு வாருங்கள்.” என்றார்.

அந்த ரிஷிகளெல்லாரும் சகுந்தலையையும் அவள் புத்திரனையும் அழைத்துக்கொண்டு பிரதிஷ்டானபுரம் நோக்கிப் புறப்பட்டார்கள். வனங்கள் கடந்தார்கள். நதிக்கரையோரம் சென்றார்கள். மலையருவிகளை ரசித்தார்கள். குன்றுகளைத் தாண்டி மத்தியான வேளையில் பிரதிஷ்டான நகரம் சேர்ந்தார்கள். 

மாளிகைகளும் அரண்மனைகளும் நிரம்பிய இரண்டாவது இந்திரலோகம் போல இருக்கும் பிரதிஷ்டான நகரில் திரவியக் குவியல்கள் நிரம்பியிருக்கும் இந்திரனுடைய க்ருஹத்துக்கு ஒப்பாக இருக்கும் அரண்மனை அந்த நகரத்தின் நடுவிலிருந்தது. 

அரண்மனை உள்ளே எப்படிச் செல்வது என்ற யோசனையில் அனைவரும் அரண்மனைக்கு நேரெதிரே இருக்கும் ஒரு நந்தவனத்தின் மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்கள்.

#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#துஷ்யந்தன்
#சகுந்தலை
#ஸம்பவபர்வம்
#பகுதி_37

No comments:

Post a Comment