Friday, March 9, 2018

நெய்க்குடங்களில் பிறந்த துரியோதனாதிகள்



குந்தி பாண்டுவுக்கு முன்னால் இருகரம் கூப்பி நின்றாள்.

“பதிதான் ஸ்திரீகளுக்கு கடவுள். நீரே எனக்கு ஒரு பிராமணரையோ அல்லது ஒரு தேவதையையோ நியமனம் செய்வீர். நீர் இஷ்டப்பட்ட இந்தக் காரியத்தில் உமது கட்டளையை நமது சந்ததி விருத்திக்காக நான் நிறைவேற்றுவேன்”
பாண்டுவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தியாகத்தின் மறு உருவமாக குந்தியைப் பார்த்தான்.
“பிராமணரைச் சொன்னால் பிள்ளை பெறுவதற்கு தாமதம் ஆகும். தேவதையை நியமித்தால் க்ஷண நேரத்தில் நமது புத்திரன் உமது கைகளில் தவழ்வான்” என்றாள் குந்தி.
“ஆஹா! தர்மம் தழைப்பதற்கு நமது குலத்திற்கு ஒரு மாணிக்கம் தோன்றப்போகிறான். தர்மம் இன்றி ராஜ்ஜிய பரிபாலனம் செய்து பிரஜைகளைக் காக்க முடியாது. ஆகையால் புத்ரலாபத்திற்காகவும் தர்ம ரக்ஷணத்திற்காகவும் தர்மதேவதையை முதலில் ஆவாஹனம் செய்”
பாண்டுவை நமஸ்கரித்தாள். பின்னர் எழுந்து அவனை ஒரு முறை பிரதக்ஷிணம் வந்தாள்.
இது இங்கே காட்டில் நடந்துகொண்டிருந்த போது ஹஸ்தினாபுரத்தில் ஏற்கனவே காந்தாரி ஒரு வருஷ காலமாக கர்ப்பம் தரித்திருந்தாள்.
குந்தி தர்மதேவதையை ஆவாஹனம் செய்தாள். பூஜைக்குரிய திரவியங்களை எதிரில் போட்டு தர்மதேவதையை ப்ரார்த்தித்து துர்வாஸஸ் கொடுத்த மந்திரத்தை உச்சரித்து ஜபம் செய்தபடிக் காத்திருந்தாள்.
சிறிது நேரத்தில் விண்ணிலிருந்து தர்மதேவதை தோன்றினான். மின்னல் பொழுதில் அவளுக்கு எதிரே வந்திறங்கினான். அவனைக் கைகூப்பித் தொழுதாள்.
தர்மதேவன் சிரித்தான்.
“குந்தி! உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான்.
மிகுந்த நாணத்துடன் “ஒரு புத்திரன் வேண்டும்” என்று கேட்டாள் குந்தி.
தர்மதேவனின் வரவால் அந்த சதச்ருங்கமென்னும் மலைக் காடு பிரகாசமடைந்தது. பரிசுத்தமான ஆடையில் இருந்த குந்தி பாண்டுவின் பிரயோஜனம் கருதி அவனது சொல்லுக்குக் கட்டுப்பட்டு தர்மதேவனுடன் சயனித்தாள்.
சூர்யன் துலா ராசியிலிருக்கும் போது பஞ்சமியில் கேட்டை நக்ஷத்திரம் சந்திரனோடு சேர்ந்திருக்கும் போது அபிஜித் என்று சொல்லப்படும் எட்டாது முஹூர்த்தத்தில் நிறைந்த புகழுள்ள சிறந்த புத்திரனைப் பெற்றாள்.
உடனே விண்ணிலிருந்து அசரீரீ ஒலித்தது.
“தர்மிஷ்டர்களுள் சிறந்தவனாக இருப்பான். ஸத்தியவாக்குள்ள ராஜாவாக இந்தப் பூமியில் இருக்கப்போகிறான்.பாண்டுவின் முதல் பிள்ளையாகிய இவன் யுதிஷ்டிரன் (யுத்தங்களில் ஓடாமல் நிற்பவன், பின் வாங்காதவன்) என்ற கியாதியோடு மூன்று லோகங்களிலும் பெயர்பெற்ற ராஜாவாக இருக்கப்போகிறான். ஒழுக்கசீலனாக இருப்பான்”
**
காந்தாரி கர்ப்பம் தரித்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. வயிறு பெரிதாக இருந்தது. குந்திக்கு ஒரு புத்திரன் பால சூரியனுக்கு ஒப்பாகப் பிறந்து அவன் பெரும் புகழ் பெறப்போகிறான் என்று அசரீரீ வாக்கு சொன்னது வரை விஷயங்கள் ஹஸ்தினாபுரம் சென்றது. காந்தாரியின் காதுகளுக்கும் எட்டியது. அப்போது அவளுக்கு பெரும் துயரம் உண்டாயிற்று.
வயிற்றை ஒரு முறை தடவிப் பார்த்தாள். மிகவும் உறுதியாக இருந்தது. எப்போது பிறக்கும் என்றே தெரியாமல் இரண்டு வருடங்களாக சுமந்துகொண்டிருப்பதில் வெறுப்படைந்தாள். தனியாக இருக்கும் போது எழுந்த கடும் கோபத்தில் தனது வயிற்றை மிகவும் பலமாக இடித்துக்கொண்டாள்.
மடார்...மடார்..ரென்று கை அசந்துபோகும் வரை தொடர்ந்து இடித்துக்கொண்டேயிருந்தாள். இரும்புக் குண்டு போன்ற ஒரு மாம்ஸபிண்டம் ஒன்று கீழே விழுந்தது. அதைப் பார்க்கவே அவளுக்கு அருவெறுப்பாக இருந்தது. அந்த மாம்ஸபிண்டத்தை தூர எறிந்தாள்.
ஞானதிருஷ்டியினால் வியாஸர் இந்த விபரத்தை அறிந்துகொண்டு ஹஸ்தினாபுரம் விரைந்து வந்தார். காந்தாரியின் அந்தப்புர மண்டபத்திற்கு வெளியே அந்த மாம்ஸபிண்டம் கிடந்ததைப் பார்த்தார். விறுவிறுவென்று உள்ளே சென்று காந்தாரியை “என்ன காரியம் செய்யத் துணிந்தாய்?” என்று கோபமாகக் கேட்டார்.
வந்திருப்பது வியாஸர் என்றறிந்து கொண்டு வந்தனம் செய்தாள் காந்தாரி.
“குந்திக்கு சூரியனுக்கு ஒப்பான மகன் பிறந்துள்ளான். இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனக்கு துக்கம் மேலோங்கியது. அதனால் என் வயிற்றில் இடித்துக்கொண்டேன்”
வியாஸர் அவளைப் பார்த்து புருவங்களை நெறித்தவாறு நின்றிருந்தார்.
“நீர் வேறு எனக்கு நூறு பிள்ளைகள் பிறக்கும் என்று வரம் கொடுத்தீர்.” என்றாள் இளக்காரமாக. வியாஸர் வெறுமனே நின்றிருக்க காந்தாரி மீண்டும் “நுறு பிள்ளைகளுக்குச் சமானமாக இந்த மாம்ஸபிண்டம் பிறந்திருக்கிறது”
“நான் எப்பவும் பொய் சொன்னதில்லை. என் வாக்கும் பொய்க்காது. இதில் நூறு பிள்ளைகள் பிறக்கப்போகிறார்கள்... பார்”
அந்தப்புரத்திலிருந்து வெளியே வந்தார். அரண்மனை சேவகர்களை அழைத்து நூறு பெரிய குடங்களை ஏற்பாடு செய்தார். அந்தக் குடங்களை ஒரு பெரிய மண்டப அறைக்குள் அடுக்கினார். ஒவ்வொரு குடங்களிலும் கழுத்து வரை நெய் விடச் சொன்னார். ஆயிரம் சேவகர்கள் ஒரேசேர உழைத்தார்கள். அரண்மனை முழுவதும் இதே பேச்சாக இருந்தது.
ஆயிரம் பேர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தொடர்ந்து உழைத்ததில் ஒரு அறை முழுவதும் நூறு குடங்கள் வரிசைக்குப் பத்தாக அடுக்கப்பட்டு பத்து வரிசைகளாக நிறுத்தப்பட்டது. அவசரம் அவசரமாக அரண்மனை முழுவதும் விளக்கெரிக்கவும் சமையலுக்கும் இருக்கும் நெய்க்குடங்களை தீர்த்து பின்னர் நகரின் முக்கிய பிரதிநிதிகளின் இல்லங்களிலிருக்கும் நெய்களும் இட்டு நூறு குடங்களும் நிரப்பட்டது. தரைமுழுவதும் நெய் வழிந்து போவோர் வருவோர் வழுக்கும்படி இருந்தது.
“குளிர்ந்த நீரைக் கொண்டு வாருங்கள்” என்று மண்டப வாயிலைப் பார்த்துக் குரல் கொடுத்தார் வியாஸர்.
அந்த நீரைக் கொண்டு மாம்ஸபிண்டத்தை அலம்பினார். அப்போது அந்த மாம்ஸபிண்டம் நூறு பிரிவுகளாக ஆயிற்று. கட்டைவிரலின் கணு அளவு அந்தப் பிண்டங்கள் இருந்தது. ஒவ்வொரு பிண்டங்களாக எடுத்து அந்த நெய்குடங்களில் இட்டார். பின்னர் அந்த அறைக்கு இதமான சீதோஷ்ணம் படரும்படி ஏற்பாடுகள் செய்தார். இதுபோலவே இந்த பிண்டங்களைப் பாதுகாத்துவரும்படி அங்கிருப்பவர்களுக்கு கட்டளையிடார். காந்தாரியிடம் வந்தார்.
“காந்தாரி! இன்னும் இரண்டு வருடங்களில் இந்த பாத்திரங்கள் விரிசல் அடையும். அப்போது புத்திரர்கள் பிறந்தார்கள் என்று அறிந்துகொள்”
காந்தாரி நமஸ்கரித்தாள்.
அப்படி நமஸ்கரிக்கும் போது அவளது மனத்தில் “நூறு புத்திரர்கள் பிறக்கப்போவதில் எனக்கு சந்தோஷம்தான். இருந்தாலும் ஒரு பெண் பிறந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். மருமகன் என்பவன் எப்போதும் ஒரு ஸ்திரீக்கு மிகவும் பிரத்யேகமான உறவு. மேலும் தௌஹித்ரர்களால் கிடைக்கும் சந்தோஷங்களே அலாதி” என்று நினைத்தாள்.
உடனே வியாஸர் “பெண்ணே! நீ இப்படி நினைப்பாய் என்று தெரியும். நூறு பிண்டங்களாக பிரிக்கும் போது அது நூற்றுவொன்றாக பிரிந்தது. அந்த நூற்றியோராவது துண்டத்தையும் பெண்ணாக பிறக்கும்படி நிச்சயித்து அரண்மனைச் சேவகர்களை நூற்றியோறாவது குடம் ஒன்றை தருவித்து அந்தப் பிண்டத்தையும் அதில் வளர்க்கிறேன். அதுவே பெண்ணாக இருக்கக்கூடும்” என்றார்.
வியாஸர் வந்த வேலை முடிந்தததென்று இமயமலையைப் பார்க்கத் தவம் செய்யச் சென்றார்.
**
காட்டில் பாண்டு குந்தியிடம் “க்ஷத்ரியன் பலத்தினால் பெரியவன். ஆகையால் நீ பலம் நிரம்பிய புத்திரனை வேண்டு” என்று கேட்டுக்கொண்டான்.
குந்திக்கு பலமான புத்திரனைப் பெற எந்த தேவதையை ஆவாஹனம் செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
“புருஷசிரேஷ்டரே! எந்த தேவதையை வேண்டினால் நமக்கு பலமான புத்திரன் பிறப்பான்?” என்று கேட்டாள்.
“யாகங்களில் சிறந்தது அஸ்வமேதம். தேஜஸுகளில் சிறந்தவன் சூர்யன். மனிதர்களில் சிறந்தவன் பிராமணன். தேவர்களில் சிறந்தவன் வாயு. ஆகையால் நீ வாயுவை ஆவாஹனம் செய். அவன் பலமிகுந்த புத்ரனைத் தருவான்”
குந்து மறுபடியும் தனது ருதுகாலத்தில் வாயு பகவானை ஆவாஹனம் செய்து அங்கேயே அமர்ந்து பூஜை செய்தாள்.
வாயு பிரத்தியட்சயமானான். ”என்ன வேண்டும்?” என்று வினவினான். “எனக்குப் பலம் பொருந்திய புத்ரன் வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தாள் குந்தி. “அப்படியே ஆகட்டும்” என்று வரம் கொடுத்த வாயு குந்தியைத் தழுவிக்கொண்டே தேவலோகம் சென்றான்.
மிகுந்த சூரனும் மிகவும் பலசாலியான் பீமன் (எல்லோரும் பயப்படத்தக்கவன்). ஸிம்மத்தில் குருவும் துலாத்தில் ஸுர்யனும் மக நக்ஷத்தரத்தில் சந்திரனும் சேர்ந்த திரியோதசி திதியில் பிறந்தான். அப்போது காட்டையே உலுக்கும்படி பலத்தக் காற்று அடித்தது.
அவன் பிறந்த பத்தாவது நாளில் அவனைத் தூக்கிக்கொண்டு ஒரு தடாகத்திற்கு சென்றிருந்தாள் குந்தி. அந்த தடாகத்தில் ஸ்நானம் செய்து நீராடிவிட்டு பூஜைக்காகக் கிளம்பினாள். இடுப்பில் பத்துநாள் பாலகன் பீமன். அந்த மலையடிப்பாதையில் சீராகச் சென்றுகொண்டிருந்தவள் ஒரு திருப்பத்தை அடுத்து பயங்கரப் புலி ஒன்று சப்தம் எழுப்பிக்கொண்டு அவள் மேலே பாயப் தயாரானது.
பத்னிகளையும் குழந்தைகளையும் ஆபத் சமயத்தில் காப்பதற்காக எப்போதும் வில்லும் கையுமாக பிந்தொடர்ந்த பாண்டு உடனே சரக்..சரக்.கென்று மூன்று பாணங்களை அந்தப் புலியின் மேல் விட்டு அதைப் பிளந்தான். இதற்கிடையில் அந்தப் புலி தன் மேல் பாய்ந்து குழந்தையை கொன்றுவிட்டால் என்ன செய்வது என்று பயந்த குந்தி பக்கத்தில் விண்ணைத் தொடுமளவு நின்றிருந்த மலைப்பாதையில் ஏற ஆரம்பித்தாள்.
அப்போது அந்தக் குழந்தை அவள் கைதவறி கீழே விழுந்துவிட்டது. கையிலிருந்து குழந்தை நழுவியவுடன் பதறிவிட்டாள் குந்தி. பக்கத்தில் நின்றிருந்த பாண்டு குழந்தை விழுந்தவுடன் அந்த மலைச்சரிவுக்கு ஓடினான். பெரும் பாறை ஒன்று துகள்துகளாக பிளந்திருக்க விழுந்த அந்த குழந்தை அந்தப் பாறையிருந்த இடத்தில் கீழே படுத்துக்கொண்டு ரோஜா போலச் சிரிந்திருந்தான்.
பாண்டு தனது புத்திரனின் பலத்தைக்கண்டு ஆச்சரியமடைந்தான்.
**
பீமன் பிறந்த பகலுக்கு முந்திய ராத்திரியில் துரியோதனன் பிறந்தான். அவன் பிறந்ததும் கழுதை கத்துவது போல அழுதான். பின்னர் காது செவிடாகும்படி இரைந்தான்.அவன் கழுதை போலக் கத்தியவுடன் அரண்மனையின் கொல்லைப்புறத்திலிருந்து கழுதைகளும், நரிகளும், கழுகளும், காக்கைகளும் அவனுக்கு எதிராக அழுதகுரல் கொடுத்தன. யாராலும் அதைக் கேட்கவே சகிக்கவில்லை. பேய்க்காற்று அடித்தது. திடும்திடுமென நாற்திசைகளிலும் திரைச்சீலைகள் பற்றிக்கொண்டு எரிந்தன. திருதராஷ்டிரன் திடுக்கிட்டான்.
“விதுரரை அழைத்து வாருங்கள்...” என்று சோகமாகச் சொன்னான்.
விதுரர் உடனே அரண்மனை சபைக்கு வந்தடைந்தார்.
“விதுரரே! இவன் பிறந்ததும் நரியும் அமங்களமாகக் கத்தியது. நாற்புறங்களிலும் தீப்பிடித்துக்கொண்டது. சகுணங்கள் சரியில்லை. நீங்கள் இதற்கு எதாவது பரிகாரம் சொல்லவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான் திருதராஷ்டிரன்.
“மஹாராஜாவே! இவன் நரி போல ஊளையிட்டுக்கொண்டு பிறந்ததால் குலநாசத்துக்குக் காரணமாக இருப்பான். இவனை விட்டுவிடு. இல்லையேல் உனக்கும் உன் குலத்திற்கும் தீங்கு உண்டாகும். குலத்துக்கு மட்டுமல்ல க்ஷத்ரிய வம்சத்திற்கே தீங்கு ஏற்படும்” என்றார் விதுரர்.
மௌனியாக இதைக் கேட்டுக்கொண்டிருந்த திருதராஷ்டிரனுக்கு மேலும் சில நீதிகளை எடுத்துரைத்தார் விதுரர்.
“ஒரு குலத்துக்காக ஒருவனை விடலாம். ஒரு கிராமத்திற்காக ஒரு குலத்தை விடலாம். ஒரு தேசத்திற்காக ஒரு கிராமத்தை விடுவதில் தப்பில்லை. தனக்காக பூமியையே விடவேண்டும்.”
ஆனால் திருதராஷ்டிரனுக்கு புத்ரபாசம் அதிகமாக இருந்தது. அவன் அதுபோல செய்யவில்லை. ஒரு நாளுக்கு ஒரு புத்திரன் வீதம் நூறு நாட்களுக்கு நூறு புத்திரர்கள் பிறந்தார்கள். கடைசியில் துச்சலை பிறந்தாள். நடுவில் காந்தாரி கருவுற்றிருக்கும் போது வைசியப் பெண்ணொருத்தி திருதராஷ்டிரனுக்குப் பணிவிடைகள் புரிந்தாள். அவளுக்கு யுயுத்ஸு என்னும் புத்ரன் பிறந்தான். மொத்தத்தில் திருதராஷ்டிரனுக்கு நூற்றியிரண்டு பிள்ளைகள்.
[வியாஸபாரதத்தில் இந்த நூறு புத்திரர்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது]
அர்ஜுனன் ஜனனம் அடுத்த பகுதியில்....

No comments:

Post a Comment