Friday, March 9, 2018

வைத்த குறி தப்பாதவன்



அஸ்திர சஸ்திர பயிற்சிகளைக் கற்றுக்கொண்டிருந்த சிஷ்யர்களை காட்டினுள் அழைத்துச்சென்றார் துரோணாசாரியார்.

ஒரு பெரும் விருக்ஷத்திற்கு அருகே வந்தார்கள். துரோணர் கை நீட்டிய கிளையொன்றின் நுனியில் ஒரு காகம் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தது.
“வீரர்களே! அது கள்ளிக்காக்கை.பறக்காது. சிற்பிகள் செய்த பதுமை. நீங்கள் அனைவரும் உங்கள் வில்லம்புகளை எடுத்து விரைந்து வாருங்கள். நான் ஒவ்வொருவராகக் கூப்பிடுவேன். அந்தக் காக்கையின் சிரஸைத் தள்ள வேண்டும். அதுதான் பரீக்ஷை”
அனைவரும் தங்களது வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டு தயாராய் வந்து நின்றார்கள். அவர்கள் கண்களில் ஒரு குறுகுறுப்பு. மேனியில் சுறுசுறுப்பு. யார் அந்தக் காக்கையின் தலையைத் தள்ளுவார்கள் என்று எதிர்பார்ப்பு.
“யுதிஷ்டிரா! இங்கே வா”
வில்லும் அம்புமாக அவர் முன்னே வந்து நின்று தலையைக் குனிந்து வணக்கம் சொன்னார் யுதிஷ்டிரர்.
“ராஜகுமாரா! அந்த மரத்தின் நுனியில் இருக்கும் கள்ளிக்காக்கை உன் கண்களுக்குத் தென்படுகிறதா?”
”ஆமாம்”
“அந்த மரம் தெரிகிறதா?”
“தெரிகிறது ஸ்வாமி”
“உன் சகோதரர்களெல்லாம் தெரிகிறார்களா?”
“நன்றாகத் தெரிகிறார்கள்”
“இந்த மரத்தையும் என்னையும் உன் சகோதரர்களையும் பார்க்கிறாயா?”
“தாராளமாக. இந்த மரத்தையும் உங்களையும் என் சகோதரர்களையும் கள்ளிக்காக்கையையும் சேர்த்தே பார்க்கிறேன்”
துரோணர் முகத்தில் அதிருப்தி. சுற்றி நின்றிருந்த எல்லா சகோதரர்களும் சந்தேகமாகவே யுதிஷ்டிரர் சொன்னதில் என்ன தவறு என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“உன்னால் அந்த லக்ஷியத்தை அடிக்க முடியாது. வில்லையும் அம்பையும் கீழே வைத்துவிட்ட்ப் போய்விடு” என்றார் துரோணர் சிடுசிடுவென்று.
அடுத்தது யாரைக் கூப்பிடுவாரோ என்று எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். அஸ்வத்தாமா, துரியோதனன், பீமன் என்று எல்லோரையும் வரிசையாகக் கூப்பிட்டு யுதிஷ்டிரரிடம் கேட்ட அதே கேள்வியைக் கேட்டார். எல்லோரும் அவர் சொன்ன அதே பதிலைச் சொன்னார்கள்.
இன்னும் ஒருவனை பரீக்ஷை செய்யவில்லை. மிகவும் சிரத்தையாக வில்லோடும் அம்போடும் தயாராக நின்றிருந்தான் அவன். துரோணர் சிரித்துக்கொண்டே
“அர்ஜுனா! இங்கே வா” என்றார்.
தலைவணங்கி வந்தனம் செய்தான்.
“அங்கே அந்தக் கள்ளிக்காக்கை அந்த மரம் நான் உன் சகோதரர்கள் அனைவரும் தெரிகிறோமா?” என்று கேட்டார்.
“கள்ளிக்காக்கை மட்டுமே தெரிகிறது ஸ்வாமி”
“”ஓ அந்தக் காக்கையை மட்டும் பார்க்கிறாயா?”
“இல்லை”
துரியோதனனுக்கும் அருகில் நின்றோர்க்கும் மிகவும் சந்தோஷம். நம்மைப் போலவே திட்டி அவனையும் அனுப்பிவிடுவார் என்று மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“இல்லையா?” என்றார் துரோணர்.
“காக்கை கூட இப்போது கண்ணுக்குத் தெரியவில்லை. அதன் கழுத்து மட்டும்தான் தெரிகிறது” என்றான் அர்ஜுனன்.
அசந்துபோனார் துரோணர்.
“அடி” என்று பட்டென்று சொனார்.
சந்திரபாணத்தை தொடுத்தான். சரக்கென்று அந்தக் கள்ளிக்காக்கையின் சிரஸை மட்டும் அடித்துக் கீழே தள்ளியது. அப்படியே அள்ளி அணைத்துக்கொண்டு புளகாங்கிதமடைந்தார் துரோணர். மனதிற்குள் அர்ஜுனன் துருபதனை வில்லால் வீழ்த்துவது போல கனாக் கண்டார்.
குருகுலவாசம் தொடர்ந்தது. நாளுக்கு நாள் பரீக்ஷைகள் அதிகம் வைத்தார் துரோணர். அர்ஜுனனின் ஆற்றல் மேன்மேலும் மேம்பட்டது.
ஒரு நாள் கங்கைக்கு ஸ்நானம் செய்யச் சென்றார் துரோணர். சுழித்து நுரைபொங்க ஓடிக்கொண்டிருந்தது கங்கை. மூக்கைப் பிடித்துக்கொண்டு கங்கைக்குள் தலையை முங்கினார் துரோணர். எழுந்திருக்கும் போது தனது கால் எதிலோ மாட்டிக்கொண்டது போல உணர்ந்தார். உதறினார். கால் வரவில்லை. ஏதோ கடிப்பது போல உணர்ந்ததும் கீழே குனிந்து பார்த்தார். பெரிய முதலை. “ஐயோ! சிஷ்யர்களே.. என்னைக் காப்பாற்றுங்கள்... சீக்கிரம்.. இந்த முதலையைக் கொல்லுங்கள்..” என்று அலற ஆரம்பித்தார்.
ஒன்றும் புரியாமல் எல்லாச் சிஷ்யர்களும் அங்குமிங்கும் ஓடினார்கள். சிலர் பயத்தினால் நெருங்கவே பயந்துகொண்டு கரையில் நின்று கையைப் பிசைந்துகொண்டு நின்றிருந்தார்கள்.
அர்ஜுனன் வில்லை வளைத்து சர்...சர்...சர்...சர்...சர்... என்று ஐந்து அம்புகள் விட்டான். ஐந்தும் முதலையை அறுத்து துண்டு துண்டாக்கியது. துரோணர் விடுவிக்கப்பட்டு கங்கையின் கரை ஏறினார். சுற்றிலும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த பாண்டவர்கள் அனைவரும் அர்ஜுனனை தோள் மேல் தூக்கிக் கொண்டாடினார்கள். துரோணர் அர்ஜுனனுக்கு ஆசீர்வாதம் செய்தார்.
துரியோதனன் பொறாமையில் வெந்தான். துச்சாஸனன் அண்ணன் பின்னால் ஆதரவாக நின்றான். அஸ்வத்தாமா ஓரமாக நின்றிருந்தான். அவர்கள் அனைவரையும் அருகில் அழைத்தார் துரோணர்.
“இங்கே கிடக்கும் மண்ணை அள்ளி ஒரு பதுமை செய்யுங்கள். அது குழந்தை போல இருக்கட்டும்” என்று ஆக்ஞாபித்தார்.
கொஞ்ச நேரத்தில் ஒரு குழந்தை பதுமை தயாராகியது. எல்லா சிஷ்யர்களையும் அழைத்து வரிசையாக கங்கையைப் பார்க்கும்படி அதன் கரையில் நிறுத்தினார்.
“சிஷ்யர்களே! இப்போது இந்த வேலையாள் நீந்திச் சென்று இந்தப் பதுமையை கங்கையில் போடுவான். உங்கள் ஒவ்வொருவரையும் கண்ணைக் கட்டி ஒருமுறை சுற்றிவிட்டு அந்த நீரில் மூழ்கிய பதுமையை அடிக்கச் சொல்லுவேன். குறிதவறாமல் அடிப்பவர்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது”
சிஷ்யர்கள் அனைவரும் கைகளைத் தட்டிக்கொண்டு தயாரானார்கள். பரிசு என்னவாகயிருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டு வில்லும் அம்பும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.
துரியோதனன் கையில் வில்லெடுத்தான். பீமனை கண்ணைக் கட்டச் சொன்னார். பின்னர் அவனையே ஒரு முறை துரியோதனனை சுற்றிவிடச் சொன்னார் துரோணர். ஒரு முறை சுற்றிவிட்டால் ஐந்து முறை சுற்றினான் துரியோதனன். எங்கே இருக்கிறோம் என்று தெரியாமல் எதிர் திசையில் அம்புவிட்டான் துரியோதனன். அனைவரும் கொல்லென்று சிரித்தார்கள்.
ஒவ்வொருவராக அதுபோல கண்ணைக்கட்டிச் சுற்றிவிட்டார்கள். ஒருவரின் பாணம் கூட கங்கை இருக்கும் திசையில் செல்லவில்லை. அந்தப் பக்கம் தவிர்த்து ஏனைய அனைத்து திக்கிலும் பாணங்கள் சிதறின. இதற்கும் கடைசியாக அர்ஜுனனை அழைத்தார்.
கண்ணைக் கட்டினார்கள். சுற்றிவிட்டார்கள். முதுகுக்குப் பின்னால் அம்புகள் தூளியில் சொருகியிருந்தான். பல முறை சுழன்றாலும் மிகச்சரியாக கங்கையை நோக்கி நின்றான். கூட்டமாக நின்றிருந்த சிஷ்யர்களுக்கு இதுவே பெரிய ஆச்சரியமாக இருந்தது.
தூளியிலிருந்து அவன் அம்பெடுக்கும் வேகமும் அதைப் பூட்டி எய்யும் திறமையும் அங்கு பார்ப்பவர்க்கெல்லாம் மயிற்கூச்செரியும்படி இருந்தது. சரக்...சரக்..சரக்.. என்று ஒவ்வொறாக பதினைந்து பாணங்கள் போட்டான். நீருக்குள் மூழ்கியிருந்த அந்த சிசுப் பொம்மை அடிபட்டு தண்ணீருக்கு மேலே மிதந்து வந்தது. சிஷ்யர்கள் அனைவரும் கரவொலி எழுப்பினார்கள்.
துரோணர் பாய்ந்து ஓடிவந்து கட்டிக்கொண்டார். அவன் கண்களின் கட்டுக்களை தானே அவிழ்த்தார்.
“நான் முன்பே சொன்னபடி உனக்கு ஒரு உயர்ந்த பரிசைத் தருகிறேன். இந்தா இந்த பாணத்தைப் பெற்றுக்கொள்” என்று ஒரு நீண்ட அஸ்திரத்தை அவனுக்கு அளித்தார்.
“அர்ஜுனா! இதன் பெயர் பிரம்மசிரஸ். இது மிகவும் சக்திவாய்ந்தது. பூமியையே எரிக்கும் ஆற்றல் பெற்றது. அற்ப மானிடப்பதர்களுக்கு இந்த அஸ்திரத்தை உபயோகிக்காதே! அசுரனோ தேவனோ உன்னிடம் சண்டைக்கு வருவானேயில் அப்போது இதை விடு. எவனாகயிருந்தாலும் பஸ்பமாகிவிடுவான்”
சூரியன் கீழே இறங்கிக்கொண்டிருந்தான். அந்திச்சூரியனின் அற்புத கிரணங்கள் கங்கையில் விழுந்து மின்னிக்கொண்டிருந்தன. அம்பையும் வில்லையும் கீழே போட்டான் அர்ஜுனன். நெடுஞ்சாண்கிடையாக அவர் காலடியில் விழுந்தான். எழுந்து நின்று மரியாதையாகப் பெற்றுக்கொண்டான்.
**
ஒரு நாள் காலை. சபையில் திருதராஷ்டிரனும் பீஷ்மர், வியாஸர், கிருபர், விதுரர் என்று அனைவரும் அமர்ந்து ராஜ்ய விவகாரங்கள் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். துரோணர் உள்ளே நுழைந்தார்.
“ராஜனே! உனது குமாரர்களுக்கு வித்தை சித்தித்திருக்கிறது. உனக்கு அவகாசமிருந்தால் அவர்கள் கற்ற கல்வியை உனக்கு நான் காட்டுகிறேன்”
துரோணர் இப்படிச் சொன்னதும் திருதராஷ்டிரன் மிக்க மகிழ்ச்சியடைந்தான்.
”பிராமணசிரேஷ்டரே! நீர் பெரிய காரியம் செய்திருக்கிறீர். உமக்கு என்ன தேவையோ அதைக் கேளுங்கள். உடனே செய்துதருகிறேன். எனக்கு கண் இல்லாவிட்டாலும் என் புத்திரர்களின் பராக்கிரத்தைக் கண்டு ஆனந்தக் கூச்சலிடுபவர்கள் மத்தியில் எனக்கும் பார்வை தெரிந்தது போலாகும். விதுரா! ஆசாரியர் என்ன கேட்கிறாரோ அதைச் செய்துகொடு.”
விதுரர் துரோணருக்கு அனுமதியளித்தார். ராஜாங்க ஊழியர்களோடு நகரத்தின் எல்லைக்கு வந்தார். அங்கே மேடு பள்ளமில்லாமல் மரங்கள் இல்லாமல் புதர்கள் இல்லாமல் வடக்கே தாழ்ந்து இருக்கும்படியாக ஒரு நிலத்தை அளக்கச் சொன்னார். முகூர்த்தம் பார்க்கச் சொன்னார். அரசாங்கப் புரோகிதர் அதைப் பார்த்துச் சொன்ன அந்த நாளில் அங்கே ஒரு பலி இடச்சொன்னார்.
சிலம்பக்கூடம் என்று சொல்லப்படும் மைதானம் தயாரானது. சில்பிகளைக் கொண்டு அந்த காட்சிசாலையை உருவாக்கினார்.
எல்லா ஆயுதங்களோடும் கூடிய காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள். ராஜ்ய ஸ்திரீகள் பயணிக்க புது பல்லக்குகள் கட்டினார்கள். ஊரெங்கும் ராஜகுமாரர்கள் சாதனைகள் செய்யப்போகும் நாள் நக்ஷத்திரம் பறையடிக்கப்பட்டது. அஸ்தினாபுரமே அந்த நாளுக்காக எதிர்பார்த்துக் காத்திருந்தது.
நாமும் நாளை வரை காத்திருப்போம்.

No comments:

Post a Comment