Monday, March 12, 2018

காண்டவ வன தகனம்



அக்னி களைப்படைந்தான். காண்டவ வனத்தை புசிக்கும் ஆசை நிராசையானதால் நேரே பிரம்மதேவரிடம் சென்றான். முறையிட்டான்.

“அக்னியே! நீ இன்னும் சிலகாலம் பொறுத்திருந்தால் நரநாராயணர்கள் உன் உதவிக்கு வருவார்கள்”
சரியென்று தலையாட்டிக் கேட்டுக்கொண்டு திரும்பிவிட்டான் அக்னி.
நீண்டகாலத்திற்குப் பின்னர் அந்த நரநாராயணர்கள் அவதரித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டான். மீண்டும் பிரம்மனிடம் சென்றான்.
“நீ இனி கவலை கொள்ள வேண்டாம். அந்த நரநாராயணர்கள் அர்ஜுனன் என்றும் வாசுதேவன் என்றும் பூலோகத்தில் அவதரித்திருக்கிறார்கள். இனி இந்திரனே நேரே வந்தாலும் அடக்கிவிடுவார்கள். அவர்களிடம் சென்று ஒத்தாசை கேள். அந்த வனத்தை நீ இனி தகிக்கலாம்.”
அப்போதுதான் அக்னி கிருஷ்ணார்ஜுனர்களிடம் ஓடி வந்தான். யமுனை சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. அந்த நதிக்கரையியிலிருக்கும் காண்டவ வனமருகில் இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும்போது தனது காண்டவ வனப் பசிக்கு உதவி செய்யுமாறு விண்ணப்பித்தான்.
”அக்னிபகவானே! எவரையும் வீழ்த்தும் திவ்யாஸ்திரங்கள் என்னிடம் நிறைய இருக்கிறது. ஆனால் என்னுடைய வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வில்லொன்று இன்னும் எனக்கு அகப்படவில்லை. அதே போல நான் ஓய்வில்லாமல் பாணங்களை விடுவேன். அதை போட்டுக்கொள்ளும் அம்பறாத் தூணிகள் வேண்டும். பின்னர் அசுவங்களும் தேரும் போருக்கு இன்றியமையாதவை. ஆகையால் வெண்ணிரப் புரவிகளையும் சூரியனுக்கு ஒப்பான ஒளிச் சுடர் விடும் தேரையும் எனக்களிப்பாயாக.”
அக்னி அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தான். ஒரு கணம் கிருஷ்ணனைத் திரும்பிப் பார்த்த அர்ஜுனன் மீண்டும் சில கோரிக்கைகளை அவனிடம் வைத்தான்.
“ம்... அப்படியே கிருஷ்ணன் எந்த ஆயுதத்தினால் நாகர்களைக் கொல்லுவாரோ அதையும் நீயே அளிக்கவேண்டும். இந்தக் கருவிகளை நீ எங்களுக்குக் கொடுத்தால் நான் உனக்கு உதவுவதில் சிரமம் இருக்காது” என்றான் அர்ஜுனன்.

அக்னிபகவான் கண்களை மூடி தியானம் செய்தான். திக்பாலகர்களுள் அதிதியின் புத்திரனும் ஜலத்துக்கு அதிபதியுமான வருணனைச் சந்திக்க எண்ணினான். அடுத்த கணம் வருணன் அவன் எதிரே தோன்றினான்.
"வருணனே! உனக்கு ராஜாவான சந்திரன் கொடுத்த காண்டீவம் என்னும் வில்லையும் அஸ்திரம் வற்றாத இரண்டு அம்பறாத் தூணிகளையும் அனுமன் கொடியோடு கூடிய ரதத்தையும் கொடு. காண்டீவத்தினால் பார்த்தனும் சக்கரத்தினால் ஸ்ரீகிருஷ்ணனும் மிகப்பெரிய காரியம் ஒன்றை செய்யப்போகிறார்கள்.”
“அப்படியே செய்கிறேன்” என்றான் வருணன்.
பளிச் பளிச்சென்று மின்னல் வெட்டியது போன்று ஒளி தோன்றியது. விண்ணுக்கும் பூமிக்கும் ஒரு கண்ணுக்குத் தெரியாத பாலம் போடப்பட்டது. வெண்புகை தோன்றி ஒரு பெரும் வில் வந்தது. பின்னாலேயே இரண்டு பெரிய அம்பறாத் தூணிகள் வந்தன. இரண்டையும் அர்ஜுனன் கையில் அளித்தான் அக்னி. அவர்கள் அருகில் பொன்மாலை போட்டு கந்தர்வலோகக் குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு வெள்ளிமயமான ஒரு இரதம் வந்து இறங்கியது. அதன் தலைக்கொடியில் அனுமன் காற்றில் சடசடத்தார்.
அர்ஜுனன் அந்த ரதத்தை வலம் வந்தான். நமஸ்கரித்தான். அக்னிக்கு தனது வந்தனத்தைத் தெரிவித்தான். கவசங்களுடனும் கிரீடத்துடனும் கம்பீரமாக அந்த ரதத்தில் ஏறினான். காண்டீவம் எனும் அந்த தனுஸைக் கையில் எடுத்து அதில் நாண் பூட்டினான். நாணேற்றப்படும் போது ஏற்பட்ட சப்தத்தால் அனைவரும் நடுங்கினார்கள்.
அக்னிக்கு பரம சந்தோஷம். பின்னர் கிருஷ்ணரைத் துதித்து அவருக்கு ஆக்னேயாஸ்திரத்தையும் சக்ராயுதத்தையும் அளித்தான்.


“மதுசூதனரே! உம்மால் யாவரையும் எப்படியும் ஜெயிக்க முடியும். இருந்தாலும் இந்த நாகர்கள் வனம் எரியும் போது வந்தார்களென்றால் இந்த சக்ராயுதத்தால் அவர்களைப் பஸ்பமாக்க முடியும்” என்று பஸ்பம் செய்யும் அக்னியே சொன்னான்.
கிருஷ்ணார்ஜுனர்கள் தயார். அக்னி கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசமடைந்தான்.
“அக்னிபகவானே! நீர் இப்போதே இந்த வனத்தை எரிக்கலாம். உமக்குத் தடை வந்தால் அதை ஒடுக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றான் அர்ஜுனன்.
அக்னி உடனே பெரும் ரூபமெடுத்துக்கொண்டான். மேரு மலையே அக்னியாய் நிற்பது போன்ற தோற்றம். எல்லாப்புறமும் தகித்தது. அப்படியே நெருப்புப் பந்து போல ஏழு பாகங்களாகப் பிரிந்தது. காண்டவ வனத்தை சுற்றிக்கொண்டான் அக்னி. எல்லாப்புறங்களிலிருந்தும் சாம்பலாக்க ஆரம்பித்தான். வனத்துக்குள் விலங்குகளுக்கும் தக்ஷகனுக்கும் அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று பெரும் சவால் ஏற்பட்டது. தக்ஷகன் தன் நண்பன் கைவிடமாட்டான் என்று நம்பிக்கை கொண்டிருந்தான்.
காட்டின் இருபுறமும் அர்ஜுனனும் கிருஷ்ணனும் அரண் போல ரதங்களில் நின்று கொண்டார்கள். தீயிலிருந்து தப்பித்து வரும் விலங்குகளை வேட்டையாடினார்கள். வனத்தின் மரங்களிலிலிருந்த பக்ஷிகள் வெப்பம் தாளாமல் விண்ணுக்கு ஏறிய போது அர்ஜுனனின் காண்டீவத்தால் அங்கமெல்லாம் அம்பு தைக்கப்பட்டு எரியும் நெருப்பில் அக்னிக்கு உணவாக விழுந்தன. காட்டுப் பிராணிகளின் கதறும் ஒலி சமுத்திரத்தைக் கடைவது போலக் கேட்டது.
ஜ்வாலைகள் மேரு மலையின் சிகரமளவிற்கு எழும்பியது. தேவலோகம் உஷ்ணமாகி தேவர்கூட்டம் இந்திரனை அடைந்தது.
“இதென்ன பிரளய காலம் போலிருக்கிறதே! வெப்பம் தகிக்கிறதே. யாராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே” என்று முறையிட்டார்கள்.
காண்டவ வனத்தின் மேலே மிகுதியான மழையைப் பெய்ய வைத்தான் தேவேந்திரன். வானத்திலேயே வற்றிப்போகும்படி செய்தான் அக்னி. காண்டவ வனத்தை அந்த மழை அடையவில்லை. சினமுற்ற இந்தின் இன்னும் பெரும் பெரும் மேகங்களைத் திரட்டி எதிரில் நிற்கும் ஆள் தெரியாதபடி பலத்தை மழையை காண்டவ வனத்தின் மேலே பொழியச் செய்தான். உலகமே இருட்டியது போலானது. சமுத்திரமே காட்டின் மேலே வந்து கொட்டியது போல காண்டவவனத்தின் மீது மழை பெய்தது.
அர்ஜுனன் தனது அஸ்திரங்களால் காண்டவ வனத்தை மூடினான். அங்கிருந்து எந்த பிராணியும் தப்பிக்க முடியாதது போலாயிற்று. காண்டவ வனம் எரியும் போது தக்ஷகன் என்னும் நாகர்களின் அரசன் குருக்ஷேத்திரத்திற்குப் போயிருந்தான். அவன் மகன் அசுவஸேனன் அங்கிருந்தான். தீயிலிருந்து விடுபட்டு ஓடிவிட மிகவும் பிரயர்த்தனப்பட்டான். ஊஹும். முடியவில்லை. அசுவஸேசனனின் தாயாகிய நாககன்னிகை அவனை விடுவிக்கும் பொருட்டு அவனை விழுங்கினாள். பின்னர் மேலே கிளம்பினாள்.
தயாராக நின்றூகொண்டிருந்த அர்ஜுனன் அந்த நாக கன்னிகையின் தலையை அறுத்தான். மேலிருந்து அதை இந்திரன் பார்த்தான். அசுவஸேனனை விடுவிப்பதற்காக தாங்க முடியாத காற்றையும் மழையையும் உடனே வரவழைத்து அர்ஜுனனை மயக்குமுறச் செய்தான். அந்த சமயத்தில் அசுவஸேனன் விடுபட்டான். மூர்ச்சை தெளிந்த அர்ஜுனன் அந்த அசுவஸேனனை “நீ நிலையற்றவனாகப் போகக்கடவாய்” என்று சபித்தான். அப்போது கிருஷ்ணனும் சபிப்பதில் சேர்ந்துகொண்டான் .
அர்ஜுனனுக்கு பெரும் கோபம் ஏற்பட்டது. இந்திரனுடன் துவந்த யுத்தம் செய்ய ஆரம்பித்தான். இருவரும் ஆக்ரோஷமாகச் சண்டையிட்டார்கள். இடி மின்னல்கள் உண்டாக்கு அதிக மழை வர்ஷிக்கும் அஸ்திரத்தை இந்திரன் பிரயோகிக்க அர்ஜுனன் வாயுவாஸ்திரத்தைப் பிரயோகித்து அடக்கினான். சட்டென்று மழைத்தாரகைகள் மறைந்துபோயின. இருள் நீங்கியது. குளிர்ந்த காற்று வீசி அமைதியான சூழல் நிலவியது.
அக்னி இன்னமும் ஆவேசத்துடன் பிராணிகளின் கொழுப்பை விழுங்கி எரிய ஆரம்பித்தான். இப்போது பக்ஷிகள் கூட்டம் கிருஷ்ணார்ஜுனர்களை எதிர்த்தது. அவர்களோடு கூட நாகர்கள் விஷத்தைக் கக்கிக்கொண்டு அர்ஜுனன் அருகில் வந்தார்கள். பாணங்களினால் அவற்றை அறுத்தான் அர்ஜுனன். இந்திரனுக்கு கோபம் பொங்கியது. வஜ்ராயுதத்தை ஓங்கிக்கொண்டு ஐராவதத்தில் ஏறி அர்ஜுனனுடன் சண்டையிடுவதற்கு வந்தான்.
இந்திரனே வஜ்ராயுதத்தை தூக்கிய பிறகு இதர தேவர்களும் ஆயுதபாணிகளாக களம் புகுந்தார்கள். கிருஷ்ணார்ஜுனர்களை எதிர்த்து யுத்தம் செய்ய வந்தார்கள். அர்ஜுனன் அனைவரையும் பந்தாடினான். தேவக்கூட்டத்தையே பின்வாங்கச் செய்த கிருஷ்ண அர்ஜுன பராக்கிரமத்தைக் கண்டு ரிஷிகள் வியந்தார்கள். இந்திரன் சினத்தால் முகம் சிவந்தான்.
அர்ஜுனனின் பராக்கிரமத்தை அறிய விரும்பிய இந்திரன் கல் மழை பொழியச் செய்தான். அர்ஜுனனின் காண்டீவத்திலிருந்து புறப்பட்ட அம்புகள் கற்களை மறைத்து விண்ணுலகம் அனுப்பியது. இந்திரன் அதிர்ந்தான். பின்னர் அதைவிட வேகமாக கல் மழை பொழியச்செய்தான். அர்ஜுனன் அசரவில்லை. மின்னலெனப் புறப்பட்ட அம்புகள் அவைகளைத் தடுத்தன.
இங்கே யுத்தம் நடந்துகொண்டிருக்கையில் அக்னி தனது வேலையில் மும்முரமாக இருந்தான். காண்டவ வனத்தின் முக்கால் பங்கை பக்ஷித்திருந்தான்.
இந்திரன் உடனே மந்த்ர மலையின் மரங்களர்ந்த ஒரு சிகரத்தைப் பெயர்த்து அர்ஜுனன் மீது எறிந்தான். ஜ்வலிக்கின்ற அம்புகளை அதன் மீது எய்தான் பார்த்தன். அந்த மலைச் சிகரம் ஆயிரமாயிரம் துண்டுகளாக உடைந்து காண்டவ வனத்தின் மீது விழுந்து எஞ்சியிருந்த பிராணிகளைக் கொன்றது.
[காண்டவதாஹ பர்வம் முடிந்தது]


கிருஷ்ணர் தனது சக்ராயுதத்தைப் பிரயோகித்தார். வனத்தினுள் புகுந்து சர்ப்பங்களையும் பேய் பைசாசங்களையும் அறுத்து விட்டு திரும்பத் திரும்ப அவர் கைகளில் சக்ராயுதம் தஞ்சமடைந்தது. கிருஷ்ணனின் சக்ரம் அல்லது அர்ஜுனன் காண்டீவம் என்று இருமுனைத் தாக்குதலில் அந்த இடம் பிரளயகாலம் போல காட்சியளித்தது.
தேவர்கள் திரும்பிச் சென்றனர். அர்ஜுனனின் பராக்கிரமத்தைச் சிலாகித்துக் கொண்டிருந்தான் இந்திரன். அப்போது ஒரு அசரீரி ஒலி கேட்டது.
“இந்திரனே! உன்னுடைய ஸ்நேகிதன் தக்ஷகன் காண்டவ வனத்தில் இல்லை. அவன் குருக்ஷேத்திரத்தில் இருக்கிறான். கிருஷ்ணார்ஜுனர்களை எவ்விதத்திலும் உன்னால் தோற்கடிக்க முடியாது. இந்தக் காண்டவ வனம் அழிவது விதியினால் நேர்ந்தது. நீ இதை விட்டுச் செல்லலாம்” என்று கம்பீரத் த்வனியுடன் சொன்னது.
இந்திரன் அந்த இடத்தை விட்டு அகன்றான். அக்னி வாயுவுன் துணையோடு காண்டவ வனத்தை வேகமாக எரிக்க ஆரம்பித்தான். மிருகங்களின் கொழுப்புகள் கால்வாய் போல ஓடியது. ரத்தம் ஆறாக ஒரு புறம் ஓடியது. அக்னி பொறுமையாக அனைத்தையும் குடித்தான்.
அப்போது மயன் என்னும் அசுரன் தக்ஷகன் வீட்டிலிருந்து தப்பித்து ஓடினான். அதைப் பார்த்த கிருஷ்ணன் அவன் மேல் சக்ராயுதத்தை ஏவத் தயாரானான். அப்போது அவன் நேரே அர்ஜுனன் காலடியில் வந்து விழுந்து அபயம் கேட்டான். அர்ஜுனனும் அவனைக் காப்பாற்றுவதாக வாக்குதத்தம் செய்தான்.
மயன் தப்பிக்க நினைத்த தினம் அக்னி காண்டவ வனத்தை எரிக்க ஆரம்பித்து பதினைந்து தினங்கள் ஆகியிருந்தது. அந்த வனத்தில் அசுவஸேனன், மயன் மற்றும் சார்ங்கம் என்ற நான்கு பக்ஷிகள் மட்டும் அழிவில்லாமல் இருந்தது.
*
“வைசம்பாயனரே! அந்த சார்ங்க பக்ஷிகளை மட்டும் அக்னி ஏன் தகிக்கவில்லை?” என்று கேட்டான் ஜனமேஜயன்.

வைசம்பாயணர் மந்தபால ரிஷியின் கதை சொல்ல ஆரம்பித்தார்.
*

ஆத்ம சுத்தியுள்ளவர் மந்தபாலர் என்னும் மஹரிஷி. வேதம் ஓதி தர்மத்தில் நின்றவர். அவர் ஊர்த்துவரேதஸாக இருந்தார். தேகம் விட்ட பிறகு பிதிர்லோகத்தை அடைந்தார். அந்த லோகங்கள் மூடிக்கிடந்தன. தவத்தின் பலனை அடையவில்லை என்று வருத்தமுற்று யமனுக்குப் பக்கத்திலிருந்த தேவர்களிடம் “ஏன் எனக்கு இவ்வுலகங்கள் மூடிக்கிடக்கின்றன.” என்று கேட்டார்.
“பிராம்மணரே! மனிதர்கள் பிறக்கும் போதே மூன்று விதத்தில் கடன்காரர்களாகப் பிறக்கிறார்கள். சாஸ்தோத்திரமான கருமங்களைச் செய்வது, பிரம்மச்சரியமிருப்பது மற்றும் சந்ததி உண்டாக்குவது என்று மூன்று கடன்கள். இதில் நீர் மூன்றாவது கடனை அடைக்கவில்லை. புத் என்ற நரகத்திலிருந்து காப்பதற்கு புத்திரன் இருக்க வேண்டும். உமக்கு சந்தானமில்லை. ஆகையால் இக்கதவுகள் மூடிக்கிடக்கின்றன”
உடனே எளிதில் புத்ர சந்தானம் ஏற்படும் வழி என்ன ஆராய்ந்தார். பக்ஷி ரூபமெடுத்தால் குஞ்சுகள் நிறைய ஒரே நேரத்தில் பிறக்கும் என்பதால் சார்ங்க பக்ஷி ரூபமெடுத்து ஜரிதை என்கிற சார்ங்கியை அடைந்து நான்கு புத்திரர்களைப் பெற்றார். அவைகள் சிறு குஞ்சாக இருக்கும்போதே விட்டுவிட்டு லபிதை என்னும் இன்னொரு சார்ங்கியிடம் சென்றுவிட்டார்.
லபிதையுடன் காண்டவ வனத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்த சார்ங்க ரூப மந்தபால மஹரிஷி அக்னியைக் கண்டார். அவன் தனது குஞ்சாக இருக்கும் புத்திரர்களை எரித்துவிடுவானே என்று பயந்து அவனைத் துதித்தார். அவனும் அவரது ஸ்தோத்திரத்தில் மகிழ்ந்து அந்தக் குஞ்சுகளை எரிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தான்.
ஜரிதையுடன் ஒரு உயர்ந்த மரத்தின் கூட்டில் வசித்துக்கொண்டிருந்த அந்த இறகு முளைக்காத குஞ்சுகள் அக்னி தங்களை எரித்துவிடும் என்று பீதியில் இருந்தன. ஜரிதையும் மிகவும் வருத்தமுற்றாள். அப்போது அந்த மரத்தின் கீழியிருக்கும் எலி வளையில் அந்தக் குஞ்சுகளை நுழைத்துக் காப்பாற்ற எண்ணினாள். ஆனால் அவைகள் அதற்கு மறுத்துவிட்டன.
”எலி கடித்து சாவதற்கு பதில் அக்னியில் எரிந்து உயிரை விட்டால் பிரம்ம லோகம் கிடைக்கும். ஆகையால் நாங்கள் வரமாட்டோம்” என்றன.
“அந்த எலியை ஒரு பருந்து தூக்கிக்கொண்டு போய்விட்டது. ஆகையால் அங்கே எலி இல்லை. நீங்கள் எல்லோரும் அதில் நுழைந்துகொள்ளுங்கள். நான் காப்பாற்றுகிறேன்” என்று கெஞ்சினாள் ஜரிதை. ஆனால் அவைகள் அவ்விடம் விட்டு வர மறுத்தன. உடனே ஜரிதை அக்னி பயமில்லாத வேறிடம் பறந்து சென்றுவிட்டாள்.
அக்னி அந்த மரத்தை நெருங்கினான். அப்போது அந்த சார்ங்க பக்ஷிகள் அழுதுகொண்டே அவனைத் துதித்தன. “எங்கள் தந்தை யாருடனோ சென்றுவிட்டார். தாயும் பறந்துவிட்டாள். எங்களை நீ ரக்ஷி” என்று சொல்லி அவனை ஸ்தோத்திரம் பாடின. அதில் அகமகிழ்ந்த அக்னி “உங்கள் தந்தையான மந்தபாலர் ஏற்கனவே என்னைத் துதித்து உங்களை எரிக்காமல் இருக்க வரம் கேட்டார். கொடுத்துவிட்டேன். உங்களைத் தகிக்க மாட்டேன்” என்று வரம் கொடுத்துச் சென்றுவிட்டான்.
லபிதையிடம் இருந்த மந்தபாலருக்கு தனது குஞ்சுகள் எப்படியிருக்குமோ என்று மனம் தவித்தது. ஆகையால் அங்கிருந்து கிளம்பி தனது புத்திர சார்ங்கங்கள் இருக்குமிடத்துக்கு விரைந்தார். ஜரிதையும் என்னாயிற்றோ ஏதாயிற்றோ என்று பயந்து அவ்விடத்துக்கு வந்தது. அவர்களுக்கு தீங்கில்லை என்று தெரிந்ததும் ஜரிதை ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள்.
ஜரிதையும் அந்த புத்திர சார்ங்கங்களும் சேர்ந்து மந்தபாலரை அவமானம் செய்தார்கள். “புத்திர சந்தானத்தை அடைந்த பிறகு ஸ்திரீகள் புருஷனிடம் மரியாதை வைப்பதில்லை. அக்னியிடம் நான் வரம் கேட்டுதான் இவர்களைக் காப்பாற்றியுள்ளேன்” என்றதும் அவைகள் மந்தபால மஹரிஷியுடன் சமாதனமாகச் சென்றார்கள்.
**
இருபத்தோறு நாட்களில் அக்னி காண்டவ வனத்தை முழுவதும் தகனம் செய்தான். இந்திரன் கிருஷ்ணார்ஜுனர்களின் முன்னே தோன்றி “தேவர்களாலும் செய்ய இயலாத காரியத்தை நீங்கள் இருவரும் செய்திருக்கிறீர்கள். அர்ஜுனா என்ன வரம் வேண்டும் கேள்” என்றான். “உன்னிடம் இருக்கும் அஸ்திரங்கள் அனைத்தும் வேண்டும்” என்றான் அர்ஜுனன். “சிவபெருமான் உனக்குப் பிரசன்னமாவார். அந்தக் காலம் எனக்கும் தெரிய வரும். அப்போது நானும் வந்து உனக்கு என்னிடமிருக்கும் திவ்யாஸ்திரங்கள் அனைத்தும் தருவேன்” என்றான்.
அக்னி அவர்களுக்கு வந்தனம் செய்து “அர்ஜுனா! சிறந்த புத்தியுள்ளவனே! காண்டீவம் என்னும் வில்லும் பாணம் வற்றாத அம்பறாத் தூணிகளும் ஹனுமத்வஜமுள்ள ரதமும் இருப்பதால் எவரையும் நீ ஜெயிப்பாய். க்ஷேமமாக இரு” என்று ஆசீர்வதித்து விடைபெற்றான்.
கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றும் அசுரச் சிற்பியான மயன் ஆகியோர் மட்டும் அங்கே இருந்தார்கள். மூவரும் கால்நடையாக நடந்து அந்த அழகான யமுனை ஆற்றங்கரையில் அமர்ந்தார்கள்.
[மயதர்சன பர்வம் முடிந்தது]
[ஆதிபர்வம் நிறைவடைந்தது ]

No comments:

Post a Comment