Friday, March 9, 2018

பாண்டுவின் துறவுக்கோலம்


குந்தியும் மாத்ரியும் பாண்டுவின் சோகத்தில் பங்கெடுத்துக்கொண்டார்கள். காட்டினுள் சந்திரன் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தான். மரக்கிளைகளின் அடர்ந்த இலைகளின் ஊடே வெளிச்சம் பாய்ந்து காட்டின் தரைகளில் ஒளிப்பொட்டுக்களை இரைத்துக் கோலம் போட்டிருந்தது.

“தர்மம் தவறாத சந்தனு மஹாராஜருக்குப் பிறந்த என் தந்தை விசித்ரவீரியனும் சிற்றின்பமான காமஸுகத்தில் கவனம் வைத்து உயிரை இழந்தார். பின்னர் மஹிமைகள் பல பொருந்திய வியாஸமஹரிஷியே என்னை உண்டுபண்ணினார். வேட்டையில் அதிகமாகத் திளைத்ததினால் தேவர்கள் என்னைக் கைவிட்டார்கள் ஆகையால் வியாஸர் போன்று தபஸில் ஈடுபடப்போகிறேன். இப்படி இழிவான ஒரு காரியத்தைச் செய்து சாபத்தை சம்பாதித்துக்கொண்டேனே! நான் மோக்ஷத்தை விரும்புகிறேன். பற்றுதான் பெரும் துன்பம்.”
புலம்பும் பாண்டுவைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள் குந்தியும் மாத்ரியும். அந்த இரவு நீண்டுகொண்டே இருந்தது. பாண்டு விடாமல் பேசினான்.
“என் மனதை தவத்தின்பால் திருப்பப்போகிறேன். ஒவ்வொருநாளும் ஒரு மரத்தின் கனியை மட்டும் பிக்ஷையாகப் பெற்று சாப்பிடுவேன். தலையை முண்டனம் செய்துகொள்ளப்போகிறேன். ஆஸ்ரமங்களில் வாழும் ரிஷி போலத் திரிவேன். எங்கேயாவது பாழடைந்த வீடுகள் தென்பட்டாலோ அல்லது பெருமரத்தடிகளிலோ வாசம் செய்வேன். விருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டேன். பின்னர் துன்பமேது இன்பமேது? புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சமமாக நினைப்பேன். ஆசீர்வாதம் நமஸ்காரம் இரண்டுமே இனிமேல் கிடையாது. யாரையும் பரிஹாஸம் செய்யேன். எவரையும் கோபிக்க மாட்டேன். எல்லா பிராணிகளுக்கும் மலர்ந்த முகத்துடன் நன்மை மட்டுமே செய்வேன். ஹிம்சிக்கமாட்டேன்.”
அந்த யாருமில்லாத காட்டில் பாண்டு அவர்களுக்கு மட்டும் கேட்கும்படி சத்தம் குறைவாக சந்திரன் சாட்சியாகப் பேசிக்கொண்டிருந்தான். இருவரும் ஆச்சரியமாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“ஐந்து வீடுகளில் பிக்ஷைக்கு செல்வேன். கிடைக்கவில்லையெனில் உபவாசம் இருப்பேன். அரிவாளை எடுத்து கையை வெட்டுபவனுக்கும் கைக்கு சந்தனம் நீட்டுபவனுக்கும் முறையே தீமையும் நன்மையும் கருதாமலிருப்பேன். பயமற்ற மோக்ஷமார்க்கத்தை அடைந்து தேகத்தை விடப்போகிறேன்”
இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தவன் எழுந்திருந்தான். கைகட்டி நின்றவனின் பார்வையில் உறுதி தெரிந்தது.
“குந்தி! மாத்ரி! பீஷ்மர், விதுரன், திருதராஷ்டிரன், ராஜ புரோகிதர்கள், அங்குள்ள பிராமணர்கள் மற்றும் நம்மை அண்டி வாழும் நகரப் பெரியோர்கள் அனைவரையும் நமஸ்கரித்து......”
குந்தியும் மாத்ரியும் பாண்டுவின் மீதிருந்து கண்களை எடுக்கவில்லை. என்ன சொல்லப்போகிறான் என்று கூர்ந்து பார்த்தார்கள்.
“பாண்டு துறவியானான் என்று அவர்களிடம் சொல்லுங்கள்”
இதைச் சொல்லிவிட்டு அவர்கள் பக்கம் முதுகைத் திருப்பிக்கொண்டு நின்றான்.
“பரத ஸ்ரேஷ்டரே! நீங்கள் தவமியற்றும் காலத்தில் உங்களுக்கு ஒத்தாசையாக இருந்து நாங்களும் தவமியற்றுவோம். ஸ்வர்க்கத்திலும் நீரே பர்த்தாவகப்போகிறீர். பெருந்தவம் செய்ய நாங்களும் தயார். ஆனால் எங்களை விட்டு நீர் பிரிந்தால் நாங்கள் உயிரோடு இருக்க மாட்டோம்” என்று இருவரும் தீர்மானமாகச் சொன்னார்கள்.
“அரசிகளே! நான் மரவுரியையும் தோலையும் உடுத்திக்கொள்வேன். காய் கிழங்குகளைப் புசிக்கப்போகிறேன். காலை மாலை இருவேளையும் ஸ்நானம் செய்து அக்னிஹோத்திரம் செய்வேன். ஆகாரம் குறைத்துவிடுவேன். இந்த சரீரத்தை வற்றச் செய்து தனிமையில் தவமியற்றுவேன். இதுபோல குடும்பத்துடன் வசிக்கும் வானப்ரஸ்தர்களைப் பார்ப்பதற்கு கூட மனம் கூசுகிறது.”
அவன் பேசுவதை அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கும் போதே தலையிலிருந்து கிரீடத்தை இறக்கினான். அங்கங்களில் அணிந்திருந்த விலை மதிப்பற்ற ரத்னங்கள் , முத்துகள் மற்றும் வைரத்தினால அணிகலன்களை கழற்றி ஒரு கற்பாறையின் மேல் வைத்தான். முழுவதையும் துறந்த சன்னியாசி போல நின்றிருந்தவன் கைதட்டி தூரத்தில் நிற்கும் ஒரு வேலைக்காரனை அழைத்தான்.
“கௌரவ புத்ரனான பாண்டு பொன் பொருள் விருப்பம் நல்ல புத்திர சந்தானத்தை அருளும் ஸ்திரீ சம்போகம் என்று அனைத்தையும் விட்டு பாரியைகளுடன் கூடி துறவியானான் என்று ஹஸ்தினாபுரம் சென்று சொல்”
வேலைகாரர்கள் அழுதார்கள். அவர்களைத் திரும்பிக்கூட பார்க்காமல் அப்படியே தனது பாரியைகளுடன் வடக்கு நோக்கி நடக்கத்தொடங்கினான்.
அங்கிருந்து நாகசதம் என்னும் மலையை அடைந்தார்கள். பின்னர் சைத்ரரதம் என்னும் குபேரனின் வனத்தை வந்தடைந்தார்கள். அங்கே காலகூடம் என்னும் இடம் வந்தது. பின்னர் இமயமலையைத் தாண்டி கந்தமாதனம் என்னும் மலைக்குப் போனார்கள். இப்படி பாதயாத்திரையாகச் செல்லும் போது கிடைக்கும் காய்களையும் பழங்களையும் உண்டார்கள். மேடும் பள்ளமுமான பல இடங்களைக் கடந்தார்கள். கடைசியில் இந்திரத்யும் என்னும் தடாகம் வந்தது. குளித்து எழுந்தார்கள். ஹம்ஸகூடமென்னும் இடத்தைத் தாண்டி வந்த சதஸ்ருங்கம் என்னும் மலையில் ரிஷியாக தவம் செய்ய ஆரம்பித்தான்.
**
அங்கு நிறைய சித்தர்களும் ரிஷிகளும் தவமியற்றிக்கொண்டிருந்தார்கள். அவர்களுப் புத்திரன் போல பாண்டுவை அனுசரித்து அவனுடன் பழகிக்கொண்டிருந்தார்கள். நீண்ட நாட்கள் தவம் தொடர்ந்தது. ரிஷிக்கூட்டத்தில் ஐக்கியமாகி ராஜனான பாண்டு முற்றிலுமாக அழிந்து போய் ரிஷி பாண்டுவாக உருமாறியிருந்தான்.
ஒரு நாள் அமாவாஸ்யை. கும்மிருட்டு. சில பிரம்ம ரிஷிகள் எங்கோ புறப்படத் தயாராக இருப்பதைக் கண்டான் பாண்டு. ஒரு கோஷ்டியாக அவர்கள் கிளம்பும்போது அவர்கள் எதிரே ஓடிச்சென்று நிறுத்தினான்.
“நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?”
“தேவர்கள், ரிஷிகள், பிதிர்கள் கலந்துகொள்ளும் பெரிய ஸபை பிரம்மலோகத்தில் இன்று நடக்கிறது. நாங்கள் அதில் கலந்துகொண்டு பிரம்மாவைக் காண விரைகிறோம்” என்றார்கள்.
மஹரிஷ்களுடன் சேர்ந்து சதஸ்ருங்க மலையின் எல்லை தாண்டி ஸ்வர்க்கத்தையும் தாண்டி பிரயாணப்பட பத்னிகளுடன் தயாரானான். அந்த மலையிலிருந்து வடக்கு நோக்கி அவர்கள் நகர் ஆரம்பித்த போது இவன் அவர்களின் கடைசியில் தன்னைச் சேர்த்துக்கொண்டான். அதைப் பார்த்த ரிஷிகள்...
“இங்கிருந்து நாங்கள் வடக்கு நோக்கி மேலே மேலே மேலே செல்வோம். சில இடங்களில் மூச்சைத் தவிர வேறு எந்த சப்தமும் வரக்கூடாது. நூற்றுக்கணக்கான தேவர்களின் விமானங்கள் பறக்கும். சங்கீதம் ஒலிக்க தேவர்களும் அப்சரஸ்களும் கந்தர்வர்களும் விளையாடுமிடங்கள் வரும். குபரனுடைய தோட்டங்களும் செல்லமுடியாத குகைகளும் எதிர்ப்படும். பெரிய நதிகளின் கரைகளில் காலை நனைத்துச் செல்வோம். தாங்கமுடியாத பனி இருக்கும். யாருமே கண்ணில்படாத வாயு மட்டுமே இருக்கும் பிரதேசங்களும் இருக்கும். அந்த இடங்களை பக்ஷிகள் கூட தாண்டாது. தவத்தில் சித்தியடைந்த மஹரிஷிகள் மட்டுமே போகக்கூடிய மார்க்கம் அது. கஷ்டமென்றால் என்னவென்றே அறியாத ராஜகுமாரிகளால் அவ்விடங்களைக் கடக்க முடியுமா?”
“மஹானுபாவர்களே! எனக்குச் சந்ததி கிடையாது. சந்ததியில்லாதவன் ஸ்வர்க்கம் ஏற முடியாது. அதனால்தான் நான் உங்களுடன் ஸ்வர்க்கத்துக்கு வருகிறேன். நீங்கள் உங்களுடன் அழைத்துக்கொள்ளவில்லையென்றால் நான் என் பத்னிகளுடன் கடுந்தவம் புரிந்து ஸ்வர்க்கத்திற்கு வழி செய்துகொள்கிறேன்” என்றான் வருத்தத்துடன்.
“ராஜனே! உனக்கு புத்திரசந்தானம் இருக்கிறது. எங்கள் ஞானதிருஷ்டியினால் பார்க்கமுடிகிறது. நீ முயற்சி செய்யலாம்”
இப்படி சொன்ன அந்த ரிஷிகள் பாண்டுவையும் அவனது பத்னிகளையும் அங்கேயே விட்டுவிட்டு தங்கள் பிரம்மலோக யாத்திரையைத் தொடர்ந்தார்கள்.
**
பசித்தும் களைத்தும் ஹஸ்தினாபுர அரண்மனைக்கு வந்தார் வியாஸபகவான். அவருக்கு அன்னபானங்கள் அளித்து காந்தாரி ஆராதித்தாள்.
‘பெண்ணே! நான் குளிர்ந்திருக்கிறேன். நீ வேண்டிய வரம் கேள்” என்றார்.
“என்னுடைய பர்த்தாவைப் போல நூறுபுத்திரர்கள் எனக்குப் பிறக்க வரம் அருள வேண்டும்” என்று கைகூப்பித் தொழுதாள்.
“அப்படியே நடக்கும்” என்று ஆசி கூறினார் வியாஸர்.
காலக்கிரமத்தில் திருதராஷ்டிரனுக்கு கர்ப்பத்தையடைந்தாள். காந்தாரி கர்ப்பமடைந்த செய்தி கானகத்தில் பாண்டுவிற்கு எட்டியது. அவன் பெரும் துயரமடைந்தான்.
”பூமியில் பிறக்கும் மனிதன் நால்வர்க்கு கடன் பட்டவனாகிறான்.”
குந்தியும் மாத்ரியும் ஒருவரையொருவர் யாரந்த நால்வர் என்று பார்வைகளால் கேட்டுக்கொண்டு புதிராக பாண்டுவைப் பார்த்தார்கள்.
“பிதிர்கள், தேவர்கள், மனிதர்கள், ரிஷிகள் என்ற நால்வருக்கு ஒரு மனிதன் கடன்பட்டவன். யக்ஞங்களினால் தேவர்களின் கடனைத் தீர்க்கவேண்டும். வேதாத்தியயனம் செய்வதாலும் தவம் செய்வதாலும் ரிஷிக்கடன் தீரும். மனிதர்களுக்குப் பட்ட கடன் அன்பினால் தீரும். ஆனால் சந்ததி உண்டுபண்ணுவதினாலும் சிராத்தம் செய்வதாலும் பிதிர்க்கடன் தீர்க்கவேண்டும். பிதிர்களைத் தவிர மற்ற எல்லோர் கடன்களையும் நான் தீர்த்துவிட்டேன். அந்தக் கடன் மற்ற எல்லாவற்றையும் விட பெரிது”
மௌனமாக இருந்தான். மூவரும் ஆழ்ந்த யோசனையில் இருந்தார்கள். பாண்டுவே தொடர்ந்தான்.
“இந்த லோகத்தில் புத்திரசந்தானம் கிடைப்பதற்காக உத்தமர்களான பிராமணர்கள் இருக்கிறார்கள். என்னுடைய பிதாவின் பாரியையிடத்தில் மஹாத்மாவான வியாஸருக்கு எப்படி நான் பிறந்தேனோ அப்படியே நீங்களும் கர்ப்பம் தரித்து புத்ரபாக்கியம் அடையலாம். உயர்குலத்தோனிடம் புத்ரன் பெறுவது சிறந்த தர்மபலன்களைக் கொடுக்கிறது”
எந்த பிராமணனை வைத்து புத்திரசந்தானத்தை அடையலாம் என்று சிந்திக்கலானான் பாண்டு. பின்னர் குந்தியை நோக்கி
“புத்திரனை உண்டுபண்ணுவதில் நீயும் யோசிக்கலாம். பிள்ளையில்லாமல் எனக்கு சாவும் இல்லை வாழ்வும் இல்லை. தர்மசாஸ்திரங்களில் ஆறுபுத்திரர்கள் தாயபாகத்துக்கு உரியவர்கள் (உரிமை) என்றும் வேறு ஆறுபுத்திரர்கள் தாயபாகத்துக்கு உரிமையற்றவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அவர்களைப் பற்றி நான் சொல்கிறேன் கேள்!.
தன் தர்மபத்னியிடம் தனக்குப் பிறந்தவன் ஔரஸன். தன் தர்மபத்னியிடம் தன்னுடைய அனுமதியினால் ஒரு உயர்குலத்தோனுக்குப் பிறந்தவன் க்ஷேத்ரஜன். தாய்தந்தையினால் விடப்பட்டவன் அபவித்தன். ஒரு பெண்ணை இரண்டாவதாக விவாகம் செய்துகொண்ட கணவனுக்குப் பிறந்தவன் பௌனர்ப்பவன். விவாகம் செய்துகொள்ளாமல் கன்னிகையாய் இருக்கும் போது பிறந்தவன் கானீனன். தகப்பன் யாரென்றே தெரியாமல் பிறந்தவன் கூடோத்பன்னன். தத்தபுத்திரன். தாய்தந்தைக்கு கிரயம் கொடுத்து வாங்கப்பெற்ற க்ரீதபுத்ரன், புத்திரன் போல் அபிமானிக்கப்பட்ட க்ரித்ரிம புத்ரன், தானே உனக்கு புத்திரனாக வருகிறேன் என்று வந்த ஸ்வயம்தத்தன். கர்ப்பிணீயாகவே விவாகம் செய்யப்பட்டவளுக்குப் பிறந்த ஸஹோடன், ஜ்ஞாதி புத்திரன் (நெருங்கிய உறவினரின் புத்ரன்), ஐந்தாம் வர்ணத்தவளிடம் தனக்குப் பிறந்த பாரசவன் என்று பன்னிரெண்டு புத்திரர்கள் இருக்கிறார்கள். இவர்களில் கானீனன், ஸஹோடன், க்ரீதன், பௌனர்ப்பவன், ஸ்வயம்தத்தன் மற்றும் பாரசவன் ஆகியோரைத் தவிர்த்து யாராகயிருந்தாலும் தாயபாகத்திற்கு உரியவர்கள். அவர்களை அடையும் வழியை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும்.
ஆபத்காலத்தில் மேல்குலத்தோனிடமிருந்தோ மைத்துனனிடமிருந்தோ ஸ்திரீகள் புத்ரனை விரும்பலாம். குந்தியே! இப்போது நான் உனக்கு அனுமதியளிக்கிறேன். நமக்கு சமானமான ஜ்ஞாதியிடமிருந்தோ அல்லது நம்மைவிட உயர்ந்தகுலத்தோனிடமிருந்தோ நீ புத்ரபாக்யம் அடையும் வழியை தேர்ந்தெடுக்கலாம்”
குந்தி பாண்டுவின் இந்த பேருரையைக் கேட்டு வாய் பிளந்து நின்றாள். மாத்ரி குந்தியின் முகத்தையோ பார்த்தபடி நின்றிருந்தாள். பின்னர் குந்தி
“பாரதரே! உம்மைத் தவிர வேறு ஒருவரிடம் புத்திர சந்தானம் எப்படி பெறுவேன். உம்முடனே நானும் ஸ்வர்க்கம் செல்வேன். உமக்கு மேலான மனிதர் வேறு யார் இந்தப் பூமியில் இருக்கிறார்? நான் கேட்டிருந்த ஒரு பூர்வகதையை இப்போது நான் உங்களுக்குச் சொல்கிறேன்”
வ்யுஷிதாஸ்வன் என்ற அரசனின் கதையை குந்தி பாண்டுவுக்குச் சொல்லத் தொடங்கினாள்.

No comments:

Post a Comment