தளர்நடையுடன் வந்த தந்தையைப் பார்த்து பூருவுக்கு பரிதாபமாக இருந்தது.
“மகனே! என்னுடைய ஜரையை வாங்கிக்கொண்டு உன்னுடைய யவௌனத்தை எனக்கு அளித்தால் ஆயிரம் வருஷங்கள் அனுபவித்துவிட்டு மீண்டும் கொடுத்துவிடுகிறேன். செய்வாயா?” என்று தாபத்துடன் கேட்டான் யயாதி.
“மஹாராஜாவே! உமது விருப்பம் போல நான் ஜரையை வாங்கிக்கொள்கிறேன். எவ்வளவு வருஷகாலம் வேண்டுமானாலும் யவௌனத்தை அனுபவியும். சுகத்தில் திளையுங்கள். ஜரையோடு சேர்த்து உமது துன்பங்களையும் வாங்கிக்கொள்கிறேன்.” என்றான் பூரு.
“இதோ எனது ஜரையை உனக்கு அளிக்கிறேன்” என்று சுக்ரரை மனதில் தியானித்து தனது ஜரையை பூருவிடம் மாற்றிக்கொண்டான். யயாதி தினவெடுத்த தோள்களும் நிமிர்ந்த தலையும் பளபளவென்று சூரியன் போல ஜொலித்துக்கொண்டு இளமையாக மாறினான். பூரு யயாதி போல ஜரையுடன் சோர்ந்து போய் பக்கத்தில் நின்றான்.
யவௌனம் கிடைத்த சந்தோஷத்தில் யயாதிக்கு புதுரத்தம் பாய்ந்தது. காமஸுகங்களைக் கட்டுக்கடங்காமல் அனுபவித்தாலும் யக்ஞங்களினால் தேவர்களையும் சிரார்த்தங்களினால் பிதிர்களையும் திருப்திப்படுத்தி தர்மம் தவறாமல் பார்த்துக்கொண்டான். ஆயிரம் வருஷ காலம் சில கணங்களாகப் பறந்தது. அப்ஸரஸ்களுடன் ரமித்தான். ஆனந்தவெள்ளத்தில் நீந்தினான்.
ஆயிரம் வருஷங்கள் நிறைவடைந்தது. பூருவுக்கு இளமை கொடுக்கும் காலம் வந்துவிட்டது.
ஜரையுடன் தள்ளாடியபடி இருந்த பூருவின் முன் வந்து நின்றான் யயாதி.
“புத்திரனே! விருப்பமானது விரும்பியதை அடைவதினால் அடங்குவதேயில்லை. மாறாக அது வளர்கிறது. அக்னியில் நெய் ஊற்றியபின் கொழுந்து விட்டு திகுதிகுவென்று எரிவது போல ஆசை எரிகிறது. அனுபவித்தால் ஆசை தீராது. நெல் போன்ற தானியங்கள், பசு, பொன், பெண்கள் போன்றவற்றின் ஆசை தீரவே தீராது. காமஸுகங்களை கணக்கற்ற முறை அனுபவித்தாலும் தினமும் புதியதாக இருக்கிறது. ஆகையால் சுகதுக்கங்கள் ஜய அபஜெயங்களையெல்லாம் விட்டுவிட்டு பிரம்மத்திடம் மனதை செலுத்தப்போகிறேன். என்னுடைய சொல்லைக் கேட்டு நடந்தமையால் உன்னையே இந்த ராஜ்ஜியத்தின் மன்னனாக பட்டாபிஷேகம் செய்துவைக்கிறேன். உன் இளமையை வாங்கிக்கொண்டு எனக்கு மூப்பைக் கொடு”
அடுத்த கணம் பூரு யவௌனத்தை அடைந்தான். யயாதி ஜரையோடு கிழரூபமெடுத்துக் கூனி நின்றான்.
பிராமணோத்தமர்களும் நான்கு வர்ணத்தாரும் கனிஷ்ட குமாரனுக்கு முடிசூட்டும் யயாதியிடம் “ஜ்யேஷ்ட புத்திரன் யதுயிருக்கிறான். அவன் தம்பி துர்வஸு இருக்கிறான். சர்மிஷ்டையின் ஜ்யேஷ்டன் த்ருஹ்யு இருக்கிறான். பின்னர் அனு அதன்பின்னர் தான் பூரு பிறந்தான். மூத்தவர்களை தாண்டி கனிஷ்டனுக்கு பட்டாபிஷேகம் செய்கிறாயே.. இது என்ன தர்மம்?” என்று கேட்டார்கள்.
“ஜ்யேஷ்டனாகிய யது என் வாக்கை கேட்கவில்லை. பிதாவுக்கு விரோதமாக நடப்பவன் புத்திரன் இல்லை. தாய் தந்தையர்களின் சொல் கேட்டு நெறிதவறாமல் இருப்பவனே புத்திரன். புத்திரன் என்பதன் அர்த்தம் உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும்..” என்று பேசுவதை நிறுத்திவிட்டு சுற்றிலும் பார்த்தான். பெரியோர்களும் மறையோர்களும் சுற்றிலும் அசையாமல் நின்றிருந்தார்கள். பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு யயாதி தொடர்ந்தான்...
“புத் என்பது நரகத்தின் பெயர். துக்கமென்பது நரகம். இம்மையிலும் மறுமையில் நரகமெனப்பட்ட அத்தகைய துக்கங்களிலிருந்து பெற்றோரைக் காப்பவனே புத்திரன் எனப்படுகிறான்.”
யயாதி மஹாராஜா இன்னும் பேசுவார் போலிருந்தது. பிரஜைகள் அரண்மனை வாசலில் கூட ஆரம்பித்தனர். ஞானவானாகிய யயாதி இன்னும் பேசினான்.
”ஊமை, குருடன், செவிடன், வெண்குஷ்டமுள்ளவன், தன் தர்மத்தை செய்யாதவன், திருடன், பாபி ஆகியோர் முதலில் பிறந்திருந்தால் கூட ஜ்யேஷ்ட புத்திரனென்று சொல்லப்படுவதில்லை. எவன் ஒருவன் இவ்வுலகத்திற்கும் அவ்வுலகத்திற்கும் நன்மை செய்கின்ற குணமுள்ள புத்திரனே ஜ்யேஷ்ட புத்திரன். பிதாவின் ஹ்ருதயத்திலிருந்து இவன் பிறந்தவன் என்று வேதம் சொல்கிறது. யது துர்வஸு த்ருஹ்யு அனு என்று எல்லா புத்திரர்களாலும் அவமதிக்கப்பட்டேன். சுக்ராசாரியாரும் உனக்கு ஒத்திருப்பவனுக்கே ராஜ்ஜியம் வழங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். மேலும் எந்தப் புத்திரன் குணங்கள் நிரம்பினவனும் எப்போதும் தாய்தந்தையரைப் பேணிப் பாதுக்காப்பவனோ அவன் சிறியவனானாலும் பெரியவன் என்று வேதத்திலும் தர்மசாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது”
கூட்டம் வாயடைத்துப்போய் நின்று கேட்டுக்கொண்டிருந்தது. பூருவுக்கு ராஜ்யாபிஷேகம் செய்வது என்று முடிவு செய்து அதற்கான காரியங்களில் அனைவரையும் ஈடுபடச்சொன்னான். தோரணங்களாலும் கொடிகளாலும் நகரம் அழகுப்படுத்தப்பட்டது. வாத்தியங்கள் முழங்க நகரமே திருவிழா போல களைகட்டியிருந்தது. பூருவுக்கு பட்டாபிஷேகம் செய்வித்தான் யயாதி. யதி துர்வஸு த்ருஹ்யு அனு ஆகியோரை ராஜ்ஜியத்தின் எல்லைகளில் நியமித்தான்.
**
தேவயானியுடனும் சர்மிஷ்டையுடனும் வானபிரஸ்தம் கிளம்பினான் யயாதி. உத்தமமான தவத்தில் ஈடுபட்டான்.
[யதுவிடமிருந்து பிறந்தவர்கள் யாதவர்கள் என்றும் துர்வஸுவிடமிருந்து பிறந்தவர்கள் யவனர்கள். த்ருஹ்யுவிடமிருந்து பிறந்தவர்கள் போஜர்கள். அனுவின் புத்திரர்கள் மிலேச்சர்கள். பூருவின் வம்சத்தில் வந்தவர்கள் பௌரவ வம்சம்.]
வனத்தில் காய் கிழங்குகளை புசித்துக்கொண்டு நீண்ட காலங்கள் வசித்தான். காட்டில் சிதறின தானியங்களையும் நொய்களையும் ஜீவனத்திற்கு எடுத்துக்கொண்டான். அன்னத்தினால் அதிதிகளை திருப்தி செய்தான். எல்லோர்க்கும் உணவு அளித்தபின் மிச்சமிருக்கும் அன்னத்தை ஆகாரம் செய்து ஆயிரம் வருஷ காலம் இப்படி இருந்தான். அடுத்த முப்பது வருஷங்கள் ஜலத்தை மட்டுமே குடித்து காலம் தள்ளினான். அடுத்த ஒரு வருஷ காலம் வாயுவையே சாப்பிட்டான். நாற்புறமும் தீ மூட்டி ஆகாயத்தில் சுட்டெரிக்கும் சூரியனை ஐந்தாவது தீயாக்கி பஞ்சாக்கினிக்கு நடுவே ஒற்றைக் காலில் நின்று தவம் புரிந்தான்.
தவப்பயனால் பூமிக்கும் ஆகாசத்துக்குமிடையே ஒரு ஒளிச்சுடர் போன்ற பாதை எழுந்தது. அப்படியே பூதவுடலோடு யயாதி சொர்க்கம் சென்றான். ஸ்வர்க்கத்திலிருந்து தேவலோகத்துக்கும் பிரம்மலோகத்துக்கும் இடையே வெகுகாலம் சென்றுவந்துகொண்டிருந்தான்.
இந்திரன் ஒரு முறை அந்தப் பக்கமாக யயாதி சென்றுகொண்டிருந்த போது அவனை சபைக்குக் கூப்பிட்டான்.
”யயாதி! உன் கனிஷ்டனிடம் ராஜ்ஜபாரத்தைக் கொடுத்துவிட்டு வானபிரஸ்தம் கிளம்புவதற்கு முன்னர் சொன்னவைகளை இங்கே சொல்வாயா?” என்று கேட்டான்.
தேவர்களின் சபை. அனைவரின் கண்களும் யயாதி மேலே பதிந்திருந்தன. அவனது பேச்சைக் கேட்கும் ஆர்வ மிகுதியில் ஓரமாக நின்ற சில தேவர்கள் முன்னே வந்தார்கள்.
“சக்தியுள்ளவனிடம் பொறுமை இருக்கும். சக்தியில்லாதவன் கோபிப்பான்.”
“யார் யாரை கோபிப்பான்?” என்று யயாதியை இன்னும் ஒருமுகப் படுத்தி பதில் சொல்ல வைத்தான் இந்திரன்.
“துஷ்டன் சாதுவை, பலமில்லாதவன் மிகுந்த பலமுள்ளவனையும், ரூபமில்லாதவன் ரூபமுள்ளவனையும் தனமில்லாதவன் தனமுள்ளவனையும் கருமம் விட்டவன் கருமம் செய்பவனையும் அதர்மம் செய்பவன் தர்மிஷ்டனையும் குணமில்லாதவன் குணமுள்ளவர்களையும் பகைப்பார்கள்”
இந்திரனுக்கு ஆச்சரியம். ஒரு ராஜாவுக்கு இவ்வளவு தர்மங்கள் தெரிந்திருக்கிறதா என்று வாய் பிளந்தான்.
“ராஜனே! உலக தர்மங்களை எங்களுக்குச் சொல்வாயாக” என்று கேட்டு அரியணையில் சாய்ந்துகொண்டான். தேவர்கள் அனைவரும் யயாதியின் தர்ம உபன்யாசம் கேட்கத் துவங்கினார்கள்.
“கோபிப்பவனைவிட கோபமே வராதவன் சிறந்தவன். பொறுமையில்லாதவனை விட பொறுமை உள்ளவன் சிறந்தவன். அவித்துவானிலும் வித்வான் சிறந்தவன். ஒருவன் திட்டினால் பதிலுக்குத் திட்டக்கூடாது. திட்டு வாங்கியவனின் பொறுமையும் வருத்தமுமே திட்டியவனை எரித்துவிடும். திட்டியவனின் புண்ணியத்தை திட்டப்படுகிறவன் அடைவான். புண்ணைக் குத்துகிறது போன்ற ஹிம்சையான சொல்லை சொல்லுதல் தகாது. யோக்கியமானவன் யோக்கியர்களை அனுசரித்துப் போக வேண்டும். சொற்கள் எனும் அம்புகள் வாயிலிருந்து புறப்படுகின்றன. அவற்றால் அடிக்கப்பட்டவன் இரவும் பகலும் அழுகிறான். ஆகையால் இனியசொல்லே சொல்லத்தக்கது. பூஜைக்குரியவர்களை பூஜிக்கவேண்டும்”
இந்திரசபை களைகட்டியிருந்தது. யயாதி மகாராஜன் இன்னும் பல தர்மோபதேசங்களைச் செய்தான். எல்லோரும் திருப்தியாயிருந்த நேரத்திலே தேவேந்திரன் ஒரு கேள்வி கேட்டான்.
“யயாதி ராஜனே! தவத்தில் நீ யாருக்கு ஒப்பானவன்?”
சுற்றிலும் அலட்சியமாக ஒரு பார்வையை ஓட்டினான் யயாதி. தேவர்களும் ரிஷிபுங்கவர்களும் கந்தர்வர்களும் அவையில் அடக்கமாக அமர்ந்திருந்தார்கள். மிகுந்த செருக்கோடு “தேவர்களிலும் மனிதர்களிலும் கந்தர்வர்களிலும் ரிஷிகளிலும் தவத்தில் என்னை ஒத்தவர்கள் யாருமில்லை” என்று கர்வமொழி பகர்ந்தான்.
”ராஜாவே! சமானமானவர்களையும் மேலானவர்களையும் கீழானவர்களையும் அறியாமலேயே அவமதித்தாய். அதனால் இந்த தேவலோகத்தில் உனக்கு இனிமேல் இடம் கிடையாது. உன் புண்ணியங்கள் அழிந்துவிட்டது. இப்போது இங்கிருந்து நீ கீழே விழுவாய்” என்று சினம் கொண்டு இரைந்தான் இந்திரன்.
யயாதி வருத்தத்துடன் “நான் கீழே விழுந்தாலும் சாதுக்களின் நடுவே விழு வேண்டும்” என்று இந்திரனை வேண்டிக்கொண்டான்.
“சரி! இனிமேல் நீ யாரையும் அவமதிக்காதே! சாதுக்களின் ஸமீபத்தில் விழுவாய். அப்படி விழுந்து எழுந்து மீண்டும் இந்த ஸ்தானத்தை அடைவாய் “ என்று எச்சரிக்கை செய்தான் இந்திரன்.
கீழே விழுந்துகொண்டிருந்த யயாதி ஆகாயத்தின் நடுவிலேயே ரிஷிக்கூட்டத்தின் நடுவே விழுந்தான். அதில் ராஜரிஷியான அஷ்டகன் என்பவன் “வானத்திலிருந்து சூரியன் நழுவி விழுவதுபோல விழுகிறாயே நீ யார்? எந்த காரணத்தினால் ஸ்வர்க்கம் வந்தாய்? ஏன் விழுகிறாய்?” என்று கேட்டான்.
“நான் நகுஷனின் புத்திரன். பூருவின் பிதா. யயாதி. ரிஷிகளையும் தேவர்களையும் அவமதித்ததல் புண்ணியம் குறைந்து கீழே விழுகிறேன்.”
“தர்மங்கள் பல தெரிந்தவன் போலிருக்கிறாய்...” என்று பேச்சைத் தொடர்ந்தான் அஷ்டகன்.
“பெரிய செல்வத்தினால் ஒரு போதும் சந்தோஷமடையக்கூடாது. வேதங்களை ஓத வேண்டும். அஹங்காரத்தை விட வேண்டும். ஞானமுள்ளவன் துக்க காலத்தில் துக்கப்படக் கூடாது. ஸந்தோஷக் காலத்தில் ஸந்தோஷப்படவும் கூடாது. ஸர்ப்பங்களும் புழுக்களும் ஜலத்ஹ்டிலுள்ள மீன்களும், கற்களும் புற்களும் கட்டைகளுமாகிய யாவையும் தத்தம் விதி முடிந்தவுடனேயே அவற்றின் இயற்கையை அடைகின்றன. அஷ்டகனே! துக்கமும் ஸுகமும் நிலையற்றவை. இதை அறிந்தபின் நான் எதனால் துன்பமடைவேன்? “
அஷ்டகன் அதிசயத்தினான். ”யயாதியே நீ எவ்வளவு வருஷகாலங்கள் எந்ததெந்த லோகத்தில் இருந்தாய்?” என்று கேட்டான்.
“இந்தப் பூமியில் சக்கரவர்த்தியாக ஆயிரம் வருஷ காலங்களுக்கு மேல் இருந்தேன். ஆயிரம் வாசல்கள் நூறு யோஜனை தூரம் நீண்ட இந்திரலோகத்தில் ஆயிரம் வருஷம் வசித்தேன். பின்னர் பிரம்மலோகத்தில் ஆயிரம் வருஷம். அங்கே பிரம்மாவின் க்ருஹத்திலேயே வசித்தேன். அப்ஸரஸுகளுடன் விளையாடிக்கொண்டு அழகான மணமும் ரூபமும் உள்ள புஷ்பித்த மரங்களைப் பார்த்துக்கொண்டும் பத்து லக்ஷ வருஷகாலம் நந்தவனத்தில் வசித்தேன். ரிஷிகளையும் தேவர்களையும் அவமதித்ததால் அங்கிருந்து கீழே விழுந்தேன். ஹோம திரவியங்களின் வாசனையினால் ஈர்க்கப்பட்டு உங்களுக்கு சமீபத்தில் கிடந்தேன்”
“பத்து லக்ஷ வருஷம் நந்தவனத்தில் வசித்தவன் எப்படியப்பா கீழே வந்து விழுவாய்?” என்று கேட்டான் அஷ்டகன்.
“இந்த லோகத்தில் பணமில்லாதவன் பந்துவாயிருந்தாலும் ஸ்நேகிதனாக இருந்தாலும் மனிதர்கள் எப்படி விட்டுவிடுவார்களோ அது போல புண்ணியம் இழந்தவர்களை அந்த லோகத்தில் விட்டுவிடுகிறார்கள்”
யயாதியின் இந்தப் பதிலில் திருப்தியடைந்த அஷ்டகன் மேலும் பல தர்ம விளக்கங்களை அவனிடம் கேட்கிறான்.
[வர்ணாசிரம தர்மங்கள் பற்றியும், இன்னும் சில சிறந்த தர்மங்களைப் பற்றி யயாதி சொல்வது அடுத்த பகுதியில் தொடரும்]
No comments:
Post a Comment