Sunday, March 11, 2018

துரியோதனனின் துர்புத்தி



அஸ்தினாபுரத்தின் அரசவையில் கர்ணன், சகுனி, துரியோதனாதிகள் ஆகியோரும் இன்னும் சில ராஜாங்க சேவையில் உள்ளவர்களும் அமர்ந்திருந்தார்கள். ஸ்வயம்வரத்தில் தோற்றது ஆறாத ரணமாக அவர்கள் நெஞ்சை அறுத்துக்கொண்டிருந்தது. ஒற்றர் தலைவன் உள்ளே வந்தான். தலை குனிந்து வந்தனம் செய்தான்.
”ப்ரபோ! பாஞ்சால தேசத்தில் திரௌபதி பாண்டவர்களை தன் கணவர்களாக அடைந்தாள். வில்லால் லக்ஷியத்தை அறுத்தவன் அர்ஜுனன். மரத்தைப் பிடிங்கி அரசர்களைத் தாக்கி மத்ர ராஜாவாகிய சல்லியனைத் தூக்கிப் போட்டு மிதித்தவன் பீமன். துரியோதன மஹாராஜாவின் வில்லை அறுத்து அவரை துரத்தி அடித்தவன் தர்மராஜன். துரியோதனருடைய தம்பிகளுடன் யுத்தம் புரிந்தவர்கள் நகுல சகதேவர்கள்.”
பாண்டவர்கள்தான் பிராம்மண வேஷம் தரித்து அடக்கமாக அந்த ஸ்வயம்வர மண்டபத்தில் அமர்ந்திருந்து எல்லா வேலைகளையும் முடித்தனர் என்பதைக் கேள்விப்பட்டவுடன் சகுனி, துச்சாஸனன், துரியோதனன், கர்ணன் ஆகியோர் உள்ளம் குமுறினார்கள். தர்மம், நல்லொழுக்கம் மற்றும் தாயாரின் விருப்பப்படி நடந்துகொள்ளுதல் போன்ற குணங்கள் நிரம்பிய பாண்டவர்களை ஊராரும் மற்ற அரசர்களும் பாராட்டியதுடன் துரியோதனாதிகளையும் திருதராஷ்டிரனையும் இத்தனையையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த பீஷ்மரையும் இகழ்ந்தார்கள்.
திருதராஷ்டிர புத்திரர்களும் சகுனியும் கர்ணனும் இப்போது மந்திராலோசனையில் ஈடுபட்டார்கள்.
தந்திரத்திலும் துர்புத்தியிலும் முதலில் நிற்கும் சகுனி ஆரம்பித்தான்.
“சத்ருக்களை பலவகைகளில் நாம் அடக்கலாம். ஒரு வகை சத்ருக்களின் பலத்தைக் குறைக்கும் வேலைகளில் ஈடுபடவேண்டும். சில சத்ருக்களைப் பிடித்துக் கொண்டு வந்து சித்ரவதை செய்தால் வழிக்கு வந்துவிடுவார்கள். ஆனால், பாண்டவர்களை மட்டும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும். அதுதான் ஒரே சரியான உபாயம்”
துரியோதனன் மாமன் சகுனிய ஆதரிப்பது போல பார்த்தான். துரியோதனன் எவ்வழியோ அவனது தம்பிமார்கள் அவ்வழியே.
“துரியோதனா! நாம் பாண்டவர்களைப் பிடிப்பதற்கு இதுதான் சரியான சமயம். இதுதான் சிறந்த இடம் கூட. அந்தத் துருபதன் பராக்கிரமும் சைனியமும் குறைச்சலாக இருக்கிறவன். சேதி தேசத்தரசனான சிசுபாலன் துருபதனின் நண்பன். அந்த யாதவர்கள் பாண்டவர்கள் ஜீவித்து இருப்பதை அறியாதவர்கள். இப்போதே பாண்டவர்களை வதம் செய்துவிட வேண்டும். அரக்கு மாளிகையின் தீநாக்குகளில் இருந்து தப்பித்த அவர்களை இம்முறை விடக்கூடாது. உடனே பாஞ்சாலம் நோக்கிப் படையெடுப்போம். காலம் கனிந்திருக்கிறது. இது என்னுடைய அபிப்ராயம்”
அப்போது ஸோமதத்தனின் புத்திரன் ஸௌமதத்தி எழுந்து அவையோர் அதிசயிக்கும்படி சில சிலாக்கியமான வார்த்தைகள் பேசினான்.
“ராஜ்யாங்கங்கள் ஏழு. அரசன், அமைச்சன், மித்ரன், பொக்கிஷம், தேசம், துர்க்கம் (அரண்), படை. இவைகளை தன் பக்கத்திலும் எதிராள் பக்கத்திலும் இடத்தையும் காலத்தையும் பரிசோதித்து யுத்தத்தில் இறங்க வேண்டும். சத்ருவானவன் காமம் மற்றும் சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடும்போது அவனை எதிர்க்க வேண்டும். ஆனால் பாண்டவர்கள் நற்செய்கைகளினால் ஜனங்களுக்குப் பிரியமானவர்களாக இருக்கிறார்கள். அர்ஜுனன் தனது வடிவத்தினாலேயே அனைவரின் கண்களையும் மனதையும் கவர்கிறான். யுதிஷ்டிரர் காலமறிந்து நடக்கிறார். பாண்டவர்களுக்காக கிருஷ்ணர் இருக்கிறார். இந்திராதி தேவர்களால் கூட அவர்களை ஜெயிக்கமுடியாது. ”
அவை முழுவதும் அவன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது. ஏற்கனவே ஸ்வயம்வரத்தில் தோற்ற துரியோதனனின் முகம் சிவந்து கொதிப்படைந்திருந்தான். கண்களில் நெருப்பு பறந்தது. ஸௌமதத்தி தொடர்ந்தான்.
“நான் சொல்வது உங்களில் எவருக்கும் பிடிக்காமலிருக்கலாம். இருந்தாலும் உங்கள் நன்மைக்காக மேலும் பேசுகிறேன். உயரமான கோபுரங்களினாலும் அகழிகளாலும் மதில்களாலும் இந்த நகரம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. யந்திரங்களும் ஆயுதங்களும் மருந்துகளும் நிரம்பிய கோட்டை அது. மதில்சிகரங்களில் சதக்னிகள் (பீரங்கிகள்) தயார் நிலையில் இருக்கின்றன. கற்கட்டும் மதிலும் பிரகாரங்களும் பின்னர் மதில்களும் அவர்களுக்கு தற்காப்பாக இருக்கின்றன. ஜனங்களுக்கு மஹாத்மாவான துருபதனிடத்தில் அன்பு நிரம்பி வழிகிறது. பாண்டவர்களுடன் ஸ்நேகிதம் ஏற்படுத்திக்கொள்வோம். அதுதான் நல்லது”
கர்ணன் எழுந்திருந்தான். வெறுப்பாகச் சிரித்தான்.
“ஸௌமதத்தி! நீதி சாஸ்திரங்கள் பேசுகிறாய். இதை நான் ஒத்துக்கொள்கிறேன். சேனையுடன் நிற்பது அழகல்ல. ஓடிச்சென்று மதிலை இடியுங்கள். அகழியில் புற்களையும் கழிகளையும் போட்டு தூர்வாரி விடுங்கள்.”
ஒருபக்கம் வீரர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து ஊக்கமூட்டும் விதத்தில் கர்ணன் பேசினான்.
“எதிரிகளின் யானை குதிரை வீரர்கள் இவற்றை எவன் கொல்வானோ அவனுக்கு தனம் பரிசளிக்கப்படும்.”
அது என்ன பரிசு என்று வீரர்களின் கண்கள் கர்ணனையே குத்தியிருந்தன.
“ஒரு யானைக்கு பதினாயிரம் பொன். ஒரு குதிரைக்கும் காலாட்படை வீரனுக்கும் ஐயாயிரம் பொன். சிறுவர்கள் முதிந்தவர்கள் மேல் அம்பு போடாதீர்கள். நாம் பகைவரை வெல்வோம். காற்று நம் திசையிலேயே நடக்கிறது. பக்ஷிகள் நற்சகுனமாகவே பேசுகின்றன. வாருங்கள் தாக்குதல் செய்வோம்”
பெரும் சேனையாகப் புறப்பட்டு துருபதனின் கோட்டை வாசலை அடைந்தார்கள். ஜயத்ரதன், கர்ணன், துச்சாசனன், துரியோதனன் என்று மஹாரதர்கள் அந்த குறும்படையை தலைமை தாங்கினார்கள். துருபதனும் அவனது புத்திரர்களான த்ருஷ்டத்யும்னன் சிகண்டி சித்ரகேது ஸுகேது த்வஜகேது போன்றோர் கர்ஜனையுடன் களத்தில் குதித்தார்கள்.
துருபதன் வெண்மை விரும்பி. வெள்ளைத் தலைப்பாகை, வெள்ளைக் கொடி, வெள்ளைக் குதிரைகள், வெண் குடை என்று சூரியனுக்கு ஒப்பாக ஜொலித்தான். பாண்டவர்கள் வில்லோடும் அம்போடும் வெண்மையான ரதங்களில் ஏறி கௌரவர்களைத் தாக்கப் புகுந்தார்கள். அவர்களது வேகத்தைக் கண்டு அவர்களது சேனையில் உள்ளவர்களுக்கு உள்ளத்தில் உதறல் எடுத்தது. அர்ஜுனனின் பாணங்கள் அவர்களது சேனையை சிதறடித்தது.
பீமனின் சாரதியையும் தேர்க் குதிரைகளையும் கௌரவாதிகள் கொன்றார்கள். ரதத்திலிருந்து குதித்து இறங்கிய பீமஸேனன் கையில் கத்தியை எடுத்துக்கொண்டு எதிர்ப்படும் தலைகள் எல்லாவற்றையும் தரையில் சரித்தான். இரு சைனியங்களூம் சம பலத்தில் மோதிக்கொண்டது போல தோன்றியது. இழப்பு இரு இடத்திலும் இருந்தது.
அப்போது கர்ணன் வில்லெடுத்து அர்ஜுனன் பக்கம் வந்தான். ஒன்றிரண்டு பாணங்களினால் அர்ஜுனனை சீண்டினான். பதிலுக்கு கோபம் கொண்ட அர்ஜுனன் அவனைக் கொல்வதற்கு வஜ்ராயுதத்துக்கு ஒப்பாக மூன்று பாணங்களை எய்தான். அப்பாணங்களினால் அடிக்கப்பட்ட கர்ணன் தேரில் சாய்ந்துவிட்டான். உடனே அந்த சாரதி தேரை விரைவாக ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டான். கர்ணன் தோற்றதைக் கண்ட துரியோதனனுக்கு பீதி கிளம்பியது.
தூரத்தில் வீரர்களை துவம்சம் செய்துகொண்டிருந்த பீமஸேனன் துரியோதனனைப் பார்த்துவிட்டான். அவனுக்கு அரக்கு மாளிகை ஞாபகம் வந்து வெறி கிளம்பியது. அந்த போர் புரியும் இடத்தில் இருந்த ஐம்பதுதோள் உயரமுள்ளதாக நிற்கின்ற பெரிய மரம் ஒன்றை வேரோடு பிடிங்கி எடுத்துக்கொண்டு படைகள் சண்டையிடும் இடத்திற்குள் புகுந்தான். அந்த போர்வீரர்கள் நடுக்கமுற்று பயந்து தோற்று புறமுதுகிட்டு ஓடினார்கள்.
பயந்து ஓடியவர்களை பாண்டவர்கள் விரட்டவில்லை. தங்களுக்குள் சிரித்துக்கொண்டார்கள். ஜனங்கள் ஜயகோஷமிட்டு அவர்களை மீண்டும் நகரத்திற்குள் அழைத்துச் சென்றார்கள்.
பாண்டவர்களிடம் தோற்று ஹஸ்தினாபுரம் திரும்பும் கர்ணன் ஜயத்ரதன் கர்ணன் துரியோதனன் சகுனி போன்றோர் பேசிக்கொண்டது வீரர்களில் சிலருக்கு சிரிப்பை வரவழைத்தது.
“பாண்டவர்கள் நற்தவம் செய்திருக்கிறார்கள். அதனால்தான் ஜெயித்தார்கள்”
“இல்லையில்லை. அந்த திரௌபதி கணவர்களை காக்கும் பொருட்டு நோன்பு நோற்றாள்”
“ஊஹும். அந்த துருபதனும் அவர்களது புத்திரர்களும் பாண்டவர்களைக் காப்பாற்றிவிட்டார்கள்”
இங்கே பாஞ்சால நகரத்தினுள் பிரவேசித்த பாண்டவர்கள் குதிரைப் படை ஆட்கள் இருவரை அருகே அழைத்து “கிருஷ்ணனிடம் நாங்கள் நலமாக இருப்பதாகச் சொல்லுங்கள்” என்று அனுப்பினார்கள்.
“அனைத்தும் நான் அறிவேன்” என்று கண்களை மூடித் திறந்து சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர். பின்னர் ரதத்தைப் பூட்டி பாஞ்சால நகரத்திற்கு வந்தார். மங்கள வாத்தியங்கள் ஒலிக்க துருபதன் கோட்டை வாசலுக்கு வந்து அழைத்துப் போனான். நேரே அரண்மனை சென்று அத்தையாகிய குந்திக்கு நமஸ்காரம் செய்தார். திரௌபதிக்கு ஆடை ஆபரணங்கள் தந்தார். அவருடன் வந்திருந்த யாதவர்கள் பாஞ்சால தேசத்தில் தங்கி மகிழ்ந்திருந்தார்கள்.
**
பாண்டவர்கள் அந்த யுத்தத்தில் ஜெயித்தது, பிராமண வேஷமணிந்து திரௌபதியை ஸ்வயம்வரத்தில் வரித்தது போன்றவற்றால் துரியோதனன் உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருந்தான். மாமன் சகுனியையோ நண்பன் கர்ணனையோ பார்ப்பதற்குக்கூட அவனுக்கு வெட்கமாகயிருந்தது. அந்த சமயத்தில் துச்சாசனன் வந்து அவனிடத்தில் பேசினான்.
“குந்தி புத்திரர்களால் அரசர்களான நம் சிரசின் மேல் இடக்கால் வைக்கப்பட்டிருக்கிறது. அரக்கு மாளிகையிலிருந்து எப்படித் தப்பித்தார்கள்?”
துரியோதனன் அவனை எரித்துவிடுவது போல பார்த்தான். உடனே மாமன் சகுனியை நோக்கிப் பேசினான்.
“மாமா! புரோசனனை நம்பி நாம் கெட்டோம். அவனும் சேர்ந்து அந்தத் தீயில் வெந்து போனான். மாமா.. நம்மைவிட அவர்கள் புத்திசாலிகள். அரக்கு மாளிகையில் தப்பித்த பிறகு அவர்களுக்கு இப்போது மரணத்தில் பயமில்லை”
துச்சாசனனை அடித்து வெளுத்துவிடும் கோபம் துரியோதனனுக்குப் பிறந்தது. தம்பியைத் தாங்கிக்கொண்டு அரண்மனைக்குள் சென்றுவிட்டான்.
துரியோதனாதிகள் தோற்றுத் திரும்புகிறார்கள் என்ற செய்தி விதுரரின் காதுகளுக்கு எட்டியது. உடனே தனது கிரஹத்திலிருந்து கிளம்பி திருதராஷ்டிரனைக் காண விரைந்து வந்தார்.
“அரசனே! நல்ல காலம். கௌரவர்கள் விருத்தியடைகிறார்கள்” என்றார். அவர் அப்படி விஷமமாகச் சொன்னதை தனது மகன் துரியோதனன் திரௌபதியை ஸ்வயம்வரத்தில் மணந்து அழைத்துக்கொண்டு வருகிறான் என்று நினைத்த குருடனான திருதராஷ்டிரன் உடனே
“நல்லகாலம். நல்ல காலம். அந்த கிருஷ்ணையை அழைத்து வா. அவளுக்கு எல்லா ஆபரணங்களையும் எடுத்துப் பூட்டிக்கொள்ளக் கொடுங்கள்” என்று துரியோதனனுக்குக் கட்டளையிட்டான். உடனே விதுரர் குறுக்கே புகுந்தார்.
“கௌரவர்கள் என்ற பொதுச் சொல்லினால் உன் புத்திரர்கள் ஜெயித்துவிட்டார்கள் என்று எண்ணாதே! பாண்டவர்கள் சிறப்பிக்கப்பட்டார்கள். திரௌபதியை அடைந்து துருபதனால் பூஜிக்கப்பட்டு சந்தோஷமாக இருக்கிறார்கள்”
மனத்தினுள் ஏமாற்றமும் பொறாமையும் ஊற்றாகக் கிளம்பினாலும் அதை மறைத்து உத்திரத்தைப் பார்த்து நின்றிருந்த திருதராஷ்டிரன் “நல்லகாலம். நல்லகாலம். பாண்டவர்கள் ஜீவித்திருக்கிறார்களா? ஆஹா! உன் வாக்கு அமிர்தமாக என் செவிகளை நிறைக்கிறதே விதுரா! துருபதன் உபரிசரவஸுவின் மத்ஸ்ய குலத்தில் பெரியவன். மஹாராஜன். அவர்களும் பாண்டுபுத்திரர்களும் சேர்ந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. விதுரா! பாண்டவர்கள் தீக்கிரையாகினர் என்ற செய்தி கேட்டதிலிருந்து நான் உண்ணவுமில்லை. உறங்கவுமில்லை. அவர்கள் துணையில்லாமல் சிறகொடிந்த பறவை போலக் கிடந்தேன்”
அப்படிப் பேசும் திருதராஷ்டிரனை விதுரர் மனதிற்குள் ஏளனம் பொங்கப் பார்த்தார். துரியோதனனுக்கு கோபம் உச்சியில் ஏறியது. விதுரர் திருதராஷ்டிரன் அருகில் வந்து அவனது தோளைத் தொட்டார். தொட்ட கையைத் தொட்டுப் பார்த்து விதுரன் என்றறிந்து கொண்ட திருதராஷ்டிரன் விதுரன் என்ன சொல்வானோ என்று கண நேரம் அமைதி காத்தான்.
“திருதராஷ்டிரா! இதே எண்ணத்தோடு இன்னும் நூறு வருஷ காலம் இரு!!” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்து அரண்மனையை விட்டு வெளியேறி தனது இல்லம் சென்றார்.
அவர் அந்த அறையை விட்டு அகர்ந்ததும் துரியோதனன் தனது குருட்டுத் தகப்பனை வறுத்து எடுத்துவிட்டான்.
“விதுரர் எதிரில் சொல்லவேண்டாம் என்றிருந்தேன். நம்முடைய எதிரிகளின் அபிவிருத்திக்கு பாடுபடுகிறீரா? உம்மையெல்லாம்......” என்று பற்களை நறநறவென்றுக் கடித்தான். எலும்புகள் உடைவது போல அந்த சத்தம் திருதராஷ்டிரனுக்குக் கேட்டது.
“மகனே! விதுரன் எதிரில் அப்படி நடந்துகொண்டேன். பாண்டவர்களின் மேல் அன்பினால் அல்ல. எது சரியென்று நீ சொல் துரியோதனா. ஏ கர்ணா நீயும் சொல். அதைச் செய்வோம்” என்றான் கைகளை காற்றில் துழாவியபடியே. வேண்டா வெறுப்பாக அதைப் பற்றிக்கொண்ட துரியோதனன் பேசினான்.
“தந்தையே! என் கைவசம் சில யோசனைகள் இருக்கிறது. இதையெல்லாம் கொண்டு நாம் ஜெயிக்கப்பார்ப்போம்”
“என்ன துரியோதனா? சொல்”
“சமர்த்தர்களாகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இருக்கும் பிராம்மணர்கள் சிலரைக் கொண்டு குந்தி புத்திரர்களுக்கும் மாத்ரி புத்திரர்களுக்கும் மித்ரபேதம் உண்டு பண்ணுவோம்.”
“ஊஹும். சரிப்படாது”
“துருபதனுக்கு பெரும் திரவியக் குவியல் கொடுப்போம். அவன் அதில் மயங்கியபோது யுதிஷ்டிரனை வெளியில் விரட்டச் சொல்வோம்”
“பெண்ணைக் கொடுத்திருக்கிறான். செய்ய மாட்டான்”
“திரௌபதியை அவர்களிடமிருந்து பிரிப்போம். விரோதம் ஏற்படுத்துவோம்”
“கடினம்”
“பீமஸேனனைக் கொன்றுவிடுவோம். அவந்தான் அவர்களிடத்தில் பலசாலி. அவனை அழித்துவிட்டால் மற்றவர்களை மாய்த்துவிடலாம்”
“அவனை நெருங்கவே முடியாது”
”அழகிய ஸ்திரீகளைக் கொண்டு பாண்டவர்களை மயக்கச் சொல்வோம். இதில் திரௌபதி வெறுப்படைவாள்”
“திரௌபதிக்கு மேல் அழகி யார்?”
எல்லாவற்றிர்க்கும் பதில் இருந்தது. சலிப்படைந்த துரியோதனன் கர்ணனைப் பார்த்து “நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான்.
“துரியோதனா! உன்னுடைய இது போன்ற தந்திரங்கள் அவர்களிடம் செல்லாது. இங்கே சிறுவயதில் உன்னுடன் இருந்தபோதே அவர்களை உன்னால் எதுவும் செய்யமுடியவில்லை. இப்போது வளர்ந்துவிட்டார்கள். தொடமுடியாத உயரத்திற்கு வந்துவிட்டார்கள். “
“வேறு என்னதான் செய்ய முடியும் என்கிறாய்?” கோபத்தில் வெளியே சிதறிய வார்த்தைகளில் வெறுப்பு பீறிட்டது.
”யுத்தத்தில் வெல்லவேண்டும். பாண்டவரக்ளுக்கு ராஜ்ஜியம் பெற்றுத் தருவதற்காக யாதவ சேனையை அழைத்துக்கொண்டு கிருஷ்ணன் பாஞ்சாலம் செல்வான். அதற்கு முன்னதாக நாம் படையெடுத்துச் சென்று துருபதனையும் பாண்டவர்க்ளையும் அடிக்கவேண்டும். க்ஷத்ரியனுக்கு பராக்கிரமம்தான் சுயதர்மம். பரதசக்ரவர்த்தி பராக்கிரமத்தால் பூமி ஆண்டார். இந்திரன் பராக்கிரமத்தால் மூன்று லோகங்களையும் ஆண்டான். நாமும் பராக்கிரமத்தால் ஆள வேண்டும்.”
திருதராஷ்டிரன் இவ்விடத்தில் கர்ணனைப் புகழ்ந்தான்.
“சிறந்த வீரனான உன்னிடத்தில் இப்பேச்சு வருவது அதிசயமில்லை. ஆயினும் பீஷ்மர், துரோணர் விதுரன் நீங்கள் இருவரும் சேர்ந்து நமக்கு எது ஸௌக்கியம் என்பதை ஆலோசனை செய்யுங்கள்” என்ற திருதராஷ்டிரன் பீஷ்மர் மற்றும் பிற மந்திரிகளையும் வரவழைத்து ஆலோசனையை ஆரம்பித்தான்.
துரியோதனன் தனது தந்தையின் முட்டாள்தனமான போக்கைப் பார்த்து வாய் பேச முடியாமல் கல்லாய் அமர்ந்திருந்தான்.

No comments:

Post a Comment