Saturday, December 16, 2017

யயாதியின் வனப் பிரவேசம்

சுக்கிராச்சாரியார் “சென்று வா!” என்று இருகை உயர்த்தி கசனுக்கு விடை கொடுத்துவிட்டார். அவரிடம் ஆசீர்வாதம் பெற்றாகிவிட்டது. தேவயானியுடனும் அவளுக்குப் பிரியமான ஏவலாளாகவும் ஆயிரம் வருடங்கள் ஸ்நேகிதமாகப் பழகியிருக்கிறான். மூன்று முறை அவளால் காப்பாற்றப்பட்டிருக்கிறான். அவளை விலக்கிவிட்டுச் செல்வது சத்யம் பழகுபவர்களுக்கு அழகல்ல. தர்மமல்ல. முறையல்ல.

“தேவயானி! நான் சென்று வருகிறேன்” என்றான் கசன். நேருக்கு நேராக அவளைப் பார்ப்பதற்கு சங்கோஜப்பட்டான். அவளுடைய உள்மனசின் நோக்கம் அறிவான் அவன்.

“கல்வியில் நீ தான் பெரியவன். ஒழுக்கத்தில் உன்னை விட மேலானவன் இங்கில்லை. தவத்தில் சிறந்தவன். இந்திரியங்களை அடக்கி ஆள்பவன். ஆனால் ஒரு பெண்ணின் மனசைப் புரிந்துகொள்ள முடியாத ஆளாக இருக்கிறாய் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. என் தந்தையிடம் சென்று என்னை பாணிக்கிரஹணம் செய்துகொள்கிறேன் என்று சொல்! அவர் உன்னை கோபிக்க மாட்டார். நாமிருவரும் புது வாழ்வு தொடங்குவோம்!”

கசன் இரண்டடி அவளைவிட்டு பின் நகர்ந்தான். கிளம்பும் வேளையில் சோதனையா என்று கவலைப்பட்டான். தேவயானி அசையாமல் அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள். கீழே குனிந்தபடி...

“உன் பிதா எனக்கு பூஜைக்குரியவர். அது போலதான் நீயும் என் பூஜைக்குரியவள். நான் எப்போதும் பகவானாகிய என் குருநாதரை விட உன் மீது அளவுகடந்த மரியாதை வைத்திருக்கிறேன். நீ அவரின் அன்பு மகள். இப்படியெல்லாம் பேசாதே” என்றான் கசன். பின் நிமிர்ந்த கசனின் கண்களில் கனிவு இருந்தது. தேவயானி சிடுசிடுவானாள். கோபம் கொப்பளிக்க....

“நீ ஆங்கிரஸின் பேரன். ப்ருஹஸ்பதியின் புத்திரன். சுக்கிராசாரியாருக்குப் புத்திரனில்லை. நீ தாராளமாக என்னை திருமணம் செய்துகொள்ளலாம். உன் மீது கொண்ட காதலாலும் காமத்தாலும் அசுரர்கள் உன்னைக் கொன்றபோதெல்லாம் பரிதவித்தேன். பிதாவிடம் சொல்லி உன்னை உயிர்ப்பித்தேன்”. அவளுக்கு மூச்சு இரைத்தது. ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தம் திருத்தமாக தேவயானி பேசியபோது கசன் ஆடிப்போனான். கூர்வேலென அவளது பார்வை அவன் மீது குத்தியிருந்தது.

சுக்ரர் அக்கம் பக்கம் எங்கும் தென்படவில்லை. தனியாக அவளிடம் அகப்பட்டுக்கொண்டான் கசன்.

“தேவயானி! நீ அப்ஸரஸுகளை விட அதிரூபமானவள். குளிர்ச் சந்திரனை ஒத்த முகமுடையவள். எவரையும் வீழ்த்தும் எழிலான உடற்கட்டு உடையவள். ஆனால் நீ வசித்த வயிற்றில் நானும் வசித்திருக்கிறேன். அவருடைய வயிற்றினில் இருந்து மறுபிறப்பு எடுத்ததினால் உனக்கு சகோதரன் என்கிற அந்தஸ்த்தில் இருக்கிறேன். உன்னை என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது. கோபித்துக்கொள்ளாதே” என்று நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டான் கசன்.

கோபத்தில் இங்கும் அங்கும் உலவினாள் தேவயானி. கசனைக் கண்டதும் இப்போது கசக்க ஆரம்பித்தது. புஸ்புஸ்ஸென்று மூச்சுவிட ஆரம்பித்தாள்.

“ஏ கசனே! என்னுடைய இந்த அழைப்பை நிராகரித்தாய். நீ என் தந்தையிடம் கற்ற வித்தை உனக்கு பயன்பெறாமல் போகக்கடவது” என்று சபித்துவிட்டாள்.

தேவயானியிடம் இப்படியொரு சாபத்தை முன்னரே எதிர்பார்த்தது போல அலட்சியமாக சிரித்தான் கசன்.

“தேவயானி! கவலையில்லை. எனக்குப் பயன்படாமல் போனாலும் தேவர்களைத் தேர்ந்தெடுத்து இந்த வித்தையை சொல்லிகொடுப்பேன். அவர்களுக்கு இது பலித்துவிடும். இதுவரை நீ செய்த ஒத்தாசைகளுக்கு மிக்க நன்றி. நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அவளைத் திரும்பிக் கூட பார்க்காமல் தேவலோகத்து வந்துவிட்டான்.

தேவயானி அதிர்ச்சியில் உறைந்தாள்.

**

தேவர்க்கூட்டம் குதூகலத்துடன் கசனை வரவேற்றது. ப்ருஹஸ்பதியை கௌரவித்தார்கள். கசனுக்கு விழா எடுத்தார்கள். சஞ்சீவினி வித்தையை தேவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தான். அவர்கள் இப்போது பலம் பெற்றார்கள். இந்திரனைக் கூப்பிட்டு “உங்கள் பராக்கிரமத்தைக் காட்டும் நேரம் வந்துவிட்டது. எதிரிகளைக் கொல்வதற்கு கிளம்புங்கள்” என்று பிரார்த்தித்துக்கொண்டார்கள். இந்திரன் கிளம்பினான்.

**

பகலில் மரக்கிளைக்களுக்கிடையே சிதறும் ஒரு சில ஒளிக்கீற்றுக்களைத் தவிர இருண்டு கிடக்கும் வனம் அது. சைத்ரரதம் அதன் பெயர். அந்த வனத்தினுள் ஒரு தாமரை மலர் பூத்த தடாகம். அங்கே சில பெண்கள் வஸ்திரங்களை கரையோர மரத்தடியில் அவிழ்த்துப்போட்டுவிட்டு சந்தோஷமாக நீராடிக்கொண்டிருக்கிறார்கள். வனமெங்கும் அந்தப் பெண்களின் சிரிப்பொலி எதிரொலிக்கிறது. ”ஏய்..ஏய்..” என்று கிண்டலும் கேலியும் தொணிக்கும் தொடர் பேச்சுகள். நிர்ஜனமான காடு என்பதினால் சுதந்திரமாக நிச்சலடித்துக் குளித்து கும்மாளம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

இந்த சமயத்தில் இந்திரன் ஒரு விஷமத்தனமான காரியம் செய்தான். வாயு ரூபம் எடுத்துக்கொண்டு சருகாய் உதிர்ந்த இலைகளை சரசரவென்று கிளறி... கரையில் கிடந்த நீராடும் பெண்களின் வஸ்திரங்களை ஒன்றோடு ஒன்று புரட்டிக் கலைத்துப்போட்டான். அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

குளித்துக்கொண்டிருந்த பெண்கள் நீச்சலடித்துக் களைத்துப் போய் மேனி முழுவதும் நீர் சொட்டக் கரையேறினார்கள். அதில் தேவயானியும் அவளருகே ஒரு அழகான மாதுவும் கூட வந்தாள். ராஜபுத்ரி போலிருந்தாள் அவள். ஆம். அவள் பெயர் சர்மிஷ்டை. அசுரராஜா வ்ருஷபர்வாவின் செல்ல மகள்.

கலைந்து போய் கிடந்த ஆடைகளை எடுத்து உடுத்திக்கொள்ள ஆரம்பித்தார்கள். அப்போது சர்மிஷ்டை தவறுதலாக தேவயானியின் உடைகளை எடுத்து அணிந்துகொண்டுவிட்டாள். தேவயானி கோப ஸ்பாவம் மிக்கவள்.

“ஏ அஸுரப்பெண்ணே! என்னுடைய வஸ்திரத்தை எடுத்து எப்படி உடுத்தினாய்? உனக்கு அறிவில்லையா?” என்று முகம் சிவக்க ஆரம்பித்தாள்.

சர்மிஷ்டைக்கும் கோபம் வந்தது.

“ஏ தேவயானி! உன் தந்தை என் பிதாவின் தயவில் வாழ்க்கை நடத்துபவர். அவரிடம் யாசிக்கிறார். துதிக்கிறார். தானம் பெறுகிறார். அவருடைய பெண் நீ. என் தந்தை ராஜா. துதிக்கப்படுபவர். யாசகம் தருபவர். இந்த நாட்டை ஆள்பவர். யாசகீ உனக்கு இவ்வளவு திமிரா?”

வாக்குவாதம் முற்றியது. இருவருக்கும் கைகலப்பில் முடிந்தது. முடிவில் சர்மிஷ்டை தேவயானியை கொடிசெடிகள் மண்டிக்கிடக்கும் ஒரு பாழும் கிணற்றில் தள்ளிவிட்டாள். தொப். கிணற்றை எக்கிப் பார்த்தாள். இருண்டு கிடந்த கிணற்றுக்குள் தேவயானி புலப்படவில்லை. இறந்துவிட்டாள் என்றெண்ணி நகரத்துக்கு போய்விட்டாள்.

**

அந்த வனத்தில் எங்கோ குதிரையின் குளம்பொலி கேட்கிறது. குதிரை நெருங்கி வருகிறது. அதில் அமர்ந்திருப்பவன் க்ரீடமணிந்து ராஜா மாதிரி இருக்கிறான். கண்களில் களைப்பு தெரிகிறது. தண்ணீர் எங்காவது கிடக்கிறதா என்று நோட்டம் விட்டுக்கொண்டே வருகிறான். கொஞ்ச தூரத்தில் தடாகம் இருப்பதற்கான அறிகுறிகளாக சில பட்சிகள் பறக்கின்றன. அந்தத் திசையில் குதிரையைச் செலுத்துக்கிறான். செடி கொடிகள் அடர்ந்த ஒரு பாழும் கிணறு தென்படுகிறது. குதிரையை விட்டு குதிக்கிறான். கிணற்றுள் எட்டிப் பார்க்கிறான். முதல் தடவை பார்த்துவிட்டு வெறும் செடிகொடிகள்தான் மண்டிக்கிடக்கிறது என்று தலையைத் திருப்பி விட்டான். பின்னர் ஏதோ உள்ளுணர்வு அவனை உந்த மீண்டும் கிணற்றுக்குள் எட்டிப் பார்க்கிறான்.

ஏதோ மினுமினுவென்று ஜொலிப்பது போல் தெரிந்தது. உற்றுப் பார்த்தான் ராஜா. ரத்னங்கள் வைரங்கள் பதித்த தோடு. இன்னும் பார்வையை கூர்மையாக செலுத்தினான். செக்கச்செவேல் என்ற நிறத்தில் ஒரு கன்னி விழுந்து கிடப்பது தெரிகிறது.

“யாரது?” தனது கம்பீரமான குரலை கிணற்றுக்குள் செலுத்தினான்.

தேவயானி மேலே பார்த்தாள். ஆகாயத்திற்கு கீழே இன்னொரு சூரியன் தெரிவது போல இருந்தது.

“பெண்ணே! நீ யார்? இந்தக் கொடிசெடிகள் மூடிய பாழுங் கிணற்றுக்குள் எப்படி விழுந்தாய்?” என்று கேட்டான்.

“தேவர்களால் கொல்லப்படும் அசுரர்களை பிழைக்க வைக்கும் சுக்கிரரின் பெண் நான். தேவயானி என் பெயர். என்னைத் தூக்கிவிடுங்கள். உம்மைப் பார்த்தால் மிகவும் சக்தியுள்ளவராகவும் கீர்த்தியுள்ளவராகவும் தெரிகிறது. நீங்கள் அரசர்தானே!” என்று கேட்டாள்.

“ஆம் பெண்ணே! நான் நகுஷபுத்திரன் யயாதி. சுக்கிராசாரியாரின் பெண்ணுக்கு உதவுவதில் மகிழ்ச்சி” சுருக்கமாக முடித்துக்கொண்டான்.

சுற்றிலும் மரத்திலும் கீழேயும் படர்ந்திருந்த கொடிகளை பட்பட்டென்று வாளால் அறுத்தான். இடதும்வலதுமாகச் சுருட்டிச் சுற்றி கிணற்றின் அடிமட்டம் செல்லும் வரை நீட்டமாக்கினான். அதன் வாயருகே படுத்துக்கொண்டு பச்சைக் கயிறான கொடியை உள்ளே விட்டான். அதைப் பற்றிக்கொண்டு அவளை ஏறச் சொன்னான். கிணற்றின் கழுத்தருகே வந்ததும் அவளது வலதுகையைப் பற்றி தரைக்குத் தூக்கிவிட்டான். யயாதியின் கரம் தொட்டபோது தேவயானிக்கு மேனியெங்கும் ரத்தம் வேகமாகப் பாயத்துவங்கியது. இருதயம் படபடத்தது. கண் இமைகள் டப்டப்பென்று அடித்துக்கொண்டது.

மேலே வந்த தேவயானி யயாதியைக் கண்டதும் காதலுற்றாள்.

“என் கையைப் பற்றி மேலே ஏற்றி காப்பாறினீர்கள். எனது வலது கரம் பற்றியதால் நீங்களே என் பதியுமாவீர்” என்று கொஞ்சுமொழி பேசினாள்.

யயாதி பேச்சற்று அவளைப் பார்த்துக்கொண்டே இருந்த போது வஸ்திரத்தில் சிக்கியிருந்த தூசு தும்பட்டைகளைத் துடைத்துக்கொண்டு கேசத்தை வலது கையால் சரிப்படுத்திக்கொண்டிருந்தாள்.

“பெண்ணே! நீ பிராமணப் பெண். நான் க்ஷத்ரிய குலத்தவன். சுக்ராசாரியார் எல்லா லோகங்களுக்கும் ஆசார்யர். எனக்குப் பயமாக இருக்கிறது. ஆகையால் நீ எனக்கானவள் இல்லை.” என்று கைகூப்பினான்.

தேவயானி அவனைப் பார்த்து அலட்சியமாக சிரித்தாள்.

“ராஜனே! இப்போது நான் சொல்வதை நீ ஏற்க மாட்டேன் என்கிறாய். என் தந்தையின் மூலமாகவே உன்னை நான் வரிக்கிறேன்.”

யயாதிக்கும் சபலம் ஏற்பட்டது. தேவயானியின் சிரிப்பும் மீன் விழியும் தேன் மொழியும் அவனுக்குள் காதலைத் தூண்டியது. வனத்தின் எல்லை வரை அவளுடன் வந்தான். பின்னர் விடைபெற்றக்கொண்டு அவனது நகரத்திற்கு சென்றுவிட்டான்.

அந்திசாயும் நேரமாகிவிட்டது. இன்னும் சில நாழிகையில் இருட்டிவிடும். தோழிகளும் சர்மிஷ்டையும் தத்தம் கூடு அடைந்திருப்பார்கள். தந்தை தன்னை தேடி வரட்டும் என்று ஒரு பெரிய ஆலமரத்தின் அருகே தன்னந்தனியாக நின்றாள். காலையிலிருந்து நடந்ததையெல்லாம் நினைத்துப் பார்த்தாள். கண்களில் நீர் முட்டியது. வாய் பொத்தி அழுதுகொண்டிருந்தாள்.

#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#யயாதி
#சுக்ராசாரியார்
#தேவயானி
#கசன்
#ஸம்பவபர்வம்
#பகுதி_29

No comments:

Post a Comment