இளையின் புத்திரன் புதனுக்காக இந்திரன் நிர்மாணம் செய்த நகரம் பிரதிஷ்டானபுரம். அகழியும் அதில் பெரிய முதலைகளும் சூழ்ந்திருந்தது. கோட்டை வாசலில் பலத்த காவல். உள்ளே நடுவில் அரண்மனையும் அதைச் சுற்றி பல தனவான்களின் வீடுகளும் ராஜ க்ருஹங்களும் இருந்தன. ஆங்காங்கே வியாபார ஸ்தலங்களும் அங்கு சில மனிதர்களும் தென்பட்டார்கள்.
அழகிய மண்டபங்களும் தண்ணீர் பந்தல்களும் வீதிதோறும் இருந்தன. பெரிய விசாலமான ராஜபாட்டை. தெருவுக்கு இரண்டு கோபுரம் போன்ற உயர்ந்த கட்டிடங்கள். கண்ணுக்கு விருந்தளிக்கும் பலவகை மலர்கள் பூக்கும் பூந்தோட்டங்களும் கிளைமுழுவதும் காய்த்துத் தொங்கும் மாந்தோட்டங்களும் செழுமையின் எடுத்துக்காட்டாக விளங்கின.
எல்லா வர்ணத்தாரும் அவரவர் தொழிலை சிரமேற்கொண்டு செய்தார்கள். மிகவும் சந்தோஷமாகவும் நிறைவாகவும் இருப்பது அவர்களது முகத்தில் தெரிந்தது. யக்ஞமும் அக்னிஹோத்ரமும் நடைபெற்று அந்த ஹோமப் புகையில் கலந்து வரும் நெய்வாசம் மிகுந்ததாக இருந்தது. அதுதான் இரண்டாவது இந்திரலோகமோ என்று சகுந்தலையும் அவள் கூட வந்திருந்த ரிஷிகளும் பிராமணர்களும் அவளது புத்திரனும் வாய்பிளந்து அதிசயமாகப் பார்த்துக்கொண்டே அந்நகரத்தின் நடுவே இருந்த அரண்மனை வாசலை வந்தடைந்தனர்.
வாயிற்காப்போனைக் கடந்து உள்ளே அந்த பிரம்மாண்டமான அரண்மனையின் நடுவில் தர்பார் இருந்தது. அங்கே ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்ட உயர்ந்த ஆசனத்தில் எல்லா ஆபரணங்களும் அணிந்து கொண்டு துஷ்யந்தன் அமர்ந்திருந்தான். மந்திரிப்பிரதானிகளும் க்ஷத்ரியர்களும் பிராமணர்களும் ஸூதர்களும் மாகதர்களாலும் (ராஜ வம்சக்கிரமத்தைப் பாடுபவர்கள்) கட்டியம் கூறுபவர்களாலும் சூழ்ந்திருந்தான் துஷ்யந்தன்.
ஏதோ வழக்கு அப்போதுதான் முடிந்து வாதிப் பிரதிவாதிகள் முணுமுணுத்துக்கொண்டே கலைந்தார்கள். ராஜா ஸுகமாக அரியணையில் பின்னே சாய்ந்தான். அரண்மனை வாசலில் அப்போது எங்கிருந்தோ சில பக்ஷிகள் கூவின. சகுந்தலையின் பக்கத்தில் நின்றிருந்த நிமித்தங்கள் தெரிந்த மஹரிஷி ஒருவர் அவளது காதில் “நமக்கு நல்ல நிமித்தங்கள் தெரிகிறது. நீ இன்றே ராஜ பத்னியாகப் போகிறாய். உன் புதல்வன் யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்யப்படுவான்.”
ஒரு கூட்டமாக வந்திருந்த இவர்களைப் பார்க்க பட்டணத்து ஜனங்கள் அங்கே சூழ்ந்துகொண்டார்கள். ஒருசாரோர் “ஹே! இவள் ஸ்ரீதேவி போலவே இருக்கிறாளே!” என்று அதிசயித்தனர். இன்னும் சிலர் “இந்திரனின் புத்திரனான ஜயந்தனை அவனது தாயார் இந்திராணியே அழைத்து வந்தது போலிருக்கிறதே” என்று சந்தோஷித்தார்கள். அவளின் பின்னால் வரும் மஹரிஷிகளின் ஆசீர்வாதம் வேண்டி பலர் நமஸ்கரித்து எழுந்தார்கள்.
சில ரிஷிகள் கிருஷ்ணாஜினம் (கறுப்புமானின் தோல்) போர்த்தியிருந்தார்கள். அவர்கள் எலும்பும்தோலுமாக இருந்தார்கள். வயிறு ஒட்டிப்போயிருந்தது. கைகளைத் தூக்கிக்கொண்டு வந்த அவர்களைப் பார்த்து ஒரு குழுவினர் “பைசாசங்கள் நகரத்தில் உலவுகின்றனவே” என்று பரிஹாசம் செய்தார்கள்.
உடனே மஹரிஷிகளில் சிலர் “கண்ணுவர் மஹரிஷி சொன்னது போல நாம் நகரத்துக்கு வெளியே கங்கையும் யமுனையும் சேரும் இடத்தில் அமர்ந்திருக்கலாம். அதை மறந்து இந்த துஷ்டர்கள் மத்தியில் வந்தது நம் தவறு.. வாருங்கள் செல்லலாம்..” என்று வெளியே நடக்க ஆரம்பித்தார்கள்.
கண்ணீரும் கம்பலையுமாக சகுந்தலை தனது மகனை ஒரு கையில் பிடித்துக்கொண்டு தாய்தந்தையாரால் கைவிடப்பட்ட அனாதை போல அங்கேயே நின்றிருந்தாள். அவளைப் பார்த்துப் பரிதாபப்பட்ட ஊர் ஜனங்களும் அவள் பின்னாலேயே அரண்மனை நோக்கி நடந்தர்கள். வாயிற்காப்போன் உள்ளே சென்று அனுமதி பெற்று அரண்மனைக்குள் அனுப்பினான்.
உயர்ந்த ஆசனத்தில் ராஜா அமர்ந்திருந்தான். தனது புத்திரனைப் பார்த்து சகுந்தலை “மகனே! தர்மம் தவறாத உன் பிதாவாகிய ராஜாவுக்கு வந்தனம் செய்” என்றாள். அவன் வந்தனம் செய்தான். அவள் துஷ்யந்தனைப் பார்த்ததினால் வெட்கமுற்று பக்கத்தில் இருந்த தூணைக் கட்டிக்கொண்டு நின்றாள். பின்னர் சன்னமாக “தயை செய்யுங்கள்” என்றாள்.
“ஸ்திரீயே! நீ வந்த காரியமென்ன? நீ யார்?”
“உத்தமரே! இவன் உமக்கும் எனக்கும் பிறந்தவன். உமது புத்திரனாகிய இவனுக்கு நீர் யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்வீர். அந்த ஆஸ்ரமத்தில் நீர் சொன்னது போல நடந்துகொள்ள வேண்டும்” என்று கைகூப்பினாள்.
சகுந்தலையை விட்டு நகரத்திற்கு வந்ததிலிருந்து துஷ்யந்தன் பல பெண்களைக் கடந்திருந்தான். ஆகையால் அவளை மறந்தும் விட்டான். சகுந்தலையின் நாணத்தையும் கையில் பிடித்திருக்கும் சிறுவனைக் கண்டதும் அவனுக்கு நினைவுள் மீண்டுவிட்டது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் “நான் விவாகம் செய்துகொள்ளாமல் ஸ்திரீ சங்கமம் வைத்துக்கொள்ளமாட்டேன். உன் சேர்க்கைப் பற்றி எனக்கு நினைவில்லை. உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. வெளியே செல்வதென்றால் சென்றுவிடு. இங்கேயே நிற்பதாயிருந்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. என்னவேண்டுமானாலும் செய்துகொள்” என்று வேறுபக்கம் திரும்பிக்கொண்டான்.
அவனது இந்தச் சொல்லைக் கேட்டவள் அதிர்ச்சியில் தூணைப் போல அசையாமல் நின்றாள். கண்களில் நீர் அருவியாய்க் கொட்டியது. கையில் பிடித்திருந்த புத்திரன் சிலையெனப் பார்த்துக்கொண்டிருந்தான். கோபத்தோடு சகுந்தலை பேச ஆரம்பித்தாள்.
“மஹாராஜாவே! என்னை நீர் அறிந்திருந்தும் அற்ப மனிதனைப் போல தெரியாது என்கிறீர். மனதார பொய் பேசுகிறீர். ஒருவன் பாபம் செய்துவிட்டு தன்னை யாரும் பார்க்கவில்லை என்று நினைக்கிறான். சூரியன், சந்திரன், வாயு, அக்னி, ஆகாயம், பூமியும் ஜலமும் தன் மனஸும், யமனும், பகலும் இரவும் தர்மதேவதையும் மனிதர்களின் எல்லாச் செயல்களுக்கும் சாட்சியாக இருக்கின்றன.
நானாக இங்கு வந்ததினால் நீர் என்னை அவமானம் செய்கிறீர். ஒரு நாடோடியைப் போல ஸபையில் அனாதரவு செய்கிறீர். எனக்கு வேண்டியதை நீர் செய்யாவிட்டால் உம் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும்.”
துஷ்யந்தனும் அந்த சபையில் கூடியிருந்தவர்களும் சகுந்தலையின் ஆக்ரோஷத்தைக் கண்டு பயந்தனர். கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பாரியை என்பவள் யார் என்பதைப் பற்றி அவனுக்கு பாடம் எடுக்கத் துவங்கினாள்.
“வீட்டுவேலையில் அதிகாரம் உள்ளவள் பாரியை. கணவனை உயிராக நினைத்து சந்ததி உள்ளவள் பாரியை. கற்புள்ளவள் பாரியை. அவள் புருஷனின் ஒரு பாதி. அவளே மிகச்சிறந்த துணை. அறம் பொருள் இன்பம் என்ற மூன்று புருஷார்த்தங்களுக்கும் அவளே ஆதாரம். பாரியை உள்ளவன் பந்துக்களை அடைகிறான். பாரியை உள்ளவனே யக்ஞாதிகாரியங்கள் செய்வதற்கு கர்த்தாவாகிறான். கிருஹஸ்தர்கள் என்ற தகுதியைக் கொடுப்பவள் பாரியை. பாரியையுள்ளவர்கள் ஸுகமுள்ளவர்கள். பாரியையினால் சகல சம்பத்துகளையும் அடைகிறார்கள்.”
சபையே அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தது. சகுந்தலை சில கணங்கள் இடைவெளி விட்டு மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
“இன்சொல் பேசும் பாரியை ரஹசிய காலத்தில் ஸ்நேகிதர் ஆகிறாள். தர்மகாரியம் செய்யும்போது அருகிலிருந்து ஹிதம் சொல்கிறாள். கஷ்டப்படும்போது தாயாகிறாள். எவன் பாரியை உள்ளவனோ அவனே நம்பிக்கைக்கு உரியவன். வாழ்ந்தாலும் இறந்தாலும் வாழும் போது கஷ்டப்பட்டாலும் பாரியை ஒருத்தியே பர்த்தாவை விடாமல் அனுசரிக்கிறாள். முதலில் இறந்து போன மனைவி பரலோகத்தில் பர்த்தாவுக்காக காத்திருக்கிறாள். கணவன் முன்னால் இறந்தால் கற்புடைய மனைவி பின்னாலும் அனுசரிக்கிறாள். இந்த லோகத்தில் பாரியை கணவனின் தேகத்தை வளர்க்கிறாள். சொர்க்கலோகம் செல்பவனுக்கு கட்டுசாதம் போன்றவள். இந்தக் காரணத்தினால்தான் சாஸ்திரத்தில் பாணிக்கிரகணம் விதிக்கப்பட்டிருக்கிறது”
துஷ்யந்தன் முகம் வெளிறி அமர்ந்திருந்தான். பிராமணர்களும் மந்திரிகளும் சகுந்தலையின் தர்மம் பொங்கும் பேச்சில் லயித்திருந்தார்கள்.
"பிதாவுக்கு புத்திரன் ஆத்மா போன்றவன். பிதாவின் நடையும் உருவமும் செய்கையும் அங்க லக்ஷணங்களும் புத்திரனுக்கும் இருக்கிறது. பிதாவானன் தன் பாரியையிடம் உண்டான புத்திரனை தன் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல பார்த்து சொர்க்கலோகம் சென்ற புண்ணியவான் போல ஆனந்தப்படுகிறான். ஸ்திரீ கணவனில் பாதியென்பது வேதவாக்கியம். ஸ்திரீகளின்றி சந்ததி உண்டு பண்ணுவதற்கு ரிஷிகளால் கூட முடியாது. தனத்தையும் சந்ததிகளையும் தேகத்தையும் தர்மத்தையும் ரிஷிகளையும் பிதிர்களையும் காப்பாற்றுபவள் அவள். பரிசுத்தமான ஸ்தீரிகள் உற்பத்தியாகும் நிலமாக இருக்கிறார்கள். சண்டாள ஸ்திரீகளிடத்திலும் கூட ரிஷிகளுக்குப் பிறந்தவர்கள் ரிஷிகளாயிருக்கிறார்கள்.”
இன்னமும் அந்த சபை மௌனத்தைக் கலைக்கவில்லை. கட்டியம் கூறுபவனிலிருந்து மந்திரிகள் பிராமணர்கள் ரிஷிகள் என்று நிரம்பிய அந்த சபை பேச்சுமூச்சின்றி கட்டுண்டு கிடந்தது. சகுந்தலை தனது கோபத்தையும் தன் தரப்பு நியாயத்தையும் விடாமல் எடுத்துக் கூறினாள்.
”ராஜாவே! மண்ணில் புரண்டு விழுந்து எழுந்து வந்த புத்திரனைக் கட்டிக்கொள்ளும் தகப்பன் அடையும் ஆனந்தத்திற்கு அளவேது? இதோ கடைக்கண்ணினால் உன்னை பார்த்துக்கொண்டு நிற்கும் உன் புத்திரனை நீ அங்கீகரி. உமக்குத் தெரியாததில்லை. காக்கைகள் கூட குயில்களின் முட்டைகளை தம் முட்டை என்று அடைகாக்கின்றன. பொதிகை மலைச் சந்தனம் மிகவும் குளிர்ச்சியானது. அதைக்காட்டிலும் குளிர்ச்சியானது தனது பிள்ளையைத் தழுவுதல். குழந்தைப் பருவத்தில் தனது பிள்ளையைக் கட்டிக்கொள்ளும் தகப்பனுக்குக் கிடைக்கும் சுகம் பெண்களைத் தழுவுவதும் நல்ல வஸ்திரங்களைத் தொடுவதும் கூட கிடைக்காது. “
அவையில் இன்னமும் சலனமேயில்லை. எல்லோரும் அடுத்து சகுந்தலை என்ன பேசப்போகிறாள் என்பதைக் கேட்க ஆவலாக இருந்தார்கள்.
“மனிதர்களுள் பிராமணன் சிறந்தவன். நாலுகாளுள்ளவைகளும் பசு சிறந்தது. ஆசாரியர்கள் பூஜிக்கத்தக்கவர்களும் சிறந்தவர். தொடுவதற்கு இனியவன் புத்திரனே” என்றாள்.
உமக்குத் தெரிந்த ஜாத கர்ம மந்திரக்கோவை ஒன்றை இப்போது நினைவூட்ட விரும்புகிறேன். கேளும்.
“என் ஒவ்வொரு அங்கத்திலிருந்தும் நீ பிறந்திருக்கிறாய். என் ஹ்ருதயத்திலிருந்து அதிகமாக உண்டாகியிருக்கிறாய். நீ தான் நான். புத்ரனென்ற பெயருள்ள நானாக இருக்கிறாய். அப்படிப்பட்ட நீ நூறு வருஷகாலம் சுகமாக ஜீவித்திருக்கக்கடவாய். “
ஊஹும். ஒருவரும் வாயெடுத்துப் பேசவில்லை.
“இவன் புருஷனிடமிருந்து பிறந்த இன்னொரு புருஷன். தெளிந்த நீருள்ள தடாகத்தில் ஒருவன் தன் முகத்தைப் பார்ப்பது போல உம் புத்திரனை நீர் பாரும். அதே தடாகத்தில் உம் முகத்தைப் பார்ப்பது போல் உம்மை நீர் என்னிடம் பாரும்.”
இதன் பின்னர் கண்ணுவரின் ஆஸ்ரமத்தில் தன்னை எப்படி வந்து பார்த்து காந்தர்வ விவாஹம் செய்துகொண்டான் என்பதை சகுந்தலை கதையாகச் சொல்கிறாள்.
வெகுநேரம் கழித்து வாய் திறந்தான் துஷ்யந்தன்.
“பெண்கள் பொய் சொல்வார்கள். உன்னிடத்தில் புத்திரன் பிறந்தது பற்றி எனக்குத் தெளிவில்லை. உன் சொல்லை எவர் நம்புவர்? உனது பிறப்பு தாழ்வானது. பெண்கள் அனைவரும் கொடியவர்கள். எல்லாப் பெண்களும் அயலார்க்கு உட்படுகிறார்கள். எல்லோருக்கும் கோபம் வரும். கண்ணுவர் உனக்கு தகப்பனாரா? பிதற்றாதே! பொன், பொருள், ரத்னங்கள், முத்து, ஆடை, ஆபரணங்கள் என்று எதுவேண்டுமானாலும் வாங்கிக்கொள். நான் உன்னைப் பார்க்க விரும்பவில்லை. நீ போகலாம்” என்று நிர்தாட்சண்யமாய் மறுத்துவிட்டான்.
சகுந்தலை துஷ்யந்தன் விவாதம் இன்னமும் தொடர்கிறது..
#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#துஷ்யந்தன்
#சகுந்தலை
#ஸம்பவபர்வம்
#பகுதி_38
No comments:
Post a Comment