Sunday, March 11, 2018

அங்காரபர்ணன் கர்வபங்கம்


அதிதியொருவன் அந்த பிராமணன் வீட்டிற்கு வந்திருந்தான். கடும் தவமுள்ள அவன் சில காலம் பாண்டவர்கள் போல அங்கேயே இன்னொரு பகுதியில் தங்கியிருந்தான். அவன் தினமும் சாயங்கால வேளைகளில் பல புண்ணிய க்ஷேத்திரங்கள் பற்றியும் புண்ணிய தீர்த்தங்கள் பற்றியும் பல தேசத்து அரசர்கள் பற்றியும் நகரங்கள் பற்றியும் ஆச்சரியமான பல கதைகள் சொன்னான்.
“இன்னும் சிறிது நாட்களில் பாஞ்சால தேசத்து அரசனான துருபதனின் பெண் திரௌபதிக்கு ஸ்வயம்வரம் நடக்கவிருக்கிறது”
ஐவரும் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டார்கள்.
“துருபதனுக்குப் பெண் இருக்கிறாளா?” என்றான்.
கதை சொல்லிக்கொண்டிருந்த அதிதியாக வந்த பிராமணன் யக்ஞம் நடந்த அக்னிக் குண்டத்திலிருந்து ஒரு பெண்ணும் பிள்ளையும் துருபதனுக்குப் பிறந்ததையும் மேலும் அந்தப் பெண்ணை அர்ஜுனனுக்கு மணம் முடிக்கவும் துரோணரை அழிப்பதற்காக பிள்ளை பெற்றதையும் விஸ்தாரமாகக் கூறினார்.
**
இதற்கிடையில் வாரணாவதம் அரக்கு மாளிகையில் வைத்துப் பாண்டவர்களை துரியோதனன் எரித்துவிட்டான் என்கிற விஷயம் காட்டுத் தீ போலப் பல தேசங்களுக்குப் பரவியது. துருபதன் காதுகளுக்கும் அந்தச் செய்தி எட்டியது. மந்திரிமார்கள் சிலருடன் துருபதன் சோகத்துடனும் தொங்கிய முகத்துடன் அவையில் அமர்ந்திருந்தான்.
“யாஜர் எனக்கு புத்திரகாமேஷ்டி யாகம் செய்து வைத்தார். அப்போதே என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தேன். அதன்படியே நடக்கும் என்று கிருஷ்ணையையும் த்ருஷ்டத்யும்னனையும் அக்னிக் குண்டத்தில் பெற்றேன். இப்போது அர்ஜுனனை மணக்கமுடியாமல் போகுமென்றால் நான் என்ன செய்வேன்! குந்தியுடன் அந்தப் பாண்டவர்கள் இறந்துவிட்டார்கள் என்று செய்திகள் வருகிறதே! ஓ! எனக்கு இதயம் பிளந்துவிடும் போலிருக்கிறதே!”
அவையோர் கலங்க கண்ணீர் சிந்தி அழுதான் துருபதன். அங்கு அமர்ந்திருந்த அரசவைப் புரோஹிதர் துருபதனுக்கு சக்தியளிக்கும் விதமாகப் பேசினார்.
“மன்னவா! பாண்டவர்கள் தர்மானுஷ்டானம் செய்பவர்கள். தோல்வியடையமாட்டார்கள். முன்னே ஒருதரம் இந்திரன் காணாமல் போனான். அப்போது இந்திராணி தேவர்களின் குருவாகிய பிரஹஸ்பதியிடம் குறி கேட்டாள். அவரும் இந்திரன் ஓரிடத்தில் கிடைப்பான் என்று கூறி அங்கே சென்று பார்த்தால் தாமரைக்கிழங்கின் கணுவில் அகப்பட்டான். அதுபோலவே மஹாராஜா! நான் பாண்டவர்களைப் பற்றியும் குறி கேட்டேன். அவர்கள் எங்கேயோ ஜீவித்திருக்கிறார்கள். நிமித்தங்கள் அப்படியே சொல்கிறது.”
சிம்மாசனத்தில் நிமிர்ந்து உட்கார்ந்தான் துருபதன். அவனுக்கு தெம்பு வந்தது.
“ஆகவே! ஸ்வயம்வரத்தைப் பிரகடனம் செய்யுங்கள். க்ஷத்ரியர்கள் கன்னிகாதானம் செய்வதற்கு ஸ்வயம்வரமே சிறந்த மார்க்கம். தூரத்திலிருந்தாலும் சமீபத்தில் இருந்தாலும்... ஏன்.. ஸ்வர்க்கத்திலேயே இருந்தாலும் இங்கே வருவார்கள். சந்தேகமேயில்லை.. நாள் குறித்துத் தருகிறேன். நீங்கள் பறையடிக்க ஏற்பாடு செய்யுங்கள்”
இவ்வாறு நம்பிக்கையுடன் அரண்மனைப் புரோஹிதர் சொன்னதும் துருபதன் மகிழ்ச்சிக்கடலில் திளைத்தான்.
“யாரங்கே! இப்போதே பறையறிவிக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்று கட்டளையிட்டான்.
“இன்றிலிருந்து எழுபத்தைந்தாவது நாள். தை மாதம். சுக்கில பக்ஷம். ரோகிணி நக்ஷத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்வயம்வரம் நடக்கவிருக்கிறது.” என்று பறையறிவித்தான்.
**
"தேவர்களும் கந்தர்வர்களும் யக்ஷர்களும் தவமார்ந்த ரிஷிகளும் அந்த ஸ்வயம்வரத்தைக் காண போய்க்கொண்டேயிருக்கிறார்கள். பிராம்மணியே! உனது புத்திரர்கள் மஹாத்மாக்களாக இருக்கிறார்கள். மன்மத ஸ்வரூபத்தோடு அழகாயிருக்கிறார்கள். அந்தத் திரௌபதி தற்செயலாக இவர்களில் ஒருவனைக் கணவனாக அடையலாம். இவர்களுக்கும் அந்த அதிர்ஷ்டம் வாய்க்கலாம். பிரம்மன் தலையில் எழுதியிருப்பதை எவர் அறிவார்கள்?”
ஐவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். குந்தி தனது புத்திரர்களின் மனநிலையை உணர்ந்தாள்.
“அந்த பாஞ்சால தேசம் மிகவும் செழிப்பானது. அந்த அரசனும் பிராமணர்களுக்கு உபகாரி. என்னுடைய சிஷ்யர்கள் சிலரும் இங்கே தங்கியிருக்கிறார்கள். அவர்களுடன் நானும் அங்கே செல்கிறேன். விருப்பமிருந்தால் நீங்களும் என்னுடன் சேர்ந்துகொள்ளலாம்” என்றார் அந்த அதிதியாக வந்த பிராமணர்.
அன்றிரவு பாண்டவர்கள் அனைவருக்கும் த்ரௌபதியை நினைத்து தூக்கம் மறந்தனர். குந்தி தனது புத்திரர்கள் அவள் நினைவை உள்ளத்தில் வைத்திருக்கிறார்கள் என்று அறிந்துகொண்டாள்.
யுதிஷ்டிரரை அழைத்தாள்.
“இந்த அழகான நகரத்தில் நாம் நிறைய நாள்கள் இருந்துவிட்டோம். பிக்ஷைகளும் குறைந்துவிட்டது. நாம் பாஞ்சாலதேசத்துக்குப் போகலாம் என்று நினைக்க்றேன். நாமும் புதிய இடங்களைப் பார்த்தால் இன்னும் சந்தோஷம் கிடைக்கும்” என்றாள்.
“தாயே! உனக்கு இஷ்டமான காரியம் எதுவோ அதுவே எங்களுடைய விருப்பமும். நீ சொன்னபடியே செய்வோம். என் தம்பிகளையும் ஒரு தடவை கேட்போம்” என்று சொல்லிவிட்டு தம்பிகளை அருகில் அழைத்து குந்தி சொன்னதை எடுத்துச் சொல்லி சம்மதம் கேட்டார். அனைவரும் உடனே “அப்படியே செய்வோம் அண்ணா!” என்று கிளம்பினார்கள்.
அந்தப் பிராமணன் இடத்தில் சொல்லிக்கொண்டு பாஞ்சால தேசம் புறப்படப் தயாராக இருந்தார்கள். வாசலில் நிழலாடியது. யுதிஷ்டிரர் எட்டிப் பார்த்தார். வெண் தாடியுடனும் ஜடாமுடியுமாக வியாஸர் நின்றிருந்தார்.
தம்பிகளுடன் யுதிஷ்டிரர் அவரை விழுந்து வணங்கினார். பின்னர் எல்லோரும் அபிவாதனம் செய்தார்கள். குந்தியும் நமஸ்கரித்தாள். அவருக்கு மரியாதைகள் செய்தார்கள்.
“சாஸ்திரங்களையும் தர்மங்களையும் அனுசரித்து நடக்கிறீர்கள் என்று அறிகிறேன். பீமனின் பகாசுர வதத்தையும் ஞானதிருஷ்டியில் அறிந்துகொண்டேன். இப்போது எங்கு கிளம்பியிருக்கிறீர்கள் என்றும் தெரியும்”
அர்த்தபுஷ்டியாகச் சிரித்தார் வியாஸர். அனைவரும் அவர் எதிரில் கீழே அமர்ந்திருக்க ஒரு ஆசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் வியாஸர்.
“உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். பின்னர் நீங்கள் பாஞ்சாலம் செல்லலாம்”
உள்ளே சென்று ஒரு வெங்கல கூஜாவில் ஜலம் கொண்டு வந்து தந்தாள் குந்தி. அருந்தினார். ஆரம்பித்தார்.
“ஒரு தபோவனத்தில் ரிஷி கன்னிகை ஒருத்தி இருந்தாள். அழகி. கர்மவினை காரணமாக எவ்வளவு அழகியாக இருந்தாலும் அவளுக்குக் கணவன் கிடைக்கவில்லை. கணவனை வேண்டி சிவபெருமானைத் துதித்துக் கடும் தவம் இருந்தாள். அவளது தவத்தை மெச்சிய சிவன் அவளெதிரில் தோன்றினார். என்ன வரம் வேண்டும் கேள். தருகிறேன். என்றார். அவர் எதிரில் தோன்றியதில் ஆச்சரியமடைந்த அந்தக் கன்னிகை எல்லா நற்குணங்களும் நிரம்பிய கணவன் வேண்டும் என்று பலமுறை கேட்டாள். உனக்கு ஐந்து கணவர்கள் வாய்ப்பார்கள் என்று சங்கரர் வரம் அருளினார். அவள் உடனே பதபதைத்து ஸ்வாமி எனக்கு ஒரு கணவன் மட்டுமே போதும் என்றாள். நீ எனக்கு பதியைக் கொடும் என்று ஐந்து முறை வேண்டினாய். ஆகையால் ஐந்து கணவர்கள் கிடைப்பார்கள் என்று சொல்லி மறைந்து போனார். அந்தக் கன்னிகை துருபதன் புத்திரியாக அக்னிக் குண்டத்தில் க்ருஷ்ணை என்று பிறந்திருக்கிறாள். அவள் உங்களுக்கு மனைவியாகப் போகிறாள். நீங்கள் அனைவரும் பாஞ்சால நகரத்தில் வாசம் செய்யுங்கள். அவளை அடைந்த பிறகு சௌக்கியமடைவீர்கள்.”
எழுந்து கொண்டார். அனைவரையும் மறுபடியும் ஆசீர்வதித்தார். விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்.
பாஞ்சால நகரத்துக்கு செல்லும் வழியில் சில பிராமணர்கள் பாண்டவர்களோடு நடந்து வந்தார்கள்.
“நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
“நாங்கள் ஏகசக்ர நகரத்திலிருந்து வருகிறோம். பாஞ்சால நகரத்துக்கு சென்றுகொண்டிருக்கிறோம். நீங்கள் எங்கே வருகிறீர்கள்?” என்று பதிலுக்குக் கேட்டார் யுதிஷ்டிரர்.
“நாங்களும் பாஞ்சால தேசம்தான் செல்கிறோம். அங்கே துருபத ராஜகுமாரியான க்ருஷ்ணைக்கு ஸ்வயம்வரம். எல்லா தேசத்து ராஜாக்களும் வருகிறார்கள். பலவகையான வாத்தியம் இசைப்பவர்களின் கச்சேரிகள் நடந்துகொண்டிருக்கிறது. ஊர்மக்கள் தானம் கொடுத்து அதிதிகளை சந்தோஷப்படுத்துகிறார்கள். தடபுடலான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த க்ருஷ்ணை அக்னிக் குண்டத்திலிருந்து பிறந்தவள். அவளின் சௌந்தரியத்துக்கு இவ்வுலகில் ஈடுஇணை யாரும் கிடையாதாம். தேவபுருஷர்கள் கூட அதில் கலந்து கொள்ள வருவார்கள் போலிருக்கிறது. நீங்கள் ஐவரும் சுந்தர வதனத்துடன் இருக்கிறீர்கள். உங்களில் ஒருவரைக் கூட அந்த க்ருஷ்ணை கணவனாக வரிக்கலாம்.”
“ஆமாம்! வாருங்கள். அங்கே செல்வோம்” என்றார் யுதிஷ்டிரர்.
**
குந்தியுடன் ஐவரும் பாஞ்சாலநகரத்திற்கு இரவும் பகலும் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். தேவலோக நதியான கங்கைக்கரை வழியாக வந்தபோது நடுநிசியாகிருந்தது. வானத்தின் மீது ஜொலித்த சந்திரனை நதி இழுத்துக்கொண்டு போக முயற்சிசெய்துகொண்டிருந்தது. நள்ளிரவானாலும் அன்று முழுக்க நடந்த களைப்பை நீக்க அனைவரும் ஸ்நானம் செய்யலாம் என்று முடிவெடுத்தார்கள்.
ஏகாந்தமான இடம். சந்திரனின் வெளிச்சத்தில் கரையோர மரங்களுடனும் நதியின் சலசலப்பிலும் ரமணீயமாக திகழ்ந்தது. அந்த நேரத்திலும் அங்கே யாரோ சில ஸ்திரீகளுடன் ஒருவன் ஜலக்கிரீடை செய்துகொண்டிருந்தான்.
பாண்டவர்கள் ஐவரும் கங்கா ஜலத்தில் கால் வைக்கும் போது கையில் வில்லை ஏந்திக்கொண்டு அவர்களின் முன்னே வந்தான்.
“நில்லுங்கள்! அந்தி சாய்ந்து இரவு துவங்கும் போது எண்பது விநாடிகள் போக மீதமிருக்கும் காலங்கள் யக்ஷகந்தர்வராக்ஷசர்களுக்கான காலம். அந்த நேரத்தில் நீங்கள் நதிகளிலும் நீர்நிலைகளிலும் இறங்கக்கூடாது. இது தெரியாதா? மீறி இறங்கினால் உங்களை அழித்துவிடுவோம்”
அர்ஜுனன் கொதித்தான். நடந்து வந்த களைப்பை நீக்கிக்கொள்ளலாம் என்றால் இது என்னடா இடையூறு என்று நொந்துகொண்டான்.
“நீ யார்?” என்று கர்ஜித்தான் அர்ஜுனன்.
“நான் அங்காரபர்ணன் எனும் கந்தர்வன். குபரேனுடைய ஸ்நேகிதன். இது அங்காரபர்ணம் என்னும் வனம். இந்த கங்கைக்கரையில் காமசுகங்களை அனுபவித்துக்கொண்டு நான் ரமித்திருக்கும் இடம். தேவர்களே இங்கு அணுக மாட்டார்கள். குபேரனின் கிரீடம் போன்ற என்னிடம் நீங்கள் எப்படி நெருங்குவீர்கள்?”
“துர்ப்புத்தியுள்ளவனே! நாங்கள் பூர்ண சக்தியுடையவர்கள். இந்த ஜலத்தின் மேல் யாருக்குப் பாத்தியதை இருக்கிறது? இமயமலையில் பொன் போன்ற கொடுமுடியில் புறப்பட்ட இந்த கங்கை வஸ்வோகஸாரா, நளினீ, பாவனீ, ஸீதா, சக்ஷூஸ், ஸிந்து, அளகந்தை என்று ஏழாகப் பிரிந்து கடைசியில் சமுத்திர ஜலத்தை அடைகிறது. கங்கை, யமுனை, ப்லக்ஷஜாதை, ஸரஸ்வதீ, ரதஸ்தை, ஸ்ரயு, கோமதி, கண்டகி இவற்றின் தீர்த்ததையும் மேற்சொன்ன ஏழு நதிகளின் தீர்த்தத்தையும் பருகுபவர்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள். “
அந்தக் கந்தர்வன் புஸ்புஸ்ஸென்று மூச்சு விட்டுக்கொண்டு பெரும் கோபத்துடன் அர்ஜுனன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். இதென்ன புது பிரச்சனை என்று குந்தி குழப்பமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். பீமன் எந்நேரமும் தாக்குவதற்கு தயாராக இருந்தான். நகுலசகதேவர்கள் யுதிஷ்டிரர் பின்னால் நின்றுகொண்டிருந்தார்கள்.
“கங்கைக்கு ஆகாயமே கரை. ஸ்வர்க்கலோகங்களிலும் பாய்ந்து தேவர்களின் அளகநந்தையென்ற கியாதியை அடைந்திருக்கிறது. இதே கங்கையே பிதிர்லோகத்தை அடைந்து தீவினை செய்தவர்கள் தாண்டக்கூடாத வைதரணீ நதியாக ஆகிறதென்று பகவான் ஸ்ரீவியாஸர் சொல்கிறார். அந்த தேவநதிக்கு எந்தக் காலத்திலும் யாராலும் தடையில்லை. உன் பேச்சைக் கேட்டு நாங்கள் ஏன் கங்காஜலத்தை தொடாமல் இருக்க வேண்டும்?”
அங்காரபர்ணன் உடனே வில்லை வளைத்தான். கூர்மையான அம்புகளை விடுவித்தான்.அவை ஸர்ப்பங்கள் போல அர்ஜுனனை நோக்கி வந்தது. தனஞ்சயன் இரவில் நடந்து வருவதற்காக் எரிகொள்ளியைப் பிடித்திருந்தான். உடனே அந்த எரிகொள்ளியை அம்புகளுக்கு எதிராக சுழற்றினான். மேலே உடுத்தியிருந்த தோல் உத்தரீயத்தையும் அம்புகளுக்கு எதிராகக் கேடயமாகப் பிடித்து திசைமாற்றினான். அஸ்திரங்களை விலக்கிய அர்ஜுனனைப் பார்த்து அங்காரபர்ணன் திகைத்தான்.
“கந்தர்வனே! இப்படியெல்லாம் நீ என்னை பயமுறுத்த முடியாது. கந்தவர்கள் மனிதர்களுக்கு மேம்பட்டவர்கள் என்று அறிவேன். நான் இப்போது திவ்யாஸ்திரத்தைப் பயன் படுத்துவேன். கபடயுத்தம் செய்ய மாட்டேன். இதோ பார். இது ஆக்நேயாஸ்திரம். தேவாசிரியர் ப்ருஹஸ்பதி பரத்வாஜமுனிவருக்குக் கொடுத்தார். பரத்வாஜரிடமிருந்து இது அக்னிவேஸ்யருக்குக் கிடைத்ததாம். அக்னிவேஸ்யர் என் குருநாதராகிய துரோணருக்கு அளித்தார். என் குருநாதர் எனக்கு பரிசளித்தார். இப்போது பார்..”
ஆக்நேயாஸ்திரத்தைப் பூட்டி வில்லை வளைத்து அர்ஜுனன் கோபத்துடன் எய்தான். கங்கைக்கரையில் ரதமேறி சண்டையிட்ட அந்த கந்தர்வன் அர்ஜுனன் எய்த அம்பால் அடிபட்டு கீழே சரிந்தான். பிரக்ஞை தப்பிப் போனான். அவனது பத்னி கும்பீனஸி ரதத்திலிருந்து கீழே இறங்கி யுதிஷ்டிரரிடம் சரணடைந்தாள்.
“நான் உங்களை சரணாகதி செய்கிறேன். விசித்திரமான ரதத்தை அடைந்த இவர் சித்ரரதன் என்ற பெயரோடு விளங்கினார். இப்போது ஆக்நேயாஸ்திரத்தால் அந்த ரதமும் எரிந்துவிட்டது. இவரை எனக்காப் பிழைப்பியுங்கள்.”
சரணாகதி அடைந்தவளிடம் கருணை கொண்டார் யுதிஷ்டிரர்.
”அர்ஜுனா! இவன் உன்னிடம் தோல்வியடைந்துவிட்டான். புகழையும் தொலைத்தான். பெண்களே கதியாக இருக்கிறான்.பரவாயில்லை.இவனை விட்டுவிடு” என்றார்.
“கந்தர்வா! என் அண்ணா அபயமளித்திருக்கிறார். உயிரைப் பெற்றுக்கொள். செல்.” என்றான். மயக்கம் தெளிந்து எழுந்தது போல எழுந்து உட்கார்ந்தான் சித்ரரதன்.

No comments:

Post a Comment