ஸ்தாவரங்களும் ஜங்கமங்களும் சேர்ந்த மூவுலகையும் ஆள்வதற்கு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தீராப்பகை உண்டானது. யுத்தமும் மூண்டது. யக்ஞாதிஹோமங்கள் செய்து வெற்றியடைய தேவர்கள் ப்ருஹஸ்பதியை தங்களது புரோகிதராக வைத்துக்கொண்டனர். அசுரர்கள் ப்ருகு முனிவரின் புத்திரரான சுக்ரரை அமர்த்திக்கொண்டனர்.
தினமும் உக்கிரமான யுத்தம் நடக்கும். ஆயிரக்கணக்கில் அசுரர்கள் செத்து மடிவார்கள். தேவர்களிடத்திலும் ஆயிரக்கணக்கில் சேதாரம் இருக்கும். ஆனால் அசுரர்களில் அமரரானவர்கள் அனைவரும் மறுநாள் போருக்கு ஆயுதங்களுடன் களம் இறங்கியிருப்பார்கள். தேவர்களின் எண்ணிக்கை சடசடவென்று சரிய ஆரம்பித்தது. அசுரர்களின் கை ஓங்கியது.
தேவேந்திரன் விசனப்பட்டு ப்ருஹஸ்பதியிடம் “அசுரர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை. நம்மாட்கள் மடிந்துபோகிறார்கள். என்னாயிற்று?” என்று ஒரு மணி பொரிந்து தள்ளினான்.
“சுக்ராச்சாரியாரிடம் சஞ்சீவினி என்ற வித்தை இருக்கிறது. இறந்தவர்களை பிழைக்க வைக்கும் அரிய வித்தை அது. எனக்கு அது தெரியாது” என்றார் ப்ருஹஸ்பதி அடக்கமாக. தேவேந்திரன் பயந்துபோனான்.
அவசரக்கூட்டம் ஒன்றைக் கூட்டினான். தேவர்கள் அனைவரும் கூடிப் பேசியவுடன் ப்ருஹஸ்தியின் ஜ்யேஷ்ட குமாரன் கசனை இந்திர சபைக்கு அழைத்தார்கள்.
ப்ருஹஸ்பதி தேவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்று அமைதியாக தனது ஆசனத்தில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
“குரு புத்திரா! இப்போது நாம் மிகவும் துன்பத்திலுள்ளோம். அந்த சஞ்சீவினி வித்தையை சுக்கிராச்சாரியாரிடம் கற்றுக்கொண்டு வா. அவருடைய புத்ரி தேவயானி சௌந்தர்யம் மிக்கவள். அவளிடமும் பிரியமாகப் பேசி மனம் போல நடந்துகொண்டு சந்தோஷப்படுத்து. சுக்ராச்சாரியாருக்கு தன் பெண் மேல் கொள்ளைப் பிரியம். அவரும் மனம் குளிர்வார். அவர் வ்ருஷபர்வா என்கிற அசுரராஜாவின் குருவாக இருக்கிறார். உன்னால் இந்த தேவர்குலம் உய்வுறட்டும்” என்று சாமர்த்தியமாகப் பேசி ஆசீர்வதித்து எதிரிகள் முகாமிற்கு அனுப்பினார்கள்.
தந்தையையும் தேவர்களையும் நமஸ்கரித்துப் புறப்பட்டான் கசன்.
கசன் வ்ருஷபர்வாவின் தேசத்துக்குள் நுழைந்தான். நகரத்துக்குள் நுழைந்து சுக்கிராச்சாரியாரையின் க்ரஹத்தை அடைந்து உள்ளே பூஜையில் அமர்ந்திருந்த அவரை பார்த்து நமஸ்கரித்து எழுந்தான்.
“யாரப்பா நீ?” என்று புருவம் தூக்கினார் சுக்ரரர்.
“என் பெயர் கசன். ஆங்கிரஸுவின் பேரன். ப்ருஹஸ்பதியின் புத்ரன். உங்களுக்கு ஆயிரம் வருஷ காலம் சிஷ்ருஷை செய்ய வந்திருக்கிறேன். என்னை உங்கள் சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு அருள் புரிய வேண்டும்” என்று கை கூப்பி நின்றான் கசன். உள்ளே தேவயானி தூண் மறைவில் நின்று “யாரிந்த வாலிபன்?” என்று ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஆங்கிரஸின் பேரன். ப்ருஹஸ்பதியின் புத்ரன். நீ கௌரவிக்கப்பட வேண்டியவன். உன்னை என் சிஷ்யனாக ஏற்றுக்கொள்கிறேன்” என்றார் கண்கள் மினுமினுக்க.
தேவயானி ஏனோ சிரித்துக்கொண்டாள்.
அதிகாலையில் குருவிற்கு முன் எழுந்திருப்பான். கொட்டிலில் பசுக்களைக் குளிப்பாட்டி அவைகளுக்கு புற்கள் கொடுத்து பால் கறந்து பூஜையறையில் விளக்கேற்றி குருவின் துணிகளைத் துவைத்து அவருடன் சேர்ந்து மந்திரங்கள் ஓதி எல்லாவற்றையும் செய்வான். இவ்வளவு வேலைகளுக்கு நடுவில் “ஏ! எனக்கு பாரிஜாத மலர் வேண்டும். பறித்துக்கொண்டு வருவாயா?” என்று செல்லமாகக் கேட்கும் தேவயானிக்கும் பணிவிடை செய்ய வேண்டும்.
தேவயானி என்றாவது சோர்ந்து போனால் எதிரில் அமர்ந்து அவள் மனம் சாந்தியுற தேவகானம் பாடுவான். விளையாடுவதற்கு தோழியர் இல்லாத நேரங்களில் நந்தவனம் முழுக்கச் சுற்றிச் சுற்றி விளையாடுவார்கள். தேவயானிக்குப் பிரியம் மேலிட்டால் அவனுக்காக இனிமையாகப் பாடுவாள். நேராக நடந்துபோய்க்கொண்டிருப்பவனின் பின்னால் சென்று தோளைத் தட்டி திடுக்கிட்டுத் திரும்பும் அவனை ரசிப்பாள்.
“ஏ! என்ன இன்று மலர்மாலை அணிந்து கொண்டிருக்கிறாய்? உனக்குக் கல்யாணமா?” என்று கேட்டு வம்புக்கிழுப்பாள். பொழுது சுகமாக ஓடிக்கொண்டிருந்தது.
பாடியும், விளையாடியும், மலர் மாலை அணிந்து கொண்டும், ஏவல் செய்யும் ஆடவனைப் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். தேவயானி அவனில்லாமல் அவளில்லை என்ற நிலைக்கு வந்திருந்தாள்.
இப்படி ஐநூறு வருஷ காலம் சென்றது.
அஸுரர்கள் கசனின் நோக்கத்தை எப்படியே தெரிந்துகொண்டனர். சுக்ரரிடம் சஞ்சீவினி வித்தை கற்க வந்தவனை எப்படியாவது கொன்று விட திட்டமிட்டனர். பசு மேய்ப்பதற்கு காட்டிற்கு போனவனைப் பிடித்துத் துண்டு துண்டாக வெட்டிக் கொன்று அந்த மாமிசத் துண்டுகளை நாய்களுக்கு வீசினர்.
சாயந்திர வேளையில் மாடுகள் மட்டும் வீடு திரும்பின. வாசலில் காத்திருந்த தேவயானிக்கு அதிர்ச்சி. தெரு மூலை வரை எட்டிப் பார்த்தாள். கசனைக் காணவில்லை. வீட்டின் உள்ளே ஓடினாள். அக்னி ஹோத்திரம் முடிந்து சுக்ராசாரியார் அமர்ந்திருந்தார்.
“பிதாவே! சூரியன் அஸ்தமனமாகிவிட்டான். பசுக்கள் மேய்ப்பவன் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. கசனுக்கு ஏதோ ஆபத்து என்று நினைக்கிறேன். அவனில்லாமல் நான் உயிர் வாழ மாட்டேன். இது சத்தியம்” என்று அவரிடம் புலம்பினாள்.
சுக்ராசாரியர் எழுந்து வாசலுக்கு வந்தார். சஞ்சீவினி வித்தையைப் பிரயோகித்து கசனை அழைத்தார். வீட்டிற்கு சற்று தூரத்தில் அவர்களது மாடுகளைத் தாண்டி சென்றுகொண்டிருந்த நாய்களின் சரீரரங்களை பிளந்து கொண்டு எதிரில் வந்து நின்றான்.
“என்ன ஆயிற்று?” என்று கேட்டாள் தேவயானி.
“நான் ஸமித்துகளையும் தர்ப்பைகளையும் சேகரித்துக்கொண்டு ஒரு ஆலமர நிழலில் சாய்ந்து உட்கார்ந்திருந்தேன். அப்போது அஸுரர்கள் கூட்டமாக அங்கே வந்தனர். எங்கள் ஊருக்குப் புதிதாக வந்திருக்கிறாயே நீ யார்? என்று கேட்டார்கள். ப்ருஹஸ்பதியின் புத்ரன் கசன் என்றேன் நான். உடனே கையில் கொண்டு வந்திருந்த கத்தி வேல் போன்ற ஆயுதங்களால் என்னைத் தாக்கினார்கள். அவர்கள்தான் என்னைக் கொன்று இந்த நாய்களுக்கு மாமிசமாய் வீசியிருக்க வேண்டும்” என்று வனத்தில் நடந்ததைச் சொன்னான்.
இன்னும் சிறிது காலம் கழிந்தது. ஒரு நாள் தேவயானி வாசலில் நின்றுகொண்டிருந்த கசனைப் பார்த்து “கசனே! அன்றொரு நாள் ஒரு வனமலரை உனக்குக் காட்டினேன் ஞாபகமிருக்கிறதா? அந்த மலரை சூடிக்கொள்ள தாபமாக இருக்கிறது. உன் கையால் பறித்துக்கொண்டு வாயேன். மணம் மூக்கைத் துளைக்கும் ” என்று கண்ணால் அவனை விழுங்கிக்கொண்டே கேட்டாள்.
கசன் காட்டுக்கு ஓடினான். அந்த மலரைப் பறித்துக்கொண்டு திரும்பும் போது அஸுரக் கூட்டம் சூழ்ந்துகொண்டது. அவனைக் கொன்று அரைத்து கடல்நீரில் கரைத்துவிட்டார்கள்.
வாசலில் காத்திருந்து வரும் வழி பார்த்து கண்கள் பூத்து சோர்வடைந்தாள் தேவயானி. மீண்டும் சுக்ரரிடம் சென்று “தந்தையே! இம்முறையும் கசனை அஸுரர்கள் கொன்றுவிட்டார்கள் போலிருக்கிறது. நீங்கள்தான் பிழைப்பிக்க வேண்டும்” என்று கெஞ்சினாள்.
சுக்ரர் கண்களை மூடித் தியானம் செய்தார். பின்னர் சஞ்சீவினி மந்திரத்தை சொன்னார். அடுத்த கனம் வாசலில் கசன் வந்து நின்று சிரித்தான். தேவயானி வாசலுக்கு ஓடிச்சென்று அவனை உள்ளே அழைத்து வந்து கதை கேட்டாள். இம்முறையும் அசுரர்கள் செய்த அடாத செயலைக் கசன் சொன்னான்.
தேவயானி தந்தையிருக்கும் வரை கசனை யாராலும் கொன்றுவிட முடியாது என்று திடமாக எண்ணினாள். கவலையை விட்டொழித்து அவனுடன் ஆடல் பாடலில் நேரம் செலவழித்து மகிழ்ந்தாள். நாட்கள் வேகமாய் நகர்ந்தது.
ஒரு நாள் பசு மேய்த்து, தர்ப்பை சமித்து மற்றும் விறகு வெட்டிவர ஆரண்யம் சென்றான் கசன். பெரிய புளியமரத்தடியில் காத்திருந்த அசுரர்கள் கசனை விரட்டிப் பிடித்து கொன்றார்கள். பின்னர் அருகில் கிடைத்த கட்டைகளைக் கொண்டு எரித்தார்கள். பின்னர் எரித்த சாம்பலை பொடி செய்து எடுத்துக்கொண்டு ஊருக்குள் நுழைந்தார்கள்.
சுக்கிராசாரியார் வீட்டினுள் அமர்ந்திருந்தார். அப்போது அவர் சோமபானம் அருந்தும் நேரம். நாலைந்து அசுரர்களாக உள்ளே நுழைந்து பேசிக்கொண்டிருந்தனர். வெங்கல கூஜாவில் இருந்த சோமபானத்திற்குள் அந்த பொடியைக் கலந்துவிட்டார்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் ஏற்கனவே நிதானமிழந்திருந்த சுக்ராசாரியார் கூஜா மொத்தத்தையும் வாயில் கவிழ்த்துக்கொண்டார். கண்கள் சொருகிய நிலையில் வாய் பேசாமல் சுவற்றில் சாய்ந்து அமர்ந்துவிட்டார்.
முன்னிரவு ஆகி மாடுகள் மெல்ல வீடு வந்து சேர்ந்தன. மேய்ப்பவன் இல்லாமல் வந்ததைப் பார்த்தாள் தேவயானி. பதபதைப்புடன் வீட்டிற்குள் ஓடினாள். சுக்ராசாரியார் தலை கவிழ்ந்து போதையில் அமர்ந்திருந்தார். தேவயானி தட்டி எழுப்பினாள். தலை தூக்கிப் பார்த்தார் கண்கள் சிவந்த சுக்கிராசாரியார்.
“என் அன்பு பிதாவே! இம்முறையும் கசனைக் காணவில்லை. அஸுரர்கள் கொன்றுவிட்டார்கள். கசனை உயிர்ப்பியுங்கள்” என்று கதறினாள்.
சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்தார் சுக்கிரர். ஊஹும். கசன் வரவில்லை. மீண்டுமொருமுறை முயற்சி செய்தார். பலனில்லை. உதட்டை பிதுக்கிவிட்டார்.
“தந்தையே! கசன் இல்லாமல் நான் வாழமாட்டேன். என்னுடைய எல்லா ஏவல்களையும் செய்தான். உமக்கு நல்ல சிஷ்யனாக இருந்தான். இந்த அசுரர்களை நீர் எதாவது செய்யவேண்டும். அவனை இப்படி அநியாயமாக கொன்று விட்டார்களே” என்று கண்ணீரும் கம்பலையுமாக அரற்றினாள் தேவயானி.
“நான் என்ன செய்ய முடியும்? ஒவ்வொரு முறை கொன்றுவிடுகிறார்கள். இப்போதே நான் வ்ருஷபர்வாவிடம் சென்று சொல்லிவிட்டு தேவர்களிடம் போய்விடுகிறேன்” என்று தேவயானிக்கு அனுகூலம் சொன்னார்.
“பிதாவே இன்னொரு முறை சஞ்சீவினி வித்தையை முயற்சி செய்யக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கெஞ்சினாள்.
சஞ்சீவினி வித்தை செய்தார் சுக்ரர்.
“பகவானே! என்னை மன்னியுங்கள்” என்று கசனின் குரல் கேட்டது. தேவயானியும் சுக்ரரும் அதிர்ந்து போனார்கள்.
“எங்கேயிருக்கிறாயப்பா?” என்று கேட்டார் சுக்ரர்.
“உங்கள் வயிற்றில் இருக்கிறேன். என்னைக் கொன்று எரித்துப் பொடியாக்கி உம்முடைய மதுவில் கலந்துவிட்டார்கள்.”
தேவயானி தந்தையை எரித்துவிடுவது போலப் பார்த்தாள். சுக்ரர் கனத்த மௌனமாய் இருந்தார்.
“கசனே! நீ எண்ணி வந்தது நிறைவேறப் போகிறது. உனக்கு நான் சஞ்சீவினி வித்தையைச் சொல்லிக் கொடுக்கிறேன். கவனமாகக் கற்றுக்கொள். பின்னர் சஞ்சீவினி சொல்லி உன்னை பிழைப்பிப்பேன். நீ என் வயிற்றைப் பிளந்து கொண்டு வெளியே வருவாய். நீ பிழைத்த பின் வயிறு பிளந்து உயிர் விட்ட என்னை பிழைப்பிப்பாய்” என்று சொன்னார்.
சிறிது நேரத்தில் கசன் வயிற்றுக்குள்ளிருந்து சஞ்சீவினி கற்றுக்கொண்டான். பின்னர் சுக்ரர் சஞ்சீவினி சொல்லி அவனைப் பிழைப்பித்து அவன் வெளியே வந்து சிதறிய சுக்கிராச்சாரியாரை சஞ்சீவினி உச்சரித்து பிழைக்கச் செய்தான்.
எழுந்து நின்ற சுக்கிராசாரியாரின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு “உம்மைப் போன்று வித்தைக் கற்றுக்கொடுக்கும் குருவடிகளைப் பற்றும் பாக்கியம் பெற்றேன். நீரே தாயும் தந்தையும் போன்றவர்.” என்று கண்ணீர் உகுத்தான்.
சுக்கிரர் ஒரு முடிவு செய்தார். தொண்டையைக் கனைத்துக் கொண்டு...
“இன்று முதல் எந்தப் பிராமணன் அறிவின்மையால் மது அருந்துகிறானோ அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கட்டும். பரலோகத்திலும் இகழப்படுவான். இது சத்தியம்” என்று எல்லா லோகங்களுக்கும் ஒரு விதியை உருவாக்கினார்.
பின்னர் அசுரர்களைச் சந்தித்து “நீங்கள் நிர்மூடர்களாக இருக்கிறீர்கள். ப்ருஹஸ்பதியின் மகன் கசன் சஞ்சீவினி வித்தையைக் கற்றுக்கொண்டுவிட்டான். அவனுடைய கீர்த்தி அழியாது” என்று சொன்னார். அஸுரர்கள் மிகவும் சங்கடத்தோடு சென்றனர்.
கசன் ஆயிரம் வருஷம் குருகுலவாசம் முடியும் தருணம் நெருங்கிவிட்டது. சுக்ரரிடம் சொல்லிக்கொண்டு தேவலோகம் செல்ல தயாராகிக்கொண்டிருந்தான். அவன் கண்கள் சுற்றும் முற்றும் யாரையோ தேடியது. ஆமாம். தேவயானி..... அவள் அப்போது....
#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#யயாதி
#சுக்ராசாரியார்
#தேவயானி
#கசன்
#ஸம்பவபர்வம்
#பகுதி_28
No comments:
Post a Comment