யயாதியின் புத்ரனான பூரு மிகச்சிறப்பாக ஆட்சி செலுத்தினான். பௌரவர்களின் வம்சம் அவனது பிதாவின் ஆசீர்வாதத்தால் செழித்து வளர்ந்தது. அந்த வம்சத்தின் தலைசிறந்த ராஜாக்களான துஷ்யந்தன், பரதன் ஆகியோரது சரித்திரங்கள் அடுத்தடுத்து வருகிறது. பின்னால் பிரதீபன் சந்தனுவின் சரித்திரங்கள்.
பூருவின் புத்திரன் தம்ஸு. தம்ஸுக்கு இலிலன். இலிலனுக்கும் ரதந்தரிக்கும் நான்கு சகோதரர்களுக்கு மூத்தவனாகப் பிறந்தான் துஷ்யந்தன். அவனது ஆட்சிகாலத்தில் திருடர் பயம் இல்லை. நோய் பீடிக்கவில்லை. பசியென்பதையே அறியாமல் பிரஜைகள் வாழ்ந்தார்கள். சூர்ய தேஜஸோடு வஜ்ராயுதம் போல உறுதியான சரீரம் உள்ளவன். தர்மபரிபாலனம் செய்துகொண்டிருந்தான்.
ஒரு நாள் வேட்டைக்கு காட்டுக்குச் சென்றான் துஷ்யந்தன். கத்தி வேல் கதாயுதம் வில் அம்பு என்று எல்லாவிதமான ஆயுதங்களோடும் சதுரங்க சைனியமும் புடைசூழக் கிளம்பினான். ராஜலக்ஷணத்தோடு துந்துபி வாத்தியங்கள் முழங்கக் கிளம்பியவனை உயர்ந்த மாளிகைகளின் மாடங்களில் நின்று கொண்டு ராஜ ஸ்த்ரீகள் பார்த்து “இந்திரனே இப்புவிக்கு எழுந்தருளியிருக்கிறானோ!” என்று விழிவிரிய அதிசயித்தார்கள்.
மிக நீண்ட வனம் அது. அடர்த்தியானதும் கூட. எல்லா ஜாதி மரங்களும் கிளை பரப்பி நிறைந்திருந்தது. மான்களும், சிம்மங்களும், யானை, புலி, கரடிகள் என்று மிருகங்கள் நடமாட்டமிருக்கும் அதற்குள் புகுந்து கத்தியாலும் வில் வேல் அம்புகளாலும் சூரனாய் தீரத்துடன் உத்வேகமாய் வேட்டையாடினான் துஷ்யந்தன். அவனுடைய வேகமும் விறுவிறுப்பும் அசாத்தியமாக இருந்தது. சிம்மங்கள் காட்டை விட்டே வெளியே ஓடின. துஷ்யந்தனின் அம்பு மழையினால் வனம் இன்னும் இருண்டு போனது.
மிருகங்களைக் கொன்று சில வீரர்கள் சிதை மூட்டி சுட்டுத் தின்றார்கள். அந்தக் காட்டில் அதற்கு மேல் வேலையில்லை என்று வெளியே வந்து பின்னர் பக்கத்திலிருந்த வேறு வனத்திற்குள் மின்னலெனப் புகுந்தான். அங்கே ஒரு அழகிய புள்ளிமானைக் கண்டு துரத்தினான். உள்ளே குதிரையில் துரத்தும் போதுதான் அது வனமல்ல நந்தவனம் என்று உணர்ந்தான். பூக்காமலும் காய்க்காலும் இருக்கும் மரத்தைப் பார்க்கமுடியவில்லை. பல வண்ணப்பூக்களும் கனிகளும் தாங்கிய செழிப்பான மரங்கள். முள்ளில்லாத மரங்கள்.
குதிரை ஒவ்வொரு மரத்தைக் கடக்கும் போது வெள்ளையாயும் சிகப்பாகவும் பொன்மஞ்சள் நிறத்திலும் பூமாரி அவன் தலையில் பொழிந்தது. குதிரையின் டொக்..டொக்..டொக்... குளம்பொலிக்கு வண்டுகளின் ரீய்ய்ய்ய்ங்... என்ற ரீங்காரம் புது இசையைக் கொடுத்தது. அந்த வனத்தில் அவனுக்கு வேட்டையாட விருப்பம் வரவில்லை. மனதுக்கு ஹிதமான சூழ்நிலை நிலவியது.
அவ்வப்போது சித்தர்கள் கந்தர்வர்கள் அப்ஸரஸுகளின் நடமாட்டம் ஆங்காங்கே தென்பட்டது. சிறிது நேரம் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றவனின் கண்களில் தொலைவில் மரங்கள் சூழ்ந்த பிரதேசத்தில் அக்னிஹோத்ரம் நடந்துகொண்டிருந்த ஆஸ்ரமம் ஒன்றைக் கண்டான். அந்த அக்னியில் ஆஸ்ரமம் ஜொலித்தது. ஆஸ்ரமத்தின் அருகில் இருக்கும் அக்னிஹோத்திரம் நடக்கும் இடத்திற்கு செல்லும் சிறு சாலையில் விருக்ஷங்களின் பூக்கள் சொரிந்து மெத்தையிட்டுருந்தன.
பக்கத்தில் பரிசுத்தமான ஜலத்தோடு மாலினி நதி ஓடிக்கொண்டிருந்தது. மரங்களில் கூடுகட்டி வசித்திருந்த பக்ஷிக்கூட்டங்கள் நதியைக் கடந்து பறந்து போய் அக்கரையிலிருக்கும் மரத்தில் உட்கார்ந்து விளையாடின. இங்குமங்கும் க்ரீச்சொலியிட்டு பறவைகள் பறக்க, மாலினி நதியின் சலசலப்போடும் பூத்துக் குலுங்கும் மரங்களும் செடிகளும் நிறைந்து இருக்கும் இடத்தில் ரமணீயமாகத் திகழும் அந்த ஆஸ்ரமத்துக்குச் செல்ல துஷ்யந்தன் பிரியப்பட்டான்.
அது கண்ணுவ மஹரிஷியின் ஆஸ்ரமம். காஸ்யப கோத்திரத்தில் பிறந்தவர். தவம்தான் அவரது செல்வம். பிரம்மதேஜஸ் உடையவர். அங்கிருந்து வேதகோஷம் சன்னமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. குதிரையிலிருந்து குதித்து இறங்கினான்.
“நான் போய் கண்ணுவ மஹரிஷியைக் கண்டு ஆசி பெற்று வருகிறேன்”
வீரர்களும் சேனாதிபதிகளும் இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றுகொண்டார்கள்.
ஆஸ்ரமம் அருகில் வந்ததும் அவனுக்குள் ஒரு எல்லையில்லா ஆனந்தம் பிறந்தது. நுரையும் பூக்களுமாய் மாலினி சலசலத்து ஓடிக்கொண்டிருந்த அந்த இயற்கை எழிலில் சொக்கிப் போய் நின்றுகொண்டிருந்தான். தோளில் மாட்டியிருந்த வில்லையும் அம்புகளையும் ஆஸ்ரமத்தின் வாசலருகே கழட்டி வைத்தான். க்ரீடம் போன்ற ராஜ சின்னங்களையும் களைந்தான்.
ஆஸ்ரமத்துக்கு அருகில் யக்ஞம் நடக்கும் பெருங் குடில் ஒன்று இருந்தது. அங்கே சதுர்வேதிகளும் சபையில் நிறைந்திருந்தார்கள். ரிக்வேதிகள் வேதங்களைக் கோர்த்து கிரமமாக உச்சரித்த மந்திரங்களைக் கேட்டான் துஷ்யந்தன். யஜுர் வேதமும் பாருண்டம் என்கிற மதுரமான சாமகானமும் ஓதினார்கள். அதர்வசிரஸென்னும் அதவர்வணமும் அங்கே சொல்லப்பட்டது. ஒரு பக்கத்திலிருந்து பூதயக்ஞம் எனும் ஒருவிதமான ஸாமகானமும் ரித்விக்குகளால் பாடப்பட்டது. காலமறியும் நிபுணர்களான ஜோதிடர்களும் அங்கே ஒரு பக்கத்தில் வரிசையாக அமர்ந்திருந்தார்கள்.
இதுவே இரண்டாவது பிரம்மலோகமோ என்று ஆச்சரியத்துடன் துஷ்யந்தன் அவர்களை எதுவும் கேட்டு யக்ஞத்துக்கு இடையூறு செய்யாமல் பக்கத்தில் இருந்த கண்ணுவரின் பர்ணசாலைக்குள் பிரவேசித்தான்.
வாசலிலிருந்து பார்த்தால் உள்ளே நிழலாக இருந்தது. யாருமில்லை.
பர்ணசாலையின் வாசல் படலைத் தாண்டி உள்ளே வந்துவிட்டான். கண்ணுவரை அங்கே அக்னிஹோத்ரம் செய்யுமிடத்திலும் காணவில்லையே என்று சந்தேகத்துடன் பார்வையை உள்ளே செலுத்தினான். நிசப்தமாக இருந்தது.
“யாரிங்கே?” என்று வனம் முழுவதும் எதிரொலிக்கும்படி சத்தமாகக் கூப்பிட்டான்.
லக்ஷ்மியே பெண்ணுருக்கொண்டு வந்தது போல ஒரு நங்கை உள்ளிருந்து வெளியே வந்தாள். அன்ன நடை. ரிஷி வேடம் தரித்திருந்தாள் அந்த கன்னிகை. பருவத்தில் கொத்தாகப் பூத்திருந்தாள். அழகும் யவௌனனும் அங்கங்களில் பொங்கி வழிந்தது. சந்திரனை ஒத்த சுந்தர வதனம். கருவண்டைப் போன்ற இரண்டு விழிகள். கூர் நாசி. அவள் வரும்பொழுது சுகந்தமான ஒரு வாசனையையும் கொண்டு வந்தாள்.
அவளைக் கண்டதும் துஷ்யந்தன் மெய் மறந்தான். சொக்கிப்போய் விழும்படி தள்ளாடினான். தேவலோகத்திலிருந்து இறங்கி வந்த ஊர்வசியோ என்று எண்ணி திறந்த வாய் மூடாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனது தேஜஸைக் கண்டு அரசன் என்று ஊகித்துக்கொண்டவள் “நல்வரவு” என்று கைகூப்பி இனிமையாச் சொன்னாள். துஷ்யந்தன் காதுகளுக்குள் மதுரம் பாய்ந்தது. அவளது குரல் சங்கீதமாக அவனுக்குக் கேட்டது.
“நீர் யார்? என்ன காரியம் கருதி மஹரிஷியின் ஆஸ்ரமத்திற்கு வந்திருக்கிறீர்?” என்று மொழியில் வழுக்கினாள் அந்த மாது.
“தாமரை புஷ்பம் போல கண்ணுள்ளவளே! நான் இலிலன் எனும் ராஜரிஷியின் புத்திரன். துஷ்யந்தன் எனது பெயர். மஹானுபாவராகிய கண்ணுவ மஹரிஷை தரிசிக்க வந்திருக்கிறேன்” என்றான் தன் கண்கள் அவள் கண்களைக் கவ்வியபடி.
“என் பிதா பழங்கள் கொண்டு வருவதற்காக சென்றிருக்கிறார். சற்று நேரம் பொறுங்கள். வருவார்” என்று அவன் பார்வை தந்த நாணனத்தால் மண்ணைப் பார்த்துச் சொன்னாள் அந்த இளம் பெண்.
துஷ்யந்தனால் ஆசையை அடக்க முடியவில்லை. அவ்வளவு அழகான பெண் பக்கத்தில் நிற்க எந்த ராஜா வெறுமனே நிற்பான்?
“பெண்ணே! நீ என் மனதை அபகரித்துவிட்டாய். உன்னைக் கண்டதும் உன் மேல் காதலுற்றேன். இப்போதே நான் உன்னை வரித்துவிட்டேன். ஸௌந்தர்யம் ததும்புபவளே க்ஷத்ரியப் பெண்களைத் தவிர நான் வேறெந்தப் பெண்ணிடமும் என் மனம் செல்வதில்லை. நீ யார்? உன் அகண்ட கண்களால் என்னை விழுங்கிவிட்டாய். நான் இனி உனக்குள் வசிக்கிறேன். நீயும் என்னை விரும்பு. இந்த ராஜ்யத்தை அனுபவி. என்னை வேறுவிதமாக எண்ணிவிடாதே!”
காதல் மயக்கத்தில் துஷ்யந்தன் இன்னும் சில நேரம் அங்கேயே நின்று கொண்டு அவளிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.
களுக்கென்று சிரித்தும் உற்றுப் பார்த்தும் கண்களை இங்குமங்கும் ஓடவிட்டும் காலால் கோலமிட்டும் துஷ்யந்தனின் காதல் மொழிகளைக் கேட்டாள் அப்பெண். பின்னர் பேச ஆரம்பித்தாள்.
“ராஜ ஸ்ரேஷ்டரே! நான் ஸ்வதந்திரமாக முடிவெதுவும் எடுக்கமுடியாது. கண்ணுவர் எனக்கு எஜமானர். பிதாவாக இருக்கிறார். அவர் அனைத்து தர்மமும் தெரிந்தவர். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். நீர் அவரிடமே கேளும்” என்றாள் விழிகள் இருபுறமும் உருள. பர்ணசாலையின் வாசலில் ஒன்றிரண்டு புள்ளிமான்கள் எட்டிப் பார்த்தன. பின்னர் மாலினி நதிக்கரையோரம் துள்ளி ஓடின.
துஷ்யந்தன் ஆச்சரியமடைந்தான். கண்ணுவரின் பெண்ணா இவள்? அவளைப் பற்றி அறிந்து கொள்ள இன்னும் பேசினான்.
“பெண்ணே! கண்ணுவர் ஊர்த்வரேதஸ். தர்மதேவதை கூட வழி பிசகிச் செல்லுமே தவிர கண்ணுவர் நெறி தவறாதவர். கடுமையான நியமங்கள் உள்ளவர். நீ எப்படி அவருக்குப் பிறந்தாய்?” என்று கேட்டான் துஷ்யந்தன்.
இந்தக் கேள்வியால் இமைகள் படபடக்க நின்றாள் அந்த அழகி. மரவுரியில் மகத்தான எழிலோடு இருந்தாள். கொஞ்ச நேரம் மௌனம் காத்தாள். வெளியே சில பறவைகளின் க்ரீச்சொலிகள். முயல் இரண்டு இவர்கள் இருவருக்கு இடையில் புகுந்து வெளியே ஓடியது. சுதாரித்துக் கொண்டாள்.
“ஒரு ரிஷி கண்ணுவர் பஹவானிடம் வந்து நீர் ஊர்த்வரேதஸாக இருக்கிறீர். உமக்கு எப்படி இந்த சகுந்தலை பிறந்தாள்? என்று கேட்டார். அதற்கு அவர் சொன்ன கதையை உம்மிடமும் சொல்கிறேன். எவன் தான் ஒருவனாக இருந்து பெரியோர்களிடம் மற்றவனாகச் சித்தரித்துக்கொள்கிறானோ அவன் பாபங்களைக் கட்டிக்கொள்கிறான்.” என்று தடையில்லாமல் நிஜம் பேசினாள்.
சகுந்தலை...சகுந்தலை.. சகுந்தலை..
துஷ்யந்தன் வாயைத் திறவாமல் மீண்டும் மீண்டும் நெஞ்சுக்குள்ளேயே அந்தப் பெயரைச் சொல்லிப்பார்த்துக் கொண்டான். தன்னைக் கண்களால் மயக்கி இடையில் சொருகிக்கொண்டவளின் பெயர் சகுந்தலை.
“உனது ஜனனக் கதையை நானும் கேட்க விரும்புகிறேன் சகுந்தலை” என்று இன்னமும் கோடு தாண்டாமல் நின்ற துஷ்யந்தன் கேட்டான்.
கண்ணுவர் இன்னமும் வரவில்லை. பக்கத்துக் குடிலில் வேதகோஷம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது. மருண்ட விழிகளுடன் சகுந்தலை தன் கதையைச் சொல்லத் துவங்கினாள்.
சில அடிக்குறிப்புகள்: 1, கன்வர் என்று அவர் பெயர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் கண்ணுவர் என்றே மஹாபாரதத்தில் வருகிறது. 2. ஊர்த்வரேதஸ். பீஷ்மரும் ஊர்த்வரேதஸ்தான். ஊர்த்வரேதஸ்காரர்கள் தனது வீரியத்தை விண் நோக்கிச் செலுத்தும் திறமை பெற்றவர்கள். அப்படியென்றால் ரேதஸை கீழே விடார்!
No comments:
Post a Comment