Sunday, March 11, 2018

விஸ்வாமித்திரரைக் காப்பாற்றிய ஸுப்ரமண்யர்


அந்த வனாந்திரத்தில் கற்பாறையில் அமர்ந்திருந்த ஒரு கொடிய ராக்ஷசன் வசிஷ்டரை நோக்கி ஆக்ரோஷமாக ஓடிவந்துகொண்டிருந்தான். அதிருஸ்யந்தி பயந்து நடுநடுங்கி அவர் பின் ஒடுங்கினாள்.
“தவ ஸ்ரேஷ்டரே! அந்த ராக்ஷசன் நம்மை கொன்று தின்ன ஓடி வருகிறான். காப்பாற்றுங்கள்...”
“இல்லையம்மா. அவன் அரக்கனல்ல. அவன் இப்பூமியில் புகழ்பெற்ற இக்ஷ்வாகு குலத்து அரசன். கல்மாஷபாதன். எனது புத்ரன் சக்தியின் சாபத்தால் ராக்ஷச குணம் பெற்றான். ”
வசிஷ்டர் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்களை நெருங்கிவிட்டான் கல்மாஷபாதன். இருகைகளையும் அவர்களை நோக்கி நீட்டிக்கொண்டே வந்தவனை நோக்கி தனது தண்டத்தைத் தூக்கிக் காட்டி “ஹும்” என்று சீறினார். அவன் கைக்கெட்டும் தூரத்தில் அப்படியே நின்றான். கையிலிருந்த கமண்டலத்திலிருந்து ஜலத்தை வலது கையில் ஊற்றி மந்திரம் ஜெபித்து அவன் முகத்தில் சொத்தென்று அடித்தார்.
அவரது யோக மகிமையால் அவன் சாப நிவர்த்தி பெற்றான். பன்னிரெண்டு வருஷங்களுக்குப் பிறகு ராக்ஷசத்தன்மை நீங்கி வசிஷ்டரை நமஸ்கரித்தான்.
“ரிஷிபுங்கவரே! உங்களுக்கு நான் செய்யவேண்டும். கட்டளையிடுங்கள்” என்று கைகூப்பி எழுந்து நின்றான்.
“கல்மாஷபாதா! காலத்தின் கட்டாயமாக என் புத்திரனை நீ கொன்றாய். இனி உன் ராஜ்ஜியத்தை சிறப்பாக ஆட்சி செய். ஆனால், பிராமணனை மட்டும் ஒருபோதும் அவமதிக்காதே”
“தங்கள் கட்டளைப்படியே பிராமணர்களை பூஜிப்பேன். என்னோடு தாங்களும் அயோத்தி மாநகருக்கு எழுந்தருளி ஆசீர்வதிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான்.
ராஜா சாபம் நீங்கித் திரும்புகிறான் என்ற விஷயம் கேள்விப்பட்டவுடன் நகரம் விழாக்கோலம் பூண்டது. எங்கும் மங்கல வாத்தியங்கள் முழங்கின. வீதிகளில் நீர் தெளிக்கப்பட்டு கோலமிட்டார்கள். எங்கும் வேதகோஷங்கள் கேட்டன. கல்மாஷபாதன் தன் முன்னே வசிஷ்டர் நடக்க ராஜ தோரணையுடன் நகருக்குள் பிரவேசித்தான்.
மதயந்தி என்னும் அவனுடைய மனைவி மிகவும் அழகானவள். குணவதி. ஒருநாள் காம இச்சையில் அவளுடன் சேரப்போன கல்மாஷபாதனை அவள் தடுத்தாள். ராக்ஷசனாக அவன் காட்டில் திரிந்துகொண்டிருந்த போது அவனுக்குக் கிடைத்த சாபம் ஒன்றை அவளுக்கு அவன் சொல்லியிருந்தான். அந்த சாபத்தை அவள் கூறியபின்னர் வசிஷ்டரின் பாதம் பணிந்து தனது குல விருத்திக்காக வேண்டிக்கொண்டான். வசிஷ்டரும் தேவர்கள் போல ஸ்பரிச மாத்திரத்தினாலேயே அந்த அரசிக்கு கர்ப்பம் உண்டு பண்ணினார்.
பின்னர் கல்மாஷபாதனும் மதயந்தியும் அவருக்கு மரியாதைகள் செய்து ஆஸ்ரமத்திற்கு அனுப்பிவைத்தனர்.
*
”சித்ரரதனே! வசிஷ்டர் கல்மாஷபாதன் அரசியுடன் சேர்ந்ததற்கு ஏதோ சாபம் என்றாயே, அது என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வமாயிருக்கிறேன்”
குந்தியும் ஏனைய சகோதரர்களும் அர்ஜுனன் எப்போது இந்த கந்தர்வனுடன் பேச்சைப் முடித்துக்கொண்டு புறப்படுவான் என்று பெரும் ஆலமரத்தடியில் காத்திருந்தார்கள். எல்லாக் கதைகளையும் “ம்..” போட்டுக் கேட்டுக்கொள்வது போல கங்கை சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது.
*
ராக்ஷச சாபம் பீடிக்கப்பட்டு கல்மாஷபாதன் காட்டினுள் திரிந்துகொண்டிருந்தான். அகோரப்பசி. காய்கனிகள் கூட கிடைக்கவில்லை. அப்போது ஒரு பிராமணன் தனது மனைவியுடன் சேர்ந்துகொண்டிருந்தான். மகிழ்ச்சிக்கடலில் நீந்திக்கொண்டிருந்த அவர்களை ராக்ஷச சொரூபத்தில் இருந்த கல்மாஷபாதன் பார்த்துவிட்டான். அவர்கள் இருவரும் உடனே காட்டினுள் மரச்சருகுகள் காலில் சரசரவென்று மிதிபட வேகமாக ஓட ஆரம்பித்தார்கள். அவன் இலகுவாக அவர்களைப் பிடித்துவிட்டான்.
அந்த பிராம்மணி அவனிடம் கைகூப்பித் தொழுதாள்.
“வேந்தனே! நீ சூர்யகுலத்தில் பிறந்தவன். தர்மம் தவறாதவன். இந்தக் கொடிய சாபத்தினால் இப்படி ஆகிவிட்டாய். ருதுகாலம் வந்த பிறகு சந்ததிக்காக என் கணவனுடன் நான் சேர்ந்திருக்கிறேன். இதை நீ தடுக்கக்கூடாது”
இதைப் பற்றி அவன் துளியும் கவலை கொள்ளவில்லை. ஒரு புலி மானை அடித்துச் சாப்பிடுவது போல அவள் கண் முன்னேயே அந்த பிராமணனை அடித்துத் தின்றான்.
கோபாக்கினியில் தகித்தாள் அந்த பிராம்மணி. அவளது கண்ணீர் தரையில் விழுந்து காய்ந்த சருகுகள் தீப்பற்றி எரிந்தன. கல்மாஷபாதன் திகைத்தான்.
“என் அன்புக் கணவரை என் கண் முன்னே தயை சிறிதும் இல்லாமல் தின்றாய். அயோக்கியனே! அதமனே! நீயும் உன் பார்யாளுடன் கூடிய உடன் மரணம் எய்துவாய்”
கல்மாஷபாதன் செய்வதறியாது நின்றான். கண்ணீர் சொரிய அந்த பிராம்மணி மூச்சிரைக்க பேசினாள்.
“எந்த வசிஷ்ட மகரிஷியின் புத்திரர்களை நீ அழித்தாயோ... அதே வசிஷ்ட மகரிஷியினால் உன் வம்சத்தை விருத்தி செய்யப்போகிறாய்”
அவள் அங்கிரஸ் வம்சத்துப் பெண். வார்த்தையில் சத்தியம் இருந்ததால் சாபம் நிச்சயம் பலிக்கும் என்று உணர்ந்தான் கல்மாஷபாதன்.
ஏற்கனவே அவள் சிந்திய கண்ணீர் தரையில் கிடந்த காய்ந்த சருகுகளை தீ மூட்டிவிட்டிருந்தது. இப்போது சில மரங்களைப் பற்றிக்கொண்டு கொழுந்து விட்டு எரிந்தது அக்னி.
கல்மாஷபாதன் வருத்தமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே பக்கத்தில் எரிந்த தீயில் இறங்கிவிட்டாள் அந்த பிராம்மணி.
*
கல்மாஷபாதன் பிராம்மணியிடம் சாபம் பெற்றக் கதையைச் சொல்லிவிட்டு மீண்டும் விட்ட இடத்தில் தொடர்ந்தான் அங்காரபர்ணன் என்னும் கந்தர்வன். அர்ஜுனன் சிந்தையைச் சிதறவிடாமல் இந்தக் கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
கல்மாஷபாதனின் பாரியாள் மதயந்தி கர்ப்பம் தரித்து பன்னிரண்டு வருஷகாலம் வரை பிரசவிக்கவில்லை. ஆகையால் மனம் தளர்ந்து பெரிய கல்லை எடுத்து வயிற்றினில் இடித்துக்கொண்டாள். அஸ்மகன் பிறந்தான்.
*
வசிஷ்டரின் ஆஸ்ரமத்திலிருந்த அவரது மருமகள் அதிருஸ்யந்தி ஒரு குமாரனைப் பெற்றாள். தான் இறந்துபோகும் தறுவாயில் வயிற்றிலிருந்தே வேதகோஷமிட்டு அவரைப் பாதுகாத்ததினால் அதிருஸ்யந்தியின் புத்திரனுக்கு பராசரர் என்று பெயரிட்டார். அந்தப் பராசரர் வசிஷ்டரைப் பார்த்து “தந்தையே!” என்று அழைத்தார்.
அதிருஸ்யந்தி அழுதாள். துக்கம் பீறிட்டுக்கொண்டு வந்தது.
“மகனே! இவர் உன் தந்தையின் தந்தை. உனது தாத்தா. உனது தந்தை நடுக்காட்டில் ஒரு ராக்ஷசனால் கொல்லப்பட்டார். அந்த ராக்ஷசனே உன் தந்தையை தின்றுவிட்டான்.
பராசரருக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது. எல்லா லோகங்களையும் அழித்துவிடுகிறேன் என்று கிளம்பினார். அப்போது வசிஷ்டர் அவரைத் தடுத்தார். அவரது சினத்தைப் போக்க ஒரு கதை சொன்னார்.
*
”பராசரா! கிருதவீர்யன் என்று ஒரு கியாதி பெற்ற அரசன் இருந்தான். அவன் பிருகு வம்சத்தவர்களாகிய பார்க்கவர்கள் யாகம் செய்விக்க சிறப்பாக ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தான். அவன் ஸோமபானமானவுடன் நிறைய தனங்களை அவர்களிடம் தானம் செய்தான். அவன் ஸ்வர்க்கம் சென்றபின் அவன் குலத்தோருக்கு திரவிய வறட்சி ஏற்பட்டது. அந்த அரசர்கள் பார்க்கவர்களிடம் திரவியங்கள் இருப்பதைக் கண்டு அவர்களிடம் யாசிக்கச் சென்றார்கள்.
க்ஷத்ரியர்கள் திரவியத்தைத் தேடிக்கொண்டு வருகிறார்கள் என்று தெரிந்தவுடன் பார்க்கவர்களில் சிலர் பூமியில் போட்டுப் புதைத்துப் பாதுகாத்தனர். இன்னும் சிலர் பிராமணர்களுக்கு தானம் கொடுத்துவிட்டார்கள். சிலர் க்ஷத்ரியர்களுக்கே கொடுத்துவிட்டார்கள்.
ஒரு சமயம் க்ஷத்ரியன் ஒருவன் தற்செயலாக பார்க்கவர் வீட்டில் நோண்டிப் பார்த்தபொழுது நிறைய திரவியங்கள் கிடைத்தது. அப்போது நிறைய க்ஷத்ரியர்கள் அந்த பெருஞ்செல்வத்தைக் கண்டார்கள். கோபம் மேலிட பார்க்கவர்களை வெட்டிச் சாய்க்க ஆரம்பித்தார்கள் க்ஷத்ரியர்கள். பார்க்கவர்களின் மனைவிகள் பெரும் கவலையையும் பயத்தையும் அடைந்தார்கள்.
தனது பர்த்தாவின் கர்ப்பத்தைத் தாங்கிய ஒருத்திக்கு பயத்தினால் அது வெளிப்பட அதை தனது தொடையில் தாங்கிக்கொண்டாள். இதைக் கண்ட ஒருத்தி கலக்கமடைந்து க்ஷத்ரியர்களிடம் சென்று ரகஸியமாகத் தெரிவித்தாள். அவர்கள் ஒரு கூட்டமாக சேர்ந்துகொண்டு அந்த கர்ப்பத்தை அழித்துவிடுவதற்காகப் புறப்பட்டார்கள்.
அங்கே அந்த பார்க்கவ குல பிராம்மணப் பெண் தனது தேஜஸினால் ஜொலித்துக்கொண்டிருந்தாள். அந்தக் கர்ப்பத்தை அழிப்பதற்காக வந்தவர்களுக்கு எதிரிலேயே அவளது தொடையிலிருந்து கண்ணைப் பறிக்கும் மத்தியான காலத்து சூரியன் போல அந்த கர்ப்பம் வெளிப்பட்டது. அதில் உண்டான ஒளியினால் அவர்கள் அனைவருக்கும் கண் பார்வை பறிபோனது.
க்ஷத்ரியர்கள் கண் பார்வை பறிபோனதில் தடுமாறினார்கள். அந்தப் பிராம்மணியிடம் வேண்டிக்கொண்டார்கள்.
“நாங்கள் இனிமேல் எங்களைத் திருத்திக் கொள்கிறோம். க்ஷத்ரியஜாதியின் க்ஷேமத்திற்காக உன்னிடம் வேண்டுகிறோம். மீண்டும் பார்வையளித்து எங்களைக் காத்தருள்”
“நான் கோபம் கொண்டு உங்கள் கண்பார்வையை பறித்துவிடவில்லை. பிருகு வம்சத்தவனான , தொடையில் ஜனித்த, இந்த ஊருஜன் மிகுந்த கோபத்தில் இருக்கிறான். தனது வம்சத்தவர்களைக் கொன்றவர்களின் பார்வையைப் பிடிங்கிவிட்டான். நீங்கள் பிருகுவம்சத்தவர்களை கொன்ற போது நூறுவருஷ காலம் என் தொடையில் அடக்கி வைத்திருந்தேன். அவனுடைய திவ்ய தேஜஸினால்தான் உங்கள் பார்வை பறிபோனது. ஔர்வனாகிய என் உத்தம புத்திரனையே நீங்கள் உங்கள் பார்வையை மீண்டும் பெற வேண்டிக்கொள்ளுங்கள்” என்றாள்.
அந்த அரசர்கள் அனைவரும் கண் பார்வையின்றி ஊருஜர் இருக்கும் திக்கை நோக்கி நமஸ்கரித்தார்கள்.
“ஔவரே! எங்களுக்கு தயை செய்யும். ரக்ஷியுங்கள்” என்று வேண்டிக்கொண்டார்கள். அவரும் அவர்களுக்குத் தயை செய்தார். அரசர்கள் அனைவரும் கண்ணொளி பெற்றார்கள்.
ஆனாலும் ஔர்வரின் ஆத்திரம் அடங்கவில்லை. அனைத்து லோகங்களையும் அழித்துவிட கடும் தவம் செய்தார். தேவாசுர உலகங்கள் கொதிப்படைந்தது. பிதிர்லோகத்திலிருந்த அவரது முன்னோர்கள் அவர் முன் தோன்றினார்கள்.
“ஔர்வனே! உன் கோபத்தை அடக்கு. க்ஷத்ரியர்கள் எங்களை வெட்டி வீழ்த்தும் போது சக்தியில்லாமல் நாங்கள் தடுக்காமல் இருக்கவில்லை. ஆத்மஹத்தி செய்து கொள்ள ஒரு உபாயமாக பார்க்கவன் வீட்டில் திரவியத்தைப் புதைத்து அதை அவர்கள் கண்ணில் படுமாறு செய்தோம். ஆத்மஹத்தி செய்துகொள்பவன் நல்ல பல லோகங்களை அடைகிறான். நாங்கள் அனைவரும் நீண்ட காலம் ஆயுளோடு இருந்தோம். யமனால் எங்கள் உயிரைப் பறிக்க முடியாமல் தவித்தபோது நாங்களாக தேடிக்கொண்ட உபாயம் இது. ஆகையால் க்ஷத்ரியர்களை அழிக்காதே. தவ வலிமையைப் போக்கும் இந்த கோபத்தைக் விடு” என்றார்கள்.
“பிதிர்க்களே! நான் கோபத்தினால் மூன்று லோகங்களையும் அழிப்பதாக பிரதிக்ஞை செய்து உள்ளே அந்த அக்னியை மூட்டிவிட்டேன். பிருகுவம்சத்தவர்கள் அழிந்த போது கதறியதை கர்ப்பப்பையில் அடங்கித் தொடையில் வைத்திருந்த என் தாயிடம் இருந்தபோது கேட்டேன். அந்த ஆவேசம் இன்னும் இருக்கிறது. பாபம் செய்பவனைக் கண்டிப்பவனும் தடுப்பவனும் இருந்தல்தான் பாபம் செய்பவன் எந்த உலகத்திலும் இருக்க மாட்டான். கோபாக்னி என்னுள் கொழுந்துவிட்டு எரிகிறது. அதை வெளியில் விடாமல் இருந்தால் அது என்னை அழித்துவிடும். இப்போது என்ன செய்வேன்?” என்றார்.
பிதிர்கள் நிதானமாக ஔர்வருக்கு அறவுரை பகர்ந்தார்கள்.
“குழந்தாய்! உன் கோபத்தினால் உண்டான அக்னியை ஜலத்தில் விடு. லோகங்கள் ஜலத்தை ஆதாரமாய்க் கொண்டவை. எல்லா ரஸங்களும் ஜலமயம். உலகமே ஜலமயம். கோபத்தினால் உண்டான இந்த அக்னி ஜலத்தை எரித்துக்கொண்டு சமுத்திரத்தில் நிற்கட்டும். உலகம் ஜலமயமானது என்பதால் உலகங்களை அழிப்பேன் என்ற உன் சத்தியமும் காப்பாற்றப்படும்”
பராசரர் வசிஷ்டரைப் பார்த்துக்கொண்டு நின்றார். வசிஷ்டர் மேலும் தொடர்ந்தார்.
”பராசரா! அந்த ஔர்வர் தனது கோபத்தை சமுத்திரத்தில் விட்டார். அதுதான் வடவாமுகாக்கினி என்னும் பெயர் கொண்ட பெருங் குதிரைத்தலையாகி வாயிலிருந்து அக்னியை கக்கி ஜலத்தைக் குடிக்கிறது. ஆகையால் நீயும் லோகங்கள் முக்கியம் என்று அறிந்துகொண்டு அவற்றை அழிக்காமல் இருப்பாய்”
வசிஷ்டர் சொன்னதும் பராசரர் உலகங்களை அழிக்கும் கோபத்தை விட்டொழித்தார். ஆனாலும் தனது பிதா சக்தியின் மரணத்துக்குக் காரணமான ராக்ஷசர்களை மன்னிக்க அவருக்கு மனம் வரவில்லை. அந்த ராக்ஷசர்களை அழிக்கும் பொருட்டு ராக்ஷஸ ஸத்ரம் என்னும் யாகம் செய்தார். அதில் தனது பிதாவான சக்தியை நினைத்துக்கொண்டு முதிர்ந்த இளைய பால்ய ராக்ஷசர்களை அந்த யாகத்தில் எரிக்க ஆரம்பித்தார். இம்முறை வசிஷ்டர் பராசரைத் தடுக்கவில்லை.
முப்புறமும் எரிகின்ற அக்னிகளின் முன்னே நான்காவது அக்னியாக ஜொலித்தார் பராசரர். சிறந்த புத்திமானாகிய அத்ரி முனிவர் அந்த ராக்ஷச ஸத்ரத்தை நிறுத்துவதற்காக வந்தார். அவருடன் புலஸ்தியர் புலகர் க்ரது என்ற முனிசிரேஷ்டர்களும் சேர்ந்து வந்தார்கள். புலஸ்தியர் பராசரரிடம் அந்த ஸ்த்ரத்தை நிறுத்துவதற்காகப் பேசினார்.
“புத்திரனே! அறியாதவர்களும் நிரபராதிகளுமான ராக்ஷசர்களை அழிப்பதினால் நீ சந்தோஷப்படுகிறாயா? தபஸ்விகளான பிராம்மணர்களுக்கு இது தர்மம் அல்லவே. தம்மிடத்தில் உண்டான கோபத்தினால் சக்தி கொல்லப்பட்டார். விஸ்வாமித்திரர் ஏவிய ராக்ஷசனான கல்மாஷபாதனால் பக்ஷிக்கப்பட்ட வசிஷ்ட புத்திரர்கள் தங்களைக் காத்துக்கொள்ள முடியாமல் மரணமடையவில்லை. இந்தத் தேகம் போய் வேறு தேகம் வரட்டும் என்றுதான் பிதிர்லோகம் சென்றார்கள். கல்மாஷபாதனும் ஸ்வர்க்கம் ஏறி விட்டான். அனைவரும் அங்கே சந்தோஷமாக இருக்கிறார்கள். நீ இந்த யாகத்தை விட்டுவிடு” என்று அறிவுரை கூறினார்.
அங்கு குழுமியிருந்த மற்ற முனிவர்களும் இதை ஆமோதித்தார்கள்.
பராசரர் அந்த ஸத்திரத்தை முடித்தார். எல்லா ராக்ஷசர்களையும் சம்ஹரிக்க வளர்க்கப்பட்ட அந்த யாகத் தீயை இமயமலையின் வடபுறத்தில் உள்ள பெருங்காட்டில் கொட்டிவிட்ட்டார். அந்த அக்னி இன்னமும் அவ்விடத்தில் எப்போதும் ராக்ஷசர்களையும் மரங்களையும் கற்களையும் சாப்பிட்டுக்கொண்டு பர்வகாலந்தோறும் காணப்படுகிறது.
சக்திபுத்திரரான பராசரர் விஸ்வாமித்திரர் மீது கோபம் கொண்டு அவரை வதம் செய்வதற்காக ஒரு யாகம் வளர்த்தார். விஸ்வாமித்திரரைக் காப்பாற்றும் பொருட்டு அந்த அக்னியை ஸுப்ரமண்யர் விழுங்கினார்.
[முருகப்பெருமான் விஸ்வாமித்திரரைக் காப்பாற்றிய இந்த இடம் மஹாபாரதத்தில் வருகிறது. வாய்பிளந்து ரசித்துக்கொண்டிருக்கிறேன். நாளை தொடரும்..]

No comments:

Post a Comment