தேவேந்திரன் ஒரு பக்கம் கைகூப்பித் துதித்துக்கொண்டு நிற்க பக்ஷிராஜரான கருடர் தனது வலிமையைச் சொல்ல ஆரம்பித்தார்.
“இந்திரா! யோக்கியசீலர்கள் அவர்களது பலத்தை அவர்களே சிலாகித்துக்கொள்வது இல்லை.. இருந்தாலும் நீ கேட்பதால் நான் சொல்கிறேன்.. கேள்..”
“உம்முடைய திடகாத்திரமான வஜ்ரதேகத்தின் ஆற்றலை நீர் அமிர்தம் கவர்ந்தபோது நான் பார்த்தேன். எவராலும் பக்கத்தில் நெருங்கமுடியாத அக்னியைப் போல ஜொலித்தீர்.. நானும் என்னுடைய தேவர்க் கூட்டமும் அதை அறிய ஆவலாக இருக்கிறோம். அருள்கூர்ந்து....” என்று கும்பிட்டான் இந்திரன். சுற்றிலும் தேவர்படை நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது.
“மலைகள்... காடுகள்... கடல்கள்... இவைகளைத் தாங்கும் இந்தப் பூமியையும் உன்னையும் சேர்த்து என்னுடைய ஒரு சிறகினால் இலகுவாகத் தூக்குவேன். ஸ்தாவர ஜங்கமங்கள் அடங்கிய ஈரேழு பதினான்கு லோகங்களையும் எளிதில் எடுத்துக்கொண்டு பறப்பேன். இது என் பலம்” என்று வானளாவி நின்ற கருடாழ்வார் பகர்ந்தார்.
“பக்ஷிராஜரே! உம்முடைய பலம் அறிந்தோம். இந்த அமிர்தத்தினால் உமக்கு பலன் ஏதும் இல்லை. நீர் அனைத்து சக்திகளும் அடங்கியவர். இதை நீர் எவரிடம் கொண்டு போய் சேர்க்கிறீரோ அவர்கள தேவர்களாகிய எங்களை ஆட்டிப்படைப்பார்கள். ஆகையால் எங்களிடமே இந்த அமிர்தபானத்தை கொடுக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்றான் சோர்ந்துபோன இந்திரன்.
“இந்திரா! என்னுடைய சிறிய தாயார் கத்ருவின் புத்திரர்களான ஸர்ப்பங்கள் எனது தாயாரை அடிமைபடுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு அமிர்தம் அளித்தால் என் அன்னையை நான் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பேன். நீ கவலைப்படாதே! அவர்கள் பருகுவதற்கு இந்த அமிர்தத்தை கொடுக்கமாட்டேன். உன்னைக் காட்டிலும் நான் பலம் பொருந்தியவனாக இருந்தாலும் உன்னிடம் ஒரு வரம் கேட்பேன். நீ அருள வேண்டும்”
“மிக்க மகிழ்ச்சி! நிச்சயமாகத் தருகிறேன் பக்ஷிஸ்ரேஷ்டரே! “
“வலிமையுள்ள ஸர்ப்பங்கள் எனக்கு ஆகாரமாக வேண்டும்.”
“அப்படியே ஆகட்டும்”
தேவேந்திரன் விஷ்ணுவிடம் சென்று நடந்ததை விவரித்தான். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
அமிர்தத்துடன் கருடர் பறந்து சென்றார். தேவேந்திரன் சிறிது இடைவெளியில் பின் தொடர்ந்தான். வினதை இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்தார்.
“அன்னையே! அமிர்தத்துடன் வந்திருக்கிறேன். உன்னை இப்போதே அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பேன். எங்கே என்னுடைய பிராதாக்கள்?” என்று தேடினார். கத்ருவின் புத்திரர்களான ஆயிரம் சர்ப்பங்களில் சிலவை தென்பட்டன.
“நீங்கள் கேட்ட அமிர்தபானத்துடன் வந்திருக்கிறேன். இதோ இருக்கிறது. உங்களது சொல்லால் என் அன்னையை அடிமைத்தனத்திலிருந்து நீக்கியதாக இவ்வுலகிற்கு தெரிவியுங்கள்” என்றார்.
“அப்படியே ஆகக்கடவது... ” என்று அனைத்தும் ஒருசேரப் பேசியது.
பின்னர் அமிர்தம் எங்கே அமிர்தம் எங்கே என்று சுற்றும்முற்றிலும் பார்த்தார்கள்.
“இந்த அமிர்தத்தை இங்கேயிருக்கும் இந்தத் தர்ப்பையில் விடுகிறேன். நீங்கள் அனைவரும் ஸ்நானம் செய்துவிட்டு வந்து பருகுங்கள்” என்று கருடர் தர்ப்பைகளில் கலசத்தைச் சரித்தார்.
காடு முழுக்க கீழே தர்ப்பைகளில் அமிர்தம் விடப்பட்டது. அதைக் கண்ட நாகர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு ஆற்றங்கரைக்குச் சென்று மங்கள ஸ்நானம் செய்துவரப் புறப்பட்டார்கள். அப்போது கருடரைப் பின் தொடர்ந்து வந்த இந்திரன் அந்த தர்ப்பைகளில் விடப்பட்டிருந்த அமிர்தத்தை பாத்திரத்தில் வடித்து எடுத்துக்கொண்டு கண நேரத்தில் தேவலோகத்திற்கு பறந்துவிட்டான்.
ஸ்நானம் செய்துவிட்டு வந்த நாகங்கள் தர்ப்பைகளில் அமிர்தம் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்தார்கள். இருந்தாலும் விடாமல் அமிர்தம் இருந்த தர்ப்பைகளை அழுந்த நக்கினார்கள். அப்போது தர்ப்பையில் நாக்கு கிழிபட்டு அவர்களுக்கு இரட்டை நாக்காக மாறியது. அமிர்தத்தை சில நேரம் தாங்கியதால் தர்ப்பைகள் பவித்ரமானதாக இன்றும் கருதப்படுகிறது.
அன்னை அடிமைத்தனம் நீங்கியதும் ஸ்ரீகருடர் மிகவும் மகிழ்வுடன் இருந்தார். சர்ப்பங்களை அவ்வப்போது புசித்தார். பக்ஷிகள் அவரை பூஜித்தன.
**
சௌனகாதிகள் ஸுதபுத்திரரைப் பார்த்து “நாகங்களின் பெயர்களை நீங்கள் சொல்லவே இல்லை. தயைகூர்ந்து முக்கியமான பெயர்களையாவது கேட்கவிரும்புகிறோம்” என்றார்கள்.
“தவசிரேஷ்டர்களே! நாகர்களில் நிறைய பேர் இருப்பதினால் சில முக்கியமான பெயர்களை அவர்கள் பிறந்த வகையில் சொல்கிறேன் கேளுங்கள்..”
முதலில் சேஷன் பிறந்தான். அவனைத் தொடர்ந்து வாஸுகி பின்னர் ஐராவதன், தக்ஷகன், கார்க்கோடகன், தனஞ்சயன், காளியன், மணிநாகன், அபூரணன், பிஞ்சரகன், ஏலாபத்ரன், வாமனன், நீலன், அநீலன், கல்மாஷன், சபலன், ஆர்யகன், உக்கிரன், கலசபோதகன், ஸுமனஸ், ததிமுகன், விமலபிண்டகன், ஆப்தன், கோடரகன், சங்கன், வாலிசிகன், நிஷ்டானகன், ஹேமகுஹன், நஹூஷன், பிங்கலன், பாஹ்யகர்ணன், ஹஸ்திபதன், முத்கரபிண்டகன், கம்பலன், அஸ்வதரன், காலீயகன், வருத்தன், ஸம்வர்த்தகன், பத்மர்கள் இருவர், சங்கமுகன், கூஸ்மாண்டகன், க்ஷேமகன், பிண்டாரகன், கரவீரன், புஷ்பதம்ஷ்ட்ரன், பில்வகன், பில்வபாண்டுரன், மூஷிகாதன், சங்கசிரஸ், பூர்ணபத்திரன், ஹரித்திரன், அபராஜிதன், ஜ்யோதிகன், ஸ்ரீவஹன், கௌரவ்யன், திருதராஷ்டிரன், சக்தி மிக்க சங்க பிண்டன், விரஜஸ், ஸுபாகு, சாலிபிண்டன், ஹஸ்திபிண்டன், பிடரகன், ஸுமுகன், கௌணபாசனன், குடரன், குஞ்சரன், பிரபாகரன், குமுதன், குமுதாஷன், தித்டிரி, ஹலிகன், கர்த்தமன், பகுமூலகன், கர்க்கரன், அகர்க்கரன், குண்டோதரன் மற்றும் மகோதரன்... இவர்கள் ஆயிரம் மற்றும் பல்லாயிரக்கணக்கில் லக்ஷம் கோடியாகப் பெருகிவிட்டார்கள். இதற்குமேலும் இவர்களின் வம்சப் பெயர்களைச் சொல்வது எளிதல்ல...” என்றார் ஸூதர்.
[பிரபாகரன், திருதராஷ்டிரன் என்ற பெயர்களில் ஸர்ப்பங்களும் இருந்தன. காளியன், தக்ஷகன், கார்க்கோடகன், நகுஷன், சேஷன், வாஸுகி, ஐராவதன் ஆகியோர் புராண இதிகாசங்களில் அடிக்கடி தென்படும் சர்ப்பங்கள்]
#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#ஆஸ்தீகபர்வம்
#பகுதி_20
No comments:
Post a Comment