Friday, March 9, 2018

ஸ்வச்சந்த ம்ருத்யு



சத்தியவதியுடன் அரண்மனை வாசலில் ரதத்தில் வந்திறங்கிய பீஷ்மரைப் பார்த்ததும் சந்தனு திடுக்கிட்டான். நகரமே பீஷ்மரின் பிரதிக்ஞையையும் தியாகத்தையும் பேசிப் பேசி மாய்ந்து போனார்கள்.

தனக்காக தன் பிள்ளை செய்த தியாகத்தை எண்ணியெண்ணி வருந்தினான். துயரத்தின் எல்லைக்குப் போய் அரண்மனை வாசலுக்கும் கங்கைக்கரைக்கும் வனத்திற்கும் விட்டேத்தியாகச் சுற்றித் திரிந்தான். பீஷ்மர் பிதாவுக்கு நன்மை செய்தும் சோகமாக இருக்கிறாரே என்று விஜாரித்து அவரைத் திருப்திப்படுத்தவே இவ்வாறு செய்ததாக அவரிடம் சென்று பேசினான். தனது விரதத்திலிருந்து மாறுவதற்கில்லை என்று கொண்ட கொள்கையில் வைராக்கியமாக இருந்தான்.
பின்னர் சந்தனு ஒருவாறாக தன்னைத் தேற்றிக்கொண்டு சகஜ நிலமைக்கு திரும்பினான். அப்போது ஒரு நாள் தனது மகன் பீஷ்மரை அழைத்து தலையைக் கோதி ஆதரவாக ஒரு வரம் அளித்தான்.
“குற்றமற்றவனே! இப்போது நான் உனக்கு ஒரு வரமளிக்கிறேன். நீ எவ்வளவுநாள் உயிருடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அவ்வளவு நாள் இருப்பாய். உன்னைக் கேட்காமல் யமன் உன்னை நெருங்கமுடியாது. நீ அனுமதித்தால் மட்டுமே தர்மராஜன் தன் காரியம் செய்வான்”
[இந்த வரத்திற்கு பெயர் ”ஸ்வச்சந்த ம்ருத்யு”]
சத்யவதியின் பூர்வாசிரமம் அறிந்து கொண்ட சந்தனு மிகவும் சந்துஷ்டி அடைந்தான். உபரிசரவஸ் என்ற க்ஷத்ரிய வீரியத்தில் பிறந்தவள் என்பதால் அந்த முறைப்படி அவளை விவாஹம் புரிந்து கொண்டான்.
பீஷ்மர் ராஜ்ஜியம் நடத்த சந்தனு சத்தியவதியின் அந்தப்புரத்திலேயே காலத்தைக் கழித்தான். அவர்களுக்கு சிறந்தபுத்தியும் வீரனுமான சித்ராங்கதன் என்னும் புத்திரன் பிறந்தான். சந்தோஷ நாட்கள் மீண்டும் தொடர்ந்தது. சில வருஷங்கள் கழிந்த பின்னர் விசித்ரவீரியன் என்று இரண்டாவது புத்திரனை பெற்றெடுத்தாள் சத்தியவதி.
விசித்ரவீரியன் யௌவனப் பருவம் அடைவதற்கு முன்பாகவே சந்தனுவின் காலம் முடிந்து ஸ்வர்க்கம் சென்றான். பீஷ்மர் சத்தியவதியின் ஜ்யேஷ்ட புத்திரனான சித்ராங்கதனுக்குப் பட்டாபிஷேகம் செய்து அரியணை ஏற்றினார். பக்கத்தில் அமர்ந்து அவனுக்கு உதவியாக ஹஸ்தினாபுர ஆட்சியை பார்த்துக்கொண்டார். சித்ராங்கதன் நல்ல வில்லாளி. தனது வீரத்தினால் நிறைய அரசர்களை வென்றான்.
சித்ராங்கதன் திக்விஜயம் செய்து பல தேசத்து அரசர்களை பணிய வைக்க கிளம்பினான். அப்போது வனத்தில் அவனது பெயரையேக் கொண்ட ஒரு கந்தர்வராஜன் எதிரில் வந்தான். அவன் சித்ராங்கதனின் பெருமை அறிந்திருந்தான்.
“ராஜகுமாரனே! உனக்கு ஏன் என் பெயரைச் சூட்டினார்கள். என் பெயரில் இன்னொருவன் இருக்கக்கூடாது. ஒன்று உனது பெயரை மாற்றிக்கொள். அல்லது என்னுடன் யுத்தம் செய். யார் ஜெயித்தாலும் ஒருவரே உயிர் வாழ்வோம்” என்று சண்டைக்கு அழைத்தான்.
“எங்கே யுத்தம் செய்யலாம். வா” என்று சீறினான் சித்ராங்கதன்.
“ஹிரண்வதி நதிக்கரையில் இருக்கும் குருக்ஷேத்திரம் வா..”
இருவரும் அங்கே விரைந்தார்கள். பகல் முழுவதும் சண்டையும் இரவில் ஓய்வும் எடுத்துக்கொண்டு மூன்று வருஷ காலங்கள் தொடர் யுத்தம் புரிந்தார்கள். கடைசியில் கந்தர்வராஜன் மாயாஜாலங்கள் புரிந்து சித்ராங்கதனைக் கொன்றான்.
செய்தி பீஷ்மரை அடைந்தது. சத்யவதி கதறினாள். பீஷ்மர் முன்னின்று அவனுக்கு இறுதிக்காரியங்களை நடத்தினார். பின்னர் பருவமே வராத அவனது தம்பியும் சத்தியவதியின் இரண்டாவது புத்திரனான விசித்ரவீரியனுக்கு கௌரவராஜ்ஜிய பட்டாபிஷேகம் செய்தார்.
“பீஷ்மா.. விசித்ரவீரியன் இன்னும் பாலகன் தான். நீதான் அவனுக்கு உதவியாக ராஜ்ய விவகாரங்களை மேற்பார்வையிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டாள் சத்தியவதி.
பீஷ்மரின் சிரமேற்கொண்ட மேற்பார்வையில் விசித்ரவீரியன் தனது தகப்பன் பாட்டன் போல ராஜ்ஜியம் ஆள ஆரம்பித்தான். காலம் ஓடியது. விசித்ரவீரியன் யௌவனப் பருவம் அடைந்தான். அவனது விவாஹம் பற்றி பீஷ்மரும் சத்தியவதியும் மற்றும் அரண்மனை புரோகிதர்களும் ஆலோசித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த ஒரு பிராமணர் “பிதாமகரே! காசி ராஜாவின் மூன்று மகள்களுக்கும் நாளை ஸ்வயம்வரம் நடக்கிறது. அப்ஸரஸுக்கு ஒப்பான அழகு மிக்கவர்கள்” என்றார்.
உடனே ஆலோசனை மண்டபத்தை விட்டு விடுவிடுவென்று வெளியே வந்தார்.
“யாரங்கே! சாரதியை ரதத்தைப் பூட்டச் சொல்..” என்று தேரை எடுத்துக்கொண்டு காசி தேசத்துக்கு விரைந்தார் பீஷ்மர். அரண்மனை மாடத்திலிருந்து தேர் விரைவதைப் பார்த்துக்கொண்டிருந்த சத்தியவதிக்கு பீஷ்மர் மேலிருந்த பாசத்தினாலும் மரியாதையினாலும் கண்களில் நீர் முட்டியது.
***
காசி தேசத்துக்குள் பீஷ்மரின் ரதம் புயலென நுழைந்தது. ஸ்வயம்வரத்துக்காக காசிதேசத்தவர்களும், கோலச தேசத்தவர்களும், வங்க தேசத்தவர்களும், கலிங்க தேசத்தவர்களுமான அரசர்கள் பட்டாடையும் விதம் விதமான அலங்காரங்களுடனும் கூட்டம் கூட்டமாக ஸ்வயம்வரம் நடக்கும் அரண்மனைக்கு சென்று கொண்டிருந்தார்கள். காசிராஜனின் அரண்மனையில் கூட்டம் நெட்டித் தள்ளியது. கிழவயது உள்ள பீஷ்மர் உள்ளே நுழைந்த போது அங்கிருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். சிலர் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தார்கள்.
“நரைப் பருவம் வந்த பின்னர் லஜ்ஜையை விட்டு இந்த பீஷ்மர் இங்கே வந்திருக்கிறாரே!” என்று இருவர் அவர் காதுபட பேசிக்கொண்டே நகர்ந்தார்கள். பீஷ்மர் விறுவிறுவென்று ஸ்வயம்வர மண்டபத்தை நோக்கி முன்னேறினார்.
“ஹே! இவர் ஊருக்காகப் பொய் பிரதிக்ஞை செய்துவிட்டு.. அப்ஸரஸ் போல பெண்களை வரித்துவிடலாம் என்று வந்துவிட்டார். இவர் பிரம்மச்சாரியாம்! “ என்று கேலி பேசி ஒரு கூட்டமாக இருந்த அரசர்களில் சிலர் சிரித்தார்கள். பீஷ்மர் ஒரு முறை அவர்களைக் கோபமாகப் பார்த்துக்கொண்டே ஸ்வயம்வர மண்டபத்தில் முதல் ஆசனத்தில் கம்பீரமாக ஒரு சிங்கம் போல அமர்ந்தார்.
கைகளில் மாலையுடன் மூன்று பெண்களும் சர்வ அலங்காரங்களுடன் அங்கு அமர்ந்திருக்கும் ராஜாக்களைப் பார்த்துக்கொண்டே நுழைந்தார்கள். அங்கு அமர்ந்திருக்கும் அரசர்களின் பெயர்கள் படிக்கப்பட்டது. அதில் முதலாவதாக கிழவரான பீஷ்மர் அமர்ந்திருப்பதைக் கண்டு அம்மூன்று பெண்களும் பயந்தார்கள். அவர் அருகில் அவர்கள் வந்தவுடன் உடனே மூவரையும் கைது செய்வது போல முன்னால் நின்று கொண்டு பீஷ்மர் பெருங்குரலெடுத்துப் பேசத் துவங்கினார்.
“ஹே அரசர்களே! குணமுள்ளவர்களை அழைத்து பொருள் கொடுத்து பெண்களை அவர்களுக்கு விவாஹம் செய்து கொடுக்கும் பிராம்ம விவாஹம் ரிஷிகளால் தர்மசாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டு பசுக்களைக் கொடுத்து கன்னிகளை மணம் புரிந்து கொள்ளும் ஆர்ஷ விவாஹம் சிலர் செய்கிறார்கள். செல்வமும் பொருளும் வாங்கிக்கொண்டு சிலர் கன்னிகளை ஆஸுரவிவாஹம் செய்துகொடுக்கிறார்கள். இன்னும் சிலர் தனது சாமர்த்தியத்தினால் காந்தர்வ விவாஹத்தில் வரித்துவிடுகிறார்கள்.”
அரசர்கள் கூட்டம் பீஷ்மரது கர்ஜனை போன்ற குரலுக்கு அடங்கிக் கட்டுப்பட்டு அவர் பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்தது.
“சிலர் தூங்கிக்கொண்டிருக்கும் கன்னிகைகளைத் தூக்கிக்கொண்டு பைசாசவிவாஹம் செய்துகொள்கிறார்கள். இன்னும் சிலர் பெற்றோரின் அனுமதியின் பேரில் பிராஜாபத்யம் என்னும் மணம் புரிகிறார்கள். இன்னும் சிலர் வேதோக்தமான தைவவிவாஹம் செய்துகொள்கிறார்கள். ஆனால் ராஜபுத்திரர்களே எட்டாவதாக சொல்லப்பட்ட ராக்ஷஸ விவாஹமே சிறந்தது என்றறியுங்கள்”
சபையோர் அனைவரும் மலைத்துப்போய் பீஷ்மரின் விவாஹ தர்மங்களீன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவரின் சிம்ம கர்ஜனை தொடர்ந்தது...
“பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டவளே சிறந்தவள் என்று தர்மசாஸ்திரம் சொல்பவர்கள் கருத்துரைக்கிறார்கள். இதோ.. இப்போது.. இந்த மூன்று கன்னிகைகளையும் எனது இளைய சகோதரனுக்காக கவர்ந்து சென்று ராக்ஷஸ விவாஹம் செய்துவைக்கப்போகிறேன். உங்களில் யாருக்காவது தைரியமும் என்னிடம் யுத்தம் புரியும் வீரமும் இருந்தால் தடுத்துப் பாருங்கள்”
அங்கு அமர்ந்திருந்த ராஜாக்கள் அனைவரும் இருக்கைகளை விட்டு எழுந்துவிட்டார்கள். கூட்டம் சலசலத்தது. உடைவாளை உருவி கையில் எடுத்துக்கொண்டார். மதயானை போன்று அந்த சபையில் அவர் அந்த கன்னிகைகளுடன் சீறிக் கிளம்பிய போது அந்த அரசர்கள் அனைவரும் ஒரு பெரும் யுத்தத்துக்கு தயாராகினர்.
மூன்று கன்னிகைகளுடன் ரதத்தில் ஏறி குதிரைகளைத் தட்டி விட்டார். அசுவங்கள் வேகமாகக் கிளம்பியது. ஸ்வயம்வரத்தில் தாங்கள் தோற்கடிக்கப்பட்டதில் அவமானமடைந்த அரசர்கள் அவர்களது ரதங்களில் ஏறி பீஷ்மரைத் துரத்தினர். ஒரே சமயத்தில் அனைவரும் பீஷ்மர் மேல் அம்புமழை பொழிந்தார்கள். தனது தேரிலிருந்து பின்னால் திரும்பி நின்று கொண்டு பீஷ்மர் அவர்கள் போட்ட் அனைத்து பாணங்களை அழித்தார். பெரும் யுத்தம் நடந்தது.
தேவாசுர யுத்தம் போல நிகழ்ந்ததில் பல ரதங்களையும் கொடிகளையும் கிரீடங்களையும் கீழே தள்ளினார். சில தலைகள் தரையில் உருண்டது. பிரளயகால அக்னிக்கு ஒப்பாக அவர் சண்டையிட்டதில் சிலர் உயிர் பிழைத்தால் போதுமென்று ஓடினர். பின்னர் மீண்டும் தேரை ஹஸ்தினாபுரத்துக்கு செலுத்தினார் பீஷ்மர்.
“நில்...நில்..நில்..” என்று குதிரைகளின் குளம்பொலியையும் மீறி பின்னால் குரல் கேட்டது. ஒரு மரத்தடியில் ரதத்தை மெதுவாக்கித் திரும்பினால் சால்வன் எனும் ஸௌபல தேசத்து அரசன் துரத்தி வந்துகொண்டிருந்தான். பீஷ்மர் சண்டைக்கு தயாரானார். சால்வனின் பின்னால் வந்த சில அரசர்கள் அங்கே இன்னொரு யுத்தம் நிகழப்போகிறது என்றதும் கூடி நின்று வேடிக்கைப் பார்க்கத் துவங்கினர்.
சால்வனுக்கும் பீஷ்மருக்கும் அந்த காசி தேசத்துப் பெண்களின் பொருட்டு பெரும் யுத்தம் நடந்தது. சால்வன் ஆக்ரோஷத்துடன் போரிட்டான். முதலில் லக்ஷக்கணக்கான அஸ்திரங்களை வர்ஷித்தான் சால்வன். “யே சாரதி.. ரதத்தைத் திரும்பு.. இவனுக்கு தகுந்த பாடம் கற்பிக்கிறேன்” என்று சீறினார் பீஷ்மர். அவரின் வீரத்துடன் அவனால் மல்லுக்கு நிற்க முடியவில்லை. பீஷ்மர் வாருணாஸ்திரஸ்த்தைத் தொடுத்து அவனது தேரின் குதிரைகள் நான்கையும் கொன்றார். பின்னர் சால்வனின் சாரதியையும் அம்பெய்து கொன்றார்.
நிலைதடுமாறி சரிந்த ரதத்திலிருந்து கீழே குதித்தான் சால்வன். வில்லும் அம்பும் பீஷ்மரால் முறிக்கப்பட தோளிலும் மார்பிலும் இரத்தம் வழிய நிராயுதபாணியாக நின்றான் சால்வன். பெண்களின் முன்பாக அவனுக்கு எச்சரிக்கை விடுத்து “பிழைத்துப் போ...” என்று திரும்ப அனுப்பினார். ஸ்வயம்வரம் பார்க்க வந்து பீஷ்மரின் யுத்தத்தைக் கண்டு ரசித்த அரசர்களும் தமது தேசங்களுக்குத் திரும்பினர்.
**
பீஷ்மரின் ரதம் ஹஸ்தினாபுரத்திற்குள் நுழைந்த போது அந்தக் கன்னிகைகளை நகர மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். விரைவாக அரண்மனைக்குள் நுழைந்தார். தனது தம்பிக்காக கன்னிகைகளை கவர்ந்து வரும் பீஷ்மரைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் சத்தியவதி.
விசித்ரவீரியனுக்கு அவர்களை விவாஹம் செய்து வைக்க சத்தியவதியும் பீஷ்மரும் ஆலோசனையில் இறங்கினார்கள். அவர்கள் அமர்ந்திருக்கும் அந்த பெரிய மண்டபத்தினுள் காசி ராஜனின் மூத்த மகள் அலட்சியமாக உள்ளே நுழைந்தாள்.
பீஷ்மரும் சத்தியவதியும் தங்கள் ஆலோசனையை நிறுத்திவிட்டு அவள் பக்கம் திரும்பினர். இடுப்பில் கை வைத்துக்கொண்டு பீஷ்மரை உதாசீனப்படுத்துவதுப் போல பார்த்தாள். என்ன வேண்டும் என்று கேட்க எண்ணிய பீஷ்மர் வாயைத் திறக்காமல் அமர்ந்திருந்தார். சத்தியவதிக்குக் கோபம் வந்தது. அப்போது....

No comments:

Post a Comment