பரீக்ஷித்து தனது பாட்டானரான அர்ஜுனனின் பிதாவாகிய பாண்டுவைப் போல வேட்டைகளில் பிரியமுள்ள குருவம்சத்து ராஜா. புலி எருமை காட்டுப்பன்றி என்று பற்பல ஆரண்ய விலங்குகளை வேட்டையாடி குதூகலமாகக் காட்டுக்குள் வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது ஒரு மானை குறிபார்த்து அம்பெய்தார். அந்த பாணம் மானைத் தைத்ததும் அது விசை கொடுத்தது போல ஓட ஆரம்பித்தது. வில்லுங்கையுமாக பரீக்ஷித்து அதைத் துரத்திக்கொண்டு ஓடினார்.
அது மாயமாக மறைந்தது போல இருக்க புரவியில் ஏறி துரத்தினார். ஊஹும். எங்கு தேடியும் அந்த மானைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இங்குமங்கும் வனாந்திரத்தில் அலைந்ததில் தொண்டை வறண்டு போய் அவருக்குத் தாகமிழுத்தது. தூரத்தில் ஒரு பர்ணசாலை தென்பட்டது. அங்கு வசிக்கும் ரிஷிகள் எவரும் தமக்கு உதவக்கூடும் என்றெண்ணி அங்கே விரைந்தார்.
வாசலில் மாட்டுக்கொட்டில். நிறைய பசுமாடுகள் கன்றுக்குட்டிகளுடன் வாயை அசைபோட்டு நின்றுகொண்டிருந்தன. சில கன்றுகள் தனது தாய்ப்பசுவின் மடியை முட்டிக்குடித்த பால்நுரை ததும்பும் வாயோடு இருந்தன. அந்த நுரையைப் புசித்துக்கொண்டு ஒரு ரிஷி அந்த மாட்டுக்கொட்டிலின் அருகில் தவமியற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். மன்னனைக் கண்டதும் அவர் மரியாதை செய்வார் என்று பரீக்ஷித் எதிர்பார்த்தார். அவரிடம் அப்படியொன்றும் தெரியவில்லை.
“ஓ! பிராமணரே!! நான் அபிமன்யுவின் புத்திரன் பரீக்ஷித் மஹாராஜா”
இதற்கு ஒரு சலனமும் இல்லாமல் அந்த ரிஷி அப்படியே வாயில் பால்நுரை வழிய அமர்ந்திருந்தார். பரீக்ஷித்துக்கு கோபம் வந்தது.
“ஓய்! என்னால் அடிக்கப்பட்ட மானொன்று இந்தப் பக்கம் தப்பியோடி வந்தது. நீர் பார்த்தீரா?”
அந்த ரிஷி அன்று மௌனவிரதத்தில் இருந்தார். ராஜா கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. ராஜாவுக்கு அவமானமாகப் போய்விட்டது. இந்த தேசத்தின் ராஜா கேட்டும் இவர் பதில் சொல்லவில்லையே என்று சினம் தலைக்கேறி பக்கத்தில் பாம்பு ஒன்று இறந்துகிடந்ததைக் கண்டான். உடனே வில்லின் நுனியால் அந்த செத்த பாம்பைத் தூக்கி சமீகர் என்னும் அந்த ரிஷியின் கழுத்தில் மாலையாகப் போட்டான்.
ராஜாவின் இந்தச் செயலுக்கு அவர் கோபப்படவில்லை. மாறாக கருணை ததும்பும் விழிகளோடு உற்றுப் பார்த்தார். மன்னன் ரிஷியின் இந்தச் செயலால் மிகவும் துக்கமடைந்தான். தன் மீது கோபப்படாத அந்த ரிஷியைப் பார்த்து பாவப்பட்டு ஹஸ்தினாபுரத்துக்குக் குதிரையில் ஏறி புழுதி பறக்க விரைந்துவிட்டான்.
அதே சமயத்தில் சமீகர் என்ற அந்த ரிஷியின் குமாரன் ஸ்ருங்கி தனது ஸ்நேகிதர்களுடன் காட்டினுள் விளையாடிக்கொண்டிருந்தான். ஸ்ருங்கிக்கு கோப ஸ்வபாவம். அவனுடன் கிருசன் என்கிற ரிஷிபுத்திரன் விளையாடிக்கொண்டிருந்தான். ஸ்ருங்கியும் தபோவலிமை உள்ளவன். அவர்களுக்கும் விளையாட்டுச் சண்டை வந்தபோது அந்த கிருசன் ஸ்ருங்கியைப் பார்த்து....
“ஏ ஸ்ருங்கி! நீ மிகவும் மதிக்கும் உனது தந்தை இப்போது பிரேதம் சுமக்கிறார். என்னைப் போன்ற சிறந்த தவமுள்ளவர்களிடம் நீ அதிகமாகப் பேசாதே” என்று அதட்டினான்.
ஸ்ருங்கிக்கு கிருசன் மேல் கோபம் பற்றிக்கொண்டு வந்தது.
“எல்லா பிராணிகளுக்கும் நன்மையையே நாடுபவர் என் பிதா. அவர் எப்படி பிணம் சுமப்பதாகச் சொல்கிறாய்?” என்று கேட்டான்.
“பரீக்ஷித் என்னும் மஹாராஜா வேட்டைக்காக வந்த போது உன் பிதாவின் கழுத்தில் இறந்துகிடந்த சர்ப்பத்தை மாலையாகப் போட்டான்”
“பரீக்ஷித்துக்கு என் பிதா என்ன கெடுதல் செய்தார்? ஏன் அப்படி நடந்தது?” என்று கேட்டார் ஸ்ருங்கி.
“ஒரு மானை அடித்துவிட்டு அதைத் துரத்திக்கொண்டு உங்கள் குடிலுக்கு வந்தார் பரீக்ஷித். மௌனவிரதத்தில் இருந்த உன் தந்தையிடம் பலமுறை அந்த மானைப் பற்றிக் கேட்டான். அவர் காஷ்ட மௌனத்தில் இருந்ததால் பதிலேதும் தரவில்லை. அதில் கோபமுற்ற அந்த ராஜா உன் தந்தையின் கழுத்தில் செத்த பாம்பை மாலையாகப் போட்டு அவமானம் செய்துவிட்டு சென்றுவிட்டான்” என்று கிருசன் நடந்த சம்பவத்தை விவரித்தான்.
ஸ்ருங்கிக்கு கோபம் தலைக்கேறியது. உடனே அங்கேயே அமர்ந்து ஆசமனம் செய்தான். பின்னர்
“அந்த பாபியாகிய ராஜா என் பிதாவின் தோளில் சர்ப்பத்தைப் போட்டான். இன்றிலிருந்து ஏழாவது ராத்திரி அவனை பல்விஷமும் கொடிய சக்தியுமுள்ள ஸர்ப்பராஜனாகிய தக்ஷகன் கடிக்கப்பட்டு யமலோகம் செல்வான்” என்று சாபம் கொடுத்தான்.
பின்னர் அங்கிருந்து எழுந்து தனது பிதாவைக் காண குடிலுக்கு ஓடினான். அங்கே இன்னமும் வாசலில் மாட்டுக்கொட்டிலில் சமீகர் அமர்ந்திருந்தார்.
“பிதாவே! பரீக்ஷித் என்னும் அந்த துராத்மாவை நான் கடுமையாகச் சபித்துவிட்டேன். இன்றிலிருந்து ஏழாம் நாள் அவன் தக்ஷகன் என்ற சர்ப்ப ராஜா தீண்டி உயிர் துறப்பான்” என்றார் ஸ்ருங்கி.
சமீகர் மிகவும் கவலையுற்றார். அவர் முகத்தில் வருத்தம் தோய்ந்தது. மனக் கலக்கத்தோடு அவர் தம் புத்திரனைப் பார்த்து இதமாக தர்மங்களை எடுத்துரைத்தார்.
“மகனே! பிரஜைகளை ரக்ஷிப்பது ராஜாவின் கடமை. ராஜா இல்லாத தேசம் நாசமாகிறது. ராஜா தண்டனை தந்து ஆள்கிறான். அந்த தண்டனையினால் பயம் உண்டாகிறது. அந்த பயத்தினால் சமன் உண்டாகிறது. ராஜாவினால் தர்மம் நிலைநிறுத்தப்படுகிறது. தர்மத்தினால் ஸ்வர்க்கம் நிலைநிறுத்தப்படுகிறது. யக்ஞாதிகர்மங்கள் ராஜாவினால் நடத்தப்பெறுகிறது. யக்ஞத்தினால் தேவர்கள் மகிழ்கிறார்கள். தேவர்களின் ஸந்தோஷத்தினால் மழை பொழிகிறது. மழையினால் பயிர்கள் உண்டாகின்றன. அப்படி விளையும் பயிர்களினால் ராஜாவாகப்பட்டன் பிரஜைகளுக்கு நன்மை புரிகிறான். அப்படி ராஜ்யபரிபாலனம் செய்யும் ஒரு ராஜா பத்து வேத அத்யயனம் செய்த பிராமணனுக்கு சமம் என்று மனு சொல்லியிருக்கிறார். பசியோடு மானைத் துரத்தி வந்தவன் என்னுடைய இந்த விரதத்தை அறியாது என் தோளில் மாட்டிவிட்டான். இதற்காக நீ கொடுத்த சாபம் மிகவும் கொடியது. இதை ஆலோசிக்காமல் சிறுபிள்ளைத் தனமாக செய்துவிட்டாய்” என்று மௌனவிரதம் துறந்து ஸ்ருங்கியைக் கடிந்துகொண்டார்.
“பிதாவே! நான் பொய்யே சொல்லாதவன். நான் சொன்ன சொல் பொய்யாக்கவிடமாட்டேன். அது பொய்க்காது. சாபம் நிச்சயம் பலித்தே தீரும்” என்று இன்னும் கோபம் அடங்காமல் நின்ற ஸ்ருங்கி கூறினார்.
சமீகர் பொறுமையாக அவனுக்கு போதனை செய்ய ஆரம்பித்தார்.
“நீ வயசுக்கு வந்தவனாக இருந்தாலும் கோபத்தை விடவில்லை. பாலகனைப் போல நடந்துகொள்கிறாய். சக்தியுள்ளவர்களுக்கு கோபம் அதிகமானல் அது இந்த உலகத்தை அழித்துவிடும். ஆகையால் நீ வனம் புகுந்து கனிகிழங்குகளைத் தின்று உனது இந்திரியங்களை ஜெயித்துக்கொண்டு திரும்பிவா” என்று அனுப்பிவிட்டார்.
ஸ்ருங்கி கிளம்பும் தருவாயில் அங்கே இருந்த அவருடைய பிரதான சிஷ்யர் கௌரமுகரை கை காட்டி அருகில் அழைத்தார்.
”கௌரமுகா! நீ சென்று பரீக்ஷித்து மகாராஜாவிடம் என்னுடைய புத்திரனின் தவறான இந்த காரியத்தை சொல். அவன் செய்த தவறையும் சொல்.” என்று அனுப்பினார்.
கௌரமுகர் பரீக்ஷித்தின் அரண்மனைக்கு விரைந்தார். சமீகர் சொலியனுப்பிய விவரங்களை மனதுக்குள் தொகுத்துக்கொண்டார். பின்னர் அனைத்து மந்திரிகளின் முன்...
“ஐம்புலன்களையும் மனத்தையும் அடக்கிய சமீகர் என்னும் ரிஷி உன்னுடைய ராஜ்யத்தில் இருக்கிறார். அவர் மௌனவிரதத்தில் இருந்த போது இறந்த சர்ப்பத்தை அவருக்கு மாலைபோல அணிவித்தாய். அதில் கோபமுற்ற அவரது புத்திரன் இன்றிலிருந்து ஏழாவது நாள் தக்ஷகன் என்னும் பாம்பு தீண்டி நீ உயிர் துறப்பாய் என்று சாபம் கொடுத்திருக்கிறார். தயை நிறைந்த சமீகர் இதை உன்னிடம் சொல்லச் சொல்லி என்னை இங்கு அனுப்பினார்” என்று கூறினார்.
கௌரமுகர் இதைச் சொன்னதும் சமீகரின் கருணை உள்ளம் புரிந்து பரீக்ஷித்து மஹாராஜா “இப்படிப்பட்ட ஒரு உத்தமருக்கு நான் அவமானம் இழைத்துவிட்டேனே” என்று கலங்கினான். தான் செய்த பாபகாரியத்தை எண்ணியெண்ணி வருத்தமுற்றான். கௌரமுகரிடம் கைகூப்பி “நான் செய்த இந்த பாப காரியத்தை சமீகர் தன்னுடைய தயாள குணத்தினால் க்ஷமிக்கவேண்டும்” என்று வேண்டினான். கௌரமுகரும் சமீகரின் ஆஸ்ரமத்திற்கு திரும்பினான்.
அவர் சென்றதும் மந்திரிப்பிரதானிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினான். அதில் முடிவு செய்தபடி ஒரு பிரம்மாண்டமான ஒற்றைத் தூணை நிர்மானித்தார்கள். அந்த தூணின் உச்சியில் ஒரு மாளிகைக் கட்டினார்கள். அதைச் சுற்றிலும் பலரை காவல் வைத்தார்கள். மாளிகையின் உள்ளே ஔஷதங்கள் வைத்திருக்கும் வைத்தியர்கள் இருந்தார்கள். மந்திர சக்தியுள்ள சில பிராமணர்களும் தங்கியிருந்தார்கள். ஹஸ்தினாபுரத்திலிருந்து செய்யவேண்டிய ராஜபரிபாலனத்தை அங்கிருந்தே செய்தார் பரீக்ஷித். அந்த மாளிகைக்குள்ளிருந்த பரீக்ஷித்தை யாராலும் அணுகமுடியவில்லை. காற்றைக் கூட தடுத்துநிறுத்தி சோதனையிட்டு உள்ளே விட்டார்கள். ராஜா பத்திரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறான்.
ஏழாம் நாள் வந்தது.....
[இதில் இணைக்கப்பட்டிருக்கும் படம் இணையத்தில் கிடைத்தது.]
#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#ஆஸ்தீகபர்வம்
#பகுதி_22
No comments:
Post a Comment