Sunday, March 11, 2018

திகுதிகுவென எரிந்த அரக்கு மாளிகை




யுதிஷ்டிரர் அந்த மாளிகை எளிதில் தீப்பிடிக்க தோதான பொருட்களினால் கட்டப்பட்டிருக்கிறது என்றவுடன் பீமஸேனன் கோபத்தில் தகித்தான்.
“பீமா! இந்த வீட்டின் நாற்புறமும் பார்த்தாயா?” கொஞ்சம் நிறுத்தினார் யுதிஷ்டிரர். பீமஸேனன் ஒரு சுற்று திரும்பி பார்த்தான். அர்ஜுனனும் நகுலசகதேவர்களும் குந்தியுடன் அந்த மாளிகைக்குள் ஆஸனத்தில் அமர்ந்து சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
“செழித்து வளர்ந்திருக்கும் இந்த புற்கள் இலகுவாக தீப்பற்றிக்கொள்ளும். பருத்திச் செடிகளும் மூங்கில், விழல் இவைகள் எரியும் தீயை இன்னும் பன்மடங்காக்கும். வேலிக்கருகில் பாய்களை விரித்திருக்கிறான். எல்லாம் எரியும் போது ஒரு புல் இடைவெளி கூட இல்லாமல் அக்னியின் நாக்குகள் நீளும். பாபி புரோசனன் நமக்கு முடிவு கட்ட இதுபோல செய்திருக்கிறான். எல்லாம் துரியோதனனின் ஏற்பாடு.”
யுதிஷ்டிரர் சொல்லச் சொல்ல பீமஸேனனுக்கு முறுக்கேறியது.
“நமது சிறிய தகப்பனார் விதுரருக்கு இவர்கள் செய்த சதியாலோசனை தெரிந்திருக்கிறது. துரியோதனின் ஒற்றர்கள் எங்கும் இருக்கக்கூடும் என்பதினால் நமக்குக் குறிப்பால் உணர்த்தினார். இனிமேல் நாம் ஒவ்வொரு கணமும் விழிப்புடன் இருக்கவேண்டும்”
பீமன் ஏகத்துக்கும் சினம் கொண்டான்.
“நாம் ஹஸ்தினாபுரத்திலிருந்து கிளம்பியிருக்கவே கூடாது. நன்மையோ தீமையோ அங்கேயே இருந்திருக்க வேண்டும். நாம் அரண்மனையை விட்டுக் கிளம்பிவிட்டால் துரியோதனன் ராஜாவாக வேரூன்றிவிடுவான். அங்கேயே இருந்துகொண்டு அவனிடமிருந்து ராஜ்யத்தைப் பிடிங்கியாவது நம்முடைய பிதாவின் சம்பத்தை நீடுகாலம் அனுபவித்திருக்கலாம். திருதராஷ்டிரரின் சொல்லை நீர் ஏன் ஏற்கவேண்டும்?”
யுதிஷ்டிரருடன் பீமன் சத்தமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது மற்றவர்களும் வாசலுக்கு வந்து சேர்ந்துகொண்டனர். அனைத்து விவரங்களையும் அறிந்துகொண்டார்கள்.
“மெதுவாகப் பேசு பீமா! அவனது ஒற்றர்கள் நம்மைக் கண்காணித்துக்கொண்டிருப்பார்கள்.”
“அண்ணா! திருதராஷ்டிர புத்திரர்கள் நாம் ஜாக்கிரதையாக இருந்தாலே எதையும் செய்வார்கள். எனக்கு விஷம் வைத்தார்கள். நாகங்களை விட்டுக் கடிக்க வைத்தார்கள். கங்கையில் வரிசையாக சூலங்களை நட்டு என்னை அதில் தூக்கிப் போட்டார்கள். ஈஸ்வரானுக்ரஹத்தில் நான் பிழைத்துக்கொண்டேன். அந்த ஈஸ்வரன் நம்மை ரக்ஷிப்பார். சாம தான பேதத்தினால் பாதி ராஜ்ஜியத்தையாவது அடைய முயற்சிப்போம். கடைசியில் யுத்தம் செய்து பெறுவோம். ”
பீமனை எல்லோரும் சிரத்தையாக கவனித்தார்கள். அவன் சொல்வதில் நியாயம் இருந்தது.
“துரியோதனனை விட்டுப் பிரிந்து வந்தது நாம் பயந்துவிட்டோம் என்று நினைக்கும்படி ஆகிவிட்டது”
“பீமா! அந்த புரோசனனுக்கு அவர்களுடைய திட்டம் நமக்குத் தெரிந்துவிட்டது போலக் காட்டிக்கொள்ளாதே. சத்தம் போடாதே. தெரிந்தால் பலாத்காரமாக நம்மை தகித்துவிடப்போகிறான்”
யுதிஷ்டிரருக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. பீமன் நடுங்கும் அண்ணனைப் பார்த்து “அண்ணா! நானிருக்க உங்களுக்கு ஏன் பயம்? அவர்கள் எத்தனை பேர் வந்தாலும் நான் பொசுக்கிவிடுகிறேன்” சொல்லும் போதே அவனுக்குத் தோள்கள் தினவெடுத்தது.
”பீமா! நாம் ராஜ்ஜியத்தில்லை. துரியோதனன் ராஜ்ஜியத்திலிருக்கிறான். நமக்கு சகாயமில்லை. அவன் சகாயத்தோடு இருக்கிறான். நம்மிடம் பொக்கிஷமில்லை. அவனிடம் பொக்கிஷமிருக்கிறது. நம்மை அவர்கள் எரித்துவிட்டால் பீஷ்மர் மட்டும் என்ன செய்வார்? ஆகையால் இந்த புரோசனன் பாபிக்கும் துரியோதனன் பாபிக்கும் நம்முடைய கருத்து தெரியாமல் இங்கேயே வசிப்போம். பகல் நேரங்களில் வேட்டையே பிரதானமாகத் திரிவோம். அப்போது எதாவது ஆபத்து வந்தால் தப்பித்துக்கொள்வதற்கான வழிகளை தெரிந்து வைத்துக்கொள்வோம். இப்போதே பூமிக்குள் ரகஸ்யமாக ஒரு சுரங்கப்பாதை அமைப்போம். அதில் இறங்கி நாம் ஓடிவிட்டால் அக்னி நம்மைத் தகிக்காது”


ஜ்யேஷ்டர் யுதிஷ்டிரர் பொறுமையாக பீமனுக்கு எடுத்துரைத்தார்.
**
ஒரு நாள் பகல் பொழுதில் பக்கத்துக் காட்டில் பாண்டவர்கள் வேட்டையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவன் யுதிஷ்டிரர் அருகில் வந்து வந்தனம் செய்து நின்றான். “நீ யார்?” என்று கேட்டார் யுதிஷ்டிரர்.
அவன் ஒரு கனகன் (சுரங்கம் செய்பவன்)
“நான் திறமையுள்ள சுரங்கவேலைக்காரன். பாண்டவர்களுக்கு உதவி செய் என்று விதுரர் என்னை இங்கு அனுப்பினார்.”
யுதிஷ்டிரர் அவனை எப்படி நம்புவது என்று முகத்தில் சந்தேக ரேகைகள் படரப் பார்த்தார்.
“நீங்கள் தப்பிக்கும் உபாயங்களை விதுரர் மிலேச்ச பாஷையில் சொன்னார். நீங்களும் அது புரிந்தது என்று தலையாட்டினீர்கள். சரியா?” என்று விதுரர் சொன்னவைகளைச் சொன்னான். யுதிஷ்டிரரின் சந்தேகம் தீர்ந்தது.
அவனை ஸ்நேகபாவத்துடன் பார்த்தார்.
“ஒரு கிருஷ்ணபக்ஷம் சதுர்த்தசி ராத்திரி இந்த கிரஹத்தின் வாசலில் தீ வைக்கப்போகிறான். நாம் அதற்குள்ளாக எவ்வளவு சீக்கிரத்தில் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சுரங்கத்தைத் தோண்டவேண்டும்.”
அந்தக் கனகன் விதுரர் மூலம் எல்லா விஷயங்களையும் அறிந்திருந்தான். யாருக்கும் தெரியாமல் அந்த கிரஹத்தினுள் நுழைந்து அங்கே நடுவில் இருக்கும் ஒரு அறையில் சுரங்கம் தோண்டத் துவங்கினான்.
புரோசனன் முப்பொழுதும் அந்த வீட்டின் வாசலிலேயே எப்போதும் தவமியற்று போல காத்திருந்தான். இரவுமுழுவதும் ஆயுதபாணிகளாக பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் பொழுதுபோக்கும் பாண்டவர்கள் பகலில் காட்டில் வேட்டையாடித் திரிந்தார்கள்.
கிருஹத்தை விட்டு வெளியில் கிளம்பும்போது வாசலில் அமர்ந்திருக்கும் புரோசனனைப் பார்த்து ஸ்நேகிதம் கொண்டவர்கள் போல சிரிப்பார்கள். அவனது க்ஷேமலாபத்தைக் கேட்டறிவார்கள். அவனை நம்புவது போல நடித்தார்கள். விதுரர் அனுப்பிய கனகன் சுறுசுறுப்பாக தனது வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
பௌர்ணமிக்கு பௌர்ணமியும் அமாவாசைக்கு அமாவாசையும் மாறி மாறி சுழன்றது. கிருஷ்ண பக்ஷங்களும் சுக்ல பக்ஷங்களும் கடந்த பிறகு அரக்கு மாளிகைக்கு தீ வைக்கும் நேரம் நெருங்கிவிட்டது. கனகனும் சுரங்கப்பாதையை முடித்திருந்தான். புரோசனன் இப்போது பாண்டவர்கள் அவனை முழுவதும் நம்பியிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டான். இதற்கிடையில் ஒரு வேடச்சி ஒருத்தியை அந்த வீட்டு வேலை செய்வதற்கும் வேவு பார்ப்பதற்கும் அமர்த்தியிருந்தான். அவளுக்கு ஐந்து உதவாக்கரை புத்திரர்கள் இருந்தார்கள்.
ஒரு வருஷ காலம் இப்படி ஓடியிருந்தது. புரோசனன் வரும் க்ருஷ்ணபக்ஷம் சதுர்த்தசி எரிப்பதற்கு முகூர்த்தம் குறித்துவிட்டு அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டான். யுதிஷ்டிரர் இதைக் கண்டுபிடித்துவிட்டார்.
“பாபியான இந்த புரோசனன் அவனை நாம் நம்பி நிம்மதியாக இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு இந்த மாளிகைக்கு தீ வைக்க சித்தமாயிருக்கிறான். அவனுக்கு முன்பாக நாம் தீ மூட்டி ஆறு பேரை இங்கே சடலமாகக் கிடத்திவிட்டால் அவர்கள் பஸ்பமாகிவிட்டால் யாருக்கும் அடையாளம் தெரியாது. நாம்தான் இறந்துவிட்டோம் என்று நம்பி விடுவார்கள்” என்று யோசனை கூறினார் யுதிஷ்டிரர்.
அன்றைய இரவு அந்த வேடச்சி தனது பிள்ளைகளுடனும் தேன் கிழங்குகளையும் கனிகளையும் எடுத்துக்கொண்டு “தாயே! நாங்க இன்னிக்கி ராத்திரி இங்கேயே தங்கிக்கிறோம்” என்று குந்தியிடம் அனுமதி கேட்டாள். அன்றிரவு குந்தி எல்லோருக்கும் இரவு போஜனம் செய்வித்தாள். அங்கு பிராமணர்களும் மற்றவர்களும் குழுமினார்கள். உணவு உண்டு முடித்து அனைவரும் தத்தம் வீடுகளுக்குத் திரும்பினார்கள். யுதிஷ்டிரர் பீமனுக்கு கண்ணைக் காண்பித்தார். அவனும் புரிந்துகொண்டான்.
இரவு மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது. வேடச்சி அவளது மகன்களும் மதுபானம் செய்தார்கள். அதிகமாக மது குடித்ததால் பிரேதம் போல அங்கேயே கிடந்தார்கள். பாதி ராத்திரிக்கு இன்னும் கொஞ்ச நேரம் இருந்தது. அர்ஜுனன் தனது வில்லம்புகளை எடுத்துக்கொண்டான். நகுலசகதேவர்கள் கண்களில் மிரட்சியுடன் அண்ணாக்களின் கட்டளையை எதிர்நோக்கி குந்தியின் அருகிலேயே அமர்ந்திருந்தார்கள்.
பீமன் சுறுசுறுப்பாகச் செயல்பட்டான். அவர்களது உடைமகளைத் தூக்கிக்கொண்டு ஓடுவதற்கு தயார் நிலையில் கட்டிவைத்தான். நடுராத்திரி. வாயுபுத்திரனான பீமனுக்கு உதவி புரியும் வகையில் காற்று வேகமாக வீச ஆரம்பித்தது. வேடச்சியும் அவளது ஆறு புத்திரர்களும் புரோசனனும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
“காற்றடிக்கும் வேளையில் நெருப்பு வைத்தால் சீக்கிரம் பற்றிக்கொள்ளும். பீமா.. இது சரியான தருணம். கொளுத்து” என்று அவனது தோளைத் தட்டினார் யுதிஷ்டிரர்.
பழைய துணிகளை ஒரு உருட்டுக்கட்டையில் சுற்றிப் பந்தாகக் கட்டினான். எண்ணெயை அதில் சதும்ப ஊற்றி பற்ற வைத்தான். அது குப்பென்று பற்றிக்கொண்டு ஒரு முழ நீளத்திற்கு அக்னியின் நாக்குகளை நீட்டி எரிந்தது. புரோசனன் வாசலில் படுத்திருந்தான். அங்கே ஒரு முறை நெருப்பை பற்ற வைத்தான். அப்புறம் பம்பரமாகச் சுற்றி வீட்டைச் சுற்றி நெருப்பு வைத்தான். கடைசியில் வாசலில் ஏற்றினான். பற்றிக்கொண்டு விண்ணைத் தொடுமளவிற்கு அக்னியின் ஜ்வாலைகள் உயர்ந்தன. பேய்க்காற்று வீசியதால் நெருப்புப் பொறிகள் அந்தப் பிரதேசம் எங்கும் மினுக் மினுக்கென்று பறந்தது. சுற்றுவட்டாரம் முழுவதும் தரையில் இருந்த ஊர்வன அனைத்தும் அக்னியின் உஷ்ணத்தால் வெகுதூரம் ஓடின.
வீட்டிற்குள் ஓடி வந்து அந்த சுரங்கத்தின் உள்ளே புகுந்தார்கள். குந்தியும் பாண்டவர்களும் சடுதியில் சுரங்கத்தினுள் சென்று நடக்கத்துவங்கினார்கள். கனகன் பின்னால் இறங்கி அந்த சுரங்கத்தின் வாயிலை வேகவேகமாக மூடினான். பின்னர் சிறிதுநேரத்தில் அவன் சுரங்கத்தினுள் ஓடிப்போய் தூரத்தில் தீவட்டியுடன் நடந்து சென்றுகொண்டிருந்த பாண்டவர்களைப் பிடித்துவிட்டான்.
பீமன் குந்தியை தோளில் ஏற்றிக்கொண்டான். நகுலசகதேவர்களை இடுப்பில் வைத்துக்கொண்டு அர்ஜுனனையும் யுதிஷ்டிரரையும் கையால் தாங்கிக்கொண்டு அந்த சுரங்கத்தினுள் ஒரு புயல் போலச் சென்றான். மரங்களின் வேர்கள் மார்க்கத்தில் எதிர்ப்படும் போது மார்பால் முட்டி முறித்தான். கால்களால் தரையை நிரவிக்கொண்டே முன்னேறினான்.
திகுதிகுவென்று பற்றி எரியும் அரக்கு மாளிகையைப் பார்ப்பதற்கு அர்த்த ராத்திரியிலும் கூட்டம் கூடிவிட்டது. ஊர் ஜனங்கள் அந்த மாளிகையின் நாற்புறமும் நின்றுகொண்டு பாண்டவர்களும் சேர்ந்து எரிக்கப்பட்டார்கள் என்று மிகவும் விசனப்பட்டார்கள். சிலர் வாய்பொத்தி அழுதார்கள். “திருதராஷ்டிரனும் அவரது பிள்ளைகளும் பாண்டு புத்திரர்கள் மேல் துவேஷத்தோடு இருந்தார்கள். ஆனால் அவர்கள் கொலை செய்யுமளவிற்கு போவார்கள் என்று யாருக்குத் தெரியும்?” என்று அங்கலாய்த்தார்கள்.
**


நடுக்காட்டில் ஓரிடத்தில் சுரங்கம் முடிந்து மேலே தரை தொட்டுவிட்டோம் என்பதை அண்ணாந்து பார்க்கும் போது தெரிந்த நட்சத்திரங்களினால் தெரிந்துகொண்டார்கள். குந்தியும் பாண்டவர்களும் வெளியே வந்தார்கள். யாரோ ஒருவன் அவர்களை நெருங்குவது நிழலாகத் தெரிந்தது. மரங்களடர்ந்த வனம் அது. எச்சரிக்கையான நின்றவர்களிடம் வந்தவன் விதுரர் சொன்ன மிலேச்சபாஷையைப் பேசினான். குறிப்பு சொன்னான். விதுரரின் ஆள் என்று யுதிஷ்டிரர் தெரிந்துகொண்டார்.
“புருஷ ஸ்ரேஷ்டர்களே! உங்களை கங்கையின் அக்கரைக்கு கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்பது விதுரரின் உத்தரவு. வாருங்கள் போகலாம்”
அவன் முன்னே நடக்க ஐவரும் குந்தியுடன் பின்னே தொடர்ந்தார்கள். கும்மிருட்டு. ஜலத்தின் சலசலப்பு காதுகளை எட்டிய சிறிது நேரத்தில் கங்கையின் கரையில் அனைவரும் நின்றார்கள். இப்போது இதமான காற்று வீசியது. இரைச்சலுடன் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது கங்கை.
கங்கை நதியினுள் ஒரு கப்பல் நின்றுகொண்டிருந்தது. அதில் வேகமாக செல்வதற்கு யந்திரம் பூட்டியிருந்தார்கள். அதன் நடுவில் இருந்த கம்பத்தில் கொடி பறந்துகொண்டிருந்தது. அப்போது இங்கே கரையில் மங்கலான விளக்கின் ஒளி தூரத்தில் தெரிந்தது. பின்னர் அந்த ஒளி கொஞ்சம் கொஞ்சமாக பாண்டவர்களை நோக்கி ஆடியாடி நகர்ந்து வந்துகொண்டிருந்தது. உஷாரானார்கள். அருகில் வந்ததும் கட்டு மீசையும் மேல் வஸ்திரம் இல்லாமலும் ஆஜானுபாகுவான ஒருவன் கண்களுக்குப் புலப்பட்டான். உடனே தலைதாழ்த்தி வணங்கினான்.
“ப்ரபோ! நான் செம்படவர்களின் அரசன். கப்பலை இயக்கும் தகுயுள்ள மாலுமியும் கூட. விதுரர் உங்களை எதிர்கரையில் சேர்க்கச் சொன்னார். அந்தப் படகில் ஏறுங்கள் அதில் சென்று கப்பலில் ஏறி செல்வோம்.”
“நாங்கள் இன்று வருவோம் என்று உங்களுக்குத் தெரியுமா?:”
“கிருஷ்ண பக்ஷத்து சதுர்த்தசி என்று சொன்னார். அவர் சொன்ன தினத்திலிருந்து ஒவ்வொரு கிருஷ்ணப் பக்ஷத்து சதுர்த்தசி அன்றும் இந்தக் கங்கைக்கரையில் ஆட்களோடு உங்களைத் தேடுகிறோம். இன்று இந்த வனத்தருகில் இருக்கும் கங்கைக்கரையில் உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. வாருங்கள் கப்பலுக்குச் செல்லலாம்”
ஒரு சிம்மம் போல அவன் முன்னே நடந்து செல்ல அனைவரும் பின் தொடர்ந்தார்கள்.
கப்பலில் ஒவ்வொருவராக ஏறிய பின்னர் அந்த செம்படவனும் ஏறிக்கொண்டான். கரையின் வெகுதூரத்திலிருந்து பார்க்கும் போது கரும் இருட்டில் ஒரு பொட்டு போல செம்படவன் கையில் பிடித்திருந்த விளக்கு தெரிந்தது.
“நீங்கள் ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள்? நீங்கள் அனைவரும் கட்டித்தழுவி உச்சிமோந்து கொள்ளுமாறு என்னிடம் விதுரர் சொல்லியிருக்கிறார். கவலையை விட்டுத் தள்ளுங்கள்” என்றான் அந்த செம்படவன் ஊக்கத்துடன்.
எதிர்கரையை அடைந்தார்கள். செம்படவன் இருகைகளையும் தூக்கி “ஜய..ஜய” என்று ஆசீர்வாதம் செய்தான். வந்த வழியே கப்பலைத் திருப்பிக்கொண்டு சென்றுவிட்டான். நக்ஷத்திரக்கள் வழிகாட்ட அந்த காட்டிலிருந்து தென்முகமாகச் சென்று இன்னொரு அடர்ந்தகாட்டிற்குள் சென்றுவிட்டனர். வெகுதூரம் நடந்த பிறகு அனைவருக்கும் களைப்பு ஏற்பட்டது.
“இந்த அடர்ந்த காட்டில் நாம் திசையறியோம். அந்தப் புரோசனன் வெந்து போனானா என்று தெரியவில்லை. நடக்க முடியவில்லை. இந்த பயத்திலிருந்து எப்போது விடுபடுவோம் என்று தெரியவில்லை.” என்று பீமனைத் தவிர அனைத்து சகோதரர்களும் சொன்னார்கள். குந்தியும் பின்னால் சேர்ந்து கொண்டாள்.
பீமஸேனன் பலமான தோள்களுடன் நிமிர்ந்து நின்றான். அவன் துளியும் சோர்வடையவில்லை.
“நீயொருவன் தான் பராக்கிரமும் பலமும் மிக்கவன். எங்களை நீயே தூக்கிக்கொண்டு முன்போலவே வேகமாகச் செல்லேன்” என்றார் தர்மர்.
வாயுபுத்திரனான பீமன் எல்லோரையும் தூக்கிக்கொண்டு அதிவிரைவாகக் காட்டினுள் சென்றுவிட்டான்.

No comments:

Post a Comment