Friday, March 9, 2018

யாருக்கு யார் ஸ்நேகம்?


பரசுராமர் தானம் புரியும் இடத்திற்குச் சென்றார் துரோணர். பரசுராமரின் தனுர்வேதம் கீர்த்தி பெற்றது. அவரது திவ்யாஸ்திரங்களை ஒருவர் கற்றுக்கொண்டால் நிகரற்ற வில்லாளி ஆகிவிடலாம். ராஜநீதியிலும் சாஸ்திரங்களிலும் அவரை மிஞ்ச ஒருவர் கிடையாது. ஆகையால் இவையனைத்தையும் அவரிடம் கற்றுக்கொண்டு விடலாம் என்ற ஆசையுடன் துரோணர் விரைந்தார்.

பரசுராமர் மஹேந்திர பர்வதத்தில் இருந்தார். க்ஷத்ரிய குலத்தை வேரறுப்பேன் என்று விரதம் பூண்டவரின் கம்பீரமான தோற்றத்தைக் கண்ட துரோணர் அப்படியே காலில் விழுந்து நமஸ்காரம் செய்தார்.
“பிராமணோத்தமரே! பரத்வாஜரின் புத்திரன் நான். அயோநிஜன். துரோணன் என் பெயர். நான் உம்மிடம் சில பொருள் வேண்டி வந்திருக்கிறேன். ஆசீர்வதிக்க நமஸ்கரித்தேன்”
“என்னிடம் என்ன விரும்புகிறாய்? சொல்” கணீரென்று கேட்டார் பரசுராமர்.
“நான் பெரும் தனம் விரும்புகிறேன்”
அமைதியாகச் சிரித்தார் பரசுராமர்.
“இங்குள்ள பொன்னும் பொருளும் பிராமணர்களுக்கு ஏற்கனவே தானமாகக் கொடுக்கப்பட்டன. அதுபோலவே இந்தக் கடல் சூழ் பூமிதேவியை காசியபருக்கு அளித்துவிட்டேன். இப்போது எனது சரீரமும் அஸ்திர சஸ்திரங்களும் இருக்கின்றன. இவற்றில் எதை வேண்டுமானாலும் கேள் துரோணா! தருகிறேன்” என்றார்.
மீண்டும் ஒரு முறை நமஸ்கரித்து எழுந்து துரோணர் கேட்டார்.
“பார்க்கவரே! அஸ்திரங்கள் எல்லாம் வேண்டும். பிரயோகம் (விடுவது), ஸம்ஹாரம் (திருப்பி எடுத்துக்கொள்வது), ரகஸ்யம் (அதன் ஸ்வரூப ஞானம்) ஆகியவைகளைப் பூரணமாக வேண்டுகிறேன்”
“தந்தேன்” என்றார் பரசுராமர். அனைத்து அஸ்திர சஸ்திரங்களும் அதன் வித்தைகளும் துரோணரிடம் வந்து சேர்ந்தது. தனுர்வேதமும் புரச்சரண விரதத்தோடு (அஸ்திர சஸ்திரங்களுக்கு முன்னதாக அனுஷ்டிக்க வேண்டியது) உபதேசம் செய்தார். துரோணர் உள்ளம் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடியது. தன்னுடைய அணுக்கமான ஸ்நேகிதனாகிய துருபதனிடம் இதைப் பகிர்ந்துகொள்வதற்காக ஓடினார்.
**
துருபதன் அரண்மனை. சபையில் தங்க சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறான். மகிழ்ச்சி பொங்க உள்ளே ஓடிவந்தார் துரோணர்.
“ஸ்நேகிதனே!” என்று கையிரண்டையும் விரித்துக் கட்டிக்கொள்வதற்காக அரியணையிருக்கும் படியேற எத்தனித்தார்.
“நில்!” என்று இரைந்தான் துருபதன்.
ஸ்தம்பித்து நின்றார் துரோணர்.
“நீ யார்?” என்று கேட்டான்.
“நான் உனது நண்பன். மறந்துவிட்டாயா?”
“இவ்வுலகத்தில் ஸ்நேகம் அழியாமல் நிற்பதில்லை. தரித்திரன் தனவானுக்கும், மூர்க்கன் வித்வானுக்கும், பேடியானவன் சூரனுக்கும் என்னாளும் ஸ்நேகிதனாவதில்லை. இது உமக்குத் தெரியாதா? நீர் மூடனா?”
துரோணர் அவமானத்தால் துடித்தார். சபை துருபதனின் ஏச்சுபேச்சுகளை பார்த்துக்கொண்டிருந்தது. அவரால் பேசமுடியவில்லை. தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு நின்றார். துருபதன் மேலும் பேச ஆரம்பித்தான்.
“எந்த இருவருக்கும் ஐஸ்வர்யம் சமமாக இருக்குமோ, எந்த இருவருக்கும் கல்வி கேள்விகள் சமமாக இருக்குமோ.. அவ்விருவருக்கும்தான் ஸ்நேகமும் விவாகமும் நடக்கும்”
துருபதனுக்கு கோபத்தில் இரைத்தது. துரோணர் இன்னமும் தலையை தூக்கவில்லை. சபையோருக்கு துருபதனின் இந்தச் செயல் பிடிக்கவில்லை. முகம் சுண்ட அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.
“வலுவுள்ளவன் திராணியற்றவுடன் சேரமாட்டான். வேதம் ஓதாதவன் வேதம் ஓதினவுடன் பழகமுடியாது. ரதமுள்ளவன் ரதமில்லாதவனுக்கு ஸ்நேகனாகான். ராஜ்ஜியமில்லாதவன் எப்படி ஒரு ராஜாவுக்கு ஸ்நேகிதன் ஆக முடியும்?”
இந்தக் கடைசி கேள்வி சுருக்கென்று துரோணரின் நெஞ்சில் தைத்தது. தன்னுடன் இளமையில் சேர்ந்து குருகுலம் பயின்ற துருபதனின் அகம்பாவப் பேச்சில் மனமுடைந்தார். இனி தன்னுடைய அந்தஸ்து உயர்ந்தவுடன் மட்டுமே இவனை வந்து பார்க்க வேண்டும் என்று அவையிலிருந்து திரும்பி வெளியே நடக்க ஆரம்பித்தார்.
நேரே அஸ்தினாபுரம் வந்தார். கிருபரின் க்ருஹத்தில் மறைவாக வசிக்கத் தொடங்கினார். யாருக்கும் தெரியாமலே சிலகாலம் அங்கே இருந்தார்.
ஒரு நாள் வெளியே வந்த துரோணர் ஒரு தோட்டத்தில் ராஜகுமாரர்கள் போலிருந்த சிலர் பந்து விளையாண்டுகொண்டிருப்பதைப் பார்த்தார். அருகில் போய் அமர்ந்துகொண்டார். வேறெதுவும் பேசவில்லை. தர்மரும் அவரது தம்பிகளும் கூடவே துரியோதனனும் இன்னும் சில அவனது சகோதரர்களும் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்த பந்து கிணற்றில் விழுந்தது. பின்னாலேயே ஓடிய தர்மபுத்திரர் அதை எடுக்க முனைந்த போது அவரது மோதிரம் கழன்று பந்துடன் சேர்ந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது. தண்ணீர் அடியாழத்தில் இருந்தது பந்து மிதப்பது தெரிகிறது. எப்படி எடுப்பது? புரியாமல் கிணற்றைச் சுற்றி அனைவரும் அவர்களது தலைகள் அடியாழத்தில் கிடக்கும் நீரில் தெரிய நின்றுகொண்டார்கள்.
“பந்து வேண்டுமே! “ என்றான் துரியோதனன்.
“என்னுடைய மோதிரமும் வேண்டும்” என்றார் தர்மபுத்திரர்.
கிணறு மிக ஆழமாக இருந்தது. பந்தையும் மோதிரத்தையும் ஒருசேர எப்படி எடுப்பது என்று யோசனை செய்தார்கள். ஒன்றும் மார்க்கமில்லை. பக்கத்தில் கறுத்தும், நரைத்தும் வறுமையில் நரம்பு தெரிய அமர்ந்திருக்கும் ஒரு பிராமணரைக் கண்டார்கள்.
“பெரியவரே! எங்கள் பந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது. தர்மனின் மோதிரமும்... உம்மால் அதை வெளிக்கொணர முடியுமா?”
சிறுவர்கள் இப்படிக் கேட்டதும் துரோணர் உத்ஸாகமடைந்தார்.
“பரதகுலத்தில் பிறந்தவர்கள் பந்தை எடுக்கத் தெரியாமல் இருக்கிறீர்களே”” நரைத்த மீசை தாடியின் உள்ளிருந்து பற்கள் தெரிய சிரித்தார்.
“உம்மால் எடுக்க முடியுமா?” ஆச்சரியத்துடன் கேட்டார்கள்.
“இந்தப் பந்து மோதிரம் இரண்டையும் சீழ்கீர்க்குக்களினால் எடுத்துவிடுவேன். எனக்கு போஜனம் தருவீர்களா?”
வித்தை தெரிந்த துரோணர் போஜனம் கேட்டது அந்த ராஜ சிறுவர்களுக்கு என்னவோ போல் இருந்தது.
“கிருபருடைய அனுமதியின் பேரில் நீர் திவ்ய போஜனத்தை அடையலாம்” என்றார் கண்களில் இரக்கம் வழிய யுதிஷ்டிரர்.
கையில் எங்கிருந்தோ சில ஈர்க்குகளை பொறுக்கி எடுத்துவந்தார் துரோணர். கிணற்றுக்குள்ளிருந்த கண்களை எடுக்காமல் அனைவரும் சூழ்ந்து நின்றுகொண்டிருந்தனர்.
“நகருங்கள்” என்றார்.
இரண்டு மூன்று பேர் நகர்ந்து நின்று கொள்ள கிணற்றின் கட்டையில் ஏறி நின்றுகொண்டார். கையிலிருந்து ஈர்க்குகளை வாயருகில் கொண்டு சென்று கண்களை மூடி உதடுகளை அசைத்து சப்தம் வெளியேவராமல் ஜெபித்தார்.
“ராஜகுமாரர்களே! இந்த பிடி ஈர்க்குகளை அஸ்திர மந்திரத்தினால் மந்திரித்திருக்கிறேன். இவற்றின் சக்தியைப் பாருங்கள்”
ஒரு ஈர்க்கை உள்ளே செலுத்தி அதை பந்தின் மீது குத்தச் செய்தார். பின்னர் ஒரு ஈர்க்கை அந்தக் குத்தியின் ஈர்க்கினோடு சேர்த்தார். இப்படி வரிசையாக ஒவ்வொரு ஈர்க்குகளாக கோர்த்தார். கடைசியில் அப்படியே தூக்கியபோது பந்து வெளியே வந்துவிட்டது.
குழந்தைகள் கூட்டம் ”ஹோய்...” என்று ஆர்ப்பரித்தது. தர்மருக்கு இன்னும் மோதிரம் வரவில்லை.
“என்னுடைய மோதிரம்...” என்று துரோணரின் உத்தரீயத்தை இழுத்தார்.
துரோணர் உடனே தர்மபுத்திரர் கையிலிருந்து வில்லையும் ஒரு அம்பையும் வாங்கிக்கொண்டார். நாணேற்றி கண்களை மூடி ஏதோ மந்திரம் சொனார். பிறகு கிணற்றுக்குள் அதை எய்தார். அந்த அம்பு அப்படியே மோதிரத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்தது.
சுற்றி நின்ற ராஜகுமாரர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போயினர். தர்மருக்கு இவர் தீர்க்கபுருஷர் என்று விளங்கியிருக்கவேண்டும். உடனே அவருக்கு நமஸ்காரம் செய்தார். அனைவரும் பொத் பொத்தென்று தரையில் விழுந்து துரோணரை நமஸ்கரித்தார்கள்.
“நீங்கள் யார்? உங்களுக்கு நாங்கள் செய்யவேண்டிய கடமை என்ன? சொன்னால் தனயர்களாவோம்” என்றார் தர்மர்.
“என்னுடைய தோற்றத்தையும் இப்போது நான் செய்துகாட்டிய இந்த அஸ்திர வித்தைகளையும் பீஷ்மரிடம் சென்று சொல்லுங்கள். அவர் என்னை அறிந்துகொள்வார்” என்று நகர்ந்துவிட்டார்.
குடுகுடுவென்று அந்த ராஜகுமாரர்கள் அரண்மனைக்குள் ஓடி பீஷ்மரின் முன் மூச்சிரைக்க நின்றார்கள்.
“ஏனப்பா இப்படி ஓடிவருகிறீர்கள்? என்னாயிற்று”
தர்மர் மூச்சுவிடாமல் தோட்டத்தில் நடந்தவைகளைப் பற்றி பீஷ்மருக்குச் சொன்னார். இதைக் கேட்டுமுடித்தவுடன் பீஷ்மரின் கண்களில் ஒளி தோன்றியது. வந்தது யார் என்று புரிந்துகொண்டார்.
“அவர் இப்போது எங்கேயிருக்கிறார்?” என்று கேட்டார்.
அந்த குழந்தைகளுடன் வேகவேகமாக தோட்டத்திற்கு வந்து துரோணரைப் பார்த்து வந்தனம் செய்தார்.
“வரவேண்டும்..வரவேண்டும்.. துரோணரே.. இவர்களுக்கான அஸ்திரவித்தைகளை கிருபரை விட இன்னும் ஒரு படி மேலாக கற்பிக்க வேண்டும். உங்களை விட அதற்கு தகுதியான ஆச்சாரியார் இப்புவியில் எவருமில்லை.”
துரோணருக்கு ஆசனம் கொடுத்து மரியாதைகள் செய்தார் பீஷ்மர். பின்னர் அவர் அஸ்தினாபுரம் வருவதற்கான காரணத்தைக் கேட்டார்.
“பீஷ்ம பிதாமகரே! தனுர்வேதத்தை நான் அக்னிரேஷ்ய முனிவரின் குருகுலவாசத்தில் பயின்றேன். என்னுடன் பாஞ்சால தேசத்து மஹாபலசாலியான துருபதனும் கற்றுக்கொண்டான். நாங்கள் இருவரும் ஒன்றாக குருவிற்கு சிஷ்ருஷையில் ஈடுபட்டோம். அருகருகே படுத்து பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு அத்யயனம் செய்து தனுர்வித்தை கற்றுக்கொண்டு மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்தோம். அப்போது அந்த துருபதன் என்னிடம் அவனுக்கு ராஜ்ஜிய பட்டாபிஷேகம் ஆனதும் எனக்கும் அதில் பாதி ராஜ்ஜியத்தைத் தருகிறேன் என்று வாக்களித்தான்.”
பீஷ்மர் சுவாரஸ்யமாக துரோணரின் கதையைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
“குருகுல வாசம் முடிந்து நான் சரத்வாணின் புத்திரியான கிருபியைத் திருமணம் செய்துகொண்டேன். அவளுக்கும் எனக்கும் சூரியனுக்கு ஒப்பான அஸ்வத்தாமன் புத்திரனாகப் பிறந்தான். நான் தனுர்வேதம் பயின்றும் இன்ன பிற வேதாத்தியயனங்கள் செய்தும் வருமானத்திற்கு வழி இல்லாமல் இருந்தேன். பக்கத்தில் இருக்கும் தனவான்களின் பிள்ளைகள் பசும் பால் குடிக்கும் போது அஸ்வத்தாமன் தனக்கும் பால் வேண்டும் என்பான். என்ன கொடுத்தேன் தெரியுமா?”
சிறிது நிறுத்தினார் துரோணர். முகத்தில் சோகம் அப்பியிருந்தது. பீஷ்மரும் கண்களில் சோகத்தைத் தாங்கியிருந்தார்.
“அரிசி மாவைக் கரைத்த ஜலத்தை பால் என்று அவனுக்குக் கொடுப்பேன். அவன் அதை விரும்பிக் குடிப்பான். ஸ்நேகிதர்களிடம் நானும் பால் குடித்தேன் என்று பெருமையாகக் கூறிக்கொள்வான்.” என்றார் துக்கம் தொண்டையை அடைக்க.
பீஷ்மருக்கே கண்களில் நீர் கட்டிவிட்டது. முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார். துரோணர் தொடர்ந்தார்.
“இனிமேலும் வாழ வழியில்லை என்று என் பத்னியுடன் புத்ரனுடனும் பாஞ்சால தேசம் சென்று துருபதனைச் சந்தித்தேன். ஆனால் அவன் பழைய ஸ்நேகிதத்தை மறந்து என்னை அவமானப்படுத்தினான். சமூக ஏற்றத்தாழ்வுகளில் இருக்கும் இருவர் ஸ்நேகிதம் வைத்துக்கொள்ளவே முடியாது என்று பேசினான். ஒரு ராஜாவுக்கு தரித்திரனுக்கும் நட்பு மலராது என்று அகம்பாவத்தோடு பேசினான்.”
அவனுக்கு பழைய குருகுலவாசத்துக் காலங்களை நினைவுபடுத்தினேன். அவன் வேண்டுமென்றே அதையெல்லாம் மறந்ததுபோல நடித்தான்.
“ஓய் பிராமணரே! வேண்டுமானால் உமக்கு இன்று ஒரு ராத்திரி மட்டும் போஜனம் அளிக்கிறேன். சாப்பிட்டுவிட்டு காலையில் போம்” என்றான். என் உள்ளம் எரிந்து சாம்பலாகப் போயிற்று. இன்று உங்களைக் கண்டவுடன் தான் அது மொட்டுவிட்டு மலர ஆரம்பிக்கிறது. உமக்கு என்ன வேண்டும்?”
பீஷ்மர் அந்த பெரிய சிம்மாசனத்திலிருந்து எழுந்திருந்தார். அந்த உயரமான மனிதர் எழுந்தவுடன் அவையில் அமர்ந்திருந்தோர் அனைவரும் நிமிர்ந்து பார்த்தார்கள். அவர் கம்பீரமான குரலில் பின்வருமாறு அறிவித்தார்.
“துரோணரே! எமது கௌரவ குலத்திற்கு அஸ்திர வித்தையைத் தாருங்கள். நாங்கள் அளிக்கும் க்ருஹத்தில் இருந்து சகல சௌக்கியங்களையும் அனுபவியுங்கள். கௌரவர்களுக்கு இருக்கும் தனம் ராஜ்ஜியம் தேசங்கள் எல்லாவற்றிர்க்கும் நீரே முதன்மையான ராஜா! நாங்கள் எல்லோரும் உங்களுக்கு ஏவல் செய்பவர்கள்தான். பிரம்மரிஷியே நீர் வந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்”
துரோணர் உச்சி குளிர்ந்தார். ஒரு நாட்டைக் கட்டிக்காப்பதற்கு தேவையான அஸ்திர திறமைகளை கற்றுக்கொடுக்க வந்த ஆச்சாரியாரின் முக்கியத்தை உணர்த்தும்விதமாக இருந்தது பீஷ்மரின் அந்த அறிவிப்பு. தான் கற்றுக்கொண்ட தனுர்வேதத்தையும் இன்னபிற போர் தந்திரங்களையும் முழுமனதோடு ஒட்டுமொத்தமாக பாண்டவர்களுக்கும் துரியோதனாதிகளுக்கும் கற்றுக்கொடுக்க துரோணர் மனதுக்குள் சங்கல்பம் எடுத்துக்கொண்டார்.

No comments:

Post a Comment