Saturday, December 16, 2017

மஹாபாரதத்தின் மஹிமை

நாகலோகத்தில் ஆஸ்தீகருக்கு விழா எடுத்தார்கள். நாகர்களின் விதம்விதமான ஆட்டமும் பாட்டமும் அமர்க்களப்பட்டது. தக்ஷகனைத் தீயில் விழாமல் செங்குத்தாக அந்தரத்தில் நிறுத்திக் காப்பாற்றுவதற்கு ஆஸ்தீகர் என்ன மாயம் செய்தார் என்று ஆச்சரியமாகப் பேசிக்கொண்டார்கள்.

“நில்.. நில்... நில்.” என்று மூன்று முறை ஆஸ்தீகர் சொன்னதும் தக்ஷகன் அக்னிக்குள் பாயாமல் நின்றுவிட்டான் என்று சந்தோஷப்பட்டார்கள். ஆஸ்தீகருக்கு பொன்னும் பொருளும் இன்னபிற திரவியங்களுக் கொடுத்துக் கௌரவித்தார்கள்.

ஜனமேஜய மஹாராஜா ஸர்ப்பயாகம் நின்று போனாலும் ஆஸ்தீகரிடம் “என்னுடைய அஸ்வமேதயாகத்தை நீங்கள்தான் நடத்தித்தர வேண்டும்” என்று விஞ்ஞாபித்தான். ஆஸ்தீகரும் அதற்கு ஒப்புக்கொண்டு அதை செவ்வையாக முடித்துத்தந்தார்.

பின்னர் நேரே தனது மாமனான வாஸுகியிடமும் அன்னை ஜரத்காருவிடமும் ஆசீர்வாதம் பெற வந்தார். தங்களைக் காப்பாற்றிய நாயகனைச் சுற்றி நாகக்கூட்டம் சூழ்ந்துகொண்டது. அனைவரின் முகத்திலும் சந்தோஷ ரேகைகள் படர்ந்தன. சமூகம் சாபத்திலிருந்து விடுவிக்கப்பட்டதால் வாஸுகி மனம் மகிழ்ந்தான். ஜரத்காருவிற்கு அளவில்லா சந்தோஷம் உண்டாயிற்று. நாகர்கள் யாவரும் சேர்ந்து “ஆஸ்தீகா! எங்களை பிழைப்பித்திருக்கிறாய். வம்சம் தழைக்க உதவியிருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள். உன் அபீஷ்டத்தை நிறைவேற்றுவோம்” என்றார்கள்.

“மிக்க மகிழ்ச்சி! பிராமணர்களோ மற்றவர்களோ என்னுடைய இந்தக் கதையைக் காலையும் மாலையும் படிப்பார்களென்றால் உங்களிடமிருந்து ஒரு பயமும் அவர்களுக்கு இல்லாமல் செய்யக் கடவது. நீங்கள் அவர்களைத் தீண்டக்கூடாது” என்று கேட்டுக்கொண்டார்.

“அப்படியே ஆகட்டும்” என்று அனைவரும் வரமளித்தார்கள்.

[காலை சந்தியின் போது வடக்கு முகமாக நின்று கொண்டு அபஸர்ப்ப ஸர்ப்ப பத்ரந்தே தூரம் கச்சமஹாயசா : ஜனமேஜயஸ்ய யஞ்ஞாந்தே அஸ்தீக வசனம் ஸ்மரன் ஜரத்காரோர் ஜரத்கார்வாம் ஸமுத்பன்னோ மஹாயசா! அஸ்தீகஸ்ஸத்யஸந்தோ மாம்பன்னகேப்ய: அபிரக்ஷ்து: என்று துதித்துக்கொள்கிறோம் ]

{இந்த ஆஸ்தீக சரித்திரம் கேட்பவர்களுக்கு ஸர்ப்ப பயம் இருக்காது என்றும் பாவங்களிலிலிருந்து விடுபட்டு தீர்க்காயுசாக இருப்பார்கள் என்று பலன் சொல்லியிருக்கிறது}

ஆஸ்தீக பர்வம் நிறைவடைந்தது.

**

இந்த ஸர்ப்பயாக காலத்தில்தான் ஜனமேஜயனுக்கு வைம்சம்பாயனர் மஹாபாரதமெனும் பெருங்கதையைக் கூறினார். கிருஷ்ணத்வைபாயனர் என்று அழைக்கப்படும் ஸ்ரீவியாஸபகவான் ஜனமேஜயன் செய்த ஸர்ப்பயாகத்திற்கு சிஷ்யர்களோடு விஜயம் செய்தார். அவருக்கு பாதபூஜை செய்து ஆசனம் கொடுத்து அமர்வித்து மரியாதைகள் பல செய்து ஜனமேஜயன் பணிந்து...

“பிராமணர்களில் சிறந்தவரே! பாண்டவர்களையும் கௌரவர்களைப் பற்றியும் நீர் நேரில் அறிவீர். அவர்களுக்கிடையில் எப்படி விரோதம் உண்டாயிற்று? என் பிதாமஹர்கள் எல்லோருக்கும் பகைமையுணர்ச்சி ஏற்பட்டு பிராணிகளுக்கெல்லாம் நாசம் விளைவித்த அந்த பெரிய யுத்தமானது எப்படி நடந்தது? நீர் அனைத்தும் அறிந்தவர் என்பதால் உம்மிடம் கேட்கிறேன்” என்றான்.

“வைசம்பாயனா! நான் உனக்குச் சொன்ன அந்த பாரதக் கதையை இப்போது நீ ஜனமேஜயனுக்குச் சொல்” என்று வியாசர் தனது பிரதான சிஷ்யரான வைசம்பாயனரை ஆக்ஞாபித்தார்..

வைசம்பாயனர் எழுந்து வந்து “அளவற்ற மஹிமை உள்ளவரான எனது குருவிற்கு வந்தனம் செய்கிறேன்” என்று வியாஸரை நமஸ்கரித்தார்.

அரியணையில் அமர்ந்திருந்த ஜனமேஜயனுக்கும் வணக்கங்கள் சொல்லி கதை சொல்ல ஆரம்பித்தார். ராஜாக்களும் மந்திரிகளும் பிராமணோத்தமர்களும் நிறைந்த அந்த சபை முழுவதும் அமைதி நிலவி வியாசரை மனதால் பூஜித்து மகாபாரதமென்னும் பெருங் காவியத்தை கேட்பதற்கு தயாரானது.

வைசம்பாயனர் முதலில் மஹாபாரதத்தின் பெருமையை எடுத்துரைத்தார்.

“ஸ்ரேஷ்டர்களே! இரண்டாயிரம் அத்யாயங்களும் நூறு பர்வங்களும் நூறாயிரம் ஸ்லோகங்களும் அடங்கிய சரித்திரம் இது. மஹரிஷி வியாசர் நூறு பர்வங்களை பதினெட்டுப் பர்வங்களாக வகுத்தார். இதை சொல்லும் பண்டிதனும் கேட்கும் மானுடர்களும் பிரம்மலோகம் சென்று பிரம்மாவுக்கு ஒப்பாயிருப்பார்கள். இது வேதங்களுக்கு ஒப்பானது. கேட்பவைகளுள் சிறந்தது. ரிஷிகளால் புகழப்பட்டது. இந்த இதிஹாஸம் ஜயம் என்று போற்றப்படுவது. ஜயிக்க விரும்புகிறவன் இதைக் கேட்கவேண்டும். தர்மம் அர்த்தம் காம மோக்ஷங்களைப் பற்றி இதில் இருப்பதுதான் எல்லா கிரந்தங்களிலும் இருக்கிறது. இதைப் பாராயணம் செய்பவன் சகல பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான். ஸ்ரார்த்ததில் இதன் ஒரு ஸ்லோகத்தின் ஓர் அடியையாவது கேட்பது அந்த ஸ்ரார்த்தம் அழியாப் பயனுள்ளதாக பிதிர்க்களிடம் சேரும்”

பாரதத்தின் பெருமைகளைக் கேட்கக் கேட்ட சுற்றிலும் அமர்ந்தும் சபையின் ஒவ்வொரு தூண்களருகே நின்றும் அசையாது கேட்டுக்கொண்டிருந்தவர்கள் பரவசமடைந்தார்கள். அனைவரும் இந்த இதிகாசத்தை முழுவதும் ஸ்மரணம் செய்ய சங்கல்பம் செய்துகொண்டார்கள். வைசம்பாயனர் இன்னும் பெருமைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்....

“பெருமை மிகுந்தவர்களே! இதோ இங்கே அமர்ந்திருக்கும் ஸ்ரீவியாஸாச்சாரியாள் இந்த பாரதத்தை மூன்று வருட காலங்கள் தூங்காமல் பரிசுத்தராக இருந்து ஆதியிலிருந்து சொன்னார். தவமாய் தவமிருந்து இயற்றினார். தர்மத்தில் விருப்பமுள்ளவர்கள் இந்த இதிகாசத்தை விருப்பத்துடன் முழுவதும் கேட்கவேண்டும். இதைக் கேட்டு அனுபவிக்கும் சந்தோஷம் ஸ்வர்க்கம் அடைந்தாலும் கிடைப்பதில்லை. இதைக் கேட்பவர்களும் கேட்கப்பண்ணுபவர்களும் ராஜஸூயம் அஸ்வமேத யாகம் செய்த பலன் பெறுகிறார்கள். மனசை பரிசுத்தம் பண்ணுவதற்கும் நல்லொழுக்கத்தை விருத்தி செய்வதற்கும் ரத்னமாகிய மஹாபாரதம் உதவுகிறது. பரீக்ஷித்தின் புத்திரரே! புண்ணியத்திற்காகவும் ஜயத்திற்காகவும் நான் சொல்லப்போகும் இந்த ஸ்ரேயஸானக் கதையை முழுதுங்கேளும்!”

கூட்டம் இன்னமும் பேச்சின்று இருந்தது. வைசம்பாயனர் எங்கிருந்து தொடர்வார் என்று ஆர்வத்துடன் காத்திருந்தார்கள்.

ஜனமேஜயன் மற்றும் அங்கு குழுமியிருந்த ரிஷிக்கூட்டம் அனைவரும் ஒரு பெரும் பேறு கிடைக்கத் துடிப்ப்புடன் அமர்ந்திருந்தார்கள். வியாஸர் நடுநாயகமாக புன்னகையுடன் கம்பீரமாக வீற்றிருந்தார்.

“பெருங்கதையான பாரதத்தை முதலில் சுருக்கமாக சொல்கிறேன். பின்னர் உபகதைகளுடன் முழுவதும் விவரிக்கிறேன். கேளும்.”

பாரதம் இன்னொருமுறை நிகழும் அற்புதம் ஆரம்பமானது.

#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#பாரதத்தின்_மஹிமை
#ஆஸ்தீகபர்வம்_நிறைவு
#அம்சாவதரணபர்வம்
#பகுதி_25

No comments:

Post a Comment