தவசிரேஷ்டர்களான வாலகில்ய ரிஷிகள் தொங்கிக்கொண்டிருந்த கிளை முறிந்து கீழே விழ ஆரம்பித்த போது கருடன் சட்டென்று அக்கிளையை அளகினால் கவ்விக்கொண்டான். அமிர்தம் எடுப்பதற்கு போதிய திராணி கொடுக்கும் உணவாகக் கொண்டு வந்த யானையையும் ஆமையையும் தனது நகங்களில் சொருகிக்கொண்டு விண்ணை நோக்கி ஏறினான். கம்பீரமாக அவனது சிறகுகளின் சடசடப்பில் எழுந்த சப்தம் ஈரேழுலங்களையும் உலுக்கியது.
அப்போது வாலகில்ய ரிஷிகள் “பெரும் பாரத்தை அனாயாசமாகத் தூக்கிக்கொண்டு பறப்பதினால் இவனுக்கு ‘கருடன்’ என்ற பெயர் அமையட்டும்” என்றனர். கருடன் தொடர்ந்து பறந்துகொண்டிருந்தான். அநேக காடுகளையும் கடல்களையும் மலைகளையும் தாண்டி கந்தமாதனம் என்ற மலைச்சாரலுக்கு வந்தான். அங்கே அவனது தந்தை கசியபர் தவமியற்றிக்கொண்டிருந்தார். கண்களைத் திறந்து அவர் பார்த்தபோது பிரம்மாண்டமான மரத்தின் பெருங்கிளை ஒன்றை வாயினால் கவ்விப் பிடித்தபடி அமர்ந்திருந்தான் கருடன். அக்கிளையில் வாலகில்ய ரிஷிகள் தொங்கிக்கொண்டிருந்தார்கள். அமர்ந்த அவன் காலின் விரல்களுக்கிடையில் உருவில் பெரியதான ஆமையும் யானையும் சொருகிக்கொண்டிருந்தது. கஸ்யபர் நடுங்கினார்.
“புத்திரா! வாலகில்யர்களைக் கவ்விக்கொண்டு சாஹம் செய்யாதே! அவர்களுக்குக் கோபம் வந்தால் உன்னைப் பொசுக்கி சாம்பலாக்கிவிடுவார்கள்” என்று எச்சரித்தார்.
வாலகில்ய ரிஷிகள் தொங்கிக்கொண்டே கஸ்யபரைப் பார்த்தார்கள். உடனே கஸ்யபர் அவர்களிடம்...
“கருடன் ஜனித்ததே ஜனங்களின் நன்மைக்காகத்தான். அவன் ஒரு பெரிய காரியமாகக் கிளம்பியிருக்கிறான். உங்கள் அனைவரின் அனுமதியும் ஆசீர்வாதமும் வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்.
தொப்பென்று கிளையிலிருந்து அனைவரும் குதித்தனர். அப்படியே நேரே புண்ணியமான இமயமலைப் பர்வதத்திற்கு தவமியற்றச் சென்றுவிட்டனர். கருடனக்கு ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும் மற்றொரு புறம் அந்த பிரம்மாண்டமான மரக்கிளையை எங்கே போடுவது என்ற ஐயம் எழுந்தது.
“பகவானே! இந்த பெருங்கிளையை எங்கே போடலாம் என்று தயை கூர்ந்து அருளுங்கள்” என்று மரியாதையாகக் கேட்டார்.
மனித நடமாட்டம் இல்லாததும் குகைகளெல்லாம் பனியினால் மூடப்பட்டதுமான ஒரு பர்வதத்தை கஸ்யபர் காட்டினார். அந்த மலையின் நடுவில் சென்று அமர்ந்தார் கருடன். கிளையை விட்டுவிட்டு கால் நகங்களில் சொருகியிருந்த பிரம்மாண்டமான ஆமையையும் யானையையும் புசித்தார். அவரது பலம் பன்மடங்காகப் பெருகியது. அந்த பர்வதத்தின் உச்சியிலிருந்து விண்ணுக்கு பெரும் சப்தத்துடனும் காற்றைக் கடைந்துகொண்டும் ஏறினார்.
அப்போது தேவர்களுக்கு பல அபசகுனங்கள் உண்டாயிற்று. தேவேந்திரனின் வஜ்ராயுதம் பயத்தினால் ஜொலித்தது. ஆகாயத்திலிருந்து பகலிலேயே புகையோடும் ஜ்வாலைகளோடும் எரிகொள்ளிகள் விழுந்தன. தேவர்களின் புஷ்பமாலைகள் நொடியில் வாடின. பிரளயகால மேகங்கள் தோன்றின. தேவர்கள் அனைவரோடும் தேவேந்திரன் கையைப் பிசைந்துகொண்டு நின்றான்.
பக்கத்தில் நின்றிருந்த ப்ரஹஸ்பதியைப் பார்த்து “தேவாசுர யுத்தத்தின் போது கூட இவ்வளவு அபசகுனங்கள் தோன்றியதில்லையே! ஏனிப்படி ஆகிறது” என்று கவலையுடன் விஜாரித்தான்.
“கஸ்யபருக்கு வினதையிடம் பிறந்த புத்திரனான கருடன் அமிர்தம் கொண்டு போக வருகிறான். அவன் மிகுந்த பலம் மிக்கவன். யாராலும் வெல்லமுடியாதவன். நீ செய்த ஒரு குற்றத்திற்காக உன்னை வெல்ல வருகிறான்” என்று ப்ரஹஸ்பதி பீதியைக் கிளப்பிவிட்டார்.
“தேவர்களே! நீங்கள் எல்லோரும் ஆயுதங்களுடன் தயாராகுங்கள். அமிர்தகலசத்தைச் சுற்றி நில்லுங்கள். கருடன் பலாத்காரமாக அமிர்தத்தை கவர்ந்து செல்வதற்கு விடாதீர்கள்...”
கேடயங்களோடும் திரிசூலங்களையும் வில்லம்புகளோடும் சூழ்ந்து நின்று ஒரு போருக்கு தயாராக நின்றார்கள். தேவேந்திரன் ப்ரஹஸ்பதியிடம் சென்று “நான் என்ன குற்றம் செய்தேன் என்று என்னை வெல்ல கருடன் இங்கே வருகிறான்?” என்று கேட்டான்.
ப்ரஜைகளின் சிருஷ்டி கர்த்தாவாக பிரம்மாவால் கஸ்யபர் படைக்கப்பட்டார். அவர் புத்திரர்களை விரும்பி யாகம் செய்வதற்கு இந்திரனும் வாலகில்ய ரிஷிகளும் ஸமித்து கொண்டு வருவதற்காக கஸ்யபரால் நியமிக்கப்பட்டார்கள். இந்திரன் தனது பராக்கிரமத்தினால் மலையளவு ஸமித்துகளை சிரமமே இல்லாமல் தூக்கிச் சென்றான். அந்த வழியில் கட்டைவிரல் நடுரேகையளவிற்கு குறிய சரீரமுள்ள ரிஷிகள் பொடிசான சில ஸமித்துகளை மிகுந்த சிரமத்துடன் தூக்கிச்சென்றுகொண்டிருந்தார் கள். இந்திரனுக்கு ஒரே சிரிப்பு. தன்னுடைய சாகசத்தின் மமதையினால் அவர்களைப் பார்த்து அலட்சியமாகச் சிரித்தான்.
வாலகில்ய முனிவர்களுக்கு கோபம் தலைக்கு ஏறியது...
#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#ஆஸ்தீகபர்வம்
#பகுதி_18
No comments:
Post a Comment