Saturday, December 16, 2017

சர்மிஷ்டையின் தியாகம்

மகளின் மீது அதீத ப்ரேமை கொண்டவர் சுக்ரர். தனக்கு தாயைப் போலக் கருதினார். செல்லமாக வளர்த்துவந்தார். இருள் கவியும் நேரம் ஆரம்பித்தும் இல்லம் வந்து சேராத தேவயானியைப் பற்றிக் கவலையுற்றார்.

“தாதியே! தேவயானி இன்னும் ஏன் வரவில்லை. நீ ஓடிச் சென்று பார்த்துவா” என்று விரட்டினார். தாதி செல்லும் வரை வாசலில் நின்றுவிட்டு க்ருஹத்துக்குள் வந்து கவலை தோய்ந்த முகத்துடன் காத்திருந்தார்.

வனத்தின் எல்லைப் பகுதியில் பெரிய ஆலமரத்தின் அடியில் தேவயானி அமர்ந்திருப்பதைக் கண்டாள் அந்த தாதிப் பெண். ஓடிச்சென்று அவளை அடைந்தாள்.

“தேவயானி! தந்தை மிகவும் கவலையுடன் இருக்கிறார். வா போகலாம்” என்று கையைப் பிடித்து இழுத்தாள்.

“என்னை விடு” என்று வெடுக்கென்று தாதியின் கையைப் பிடுங்கினாள். முட்டியில் முகம் புதைத்து குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

“என்னாயிற்று தேவயானி?” என்று கேட்டாள் தாதி. தேவயானியுடனும் சர்மிஷ்டையுடனும் ஜலக்கிரீடைக்கு செல்லாத தாதி அவள்.

தேம்பித் தேம்பி அழுதவண்ணம் பாழுங்கிணற்றுக்குள் சர்மிஷ்டை தள்ளியது வரை கதை சொன்னாள் தேவயானி. பின்னர்

“இந்த வ்ருஷபர்வா ஆளும் தேசத்துக்குள் நான் வரமாட்டேன் என்று என் பிதாவிடம் போய்ச் சொல்” என்று அவளை விரட்டிவிட்டாள். வானத்தில் நட்சத்திரங்கள் எட்டிப் பார்த்துக் கண் சிமிட்ட ஆரம்பித்துவிட்டன. தாதிக்கு இவளைத் தனியாக விட்டுப்போவதற்கு சங்கடப்பட்டாள். இருந்தாலும் நிலைமையின் தீவிரம் கருதி சுக்ரரிடம் போய்ச் சொல்ல ஓடினாள்.

தாதியிடம் இந்தச் செய்தியைக் கேட்ட சுக்ராசாரியார் பதறிப்போய் எழுந்தார். தாதியையும் அழைத்துக்கொண்டு வேகுவேகமாக காட்டுக்கு ஒடினார். வரும் வழியில் தாதியிடம் முழுக்கதையையும் கேட்டறிந்தார். மரங்களடர்ந்த வனம் தென்பட்டது. தூரத்தில் பெண் உட்கார்ந்திருக்கும் நிழலைக் கண்டவுடனேயே அவருக்கும் கண்களில் நீர் கட்டியது. உத்தரீயத்தால் கண்களைத் துடைத்துக் கொண்டு தேவயானியை நெருங்கினார்.

தந்தையைக் கண்டதும் எழுந்து நின்றாள் தேவயானி. அப்படியே கட்டிக்கொண்டு அழுதார் சுக்ரர்.

“அம்மா! எல்லா ஜனங்களும் சுகதுக்கங்களை அடைவது தங்களுடைய குற்றங்களாலும் குணங்களாலும்தான். நீ பிழை செய்திருக்கிறாய். ராஜாமகள் அவள். நீ அப்படி பேசியிருக்கக்கூடாது” என்று துக்கமுடன் சொன்னார்.

“என் பெயரில் பிழை இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். நீர் அஸுரர்களுடைய துதிபாடி என்று சொல்கிறாள். அவளது தந்தையிடம் கையேந்தி நிற்பவனுடைய பெண்ணுக்கு இவ்வளவு அகங்காரமா என்று கேட்கிறாள். துதிக்கப்படுபவரின் பெண்ணிடம் உன் முரட்டுத்தனத்தைக் காட்டுவாயா என்று என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள். பின்னர் நிர்ஜனமான இந்தக் காட்டில் ஒரு பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டாள்.”

”தேவயானி! நீ யாசிப்பவனின் பெண் அன்று. துதிசெய்பவனின் பெண்ணும் அல்ல. நான் அரசசபையில் துதிசெய்யப்படுபவன். வ்ருஷபர்வாவுக்கு இது தெரியும். இந்திரனுக்குத் தெரியும். பின்னர் நகுஷ புத்திரன் யயாதிக்கு தெரியும். ஈஸ்வரன் எனக்கு வரமளித்த சஞ்சீவினி வித்தை என் பலம். பொறுமையாயிரு. சத்புருஷர்களுக்கு பொறுமைதான் பலம். “

தேவயானிக்கு கோபம் குறையவில்லை. அவமானத்தால் மனசுக்குள் துடித்துக்கொண்டிருந்தாள். அப்பாவி போல தன்னைத் தேற்றிக்கொண்டிருக்கும் அப்பாவைக் கண்டதும் உள்ளம் குமைந்தாள். மீண்டும் அழத்துவங்கினாள். அவளைத் தேற்றும் விதமாக சுக்ராசாரியார் அந்த மரத்தின் அடியிலே உட்கார்ந்து கொண்டு ஆகாயத்தில் நட்சத்திரங்கள் மினுமினுக்கும் ராத்திரி வேளையில் பேசத்துவங்கினார்.

“தேவயானீ! எவனொருவன் பிறத்தியார் சொல்லும் அவச்சொற்களைப் பொறுத்துக்கொள்கிறானோ அவன் இந்த ஜெகத்தை ஜெயித்தவன் ஆகிறான். கோபத்தைக் குதிரைக்கு ஒப்பாகக் கொள். அதை அடக்குபவனே உண்மையான சாரதி. பாம்பு சட்டையை உரிப்பது போல கோபத்தை பொறுமையினால் நீக்கி விடுகிறவன் உண்மையான ஆண்பிள்ளை என்று அறிந்துகொள். பிறரின் நிந்தனைகளை பொறுத்துக்கொண்டு பிறர் வருத்தியும் வருந்தாமல் இருந்து கோபத்தை அடக்குகிறவன் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக நிறைவேற்றுகிறான்”

ஞானம் நிரம்பிய தனது தந்தையின் பேச்சை ஆர்வமாகக் கேட்க ஆரம்பித்த தேவயானியிடம் அமைதி தெரிந்தது. சாந்தி நிலவுவதாக முகம் மாறிக்கொண்டிருந்தது. தாதிப் பெண்ணும் கூப்பிடு தூரத்தில் நின்றுகொண்டு அந்த அறவுரைகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ஒவ்வொரு மாசமும் தடைபடாமல் யாகம் செய்பவனையும் கோபப்படாதவனையும் ஒப்பு நோக்கினால் கோபப்படாதவனே யாகம் செய்பவனைக் காட்டிலும் சிறந்தவன். காமமும் கோபமும் இழிவானவை. கோபத்தீயில் மூழ்கியவனது தானமும் யாகமும் தவமும் பயனில்லாதவை. கோபத்திற்கு ஆட்படுபவன் ரிஷியாகமாட்டான். யாகத்தின் பலன்கள் அவனுக்குக் கிடைக்காது. தர்மத்தை அடையமாட்டான். அவனுக்கு இம்மை மறுமை என்ற இருலோகங்களிலும் இடமில்லை.”

தேவயானி அசையாது கேட்டுக்கொண்டிருந்தாள். சிறிது நேரம் மௌனம் காத்தார் சுக்கிராசாரியார். அந்த முன்னிரவு நேரத்தில் அங்கேயிருந்த மூன்று பேரின் மௌனம் அந்த இருட்டை விட அடர்த்தியாயிருந்தது. மூவரில் யார் திரும்பவும் பேசுவார்? சுக்கிராசாரியாரே ஆரம்பித்தார்.

“நான் ஒன்று சொல்லட்டுமா தேவயானி? கவனமாகக் கேட்பாயா?”

“ம்.. சொல்லுங்கள் பிதாவே” வெகுநேரத்திற்குப் பிறகு வாய் திறந்தாள் தேவயானி.

“கோபிஷ்டனுக்கு அவனுடைய புத்ரன், வேலைக்காரன், ஸ்நேகிதன், சகோதரன், பார்யாள் ஆகியோர் விலகிச் செல்வார்கள். அவனுடன் ஒட்டி உறவாட மாட்டார்கள். இவையெல்லாவற்றையும் விட முக்கியமான இரண்டு அவனை விட்டு தூர விலகி ஓடும். அது என்ன தெரியுமா?”

தாதியும் தேவயானியும் சுக்ராசாரியாரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“தர்மமும் சத்யமும்”

தேவயானி அங்கிருந்து எழுந்தாள். சுக்ராசாரியாரும் அவளுடன் எழுந்து நின்றாள்.

“வாருங்கள் வீட்டிற்கு போகலாம்” என்று தேவயானி அவரை அழைத்துக்கொண்டு புறப்பட்டாள். பின்னால் இரண்டடி தூரத்தில் தாதியும் அவர்களை பின் தொடர்ந்தாள். தேவயானிக்கு வாயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“பிதாவே! கோபத்தைப் பற்றி நீர் சொன்னவை அனைத்தும் சத்யம். ஆனால் ஒழுக்கந்தப்பியவர்களிடம் வசிப்பதில் எனக்குப் பிரியமில்லை. பிறத்தியாரின் குலத்தைப் பற்றியும் அவர்களது வேலையைப் பற்றியும் எவன் நித்திக்கிறானோ அவனிடம் ஸ்ரேயஸை விருப்பும் அறிஞர்கள் வசிக்கமாட்டார்கள். யார் மற்றவரை மதிக்கிறானோ அந்த சாதுவிடம் வசிப்பது தகும். செல்வம் இல்லாத போதும் தம்மை அடக்கிக்கொண்டவர்கள் சிறந்தவர்கள். பாபம் செய்பவர்களும் ஒழுக்கம் கெட்டவர்களும் தனவந்தர்களாக இருந்தாலும் சண்டாளர்கள். சண்டாளத்தனம் பிறப்பில் வருவதில்லை. தனக்குண்டான செயலை விட்டு தனம் குலம் வித்தை ஆகியவற்றில் ஆசை வைத்தவர்கள் சண்டாளர்களுக்கு நிகரானவர்கள். “

சுக்ராசாரியார் பெருமூச்சு விட்டார். தர்மம் பேசும் பெண்ணை பெருமையாகப் பார்த்தார். வீடு அடைவதற்கு இன்னும் கொஞ்சம் தூரமிருந்தது. முன்னால் தந்தையும் மகளும் பின்னால் தாதிப்பெண்ணும் முக்கோணம் போல நடந்து வந்துகொண்டிருந்தார்கள்.

“தந்தையே! பாபிகளுடன் வசிக்கும் சாது பாபியாகிறான். நன்மையோ தீமையோ எதில் அதிகம் பழகுகிறானோ அதில் பற்றுதல் உண்டாகிவிடும். வ்ருஷபர்வாவின் பெண் சொன்னது மிகவும் கெட்ட சொல். அக்னியை வேண்டுகிறாவன் அரணிக்கட்டையைக் கடைவது போல என் மனதைக் கடைகிறது. ஐஸ்வரியம் இல்லாத ஒருவன் ஐஸ்வரியம் இருப்பவனிடம் எதிர்பார்த்துக் காத்திருத்தலைவிட இறப்பது மேல். நீசர்களின் சேர்க்கையால் அவமானத்தை அடைவோம். வரம்பு கிடந்த சொற்களால் அடிப்பட்டவன் இரவும் பகலும் தூக்கமில்லாமல் துக்கப்படுகிறான். ஆயுதங்களினால் வெட்டப்பட்டதும் தீயினால் சுடப்பட்டதும் ஆறும். சொற்புண் பிராணிகளுக்கு தேகம் உள்ளளவும் ஆறாது. பாணத்தினால் அடிப்பட்டதும் கோடாலியினால் வெட்டப்பட்ட அதோ அந்த வனமிருக்கிறதே அது மீண்டும் வளர்ந்துவிடும். ஆனால் சொற்களால் மனசுக்குள் ஏற்பட்ட ரணம் எப்பவுமே ஆறாது”

நகரத்தின் எல்லைக்கு வந்துவிட்டார்கள். அதோ வீடு தெரிந்தது. ஆனால் தேவயானி அப்படியே சிலை போல எல்லையில் அமர்ந்துவிட்டாள்.

“பிதாவே! இந்த பட்டணத்துக்குள் நான் நுழையமாட்டேன். எனக்கு உள்ளே நுழைய விருப்பமில்லை.”

சுக்ராசாரியார் சோர்ந்து போனார். நேரே வ்ருஷபர்வாவின் அரண்மனைக்கு கோபத்துடன் சென்றார்.

ராஜா அந்தப்புரத்திலிருந்து அவசாரவசரமாய் தர்பாருக்கு வந்தான்.

“என்னிடம் சஞ்சீவினி வித்தை பயில வந்த கசன் என்ற பிராமணனை பலமுறை வதம் செய்தாய். இப்போது உன் பெண் சர்மிஷ்டை தேவயானியைக் கொல்லப் பார்க்கிறாள். இனிமேல் உன் தேசத்தில் என்னால் வசிக்கமுடியாது. என் பெண் இருக்குமிடமே என் இடம். அவள் விருப்பமே என் விருப்பம்”

வ்ருஷபர்வா அதிர்ந்து போனான்.

“அப்படி நான் தூண்டிதான் அவள் செய்தாள் என்றாள் நான் அழிந்துபோகக்கடவேன்” என்றான் வ்ருஷபர்வா

“நான் பொய் சொல்கிறேன் என்கிறாயா?” என்றார் சுக்ரர் கோபத்துடன்.

“நீங்கள் சத்யவான். உங்களை நான் அப்படிச் சொல்வேனா? நீங்கள் எங்களை விட்டுப் பிரிவதாக இருந்தால் நானும் என் பந்துக்களும் சமுத்திரத்திலோ பாதாளத்திலோ அக்னியிலோ பிரவேசித்து மாய்ந்து போவோம். நீர் என்னை விட்டுப் பிரிந்தால் நான் அக்னியில் பிரவேசிப்பேன். இது சத்தியம்”

“நீ எப்படி வேண்டுமானாலும் போ. என் பெண்ணின் சுகமே முக்கியம். அவளது துக்கத்தை தாங்க முடியாது. என்னுயிர் அவளிடம் இருக்கிறது. இந்திரனுக்கு ப்ருஹஸ்பதி செய்வதைக் காட்டிலும் நான் உனக்கு நிறைய செய்கிறேன்”

“குருவே! அஸுரராஜாக்களின் தனம், பசு, குதிரை, யானை இன்னும் இந்தப் பூமியில் என்னென்ன தனங்கள் உண்டோ அவையனைத்துக்கும் நீரே பிரபு! நீங்கள்தான் பிரபு!” என்று நா தழுதழுக்கச் சொன்னான் வ்ருஷபர்வா.

“வ்ருஷபர்வா! அஸுரராஜாக்களின் திரவியங்களுக்கெல்லாம் நான் தான் ப்ரபுவென்றால் நீ தான் தேவயானியை சமாதானப்படுத்த வேண்டும்”

சுக்ரர் முன்னே வர பின்னால் தன் பரிவாரஙக்ளுடன் அப்போதே தேவயானியைப் பார்க்க கிளம்பிவிட்டான் வ்ருஷப்ர்வா. பெரிய சேனையுடன் தன்னைப் பார்க்க ராஜா வருவதில் பெருமிதம் கொண்டாள் தேவயானி. எல்லோருக்கும் முன் ராஜாதி ராஜனாக தந்தை வருவதில் பெருமைக்கடலில் இன்பமாக மூழ்கினாள். தான் பட்ட துன்பம் இன்பமாக மாறும் தருணம் வந்துவிட்டதாக நம்பினாள். பக்கத்தில் அவளுடன் நின்றிருந்த தாதியைப் பார்த்து வெற்றிப் புன்னகை சிந்தினாள்.

வ்ருஷபர்வா நேரே தேவயானிடம் சென்று “தேவயானீ! தயை செய்” என்று அவள் காலில் விழுந்துவிட்டான். சுக்ரருக்கே தூக்கிவாரிப் போட்டது. தேவயானி சலனமில்லாமல் நின்றிருந்தாள். வ்ருஷபர்வா எழுந்து

“என்னால் துதிக்கப்படுபவர் உன் தந்தை. அவரில்லாமல் எங்கள் குலம் வாழாது. உனக்கு என்ன வேண்டுமோ கேள். தருகிறேன்” என்றான்.

எல்லோரையும் ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள் தேவயானி.

“ஆயிரம் கன்னிகைகளுடன் சர்மிஷ்டை என் வேலைக்காரியாக இருக்க வேண்டும். என்னை என் பிதா யாருக்கு கொடுப்பாரோ அங்கும் அவள் என் பின்னே வர வேண்டும்”

வ்ருஷபர்வாவின் பந்துக்களும் மீதமிருந்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். வ்ருஷபர்வா என்ன செய்யப்போகிறான் என்று சுக்கிரர் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“ஓ தாதியே! இங்கே வா. சர்மிஷ்டையை உடனே இங்கே அழைத்துவா! தேவயானி கேட்டதை நான் தருகிறேன். ஒரு குலத்துக்காக ஒருவனை விடலாம். தப்பில்லை. ஒரு கிராமத்திற்காக ஒரு குலத்தை விடலாம். ஒரு தேசத்திற்காக கிராமத்தை விடலாம். தனது ஆத்மா சாந்தியடைவதற்காக நாம் உலகத்தையே விட்டுவிடும் போது இதெல்லாம் எம்மாத்திரம்”

தாதியிடம் விஷயம் அறிந்து குலம் காக்க ஆயிரம் கன்னிகைகளுடன் ஒரு பல்லக்கில் ஏறி தேவயானியிடம் வந்து சேர்ந்தாள் சர்மிஷ்டை.

“ஆயிரம் கன்னிகைகளுடன் உன் வேலைக்காரியாக ஆகிறேன். நீ செல்லுமிடமெல்லாம் பின்னால் வருவேன்” என்று குனிந்து சொன்னாள். அவளது தியாகத்தைப் பார்த்த அவளது பந்துக்கள் கண்ணீர் சிந்தினர். வ்ருஷபர்வா தனது பெண்ணின் இந்த கார்யத்தில் கரைந்தான். சுக்ராசாரியாரே ஆடிப்போனார்.

“நான் துதிப்பவன் பெண். யாசிப்பவன் மகள். நீ எப்படி எனக்கு தாஸியாவாய்?” என்று கிண்டல் தொணிக்கும் குரலில் கேட்டாள்.

“துக்கப்படும் என் பந்துக்களுக்கு நான் சௌக்கியம் தரவேண்டும். நீ செல்லுமிடமெல்லாம் வந்து நீ இட்டக் கட்டளையை நிறைவேற்றும் தாஸியாகிறேன்”

தேவயானி பரம சந்தோஷத்தை அடைந்தாள்.

“தந்தையே நான் திருப்தியடைந்தேன். உம்முடைய ஞானமும் வித்தையின் பலமும் வீணாகவில்லை. நாம் இனி பட்டணப் பிரவேசம் செய்யலாம்” என்று அங்கிருந்து எழுந்தாள். வ்ருஷபர்வா திரும்பிப்பார்க்காமல் தனது பந்துக்களுடன் அரண்மனைக்கு விரைந்தான். சர்மிஷ்டை வந்த பல்லக்கில் தேவயானி ஏறி அமர்ந்துகொண்டாள்.

பல்லக்கு பட்டணத்திற்குள் நுழைய முன்னால் சுக்ராசாரியாரும் பின்னால் ஆயிரம் கன்னிகைகளுடன் சர்மிஷ்டையும் பின் தொடர்ந்தார்கள். பெண்ணின் உறுதி செய்த பராக்கிரமத்தை நினைத்து நடந்துகொண்டிருந்தார் சுக்ரர்.

தேவயானி இப்போது வேறு கனவில் இருந்தாள்.

#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#யயாதி
#சர்மிஷ்டை
#தேவயானி
#ஸம்பவபர்வம்
#பகுதி_30

No comments:

Post a Comment