Friday, March 9, 2018

பீஷ்ம....பீஷ்ம...பீஷ்ம....

பருத்த தோள்களும் மதயானை போன்ற நடையும் அநேக ராஜலக்ஷணங்கள் பொருந்திய சந்தனு ராஜநீதியிலும் தர்மத்தையும் வழுவாத ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தான். [சங்கு போன்ற கழுத்தையுடவன் என்று ஒரு வரி வருகிறது. அதாவது மூன்று ரேகைகளோடு இருக்கும் கழுத்தாம்.] பார்வைக்கு சந்திரனுக்கு ஒப்பாகவும், தேஜஸில் சூரியனுக்கும், வேகத்தில் வாயுவுக்கும், கோபத்தில் யமனுக்கும் பொறுமையில் பூமிக்கும் ஒப்பானவனாக இருந்தான் சந்தனு.
கங்காதேவி தன்னுடைய ஒரு புத்திரனை ஆளாக்கிக் கொண்டு வந்து தருவதாக வாக்குதத்தம் செய்து அழைத்துச் சென்றுவிட்டதால் அதன் நினைவாகவே காலம் கழித்தான். தேவர்களுக்கான யாகமான அக்னிஹோத்ரமும் ரிஷிகள் வேதமோதும் யாகமும் பிதிர்களுக்கு ஸ்ராத்தம் போன்றவைகளும் தங்குதடையில்லாமல் நடைபெற்றது. பெரும்பாலான நேரங்களில் வனத்திலேயே திரிந்துகொண்டிருந்தான் சந்தனு. அரசர்களுக்கெல்லாம் அரசனான அவன் நகரத்தில் இருந்தாலும் இல்லையென்றாலும் அரசாட்சி செம்மையாக நடந்துகொண்டிருந்தது.




புத்திரன் என்று வருவானோ என்கிற ஆசை அவனை வாட்டியது. வனத்திற்கு வேட்டைக்குச் செல்லும்போதெல்லாம் கங்கைக் கரை வரை சென்று கைகட்டி நின்றுகொண்டு அதன் கரைபுரளும் நீரையும் அதன் வேகத்தையும் பார்த்துக்கொண்டு நிற்பான். கங்காதேவி என்று வந்து தன் புத்திரனை ஒப்படைப்பாள் என்று நாள் எதிர்பார்த்துக் காத்திருப்பான். ஒரு வருஷமல்ல.. இரண்டு வருஷமல்ல.. முப்பத்தாறு வருஷ காலங்கள் ஸ்திரீ சம்பந்தம் இல்லாமலேயே வேறு விஷயங்களில் நாட்டத்தைச் செலுத்திச் சீறும் சிறப்புமாக ஆண்டு கொண்டிருந்தான்.
ஒருநாள் மான் வேட்டையாடிக்கொண்டு வனம் புகுந்தவன் சிறிது நேரத்தில் சலிப்புற்று கங்கைக்கரைக்கு குதிரையைச் செலுத்தினான். காற்று முகத்தில் மோதி கேசத்தைக் கலைத்தது. அன்றும் வழக்கம்போல நதியைப் பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தான். நெஞ்சில் மகன் நினைவு அலைமோதியது. எப்போதும் கரைபுரளும் கங்கையின் பிரவாகம் குறைந்தது போலத் தோன்றியது. இதென்ன அதிசயம் என்று கரையோரமாகவே சிறிது தூரம் நடந்து சென்றான்.
நல்ல ஆகிருதியான இளைஞன் ஒருவன் அம்புகளால் கங்கைக்கு அணை அமைத்துக்கொண்டிருந்தான். அவன் மின்னல் வேகத்தில் அம்பெடுக்கும் வேகமும் கண்ணிமைக்கும் நேரத்தில் அதை கங்கைக்குள் செலுத்தும் ஆற்றலும் சந்தனுவைப் பிரமிக்க வைத்தது. கரையிரண்டையும் படகில் கடக்கவே பல மணி நேரம் பிடிக்கும். அதை அம்புகள் கொண்டு அணைபோடுகிறான் ஒரு இளைஞன்.
யாரிவன்?
அருகில் சென்று விசாரிக்கலாம் என்று நெருங்கினான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவனைக் காணவில்லை. ஆச்சரியமாக இருந்தது. அம்புகளுக்கு அடங்கிய கங்கை அன்னநடையில் சென்றுகொண்டிருந்தாள். சந்தனு கரையிலிருந்து கொஞ்சம் நீரின் உள்ளே சென்றான். அவன் மனதிற்குள் அது தன் புத்திரன் தான் என்று அடித்துக்கொண்டது. கண்களை மூடி கங்காதேவியை நினைத்துக்கொண்டான்.
ரூபவதியாக கங்காதேவி தனது கையில் அந்த இளைஞனைப் பிடித்துக்கொண்டு அவனெதிரே கங்கையிலிருந்து எழுந்து வந்தாள்.
“பிரபு! இவன் நம் இருவருக்கும் பிறந்த எட்டாவது புத்திரன். தேவவிரதன்.”
சந்தனுவுக்கு கொள்ளை மகிழ்ச்சி. தன்னிலும் உயரமாகவும் ஆகிருதியாகவும் இருந்த அந்த இளைஞனை ஆரத் தழுவிக்கொண்டான்.
“தேவி! இவன் எங்கே இந்த அஸ்திரவித்தைகளைக் கற்றுக்கொண்டான்? அபாரமாக இருக்கிறதே!”
கங்கைக்குப் பெருமையாக இருந்தது.
“இவன் வசிஷ்டரிடம் வேதம் பயின்றான். பரசுராமரிடம் அஸ்திர பாடங்கள் கற்றுக்கொண்டான். சுக்ராசாரியார் அறிந்தவைகள் அனைத்தும் அறிவான். ப்ருஹஸ்பதியிடம் சாஸ்திரங்கள் கற்றான். ராஜநீதியில் தேர்ந்தவன். ராஜதர்மத்தில் சிறந்து விளங்குவான். இந்திரனுக்கு ஒப்பானவன். தேவர்களும் அசுரர்களும் போற்றுபவனாக திகழப்போகிறவன். இவனை உன் அரண்மனைக்கு அழைத்துப்போ.”
சந்தனு தேவவிரதனை பாதாதிகேசம் பார்த்தான். கண்களில் சுடர் இருந்தது. தோள்கள் யானை தாங்கும் வலிமையில் விரிந்திருந்தது. சூரியனைப் போல தகதகவென்று நின்றிருந்தான். மீண்டும் ஒரு முறை கட்டித்தழுவிக்கொண்டான். பின்னால் நின்றுகொண்டிருந்த கங்கை வந்த வேலை முடிந்ததென்று தண்ணீருக்குள் இறங்கி கலந்து மறைந்து ஓடினாள்.
அரண்மனைக்கு அழைத்துவந்தான். மன்னன் வெகுநாட்களுக்குப் பிறகு சந்தோஷத்தில் திளைப்பதில் அரண்மனை ஒளி பெற்றது. கோயிலெங்கும் லட்சதீபம் ஏற்றப்பட்டது. ஹஸ்தினாபுரம் விழாக் கோலம் பூண்டு இந்திரபுரி ஆனது. சந்தனு தேவவிரதனுக்கு யுவராஜா பட்டாபிஷேகம் செய்தான்.
தேவவிரதன் தன் தந்தையைக் காட்டிலும் நீதியிலும் நேர்மையிலும் வீரதீரபராக்கிரமத்திலும் மிகுந்திருந்ததால் குடிமக்கள் கவலையற்று இருந்தார்கள். நாடு சுபிக்ஷமாக இருந்தது. இப்படியாக நாலு வருஷங்கள் நாலு கணங்கள் போலக் கடந்தது.
அரசாங்கத்தை புத்திரன் தேவவிரதன் கவனித்துக்கொள்ள யௌவனம் ததும்பும் இளவரசன் போல சுற்றித் திரிந்தான் சந்தனு. திரும்பவும் துடிப்புடன் வனத்திற்கு வேட்டையாடச் சென்றான். இம்முறை குதிரையில்லாமல் சாரதியோடு ரதமேறிச் சென்றான். பின்னர் அங்கே யமுனை ஆற்றங்கரைப் பக்கம் ரதத்தைச் செலுத்தக் கட்டளையிட்டு மெதுவாக வந்துகொண்டிருந்தான். எங்கிருந்தோ மூக்கைத் துளைக்கும் சுகந்தம். அதுவரை அப்படியொரு மணம் அவன் வாழ்க்கையில் அனுபவித்ததில்லை.
எதனோடும் ஒப்பிடமுடியாத அந்த வாசம் வீசும் இடம் நோக்கி ரதத்தை ஓட்டச் சொன்னான். அங்கு தேவதை போல ஒரு செம்படவப் பெண் ஓடத்தின் அருகில் அமர்ந்திருந்தாள். அவளது அழகில் ஒரு கணம் தடுமாறினான் சந்தனு. ரதத்திலிருந்து இறங்கினான். சாரதி ராஜா பேசுவது காதுகளுக்கு எட்டாத தூரம் ரதத்தை விட்டு நடந்து சென்றான். கண்ணுக்கும் நாசிக்கும் விருந்தளித்தவளின் குரலைக் கேட்டு காதுகளுக்கு அமுதூற்ற ஆசைப்பட்டான்.
“அழகியே! நீ யார்? எதற்காக இங்கே அமர்ந்திருக்கிறாய்?”
“நான் செம்படவப் பெண். என்னுடைய தந்தை செம்படவர்க்கு அரசன். அவரது கட்டளையின் பேரில் நான் இங்கு ஓடம் நடத்துகிறேன்.” என்றாள் பணிவாக.
இனிமையான குரல் கேட்டு அவனது காதுகளுக்கு மோட்சம் கிடைத்தது.
உடனே அவளுடைய இருப்பிடம் கேட்டு தெரிந்துகொண்டான். சாரதியை ரதத்தை அவளது வீட்டுக்கு விடச்சொனான். நேரே செம்படவ ராஜனிடம் சென்று அவளை தனக்கு மணம் முடித்துக்கொடுக்கக் கேட்டான். வயது போன ராஜா ஆசையில் வெட்கமறியாது கேட்டான். முப்பத்தாறு வருடங்கள் ஆசையற்று இருந்தவனை சுண்டி இழுத்தாள் அந்த செம்படவப் பெண்.
”அரசே! பெண்ணாகப் பிறந்தவளை ஒருவனுக்குக் கொடுக்க வேண்டும் என்பது அவள் ஜனித்தவுடனேயே நிச்சயிக்கப்படுகிறது. ஆனால்...”
“என்ன ஆனால்?” ஆசை அவனை அவசரவசரமாக ”ஆனால்” கேட்க வைத்தது.
“எனக்கு ஒரு விருப்பம் இருக்கிறது. அதை நிறைவேற்றினால்... அதற்கு தாங்கள் ஒத்துக்கொண்டால் இவளை உமக்கு மணம் முடித்துவைப்பதில் தடையேதுமில்லை...” என்றான் உறுதியாக.
“தாசராஜனே! உன்னுடைய விருப்பத்தைச் சொல். என்னால் அதை நிறைவேற்றமுடியுமென்றால் மேலும் பேசலாம். இல்லையென்றால் நான் சென்றுவிடுவேன்... ம்.. சொல்...” ராஜாவுக்கே உரிய பாணியில் கர்ஜ்ஜனையாகக் கேட்டான்.
”உமக்கு ஏற்கனவே ஒரு புத்திரன் இருக்கிறான். ஆனால் இவளது வயிற்றில் பிறக்கும் புத்திரனுக்குதான் உமக்குப் பின் ராஜ்ஜியம் ஆளும் உரிமையைத் தர வேண்டும்” என்றான் தீர்க்கமாக.
சப்தநாடியும் அடங்கிப்போனான் சந்தனு. வேறெதுவும் பேசவில்லை. ஏற்கனவே மன்மதன் மலர் அம்பு வீசி அவனது மனதைத் தைத்திருந்தான். செம்படவப்பெண்ணின் சௌந்தர்யமான முகம் மனக்கண்ணில் வந்து வந்து மறைந்தது. தாபம் தலைக்கு மேலே ஏறியது. பித்து நிலையில் குதிரை ஏறி அரண்மனை திரும்பினான் சந்தனு.
பகலும் இரவும் செம்படவப் பெண்ணின் நினைவாகவே இருந்தான் சந்தனு. சாப்பிடப் பிடிக்கவில்லை. வேட்டைக்குப் போகவில்லை. பகல்நேரத்திலேயே பஞ்சணையிலிருந்து எழுந்திருக்காமல் படுத்துக்கிடந்தான். எதிலும் எண்ணம் செல்லாமல் திண்டாடினான். தேவவிரதன் இதை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான். பிதா சோகமாக இருப்பது அவனுக்கு சஞ்சலம் ஏற்படுத்தியது.
“பிதாவுக்கு வந்தனம்! நாட்டில் மும்மாரி பொழிந்து வளமாகயிருக்கிறது. எதிரி ராஜாக்கள் நம்மிடம் சண்டை வைத்துக்கொள்ள பயப்படுகிறார்கள். எல்லா வர்ணத்தவரும் ஒருவருக்கொருவர் அன்பாயிருக்கிறார்கள். எங்கும் சுபிக்ஷமாக இருக்கும் இத் தருணத்தில் நீங்கள் ஏன் வருத்தமுற்று இருக்கிறீர்கள்? என்னால் உங்கள் சோகத்தை தீர்க்க முடியும் என்றால் என்னிடம் சொல்லுங்கள். இக்கணமே நிறைவேற்றுகிறேன்”
சந்தனு தன்னுடைய பெண்ணாசையை பெற்ற மகனிடம் எப்படி உரைப்பது என்று தயங்கினான். அது தகாது என்றும் உணர்ந்தான். பின்னர்..
“தேவவிரதா! என் கவலைக்குக் காரணம் நீதான்.” என்றான்.
தேவவிரதனுக்கு தூக்கிவாரிப் போட்டது. பிதாவின் கவலைக்குத் தான் காரணமா என்று பதைபதைத்து “நானா?” என்று அதிர்ச்சியாய்க் கேட்டான்.
“ஆமாம். நமது பரந்த குலத்திற்கு நீ தனியொருவனாய் இருக்கிறாய். தர்மசாஸ்திரங்கள் ஒரேயொரு புத்திரன் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான் என்று சொல்கின்றன. புத்திர சந்தானத்தில்தான் பிதிர் கடன் தீர்க்கப்படுகிறது. கங்காபுத்திரனே! உனக்கு எதாவது அபாயம் வந்தால் நமது குலம் நாசமடைந்துவிடும். உனக்கு போர் செய்வதில் அபார பிரியம் இருக்கிறது. அப்போது உனக்கு எதாவது கெடுதி நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்கிற வருத்தம் என்னை வாட்டுகிறது” என்று பூடகமாகச் சொன்னான் சந்தனு.
தேவவிரதன் இந்த பதில்களால் சமாதானமடையவில்லை. என்றிலிருந்து தந்தை இதுபோல இருக்கிறார் என்று யோசித்தான். பின்னர் அந்த குறிப்பிட்ட தேதியைக் கண்டறிந்து அன்று அவருடன் எந்த சாரதி தேரோட்டிச் சென்றான் என்று கேட்டான். அந்த சாரதியைக் கூப்பிட்டு பேசினான்.
“என் தந்தையுடன் நீதான் கடைசியாக தேரோட்டிச் சென்றாய்? அவர் ஏன் இப்படி இருக்கிறார்? ஏதாவது நடந்ததா சொல்?” என்றான்.
அன்று யமுனா நதிதீரத்தில் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னான் அந்த சாரதி.
“ராஜாவுக்கு அந்தப் பெண்ணிடத்தில் விருப்பம் இருக்கிறது. அந்த விருப்பம் நிறைவேறாது என்பதினால் தாபமடைந்திருக்கிறார்” என்று கைகட்டி நின்று சொன்னான்.
“நீ போகலாம்” என்று அவனை அனுப்பிவிட்டு பிதாவின் சோகத்தைக் களைவதற்கு தயாரானான் தேவவிரதன்.
வெண்ணிறப் புரவியில் ஏறி நேரே அந்த யமுனைக்கரையோரம் அமைந்திருந்த செம்படவர்களின் இருப்பிடத்துக்கு சென்றான். யுவராஜா வரும் செய்தி கேட்டு அவன் வாசலில் வந்து நின்று மரியாதைகள் செய்து வந்தனம் சொல்லி வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.
“தாசராஜனே! உனது கன்னிகையை எனது பிதாவுக்கு மணமுடித்துக் கொடு” என்று நேரடியாகக் கேட்டார். குரலில் அரச தொணி நிறைந்திருந்தது. பிதாவுக்கு புத்திரன் பெண் கேட்டதை அவன் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியோடு பார்த்தான்.
“இவளுக்குப் பிறக்கும் புத்திரன் தான் உமது பிதாவுக்குப் பிறகு ராஜ்ஜியம் ஆள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படியென்றால் ராஜாவுக்கு என் பெண்ணை மணம் முடித்துத் தருவதில் ஆட்சேபணையில்லை.” என்றான் செம்படவராஜன் திட்டவட்டமாக. சத்தியவதியை அருகில் வந்து நிற்கச் சொன்னான்.
தேவவிரதன் மௌனமாக இருந்தார். நதிக்கரையிலிருந்து புறப்பட்ட காற்று வீசு செம்படவக் குடிசைகள் சடசடத்தன. அந்த மௌனத்தைக் கலைத்து மீண்டும் தாசராஜன் பேச ஆரம்பித்தான்.
”இந்த சத்தியவதி என் போன்ற செம்படவனின் மகளல்ல. உம்மைப் போன்ற க்ஷத்திரியர்களின் குணங்கள் நிரம்பியவள். இவளது தந்தை உபரிசரவஸ் ஏற்கனவே உமது தந்தையைப் பற்றிச் சொல்லி “தர்மவானான அந்த அரசன் இவளை விவாஹம் செய்துகொள்ள தகுதியுள்ளவன்” என்று சொல்லியிருக்கிறார். கந்தர்வர்கள், தேவர்கள் ,அஸுரர்கள் என்று எவராகயிருந்தாலும் யுத்தத்தில் ஜெயிக்கும் திறன் படைத்த நீர் இருக்க இவளுக்குப் பிறக்கப்போகும் வாரிசுகளுக்கு ராஜ்யபலன் இல்லாமல் போகும்.. அதனால்...” என்று மஞ்சளடர்ந்த பற்கள் தெரிய சிரித்தான் அந்த தாசராஜன்.
பக்கத்தில் தலைகுனிந்து நின்றிருந்தாள் சத்யவதி.
தேவவிரதன் உடனே “இப்போது சொல்கிறேன். இது சத்தியம். இவளுக்குப் பிறக்கப்போகும் புத்திரனே ராஜ்ஜியம் ஆள்வான்.” என்று உறுதி கூறிவிட்டு சத்தியவதியைக் கூட்டிக்கொண்டு அரண்மனை போகத் தயாரானார்.
செம்படவனின் இன்னும் தயங்கினான்.
“இன்னும் என்ன வேண்டும் உனக்கு? என் மீது நம்பிக்கையில்லையா?” குரலை உயர்த்தி கடுகடுப்பாகக் கேட்டார் தேவவிரதன்.
“இல்லை பிரபோ! உம்மீது நம்பிக்கை உள்ளது. நீர் சத்தியம் தவறாதவர். தர்மவான். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர். ஆனால் பிற்காலத்தில் உமக்குப் பிறக்கும் சந்ததியினர் இந்த ராஜ்ஜியத்திற்காக சண்டையிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?” என்ற பெருங் கேள்வியையும் சந்தேகத்தையும் எழுப்பினான்.
செம்படவத் தரப்பிலிருந்த பெரியவர்கள் அவன் கேள்வியில் சற்றே கோபமுற்றார்கள். ராஜ சம்பந்தம் கிடைத்தும் பிடிவாதம் செய்கிறானே என்று வருந்தினார்கள்.
அப்போது யாருமே எதிர்பாராத வகையில் தேவவிரதர் அங்கே ஒரு பிரதிக்ஞை செய்தார்.
“இங்குள்ள எல்லோரும் கவனமாகக் கேட்டுக்கொள்ளுங்கள். இப்போது நான் ஒரு சத்தியம் செய்கிறேன். இங்குள்ள ரிஷிகளும் தேவர்களும் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் பூதங்கள் அனைத்தும் கேட்டுக்க்கொள்ளட்டும். நான் இந்த தேகம் உள்ள வரைக்கும் பிரம்மச்சாரியாகவே இருப்பேன். விவாஹம் செய்துகொள்ள மாட்டேன். இந்திரியம் அடக்குவேன். வீரியத்தை வெளியில் விடேன். புத்ரோற்பத்தி செய்ய மாட்டேன். பெண் கலவியை விடுகிறேன். இது சத்தியம். நீ உன் கன்னிகையை என் தந்தைக்குக் கொடு” என்றார்.
அவரது அந்த சத்தியத்தைக் கேட்ட செம்படவராஜனும் அவனது கூட்டமும் மயிர் சிலிர்த்தார்கள்.
”கொடுத்தேன்.. கொடுத்தேன்” என்றான் சத்தியவதியின் தந்தை படபடப்பு அடங்காமல்.
இந்த பயங்கர விரதத்தினால் பஞ்சபூதங்களும் நடுங்கின. விண்ணில் கண்ணைப் பறிக்கும் ஒரு ஒளி பிரகாசமாகத் தோன்றியது. அதிலிருந்து “பீஷ்ம.. பீஷ்ம...பீஷ்ம...” என்று அசரீரி ஒலித்தது. உடனே தேவர்களும் அப்ஸரஸுகளும் ரிஷிக்கூட்டங்களும் ஆகாயத்திலிருந்து மலர்மாரி பொழிந்தார்கள்.
தலையில் மலர்கள் விழுந்த கோலத்தோடு அங்கே தனது பிதாவின் அருகில் ஒதுங்கி நின்ற சத்தியவதியை நோக்கி “தாயே! தேரில் ஏறுங்கள். நம்முடைய இல்லம் செல்வோம்” என்று அழைத்தார்.
ஹஸ்தினாபுரம் நோக்கி புழுதி பறக்க ரதம் விரைந்தது. ரதம் கண்ணிலிருந்து மறையும்வரை செம்படவர்கள் அது செல்லும் திக்கையே பார்த்துக்கொண்டு அங்கேயே நின்றார்கள்.
**
அடிக்குறிப்புகள்:
1.தாசன் - செம்படவன் என்று குறிக்கப்படுகிறது. தாசராஜன் - செம்படவ ராஜன்
2. பீஷ்மர் - யாரும் பயப்படத்தக்கவர்; பயங்கர விரதத்தை மேற்கொண்டவன்.

No comments:

Post a Comment