Sunday, March 11, 2018

சாலகடங்கடி: அசுரத்தனமான அன்புடையாள்






ஹிடிம்பனை வதம் செய்த பிறகு அருகில் இருக்கும் நகரத்திற்குச் செல்லலாம் என்று சகோதரர்களை அழைத்துக்கொண்டு குந்தியின் கையைப் பற்றிக்கொண்டு நகரும் போது ஹிடிம்பனின் சகோதரி ஹிடிம்பையும் பின் தொடர்ந்தாள்.
பீமன் அவளை எரித்துவிடுவது போலப் பார்த்தான்.
ஹிடிம்பை தர்மபுத்திரரையும் குந்தியையும் வணங்கினாள். குந்தியின் அருகில் நின்ற பீமஸேனனைப் பார்த்தாள்.
“நான் உன்னை பார்த்த உடனேயே என் மனதைப் பறிகொடுத்துவிட்டேன். ராக்ஷசனாகிய எனது சகோதரனை நீ பிளந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். உனக்கு பணிவிடைகள் செய்துகொண்டு உன்னோடு சரீர சம்பந்தம் வைத்துக்கொள்ள விரும்புகிறேன்”
ஹிடிம்பை பேசிய கடைசி வரியில் பீமன் அதிர்ச்சியடைந்தான்.
“இப்படிக் கேட்பதற்கு உனக்கு வெட்கமாகயில்லை. ராக்ஷசர்கள் பகையை மறக்கமாட்டார்கள். வஞ்சகமாக நாடகமாடி பின்னர் கொல்லுவார்கள். உன் சகோதரன் போன இடத்திற்கே உன்னையும் அனுப்பி வைக்கிறேன்” என்று முஷ்டியை மடக்கி, சினம் கொண்டு அவளையும் தாக்குவதற்கு முன்னேறினான். யுதிஷ்டிரர் இருவருக்கும் குறுக்கே புகுந்து தடுத்தார். குந்தி பீமனின் கையை பிடித்து பின்னுக்கு இழுத்தாள். ஹிடிம்பை சலனமேயில்லாமல் அங்கேயே நின்றாள்.
”பீமா! பெண்வதை செய்யாதே! அது அதர்மம். இடர் தரும் அந்த ராக்ஷசனைக் கொன்றுவிட்டாய். இவள் அவனது சகோதரிதானே. இவளை ஏன் நீ கொல்லவேண்டும்?” என்றார் யுதிஷ்டிரர்.
ஹிடிம்பை பீமஸேனன் பக்கத்தில் தனக்கு ஆதரவு தெரிவிக்க ஆள் இருப்பதில் கொஞ்சம் தைரியமடைந்தாள். குந்தியைப் பார்த்து வந்தனம் செய்தாள்.
“தாயே! மன்மதனால் உண்டாகும் துன்பம் பற்றி ஒரு பெண்ணாக நீயும் அறிவாய். என்னுடைய ஸ்வதர்மத்தை விட்டு உற்றார் உறவினர்களை உதறித்தள்ளி புருஷ சிம்மமான உன்னுடைய இந்தப் புத்திரனை கணவனாக வரித்திருக்கிறேன். நீங்கள்தான் என்னை இவருடன் சேர்த்துவைக்க வேண்டும்."
குந்திக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. யுதிஷ்டிரர் பீமஸேனனையும் ஹிடிம்பையையும் மாறி மாறி பார்த்தவண்ணம் நின்றிருந்தார்.
“நீ ராக்ஷச ஜென்மம் எடுத்திருக்கிறாய். க்ஷத்ரியகுலத்துக்கு....” என்று இழுத்தாள் குந்தி.
“தாயே! நான் ராக்ஷசி அல்ல. இரவு நேரங்களில் நரமாமிசத்துக்கு அலைபவளும் அல்ல. நான் சாலகடங்கடி என்னும் ஈஸ்வரி. உன் புத்திரனுடன் சேர்ந்து உங்கள் அனைவருக்கும் பணிவிடைகள் செய்வேன். ஆபத்காலங்களில் உங்கள் அனைவரையும் என் முதுகில் ஏற்றிக்கொண்டு செல்வேன்.”
குந்தி இப்போது யோசித்தாள். மரத்தினடியில் அனைவரும் சூழ்ந்திருக்க சாலகடங்கடி எனும் ஹிடிம்பை பீமஸேனனை மணக்கும் பொருட்டு தொடர்ந்தாள்.
“என்னை நிராகரித்துவிடாதீர்கள். என்னை ஒதுக்கிவிட்டால் பிராணத்தியாகம் செய்துவிடுவேன்.”
இந்த இடத்தில் குந்திக்கு அவள் மேல் இரக்கம் உண்டாயிற்று. ஹிடிம்பை இன்னமும் குந்தியின் மனம் கனியவில்லை என்று பீமஸேனன் பக்கம் பார்த்தாள். பெரும் சுவர் போல பீமன் நின்றிருந்தான். அர்ஜுனன் காண்டீபத்தைத் தோளில் சாய்த்து மரத்தின் உச்சாணிக்கிளையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
ஹிடிம்பை பீமனை அடைய அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தாள். குந்தியின் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.
“தாயே! எனக்கு ஞானதிருஷ்டி உண்டு” என்று சொல்லி நிறுத்தினாள். பாண்டவர்களும் குந்தியும் அதை மெய்யென்று நம்பவில்லை. இதழரோத்தில் ஒரு புன்னகை உதிர்த்தாள் குந்தி.
“இனிமேல் எங்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை உனது ஞானதிருஷ்டியில் பார்த்துச் சொல்வாயா?”
“அம்மா! இன்னும் கொஞ்ச தூரத்தில் ஒரு தடாகம் இருக்கிறது. அங்கே சென்று ஸ்நானம் செய்வீர்கள். அதன் அருகில் இருக்கும் மரத்தடியில் நித்திரை செய்வீர்கள். நாளைக் காலை எழுந்தவுடன் வியாஸபகவான் உங்களைச் சந்திக்க அங்கே வரப்போகிறார். நீங்கள் அனைத்து தீங்கிலிருந்தும் விடுதலைப் பெறப்போகிறீர்கள்”
குந்திக்கு ஏகப்பட்ட சந்தோஷம். ஹிடிம்பையின் இந்த வாக்கினில் சொக்கிப்போனாள். பீமன் அவளை அடையலாம் என்ற எண்ணம் அவளினுள் உதிக்க ஆரம்பித்தது.
“வியாஸருக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்?” புருவம் தூக்கி குந்தி கேட்டதும் அவளோடு சேர்ந்து பாண்டவர்கள் அனைவரும் "அதெப்படி” என்று ஆச்சரியமாகக் கேட்டனர்.
“துரியோதனனால் நீங்கள் வாரணாவதத்துக்கு விரட்டப்பட்டதும் அங்கே அரக்கு மாளிகை தீப்பிடித்து எரிந்தவுடன் இங்கே வந்தடைந்ததும் அவர் தன்னுடைய ஞானக்கண்ணினால் அறிந்துகொண்டார்.”
சகதேவன் பக்கத்தில் நின்ற நகுலனிடம் “வியாஸருக்கு ஞானக்கண்ணில் பட்டது இவளுக்கும் தெரிகிறதே!” என்று சொல்லி ஆச்சரியப்பட்டான்.
பீமன் இப்போது ஹிடிம்பையை ராக்ஷசி என்ற கோணத்தை விட்டு பார்த்தான். குந்திக்கு எதிர்காலம் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் மிகுதியாயிற்று.
“வியாஸர் வந்து என்ன சொல்லப்போகிறார்?”
ஹிடிம்பை மெல்லச் சிரித்தாள்.
“சாலிஹோத்ர ரிஷியின் ஆஸ்ரமத்தில் நீங்கள் தங்குவீர்கள். அந்த எழில் மிகுந்த ஆஸ்ரமம் உங்களூடைய மனச் சோர்வையும் துன்பத்தையும் உடனே தீர்க்கும்”
“ஆஹா! அப்படியென்ன அந்த ஆஸ்ரமத்தின் எழில் அவ்வளவு விசேஷம்” அர்ஜுனன் பேசினான்.
“அந்த ஆஸ்ரமத்தின் வாசலில் ஒரு புண்ணிய விருக்ஷம் இருக்கிறது. அது வெயில் மழை காலத்திலிருந்து காப்பாற்றும். அந்த தடாகத்தின் ஜலத்தை அருந்தியவுடன் பசிதாகங்கள் மறைந்துவிடும். அந்த தடாகத்தையும் மரத்தையும் சாலிஹோத்ர ரிஷி தனது தவ வலிமையால் உண்டாக்கினார். அன்னம், நாரை, ஹம்ஸ பக்ஷிகள் ஆண் பெண் அன்றில்கள் என்று பறவைக்கூட்டமே அங்கு வசிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் அவை கந்தர்வர்களின் குரலைப் போல இனிய கீதங்களைப் பாடுகின்றன”
இதமான இந்த செய்திகளைச் சொன்னவுடன் ஹிடிம்பையின் மேல் பாசமும் பற்றும் அதிகரித்தன.
“யுதிஷ்டிரா! நீ எல்லா தர்மங்களும் தெரிந்தவன். இவள் ராக்ஷசி இல்லை. புத்ரோத்பத்தியின் பலனாக இவள் பீமனை அடையலாம் என்று நினைக்கிறேன். நீ அங்கீகரித்தால்....” என்று இழுத்தாள் குந்தி.
“ஹிடிம்பையே! நீ பீமனை அடைவதில் சம்மதம். ஆனால் ஒரு நிபந்தனை”
“என்ன?”
“பகல் பொழுது முழுவதும் நீயும் பீமனும் தனித்திருங்கள். எங்கு வேண்டுமானாலும் சுற்றுங்கள். ஆனால் சாயங்கால வேளையில் பீமனை திரும்ப இங்கே கொண்டு வந்து விட்டு விடு. இந்த நிபந்தனைக்கு உட்பட்டு நீங்கள் தினமும் ரமித்திருக்கலாம். ஆட்சேபனையில்லை”
பீமஸேனனை இவ்வாறு அடைந்ததில் பரமதிருப்தி அடைந்தாள் ஹிடிம்பை. பின்னர் அனைவரும் சாலிஹோத்ர ரிஷியின் ஆஸ்ரமத்திற்கு நடக்க ஆரம்பித்தார்கள். குந்தியை தனது இடுப்பில் ஏற்றிக்கொண்டாள். பீமனும் அர்ஜுனனும் அவளின் இருபுறத்திலும் வந்தார்கள். பீமன் புருஷசிம்மமாக முன்னே சென்றுகொண்டிருந்தான். திரும்பிப் பார்த்தால் நகுலசகதேவர்கள் தொடர்ந்துகொண்டிருந்தார்கள்.
சிறிது தூரத்தில் பறவையொலி கேட்டது. சாலிஹோத்ர ஸரஸை நெருங்குகிறோம் என்று தெரிந்தது. அந்த இடமே ரமணீயமாக இருந்தது. பறவைகள் தடாகத்தில் நீந்திக்கொண்டிருந்தன. சில பட்சிகள் கரையிலிருந்து பறந்தன. சுற்றிலும் எழில் சூழ் பச்சை. மரங்களும் புற்களும் செடிகளும் எங்கும் பசுமையைக் காட்டியது. துரியோதனனால் துரத்தப்பட்டு காயப்பட்ட மனதிற்கு இதமான ஒரு இடமாக இருந்தது.
அந்த ஸரஸின் அருகில் இருந்த மரத்தடிக்குச் சென்றாள். அங்கிருந்த பறித்த இலைகளை வைத்து பாண்டவர்களுக்கு இருப்பிடம் அமைத்தாள். தனக்கும் குந்திக்கும் தனியாக வசிப்பிடம் அமைத்துக்கொண்டாள்.
பாண்டவர்களுக்கு பசி தாகமாக இருந்தது. அந்த தடாகத்தில் போய் ஸ்நானம் செய்தார்கள். சந்தியாவந்தனம் செய்த பின்னர் தாகத்திற்காக ஜலத்தை மட்டும் இருகைகளாலும் அள்ளிக் குடித்தார்கள். சாலிஹோத்திர ரிஷி பாண்டவர்களை பசியைத் தெரிந்துகொண்டு விசேஷ அன்னபாணங்களை உள்ளுக்குள் உணர்ந்தார்.
பின்னர் குந்தியும் மற்ற்வர்களின் அந்த மரத்தினடியில் சயனித்துக்கொண்டர்கள். மரங்களின் கிளைக்கு நடுவே விண்ணில் நட்சத்திரங்கள் மின்னின. அரக்குமாளிகை சம்பவங்களை நினைத்துப்பார்த்து விதுரரின் உதவியையும் துரியோதனனின் தீய எண்ணத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
குந்தி மலையென சரிந்திருந்த பீமனிடம்
“வ்ருகோதரா! நான் சொல்வதை மறுக்காமல் செய்வாயா?” என்று தோளைத் தொட்டாள்.
“உத்தரவு அம்மா” என்றான் பீமன்.
“நீ இவளை கல்யாணம் செய்துகொள். இந்த இடம் பயமில்லாமல் இருக்கிறது. அந்நியர்கள் நுழைவதும் சிரமம். இவளுடன் சேர்ந்து புத்ரோத்பத்தியில் ஈடுபடு. அந்த பையன் நமக்கு உபயோகமாக இருப்பான். யுதிஷ்டிரனுக்கும் இதுதான் இஷ்டம்” என்றாள்.
“உன் வாக்கை வேதவிதியாகக் கொள்கிறேன்” என்று குந்தியிடம் தலை தாழ்த்தியவன் ஹிடிம்பையைப் பார்த்து...
“உனக்கு எவ்வளவு காலத்தில் புத்ரோத்பத்தி ஏற்படுமோ அவ்வளவு காலம் உன்னுடன் இருப்பேன். அதற்குமேல் பிரிந்துவிட வேண்டும்.” என்றான் கண்டிப்புடன்.
“அப்படியே ஆகட்டும்” என்று குதூகலத்துடன் சொன்னள் ஹிடிம்பை. பின்னர் தனது இல்லத்திற்குச் என்று ராஜாக்கள் சாப்பிடும் உணவுகளை கொண்டு வந்தாள். பின்னர் பீமஸேனனை தூக்கிக்கொண்டு எல்லா இடங்களுக்கும் பறந்தாள். எல்லாக் காலங்களிலும் காய்த்த மரங்களையுடைய மானஸஸரோவரத்தின் காடுகளிலும் திரிந்தாள். நீலோத்பலங்கள் அடர்ந்த அழகான தடாகங்களுக்கு அழைத்துச் சென்றாள். யாருமே நுழைய முடியாத காடுகளுக்குள் தூக்கிச் சென்று அவனுடன் ரமித்திருந்தாள்.
பகல் பொழுது முழுவதும் அவனுடன் உல்லாசமாக இருந்துவிட்டு மாலையும் இரவும் சந்திக்கும் பொழுதில் சாலிஹோத்ர மஹரிஷியின் ஆஸ்ரம வாசலில் கொண்டு வந்து விடுவாள். பின்னர் குந்தியுடன் பொழுதை போக்குவாள் ஹிடிம்பை. அவளுக்கு கால் பிடித்துவிட்டு வாய்க்கு தாம்பூலம் தருவாள்.
அந்த இரவு விடிந்தது. தடாகம் சூரிய ஒளியினால் தகதகத்தது. வாசலில் அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் போது வியாஸர் நடந்து வந்தார். அவரை அனைவரும் நமஸ்கரித்தார்கள். கைகூப்பித் தொழுதார்கள்.
“பரதஸ்ரேஷ்டர்களே! திருதராஷ்டிரனின் புத்திரர்கள் உங்களை நாட்டை விட்டு விரட்டி செய்த தீமைகளை நான் அறிந்துகொண்டேன். நீங்கள் கவலைப்படாதீர்கள். பூர்வஜென்மத்தில் நண்பர்களைப் பிரித்த பாவத்தைச் செய்திருக்கிறீர்கள். அதனால்தான் இது போல கஷ்டங்களை அனுபவிக்கிறீர்கள். இந்த தீவினைப் பயன் முடிந்தபிறகு ராஜ்ஜியம் பெற்று நலமுடன் வாழ்வீர்கள். கவலையை விடுங்கள்”
வியாஸரின் வரவால் அனைவருக்கும் ஒரு புது தெம்பு வந்தது. \
“நீங்கள் அனைவரும் ஆறு மாதம் வரையிலாவது மறைவாக இங்கேயே வாசம் செய்யுங்கள். மறுபடியும் என்னுடைய வரவை நீங்கள் எதிர்பார்த்து காத்திருங்கள்.”
ராணியான தனக்கு இப்படியொரு கஷ்டம் வந்ததேயென்று குந்தி குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
“மருமகளே! அழாதே.. அழாதே.. இந்த யுதிஷ்டிரன் பூமியிலுள்ள அரசரக்ளையெல்லாம் அடக்கி ஆளப்போகிறான். ராஜஸூயம் அஸ்வமேதம் போன்ற யாகங்கள் செய்வார்கள். இதோ பக்கத்தில் நிற்கும் உன் மருமகள் தாமரை இதழ் போன்ற கண்களையுடையவள் என்பதால் கமலபாலிகை என்ற பெயருள்ளவள். பீமன் மூலமாக இவள் பெறப்போகும் புத்திரன் கஷ்டகாலங்களில் உங்களை கரையேற்றுவான். நீங்கள் நான் வரும்வரை இங்கேயே காத்திருங்கள். ஜெயம் உண்டாகட்டும்”
இவ்வாறு ஆசீர்வதித்து வியாஸபகவான் அவர்களை விட்டு நடந்து சென்றார்.
**
பாண்டவர்கள் இப்போது துக்கம் நீங்கி அந்த ஆலமரத்தின் அடியில் ஆறு மாதங்கள் நிம்மதியாக காலம் கழித்தார்கள். கமலபாலிகை அரிய பல ஆபரணங்களும் ஆடைகளையும் அணிந்துகொண்டு பீமஸேனனோடு சுகமாக காலம் கழித்தாள். காடெங்கும் காதல் காற்று வீசியது. புத்ரோத்பத்தி அடையும் வரையில் என்னுடன் இருக்கலாம் என்று பீமன் சொன்னதால் சல்லாபத்தோடு திரிந்தாள்.
ஏழு மாதங்கள் நிறைவடைந்த காலத்தில் ஒரு புத்திரனைப் பெற்றாள். பயங்கர நிறத்தோடு விகாரமான பற்களும் கோரமான முகமும் பெரிய வில்லாளியும் மஹாபராக்கிரமசாலியும் பெருங் கழுத்துமாக பிறந்தான். மனுஷ்யனுக்குப் பிறந்தாலும் மனுஷ்யன் போலில்லாமல் இருந்தான். அதிக சக்தி படைத்து பலசாலியாக இருந்தான். ராக்ஷசப் பெண்கள் கர்ப்பம் தரித்தவுடன் பிரசவித்துவிடுவார்கள் என்பதால் உடனே அவன் பிறந்தான்.
அவனுடைய தலை மயிர் தலைமுழுவதும் விரிந்திருந்தது. தாய் தகப்பன்களை நமஸ்கரித்து எழுந்தான். அவனுடைய கடம் என்று சொல்லப்படும் தலை நெறித்த மயிருள்ளதாக இருப்பதால் கடோத்கசன் என்று பெயரிட்டார்கள்.
குந்தியையும் பாண்டவர்களையும் நமஸ்கரித்தான்.
“நான் உங்களுக்கு என்ன சகாயம் செய்யவேண்டும்?” என்று கை கூப்பினான்.
“பீமஸேனனின் புத்திரனான நீ கௌரவ வம்சத்தில் பிறந்திருக்கிறாய். இவர்கள் ஐவர்களுக்கும் நீயே மூத்த குமாரன்.”
திரும்பவும் அவன் எல்லோருக்கும் நமஸ்கரித்தான்.
“காரியம் வரும் போது நான் உங்களிடம் வந்து சேருவேன்” என்று ஹிடிம்பையுடன் கிளம்பினான் கடோத்கசன். ஹிடிம்பையின் கண்களில் கண்ணீர் கோர்த்தது. புறங்கையால் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டாள். பீமன் அவளை நெருங்கினான்.
“கமலபாலிகையே! உன்னுடன் சகவாசம் முடிந்தது. மறுபடியும் நான் ராஜ்ஜியத்திலிருக்கும் போது நாம் சந்திப்போம்”
“நாதரே! பிரபுவே! எப்போது ரகஸியமாக என்னை சந்திக்க விரும்பினாலும் நீர் நினைத்தால் நான் அங்கு வருவேன்”” என்று கண்ணீர் மல்க சொன்னாள்.
கடோத்கசனும் ஹிடிம்பையும் சென்ற பிறகு வெகுநேரம் அந்த தடாகத்தின் கரையில் சோகமாக அமர்ந்திருந்த பீமஸேனன் தன் மனதை தேற்றிக்கொண்டு ஹிடிம்பை நிர்மாணம் செய்துகொடுத்த குடிலுக்குள் அவள் நினைவாக உறங்கினான்.
**
சாலிஹோத்ர ரிஷியிடம் மரவுரி வாங்கித் தரித்துக்கொண்டு சிறிதுகாலம் பிராமணர்கள் போல பாண்டவர்கள் வசித்தார்கள். வேதமும் வேதாங்கங்களையும் அத்யயனம் செய்தார்கள். ராஜநீதி சாஸ்திரம் மற்றும் தர்க்கசாஸ்திரம் ஆகியவற்றை அவரிடமிருந்து கற்றுத் தேர்ந்தார்கள். ஒரு வனத்தினுள் சென்று மறுவனம் அடைந்து வழியில் வேட்டையாடி சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.
வனத்தில் ஒரு நாள் வியாஸரைக் கண்டார்கள்.
“கடோத்கசன் பிறந்ததை தெரிந்துகொண்டேன். இங்கிருந்து பக்கத்தில் இருக்கும் ஏகசக்ர நகரத்திற்கு செல்லலாம். அங்கே சிலகாலம் தங்கியிருங்கள். பிறகு பார்க்கலாம்”
குந்தி துக்கத்தில் தளர்ந்திருந்தாள். அவர்கள் அனைவரும் ஏகசக்ர நகரத்திற்கு நடந்துசெல்லும் போது வியாஸர் சில நீதிகள் சொன்னார்.
:”யாரும் பாபம் மட்டுமே செய்வதில்லை. புண்ணியமும் எப்போதும் செய்வதில்லை. புண்ணியம் பாபம் இரண்டையும் செய்யாதவன் இவ்வுலகில்லை. புண்ணிய பாபங்களின் பலனை எப்போதும் அடைந்தே தீரவேண்டும். பாபத்தின் பயனாக உங்களுக்குப் பெருந்துயரம் நேர்ந்தது.”
ஏகசக்ர நகரத்தினுள் பிரவேசித்தார்கள்.
ஒரு பிராமணனின் வீட்டில் பாண்டவர்களையும் குந்தியையும் குடிவைத்தார் வியாஸர்.
“மீண்டும் உங்களைப் பிறகு சந்திக்கிறேன்” என்று விடைபெற்றார்.
[ஹிடிம்பவதபர்வம் முடிந்தது]

No comments:

Post a Comment