சர்மிஷ்டை தனது குமாரனோடு ஆசையாக விளையாடிக்கொண்டிருந்தாள். பின்னாலிருந்து சென்ற தேவயானி அவளது தோளைப் பிடித்து இழுத்து “சர்மிஷ்டை! காமஸுகத்துக்காக என்ன காரியமடி செய்துவிட்டாய்?” என்று கேட்டாள்.
சர்மிஷ்டை ஒரு கணம் யோசித்தாள். தேவயானிடம் பொய் சொல்ல அவள் விரும்பவில்லை. ஆனாலும் நிஜத்தைச் சொல்லி அப்போது மாட்டிக்கொள்ளவும் வேண்டாம் என்று நினைத்தாள்.
“தேவயானி! தர்மமே உருவெடுத்து வேதங்களில் கரை கண்ட ஒரு ரிஷி இங்கே விஜயம் செய்தார். அவருக்கு நான் சிஷ்ருஷை செய்தேன். வரம் கொடுக்க வந்தார். அவரிடம் பிள்ளை வரம் கேட்டு வாங்கிக்கொண்டேன். அல்ப காமஸுகத்துகாக நான் புத்ரனை வேண்டவில்லை” என்று கூறினாள்.
“அப்படியென்றால் அந்த த்விஜருடைய கோத்திரம் என்ன? எந்த ஊர்?” தேவயானி சந்தேகமாக கேட்டாள்.
“அவருடைய சூர்யபிரகாசமான முகத்தைப் பார்த்துக் கேட்பதற்கு எனக்கு சக்தியேயில்லை”
“சரி.. நீ அப்படி ஒரு பிராமணரிடம் ஸந்ததி உற்பத்தி செய்துகொண்டாய் என்றால் எனக்கு ஏதும் ஆட்சேபணை இல்லை” என்று சொல்லிவிட்டு சர்மிஷ்டையின் பிள்ளையை எடுத்துக் கொஞ்சினாள். இருவரும் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். தேவயானி அந்தப்புரம் திரும்பினாள்.
**
காலம் விரைந்தோடியது. தேவயானிக்கு இந்திர தேஜஸோடு கூடிய யதுவும் விஷ்ணுவை ஒத்த துர்வஸுவும் பிறந்தார்கள். ராஜரிஷியான யயாதி இன்பம் கூடுதலாக அனுபவிக்கவும் தேவயானி துன்பம் என்பதையே எப்போதும் மறந்திருக்கவும் தேன் சுவையான சிகப்பும் மஞ்சளும் கலந்த வர்ணம் உள்ள மதுவை அருந்தக்கொடுத்தான். அதுவே பழக்கமாக ஆகி தேவயானி எப்போதும் மதுவின் பிடியில் இருந்தாள்.
ஹேய்.. ஹூய் என்று சிலசமயங்கள் பிதற்றுவாள். சட்டென்று அழுவாள். பின்னர் சிறிது நேரத்தில் சிரிப்பாள். யயாதி போய் எதிரே நின்றாள்
“ஓ! பிராமண சிரேஷ்டரே! உன் உருவமும் அலங்காரமும் ராஜா போல இருக்கிறது. நீ ஏன் காட்டுக்கு வந்தாய்?” என்று போதையில் உளறுவாள்.
“யயாதி எனும் ராஜா கொடிய பார்வையுள்ளவன். பிராமணா! நன்மை வேண்டினால் இந்தக் காட்டை விட்டு ஓடிப்போ” என்று தேவயானியை பயமுறுத்தும்படி சத்தம் போடுவான். மதுவின் பிடியில் இருக்கும் தேவயானி கண்களில் மிரட்சியோடு தள்ளாடியபடி வஸ்திரங்கள் அவிழ தலைவிரிகோலமாக அறையின் மூலையில் போய் ஒடுங்கிக்கொள்வாள்.
தேவயானியை மதுப்பழக்கத்திற்கு ஆட்படுத்தியது யயாதி சர்மிஷ்டையுடன் களியாட்டத்தில் ஈடுபடுவதற்கு வசதியாகப் போனது. தேவயானி இங்கே முப்பொழுதும் தலைக்கேறிய போதையுடன் கவிழ்ந்திருக்க அசோக தோட்டத்தில் சர்மிஷ்டையுடன் அவனது ஆசைகள் கொடிகட்டிப் பறந்தது.
தான் இப்படி சுகித்திருப்பது தேவயானிக்கு தெரிந்துவிடக்கூடாதென்று ஊமையர்களை பாதுகாப்புக்கு வைத்தான். அவளை வேறு யாரும் தொட்டுவிடக்கூடாது என்று கிழவர்களையும் அலிகளையும் தேவயானியை போஷிக்கக் கட்டளையிட்டான். காமச்சேற்றில் மாட்டிக்கொண்ட யயாதி சுக்ரருக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்தான்.
சர்மிஷ்டைக்கு ராஜரிஷி யயாதி த்ருஹ்யு, அனு, பூரு என்று மூன்று குமாரர்களைக் கொடுத்தான்.
இன்பக்கடலில் மூழ்கி ஆசையின் எல்லைகளை அனுபவித்தான். காலம் ஓடியது. எதற்கும் முடிவு ஒன்று வேண்டாமா?
**
“வாருங்கள்! சற்றுக் காலாற நடப்போம்” என்று போதையில்லாத ஒரு பொழுது யயாதியை அழைத்துக்கொண்டு அசோகத் தோட்டம் பக்கம் போனாள் தேவயானி.
ராஜசிசுக்களையுடன் மூன்று பேர் அங்கே விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
“ராஜா! இந்த சர்மிஷ்டை ஒரு ரிஷியிடம் கர்ப்பாதானம் கேட்டு இவர்களைப் பெற்றுக்கொண்டாள். ஆனால் இவர்கள் அனைவரும் ஒளியினாலும் அழகினாலும் உம்மைப் போன்றே இருக்கிறார்கள்”
தேவயானியிடம் யயாதி பதிலேதும் சொல்லாமல் விளையாடும் குழந்தைகளை ரசித்துக்கொண்டிருந்தான். தேவயானி அந்தக் குழந்தைகளிடம் சென்று “உங்களுடைய பிதா ஒரு பிராமணராமே?” என்று கேட்டாள்.
“ஆமாம். ஒரு த்விஜர்தான் எங்களுடைய பிதா” என்று மூவரும் சேர்ந்தே சொன்னார்கள்.
“அவர் யாரப்பா? எப்படியிருப்பார்?” என்று அனுகூலமாகக் கேட்டாள்.
யயாதி சிலை போல நின்றுகொண்டிருந்தான். அந்த சமயத்தில் வீசும் தென்றல் கூட தனது வேலையை நிறுத்திவிட்டது. குழந்தைகள் அவனைப் பார்க்க நின்று மலமலங்க விழித்தன. தேவயானி தனது கேள்வியை நிறுத்தாமல் கேட்டாள். “சத்தியம் பேசுங்கள்” என்று சப்தமாகக் கேட்டாள்.
மூன்று குழந்தைகளும் ஒரு சேர யயாதியை நோக்கி சுட்டுவிரலைக் காட்டின.
எங்கிருந்தோ திடீரென்று புழுதி பறக்கும் பேய்க் காற்று வீசி யயாதியின் உத்தரீயத்தைப் பிடிங்கி இழுத்துச் சென்றது. தேவயானி. செய்வதறியாது திகைத்தான் மன்னன். மௌனமாக யயாதி நின்றிருந்த வேளையில் க்ருஹத்துக்குள்ளிருந்து சர்மிஷ்டை சந்தனம் பூசிய மேனியாக தளதளவென்று வெளியே வந்தாள். தேவயானி கோபம் கொப்பளிக்க
“சர்மிஷ்டை! நீ குற்றம் புரிந்துவிட்டாய். என்னிடம் ரிஷியிடம் பிள்ளை பெற்றேன் என்று பொய் பேசினாய். என்னுடைய தாஸியாக இருந்தும் இந்த ராஜாவிடமே பிள்ளையும் பெற்றிருக்கிறாய். உன்னை இப்போது என்ன செய்யலாம்?” என்று தோட்டம் அதிர கூச்சலிட்டாள்.
“தேவயானி! நான் அசத்தியமாக எதுவும் பேசவில்லை. நான் ரிஷியென்று சொன்னது நிஜம்தானே! குருவாகிய உன் பிதாவினால் நாமிருவரும் கொடுக்கப்பட்டோம். என்னையும் போஷிக்கவேண்டும் என்றுதான் உன் பின்னால் அனுப்பினார்கள். ஆகையால் ராஜா என்னையும் போஷித்தான்” என்றாள் சர்மிஷ்டை.
தேவயானி அந்த பதிலில் எரிச்சலடைந்தாள். இனிமேலும் இவள் கூட பேசுவது வீண் என்று கோபத்துடன் திரும்பினாள். அங்கேயே தனது ஆபரணங்களை கழற்றி வீசினாள். “நான் என் தந்தையிடம் சென்று நியாயம் கேட்கிறேன்” என்று விடுவிடுவென்று நடக்கத் துவங்கினாள். யயாதி அவளை நிறுத்துவதற்காக “மன்னித்துக்கொள் தேவயானி” என்று அவள் பின்னாலேயே ஓடினான்.
தேவயானி எங்கும் நிற்காமல் நேரே சுக்ரரிடம் சென்றாள். யயாதியும் உடனிருந்தான். கட்டுப்படாத ஒரு அழகை தேவயானிக்குப் பீறிட்டுக்கொண்டு வந்த்து.
“தந்தையே அதர்மம் தர்மத்தை ஜெயித்துவிட்டது. இந்த ராஜா சர்மிஷ்டையுடன் சங்கமித்துவிட்டான். அவளுக்கு மூன்று புத்திரர்களை அளித்துவிட்டான். எனக்கோ இரண்டு புத்திரர்கள்தான். இவன் தர்மம் தவறிவிட்டான்.” என்று அரற்றினாள்.
சுக்ரர் கோபம் கொண்டார். தனது செல்ல மகளுக்கு யயாதி துரோகம் இழைத்துவிட்டான் என்று கமண்டல நீரை அவன் மேல் தெளித்து “அதர்மத்தை விருப்பத்துடன் செய்திருக்கிறாய். உன்னால் ஜயிக்கவே முடியாத மூப்பு உன்னை விரைவில் மூடிக்கொள்ளும்” என்று சாபமிட்டார்.
நடுநடுங்கிப்போனான் யயாதி. தேகசுகத்தில் அவனை விஞ்சியவர் யாருமில்லை. இரு பெண்களின் காலடியில் கிடந்தவன் அவன். இளமையை எடுத்துவிட்டால் வாழ்வதில் பயன் என்ன என்று சலிப்படைந்தான்.
“பகவானே! என்னிடம் எதையும் கேட்பவர்களுக்கு மாட்டேன் என்று சொல்ல மாட்டேன். அது என் விரதம். சர்மிஷ்டையும் தேவயானியுடன் எனக்காக உம்மால் கொடுக்கப்பட்டள். அவள் வேறொரு கணவனை அடைய விரும்பாமல் என்னிடம் புத்ர யாசகம் கேட்டாள். தர்மமாக அதைச் செய்தேன். என்னை பொறுத்தருள வேண்டும்” என்று யயாதி கெஞ்சினான்.
“தர்மங்களில் பொய்யான போலியான ஆசாரமுள்ளவன் திருடனாகிறான்” என்று நகைத்தார்.
எதிரே நின்றுகொண்டிருந்த யயாதி தசைகள் சுருங்கி, கேசம் வெளுத்துப் போய் பற்கள் விழுந்து கால்கள் இரண்டும் பலமில்லாமல் நடுங்க மூப்புத் தட்டிப் போனான்.
கையிரண்டையும் கூப்பி சுக்ரரிடம் “குருசிரேஷ்டரே! என்னுடைய இளமைப் பருவத்தின் மொத்த சுகத்தையும் நான் தேவயானியிடம் அனுபவிக்க முடியவில்லை. இந்த மூப்பு என்னை அடையாமலிருக்க அனுக்ரஹம் செய்ய வேணும்” என்று நமஸ்கரித்தான்.
”ராஜாவே! நான் பொய் சொல்வதில்லை. நீ ஜரையை அடைந்துவிட்டாய். ஆனால் இந்த ஜரையை நீ வேறு யாரிடமாவது மாற்றிக்கொள்ளலாம்.”
“பிராமணரே! என்னுடைய பிள்ளைகளில் எவன் எனக்கு யௌவனத்தைத் தருகிறானோ அவனுக்கே ராஜ்யாபிஷேகம் செய்துவைப்பேன். அவனே தீர்க்காயுஸோடும் அதிக சந்ததியள்ளவனாகவும் புண்ணியமுள்ளவனாகவும் புகழுள்ளவனாகவும் இருப்பான் என்று நீங்கள் அனுமதியளிக்க வேண்டும்”
“நகுஷபுத்திரனே! என்னை மனதால் தியானித்து இந்த ஜரையை யாரிடமும் நீ மாற்றிக்கொள்ளலாம். நீ கேட்டபடி எந்த புத்திரன் உனக்கு இளமையைத் தருகிறானோ அவன் நீ வேண்டியபடி எல்லா சம்பத்துகளையும் அடைவான்” என்று விமோசனமும் அளித்தார் சுக்ரர்.
தேவயானி அதே யவௌனத்தோடும் யயாதி கிழடுத்தட்டிப்போயும் நாடு திரும்பினார்கள். ஜ்யேஷ்ட புத்திரன் யதுவை அரண்மனை வாசலில் பார்த்தான் யயாதி. யது யயாதியை பிதா என்று அடையாளம் காண முடியாமல் தேவயானி பக்கம் வந்ததில் தனது பிதாதான் அது என்ற் யூகித்துக்கொண்டான்.
”யது! நான் உன் பிதா. யயாதி. சுக்ரரின் சாபத்தினால் என்னை ஜரை பீடித்துக்கொண்டது. நீ என்னுடைய ஜரையை எடுத்துக்கொண்டு இளமையைக் கொடுத்தால் ஒரு ஆயிரம் வருஷங்கள் போகங்களை அனுபவித்த பிறகு கொடுத்துவிடுகிறேன். பின்பு துன்பத்தை மூப்புடன் பெற்றுக்கொள்கிறேன்” என்று கேட்டான்.
“மனிதன் ஜரையினால் மீசை நரைத்து உத்ஸாஹம் குறைந்து போய் உடம்பெல்லாம் மடிப்பு உண்டாகி பலம் குன்றி எந்தக் காரியத்தையும் செய்ய சக்தியில்லாமல் சிறு பெண்களாலும் வேலைக்காரர்களாலும் அவமனாப்படுத்தப் படுகிறான். ஆகையால் எனக்கு உம்முடைய ஜரை வேண்டாம்” என்று அவசரமாகக் கிளம்பினான்.
“உன் சந்ததி இந்த ராஜ்யத்தை அடையாமல் போகட்டும்” என்று அவனை விட்டு அடுத்தது துர்வஸுவைப் பார்த்தான் யயாதி. யதுவிடம் கேட்டது போலவே இவனையும் கேட்டான்.
“காமஸுகத்தை அனுபவிக்க முடியாமல் தடுக்கும் ஜரை எனக்கு வேண்டாம். ரூபத்தை அழித்து அறிவையும் உயிரையும் கெடுக்கும் ஜரை எனக்கு வேண்டவே வேண்டாம்” என்று அவனிடமிருந்து ஓட்டம் பிடித்தான்.
“பாபிஷ்டர்களும் மிலேச்சர்களும் மிருகத்தன்மை உடையவர்களுக்கும் நீ ராஜாவாவாய்!” என்று சபித்தான்.
தேவயானியின் புத்ரர்கள் இருவரும் யயாதியின் ஜரையை வாங்கிக்கொள்ள சம்மதிக்கவில்லை. உடனே சர்மிஷ்டையின் இல்லத்திற்குச் சென்றான்.
குதிரையில் ஏறிக்கொண்டிருந்த த்ருஹ்யுவைப் பார்த்தான். முன்னால் இருவரிடம் கேட்டது போலவே இவனிடமும் கேட்டான்.
”ஜரையுள்ளவன் யானையையும் குதிரையையும் தேரையும் ஸ்த்ரீயையும் அனுபவிக்க மாட்டான். சொல் தடுமாற்றம் வந்துவிடும். நான் உங்களது ஜரையை வாங்கிக்கொள்ள முடியாது’ என்று நிர்தாட்சண்யமாய் மறுத்துவிட்டான்.
“நீ விரும்பும் இன்பம் கிட்டாது. குதிரைகள் வண்டிகள் கழுதைகள்: பல்லக்குகள் போகக்கூடாத எப்போதும் படகில் தாண்ட வேண்டியதுமான இடத்தில் ராஜ்யமில்லாமல் உன் ஸந்ததியோடு போஜன் என்ற பெயரோடு இருப்பாய்” என்று சபித்தான்.
அனு கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டிருந்தான். யயாதி அவனிடமும் தனது மூப்பை வாங்கிக்கொண்டு அவனது இளமையை ஆயிரம் வருஷ காலம் கடன் கேட்டான்.
“கிழவன் அநாசாரமாக இருப்பான். குழந்தை போல சுத்தியில்ல்லாமல் உண்பான். எனக்கு ஜரை வேண்டாம்” என்று மறுத்துவிட்டான்.
“அனுவே! நீயும் உன் சந்ததிகளும் யவௌன வயசை அடைந்ததும் இறந்து போவீர்கள்” என்று சபித்துவிட்டான்.
இன்னும் ஒருவன் தான் பாக்கி. அவனும் இளமையைக் கொடுக்கவில்லை என்றால் வீதியில் இறங்கி இளமையை யாசிக்க வேண்டும்.
கருணை ததும்பும் விழிகளோடு எதிரே வந்தான் பூரு.
இளமை கிடைக்குமா யயாதிக்கு? அடுத்த பகுதியில்....
No comments:
Post a Comment