Sunday, March 11, 2018

குடும்பத்தில் யாரை இழக்கலாம்?



ஏகசக்ர நகரத்தில் பாண்டவர்கள் ஜடையோடு கூடிய பிரம்மசாரிகளாகப் பிக்ஷையெடுத்தார்கள். வீடு வீடாக அவர்கள் பிக்ஷையெடுக்கும் போது அந்த நகரத்து ஜனங்கள் மிகவும் பரிதாபப்பட்டார்கள்.
“பார்ப்பதற்கு அழகாகவும் பரிசுத்தர்களாகவும் இருக்குமிந்த பிராமணர்கள் பிக்ஷையெடுப்பது தகாது. இவர்கள் ராஜ்ஜியமாளும் யோக்யதைப் படைத்தவர்கள்” என்றார்கள்.
பாண்டவர்கள் பிக்ஷைக்கு வீதியுலா போகும்போது திண்ணையில் அமர்ந்து இருப்பவர்கள் காதோடு காதாக பலவகையாகப் பேசிக்கொண்டார்கள்.
“இவர்களைப் பார்த்தால் பிராமணர்களாகத் தெரியவில்லை. மாறுவேஷத்தில் இருக்கிறார்கள் போலிருக்கிறது”
“ராஜ லக்ஷணங்கள் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள். ஏதோ காரியம் கருதி இப்படி உலவுகிறார்கள்”
ஏகசக்ர நகரத்து மக்கள் பாண்டவர்களை தங்களது பந்துக்களைப் போல கருதினார்கள். தினமும் பிக்ஷைக்கு பாண்டவர்கள் வந்து வீட்டு வாசலில் நிற்கும்போது விதம்விதமான பக்ஷணங்களும் அன்னங்களும் அந்த பாத்திரங்களில் இட்டார்கள். பாண்டவர்கள் மௌனவிரதம் போல பேசாமல் அதை வாங்கிக்கொண்டு வருவார்கள்.
அந்த பிராமணரின் கிருஹத்தில் குந்தி தனியாகக் காத்திருப்பாள். அவள் தனியாகத் தவிப்பாளே என்று அவசாரவசரமாக காலையும் மாலையும் திரும்பிவருவார்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் வாங்கிய பிக்ஷைகளை இட்டுவிட்டு அதில் பாதி பாத்திரத்தில் உள்ளதை பீமனுக்குக் கொடுத்துவிட்டு மீதமிருக்கும் பாதியை எஞ்சிய நால்வரும் குந்தியும் சாப்பிடுவார்கள்.
”பீமா! நீ இளைத்தது போல் இருக்கிறாயே! சாப்பிட்டது போதவில்லையாப்பா?” என்று கேட்டாள்.
“ஆம் தாயே! இந்த பாத்திரம் மிகவும் சிறியதாக இருக்கிறது. போதிய அன்னம் பிக்ஷை பெற முடியவில்லை. பாத்திரம் பெரிதானால் பிக்ஷையும் நிறையக் கிடைக்கும்” என்றான் பீமன்.
தினமும் இப்படி பிக்ஷை எடுக்கும் போது பீமனுக்கு ஒரு வயதான குயவனின் நட்பு கிடைத்தது. குயவனிடம் எப்படியாவது கேட்டு ஒரு பெரிய மண்பாண்டம் பிக்ஷை எடுப்பதற்கு வாங்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டு அவன் வீட்டிற்குச் சென்று பேச்சுக்கொடுத்தான் பீமன்.
“இவ்வளவு வயதான காலத்தில் மண் சுமந்து பாண்டங்கள் செய்கிறீர்களா?”
“ஆமப்பா! ஜீவனம் வேண்டுமே”
“உங்களுக்கு நான் மண் சுமந்து தருகிறேன். ஒரு உதவி செய்ய வேண்டும்”
“என்ன உதவி?”
“நான் அன்னம் பிக்ஷை வாங்குவதற்கு பெரிய மண் பாண்டம் வேண்டும். தயாரித்துத் தருவீர்களா?” ஏக்கத்துடன் கேட்டான் பீமன்.
குயவன் கண்களைச் சுறுக்கிச் சிரித்தான். செய்துதருவதாக ஒப்புக்கொண்டான்.
ஒரு பெரிய வண்டியில் ஏற்றும் அளவிற்கு மண் கொண்டு வந்து குயவன் வீட்டு வாசலில் மலைபோலக் குவித்தான். குயவனுக்கு பீமனிடமிருந்து உற்சாகம் தொற்றிக்கொண்டது. சக்கரத்தில் மண் ஏற்றி பீமனையும் எதிரே உட்கார வைத்து ஒரு மிகப்பெரிய பாண்டம் செய்துகொடுத்தான்.
அதைத் தூக்கிக்கொண்டு பிக்ஷை எடுக்கச் சென்றபோது நகரத்து மக்கள் பீமனைப் பார்த்து கேலியாக நகைத்தார்கள். இருந்தாலும் அது நிறைய அன்னம் போட்டு ஆதரித்தார்கள்.
அடுத்த நாள் நால்வரும் பிக்ஷைக்குச் சென்றார்கள். பீமன் மட்டும் குந்தியோடு வீட்டில் இருந்துவிட்டான். அவர்கள் குடியிருந்த பிராமணன் வீட்டில் ஏதோ தகராறு போல இருந்தது. கொஞ்சம் சலசலப்புக்குப் பின்னர் அந்தப் பிராமணனின் மனைவி அழும் குரல் கேட்டது. பீமனுடன் பேசிக்கொண்டிருந்த குந்திக்கு சங்கடமாக இருந்தது.
“பீமா! துரியோதனன் அரக்கு மாளிகைக்குத் தீ வைத்து நம்மை எரிக்கமுற்பட்டான். நாம் தப்பித்து ஓடிவந்தோம். நமக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் இவர்கள். ஏதோ வருத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களது துயரத்தை நாம் களையவேண்டும். நாம் செய்நன்றி மறக்கக்கூடாது. ஆகையால் அவர்களுக்கு உன்னால் முடிந்த உதவிகளைச் செய்யவேண்டும்”
“உங்கள் சொல்லுக்கு மறுப்பேது? அப்படியே செய்கிறேன்” என்றான் பீமன்.
இதற்குள் அவர்கள் வீட்டிலிருந்து நிறைய அழுகுரல்கள் கேட்டது. குந்தி பதறிப்போய் என்ன நடந்தது என்று பார்ப்பதற்கு ஓடினாள். பீமனும் தாயைப் பின் தொடர்ந்து விரைந்தான்.
நடுக்கூடத்தில் பிராம்மணன் அமர்ந்திருந்தான். அவனைச் சுற்றிலும் அவனது மனைவியும் மக்களும் உட்கார்ந்திருந்தார்கள். எல்லோர் முகமும் சோகத்தில் தோய்ந்திருந்தது. கன்னங்கள் அழுதுச் சிவந்து வீங்கியிருந்தன.
“பயனில்லாத ரஸமில்லாத துன்பமான பிறர்க்கு கட்டுப்பட்ட வெறுப்பான இந்த உலகவாழ்க்கை தேவையா? நாமெல்லாம் இன்னமும் உயிரோடு இருக்க வேண்டுமா?”
குந்தியும் பீமனும் ஒருவரையொருவர் முகம் பார்த்துக்கொண்டார்கள். கண்களால் என்னாயிற்று என்று வாயைத் திறக்காமல் பேசிக்கொண்டார்கள்.
“பொருளீட்ட முயல்வது பெரும் துயரம். ஈட்டிவிட்டால் அதைவிடப் பெருந்துயரம். ஒரு பொருள் மேல் நாம் ஆசை வைத்தால் அது விலகிவிட்டால் பெரும் துயரம் உண்டாகிறது. எவனுக்கு திரவிய லாபங்கள் நிறைய ஏற்படுகிறதோ அத்தனை துன்பமெனும் ஆணிகள் உள்ளத்தில் அடிக்கப்படுகிறது. சொற்ப காலம் வாழப்போகிறோம். அதிலும் இது போன்ற உயிர்பயத்தோடு இருப்பதற்கு இங்கிருந்து ஓடிவிடலாம். அதையும் கேட்கமாட்டேன் என்று இந்த ஊரை விட்டு வரமாட்டேன் என்றாய்”
கோபத்தில் அவளிடம் எரிந்து விழுந்தான்.
“முன்பே நாம் வேறு நகரத்திற்கு சென்றிருக்கலாம். உன் பிதாவும் தாயும் இங்குதான் இருக்கிறார்கள். நான் இங்கேதான் பிறந்தேன். இங்கேதான் வளர்ந்தேன். ஆகையால் நாமும் இங்கேயே இருப்போம் என்று என்னைக் கட்டிப்போட்டுவிட்டாய். வயதான உன் பிதா வெகு நாளைக்கு முன்பே பரலோகம் போய்விட்டான். உன் தாயும் அவன் பின்னே சென்றுவிட்டாள். உறவினர்கள் எல்லாம் முன்னே இருந்தார்கள். இப்போது ஒருவரும் இல்லை.இதனால் நாம் அடைந்த லாபம் என்ன?”
உம்மென்று அமர்ந்திருந்தாள் அந்த பிராமணனின் மனைவி. பிள்ளையும் பெண்ணும் இன்னும் அழுதுகொண்டிருந்தார்கள்.
"ஒன்று சொல்லட்டுமா? எவ்விடத்தில் போஜனம் தடையில்லாமல் கிடைக்குமோ, எந்த இடம் பாரியையின் பிறந்த வீடு கட்டுப்படுத்தாதோ, அவ்விடம் தூர தேசமாக இருந்தாலும் மனிதன் கருடனைப் போலவும் ஹம்ச பக்ஷியைப் போலவும் செல்லவேண்டும். அதுதான் சிறந்தது”
“என் தாய்தந்தையரால் நம் உறவு ஏற்பட்டது. நீ தாயைப் போலவும் சிநேகிதியைப் போலவும் இருக்கிறாய். உன்னை என்னால் இழக்கமுடியாது. எனது தௌஹித்ரர்களால் என்னுடைய பிதிர்களும் நானும் வரத்தக்க லோகங்களை விடமுடியாது. ஆகையால் என் பெண்ணையும் பலியாக்க மாட்டேன். சிலர் தந்தையர்க்கு மகளிடம் பாசம் அதிகம் என்கிறார்கள். ஆனால் நான் புத்திரனிடமும் அன்பு மிகவும் வைத்திருக்கிறேன். அவனால்தான் பிதிர்லோகங்களை அடைந்து சொர்க்கம் செல்ல முடியும். அவனை எப்படி இழப்பேன்?”
அவரின் பாரியை மிகவும் விசனப்பட்டாள். வருத்தப்படும் கணவனைப் பார்த்து அவள் அவனை தேற்றும் விதமாகப் பேசினாள்.
“இவ்வுலகத்தில் ஜனித்த மனிதர் எவராயினும் ஒரு நாள் மரணமடையத்தான் வேண்டும். நீர் கவலையை விடும். உயிரை விட்டாவது தன் கணவனைக் காப்பாற்றுவதான் இவ்வுலகத்தில் பெண்களின் தர்மம். நீங்கள் இல்லாமல் புத்ரனும் புத்ரியும் எப்படி எனக்கு கிடைத்திருப்பார்கள்? கணவன் இல்லாமல் இவ்வுலகத்தில் பெண்கள் வாழ்வது கடினம். அதுவும் ஒரு பிள்ளையும் பெண்ணையும் காப்பாற்ற வேண்டும்.”
அந்தப் பிராமணன் மிகவும் சோகமாக அவளையே பார்த்தவண்ணம் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தான். மூலையில் இரு பிள்ளைகளும் இன்னமும் முகத்தில் பீதியும் கண்களில் நீருமாக தவித்தபடி இருந்தார்கள்.
“ஒரு பெண், கன்னிகையாக இருக்கும் போது தாய்தந்தையர் வசத்திலும், விவாகத்துக்குப் பின்னர் பர்த்தாவின் இடத்தும், இவர்கள் இல்லாத போது புத்ரனிடத்திலும் அவர்கள் பாதுகாப்பில் இருக்க வேண்டும். இவர்களிடம் இல்லாமல் ஸ்வதந்திரமாக இருக்கும் ஸ்திரீகள் இகழப்பட்டவர்கள். நீங்கள் இல்லாமல் இக்குழந்தைகளுக்கு என்னால் என்ன செய்துவிட முடியும்? ஆகையால் நீர் என்னை விட்டுவிடும். கணவனுக்கு முன் பரலோகமடையும் பெண்கள் பெரும் பாக்கியவதிகள் என்று தர்மசாஸ்திரங்கள் சொல்கின்றன.”
கொஞ்ச நேரம் அங்கு மயான அமைதி நிலவியது. அவளே தொடர்ந்தாள்.
“ஒன்று சொல்லட்டுமா?”
“என்ன?” என்றான் அந்த பிராமணன் இறுக்கமாக.
“தீர்க்க சுமங்கலியாக உயிர் துறந்து கணவன் கொடுக்கும் தர்ப்பன ஜலத்தை பானம் செய்பவள் பார்வதீ லோகத்தை அடைகிறாள். பார்வதியுடன் தோழியாக இருந்து அந்தப் பர்வதராஜ கன்னிகையுடன் மகிழ்ச்சியோடு இருக்கிறாள். ஆகையால் என்னுயிர் உமக்காகத்தான் இருக்கிறது. ஆபத் தர்மம் ஒன்று இருக்கிறது. ஆபத்காலத்திற்காக தனத்தை சம்பாதித்துவைத்துக்கொள்ள வேண்டும். தனத்தினால் மனைவியைக் காப்பாற்ற வேண்டும். தனத்தினாலும் மனைவியினாலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஆகையால் நீர் எனக்கு விடை கொடும். என் குழந்தைகளைக் காப்பாற்றும்”
இதைக் கேட்டதும் அவளை அப்படியே கட்டியணைத்து ஆரத்தழுவிக்கொண்டான்.
“ஞானமுள்ளவளே! என்னாளும் ஞானமுள்ளவன் மனைவியையும் பிள்ளைகளையும் விடமாட்டான். தர்மார்த்தகாம மோக்ஷங்களை அறியாதவனே அப்படிச் செய்வான்”
தாயும் தந்தையும் ஒருவருக்கொருவர் இப்படி பேசிக்கொள்வதைப் பார்த்த அவர்களின் பெண் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வீட்டின் மூலையிலிருந்து அவர்களிடம் வந்தாள்.
“நீர் இல்லையென்றால் நாங்கள் அனாதையாக நாய் போல அலைந்து நாசமாகப் போவோம். தம்பியோ மிகவும் சிறு பாலகன். நீர் உயிர் நீத்தால் அவனும் காப்பாற்றுபவர் இல்லாமல் சீக்கிரம் இறந்து போவான். அப்படியானால் பிதிர்களாகிய நம் முன்னோர்க்கு பிண்டம் விட்டுப்போகும். தாய்க்கும் தந்தைக்கும் குணமுள்ள புத்திரர்கள் பிறப்பார்கள். ஆனால் புத்திரனாகப் பிறந்தவனுக்கு மீண்டும் எப்படி நல்ல தாய்தந்தையர் கிடைப்பர்? ஆகையால் நான் எனது உயிரைத் தருகிறேன்.”
சிறுபெண் இப்படி பேச ஆரம்பித்ததும் வாசலில் நின்று இவையனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த பீமன் நெஞ்சில் இரக்கம் ஏற்பட்டது. குந்தியும் மிகவும் சோகமடைந்தாள்.
அந்தப் பெண் அப்படி பேசியதும் அவளது தாய்க்கும் தந்தைக்கும் துக்கம் பீறிக்கொண்டு வந்து ஓவென்று அழுதார்கள். மூவரும் மாறி மாறி அழுதுகொண்டேயிருந்தார்கள். உடனே ஒரு மூலையில் அமர்ந்திருந்த அந்தப் பையனும் அவர்களிடம் ஓடிவந்தான்.
அவன் சிரித்துக்கொண்டே “அப்பா அழாதே! அம்மா அழாதே! அக்கா அழாதே!” என்று ஒவ்வொருவர் கண்ணையும் துடைத்துவிட்டான். பின்னர் அங்கே கிடந்த ஒரு தர்ப்பைப் புல்லை கையில் எடுத்துக்கொண்டு
“மனிதனை தின்கிற ராக்ஷசனை நான் இதனால் கொல்வேன்” என்று காற்றில் இப்படியும் அப்படியும் வாள் போல வீசிக்காட்டினான். மழலையில் அவன் அப்படிப் பேசியதும் சோகக்கடலில் மூழ்கி இருந்தாலும் அவர்கள் அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
இப்படி சிரித்துக்கொண்டிருக்கும் போது இது நல்ல சமயமென்று குந்தி அவர்கள் வீட்டினுள் நுழைந்தாள்.
“எதற்காக இப்படி துக்கித்து அமர்ந்திருக்கிறீர்கள்? என்ன காரணம்? என்னால் உதவி செய்யமுடியும் என்றால் செய்து உங்களை விடுவிப்பேன்” என்றாள் குந்தி.
ஏன் அப்படி அழுகிறார்கள் என்று பிராமணன் துன்பத்தின் ஊற்றைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்.
நாளைத் தொடருவோம்..

No comments:

Post a Comment