மத்ஸயகந்தியின் அழகில் மயங்கி நிலை தடுமாறினார் பராசர மகரிஷி. கமண்டலமும் கையுமாக எதிரில் வந்து நின்ற ரிஷியைக் கண்டு மரியாதையாக எழுந்து நின்று வந்தனம் செய்தாள் சத்யவதி. தலைகுனிந்து முன்னால் நிற்பவளைக் கண்ட மாத்திரத்திலேயே அவளது பூர்வ ஜென்மக் கதையிலிருந்து இப்போதிருக்கும் ஓடம் தள்ளும் நிலை வரை அவரது ஞானதிருஷ்டியால் பூர்ணமாக அறிந்துகொண்டார்.
“பெண்ணே! இந்த ஓடக்காரன் எங்கே?” என்று ஒன்றுமே தெரியாயதது போல விஜாரித்தார். கேள்வி கேட்கும் போதே எதிரில் நின்ற சத்யவதியின் அங்க வளைவுகளில் சிக்கி அதீதமாகக் காமமுற்றார். கண்கள் அவளது தேகத்தில் நிலைகுத்தி இருந்தன.
“முனிவரே! சந்ததி இல்லாத செம்படவனின் வளர்ப்பு மகள் நான். இந்த ஓடத்தை நான் தான் தள்ளுகிறேன். அக்கரைக்குச் செல்லவேண்டுமா? ஏறிக்கொள்கிறீர்களா?” என்று துடிப்போடு துடுப்புடன் கேட்டாள் மத்ஸயகந்தியான சத்தியவதி.
மரத்திலிருந்து க்ரீச்சொலியுடன் சில பட்சிகள் கூட்டமாக இறகடிக்கும் ஒலியோடு பறந்து சென்றன. யமுனா நதியின் சுழித்து ஓடும் வேகமும் கரையெங்கும் பச்சையும் மரங்களில் கனிந்து தொங்கும் பழங்களும் என்ற ரம்மியமான சூழ்நிலையும் பக்கத்தில் யௌவனம் ததும்பும் கன்னிப் பெண்ணும் பராசர மகரிஷியின் ஏக்கத்தை அதிகப்படுத்தியது.
“நல்லது. வஸுபுத்திரியே” என்று வாஞ்சையோடு அழைத்தார். மத்ஸகந்தைக்கு ஆச்சரியம். வஸு புத்திரி என்று உபரிசரவஸுவாகிய தனது பிதாவின் பெயரைச் சொல்லி அழைத்ததை எண்ணி பராசரரை உற்று நோக்கினாள். சிறிது நடுக்கத்துடனும் தடுமாற்றத்துடனும் கரையிலிருக்கும் படகை யமுனை ஜலத்தில் தள்ளி பராசரர் படகில் ஏறுவதற்கு ஒத்தாசையாக கரையில் நின்றாள்.
பராசரர் ஏறியதும் சத்யவதியும் அதிலேறி அவர் அருகில் அமர்ந்ததும் மிகவும் நெருக்கத்தில் எழிலோடு அமர்ந்திருந்த பெண்ணைக் கண்டதும் பராசர மகரிஷிக்கு காமம் கரைபுரண்டது. கமண்டலத்தை அருகில் வைத்தார்.
“வஸுபுத்ரியே என்று என்னை எங்கனம் அழைத்தீர்கள்? நான் ஜனித்த வரலாறு உமக்கு எப்படித் தெரியும்?” என்று துடுப்பு போட்டபடி கேட்டாள். கரையிலிருந்து படகு ஆடியாடி புறப்பட்டு கொஞ்ச தூரம் வந்திருந்தார்கள்.
பராசரர் அர்த்தபுஷ்டியான ஒரு புன்னகை புரிந்தார்.
“வஸுபுத்ரியே! உன் தேகத்தைப் பார்த்ததுமே எனக்கு காமம் பிறந்தது. என்னுடைய ஞானதிருஷ்டியால் நீ யார் என்று உடனே தெரிந்துகொண்டேன். உன்னுடைய பூர்வஜென்ம வரலாற்றைச் சொல்கிறேன் கேள்”
யமுனையின் வேகத்துக்கு ஈடு கொடுத்து படகை செலுத்திக்கொண்டிருந்தாள் சத்யவதி. யமுனை கரைபுரண்டோடும் சலசலசல ஒலியையும் ப்ளக்..ப்ளக்.. என்ற துடுப்பு நதிநீரைத் தள்ளும் ஓசையையும் தவிர வேறெந்த சப்தமும் இல்லை. தன்னுடைய கிறங்கடிக்கும் அழகை எண்ணி அவளே ஒரு தடவை தானாக நாணினாள். பராசரர் அவளின் பூர்வஜன்ம சரித்திரத்தை சொல்ல ஆரம்பித்தார். காலச்சக்கரத்தில் அவளை பின்னே இழுத்து கண்ணுக்கு காட்சிகளாயும் காதுக்கு கதை சொன்னார்.
“போன ஜென்மத்தில் நீ ஒரு அப்சரஸ். பர்ஹிஷத்துகள் என்று பிதிர்தேவதைகள் மேலே இருக்கிறார்கள். அவர்களுடைய மானச புத்ரி நீ. அச்சோதம் என்று தேவலோகத்தில் ஒரு தெளிந்த ஜலமுள்ள தடாகம் இருக்கிறது. அதில்தான் நீ பிறந்தாய். அதிலிருந்து நீ உயிர் பெற்று எழுந்து வந்ததால் அச்சோதை என்பது உன் பூர்வஜன்மப் பெயர். உன் பிதாக்களை நீ கண்டதேயில்லை.
அத்திரிகை என்ற அப்ஸரஸுடன் ஆகாயமார்க்கமாக சென்றுகொண்டிருந்தாய். உபரிசரவஸ் எனும் வஸு தனது விமானத்தில் அடிக்கடி உங்களுக்கு அருகிலேயே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். அப்போது அந்த வஸுவை நீ பிதாவாக அடைய எண்ணினாய். ஒரு அப்சரஸ் இதுபோன்ற மானுடனை பிதாவாக எண்ணியதால் நீ உன் யோகசக்தியை உடனே இழந்து கீழே விழ ஆரம்பித்தாய்.”
கதை சொல்லிக்கொண்டே அதைக் காட்சிகளாக நதியும் ஆகாயமும் தொடுமிடத்தில் காட்டிக்கொண்டிருந்தார் பராசரர். படகிற்கு துடுப்பு போடுவதையே மறந்துவிட்டு காதுக்கு ஒலியும் கண்ணுக்கு ஒளியும் பார்த்துக்கொண்டிருந்தாள் சத்யவதி. நடு ஆற்றுக்கு இன்னும் கொஞ்ச தூரம் இருந்தது.
“அப்படி நீ கீழே விழுந்து கொண்டிருக்கும் போது மூன்று விமானங்களைக் கண்டாய். பலகணி வழியாக வீட்டிற்குள் நுழையும் சூரியக் கதிர்களில் புகைப் போல காணப்படும் திரஸரேணு என்று சிறிய அணுவளவு தேகம் கொண்டவர்களான பிதிர்களைப் பார்த்து “தந்தைகளே!” என்று தீனஸ்ரவத்தில் உதவிக்குக் கூப்பிட்டாய். உடனே அவர்கள் உன்னை கீழே விழாதவாறு செய்தார்கள். அப்போது அவர்கள் உன்னிடம்...
“பெண்ணே! கலங்காதே!! நீ பிதா இல்லாமல் வஸுவின் புத்ரியாக பிறக்க நினைத்தாய். அத்திரிகை என்பவள் கங்கை யமுனை சங்கமங்களில் மத்ஸயரூபமாக பிறந்திருக்கிறாள். அவளுடைய கர்ப்பத்தில் ராஜாவுக்குப் பிறந்தவளாக ஆகப்போகிறாய். அப்போது அங்கு வரும் பராசரருக்கு ஒரு புத்திரனைப் பெறப்போகிறாய். அவன் பிரம்மரிஷியாகி வேதத்தை நான்காக வகுக்கப் போகிறான்.”
படகு நதியின் நடுவில் ஆடாமல் இருந்தது. கதையின் கனம் காரணமாக இருக்கலாம். சத்யவதி பராசரரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். பராசரர் இன்னும் தொடர்ந்தார்...
“மஹாபிஷக் என்னும் ராஜாவின் புத்திரனாக சந்தனு பிறப்பான். அவன் மூலமாக சித்ராங்கதனையும் விசித்ரவீர்யனையும் பெறப்போகிறாய். பின்னர் உன் உலகத்துப் போவாய். அவர்களால் முன் ஜென்மத்தில் சொல்லப்பட்ட நீ அழகான சத்தியவதியாகப் பிறந்திருக்கிறாய். அத்திரிகை என்றழைக்கப்பட்ட அந்த அப்சரஸ் பிரம்மாவின் சாபத்தினால் மீன் ஜென்மமெடுத்து உன்னைப் பெற்ற பின் ஸ்வர்க்கம் அடைந்துவிட்டாள். வம்ச விருத்திக்காக புத்திரன் வேண்டுகிறான். என்னுடன் சங்கமம் செய்ய வா” என்று கதை சொல்லி இருகரம் நீட்டி வாஞ்சையுடன் அருகில் அழைத்தார் பராசரர்.
தனது பூர்வஜென்மக் கதையில் மெய்மறந்திருந்த சத்யவதி துடுப்பு போடவிடல்லை. படகு தானகவே நட்ட நடு நதியில் தீவுபோலிருக்கும் ஒரு மணல் திட்டில் ஒதுங்கி தரைதட்டியிருந்தது.
“பகவானே! அக்கரையில் அநேக ரிஷிகள் இங்கே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் எப்படி சேர்வது?” என்று மந்தகாசப் புன்னகையுடன் கண்கள் கேள்வியாய் விரிய நாணத்துடன் கேட்டாள் சத்யவதி.
பராசரர் கண்களை மூடி சில மந்திரங்களை மனசுக்குள் ஜெபித்தார். எங்கிருந்தோ பனி மேகங்கள் கூட்டம் கூட்டமாக இறங்கி வந்துப் படகினைச் சூழ்ந்துகொண்டது. மேகங்கள் கீழே ஓடும் யமுனை ஜலத்திலிருந்து ஆகாசம் வரை ஒரு பிரம்மாண்ட வெண் திரை போல எழும்பி அவர்களை மூடிக்கொண்டது. தாபத்தோடு கண்களை மூடிக்கொண்டாள் சத்யவதி. பராசரர் மோகம் கொண்டு அவளை நெருங்கி முகத்தோடு முகம் உரசப் போனபோது சட்டென்று சுயநினைவு வந்து சத்யவதி தனது மீன் போன்ற அகலமானக் கண்களை பட்டென்று திறந்தாள்.
“ஸ்வாமி! சற்று பொறுங்கள். நான் எப்போதும் தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவள். உம்முடன் சேர்ந்தால் என்னுடைய கன்னிகாதர்மம் கெட்டுவிடும். இது வேண்டாம் என்று நினைக்கிறேன்” என்று விலகி முகத்தை பனித்திரைக்குக் காட்டி உட்கார்ந்தாள்.
பராசரர் விடவில்லை.
“பிரியமானவளே! என் விருப்பம் நிறைவேறிய பின்னர் நீ மீண்டும் கன்னிகையாகவே ஆகிவிடுவாய். விரும்பும் வரத்தைக் கேள். தருகிறேன்” என்று ஆசையைத் தூண்டினார் பராசரர்.
“நான் மீன் நாற்றத்துடன் இருக்கிறேன் என்று அனைவரும் முகம் சுளிக்கிறார்கள். அழகாக இருந்தாலும் நாற்றம் தடுக்கிறது. என் மேனி பரிமள சுகந்தம் வீசவேண்டும். அதற்கு அருள்புரிய வேண்டும்” என்று கேட்டாள். வரம் வழக்கப்பட்டது. பராசரரின் மடியில் சாய்ந்தாள். கந்தவதியானாள். ஒரு யோஜனை தூரத்திலிருப்பவர்களும் அவளது வாசனை மூக்கைத் துளைக்கும் ஆதலால் யோஜனகந்தியென்றும் அழைக்கப்பட்டாள்.
பராசரரும் சத்யவதியும் இணைந்தார்கள். பின்னர் உடனே கர்ப்பவதியானாள். உடனே குழந்தை பிறந்தது. சில கணங்களிலேயே கிடுகிடுவென வளர்ந்து ஏழு பிராயங்கள் நிரம்பிய புத்திரனானான். யமுனையின் தீவினில் பிறந்ததினால் அந்தப் பராசர புத்திரர் த்வைபாயனர் என்று பெயர் பெற்றார். கிருஷ்ண த்வைபாயனர் ஆகிய அவர் ஒவ்வொரு யுகத்திற்கும் தர்மம் கால் பங்கு விலகுவதையும் மனிதர்களின் ஆயுளும் சக்தியும் யுகங்களுக்குத் தக்கபடி இருப்பதையும் பார்த்து வேதங்களை நான்காக வகுத்தார். வேதங்களை வகுத்ததனால் அவருக்கு வியாஸர் என்ற பெயர் வந்தது.
சத்யவதி தனக்குப் பிள்ளை பிறந்ததை பார்த்து சந்தோஷமடைந்தாள். பிறந்தவுடனேயே யோகத்தில் கவனம் செலுத்தினார் வியாசர். பின்னர் அவளிடம் “நீ எண்ணியபோது உனக்கு என் ரூபத்தைக் காட்டுவேன்” என்று சொல்லிக்கொண்டு பராசரருக்கும் தாய்க்கும் நமஸ்காரம் செய்து புறப்பட்டார்.
அக்கரையில் பராசரரை விட்டுவிட்டு மீண்டும் இல்லம் திரும்பினாள் சத்யவதி. படகில் துடுப்புப்போடும் போது காலையில் கன்னியாயிருந்து மாலைக்குள் தாயாகி மீண்டும் கன்னியாக வீடு திரும்புகிறோம் என்கிற உணர்ச்சிப் பெருக்கில் வீட்டிற்குள் நுழைந்தவளை உச்சிரவஸ் என்னும் அவளுடைய வளர்ப்புத் தந்தை தடுத்தான்.
“ஏ மத்ஸயகந்தை! உன் மேனியிலிருந்து எப்படி சுகந்த வாசனை வீசுகிறது?” என்று கோபத்துடன் கேட்டான்.
“தந்தையே! பராசரர் என்ற மஹா ஞானி ஒருவர் இன்று என்னுடைய ஓடத்தை நடத்தும் திறன் பார்த்து சந்தோஷம் அடைந்தார். என்னுடைய மத்ஸய கந்தத்தை நீக்கி யோசனகந்தம் வரமருளினார். நீர் என்னை கோபிக்க வேண்டாம்” என்றாள்.
செம்படவ அரசன் குளிர்ந்து போய் அவளை உச்சிமோந்தான்.
[வியாஸ ஜனனம் என்னும் இந்த சிறந்த சரித்திரத்தைக் கேட்பவர்கள் சிலாக்கியமான சந்ததியுள்ளவர்களாக ஆகிறார்கள் என்று பலன் சொல்லியிருக்கிறார்கள்.]
#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#பராசரர்
#க்ருஷ்ணத்வைபாயனர்
#வியாஸர்
#அம்சாவதரணபர்வம்
#பகுதி_27
No comments:
Post a Comment