Saturday, December 16, 2017

பரதன் - மஹாபிஷக் - பிரதீபன்

பரதன்
=======
”இங்கிருந்து நீ போகலாம்...” என்று தன்னை விரட்டிய துஷ்யந்தனைப் பார்த்து சகுந்தலைக்கு கோபம் வரவில்லை. மாறாக அவனுடன் சம்வாதம் செய்வதற்கு தயாரானாள்.

ரிஷிகளும் பிராமணர்களும் நிறைந்த அந்த சபையில் சகுந்தலையின் பேச்சுக்கு எதிர் பேச்சு இல்லை. உனது பிறப்பு இழிவானது என்று பரிகசித்த துஷ்யந்தனுக்குப் பதில் கூறினாள்.

“மேனகை தேவலோகத்துவாசி. நீர் பூமியில் சஞ்சரிக்கிறீர். நான் ஆகாயத்தில் மிதப்பவள். நான் மஹாமேருவுக்கு சமானமானவளாக இருக்கிறேன். நீர் கடுகுபோல் கிடக்கிறீர். இதற்கு ஒரு உதாரணம் தரட்டுமா?” என்று அலட்சியமாக சிரித்தாள் சகுந்தலை.

துஷ்யந்தன் பேச்சின்றி அமர்ந்திருந்தான்.

“கோரமாக இருக்கும் ஒருவன் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்க்காத வரையில் அவன் தான் அழகு என்றிருப்பான். கண்ணாடியில் பார்க்கும் தருணத்தில் அப்படி நினைத்தற்கு வெட்கப்படுவான். மதம் பிடித்த யானைகள் தனது தலையில் மண்ணை தூற்றிக்கொண்டு கொண்டாடுகிறதோ அதுபோலவே துஷ்டர்கள் பிறத்தியாரை துவேஷித்து இன்பமடைகிறான். உன் புத்திரனையே நீ இல்லையென்று சொல்கிறாயே.. இது அநியாயம். தேவர்கள் உன்னை மன்னிக்கமாட்டார்கள். உன்னைப் பாபம் வந்து சேரும்”

சகுந்தலையின் பேச்சு அதிகமானது. சப்தம் கூடியது. சபையில் அவளது பெருங்குரல் எதிரொலிக்கத் தொடங்கியது. அவளது சத்தியமான பேச்சைக் கேட்டு அனைவரும் நடுங்கினர்.

“பிறர்க்கு நன்மை செய்யாதவன், பொய் பேசுபவன், சுத்தமில்லாதவன், நாஸ்திகன், ஆசாரம் தப்பினவன் ஆகியோரை பாபம் உடனே பிடித்துக்கொள்கிறது. பேசுகிற மனிதர்களின் நல்லவை கெட்டவைகளுள் கெட்டவற்றைப் மட்டும் எடுத்துக்கொள்ளும் மூடன் பன்றி நரகலை எடுத்துக்கொள்வதற்கு சமானம். ஆனால் அறிவுள்ளவன் ஹம்சபட்சி போன்று தண்ணீரில் கலந்த பால் போல நல்லவற்றை எடுத்துக்கொள்கிறான்.”

அசையாமல் அமர்ந்திருந்த துஷ்யந்தனுக்கு சகுந்தலையை அங்கிருந்து அகற்ற வழிதெரியவில்லை. அறிஞர்களும் அனைவரும் தர்ம உபாக்யானம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவள் கையில் பிடித்திருந்த சிறுவன் அந்த பொருட்செரிவான வசனங்களை ஒன்றுவிடாமல் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான்.

”ராஜாவே! பிதிர்கள் புத்திரனை சந்ததி விருத்திக்கு ஆதாரமாக சொல்கிறார்கள். பிதிர்களை நரகத்திலிருந்து காப்பாற்றும் புத்திரனை கைவிடக்கூடாது. ஒ ரு குளம் நூறு கிணறுகளைக் காட்டிலும் சிறந்தது. ஒரு யாகம் நூறு குளங்களைக் காட்டிலும் சிறந்தது. ஒரு புத்திரன் நூறு யாகங்களில் சிறந்தவன். ஆனால் உமக்கு ஒன்று தெரியுமா? ஸத்தியமானது நூறு புத்திரர்களிலும் சிறந்தது”

சிறந்தவைகளைக் கேட்டு அந்த சபையில் கூடியிருந்த பிரஜைகள் ஆஹாகாரம் செய்தார்கள். மந்திரிபிரதானிகளும் ரிஷிகளும் சகுந்தலையின் புத்தி கூர்மையையும் அவளுக்குத் தெரிந்த தர்மத்தின் ஆழத்தைப் பார்த்து அதிசயித்தனர்.

“ராஜஸ்ரேஷ்டரே! சத்தியத்துக்கு ஒப்பான தர்மம் எங்குமில்லை. ஆயிரம் அஸ்வமேதங்களையும் ஒரு சத்தியத்தையும் தராசில் வைத்து நிறுத்துப் பார்த்தால் சத்தியம் வைத்த தட்டே எடைமிகுந்து கீழே இறங்கும். எல்லா வேதஙக்ளை ஓதுதலும் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும் ஒரு சத்தியத்தின் பதினாறில் ஒரு பாகத்திற்கு ஈடாகாது.”

துஷ்யந்தன் எதற்கும் மசியவில்லை. மௌனம் காத்தான்.

“நீர் என்னிடம் சேர்ந்தது பொய் என்றும் நான் இப்போது சொல்வதையும் நம்பவில்லை என்றால் நான் என் பிதாவிடமே செல்கிறேன். ஆனால் ஒன்று சொல்வேன் மனதில் நிறுத்திக்கொள்ளும். இவனை நீங்கள் புத்திரன் என்று அங்கீகரிக்காவிட்டால் கூட இவன் இந்த நாலு கடல்களும் சூழ்ந்த புவனியை ஆளப்போகிறான்.... நீர் இல்லாமலேயே அவன் சக்கரவர்த்தியாகப்போகிறான். இது தேவர்களின் ஆசி....” என்று சொல்லிவிட்டு தனது புத்திரனைக் கையில் பிடித்துக்கொண்டு சபையை விட்டு வெளியேறத் துவங்கினாள்.

அப்போது திடீரென்று ஒரு ஒளிப்பிழம்பு சபையின் உச்சியில் தோன்றியது. அந்த அசரீரி சொன்னது - “சகுந்தலை சொல்வது சத்தியம். தாய் தோல் பை போன்றவள். புத்ரன் பிதாவைச் சேர்ந்தவன். நீ இந்த துஷ்யந்தப் புத்திரனை உன்னுடன் சேர்த்துக்கொள். பதிவ்ரதையான சகுந்தலையை பூஜிக்கவேண்டும். இவன் உன்னால் கர்ப்பாதானம் செய்யப்பட்டவன். இவனை தர்மத்தினால் நீயாகவும் எங்கள் சொலுக்காகவும் தாங்கிக்கொள்ள வேண்டியிருப்பதால் இவனுக்கு பரதன் என்ற பெயர் இருக்கட்டும். பரதனால் உண்டாகும் புகழ் பாரதி எனப்படும். இவனால் உன் குலத்திற்கு பெருமை வரும். இவனுக்குப் பின்னால் வரும் சந்ததியினர் பாரதவர் என்றே பெயர் பெறுவார்கள்”

உடனே பரதன் மீதும் சகுந்தலையின் சிரசின் மீதும் விண்ணிலிருந்து பூமாரி பொழிந்தது. அரியணையில் இருந்து கீழே இறங்கி அவர்கள் இருவரும் நிற்குமிடத்திற்கு வந்தான் துஷ்யந்தன்.

“அவையோர்களே! சகுந்தலை வந்த சிறிது நேரத்தில் அவளை நான் அடையாளம் கண்டுகொண்டேன். அவளது பேச்சை மட்டும் கேட்டு நான் அவளை ஏற்றுக்கொண்டால் பெருமையாக இருந்திருக்காது. இந்த உலகம் என்னை சந்தேகித்திருக்கும். இப்போது தேவர்களின் பூமழை பொழிந்து அவர்கள் பவித்ரமானவர்கள் என்பதை ஊர்ஜிதம் செய்தது.”

மகிழ்ச்சியோடு பரதனைக் கட்டி உச்சிமோந்து முத்தமிட்டான். சகுந்தலை நாணத்துடன் அருகில் நின்றாள்.

”கணவன் செய்த பிழையைப் பொறுப்பதனால் ஸ்திரீகள் பதிவ்ரதா தர்மத்தை அடைகிறார்கள்” என்று உணர்ச்சி பொங்க சொன்னான் துஷ்யந்தன்.

பின்பு அவர்கள் இருவரையும் தனது தாய் ரதந்தரியிடம் அழைத்துச்சென்றான். “தாயே! இவள் விசுவாமித்திரரின் பெண். கண்ணுவரால் வளர்க்கப்பட்டவள். உன் மருமகள். இது என்னுடைய மகன். பரதன்” என்று அறிமுகம் செய்துவைத்தான். நமஸ்கரித்த மருமகளுக்கு ஆசி கூறினாள். பேரனைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டு மகிழ்ந்தாள்.

“உன்னைப் போலவே இருக்கிறான் உன் மகன்.” என்று துஷ்யந்தனிடம் பெருமையாகச் சொன்னாள் ரதந்தரி. “பெண்ணரசியே! நீ உயர்ந்த போகங்களை அனுபவிப்பாய்” என்று ஆசீர்வதித்தாள்.

பரதனுக்கு யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்த துஷ்யந்தன் இன்னும் நூறு வருஷ காலங்கள் ஆட்சிபுரிந்து வனம் ஏகினான்.

பரதன் நிறைய அஸ்வமேதயாகம் செய்தான். கோவித்தம் என்ற சிறப்புடைய அஸ்வமேதயாகம் செய்யும் போது அந்த யாகத்தில் கண்ணுவ மஹரிஷிக்கு ஆயிரம் கோடி தங்கத் தாமரைகளை பரிசாக அளித்தான். யமுனை கங்கா சரஸ்வதி நதிக்கரைகளில் நூறு நூறு அஸ்வமேதயாகங்களைச் செய்தான். இவ்வாறு பல யக்ஞங்களைச் செய்து அவனக்குப் பின்னரும் பரதவசம் என்று பெயர்பெற்றது.

[இதன் பின்னர் பல பரதவம்சத்து மன்னர்களின் பெயர்கள் வருகிறது. ஜனமேஜயன், திருதராஷ்டிரன், பாண்டு போன்ற பெயர்கள் இரண்டு முறையாவது இடம் பெறுகிறது. இதில் மஹாபாரதக் கதை நகர்த்துவதற்கு மஹாபிஷக், பிரதீபன், சந்தனு ஆகியோர் முக்கியமானவர்கள். நாம் மஹாபிஷக்கிலிருந்து ஆரம்பிப்போம்]

**

மஹாபிஷக்
===========
தோல்வியடையாத பராக்கிரமம் உடையவன் மஹாபிஷக். சத்தியம் தவறாதவன் கூட. அவன் ஆயிரம் அஸ்வமேதயாகம் செய்தான். நூறு ராஜஸுய யாகம் இடைவிடாமல் செய்தான். அதனால் அவன் தேவபதவியை அடைந்தான்.

இந்திரன் அலங்கரிக்கும் தேவசபையில் அவனுக்கும் ஒரு ஆசனம் தரப்பட்டது. ராஜரிஷியாக கம்பீரமாக உட்கார்ந்திருந்தான். ஒரு நாள் பிரம்மதேவரும் அமர்ந்திருக்கும் சபையில் நதியில் புண்ணியமானதான கங்காதேவி வந்தாள். அப்போது யாரும் எதிர்பாரத வகையில் காற்று வீசியது. அதில் கங்காதேவியின் மேலாடை விலகியது. உடனே தேவர்குலம் முழுவதும் தலை குனிந்துகொண்டார்கள். ஆனால் மஹாபிஷக் மட்டும் அவளது மேலாடை கலைந்த நிலையை இரசித்துப் பார்த்தான்.

பிரம்மர் சினம் கொண்டார். “அறிவுகெட்டவனே! நீ மனிதனாய்ப் பிறந்து பின்பு நல்ல லோகங்களை அடைவாய். கங்காதேவி மனுஷ்ய லோகத்தில் உனக்கு வேண்டாதவற்றைச் செய்வாள். அதைக்கண்டு என்று உனக்கு கோபம் வருவோ அன்றுதான் நீ சாபத்திலிருந்து விடுபடுவாய்”

”பிரதீப ராஜாவுக்கு நான் மகனாப் பிறக்க விரும்புகிறேன்” என்ற வரத்தை பிரம்மதேவரிடம் பெற்றுக்கொண்டான். கங்காதேவி மஹாபிஷக்கையே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு சபையிலிருந்து வெளியேறினாள்.

அவள் போகும் வழியில் அஷ்ட வஸுக்கள் என்போர் மிகவும் துக்கத்துடன் எதிரில் வந்தார்கள். “தேவரீர்களே! ஏனிப்படி சோகமாக இருக்கிறீர்கள்? நலமா?” என்று கேட்டாள்.

“மஹாநதியே! வசிஷ்ட முனிவரால் மானிட கர்ப்பத்தில் பிறக்கக்கடவது என்கிற சாபத்தினால் பீடிக்கப்பட்டுள்ளோம். அந்த வேதவாக்கை மீற முடியாது. மனுஷ்ய ஸ்திரீயின் கர்ப்பம் புகமாட்டோம். நீயே அந்த மனுஷியாக வந்து எங்களுக்கு சாபம் தீர்ப்பாய்” என்று கேட்டுக்கொண்டார்கள்.

“மனுஷ்ய லோகத்தில் எந்த உத்தமன் உங்களை உற்பத்தி செய்வான்?” என்று கேட்டாள் கங்காதேவி.

“பிரதீபனுக்கு சந்தனு என்னும் ராஜா பெரும் கியாதி பெற்று விளங்கப்போகிறான். அவன் எங்களை உற்பத்தி செய்யலாம்” என்றார்கள்.

கங்காதேவிக்கு அளவில்லாத சந்தோஷம். ”எனக்கும் சம்மதம்” என்று சொல்லி மகிழ்ச்சியுடன் புறப்பட்டாள்.

“கங்காதேவியே! எங்களுக்கு இந்த மானுட ஜென்மம் நீண்டகாலம் இல்லாதிருக்கும்படி எங்களை ஜலத்தில் போட்டுவிட வேண்டும்.”

“ஆனால் அந்த சந்தனு மஹாராஜா சந்ததி வளர புத்திரனக்காக என்னுடன் சேரும் போது அதை இல்லாமல் செய்தல் தகாது” என்றாள்.

“நாங்கள் எங்கள் சக்தில் நாலில் ஒரு பங்கு தருவோம். அந்த சக்தியில் உனக்கும் அந்த ராஜாவுக்கும் ஒரு புத்திரன் உண்டாவான்” என்றார்கள்.

கங்காதேவிக்கும் வஸுக்களுக்கும் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு தத்தம் வழி சென்றார்கள்.

**

பிரதீபன்
========

எல்லா ஜீவராசிகளுக்கும் நன்மையே செய்தவன் பிரதீபன். அவன் கங்கோத்பத்திக்கு சென்று அநேக வருஷ காலம் தவம் செய்தான். ஒரு நாள் கங்கா நதிக்கரையில் வேதம் சொல்லிக்கொண்டு அமர்ந்திருந்தான் பிரதீபன். அப்போது அழகிய உருக்கொண்டு அந்த கங்கையிலிருந்து எழுந்து கங்காதேவி அந்த பிரதீபனின் வலத்தொடையில் வந்தமர்ந்தாள்.

கண் மூடி வேதம் சொல்லிக்கொண்டிருந்தவன் இமை திறந்து பார்த்தான். வலது தொடையில் அழகான பெண்ணொருத்தி அமர்ந்திருந்தாள்.

“அழகியவளே! உன்னுடைய விருப்பம் என்ன?” என்று கேட்டான்.

“ராஜனே! உன்னிடம் நான் காதல் கொண்டிருக்கிறேன். நீ என்னை அடைவாய்” என்று சொன்னாள் கங்காதேவி.

“நான் பிறன் மனைவியையும் வேறு வர்ணத்தில் பிறந்தவளையும் அடையமாட்டேன். இது தர்மம். எவன் தன் மனைவியை விட்டு பிறர் மனைவியை அடைகிறானோ அவன் பிரளயகாலம் வரை நரகத்திலிருந்து விடுபட முடியாது.”

கங்காதேவி சிரித்தாள்.

“ராஜாவே! நான் அடையத் தகாதவள் அல்ல. இழிவானவளுமில்லை. உன்னைக் காதலிக்கிறேன். என்னை நீயும் காதலித்து அடையலாம்” என்று தனக்காக வாதாடினாள்.

“பெண்ணரசியே! வலது தொடை மகள் மருமகளுக்கு உரியது. இடது தொடையே காதலிக்காக. ஆகையால் உன்னை நான் என் மருமகளாக வரிக்கிறேன். நீ எனது புத்ரனை அடைந்து மகிழ்” என்றான் பிரதீபன்.

கங்காதேவிக்கு அளவுகடந்த ஆனந்தம் ஏற்பட்டது.

“ராஜசிரேஷ்டனே! நீ தர்மம் நன்கு தெரிந்தவன். உன் புத்திரனை நான் பர்த்தாவாக அடையப்போகிறேன். பெயர்பெற்ற பாரதவம்சத்தில் சேரப்போகிறேன். நான் சொல்வது ஒன்றை உன் புத்திரனிடம் எடுத்துச்சொல்லி சம்மதிக்க வைக்கவேண்டும். உடன்படிக்கை செய்து கொள்வோமா?” என்று கேட்டாள் கங்காதேவி.

“சொல்லம்மா” என்றான் தயையுடன்.

“நான் என்ன செய்தாலும் அதை உங்கள் புத்திரன் விசாரிக்கக்கூடாது.”

கொஞ்சம் கொடூரமான உடன்படிக்கை. ஆனாலும் பிரதீபன் அதை ஒத்துக்கொண்டான். அவன் ஆச்சரியமாக அவளைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே பனிப்புகை போல காற்றில் மறைந்துபோனாள்.

தனக்கு சந்ததி தோன்றப்போவதை எண்ணி மகிழ்ச்சியுடன் அரண்மனை திரும்பினான் பிரதீபன்.


#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#பரதன்
#பிரதீபன்
#மஹாபிஷக்
#ஸம்பவபர்வம்
#பகுதி_39

No comments:

Post a Comment