அன்னை வினதையின் கஷ்டத்தைப் போக்குதற்கு தயாரான கருடர் அமிர்தம் கொண்டு வர கிளம்பினார். சிறகுகளை விரித்து அடக்கி....
“தாயே! நான் வெகுதூரம் பயணம் செய்து அமிர்தம் கொண்டுவர வேண்டும். நான் எதை புசித்தால் எனக்கு போதிய பலம் கிடைக்கும் என்று அறிவுரை கூறுங்கள்”
“மகனே கருடா! சமுத்திரத்திற்கு நடுவில் ஒரு தீவில் வேடச்சேரி இருக்கிறது. அங்கிருக்கும் வேடர்கள் துஷ்டர்கள். அவர்களைப் புசித்துவிட்டு அமிர்தம் கொண்டுவா. ஆனால் நமக்கு குருவைப்போலவும் தந்தையைப் போலவும் இருக்கும் பிராம்மணர்களை மற்றும் புசித்துவிடாதே! அது பாவம்” என்று எச்சரித்தாள்.
கருடர் விழித்தார்.
“அம்மா! பிராமணன் எப்படியிருப்பான்? அவனைப் எப்படி நான் அடையாளம் காண்பது?”
“நீ எவனை விழுங்கும்போது தொண்டையில் தூண்டில்முள் போல இருக்கிறதோ அவன் பிராமணன். கனன்று கொண்டிருக்கும் தனல் போலச் சுடும். உன் வயிற்றில் போனபோதும் கூட ஜீரணமாகாமல் இருப்பவன் பிராமணோத்தமன். உனக்கு கோபம் வந்தபோதும் கூட பிராமணனை நீ வதைப்பலாகாது”
வினதையின் அறிவுரைகளை மனதில் ஏற்றிக்கொண்டார். ஜிவ்வென்று மேலே எழும்பினார். அவர் விண்ணுக்கு உயர்ந்த நேரத்தில் அவருக்கடியில் இருந்த கடல் வற்றியது. அலைகள் ராட்ஷச உயரத்திற்கு எழுந்தன. பறந்தார். எங்கேயோ வேடச்சேரி தெரிந்தது. தூரத்தில் இருந்த மரங்கள் பெருங்காற்றடித்ததால் கீழே விழுந்துவிடுவது போல ஆடியது. பிரளயகாலம் போல இருந்தது. வேடர்கள் நடுங்கினார்கள்.
கருடன் இந்தப் புவிமண்டலத்தையே விழுங்குவது போல வாயைத் திறந்தார். சூறைக்காற்றினால் பிடிங்கிக்கொள்வது போல ஆடும் மரங்கள் உள்ள வனத்திலிருக்கும் பக்ஷிகள் மண்ணோடு சேர்ந்து திக்கு தெரியாமல் ஆகாயத்திற்குள் புகுவது போல ஆயிரக்கணக்கில் வேடுவர்கள் கருடரின் வாய்க்குள் ஓடினார்கள். அவர்களை சம்ஹரிக்க வாயை மூடினார் பக்ஷிராஜர்.
திடீரென்று அவருடைய நெஞ்சருகே சுட்டது. தாயார் சொன்னது நியாபகம் வந்தது. ”ஆஹா... தெரியாமல் பிராமணனையும் விழுங்கிவிட்டோமோ” என்று அஞ்சினார்.
“பிராமண ஸ்ரேஷ்டனே! வாயைத் திறக்கிறேன். வெளியே ஓடிவிடு” என்று எச்சரித்தார்.
“என்னுடைய பாரியாளாகிய இந்த வேடச்சியையும் விடுதலை பெற அனுக்ரஹம் செய்யவேண்டும்” என்று கைக் கூப்பினான்.
“ம்... அவளையும் அழைத்துக்கொண்டு சீக்கிரமாக வெளியே செல்... நான் உன்னை ஜீரணம் செய்துவிடுவேன் போலிருக்கிறது”
வேடச்சியோடு அந்த பிராமணன் கருடருக்கு ஆசீர்வாதம் செய்து வெளியேறினான்.
விர்ர்ர்ர்ர்ரென்று விண்ணில் சுழன்றார் கருடன். அந்த வேகத்தில் கீழே ஆழ்கடல் ஆர்ப்பரித்தது. அவருக்கு கீழே கிடந்த கடல் வற்றியது. மீண்டும் மரங்களெல்லாம் தலைவிரித்தாடியது. அவரது பசி அடங்கவில்லை.
அப்போது அவரது தந்தையான கசியபரைக் கண்டார். கீழே இறங்கி வணங்கி நின்றார்.
“மகனே! உன் தாயார் தமையன்கள் உனக்கும் போஜனம் கிடைக்கிறதா? முக்கியமாக உனக்கு அதிகமான போஜனம் கிடைக்கிறதா? இப்போது எங்கே வேகமாகப் போகிறாய்?” என்று கேட்டார்.
“எல்லோருக்கும் போஜனம் கிடைக்கிறது. ஆனால் எனக்கு மிகுதியான போஜனம் கிடைப்பதில்லை. எனது தாயார் வினதையை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிப்பதற்காக ஸர்ப்பங்கள் என்னிடத்தில் அமிர்தம் கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காகத்தான் நான் வேகமாக சென்றுகொண்டிருக்கிறேன். ஆனால் அமிர்தம் கொண்டுவருவதற்கான சக்தியை என்னால் பெறமுடியவில்லை. எனக்கு கூடுதல் ஆகாரம் எங்கே கிடைக்கும் என்று சொல்லி என்னை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்” என்று கைகட்டி தலைகுனிந்து பவ்யமாகக் கேட்டான்.
“கருடா! இங்கேயிருக்கும் இந்த ஏரி மிகவும் புண்ணியம் வாய்ந்தது. இதில் ஒரு யானை தன் முற்பிறப்பில் தன்னுடைய அண்ணனான ஆமையை எப்போதும் தலையைக் குனிந்துகொண்டு இழுக்கிறது. அவைகள் உணவுக்கு மிகுதியான உணவாகக் கூடும்”
“தந்தையே! யாரவர்கள்?”
“முற்பிறவியில் அவர்கள் இருவருக்கும் சொத்தினால் பிரச்சனை ஏற்ப்பட்டது. விரோதம் வளர்ந்தது. இத்தனைக்கும் அந்த சொத்துகள் அவர்களது மாதாபிதாக்கள் சம்பாதித்தது. உனக்கு அந்தக் கதையைக் கூறுகிறேன் கேள். உனக்கு க்ஷேமம் உண்டாகும்”
கருடர் சற்று அமைதியடைந்தார். இறகுகளைக் கவிழ்த்து கையிரண்டையும் கட்டிக்கொண்டார். அந்த ஏரிக்கரையில் கஸ்யபர் கதை சொல்லத் தொடங்கினார்.
“விபாவஸு என்ற அதிகக் கோபமுள்ள ரிஷியிருந்தார். அவருடைய தம்பி ஸுப்ரதீகர். தபஸ்வி. அந்த ஸுப்ரதீகர் தனக்கும் தமையனுக்கும் சொத்து பாகம் செய்யப்படாமல் இருப்பதில் இஷ்டமில்லை. அண்ணனை எப்போது பார்த்தாலும் விபாகம் செய்வதைப் பற்றியே பேசுவார். அதற்கு விபாவஸு, தம்பி விபாகம் செய்தால் அநேகம் பிழைகள் வரும். பாகம் பிரித்துக்கொண்டவுடன் அதை விருத்தி செய்யவும் பாதுகாக்கவும் முற்படுவோம். அப்போது ஒருவரையொருவர் ஆதரிக்கமாட்டோம். அதை துரோகிகள் பயன்படுத்திக்கொண்டு நம் இருவரையும் பிரித்துவிடுவார்கள். பெரியோர் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களும் சந்தேகமில்லாதவர்களும் எப்போதும் விபாகத்தை விரும்புவதில்லை” என்று நயமாக எடுத்துரைத்தார்.
கருடன் கதையில் மூழ்கியிருந்தார்.
ஸுப்ரதீகருக்கு இந்த ஜாலப் பேச்சில் கோபம் வந்தது. விபாவஸுக்கு இணங்கவில்லை. அப்போது விபாவஸு “ஸுப்ரதீகனே! சொத்தில் மதிமயங்கிதால் நீ யானையாகக் கடவாய்” என்று சாபமிட்டார். உடனே அவனும் விபாவஸுக்கு “நீ ஆமையாகப் போய் இந்த ஜலத்துக்குள்ளேயே சஞ்சரிப்பாய்...” என்று பிரதிசாபம் இட்டான். இவ்வாறாக இருவரும் யானையாகவும் ஆமையாகவும் மாறினார்கள்.
“அவர்கள் எவ்வளவு பெரிதாக இருப்பார்கள். எனக்கு இஷ்டமாக உணவாவார்களா?”
“யானை ஆறு யோஜனை உயரமும் பன்னிரெண்டு யோஜனை அகலமும் உள்ளது. ஆமை மூன்று யோஜனை உயரமும் பத்து யோஜனை சுற்றளவும் உள்ளது. எவ்வளவு பெரியது பார்! உன்னுடைய பசிக்கும் அமிர்தம் கொண்டுவருவதற்கு பலமும் இவையிரண்டு தரும். புசித்துவிடு. உன் அகோரப்பசி அடங்கும்” என்றார்.
”என்னை ஆசீர்வதியுங்கள் பிதாவே!” என்று யானையையும் ஆமையையும் புசிக்கப் பறக்கத் தயாரானார்.
“நீ தேவர்களுடன் யுத்தம் செய்யும்போது ரிக்யஜுர்ஸாமதர்வண வேதங்களும் ஞானசாஸ்திரங்களும் பாபத்தைப் போக்குகின்ற ஹோமத்திரவியங்களும் உன்னுடைய பலத்தை விருத்திசெய்யட்டும்” என்று கஸ்யப முனிவர் ஆசீர்வாதம் செய்துவிட்டுப் புறப்பட்டார்.
ஆகாசத்தில் அந்த ஏரிக்கு மேலே ஒரு வட்டமிட்டார் கருடன். பின்னர் அங்கு தெரிந்த அந்த பிரம்மாண்டமான யானையை ஒரு நகத்திலும் ஆமையை இன்னொரு நகத்திலும் இடுக்கிக்கொண்டு பறக்கத்தொடங்கினார். மேலே மேலே மேலே சென்று தேவலோகத்தை அடைந்தார். அங்கு கற்பக விருக்ஷத்தைப் பார்த்தார். அம்மரத்தில் பொன்னாலும் வெள்ளியினாலும் பழங்கள் காய்த்துத் தொங்கின. கிளைகள் வைரவைடூர்யங்களினால் ஜொலித்தது.
சுற்றிலும் இது போன்ற ஜொலிக்கும் கற்பகமர வனத்திடையே ஆயிரம் யோஜனை உயரமுள்ள தேவலோக ஆலமரக்கிளைக்கு வந்தார். அப்போது அந்த ஆலமரம் அவரிடம் பேசியது.
“நூறு யோஜனை தூரமுள்ள இந்தக் கிளையில் உட்கார்ந்து கொண்டு நீ இந்த யானையையும் ஆமையையும் சாப்பிடு”
கருடருக்கு ஆச்சரியம். மரம் பேசுகிறதே!
யானையோடும் ஆமையோடும் வெகுவேகமாக வானத்திலிருந்து கீழே இறங்கினார். அம்மரத்தின் கிளையில் வந்தமர்ந்த போது அது சடசடவென்று முறியத் தொடங்கியது. உடனே முறிந்த கிளையைக் கால்களால் அனாயசமாகப் பிடித்தார். அப்போது அந்த மரத்தில் எதோ தொங்குவது போலத் தெரிந்தது. எக்கிப் பார்த்தார்.
ரிஷிகள் போல இருக்கிறதே! யாராகியிருக்கும்? என்ற சிந்தனை தொடங்கியது. உற்றுப் பார்த்தார்.... அது ஒருவரல்ல... ஒரு குழுவினர்... அவர்களுக்குப் பெயர்... வாலகில்ய ரிஷிகள். கருடன் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ந்துபோனான்.
இதிகாசம் தொடரும்....
#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#ஆஸ்தீகபர்வம்
#பகுதி_17
No comments:
Post a Comment